Monday 24 September, 2007

இனி எல்லாம் நீயாக


இனி எல்லாம் நீயாக

தினமலர் - வாரமலர் - 23 செப்டம்பர் 2007

சிவகாமி தனக்கு முன்னால் செத்து போய் விடுவாள், தான் தனிமை பட்டு போய்விடுவோம் என்பதை பரசுராம் கனவிலும் நினைத்துப் பார்த்ததேயில்லை. அவருக்குத்தான் கர்ணனின் கவச குண்டலங்கள் மாதிரி ஆஸ்துமாவும் இருதய நோயும் உடம்பின் ஒட்டுண்ணிகளாக ஆகி பல வருடங்கள் ஆகி விட்டன. சிவகாமி லேசாக தலைவலி என்று ஒரு நாள் கூட படுத்துக் கொண்டதில்லை. ஆனால் விதி யாரை விட்டது? எதிர்பாராத நேரத்தில் முதுக்குக்கு பின்னால் தடதடவென எருமை மாடு ஓடி வந்து முட்டி தள்ளிவிட்டு போய்விட்ட மாதிரி இன்று காலையில் அது நடந்தே விட்டது.

வழக்கம் போல காலை வாக்கிங் போய்விட்டு வந்து, ஹிண்டுவில் முதல் பக்கத்தையும், புரட்டிப்போட்டு ஸ்போர்ட்ஸ் பக்கத்தையும் மேய்ந்துவிட்டு இடது பக்க முக்காலியை பார்த்தபோது.... அங்கு காப்பி இல்லை. அப்போதே எச்சரிக்கை மணி அடித்துவிட்டது. ஒரு வேளை உடம்பு சரியில்லாமல் இருக்கலாம். என்ன ஏது விசாரித்தால் போயிற்று? என்று மனசை திடப்படுத்திக் கொண்டு குரல் விட்டு பார்த்தார். அதற்கும் பதிலில்லை. பயம் நெஞ்சுகூட்டுக்குள் சுறுசுறுவென மெல்லிய புகையாக பரவ, ரத்த அழுத்தம் சூடேறியது. மூச்சிறைத்தது. தட்டு தடுமாறி எழுந்ததில் டைனிங் டேபிள் முனையில் இடித்துக் கொண்டார். படுக்கையறைக்கு போனதில்.... அங்கு இல்லை. கிச்சனில் எட்டிப் பார்த்தபோது, கடவுளே.....

சிவகாமி சுவரோரமாக பிரிந்த தவிடு மூட்டை மாதிரி உட்கார்ந்திருந்த வாக்கில் சரிந்திருந்தாள். மூத்திரம் சற்று தூரம் ஓடி குளம் கட்டியிருந்தது. 35 வருட போலீஸ் அனுபவம் உண்மையை புத்திக்கு உடனடியாக தெரிவித்துவிட்டாலும், அதை ஏற்றுக்கொள்ளாத பரசுராம் கன்னங்களை தட்டினார். கீழே படுக்க வைத்து நெஞ்சை பிசைந்து பார்த்தார். ம்..ஹ¥ம்... உயிர் போய் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஆகியிருக்கும்.

சிவகாமி அசைவற்று படுத்திருந்தாள். மளமளவென கண்கள் இருட்டிக்கொண்டன. தொண்டை வறட்சியில் பேச்சு வரவில்லை. துக்கமும் பயமும் ஒன்று சேர, இருக்கும் ஆற்றலையெல்லாம் ஒன்று திரட்டி நெஞ்சை பிடித்துக்கொண்டு பரசுராம் சங்கிலித் தொடராய் அலறியதில்....

'டொம்' என சத்தத்துடன் மடியிலிருந்த பிளாஸ்க் கீழே விழுந்து உடைந்தது. பரசுராம் சுதாரித்து எழுவதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது. வார்டு பாய் ஓடி வந்து அவரை தூக்கி நிறுத்தினான். கூட்டத்தை விலக்கி சிதறிய கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்த ஆட்களை அழைத்தான்.

பரசுமாம் பிளாக் அவுட் குழப்பத்தில் தடுமாறினார். முதுகில் வெயில் சுட்டது. மதிய வேளை. நர்சிங் ஹோம். ஆமாம்! ஞாபகம் வந்துவிட்டது. நேற்று விடியக்காலையில்தான் சிவகாமியை இந்த நர்சிங் ஹோமில் சேர்த்தார். இரண்டு நாள் இடைவிடாத அலைச்சலில் சற்று கண் அயர்ந்துவிட.... தேங்க் காட்! சிவகாமி இருக்கிறாள். கால்கள் சிக்க வேகத்தை கூட்டி ஸ்பெஷல் வார்டு அறை 18ல் எட்டிப் பார்த்ததில்...

சிவகாமி இருந்தாள். உயிரோடு... பரசுராமின் பதட்டத்தை கண்டு கொஞ்சம் மிரட்சியோடு எழுந்து உட்கார முயற்சித்தாள்.

டி.ஜி.பி பரசுராம் ரிடயர் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் இன்றைக்கும் கூட அவர் பட்டி தொட்டிகளில் பிரபலம். அவர் அதிகாரத்தின் கீழ் அந்தியூர் காட்டு வீரப்பன் முதல் அயோத்தியா குப்பம் வீரமணி வரை அடங்கி போயிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளே அவரின் கத்திமுனை பார்வைக்கு எதிரில் இயல்பான பேச்சுக்கு திணறுவார்கள். எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். அதில் ஒழுங்கு இருக்க வேண்டும். பேச்சிலும் செயலிலும் ஒரு மிடுக்கு இருக்கும். போலீஸ் உடுப்பில் கேடிகளுக்கு எந்த அளவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தாரோ அதே அளவுக்கு வீட்டிலும் கெடுபிடிகள்தான்.

டாக்டரின் கையெழுத்து கம்பெளண்டருக்கு அத்துபடி என்பது மாதிரி சிவகாமிக்கு அவர் கண் அசைவிலேயே அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து விடும். பத்து வேலையாட்கள் இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட தேவைகள் அனைத்தையும் சிவகாமிதான் செய்ய வேண்டும். அதில் கண்டிப்பாய் இருப்பார். தெருவில் நடந்து போகும் போது கூட மிடுக்காக நாலு அடி அவர் முன்னே நடக்க, சிவகாமி அவர் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மூச்சிறைக்க பின்னால் வந்து கொண்டிருப்பாள். சிரிப்பென்றால் பிறை சந்திரன் மாதிரி துளியூண்டு வந்து போகும். கேலியோ கிண்டலோ அவர் அறிந்திராதது. பேச்சு மிகவும் குறைவு. வீட்டில் கிச்சன் எங்கே இருக்கும் என்று கூட தெரியாது. தனக்கு என்ன உடுப்பு எப்போது வேண்டும்? குளிக்கும் வெந்நீர் எவ்வளவு வெதுவெதுப்பில் வேண்டும்? சிவகாமிக்குதான் தெரியும். எல்லா வசதிகளுக்கும் உடனுக்குடன் ஏற்பாடு செய்தார். ஒரு குறையும் வைத்தில்லை. குழந்தை பாக்கியத்தை தவிர.

"அம்மா. நீங்க இங்க வந்ததிலேர்ந்து அய்யா ஒன்னும் சரியா சாப்பிடலங்க. வெறும் டீயா குடிச்சி பொளுத ஓட்டறாரு. பசி மயக்கத்துல பிளாஸ்க்கை வேற உடைச்சிட்டாரு."

பரசுராமின் பின்னாலிருந்து முளைத்த வார்டு பாய் சொல்லிக் கொண்டே போனான். சிவகாமி கேள்வியாக பரசுராமை பார்த்தாள்.

"என்னங்க? போய் சாப்பிட்டு வாங்க. பார்த்தா உங்களுக்குத்தான் நோவு வந்த மாதிரி இருக்கு. போங்க. எனக்கு சரியாயிட்டு." ஈனஸ்வரத்தில் கண்களில் கவலை கொப்பளிக்க அவரை விரட்டினாள்.

பரசுராம் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிவகாமியின் கைகளை இறுகி பற்றியபடி இருந்தார். நிமிர்ந்த போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. "நான் எப்ப சாப்பிடணும்? என்ன சாப்பிடணும்? எவ்வளவு சாப்பிடணும்னு எனக்கு தெரியாதே செல்லம். நீ சட்டுனு கால் நீட்டி படுத்ததும் எனக்கு ஒண்ணும் விளங்கல. அதான்."

அவசர கதியில் பைபாஸ் சர்ஜரிக்கு ஆயத்தங்கள் செய்தபோது கூட கலங்காத பரசுராம் தற்போது உடைந்து போன கண்ணாடி சில்லுகளாக இருப்பதை பார்ப்பதில் சிவகாமிக்கு நெஞ்சு கனத்தது.

"நீ பொழைச்சு வந்தா சாப்பிடலாம். இல்லேன்னா, அப்படியே போயிடலாம்னு இருந்தேன்."

பதறிப் போனாள் சிவகாமி. "என்னங்க. முதல்ல இந்த பேச்சை விடுங்க. எனக்கு ஒண்ணுமில்லே... ஒரு டிஜிபி பேசுற பேச்சா இது?"

முகம் பார்ப்பதை தவிர்த்து வெறுமையாக வெளி வாசலையே பார்த்துக் கொண்டே இருந்தவர், ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகு திடீரென நினைவுக்கு வந்தவராய் "அடப்போ செல்லம். டிஎஸ்பி, ஐஜி, டிஜிபின்னு, போலீஸ் உடுப்பை கழட்டின பிறகும் கூட வித்தியாசமே இல்லாமல் இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு காலம் தப்பி இப்ப புரியுது. உனக்கு நல்ல கணவனா எதுவுமே செய்யலையேன்னு என்னை ரெண்டு நாளா மார்ல ரம்பம் வச்சி அறுக்கிற மாதிரி வலிக்குது. எவ்வளவு சீப்பா சுயநலமா நடந்துக்கிட்டிருக்கேன்கிற உணர்வு என்னை ஊசியா குத்துது."

சிவகாமி மிகுந்த முயற்சிகள் செய்து கொஞ்சமாக ஒருக்களித்து வலக்கையை ஊன்றி இடது கையை தூக்க எத்தனித்தாள். அவரை கொஞ்சம் நெருங்கலாம் என்றால், முடியவில்லை. அப்படியே சரிந்தவள் கண்களை மூடி நெஞ்சுக்குள் விசும்பினாள்.

"அழறையா. வேணாம். என்னோட துக்கத்தை உங்கிட்ட சொல்லி இன்னும் உன்னை கஷ்டப்படுத்த விரும்பல"

பரசுராம் தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டு கஷ்டப்பட்டு இயல்புக்கு வர முயற்சித்தார். மீண்டும் அந்த மௌனம் அவரை கொன்று தீர்த்தது. "நான் ஒன்னே ஒன்னு கேட்கட்டுமா? நீ ஏன் எதுவுமே கேக்கல?"

சிவகாமிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. "அட போங்க. வேற பேச்சு ஏதாவது பேசுங்க." வெட்கமாக இருந்தது.

"இல்ல சொல்லு. எனக்கு தெரிஞ்சுக்கணும். வீட்ல ஒரு பொருளை எடுத்துக் வச்சதில்லே. பிறந்த நாள் திருமண நாள்ன்ணு ஒரு தடவை கூட துணிமணி எடுத்துக் கொடுத்ததில்லே. பூ கூட நீயேதான் வாங்கி வச்சிப்பே. அதக் கூட நான் வாங்கித் தரணும்ணு எனக்கு இப்ப வரைக்கும் மனசுல வர்லே."

சிவகாமி அவரையே கண்கொட்டாமல் பார்த்தாள். விழியோரங்களில் கண்ணீர் முட்டி நின்றது. நீண்ட பெருமூச்சுக்கு பிறகு நிதானமாக ஆரம்பித்தாள். "நீங்க என்னை கல்யாணம் செஞ்சுக்க முடிவு செஞ்சீங்களே, அப்பவே தீர்மானம் செஞ்சிட்டேங்க. என் அம்மாவுக்கு லுக்கோர்டமா இருந்ததை காரணம் காட்டி உங்க வீட்ல கல்யாணத்தை நிறுத்த பல பேர் குறுக்க நின்னாங்களாம். ஆனா நீங்கதான் தனி ஆளா போராடி என்னை கட்டிக்கிட்டீங்களாம். இது ஒன்னே போறுங்க, உங்க மனச தெரிஞ்சிக்க. நீங்க போலீஸ் வேலைய ஒரு தவம் மாதிரி செஞ்சிங்க. அதுக்கு எந்த பங்கமும் வந்திடக் கூடாதுன்னு என்னை நானே குறுக்கிக் கிட்டேங்க. உங்ககிட்ட இருக்கிற சமூக அக்கறை, நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு இவைகளையெல்லாம் பார்த்து பிரமிச்சிருக்கேங்க. என்ன, மத்த ஆம்பிள்ளைக மாதிரி பொளுதன்னிக்கும் கட்டிபுடிச்சு கிட்டு ஆட்டுக்குட்டி மாதிரி நீங்க இல்லை. அது உங்க சுபாவம் இப்படித்தான்னு புரிஞ்சிக்கிட்டேங்க. உங்க மனசு என்ன சொல்லுதுன்னு எனக்கு புரியுங்க. அப்ப அப்ப செல்லம்ன்ணு கூப்பிடுவீங்களே, அது ஆயிரம் பட்டுப் புடவைகளுக்கு சமானங்க."

"யு ஆர் க்ரேட் செல்லம். ஒரு துடிப்பான ஏஎஸ்பி டிஜிபியா உயர்ந்தேன்னா அது உன்னாலத்தான். இன்னும் ஒண்ணே ஒண்ணு கேட்கட்டுமா? இதிலும் சுயநலமிருக்கு. என்ன செய்ய?"

"சொல்லுங்க."

"கலியுகத்தில சொர்க்கம், நரகமெல்லாம் இங்கெயேத்தான் சொல்லுவாங்க. அதே மாதிரி செஞ்ச தப்புக்கு பரிகாரம் செய்யவும் வாய்ப்புகள் வரும் போலிருக்கு. இவ்வளவு காலம் பளபளப்போட உயரத்துல பறக்குற பட்டமா நான் இருந்தேன். நீ எனக்கு எல்லாமா இருந்தே. உன்னை இப்படி திடீர்ன்னு படுக்கைல போட்டு ஆண்டவன் என் கண்ணை திறந்திட்டான். இனி உன்னை உட்கார வச்சி, வாழ்நாள் முழுக்க நான் உனக்கு எல்லாமா இருக்கப் போறேன். அதனால....."

"என்னங்க? என்ன தயக்கம்? சொல்லுங்க."

"எனக்கு முன்னாடி நீ போயிடாதே செல்லம்.. உனக்கு என்ன வேணுமின்னாலும் நானே செய்யறேன். நீ இரு. என்ன பார்த்துக்கிட்டே இரு. அது போதும்."

சிவகாமி பதிலேதும் சொல்லவில்லை. கொஞ்சம் அவஸ்தையாக நெளிந்தாள். "ஏங்க நர்ஸை கூப்பிடுறீங்களா. பாத்ரூம் போனுங்க."

டக்கென்று எழுந்து கதவு வரை போனவர், புன்னகையோடு திரும்பி வந்து, "செல்லம், வா. நான் கூட்டிக்கிட்டு போறேன்."

சிவகாமி திடுக்கிட்டவளாய், வெட்கத்துடன், "நீங்களா? அடச் சீ. விளையாடாதீங்க. போய் நர்ஸை கூப்பிடுங்க"

"ஏன். என்னால முடியாதா? நான் உன் ஹஸ்பண்டுதானே இதிலென்ன வெட்கம்?"

"இல்லங்க. எனக்கு இடது பக்கம் மூவ்மெண்ட் கொஞ்சம் சிரமப்படுங்க. ரொம்ப கவனமா அழைச்சுகிட்டு போவணும். உங்களுக்கு பழக்கமிருக்காது. அதுக்குத்தான் சொல்லறேங்க."

"அடப்போ. பழகினாப் போச்சு. நீ வா". பரசுரமுக்கு எங்கிருந்து வலு வந்தது என்று தெரியவில்லை. சிவகாமிக்கு வசதியாக அவளை தன் இடது தோள்களில் அணைத்தவாறு பாத்ரூமை நோக்கி நடக்கலானார்.

எதேச்சையாக வார்டு 18க்குள் எட்டிப் பார்த்த நர்ஸ், "பார்த்து டிஜிபி சார். மேடமை கெட்டியா பிடிச்சுக்குங்க. விடாதீங்க. அப்படியே ஒரு பாதி எடுத்துகுங்க" என்று சொல்லி சிரிக்கவும்...

சிவகாமிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. நெஞ்செல்லாம் பூரித்து கண்களிலும் கன்னங்களிலும் ஆனந்த கீற்று வழிந்தோடியது. ஆனால் மெல்லியதாக அழுகையும் கூடவே வந்தது.

Friday 7 September, 2007

மெலட்டூர்-ஒரு அறிமுகம்

அமுதசுரபி - செப்டம்பர் 2007

திருப்பதியில் போய் மொட்டைத் தலையனைத் தேடு என்றால் எந்த அளவுக்கு சிரமமோ அந்த அளவுக்கு கடினமானது தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் அச்சுதபுரம் என்ற புராண பெயர் கொண்ட கிராமங்களை கணக்கிடுவது. கிருஷ்ண தேவராயர் வழி வந்த தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் பெயரில் அங்கு உருவான கிராமங்கள் எண்ணிலடங்கா. அவைகளில் தஞ்சையிலிருந்து 20 கி.மி. தூரத்தில் உள்ள மெலட்டூர் என்ற கிராமம் மிக முக்கியமானது. தெலுங்கு பிராமணர்களுக்காக அச்சுதப்ப மன்னரால் தானமாக கொடுக்கப் பட்டதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. பெரு மெலட்டூர் என்ற ஒரு பெயரும் முன்பு இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

நவீன காலத்திற்கு ஏற்ப எப்படி சண்டிகர் நகர் உருவாக்கப் பட்டதோ அந்த மாதிரி அந்த காலத்தில் ஒரு முழுமையான கிராமமாக மெலட்டூர் உருவாகியிருக்கிறது. ராமபிரான் அனிலின் முதுகில் முன்று கோடுகள் போட்ட மாதிரி மூன்று அழகான அக்கிரஹாரத் தெருக்கள். ஊரின் கிழக்கே சிவன் கோயில், மேற்கே பெருமாள் கோயில், தெற்கே பிள்ளையார் கோயில். ஊர் எல்லை தாண்டி அய்யனார் மற்றும் திரௌபதியம்மன் கோயில்கள். ஊருக்கு வெளியே அரை கிலோ மிட்டர் தூரத்தில் காவிரியின் கிளை நதியான வெட்டாறு. ஊரை சுற்றி திசைக்கு ஒன்றாக குளங்கள். நான்கு திசைகளிலும் வயல் வெளிகள். அவைகளுக்கு நீர்பாசனம் அளிக்க வெற்றிலை நரம்புகளாய் பரந்து விரியும் வாய்கால்கள். கேட்கும் போதே ஜில்லென்ற பசுமையான கிராமம் உங்கள் மனதில் வந்து போகும்.

ஊரின் மிக புராதன கோயிலாக உன்னதபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. காவிரியின் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுக்கி மண்ணில் பாதி புதையுண்டு கிடந்த லிங்கம்தான் மூலவர். ஆற்றில் மிதந்து வந்ததால் முதந்தீஸ்வரர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. ஆலயம் எழுப்பும் போது லிங்க்கத்துக்கு ஆவுடையார் சேர்த்திருக்கிறார்கள். ஆனலும் லிங்கம் நேராக இல்லாமல் சற்று கோனலாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அம்பாளின் பெயர் சிவப்ரியை. சித்திரை மாதத்தில் பிரம்மோத்சவம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. கோயில் நிர்வாகம் பிராமணர்களால் நடத்தப்பட்டாலும் மற்ற வர்கத்தினர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. ஒற்றுமையாக ஊர் கூடி தேர் இழுக்கிறார்கள்.

மேற்கே வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சியளிக்கிறார். லஷ்மி நரசிம்மரின் சன்னதியும் இருக்கிறது. சன்னதிக்கு சற்று மேலே ஒரு கண்ணரடி பெட்டியில் நரசிம்மரின் திருஉருவம் கொண்ட முகமூடி ஒண்று இருக்கிறது. இந்த முகமூடியைதான் ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தியன்று நடைபெறும் பாகவத மேளா ப்ரஹல்லாத நாடகத்தின் கிளைமாக்ஸில் உபயோகப்படுத்துகிறார்கள். பாகவத மேளா என்பது தியாகராஜ ஸ்வாமிகள் காலத்தில் வாழ்ந்த வெங்கட்ராம சாஸ்திரிகள் என்பவரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட நாட்டிய நாடக விழாவாகும். அதில் முக்கியமானது ப்ரஹல்லாத சரித்திரம். பாகவத மேளாவில் மேடையேற பெண்களுக்கு தடா. பெண் வேடங்களை ஆண்களே ஏற்று நடிக்கிறார்கள். நாடகம் இரவு பத்து மணிக்கு ஆரம்பித்தால் விடிகாலை பிரம்ம மூஹ¥ர்த்தத்தில் முடிகிறது. கிளைமாக்ஸில் ஆக்ரோஷமாக நரசிம்மர் தூன் பிளந்து வந்தாலும் அவர் ஹிரண்யனை கொல்வதில்லை. என்னதான் நாடகம் என்றாலும் தன்நிலை அறியாத 'சாமி' வந்திருக்கும் நரசிம்மர் ஹிரண்யன் வேடம் தரித்தவரை நிஜமாகவே காயப்படுத்திவிடக் கூடாது என்பதால் பஜனைகள் பாடி நரசிம்மரை சமாதானப் படுத்தி நாடகத்தை முடித்து விடுகிறார்கள். நாடக விழா ஒரு வாரம் நடக்கிறது. ஹரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, உஷா பரிணியம், ருக்மணி கல்யாணம் போன்ற நாடகள் நடக்கின்றன. பாகவத மேளாவில் தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கடைசி நாளன்று வள்ளித் திருமணம் என்ற நாடகம் நடக்கிறது. பாகவத மேளா நடைபெறும் நாட்களில் நிறைய வெளிநாட்டினர் வருக்கின்றனர். புரியாத தெலுங்கு நாடகம் என்பதாலும் வருடாவருடம் நடப்பதாலும் உள்ளுர் மக்களின் ஆதரவு மிகக் குறைவு.

சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து என்பார்கள். அதனால்தான் என்னவோ கலை என்றாலே கட்சிகள் உண்டு. மெலட்டூரில் இரண்டு பாகவத மேளா கோஷ்டிகள் இருக்கின்றன. ஒரு நரசிம்மரின் முகமூடி இரண்டு பேருக்குமே வேண்டுமென்பதால் நரசிம்ம ஜெயந்தியன்று ஒரு கோஷ்டியும் அதே மாதத்தில் நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரத்திரமான ஸ்வாதியன்று இன்னொரு கோஷ்டியும் நாடக விழா நடத்துகிறார்கள். மெலட்டுரை போலவே சாலியமங்கலம், தேப்பெருமாநல்லூர் கிராமங்களில் பாகவத மேளா நாட்டிய நாடகங்கள் நடக்கின்றன.

பாகவத மேளா எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு சற்றும் குறையாதது அரவான் களபலி என்ற தெருக் கூத்து நாடகம். இந்த நாடகம் தஞ்சை மாவட்ட கிராமங்களில் உள்ள திரௌபதியம்மன் கோயில்களில் தீமிதிக்கு முதல் நாள் விடிய விடியவும் தீமிதி தினத்தற்று தீமிதிக்கு தொடங்குவதற்கு சற்று முன்னால் வரை நடக்கிறது. திருவண்ணாமலை பகுதி கிராமங்களில் நடைபெறும் படுகளம் மாதிரியே இந்த தெருக் கூத்தும் நடக்கிறது. மஹாபாரத் போர் துவங்குவதற்கு முன்னால் நரபலி கொடுக்க பாண்டவர்கள் அரவாணை தீர்மாணிக்கின்றனர். அதை ஏற்றுக் கொள்ளாத திரௌபதி பாண்டவர்களிடமும், கிருஷ்ணனிடமும் மன்றாடுகிறாள். திரௌபதியை தேவி என்று அழைக்கிறார்கள். இதிலும் கிளாமாக்ஸில் தேவியின் சாமியாட்டம் இருக்கிறது.

கர்பஸ்திரிகளுக்கு அபயம் அளிக்கும் கர்பஹரக்ஷ¡ம்பிகை கோயில் உள்ள திருக்கருக்காவுர் மெலட்டூரிலிருந்து ஐந்து கி.மி. தொலைவில் இருக்கிறது. அதே மாதிரி தஞ்சைக்கு போகும் வழியில் குருஸ்தலமான தென்குடி திட்டை கோயில் இருக்கிறது. கலையும் ஆன்மிகமும் கலந்த ஒரு உன்னதபுரியாய் இன்றும் திகழ்கிறது மெலட்டூர். விடுமுறை நாட்களில் வேன் எடுத்துக் கொண்டு ஊர் ஊராய் கோயில்களுக்கு விஜயம் செய்பவர்கள் இனிமேல் மெலட்டூரை சேர்த்துக் கொள்ளலாம்.

Monday 3 September, 2007

ஒரு பொண்ணு ஒரு பையன்


ஒரு பொண்ணு ஒரு பையன்

ஆனந்த விகடன் - 5 செப்டம்பர் 2007

போர்டு ஐகான் அதற்குறிய நான்கு மூலை மஞ்சள் கோட்டு எல்லைக்குள் இல்லாமல் கோணலாக நிறுத்தியதிலிருந்தே மாயாவின் மூடு சரியில்லை என்று தெரிந்து விட்டது. காலையில் படு பிரகாசமாக ஆபீஸ் போனவளுக்கு இப்போது என்ன வந்தது? யோசித்துக் கொண்டே லி·ப்டு வரை போன ஸ்ரீநிவாசன் திரும்பி வந்தார். திகம்பர் சென்குப்தாவின் காரை கிட்டத்தட்ட முத்தமிட்டுக் கொண்டிருந்தது ஐகான். அந்த தடியன் முதலில் ரிவர்ஸ் எடுத்து அப்புறம்தான் திருப்ப முடியும். சென்டிமெண்டலாக அதற்கு அவன் ஒத்துக்கொள்ள மாட்டான். நாலு பேரை கூட்டி அமர்க்களம் செய்வான்.

கொஞ்சம் யோசனையோடு ஐகான் கதவில் கை வைக்க அது திறந்து கொண்டது. ஸ்டியரிங் கழுத்தில் சாவி! முன் ஸீட்டில் ஹேண்ட் பேக்! சே! என்ன பெண் இவள்! உள்ளே உட்கார்ந்து நிதானமாக ஸ்டார்ட் செய்து, கொஞ்சம் முன்னே போய் வலது பக்கமாக ஒடித்து திரும்பி வந்தார். குதிரையை அதன் லாயத்தில் சரியாக கட்டிவிட்ட திருப்தியில், காரை பூட்டி நிமிர வாட்ச்மேன் ராஜு நின்று கொண்டிருந்தான். கைகளில் சில கடிதங்கள்.

"ஐயா! இந்தாங்க."

"ரொம்ப நன்றிப்பா. ஆமா, உன் பேத்தி உடம்பு இப்ப எப்படி இருக்கு? வயித்துப்போக்கு நின்னிடுச்சா ?"

"முன்னைக்கு பரவாயில்லைங்க. முழுக்க குணமாக இன்னும் ரெண்டு நாள் ஆகுமுங்க. சமயத்தில நீங்க பணம் கொடுத்து உதவலைன்னா என் பேத்தி என்னிக்கோ போயிருக்குங்க. ரொம்ப நன்றிங்க."

"சரிப்பா. பார்த்துக்க." நகர்ந்தவருக்கு, அவன் ஏதோ செல்ல தயங்குவதாகப் பட்டது.

"என்னப்பா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?

"ஒண்ணுமில்லீங்க. அது வந்துங்க. இந்த கடுதாசுகள உங்க பொண்ணு வந்தப்ப அவங்ககிட்டே கொடுக்கலாம்னு போனேன். என்னவோ ரெண்டு வார்த்தை இங்கிலீசுல திட்டிபுட்டு போயிடுச்சுங்க. ரொம்ப கோவமா இருக்காங்க போல. வந்து அரை மணி ஆவுது. போய் சமாதானம் செய்யுங்க."

ஸ்ரீநிவாசன் கொஞ்சம் கவலையுடன் லிப்ட் கதவை சாத்தி நாலாவது மாடி பட்டனை அழுத்தினார். எதிர்ப்பார்த்த மாதிரியே வாசல் கதவு 30 டிகிரி கோணத்தில் திறந்திருந்தது. உள்ளே வெளிச்சமில்லை. ஹால் விளக்கை போட்டார். அமைதியோ அமைதி. பிரம்பு கூடை ஊஞ்சலில் செல் குப்புற கிடந்தது. எடுத்துப் பார்த்ததில் உயிரற்று இருந்தது. வேறென்ன ? தீபக்கோடு சண்டை போட்டிருப்பாள். அவன் போன் வரக்கூடாது என்று ஸ்விட்ச் ஆ·ப் செய்து வைத்திருக்கிறாள். காதலிக்கும் போதே இவ்வளவு சண்டை என்றால் ஜனவரிக்கு அப்புறம் எப்படி இருக்கப் போகிறதோ? பாவம் தீபக். கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் அது சரியா என்ற கேள்வி உள்ளே எழுந்தது.

சிவப்பு புள்ளியோடு மௌனமாக இருந்த டி.வியின் ஸ்விட்சை ஆ·ப் செய்தார். இறைந்திருந்த சி.டிக்களை ஒரளவுக்கு அடுக்கி வைத்தார். மாயாவுக்கு ஜக்ஜித் சிங்/சித்ரா சிங் கஸல் பிடிக்கும். அவர் தேடிய சி.டி. எளிதாக கிடைத்தது. டி.வி.டியின் ரிமோட்டை அமுத்த டி.வி.டி. தன் தவளை நாக்கை நீட்டி, ஜக்ஜித் சிங்கின் கஸலை உள் வாங்கிக் கொண்டது. 'சிட்டி ந கொயி சந்தேஸ்' என்று தொடங்கும் பாடல். ஒரு கடிதமோ எந்த தகவலோ இல்லாமல் நீ எங்கே போய்விட்டாய் என்று ஜக்ஜித் சிங் உயிரின் உயிராக மெல்லிய குரலில் உருக ஆரம்பித்தார். காலில் இடறிய மஞ்சள் நிற மூடியை எடுத்து நோட்டம் விட்டதில் டைனிங் டேபிள் மேல் திறந்து கிடந்த டொமேட்டோ கெச்சப் பாட்டில் நீ தேடும் வஸ்து நான்தான் என்றது. மூடியை திருகி ·ப்ரிட்ஜில் வைத்தார். சுருட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பாதி பீட்ஸா இருந்தது. அதைத்தவிர சாப்பிட எதுவும் இல்லை. பசிக்கு எதையாவது சாப்பிட்டு வைக்க வேண்டும்.

மாயா எழுந்து வருவதாக தெரியவில்லை. ரூம் கதவை லேசாக தள்ளியதில் ஜில்லென்ற ஏ.சி.காற்று தாக்கியது. மரவட்டை மாதிரி உடம்பை குறுக்கி சுருண்டிருந்தாள். சண்டை போட்டுவிட்ட களைப்பில் தூங்கி போயிருக்கலாம். கதவை திறந்து தெரியாமல் மெதுவாக சாத்தினார். இன்றைய பிரச்னையை சமாளிப்பது பெரிய சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. நாலு வயசில் இவளை கையில் ஒப்படைத்து விட்டு போய் சேர்ந்துவிட்ட உஷாவை அப்படியே ஞாபகப்படுத்துகிறாள். அவளும் அப்படித்தான். பழியாய் சண்டை போடுவாள். ஆனால் அடுத்த கணமே இரண்டு மடங்கு அன்பை பொழிவாள். எல்லா சண்டையிலும் கணவனை ஜெயித்தவள், கடைசியில் ஒரு கான்சர் நோயிடம் போராடி தோற்றுப் போனாள்.

சமையல் அறைக்கு வந்து எதேச்சையாக குப்பை கூடையை எட்டிப் பார்த்ததில் அதில் சோனு நிகம் இசைக்கச்சேரியின் டிக்கெட்டுகள் நாலாக கிழிந்து கிடந்தன. இன்று மாலைக்கான நிகழ்ச்சி ! புரிந்து விட்டது. ஒரு வாரமாக இந்த நிகழ்ச்சியை பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். கடைசி நிமிஷத்தில் தீபக் வரமுடியாமல் போயிருக்கலாம். உடனே இவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்திருக்கும்.

தீபக் எதிர் பிளாக்கில் இருக்கிறான். சட்டையை போட்டுக் கொண்டு யோசித்தவாறே படியிறங்கினார்.

கதவை திறந்த தீபக் முகத்தில் இருந்த இறுக்கம் பிரச்சனையின் தீவிரத்தை சொல்லியது. எதுவும் பேசாமல் முன்னால் நடந்து போய் தான் ஒரு கூடை சேரில் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீநிவாசனுக்கு எதிர் இருக்கையை காட்டினான். அவஸ்தையான அரை நிமிட மௌனத்தை அவனே பிறகு உடைத்தான்.

"அங்கிள். நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு புரியுது. பட், இட் ஈஸ் எ க்ளோஸ்டு சாப்டர்"

"தீபக். எனக்கு எதுவும் தெரியாது. ஆனா எதுவோ பெரிசா ஆகியிருக்குன்னு தோணுது. நீயே சொல்லு."

"அங்கிள். என்னோட ஜாப் நேச்சர் உங்களுக்கே தெரியும். 600 கோடி ரூபாய் இன்டர்நேஷனல் ப்ராஜக்ட் ·பைனல் ஸ்டேஜ்ல இருக்கு. ஒரு வாரமா ராத்திரி பகல் தெரியாம உழைச்சிக்கிட்டு இருக்கோம். அதை புரிஞ்சுக்காம இப்பவே சோனு நிகம் ப்ரோகிராமுக்கு வந்தாதான் ஆச்சுன்னு அடம் பிடிச்சா எப்படி? உனக்கு என்னை விட அந்த வெள்ளக்காரிகளோட டிபன் சாப்பிடறதுதான் முக்கியமான்னு ... ஷி க்ரியேடட் எ சீன். ஐ ஆல்ஸோ லாஸ்ட் மை கூல். எக்கச்சக்கமா ஆயிடுச்சு."

"ஐயாம் சாரி. தீபக். அவ இன்னும் சைல்டாதான் இருக்கா. ஷி நீட்ஸ்.."

"நோ. அங்கிள். எனக்கு பயமாயிருக்கு. மூச்சு திணறுது. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டு ஹாப்பியா இருக்கமுடியாதுன்னு இப்பவே தோணுது. அவளே நீ வேண்டாம் போன்னு சொல்லிட்டா. ஐயாம் சாரி. உங்க பொண்ணு பத்தி உங்க கிட்டயே கம்ப்ளெயிண்ட் சொல்ல வேண்டியதாயிடுச்சு. பட், வேற வழியில்லை. உங்ககிட்ட என் முடிவையும் சொல்லிட்டு அம்மாவுக்கு போன் செய்யலாம்னு இருக்கேன். அம்மா இப்ப நீயூஜெர்ஸில இருக்காங்க. நாளைக்கு காலைலதான் ஹ¥ஸ்டன் திரும்பறாங்க.... அப்பறம்... நாளைக்கே இந்த ·ப்ளாட்டை காலி செய்யலாம்னு இருக்கேன்."

ஸ்ரீநிவாசன் பதில் பேசாமல் தீபக்கையே உற்று பார்த்தார். அந்த பார்வையும் மௌனமும் அவனை கொஞ்சம் சங்கடப்படுத்தியது. அது அவசியம் என்றே அவருக்கு பட்டது. பிறகு நிதானமாக ஆரம்பித்தார்.

"தீபக். உன்னோட முடிவு உன்னோடது. அதை நான் இன்·ப்ளுயன்ஸ் செய்ய முடியாது. பட், நீ பிரச்சனைகளை சமாளிக்காம ஓடி ஒளியறதை பார்த்தா வருத்தமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும்தான் வந்து லவ் பண்ணறோம்ன்னு சொன்னீங்க. நான் ஜாப்ல நல்ல ஒரு பொஷிஷன் வந்த பிறகு மாயாவை கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு நீதான் சொன்னே. அந்த மாதிரியே ஜனவரில தேதியும் குறிச்சாச்சு. இப்ப நீங்க ரெண்டு பேருமே வேண்டாம்னு முடிவு செஞ்சுருக்கீங்க. சரி. இதையும் ஏத்துக்கிறேன். ஆனா ப்ளாட்டை காலி செஞ்சுகிட்டு ஓடி போயிடறேன்னு சொல்லறயே, அப்ப என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா ?"

"இல்லை அங்கிள். நான் உங்களை ரொம்பவும் மதிக்கிறேன். நீங்க இல்லைன்னா நான் லை·ப்ல இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. உங்களுக்கும் மாயாவுக்கும் தர்மசங்கடத்தை கொடுக்க வேண்டாம்னுதான் நான் ஒதுங்கிக்கப் பார்த்தேன். நீங்கதான் அங்கிள் எனக்கு எப்பவும் குரு"

அப்பாடி. ஸ்ரீநிவாசனுக்கு சிக்கலை எடுப்பதற்கான முதல் நுனி கிடைத்து விட்டது.

"ஒகே தீபக். ஐயாம் ப்ரௌட் ஆ·ப் யூ. நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்பறேன். என் கண்ணை பார்த்து தயக்கமில்லாம உடனடியா எனக்கு பதில் சொல்லணும். அது உன் அடிமனசிலேர்ந்து வரணும்..... டு யூ லைக் ஹர் ?"

தீபக் இந்த அதிரடி தாக்குதலை எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் தடுமாறினான். ஸ்ரீநிவாசன் தீவிரமாக அவனை உற்று நோக்கினார்.

"யெஸ் அங்கிள். ஐ லைக் ஹர். பட்..."

அதன் பிறகு ஸ்ரீநிவாசனுக்கு எல்லாம் இலகுவாக போயிற்று. பத்தே நிமிடங்களில் அவனை சகஜ நிலைக்கு கொண்டு வந்து விட்டார். சிறு பையன். அப்பா இல்லாதவன். ஐந்து வயது சிறுவனாக அறிமுகம் ஆகி இன்றைக்கு தன் தோளுக்கும் தாண்டி வளர்ந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப் பட்டவனை எழுந்து அரவணைத்துக் கொண்டார். அடுத்து மாயாவின் ஞாபகம் வந்தது.

"தீபக். நான் வரேன். மாயாவை சரி செய்துட்டு உன்னை கூப்பிடறேன். அப்ப வா". ஸ்ரீநிவாசனை வாசல் வரை வந்து வழியனுப்பினான் தீபக்.

மாயாவை சமாளிப்பதில் ஸ்ரீநிவாசனுக்கு அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை. 'உன்னோடு பொம்மைகள் வைத்துக் கொண்டு விளையாடிய தீபக்கை இன்னமும் அப்படியே மனதில் வைத்துக் கொண்டிருக்காதே. அவன் உன் பொம்மையில்லை. உனக்கு கணவனாக வரப் போகிறவன்' என்று மென்மையாக புரியவைத்தார். மாயாவையும் நார்மலுக்கு கொண்டு வந்த பிறகு தீபக்கையும் வரவழைத்து இருவரையும் வலுக்கட்டாயமாக ஐஸ்க்ரீம் பார்லருக்கு அனுப்பி வைத்தார்.

அரை மணியில் மாயா ஆர்பாட்டமாக வந்தாள். "யூ ஆர் க்ரேட்! எப்படிப்பா? சைக்காலஜி படிச்சிருக்கியா? பேசாம நீ வி.ஆர்.எஸ். வாங்கிக்கிட்டு கவுன்சலிங் செய்யலாம். தாங்க்யூப்பா"

மாயா ஸ்ரீநிவாசனின் கைகளை பிடித்து குலுக்கினாள். இரண்டு கைகளாலும் மாலையாக ஸ்ரீநிவாசனின் கழுத்தை கட்டி கொண்டாள். ஸ்ரீநிவாசன் அவள் தலையை அன்புடன் கலைத்தார்.

"மை டியர் ·பூலிஷ் கேர்ள். முன்ன ஜாயிண்ட் ·பாமிலி சிஸ்டம் இருந்துது. சித்தப்பா, பெரியப்பா, அத்தைன்னு பெரிய கூட்டமே இருக்கும். வீட்டில எந்த ஜோடியாவது முறுக்கிக்கிட்டு இருந்தாக்க அவங்களோட ரியாக்ஷனை வைச்சே ஏதோ ப்ராப்ளம்ன்னு அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. சரியான நேரத்துல உள்ள நுழைஞ்சு சரி செய்வாங்க. இப்ப அதெல்லாம் போச்சு. எல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. அதுக்கும் வழி தெரியாம எத்தனையோ விவாகரத்துக்கள் நடக்குது. அப்பறம்... "

ஏதோ சொல்ல வந்ததை மென்று முழுங்கியதை மாயா கவனித்துவிட்டாள். "டாடி. ஏதோ சொல்ல வந்தீங்க. என்ன? சொல்லுங்க."

"அது வந்தும்மா... முன்னைக்கும் இப்பைக்கும் ஒரு சின்ன வித்தியாசம். அப்ப கல்யாணத்துக்கு அப்புறம் கவுன்சலிங் தேவையா இருந்துது. இப்ப கல்யாணத்துக்கு முன்னயே கவுன்சிலிங் செய்ய வேண்டியிருக்கு. அவ்வளவுதான்."

"போ. டாடி. யூ த ·பூலிஷ் ·பாதர்." ஸ்ரீநிவாசனின் நெஞ்சில் மாயா செல்லமாக குத்தினாள். அந்த இறுக்கத்தில் கண்களில் கண்ணீர் கொப்பளிக்க அதில் உஷா தெரிந்தாள்.