Friday 18 January, 2008

குறும்படத்திற்கான திரைக்கதை - செல்வி

ஒரு அமைதியான அதிகாலை வேளை. விடிவதற்கு சற்று முன்னால் என்று கொள்ளலாம். லேசான பனி மூட்டம் இருக்கிறது. ஒரு நான்கு அடுக்கு மாடி கட்டிடத்தின் வெளித் தோற்றம் தெரிகிறது. முதல் மாடியின் பால்கனி விளக்கு போடப்படுகிறது. இரண்டு தோள்களிலும் ஈரத்துணிகளை சுமந்து கொண்டு பதிமூன்று வயது ஒல்லியான சிறுமி (செல்வி) பால்கனி கதவை திறந்து கொண்டு வருகிறாள். லேட்டாகி விட்டது என்ற பதட்டம் அவள் செயல்களில் தெரிகிறது. மூச்சி வாங்குவதிலும், வழிந்திருக்கும் வேர்வையிலும் அதிகம் வேலை செய்திருக்கிறாள் என்று தெரிகிறது. துணிகளை கொடியில் போட்டுக் கொண்டிருந்தவள், திடீரென சந்தேகம் கொண்டு, குழந்தைகள் எழுந்துவிட்டனவா என்று போய் பார்க்க விரைகிறாள். ஹாலில் ஒரு பாட்டி (70 வயது) கையில் ரிமோட்டுடன் டி.வி.யில் ஆன்மிக நிகழ்சி பார்த்துக் கொண்டு, ஒரு விரோதப் பார்வையுடன் செல்வியின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கிறாள். பெட் ரூம் கதவை லேசாக தள்ளி செல்வி எட்டிப் பார்க்கிறாள். ஏ.சி. சுகத்தில் ஒரு குழந்தை அம்மாவின் மீது கால் போட்டுக் கொண்டும், இன்னொன்று அப்பாவின் மேல் படுத்துக் கொண்டும் இருக்கின்றன. இரண்டு வயதுக்கு உட்பட்ட இரட்டை குழந்தைகள். அம்மாவுக்கு (சுமதி) சுமார் 28 வயதிருக்கும். அவள் கணவனுக்கு 32 என கொள்ளலாம். ஒரு திருப்தியுடன் செல்வி மீண்டும் பால்கனிக்கு வருகிறாள். மிச்ச இருக்கும் சின்ன சின்ன துணிகளை அவசரம் அவசரமாக கொடியில் போட்டு கிளிப்புகள் போடுகிறாள். கடைசியாக ஒரு பெரிய போர்வையை உதறி பால்கனி கட்டையில் போடுகிறாள். எதேச்சையாக இடது பக்கம் பார்க்கிறாள். அவள் கண்கள் அகலமாக விரிகின்றன.

செல்வி : "அப்பா"

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வேகமாக திரும்ப, கீழே இருக்கும் ரோஜா பூந்தொட்டியை கவனிக்கவில்லை. அவள் கால்பட்டு, அது உருண்டு, எதிர் பக்க சுவற்றில் மோதி பெருத்த ஓசையுடன் உடைகிறது.

செல்வி : "ஐய்யோ. அம்மா. ஸ்....ஸ்.... ஆ..."

வலது கால் கட்டைவிரலில் ரத்தம் எட்டிப்பார்க்கிறது. வலிதாங்கமுடியாமல் செல்வி உட்கார்ந்துவிடுகிறாள். கிழவி கத்த ஆரம்பிக்கிறாள்.

கிழவி : "உடைச்சிட்டியா? போச்சு. நாசமா போச்சு. அடியே சுமதி. இங்க வந்து பாரு. நீ ஆசையா ஆசையா வளர்த்த ரோஜாச் செடி மண்ணோடு மண்ணா போச்சு. இந்த மண்ணாங்கட்டி வந்த வேளையிலே எது உருப்படும்"

தூக்க கலக்கத்தோடு புயல் மாதிரி வந்த சுமதி மண் குவியலுக்கு மத்தியில் சோகமாய் சரிந்து கிடந்த ரோஜா செடியை பார்க்கிறாள். ஆத்திரம் கொப்பளிக்கிறது. பளாரென செல்வியின் கன்னத்தில் ஓங்கி அறைகிறாள். காலிங் பெல் ஒலிக்கிறது.

ஆறுமுகம் (செல்வியின் அப்பா) நிற்கிறார்.

சுமதி : "வாங்க. வந்து பாருங்க. உங்க பொண்ணு செஞ்சிருக்கும் அக்கிரமத்தை. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? நேத்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய கொட்டி கிச்சன் முழுக்க அமர்களம். இன்னிக்கி ஒரு பூந்தொட்டி போச்சு. பால்கனி முழுக்க மண்ணு. போச்சு. எல்லாம் போச்சு."

ஆறுமுகம் செயவதறியாது திகைக்கிறார். குனிந்த தலையுடன் செல்வி அழுது கொண்டிருக்கிறாள். சுமதி கத்துவதும் அதற்கு ஆறுமுகம் சமாதானம் சொல்வதும் சத்தமில்லா காட்சிகளாக வருகின்றன. தூங்கி எழுந்து சிரித்த முகத்தோடு செல்வியை நோக்கி ஓடி வரும் இரட்டை குழந்தைகள் வந்து நடக்கும் வாக்குவாதத்தை கண்டு முகம் மாறி செல்வியின் கால்களை கட்டிக் கொள்கின்றன. காட்சி out of focus ஆகி flash back துவங்குகிறது.

ஆறுமுகத்தின் மனைவி படுத்த படுக்கையாக கிடக்கிறாள். கவலையுடன் வாட்ச் மேன் யூனிபார்மில் ஆறுமுகம் அவளுக்கு மருந்தும் மாத்திரையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். செல்வியும் அவள் தம்பியும் அம்மாவை மிகுந்த கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் வீட்டை வீடு என்றே சொல்லமுடியாது. டின் ஷீட்டால் உருவாக்கப்பட்ட ஒரு ஷெட். ஏழ்மைக்கான எல்லா லட்சனங்களும் அங்கே தெரிகின்றன.

அம்மா : "என்னங்க. சம்பளப் பணம் வந்திச்சா? சேகருக்கு ஏதோ நோட்டு புஸ்தகம் வாங்கனுமாங்க. தெனமும் சொல்லிக்கிட்டு இருக்கான்."

ஆறுமுகம்: "வந்த சம்பளப்பணம் எல்லாம் செலவழிஞ்சு போச்சு, தனம். டாக்டர் பீஸ், எக்ஸ்ரே, மருந்து மாத்திரைன்னு எல்லாம் கரைஞ்சு போயிடிச்சு. இப்ப கைல சல்லி காசு இல்லே."

தனம் : "என்னங்க? தேதி பத்துதானே ஆவுது. அடுத்த சம்பளத்துக்கு இன்னும் இருபது நாளைக்கும் மேல இருங்குங்களே. என்ன பண்ணப் போறீங்க?"

