என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Sunday, 25 March 2007
காக்க. காக்க. ரகசியம் காக்க
காக்க. காக்க. ரகசியம் காக்க
தேவி மார்ச் 28, 2007
பால் பாக்கெட்டாகத்தான் இருக்கும் என்று அலட்சியமாக கதவை திறந்த ஜெயாவுக்கு ஆச்சர்யம்.
ஆறு அடி உயரத்தில் ஜீன்சும் டி சர்ட்டுமாக ஆத்மா!!!
அந்த வீடு அடுத்த சில நொடிகளில் கலகலப்பானது. வாட்ச்மேன் இரண்டு ராட்சத பெட்டிகளை மூச்சிரைக்க கொண்டு வந்து வைத்துவிட்டு போனார்.
"அண்ணா. எனக்கு வாட்ச் வாங்கிருக்கியா" தங்கை ரம்யா கேட்டாள்.
"டேய். பெரிய அத்தான் கேட்ட டிஜிடல் காமிரா. அப்பறம் சின்ன அத்தானுக்கு டி.வி.டி பிளேயர் வாங்கிட்டயா." இது அப்பா.
ஆத்மா சொல்வதற்கு வாயெடுப்பதற்குள் ஜெயா இடைமறித்தாள். "அட. அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமே.” ஜெயா எல்லாரையும் விரட்டாத குறையாக அனுப்பி வைத்தாள்.
ஆத்மா ஜெயாவின் ஒரே செல்ல மகன். கம்ப்யூட்டரில் சூரப்புலி. மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். வேலையில் சோந்த இரண்டு வருடங்களில் இரண்டு அக்காக்களுக்கு திருமணம் முடித்து விட்டான். இன்னும் தங்கை ரம்யா திருமணத்திற்கு காத்திருக்கிறாள். வாங்கிய கடன்களுக்கு இன்னும் இ.எம்.ஐ. கட்டிக் கொண்டிருக்கிறான்.
எல்லோரும் போய்விட்டார்கள். ஜெயா யாரும் கவனிக்காத போது பூனை மாதிரி ஆத்மா ரூமுக்கு போனாள்.
"அம்மா. ராகவ் கொடுத்த பேக். ரகசியமா இருக்கா." ஆத்மா கீச்சு குரலில் கேட்டான்.
"பத்திரமா வச்சுருக்கேன். என்ன விசயம். எதுவும் தப்புதண்டா இல்லைதானே."
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எடு சொல்லறேன். "
எடுத்து பிரித்ததில்.... எல்லாம் ஃபாரின் சாமான்கள். ஜெயா குழம்பினாள்.
"அம்மா. எல்லாருக்கும் ஃபாரின் சாமான்கள் வாங்கிக்கொடுக்க எனக்கு ஆசைதான். ஆனா உண்மை என்னன்னா. எல்லாமே இந்தியாவுல சீப்பா நல்ல குவாலிடியில கெடைக்குதும்மா. கணக்கு போட்டு பார்த்தேன். ஐநூறு டாலர் மிச்சம் பிடிக்க முடியற மாதிரி ஐடியா வந்திச்சு. என் ப்ரெண்ட் ராகவ் டெல்லியில இருக்கான். அவன் பக்காவா எல்லாத்தையும் வாங்கி கொடுத்திட்டான். ரம்ஸ் கல்யாணம் நிச்சயம் கிற நேரத்தில எதுக்கு அனாவசிய ஆடம்பர செலவு. சொன்னா புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்க விருப்பத்தை நிறைவேத்தறது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நாம நம்ம நெலமையும் பார்த்துக்கணும் இல்லையா. அதான். தப்பு இல்லே. அவங்க பார்க்கறதுக்கு முன்னால என் பொட்டியில வச்சுடலாம். சீக்கிரம். உஷ்... காக்க. காக்க. ரகசியம் காக்க."
'இவனல்லவோ பிள்ளை?' ஜெயா மெய்சிலிர்த்துப் போனாள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment