Monday 1 December, 2008

இந்த வார விகடனில் - பல்லி


பல்லி

வித்யாதரனின் பார்வை எதேச்சையாக அந்த பல்லியின் பக்கம் திரும்பியது. பிறகு அதிலேயே நிலைத்து விட்டது.

தன்னை சுற்றி கோலம் போட்ட மாதிரி புள்ளி புள்ளிகளாய் பச்சை நிற பூச்சிகள் உட்கார்ந்து கொண்டு, பறந்து கொண்டு இருந்தாலும் அந்த பல்லி அவற்றைக் கண்டு கொள்ளவே இல்லை. எதற்கோ காத்திருந்த மாதிரி இருந்தது. உடம்பில் துளி கூட அசைவில்லை. அதன் வால் மட்டும் மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. சாம்பாரும், ரசமும் சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கு அலுத்து போன மாதிரி ஒரு வேளை பச்சை பூச்சிகள் அதற்கு அலுத்துப் போயிருக்கலாம். அவர் முகத்தில் ஒரு ஏளன சிரிப்பு வெளிப்பட்டது. இதை கவிதாவிடம் சொன்னால் அவள் வேறு கோணத்தில் சொல்லுவாள். 'ஒருவன் மா மரத்தின் மாங்கனியை சாப்பிட குறி வைக்கிறான் என்றால், அதை சுற்றியிருக்கும் மாவிலைகளை சாப்பிட்டு அலுத்துப் போனவன் என்றா எடுத்துக் கொள்ள முடியும்? பச்சை பூச்சிகள்தான் அதன் உணவு என்று நீங்கள் எப்படி தீர்மானிக்கலாம்?' என்று மடக்குவாள். வர வர தான் என்ன யோசிக்கிறோம் என்பதை விட, இதில் கவிதாவின் பார்வை எப்படியிருக்கும் என்ற எண்ணம், வெளிச்சத்தை ஒட்டிய நிழல் மாதிரி கூடவே அவர் மனசில் வந்து அமர்ந்து விடுகிறது.

பல்லி திடீரென்று சுறுசுறுப்பானது. தலை தூக்கி கழுத்தை முறுக்கிக் கொண்டது மாதிரி பக்கவாட்டில் பார்த்தது. ஆமாம்! இளம் சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு எறும்புக்கு கண்ணாடி இழைகளால் ஆன இறக்கை முளைத்தது மாதிரியான ஒரு ஈசல் அப்போதுதான் சுவற்றில் அமர்ந்திருந்தது. பல்லி தன் கால்களை நிதானமாக அகட்டி, அகட்டி முதலை தண்ணீரில் நீஞ்சுவது மாதிரி சலனமில்லாமல் அதன் பின்பக்கம் பார்த்து முன்னேறியது. ஓரளவுக்கு நெருங்கியவுடன் ஒரு அசுர பாய்ச்சல்! அடுத்த வினாடி, அந்த ஈசல் பல்லியின் வாயில்! நாக்கை சுழற்றி உள்ளே தள்ளியது. பிறகு ஏதோ ஒரு அதிர்வை உணர்ந்ததும், கலவரப்பட்டு ஓடி மறைந்துவிட்டது.

பல்லி ஓடிவிட்டாலும் அந்த காட்சி மட்டும் வித்யாதரனின் மனசைவிட்டு விலகவில்லை. தான் ஏன் அதில் அதிக கவனம் கொண்டோம் என்று யோசிக்கலானார். அந்த வன்முறை பிடித்திருந்ததா? இல்லை.... மை காட்! அவர்தான் அந்த பல்லியா? அப்படியென்றால் இளஞ் சிவப்பு...மஞ்சள்... கண்ணாடி இழை.... ஆமாம்! கவிதாவும் கிட்டத்தட்ட அந்த நிறம்தான். கண்ணாடி அணிந்திருக்கிறாள். சே! என்ன மட்டரகமான உருவகம்!! ஏன் இப்படி சிந்தனை போகிறது? உயர்ந்த சிந்தனைகள், தர்க்க வாதங்களை உள்வாங்கும் மனசு, ஏன் இப்படி அடிக்கடி குப்பை தொட்டியாகி விடுகிறது?