ஆறுமுகம்: "தெரியலே தனம். முதலாளியும் கொடுத்த அட்வான்ஸ் பணமே எக்கசக்கமா இருக்குது. இனிமேலும் அட்வான்ஸெல்லாம் கெடையாதுன்னு சொல்லிட்டாரு. சரி, செல்விக்காவது ·பாக்டரில எதாச்சும் ஒரு வேலை போட்டு கொடுங்கன்னு சொன்னேன். அதுக்கு, செல்விக்கு முதல்ல பதினாலு வயசு ஆகட்டும் அதுக்கப்பறம் பார்கலாம்கிறாரு. அதுவரைக்கும் என்ன செய்யறதுன்னு தெரியல... (கொஞ்ச யோசனைகளுக்கு பிறகு) நம்ப செல்வம் ஒரு யோசனை சொன்னான். ஒரு வங்கி அதிகாரி வீட்ல குழந்தைகளை பார்த்துக்கிட்டு வீட்டு வேலை செய்ய ஒரு பொண்ணு ஒன்னு வேணும்ன்னு சொன்னான். அதான்.... செல்வியை அனுப்பி வைக்கலாமான்னு பார்க்கறேன். நல்ல சம்பளம் தருவாங்களாம்.

தனம் : "செல்விதானுங்களே நம்ப வீட்டு வேலையெல்லாம் பார்ர்துக்குது. அதுவும் போய்ட்டா..."

ஆறுமுகம்: "நான் பார்த்துக்கறேன் தனம். இப்ப நம்மக்கு பணம் வேணும். எப்படியாவது. உன்னை பொழைக்க வைக்கறதுக்கு. (கண் கலங்குகிறார்)..... (செல்வி பக்கம் திரும்பி)... செல்வி நீ வேலைக்கு போறியா?

செல்வி : (கொஞ்சம் தயக்கத்துடன்)"அப்பா. காலைல போய்ட்டு ராவுக்கு திரும்பி வர்ற மாதிரின்னா பரவாயில்லேப்பா. அங்கேயே தங்கனும்னா எப்படிப்பா. அம்மா, தம்பி, உங்களையெல்லாம் விட்டுட்டு நான் எப்படிப்பா தனியா இருக்கறது?

ஆறுமுகம்: "இருந்துதாம்மா ஆகனும். நீ இன்னும் சின்னப் பொண்ணு இல்லே. வீட்டு நெலமை புரியும்னு நெனைக்கிறேன். எல்லோருமே பட்டினி கெடந்து சாவறதை விட கொஞ்சம் மனசை சமாதானமாக்கிக்கிட்டு கஷ்டப்பட்டு காசு சம்பாரிச்சா நல்லதும்மா ஒரு அப்பனா இருந்துக்கிட்டு நான் இப்படி கேக்கறது மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்குது.
செல்வி : (அப்பாவின் கைகளை பற்றிக் கொண்டு)"வேணாம்பா. நான் வேலைக்கு போறேன்.
(ஆனால் அவள் கண்களில் அரை சமாதானமே தெரிகிறது.)

Flash back முடிகிறது.

சுமதி: "இங்க பாருங்க ஆறுமுகம். போறும். பேசாம உங்க பொண்ணை கூட்டிக்கிட்டு போயிடுங்க. ரொம்ப தாங்க்ஸ். நான் வேற ஆள் பார்த்துக்கறேன். இவ கொடுக்கற டார்ச்சர்ல என்னால ஆபீஸ்ல நிம்மதியா வேலை பார்க்க முடியலை. நேத்திக்கி டயர்டா ஆபீஸ் விட்டு வீடு வந்தா.... கிச்சன்ல எண்ணெயை கொட்டினதில நாலு மணி நேரம் ஆச்சு, எல்லாத்தையும் சரி செய்ய. இவளால ஏற்படற நஷ்டம் இவளுக்கு கொடுக்கபோற சம்பளத்தை விட அதிகம். எத்தனை தடவை சொல்லியாச்சு? ஒழுங்கா வேலைய பாருன்னு. ஏதாவது அவசர வேலையா ஆள் தேடினா எங்கையாவது ஒரு மூலையில நின்னுகிட்டு அழுதுகிட்டு இருப்பா. வேணாம்.... போதும்.... கூட்டிக்கிட்டு போங்க."

ஆறுமுகம்: "அம்மா. கொஞ்சம் பொறுங்க. செல்வி சின்ன பொண்ணு. அவ்வளவு விவரம் பத்தாது. நான் இன்னிக்கு தெளிவா எடுத்து சொல்லிடறேங்க. அரை மணி செல்விய வெளில கூட்டிக்கிட்டு போறேங்க. எல்லாம் சரியாயிடும். அம்மா. நீங்க செய்யற தயவாலத்தான் அங்க என் குடும்பத்துல அரை வயிராவது சாப்பிட முடியுதுங்க. கொஞ்சம் தயவு செஞ்சி...."

சுமதி கொஞ்சம் யோசனை செய்து.... சரி போங்கள் என்று கை காட்ட.... ஆறுமுகம் செல்வியை அழைத்துக் கொண்டு வெளியே வருகிறார்.

செல்வியால் நடக்கக்கூட முடியவில்லை. விந்தி விந்தி நடக்கும் செல்வியை, மூன்றே மாதத்தில் உதிர்ந்து விழுந்த கருவேலங் குச்சி மாதிரி ஆகிவிட்ட செல்வியை பார்க்க ஆறுமுகத்துக்கு நெஞ்சு வலிக்கிறது.

பார்க்கில் காலை வாக்கிங் போகிறவர்கள் பிசியாக போய் கொண்டிருக்கிறார்கள். ஒரளவுக்கு தனிமை கிடைக்கக் கூடிய இடத்தை தேர்ந்தெடுத்து, அந்த பெஞ்சில் தானும் உட்கார்ந்து கொண்டு, செல்வியை உட்காரச் சொல்கிறார். கொஞ்ச நேரம் அமைதி. பிறகு நிதானமாக ஆரம்பிக்கிறார்.

ஆறுமுகம்: "என்னம்மா. உன்னால அங்க இருந்து வேல செய்ய முடியலயா?"

செல்வி நேரடியாக அப்பாவை பார்க்காமல் தலையை குனிந்தபடி...

செல்வி:"இல்லப்பா. அம்மாவையும் தம்பிப்பயலையும் விட்டுட்டு இங்க என்னால இருக்க முடியல. அவங்க வீட்டு ஐயா குழந்தைகளோடு விளையாடுவாரு. உப்பு மூட்டை தூக்குவாரு. அதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு தம்பி ஞாபகம் வருதுப்பா. (லேசாக விசும்பி விட்டு)... அந்த கெளவி வேற ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கு."

ஆறுமுகம்: (தன் இயலாமையை நினைத்து, மனசுக்குள் வெந்து, கொஞ்சம் நேரம் மேலே பார்த்து, பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு) "செல்வி. இங்க பாரு. பொறுமையா இரு. உனக்கு பதிமூனு வயசு ஆயிட்டு. இன்னமும் நீ சின்ன புள்ள இல்லே. அம்மா சீக்காளியா படுத்திருக்கு. என் சம்பளமும் பத்தல. சின்னப் பயலுக்கு போன வாரம் ஒரேயடியா பேதியாகி கிளிச்சு போட்ட நாரு மாதிரி கெடக்கு. நீயும் அங்க வந்திட்டா என்னால எப்படிப்பா சமாளிக்க முடியும்."

செல்விக்கு பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மெல்லியதாக கண்ணீர் முட்டியது. கொஞ்ச யோசனைகளுக்கு பிறகு...

செல்வி: "போப்பா. அந்தம்மா என்ன வாளில தண்ணீ எடுத்தார சொல்லறாங்க. மூனு மாடி என்னால தூக்கியாற முடியல. கையெல்லாம் காச்சு போவுது. மீந்து போனதெல்லாம் சாப்பிட கொடுக்கிறாங்கப்பா. அந்த கொளந்தங்க தப்பி தவறி ஏதாவது திங்க கொடுத்திட்டா அந்த கெளவி கத்தி கூப்பாடு போடுது. அடிக்குது."

ஆறுமுகம்: "அப்படியா. நான் தெளிவா சொல்லிட்டு போறேன். எதுவானாலும் எங்கிட்ட சொல்லுங்க. அடிக்காதீங்கன்னு. நீ புத்திசாலி பொண்ணு இல்லையா. நெலமைக்கு ஏத்த மாதிரி நடந்துக்கம்மா. உன்னால முடியலைன்னா தைரியமா எடுத்து சொல்லிடு. பயப்படாதே. சரியா."

செல்வி விசும்புவதை ஆறுமுகத்தால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

ஆறுமுகம்: "இன்ணும் மூனே மாசம்மா. மொதலாளி சம்பளத்தை கூட்டி தரேன்னு சொல்லியிருக்காரு. உனக்கும் ஏதாவது வேலை போட்டு தரேன்னு சொல்லியிருக்காரு. கொஞ்சம் பொறும்மா." (சொல்லிக்கொண்டே வந்தவர், சட்டென மீண்டும் கண் கலங்கி...) "என்ன கஷ்டம்மா. நம்ம பொழப்பு நாய் பொழப்பு. வேண்டாம்மா. அடுத்த ஜன்மத்துலயாவது நீ கொஞ்சம் வசதியானவங்க குடும்பதுல பொறந்து தொலை. என்ன பாவம் செஞ்சேனோ, உன்னை இப்படி வாட்டுது. நீ சம்பாரிச்சு நாங்க சோறு திங்கனும்கிற அளவுக்கு இப்படி கேவலமா போய்ட்டேனே என்னை மன்னிச்சுடும்மா." (நடுங்கும் கைகளால் செல்வியின் சவலை கைகளை பிடிக்க,)

செல்வி : "என்னப்பா. இந்த பேச்சை இத்தோட நிறுத்துப்பா. வசதி இல்லாட்டாலும் உன்ன மாதிரி அப்பா எனக்கு இனிமே கெடைக்கமாட்டாங்க. அது நிச்சயம். எனக்கு வசதியெல்லாம் வேண்டாம்பா. நீங்க, அம்மா, சேகரு போதும்.... சரிப்பா. இன்னும் மூனு மாசம்தானே. நான் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா போங்க. போறதுக்கு முன்னாடி அந்த கெளவிய பத்தி அந்தம்மாகிட்டே தெளிவா சொல்லிடுங்க... அப்பறம்.... சரி... நான் சமாளிச்சுக்கறேன்..."

பேச்சு அழுகையோடு கலந்து வருகிறது. திமிறி வந்து கன்னங்களில் வழிந்த கண்ணீரை இனிமேல் அழப்போவதில்லை என்ற மாதிரி பிஞ்சு விரல்களால் வழித்துப் போடுகிறாள் செல்வி. தன் நெஞ்சு வரை வளர்ந்திருந்த செல்வியை அப்படியே சில நிமிடங்கள் மௌனத்துடன் அணைத்துக் கொள்கிறார் ஆறுமுகம். மனசு கசங்கிய காகிதம் மாதிரி ஆகிவிடுகிறது.. கால்கள் துவண்டு உடம்பு முழுவதும் ஒரு ஆயாசம் தெரிகிறது.

வீட்டுக்கு திரும்பி வந்ததும் குழந்தைகள் செல்வியை கண்டதும் மகிழ்ச்சியில் ஓலமிடுகின்றன. கிழவி பேச்சற்று ஒரு விரோத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆறுமுகம் கெஞ்சி கூத்தாடி வீட்டுக்கார அம்மாவை சம்மதிக்க வைக்கிறார். இவை யாவும் பேச்சற்று மௌன நிகழ்வுகளாக வருக்கின்றன.

செல்வி ஓடியாடி சகஜமாக வேலை செய்வதை திருப்தியோடு பார்க்கிறார் ஆறுமுகம். பிறகு கனத்த மனசுடன் வெளியேறுகிறார். செல்வி பால்கனியிலிருந்து கையசைப்பதில் நம்பிக்கை தெரிகிறது.

சுமதி ஆபீஸ் போய்விடுகிறாள். கிழவி தூங்க போய்விடுகிறாள். குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும். ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் உட்கார்ந்து கொண்டு அட்டகாசம் செய்ய ஆரம்பிக்கின்றன. செல்விக்கு சேகரோடு கிராமத்து பம்ப் செட்டில் குளித்தது ஞாபகத்துக்கு வருகிறது. அது காட்சிகளாக விரிகின்றன. செல்வி சேகரின் முகத்தில் தண்ணீரை வாரி இறைக்கிறாள். அவனும் பதிலுக்கு இறைக்கிறான்.

இங்கே இரட்டை குழந்தையில் கொஞ்சம் பெரிய குழந்தை தண்ணீரை வாரி சின்னதின் மேல் அடிக்கிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அது செல்வியின் பின்னால் ஒளிந்து கொள்கிறது.

அங்கே சேகர் வலது காலை இழுத்து இழுத்துக் கொண்டு ஓடுகிறான். சேகருக்கு மிதமான இளம்பிள்ளை வாதம். ஆனாலும் துரத்தினால் ஓட்டமாய் ஓடுவான். செல்வி அவனை துரத்திக் கொண்டு வருகிறாள்.

இங்கே செல்விக்குள் இருந்த குழந்தை குணம் அவளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்க, செல்வி அழத்தொடங்குகிறாள். பாத்ரூமை விட்டு விலகி போகிறாள்.யாருக்கும் தெரியாமல் குலுங்கி குலுங்கி அழுகிறாள். சின்ன குழந்தை மெதுவாக வந்து செல்வியை ஏறெடுத்து கவலையுடன் பார்க்கிறது.

குழந்தை : அக்கா. அழறீங்களா?

செல்வி : (கண்ணீரை துடைத்துக் கொண்டே) இல்லையே.... அது வந்து.... வந்துசும்மா.... வா... குளிக்கப் போகலாம்.

அதற்குள் பெரிய குழந்தையும் வந்து செல்வியின் கையை பிடித்துக் கொள்கிறது. இரண்டு குழந்தைகளையும் பெரிய மனுஷித்தனமாய் நம்பிக்கையுடன் செல்வி பாத்ரூமை நோக்கி நடக்க.... காட்சி ஒளியிழந்து முடிகிறது.

------------------------------------------------------------------------------

செல்வி என்ற தலைப்பில் 25 ஜூன் கல்கி 2006 இதழில் வெளிவந்த எனது சிறுகதையின் திரை வடிவம் இது. யாராவது இதை குறும்படமாக எடுக்க முயற்சித்தால் நான் அதற்கான உரிமையை தருவேன்.

Monday 14 January, 2008

டிசம்பர் சீசன் - கேள்வியும் பதிலும்

1. ஒரு நடிகர், தான் மிக பிரபலமாக தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், தனது நடிப்பை செம்மை படுத்துவதற்காக, ஒரு நாடக குழுவினரை அனுகி, அதில் தன்னை இனைத்து கொண்ட்டார். அவர் யார்? இவர் சூர்யகுடும்பத்தை சார்ந்தவர். சரவணபவ. என்ன கொடுமைடா இது. மைந்தனைச் சொல்லி அப்பனை கண்டுபிடிக்க வேண்டியிருக்கு!

சிவகுமார். மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவில் அவர் இனைந்து கொண்டார்

2. மலையாள இயக்குனர்கள் தமிழில் நேரடி படங்கள் எடுத்து (ரீ மேக் அல்ல) தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் இருவரை குறிப்பிடுக. அந்த படங்கள் எவை? முதலாமவரின் பெயர் ராமனுக்கு உறவு. இந்தப்படத்தில்தான் வடிவேலுக்கு ஒரு திருப்பம் உண்டானது. ஜாதியெல்லாம் வேண்டாம்னா கேட்கமாட்டீங்களே? இரண்டாமவர் டி.ஆர்.
பாலுவுக்கு பிடிக்காத ஒரு வார்த்தையை தன் பெயரில் கொண்டவர். இனிமே சொன்னா
'மேடி தம்பி' கோவிச்சுப்பார்.

அ. பரதன் - தேவர் மகன்
ஆ. சேது மாதவன் - மறுபக்கம் (இந்திரா பார்தசாரதியின் உச்சி வெயில் என்ற குறுநாவலின் திரை வடிவம்)

3. ஒரு தமிழ் திரைப்படத்திற்கான சென்ஸார் சாண்றிதழ் திரும்பப் பெறப்பட்டது. அந்தப்படம் எது? ஆமாங்க. புதுசுன்னா புரிஞ்சுக்க மாட்டீங்களா?

நியூ - எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த படம்

4. நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே காலமான மிகப்பெரும் நாடக நடிகர் யார்? ஒன்று, இரண்டு ரன்கள் அடிக்க சோம்பல் பட்டு 4 ரன்களைஅடித்தே சென்சுரி போடும் கர்நாடக கிரிகெட் வீரரின் பெயருக்கும் இவருக்கும் சம்பந்தம் இருக்கிறது.

விஸ்வநாத தாஸ். முருகன் வேடம் போட்டு வந்தவர் அப்படியே காலமானார். அதே வேடத்தோடு அவரது இறுதி ஊர்வலம் நடந்தது.

5. கபாலீஸ்வரர் கோயிலின் கடைசி தேவதாசி யார்? .---------மனோஹரி; திண்டுக்கல் லியோனி கஞ்சனாக நடித்த படத்தின் பெயருக்கும், கேரளாவில் அரிதான இடது சாரி பெண் தலைவரின் பெயருக்கும் சம்பந்தம் இருக்கிறது.

கௌரியம்மாள்

6. நிறம் என்பதன் மொழியாக்க்த்தில் பரதநாட்டியத்தின் ஒரு பிரசித்தமான ஒரு சொல் வெளிப்படும். அது என்ன? கருப்புத்தான் எனக்கு புடிச்ச 'கலரு'

வர்ணம்

7. ஒரு திரைப்படத்தில் மூன்று விதமான கதைகள் நாயகியால் சொல்லப்பட்டும். ஆனால், முடிவு வேறுவிதமாக இருக்கும். அந்த திரைப்படத்தின் பெயர் என்ன? ரொம்ப 'சேஃபா' சொல்லறேன். ஜெயலலிதா நடிச்ச படமுங்க. சூரியகாந்தி இல்லைங்க. இன்னிக்கு ஜெயலலிதாவுக்கு 'இது' ரொம்ப முக்கியமா போச்சுங்க.

பாதுகாப்பு

8.கால்பந்தை மையமாக வைத்து சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் எது? தமிழ் ஒரு எழுத்து படம். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கும் இந்த படத்தின் பெயருக்கு சம்பந்தம் இருக்குங்க.

லீ - சத்யராஜ் மகன் நடித்த படம்

9. ஓம் சாந்தி ஓம் என்ற ஹிந்தி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு தமிழர்.அவர் யார்?

மணிகண்டன்

10. நீராரும் கடலுடுத்த.. என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு இசையமைத்தவர் யார்? அந்த பாடலை பாடியவர்கள் யார்? ஏனுங்க. எம்.ஜி.ஆர். சிவாஜி, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா யாராக இருந்தாலும் இந்த ரெண்டு குரல்தாங்க மொத்தமா குத்தகை எடுத்துக்கிடுச்சு.

இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள். டி.எம்.எஸ் - பி.சுசீலா

Friday 11 January, 2008

எருமை சவாரி


ஆனந்த விகடன் - 06 ஜூன் 2007

'எச' ராமசாமியை நான் சந்திப்பேன், அதுவும் நான் பயணித்துக்கொண்டிருக்கும் விமானத்தின் பைலட்டாக அவன் இருப்பான் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த ஒல்லி குச்சி ஏர் ஹோஸ்டஸ் என்னை நோக்கி வந்தாள். பவ்யமாக குனிந்து கொழ கொழ ஆங்கிலத்தில் புரிந்ததும் புரியாதுமாக என் சொந்த ஊர், பள்ளிப் படிப்பை பற்றி விசாரித்தாள். பிறகு தன் ஸாட்டின் உள்ளங்கையால் என் கைகளை ஆராதித்து விட்டு, கேப்டன் டி.ஜி.ராம்சே உங்களை சந்திக்க ஆவலோடு இருக்கிறார் என்றாள். 'பத்து நிமிடங்கள் பொறுங்கள். உங்களுக்கு அழைப்பு வரும்' என்று சொல்லிவிட்டு போனாள்.

அந்த நிமிடங்கள் போதும், என்னை பற்றி சொல்வதற்கு. அதற்கு வசதியாக கொஞ்சம் தரைக்கு வருவோமா? நான் ப்ளூ க்ராஸ் ராகவன் என்று மரியாதையோடும், மாட்டு சாணி, பூனை மூத்திரம், கொக்கு, குரங்கு, ஈ, கொசுக்களோடு வசிப்பவன் என்று வசையோடும் அழைக்கப்படுபவன். அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. என் கவலையெல்லாம் இந்த உலகத்தின் ஏகபோக உரிமை மனிதனுக்கு மட்டுமே இருக்கிறதே என்பதுதான். நகரம், மனித சுயநலத்தின் மொத்த உருவம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் ஒரு பென்ஷனர் இடமிருந்து வலமாக சாலையை கடக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த மூலையில் அவர் இருக்கும் போது பென்ஷனாக இருக்கும் அவரது ·பைல், அவர் அந்த பக்கம் போய் சேரும்போது ·பாமிலி பென்ஷனாகிவிடும். அந்த அளவுக்கு பாதசாரிகளை துச்சமாக மதிக்கிறார்கள், நம் வாகன ஓட்டிகள். இதில் அற்ப ஜந்துக்களான நாய்களுக்கும் மாடுகளுக்கும் எங்கே இடம்? ஏது மரியாதை? என் அவசரமும் வேகமும் என்னது, உன் விதியும் உயிரும் உன்னது என்பதாக போய்விட்டது.

நாய் மட்டும் ஏதோ ஓரளவுக்கு நகரசாலை போக்குவரத்தை புரிந்து வைத்துக் கொண்டுள்ளது என்று சொல்லலாம். அந்த பக்கம் போகும் வரை உயிருக்கு க்யாரண்டி இல்லை என்றாலும் கொஞ்சமாவது பதட்டப் பட வேண்டுமே? ம்ஹ¤ம். சிரித்த முகத்தோடு பொறுமையாக வாகன போக்குவரத்தை பார்த்துக் கொண்டிருக்கும். டென்ஷன்! அது! இது! என்று ஆலாய் பறக்கும் அல்ப மானுடர்கள், அந்த திருமுகத்தை பார்தாலே போதும். அதில் மிகப் பெரிய மேலாண்மை தத்துவங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ஓரக்கண்ணால் அப்படி இப்படியுமாக பார்த்துக் கொண்டே இருந்து, சில நொடிகளுக்கு வாகனங்கள் வருவது குறையும்போது 'விலுக்கென்று' ஒரு பாய்ச்சலில் அந்தப் பக்கம் வந்துவிடும் அந்த அதி புத்திசாலி ஜந்து. அந்த மாதிரி வெற்றி நிகழ்சிகளை கண்டு களித்த நான், 'அறிவார்ந்த நாய் அவர்களே! நீவீர் அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால், புத்திசாலி மனிதனாக பிறப்பீராக. எத்தனை ஹார்ன் அடித்தாலும் அதை கிஞ்சித்தும் மதிக்காது அன்கண்டுகபிளாக இருக்கும் அற்ப மனிதர்கள் மண்டு நாய்களாக பிறந்து நகரத் தெருக்களில் லோல் படுவார்களாக' வரமும் சாபமும் அளித்திருக்கிறேன்.

பாவம் ஆடுமாடுகள்! எங்கேயாவது ஹைவேயில் கூட்டம் கூட்டமாக போய் கொண்டிருக்கும். தன் சுயநல தேவைகளுக்காக ஓடிஓடி சம்பாதிக்க மனிதன் போட்டிருக்கும் ராஜ பாட்டையை நாம் அடைத்துக் கொண்டு போகிறோம் என்று நினைவே இல்லாமல் இருக்கும் முட்டாள் ஜீவன்கள் அவை. புழுதி பறக்கும் அந்த காட்சியை பார்த்த மாத்திரத்திலேயே நம் வாகன ஓட்டிகளுக்கு பொறுமை போய்விடும். காதே கிழிந்து போகும் அளவுக்கு ஹார்ன் அடிப்பார்கள். அமெரிக்கையாக சென்று கொண்டிருந்தவைகளை மிரள வைத்து அங்கும் இங்கும் ஓட விடுவார்கள். மாட்டு இடையனை காது கூசும் அளவுக்கு திட்டி தீர்ப்பார்கள். நான் மட்டும் அந்த காலத்து ராஜாவாக இருந்து இவர்கள் என் கண்களில் பட்டால் ஒரே ஒரு அமுக்கு அமுக்கி கழுமரத்தின் கூர்முனையை அவர்களின் ஆசனவாய் சந்திக்க வைத்திருப்பேன்.

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் தஞ்சாவூருக்கு பக்கத்தில் வெட்டாட்டாங்கரையில் இருக்கும் ஒம்பத்து வேலி எனப்படும் இயற்கை எழில் கொஞ்சும் குக்கிராமம். ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன், தவளை, வாத்து, பாம்பு, பல்லி, எலி, புறா, குரங்கு, நாய், கிளி, மைனா, வண்ணத்துப் பூச்சி, மண்புழு என்று விலங்குகள், பறவைகள், புழு, புச்சிகள் என்ற சூழலில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். எனவேதான் நகரத்தின் வாழ்வுரிமையில் அடிக்கடி முரண்பட்டுப் போகிறேன். இன்றைக்கு ஒம்பத்து வேலியில் பட்டணத்து பவுடர்கள் ஆங்காங்கே தென்பட்டாலும், கிராமமும் மக்களும் இன்னும் நகரம் அளவுக்கு மோசமாகிவிடவில்லை.

நானும் 'எச' ராமசாமியும் வாழ்ந்த அந்த இளமை பள்ளிப் பருவம் எங்களின் பொற்காலம். எதிர் வீடுதான் அவன் வீடு. வாய் பேசாத ஜீவன்களோடு எங்களுக்கு தொடர்பு மூன்று வயதிலேயே எற்பட்டது. எங்கள் வீட்டு காமாட்சி கன்று ஈன்றதை பார்க்க என் அம்மா விடாவிட்டாலும் கட்டை சுவர் ஏறி மரத்துக்கு தாவி தூரத்திலிருந்து பார்த்தோம். அவனை முசுகட்டை கடித்து கைகால்கள் கண்டு கண்டாக வீங்கியது ஒரு தனி கதை.

பசுவும் கன்றும் என்று ஆரம்பித்த எங்களது இனிய பொழுது போக்குகள் நாளுக்கு நாள் விரிவடைந்தன. துள்ளிக் குதிக்கும் கன்றை நான் வெளியே அழைத்து வந்தால் அனைத்து பால்ய கூட்டமும் கூடிவிடும். கன்று மண் தின்று விடக் கூடாது என்பதற்காக ஒரு ஓலைக் குவளையை அதன் வாயில் கட்டியிருப்ப்பார்கள். அதை ஒரு முறை ராமசாமி எடுத்து வந்து அவன் வாயில் கட்டிக் கொண்டு கன்றுக் குட்டி மாதிரி குதிக்க அவன் அம்மாவிடம் மொத்து வாங்கினான். ராமசாமி சும்மாவே இருக்க மாட்டான். படுத்திருக்கும் காமாட்சியின் கழுத்தில் இரண்டு கால்களையும் போட்டுக் கொண்டு அதன் மேல் உதடுகளை இரண்டு பக்கமும் உயர்த்தி 'ஈ' என செய்ய வைப்பான். தன் குட்டி வாலை சுழித்துக் கொண்டு ஓடும் பன்றிக் குட்டிகளை ஓட ஓட விரட்டுவான். உடம்பு முழுக்க துணியை சுற்றிக் கொண்டு நாவல் பழ மரம் ஏறி கிளிக் குஞ்சை பிடித்து வருவான். மழைக் காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீட்டிக் கொண்டிருக்கும் மண்புழுக்களை வெடுக்கென பிடிப்பான். அதற்காக நானும் அவனும் கட்டிப்புரண்டு சண்டை போட்டிருக்கிறோம். அவன் வண்ணத்து பூச்சி பிடித்து வந்தால் நான் அவன் கதற கதற வெளியே விட்டு விடுவேன். அதே நேரத்தில் தேனடை எடுக்கப் போய் குளவி கொட்டி வந்தால் நான் தான் அவனுக்கு வெங்காயம் தேய்த்து விடுவேன்.

இரட்டை மாட்டு வண்டி ஓட்டுவது என்பது மனதை கொள்ளை கொள்ளும் இனிய அனுபவம். ராமசாமிக்கு நான்தான் ஸ்டியரிங் பிடிக்க கத்துக் கொடுத்தேன். வலது பக்கமாக திரும்ப வேண்டுமென்றால், முதலில் வலது மாட்டின் மூக்கணங்கயிறை இழுத்துப் பிடிக்க வேண்டும். அது நின்று விடும். பிறகு இடது மாட்டின் கயிறை லூசாக விட்டு அதன் பின்பகுதியை இடது பக்கமாக தள்ளினால் அது திரும்ப ஆரம்பிக்கும். மறு நாளே ராமசாமி வண்டி ஓட்ட கற்றுக் கொண்டுவிட்டான். 'இங்கே பார். நான் ஹை ஸ்பீட் டிரைவிங் காட்டுகிறேன்' என்று சொல்லி இரண்டு மாடுகளின் கால்களுக்கு நடுவே அவன் கால்களை விட்டு ஒரு மாதிரியாக உராய, மாடுகள் பிய்த்துக் கொண்டு ஓடின. இன்றைக்கும் எனக்கு நகைச்சுவை மேலோங்கி இருப்பதற்கு காரணம் ராமசாமி.

ராமசாமியின் ஆசை வண்டி மாட்டு சவாரியோடு நிற்கவில்லை. எருமை மாட்டின் மீது உட்கார்ந்து கொண்டு போக வேண்டும் என்ற பேராவல் அவனுக்கு திடீரென வந்து விட்டது. எங்கள் வீட்டில் எருமை மாடு கிடையாது. ஒத்தைத் தெரு கலியமூர்த்தி வீட்டில்தான் இருக்கிறது. எருமை மாட்டின் மீது உட்காருவது மிக மிக அசௌகர்யமானது. எங்கும் பிடிமானமே இருக்காது. முதுகு எலும்பு கொஞ்சம் உறுத்தும். தவிர, எருமைகள் சோம்பல் சாவடிகள். நகரவே பத்து நிமிடங்கள் யோசிக்கும். நாங்கள் அவைகளை 'பிரேக் இன்ஸ்பெக்டர்கள்' என்று அழைப்போம்.

ராமசாமியின் அதீத ஆசையை கலியமூர்த்தி லேசில் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு மாதிரியாக அவரை சமாளித்து ராமசாமியை சிவன் கோயில் தேரில் ஏற்றுவது மாதிரி ஏற்றிவிட்டேன். ராமசாமி உருண்டையாக கொஞ்சூண்டு இளைத்த பக்கோடா காதர் மாதிரி இருப்பான். அவனது சவாரி முயற்சிகள் எருமைக்கே பிடிக்கவில்லை. தலையை ஆட்டியும் பின்பக்க கால்களை உதைத்தும் தன் எதிர்ப்பை பதிவு செய்தது. மாப்பிள்ளை கார் மாதிரி நகர்ந்து கொண்டிருந்த எருமையை ராமசாமி என்ன செய்தான் என்று தெரியவில்லை. திடீரென நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. எருமை ஓடினால் பயங்கரமாக இருக்கும். விஷயம் கைமீறி போய்விட்டது. கலியமூர்த்தி கத்திக் கொண்டே பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தார். எருமையின் கழுத்து பகுதிக்கு வந்து முன்னே சரிந்தவனை அது ஒரு உதறு உதற தலை குப்புற விழுந்தான். எருமையின் 'பேக் வீல்' அவன் தொடையை சரியாக பதம் பார்த்துவிட்டது. அன்றிலிருந்து ராமசாமிக்கு 'எருமை சவாரி' என்ற அடைமொழி சேர்ந்து கொண்டது.

விமானத்தில் அடிக்கடி போயிருந்தாலும் காக்பிட்டுக்குள் போகும் சந்தர்ப்பங்கள் வந்ததில்லை. எருமை சவாரி ராமசாமி.. இல்லை... கேப்டன் டி.ஜி.ராம்சே அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டார். என்னைப் பார்த்ததும் ராம்சே 'எச' ராமசாமி ஆகிப் போனான். நிறைய பேசினோம்.

"டேய். அன்னிக்கு எருமை சவாரி செஞ்சே. இப்ப ஆகாச எருமை, அதான் அலுமினிய எருமைய மேய்க்கிற. எப்படிடா இருக்கு."

"அடப் போடா. எருமை சவாரில இருக்கிற த்ரில் இதுல சுத்தமா இல்ல. இது வேகமா போனாலும் அந்த எருமையை விட மோசம். டேக் ஆ·ப் செஞ்சு, எலக்ட்ரானிக் பாதையில பிக்ஸ் செஞ்சதும் எங்க வேலை முடிஞ்சிடும். டர்புலண்ஸ் வந்தாத்தான் வேலை. அதையும் இந்த எல்லா மெஷின்களூம் பார்த்துக்கும். ஏ.எல்.எஸ் வந்ததும் லாண்டிங் கூட ஈசியா போச்சு. ஒரு மாசத்துக்கு எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சிட்டு, ஒம்பத்து வேலிக்கு போய் எருமை சவாரி போகனும்டா. அது சரி, உன் ப்ளூகிராஸ் எப்படி இருக்கு."

என் கவலையை கொட்டினேன். பூமியில் குறிப்பாக நகரங்களில் வாயில்லா ஜீவன்களுக்கு இடமில்லை என்பதை சொன்னேன்.

"ஆமா. முன்னேல்லாம் காக்காய் குருவிகள் உட்கார டி.வி. ஆன்ட்டனாக்கள் மொட்டை மாடியில் இருந்துச்சு. கேபிள் டி.வி. வந்து அதுவும் போயிடுச்சு. இன்னும் கொஞ்ச நாள் போனா காக்காய்களையும் குருவிகளையும் நகர குழந்தைகள் ஜூலதான் பார்க்க முடியும் போலிருக்கு." ராம்சே அலுத்துக் கொண்டான்.

"நல்ல வேளை. உன் ஆகாயம் மட்டும்தான் இன்னும் பறவைகளுக்காக இருக்குது. இல்லைலேன்னா அதையும் ப்ளாட் போட்டு வித்து காசு பார்த்துடுவாங்க நம்ம மக்கள்." என்றேன்.

"அடப் போடா. எங்கள் உலகத்தில பார்டு ஹிட்னு ஒன்னு இருக்குது. நாங்கள் தரை இறங்கும் சமயத்தில பறவைகள் எங்கள் பாதையில வந்துடக் கூடாது. பறவையோட அல்ப உயிரைவிட விமானத்தோட பாதிப்புதான் எங்கள் முதலாளிகளோட கவலையா இருக்கும். விமான இறக்கைகளில ·பான் மாதிரி ஒன்னு ஓடிக்கிட்டிருக்குமே, அதுல பறவைகள் சிக்கிக்கிட்டா அவ்வளவுதான். விமானம் மறுபடி பறக்க தயாராக நாட்கள் பிடிக்கும். என்கொயரியில ஆளுக்கு ஆள் குற்றம் சாட்டிப்பாங்க. ஏர்போர்டை சுத்தி பறவைகளே தென்படாதவாறு பார்த்துக்க ஒரு பெரிய டீமே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு."

"ஆமா. நமக்கு நெல்லு வேணும். ஆனால் பூச்சிகள் கூடாது. அடுக்கு மாடி வீடுகள் வேணும். ஆனா அங்க பாம்போ, பல்லியோ, பூரானோ, எலியோ வந்துடக் கூடாது. அதி வேக சாலைகள் வேணும். அங்க தப்பித் தவறி மாடோ நாயோ குறுக்கே வந்துடக் கூடாது. விமானம் வேணும். பறவைகள் அங்க வந்து பறக்கக் கூடாது."

"சுயநலம் பிடித்த மனிதர்கள் ஒழிந்து போவார்களாக" ரெண்டு பேரும் கோரஸாகச் சொன்னோம். விமானம் தரை இறங்க தன்னை தயார் செய்து கொள்ளஆரம்பித்தது.

இந்தக் கதையின் கருவுக்கான தீப்பொறி.....

1. ரஜினிகாந்தின் புன்னகை

ஒரு காட்டுப்பகுதியில் ரஜினி படத்தின் அவுட்டோர் ஷ¥ட்டிங். ஒரு பாம்பு படபிடிப்பு பகுதியில் வந்துவிட யூனிட்டே அல்லோலப் பட்டிருக்கிறது. ஒருவர் ரஜினியிடம் வந்து பாம்பு வந்ததினால் படப்பிடிப்பு தடைபட்டு போய்விட்டது என்று அலுத்துக் கொண்டாராம். ரஜினியிடமிருந்து மெல்லிய சிரிப்பு வந்ததாம். காரணம் கேட்டதற்கு, 'பாம்பு அதன் இடத்திலேயேதான் இருக்கிறது. நாம்தான் அன்னியர்கள்' என்றாராம்.

2. சிவகுமாரின் கோபம்

சென்னை நாகேஸ்வரன் பார்க்கில் 'சித்தி' தொலைகாட்சித் தொடர் ஷ¥ட்டிங். புல்லாங்குழல் ஊதிக் கொண்டிருக்கும் பார்வையற்ற பிச்சைக்காரனாக எனக்கு சிறு வேடம். வாழ்கையின் விரக்தி விளிம்பில் சிவகுமாரும் சுபலேகா சுதாகரும் என்னைத் தாண்டி போவார்கள். என்னைப் பார்த்ததும் அவர்களுக்கு வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகம் வரும். இதுதான் ஸீன். இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு வால் சிறுவன் குறுக்கே ஓடினான். டைரக்டர் கத்தி விட்டார். சாது சிவகுமாருக்கு வந்ததே கோபம்.' டைரக்டருக்கு திருப்தி இல்லை என்றால் கட் சொல்ல வேண்டியதுதானே. இது அவர்கள் விளையாடி மகிழ்வதற்கான பொது இடம். இங்கு நாம்தான் குறுக்கீடு செய்தவர்கள். அப்படியிருக்க எதற்கு கத்த வேண்டும்.' என்று பொங்கித் தள்ளிவிட்டார்.

Thursday 3 January, 2008

சிறுகதை எழுத எனது டிப்ஸ்

முதலில் ஒன்றை தெளிவு படுத்திவிடுகிறேன். தயவு செய்து நான் சொல்லுவதுதான் இலக்கணம் என்று எண்ணிவிட வேண்டாம். எனது அனுபவத்தில், நான் என்னை செம்மைப்படுத்திக் கொள்ள, முட்டி மோதி அறிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. ஒரு சிலருக்காவது பயண்பட்டால் அது என் பாக்கியமே.

எது நல்ல சிறுகதை என்று யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியாது. அதனால்தான் என்னவோ, முதல் பரிசு பெற்ற சிறுகதை நமக்கு மொக்கையாக தெரியலாம். ஆறுதல் பரிசு பெற்ற கதை முதல் பரிசுக்கு உரியதாக இருக்கலாம். ஆனால் ஒன்று. ஒரு சிறுகதை, நம் உள் வட்ட நண்பர்களை, உறவினர்களை தாண்டி, ஒரு சிலரையேனும் திருப்தி படுத்திவிட்டது என்றால் அது நமக்கு வெற்றியே. அந்த பெருவாரியான ரசிப்புத்தன்மையை நோக்கியே ஒரு எழுத்தாளன் இயங்க வேண்டும்.

1. சிறுகதை என்பது ஒரு சிறு நிகழ்வு. எனவே இதில் நாம் எடுத்துக் கொள்வது ஒரு சிறிய சம்பவமாக இருக்கட்டும். அதை மையமாக வைத்து முன்னே பிளாஷ்பேக் சேர்த்து, பின் பகுதியில் முடிவைச் சொல்லி கதை செய்யலாம். மாதங்கள், வருடங்கள் என்றெல்லாம் உருட்ட தேவையில்லை.

2. கதைக்கு தொடக்க வார்த்தைகள் மிக மிக அவசியம். இவைகள்தான் வாசகர்களை படிக்க தூண்டுபவை. எனவே நேரடியாக கதைக்கு சம்பந்தமான விஷயங்களை கொண்டுவந்துவிடுதல் நல்லது. ஒரு நல்ல தொடக்கம், பாதி முடிவை எட்டும் என்று ஒரு பேச்சு இருக்கிறது. இன்றைய உலகம் அவசர உலகம். கதையை படிப்பதற்கு முன்னால் எவ்வளவு பக்கம் என்று பார்க்கும் மனப்பாண்மை கொண்டது. எனவே குழப்பமில்லாமல், ஜெட் வேகத்தில் சுறு சுறுவென தொடங்கும் கதை நிச்சயம் படிக்கப்படும்.

3. சிறுகதையில் எந்தவித தேவையில்லாத வார்த்தைகள் இருக்கக் கூடாது. இந்த ஒரு வரியை எடுத்துவிடுவதால் கதை விழுந்துவிடும் என்ற அளவுக்கு வார்த்தை சிக்கனம் வேண்டும். கதையை எழுதியவுடன் ஒரு வெளி ஆசாமியாக இருந்து தானே படிக்கும் போது அதிகப்படியானவை பளிச்சென்று தெரிந்துவிடும்.

4. கதை சொல்லும் வார்த்தைகளில் ஒரு ரசிப்புத் தன்மை இருக்க வேண்டும். அந்த வார்த்தைகளை படிக்கும் வாசகனை அது எந்த விதத்திலாவது பாதிக்க வேண்டும். வார்த்தைகளில் உள்ள ஜாலம்தான் உங்களுக்கு ஒரு முத்திரையை அளிக்கிறது. எனவே மேம்போக்காக எழுதாமல், ஒரு சிற்பக் கலைஞன் சிற்பம் செதுக்குவது மாதிரி வார்த்தைகளை கையாளுங்கள்.

5. நடுநடுவே வரும் வசனங்கள் பளிச் பளிச் என்று ஆணித்தரமாக இருக்க வேண்டும். அது கதையின் ஓட்டத்தை தீர்மாணிப்பதாக இருக்க வேண்டும்.வெட்டியாக வரும் வசனங்கள் வாசகனை வெறுப்பேற்றும்.

6. முடிவு நெத்தியடியாக இருக்க வேண்டும். அந்த வரியை படித்ததும், வாசகன் 'அட' என்று வியக்க வேண்டும். அவன் திருப்தியுடன் ஒரு புன்னகை செய்தால் அது உங்களுடைய வெற்றி.

7. கதை எழுதுவதற்கு முன்னால் அதை பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொன்றிலும் என்ன சொல்லப் போகிறோம், அவைகள் சீராக இருக்கின்றனவா என்று மனசுக்குள் ஒரு காட்சி மாதிரி ஓடவிட்டு பார்த்துவிட்டு எழுத உட்கார்ந்தால் நல்லது.