வித்யாதரனின் மனைவி சரளா அவரிடமிருந்து சட்டப்படி விடுதலை பெற்று மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. திருமணம் செய்து கொண்டு, மன வேறுபாடுகளால் ஒருவரை ஒருவர் கீறிக் கொண்டது அவர் வாழ்வில் மிக கொடுமையான துன்பியல் சம்பவங்கள். எழுத்துலகில் எந்த அளவுக்கு மலை உச்சிகளை எட்டினாரோ, அந்த அளவுக்கு நேர் எதிராக சொந்த வாழ்க்கையில் பெரிய பெரிய பள்ளத்தாக்குகளில் விழுந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எதற்கு இந்த மன உளைச்சல்? பிரிந்திருந்தால் இருவருக்குமே மகிழ்ச்சிதானே என்பது புரிந்தவுடன், அந்த முடிவுக்கு தயாரானார். விண் விண்ணென்று தெரித்துக் கொண்டிருக்கும் கட்டி உடைந்து, சீழ் வெளியேறி, மருந்து கட்டு போட்டதும் ஒரு நிம்மதி வருமே அந்த மாதிரி விவாகரத்து பெற்ற அன்று உணர்ந்தார்.

கவிதா ஒரு ரசிகையாகத்தான் வித்யாதரனுக்கு அறிமுகமானாள். தன் வீட்டு பெண்ணோடு அவரால் சுமுகமாக இருக்கமுடியவில்லையே தவிர, அவரது கதைகளில் வரும் கற்பனை கதாநாயகிகள் உயர்தர பெண்ணியம் பேசுவார்கள். உளவியல் ரீதியாக பல பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு கொடுப்பார்கள். அதனால் அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அவர்கள் நேரிலும், போனிலும் மணிக்கணக்காக பேசியிருக்கிறார்கள். அவர்களில் கவிதா மட்டும் வித்தியாசமாக தெரிந்தாள். சரளாவுக்கு நேர் எதிர். முதலில் அவரது கதைகளை பற்றி ஆழமாக விமர்சித்து வந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் மீது தன் ஆளுமையை தொடர்ந்தாள். அதை அவர் அனுமதித்தார் என்றே சொல்ல வேண்டும்.

பேனாவும், வெள்ளை பேப்பருமாக எழுதிக் கொண்டிருந்தவரை, அவள்தான் கணினியில் நேரடியாக தட்டச்சு செய்ய பழக்கினாள். முதலில் அடம் பிடித்தவரை, தட்டி கொட்டி அவள் விருப்பத்திற்கு கொண்டு வந்தாள். கணினி பழகியதும், அவரால் நிறைய எழுத முடிந்தது. பத்திரிக்கைகளுக்கு உரிய நேரத்தில் கொடுக்க முடிந்தது. அடுத்த பாய்ச்சலாக, இணைய தளத்தில் வித்யாதரனுக்காக ஒரு வலைமணையை உருவாக்கிக் கொடுத்தாள். அதில் வரும் கடிதங்களுக்கு பதில் எழுதவும், அவ்வப்போது அதை புதுப்பிக்கவும் அடிக்கடி வர ஆரம்பித்தாள். பிறகு அவருக்கு உதவியாளர் என்ற பொறுப்பை அவளே ஏற்றுக் கொண்டாள். அவர் சொல்லச் சொல்ல அவள் கணினியில் சேர்ப்பாள். இடையிடையே விவாதமும் செய்வாள். பல சமயங்களில் எப்படி இந்த சின்னப் பெண்ணை இவ்வளவு தூரம் அனுமதித்தோம்? இது சரியா? இல்லை தவறா? என்று யோசித்து குழம்பியிருக்கிறார். கடந்த ஒரு சில மாதங்களாக கவிதா இல்லாமல் அவரால் ஒரு வாக்கியம் கூட எழுத முடியவில்லை.