8. ஒரு கதைக்கான கரு கிடைத்துவிட்டால், அதை மனசுக்குள் கொஞ்ச நாட்கள் உருட்டிக் கொண்டே இருங்கள். அது சம்பந்தமாக விவரங்கள், விவரனைகள், தர்க வாதங்கள், உங்களின் அனுமானங்கள் ஆகியனவற்றை அலசி செம்மை படுத்துங்கள்.

9. இன்றைய பத்திரிக்கை உலகில் சிறுகதைகள் என்பது A4 சைஸ் பேப்பரில் எழுத்துரு 10ல் இரண்டரை பக்கங்களுக்கு மிக கூடாது. புதிய எழுத்தாளர்கள், தங்களின் கையெழுத்து மிக தெளிவாக இருந்தால் மட்டுமே, கையிலால் எழுதி அனுப்பலாம். கொஞ்சம் மோசமான கையெழுத்து கொண்டவர்கள் கம்ப்யூட்டரில் அடித்து அனுப்புவது நல்லது. தற்போதைய சூழலில் பொறுமையாக படிக்க ஆளில்லை.

10. கதைக்கான களம் மிகவும் வித்தியானமானதாக இருந்தால் மிக நல்லது. மண்வாசனை கொண்ட கதைகளுக்கு என்றுமே மரியாதை உண்டு. அதற்காக வாசகர்களை ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது. புதிய கோணத்தில் கதை சொல்லுவது ஜெயிக்கும் குதிரையில் பணம் கட்டுவது மாதிரி.

11. முதலில் உங்கள் கதை ஒரு பத்திரிக்கையால் நிராகரிப்பட்டால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள். வளரும் எழுத்தாளருக்கு எதிர்மறை விமர்சனங்களை பண்புடன் எற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். ஏன் இந்தக் கதை அவர்களை திருப்தி படுத்தவில்லை? என்ற கேள்வி போட்டு ஆராயுங்கள். அந்த பத்திரிக்கையில் வரும் கதைகளின் போக்கை கவனியுங்கள். அவர்களின் மன ஓட்டம் புரியும். அதற்கு ஒத்துப்போக முடிந்தால் நல்லது. இன்லையேல்லை அதை விட்டுவிட்டு வேறு பத்திரிக்கையை பாருங்கள்.

12. ஒரு கதை நிராகரிப்பட்டததும், அதை மாற்றி எழுத சோம்பல் படவே கூடாது. எனது பல சிறுகதைகள், மாற்றி எழுதப்பட்டு, வேறு பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கின்றன.

13. கதை எழுதுவதற்கு மிக அடித்தளமாக இருப்பது அப்ஸர்வேஷன். நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை உண்ணிப்பாக கவனியுங்கள். ஒரு குடிகாரனை பற்றி எழுதினீர்களானால், அவன் இயல்பை ரசிப்புத்தன்மையோடு எழுதுங்கள். வண்ணதாசன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் எழுத்துக்களை படியுங்கள். அவர்கள் எப்படி எழுத்துக்களை நகர்த்துகிறார்கள் என்பது புரியும். கதை படிக்கும் போது எழுத்துக்கள், ஆடி வரும் தேர் மாதிரி மனசை கொள்ளை கொள்ள வேண்டும்.

14. கதையில் ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது டெக்னிகலான விஷயங்கள் பற்றியோ எழுதப்போகிறீர்கள் என்றால் அதை பற்றி விலாவாரியாக படியுங்கள். அதன் பிறகு
எழுதினால், அதன் உண்மைத்தண்மை வாசகர்களை ஈர்க்கும். வாசகனின் தேடுதல்
வேட்க்கையை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்.

15. கூடுமானவரை உங்களது அனுபவங்களை, நீங்கள் பார்த்ததை, எழுத்தில் கொண்டுவாருங்கள். அதை அப்படியே நேரடியாக எழுதாமல் உங்கள் கற்பனையை ஓடவிட்டு, ஒட்டு சேருங்கள். ஆண் சம்பந்தப்பட்டதை பெண் ஆக்குங்கள். ஒரிஜினல் சித்தப்பாவை கதையில் மாமாவாக்குங்கள். அவர்கள் கதையை அப்படியே எழுதினால் பல் பிரச்சனைகள் பின்னால் எழலாம். தவிர, உங்களது தனித்தன்மை அடிப்பட்டு போய்விடும்.

16. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. குமுதத்திலும், குங்குமத்திலும் கொஞ்சம் விலங்கமான/லைட்டான கதைகள் எழுதலாம். கல்கியில் அதை செய்யமுடியாது. ஆனந்தவிகடனில் இதுவரை எழுதப்படாத புதிய களன்களில், புதிய கோணத்தில் எழுதப்பட்ட கதையை வரவேற்ப்பார்கள். ஒவ்வொரு பாராவிலும் வார்த்தை நயம் அவசியம் இருக்க வேண்டும். பெண்கள் பத்திரிக்கையில் குடும்ப பிரச்சனைகளை அலசும் கதைகள் வரவேற்கப்படும்.

17. கதையை எழுதி முடித்தவுடன், உங்கள் நண்பர் குழுவில் எந்தவித சங்கோஜமும் இல்லாமல் நேரடியாக விமர்சனம் செய்யும் ஒருவரிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். ஒரு வாசகனாக அவருக்கு வரும் சந்தேகங்களை குறித்துக் கொண்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.

18. ஒரு கதைக்கான கரு நேரடியாக கிடைக்காது. ஒரு நிகழ்வின் தாக்கம்தான் ஒரு கதைக்கான கருவாக இருக்கமுடியும். ஒரு முறை, சிக்னலில் ஸ்கூட்டரின் பின் சீட்டில் அம்மாவின் தோளில் தலை தொங்கி தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை பார்த்தேன். அதை வைத்து சின்னு என்ற சிறுகதையை எழுதினேன். குங்குமத்தில் வந்தது. ராஜேஷ்குமாரன் நிறைய க்ரைம் கதைகளுக்கு தினசரிகளே அதிகம் உதவுவதாக ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

19. எழுத எழுததான் வார்த்தைகள் வசப்படும். எனவே நிறைய எழுதுங்கள். அதற்காக நிறைய படியுங்கள். வார்த்தைகளை கொட்டித்தள்ளாமல் அம்மா கைமுறுக்கு சுற்றுவது மாதிரி நிதானமாக கையாளுங்கள். ஒரு அரை மணிநேர கச்சேரிக்கு பின்னால் ஒரு நூறு மணிநேர உழைப்பு இருக்கும். எனவே பலமுறை அடித்து திருத்தி மாற்றியமைத்து உங்கள் மனசுக்கு திருப்தியாகும் வரை முயற்சி செய்யுங்கள்.

20.ஒரு கதையின் நீளத்தை அந்த கதைதான் தீர்மானிக்க வேண்டும். ஒரு பக்க கதைக்கான விஷயத்தை வைத்துக் கொண்டு டி.வி.சீரியல் மாதிரி மூன்று பக்கங்களுக்கு இழுக்காதீர்கள். உங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங் விழுந்துவிடும். உங்களை மிகவும் கவர்ந்த ஒரு சில வார்த்தைகள், பாராக்கள்,நீங்கள் கதையில் சேர்த்திருப்பீர்கள். அது கதையின் போக்குக்கு அதிகப்படியாக இருக்குமானால், யோசிக்காமல் வெட்டித்தள்ளுங்கள்.

என்ன, சரிதானே. புறப்படுங்கள்.