வாசலில் காலிங் பெல் ஒலித்தது. அது ஒலித்த விதத்தில் கவிதாதான் வந்திருக்கிறாள் என்று புரிந்தது. வித்யாதரன் இருபது வயது இளைஞன் மாதிரி ஓடிச் சென்று கதவை திறந்தார். கவிதாவேதான்!

"கவிதா! வா! இப்போதான் ஒரு பல்லி, பூச்சியை வேட்டையாடினத பார்த்துகிட்டுருந்தேன்."

"ஆமாம். வீழ்த்துவதும். வீழ்ந்தபின் வெற்றிக் கொடி நாட்டுவதும் ஆண்களின் வழக்கமல்லவா?"

"என்ன கவிதா! வந்ததுமே கத்தியை சுழற்ற தொடங்கிட்டே. இன்னிக்கு என்னை ஒரு வழி செஞ்சுட்டு போறதா எண்ணமா?"

"ஐய்ய! நான் சொன்னது உங்க வசனம்தான். மகரந்த பூக்கள் நாவல்ல உங்க கதாநாயகி ரம்யா சொல்லறதுதான் அது."

"நதியின் நீரை எடுத்து நதிக்கே அர்ப்பணம் செஞ்ச மாதிரி" என்று சொல்லிவிட்டு அவளை முதன் முறையாக கூர்ந்து கவனித்தார். மனசு மீண்டும் குப்பைக் கூடை ஆனது.

"என்ன சார்! மணிரத்னம் படத்திலே ஹீரோ ஹீரோயினை பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க?"

வித்யாதரன் உள்ளுக்குள் விகிர்த்து போனார். கிராதகி! ஒரு நொடியில் உள் மனதை புரிந்து கொள்கிறாளே! "இல்லே. எங்கிருந்தோ வந்தாய். எழுத்து சாதி நான் என்றாய். எழுத்தையும் தாண்டி எனக்கு பல விதங்களில் உதவியாய் இருக்கிறாய். வம்பு சண்டையும் போடுகிறாய். நீ யார்? ஏன் என் பக்கம் வந்தாய்? உன்னை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை." அவருக்குள் காமத்தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

"சார். பேச்சு தடம் மாறி எங்கேயோ போகுதுன்னு நினைக்கிறேன். என்ன சொல்லணுமோ சொல்லிடுங்க"

"கவிதா. தப்பா எடுத்துக்காதே. மணிரத்னத்துக்கு கூட ரெண்டாவது படம்தான் ஹிட்டு. அது மாதிரி முதல் முயற்சியில தோல்வியடைஞ்சிட்டு, ரெண்டாவதுல வெற்றி பெற்றவங்க நிறைய பேர் இருக்காங்க....."

தட்டு தடுமாறி தன் உள்ளத்து ஆசையை போட்டு உடைத்துவிட்டார். அது கவிதாவுக்கு ஷாக்காக இருந்திருக்க வேண்டும். மெனமாக தலையை குனிந்த படி இருந்தாள். மூச்சு மேலும் கீழுமாக போனது. கைகள் இரண்டும் இறுகின. நிமிர்ந்ததில் கண்களில் கண்ணீர்.

"சார்! இதை நான் எதிர்பார்க்கல. நீங்களும் ஒரு சாதாரண ஆம்பிளைன்னு நிரூபிச்சிட்டீங்க."

"நானும் சாதாரண ஆம்பிளைதான் கவிதா. எழுத்தாளர்னா ஏதோ ஆகாசத்துலேர்ந்து குதிச்சவங்க இல்லே. நான் என் எண்ணத்தைச் சொன்னேன். உனக்கு இஷ்டம்னா ஒத்துக்க. இல்லேன்னா விட்டுடு"

"அது எப்படி? எப்படி நீங்க என்னை அந்த மாதிரி கேட்கலாம்? நீங்க என்ன வேணும்னாலும் கேக்கலாம். அதுக்கு நாங்க உண்டு இல்லேன்னு மட்டும் பதில் சொல்லணும். இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். இந்த சுடிதார்க்குள்ள என்ன இருக்குன்னு பார்க்கிற ஆசை உங்களுக்கு வந்திடுச்சு. உங்க அல்டிமேட் கோல் அதுதான். என்னை உரிச்சு பார்த்துட்டீங்கன்னா..."

"கவிதா! ப்ளீஸ். ஸ்டாப். என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கே. ஏதோ உடல் இச்சைக்காக அலைபவன்னு நினைச்சுக்கிட்டே"

"அதுதானே உண்மை." அவள் குரல் கூடியது. கத்தி மாதிரி அந்த வார்த்தைகள் பாய்ந்து வந்து அவரை தாக்கின. படபடப்புடன் எழுந்தாள். சரிந்த கண்ணாடியை நடுங்கும் கைகளால் பிடுங்கி கை பைக்குள் போட்டுக் கொண்டாள். மீண்டும் ஆரம்பித்தாள்.

"உங்களோட எழுத்துக்கள் அனைத்தும் போலி"

"ஆமாம். எழுத்துக்கள் எல்லாமே கற்பனைகள். போலிதான். ஒரு கதையிலே கொலை செய்யறது மாதிரி விவரிச்சுருக்கேன். அதுனால நான் கொலைகாரன்னு ஆகிவிட முடியுமா?

"ஓ! பிரபல எழுத்தாளர்! வார்த்தைகளின் வித்தகர்! எல்லாத்துக்கும் ரெடியாக பதில் வைச்சுருக்கீங்க. பொய்யாக யோசித்து, பொய் வாழ்க்கை வாழ்ந்து..... இரட்டை வேடதாரி.... நீங்க ஒரு ஹிப்போக்கிரேட்."

"வானத்து நட்சத்திரங்களை வியந்து பார்த்துக் கொண்டே, யதார்த்தம் புரியாமல் பள்ளத்தில் விழுபவன்தான் எழுத்தாளன், கவிதா. என்னை நம்பு. எனக்கு கொஞ்சம் இரக்கம் காட்டேன்."

கண்ணீர் கொப்பளித்த சிவந்த கண்களுடன் 'இதுதான் உன்னோடு கடைசி' என்ற மாதிரி ஒரு அம்பு பார்வையை வீசி விட்டு, விறு விறுவென தன் தோள் பையை எடுத்து மாட்டிக் கொண்டு, வாசல் கதவை படீரென சாத்திக் கொண்டு போய்விட்டாள்.

வித்யாதரனை அந்த தனிமை கொல்லத் தொடங்கியது. சே! அவசரப்பட்டு விட்டோமோ? ஒரு தீவிர ரசிகையை கொச்சைப்படுத்திவிட்டோமோ? அவள் செல்லுக்கு முயற்சி செய்தார். முதல் முறை ரிங் போனது. பிறகு கட் செய்யப்பட்டது. அடுத்த முறை ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு விட்டது. வித்யாதரனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவளுடைய ஒர்கிங் வுமன் ஹாஸ்டலுக்கு போனார். அங்கேயும் இல்லை. அவளுக்கு நண்பர்கள் வட்டம் மிக குறைவு. அவர்களிடம் இவளை பற்றி விசாரித்தால் பல எதிர் கேள்விகள் வரும். டீரென அந்த பல்லி ஈசலை சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. மாறுபட்ட பல யோசனைகளுடன் அங்கும் இங்கும் அலைந்தார். திஉணர்ச்சி மிகுதியில், ஒரு வேளை அவள் ஏதாவது விபரீதமான முடிவுகளை எடுத்துவிட்டால்? அவள் செய்யக் கூடியவள்தான். எல்லாவற்றிலும் தீவிரம். ஆசை காட்டுவதிலும் தீவிரம். எதிர்ப்பதிலும் தீவிரம். எங்கே போய் அவளை தேடுவது? எப்படி தடுப்பது ? தன்னைத்தானே நொந்து கொண்டார்.

இரண்டு மணி நேர அலைச்சலுக்கு பிறகு அவர் வீடு திரும்பியதில் ஆச்சர்யம் இருந்தது. கவிதா அவருக்காக வீட்டு வாசலில் காத்திருந்தாள். முகம் காட்டாமல் திரும்பியிருந்தாள்.

கதவை திறந்து, உள்ளே வந்த பிறகும் அமைதி தொடர்ந்தது. வித்யாதரன் பொறுமை காத்தார். பிரம்பு கூடை ஊஞ்சலில் உம்மென்று தலை குனிந்து உட்கார்ந்திருந்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை.

"கவிதா! நான் ரொம்பவும் டயர்டா இருக்கேன். இன்னொரு தடவை உன்னோட சண்டை போட ......"

"நான் ஹாஸ்டலை காலி பண்ணப் போறேன்."

"லுக்! நான் ஏதோ சொன்னதுக்காக, ஹாஸ்டலை காலி பண்ணி, வேலையை விட்டுட்டு, வேற ஊருக்கு போயி...."

"நான் ஏன் வேற ஊருக்கு போகணும்?"

பளீரென நிமிர்ந்தவளின் முகத்தில் கோபமில்லை. ஒரு புன்னகை கூட்டமே வெடித்து சிதற காத்திருந்தது. "என் வீடுதான் இங்க இருக்கே! இங்க வந்துட்டா போச்சு"

ஓடிவந்து வித்யாதரனின் தோள்களைப் பற்றிக் கொண்டாள். கவிதாவை இவ்வளவு நெருக்கத்தில் அவர் பார்த்ததில்லை. அடுத்த நொடியிலேயே அந்த நெருக்கம் இன்னும் அதிகரித்தது.

"கவி! நான் ஒண்ணு சொல்லட்டுமா? அறிவுப்பூர்வமாக எடுக்கப்பட்ட சில முடிவுகளைவிட முட்டாள்தனமாக எடுக்கப்பட்ட பல முடிவுகள்தான் ஜெயிச்சுருக்கு. நான் முட்டாளாகவே இருக்க ஆசைப்படறேன்."

"நானும்தான்."

எழுச்சியும் வீழ்ச்சியும் தொடர்வது என்பது பிரபஞ்சத்தின் இயக்கம். இது ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் பொருந்தும். அதில் எது வீழ்ச்சி? எது எழுச்சி? என்பதை அனுமானித்தல் மிக கடினம். இது சரி, அது தவறு என்பது மானுடப்பார்வையின் பேதம். ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம் கோணங்கள் மாறுபடும்.

கவிதாவின் அணைப்பில் வித்தியாதரன் ஒரு எழுச்சி பெற்று உயரே பறப்பது போல உணர்ந்தார். அடுத்த வாரம் பத்திரிக்கைகளுக்கு செம தீனி காத்திருக்கிறது.

அது வித்யாதரனின் எழுச்சியா? வீழ்ச்சியா?

(ஆனந்த விகடன் - 03 டிசம்பர் 2008)

Monday 20 October, 2008

இது, அது அல்ல


"ச்சீ!.... என்ன ராஜேஷ்?..... யூ ஆர் வெரி நாட்டி" ஷர்மிளா முகம் சிவந்தாள். அவளின் ரோஜா நிற மெல்லிய உதடுகளின் மேல் சின்னச் சின்னதாய் நீர் மொட்டுக்கள்.

"கமான் ஷர்ம்ஸ். இதவிட பவர்ஃபுல்லா இன்னொண்ணு இருக்கு.. வேணுமா?" ராஜேஷ் விஷமத்தனமாக சிரித்தான். அவனுள்ளே இளமையின் வேகம் ஓவர்டைம் செய்து கொண்டிருந்தது.

"நோ தாங்க்ஸ். ராஜேஷ், வரவர நீ ரொம்பவே கெட்டுப் போய்ட்டே. புதுப் பெண்டாட்டியிடம் பேசும் பேச்சா இது?" முகத்துக்கு முன்னால் வந்துவிட்ட மயிற்கற்றைகளை காதுக்குப் பின்னால் தள்ளினாள். காதலிக்கும் போது எப்படி மென்மையாக இருந்த ராஜேஷ், இப்படி வல்கராக மாறியிருக்கிறான்! எல்லாம் காமம் படுத்தும் பாடு!!

"ஷர்ம்ஸ். நீயும்தான் ரொம்ப மாறிட்டே. சும்மா ஒரு எரொட்டிக் மூடுக்கு கொண்டுவரலாம்னு பார்த்தா, அதப் போய் சீரியஸ்ஸா எடுத்துக்கறயே?" ராஜேஷ் கிடைத்த ஒரு சில மென இடைவெளியில் ஷாம்பெயினை ஒரு சிறிதளவு சிப்பிக் கொண்டான். ஹு... ஹூ என்று சம்பந்தமில்லாமல் கத்தினான்.

"ராஜேஷ். நோ ஜோக்ஸ் ப்ளீஸ். ஐயாம் வெரி சீரியஸ். உன் பேச்சில் காதல் இல்லை. காமம்தான் இருக்கு. நான் வேண்டாம். என் உடம்புதான் வேணும், இல்லையா?" ஷர்மிளா அழத் தொடங்கினாள்.

"ஹேய்! என்ன இது?.... ஓகே... ஸாரி.... ஐம் ஸோ ஸாரி. என்னை மன்னிச்சுடும்மா. என்ன இவ்வளவு சென்சிடிவ்வா இருக்கே?" சில்லென்ற ஏ.சி.யில் அவனுக்கும் வியர்த்தது. காது மடல்களில் வெப்பத்தை உணர்ந்தான்.

"............."

"என்னடா? கோவமா?"

"நீ ரொம்மான்டிக்கா இருக்கிறதவிட அதிகமாவே டிராமாட்டிக்கா இருக்கே. எனக்கு பொய் வாழ்க்கை போரடிச்சு போச்சு, ராஜேஷ். திகட்டுது. எனக்கு நீ வேணும்.. நீ மட்டும் முழுசா வேணும். காலேஜில் பார்த்த, பழகிய அந்த ராஜேஷ் வேணும்." ஷர்மிளாவின் மார்புகள் விம்மி அடங்கின. கண்ணீர் கன்னங்கள் வழியாக இறங்கி, உதடுகளை ஈரப்படுத்தி உப்பு கரித்தது.

"ஷர்ம்ஸ். சின்னச் சின்ன பொய்கள்தான் வாழ்க்கையோட அஸ்திவாரமே. நீ கோபப்படும்போது கூட அழகாயிருக்கேன்னு நான் அடிக்கடி சொல்வேன் இல்லையா?"

"இது ரொம்பவே ஓவர். இதை ஜோக்கா எடுத்துக்க மாட்டேன். இதை ஒரு ஸ்டேட்மென்டா.....'

"மறுபடியும் மன்னிப்பு ப்ளீஸ். என் இன்பத் தலைவியே"

"ராஜேஷ். ஐ லவ் யூ". ஷர்மிளா அபாயகரமாக நெளிந்தாள்.

"ஐ டூ லவ் யூடா" ராஜேஷ் கரைந்துவிடுவான் போலிருந்தது.

ஒரு மென இடைவெளிக்கு பிறகு, "ஓகே ராஜேஷ். எனக்கு கண்ணைச் சொக்குது. நான் தூங்கப் போறேன். மிச்சம் மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம்" ஷர்மிளாவின் பட்டாம்பூச்சி இமைகள் துடித்தன.

"நோ நோ ஷர்ம்ஸ். இன்னும் பத்தே நிமிஷம். ஜஸ்ட்.... லெட்ஸ் ஹாவ் ஒன் மோர் ஃபன்"

"உனக்கு ராத்திரி, பகல்ன்னு வித்தியாசமே கிடையாது. எப்பவும் இதே நினைப்புதான். நீ திருந்தவே மாட்டே. நாளைக்கு ஒரு ப்ராஜெக்ட்டை கம்ப்ளீட் செஞ்சாகணும், ராஜேஷ். ஐ நீட் ரெஸ்ட்."

"ஷர்ம்ஸ்... ப்ளீஸ்.... லிசன் டு மீ...."

ஷர்மிளா இன்டர்னெட் சாட்டிங்கை மூடிவிட்டு தூங்கப் போனாள். உலகத்தின் இன்னொரு கோடியில், சியாட்டிலில், தனிமையில் வாடிக் கொண்டிருந்த ராஜேஷ் சுறுசுறுப்பாக ஆபீசுக்கு கிளம்பினான்.

(ஆனந்த விகடன் தீபாவளி மலர் - 2008)

Friday 3 October, 2008

அமுதசுரபியில் எனது ஆன்மீகக் கட்டுரை



சக்தி பீடம் - காமாக்யா

சர்வ வல்லமை படைத்த லோக மாதா சக்திக்கு மொத்தம் ஐம்பத்தியோரு பீடங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் பிரசித்தமாக கருதப்படுவது அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுஹாத்தியில் (தற்போது குவஹாட்டி) உள்ள காமாக்யா எனப்படும் யோனி பீடமாகும்.

அதென்ன ஐம்பத்தியோரு சக்தி பீடங்கள்? (பார்க்க - பெட்டி செய்தி)

ஒரு சமயம் தக்ஷன் என்ற ராஜா ஒரு மஹா யாகம் நடத்தினான். அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் மகள் தாக்ஷாயிணியை சிவன் மணந்து கொண்டதால், அந்த யாகத்திற்கு தன் மாப்பிள்ளையை வேண்டுமென்றே அழைக்கவில்லை. ஆனால் தந்தை பாசம் கண்ணை மறைக்க அழையா விருந்தாளியாக தாக்ஷாயிணி அங்கே போனாள். அங்கே சிவனுக்கு நடந்த அவமானங்களை கண்டு சகிக்க முடியாமல் அங்கேயே உயிரை விட்டாள். சக்தி மரித்த செய்தி கேட்டு சிவன் அங்கே போய், சக்தியின் இறந்த உடலை தன் தோள்களில் தாங்கிக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினான். உலகமே கிடுகிடுத்து அழியும் நிலைக்கு போனது. உடனே காக்கும் கடவுளான விஷ்ணு தனது சுதர்ஷன சக்கரத்தினால் சக்தியின் உடலை துண்டு துண்டாக வெட்டி விடுகிறார். அது ஐம்பத்தியோரு துண்டுகளாக பூமியின் பல பாகங்களில் விழுகிறது. அதில் யோனி என்று அழைக்கப்படும் பெண் உறுப்பு ஒரு மலை மீது விழுகிறது. விழுந்த மாத்திரத்தில் அந்த மலை நீல நிறம் பெறுகிறது. அப்போதிலிருந்து அந்த மலைக்கு நீலாசல் என்றும், யோனி விழுந்த இடம் காமாக்யா என்றும் பெயர் பெற்றன. அந்த பகுதிக்கே காமரூபம் என்ற பெயர் வந்தது. தற்போது அசாம் என்று அழைக்கப்படுகிறது.

குவஹாட்டி பஸ் நிலையத்திலிருந்து காமாக்யா போவதற்கு நிறைய பஸ்கள் இருக்கின்றன. அரை மணி நேர பயணம். நீலாசல மலையில் பஸ் வளைந்து, வளைந்து மேலே போகிறது. பெயர்தான் நீலாசலமே தவிர, மலை பச்சை பசேல் என்று இருக்கிறது.

தற்போது உள்ள கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நரநாராயண் என்ற வங்க மன்னனால் கட்டப்பட்டது. அதற்கு முன்னால் இருந்த கோயில் கட்டிடங்கள் முஸ்ஸீம் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டதாம். இன்றைக்கும் அதே பழம் பெருமையுடன் காமாக்யா கோயில் பக்தர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறது. துர்கா பூஜா நாட்கள் என்று சொல்லப்படும் நவராத்திரி நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது. உலகின் பல மூலைகளிலிருந்து தாந்த்ரீகளும், சன்யாசிகளும் வந்து குவிகிறார்கள். ஒற்றை காலில் நிற்பவர், தலை கீழாக சிரசானம் செய்தவாறே இருப்பவர், பாம்புகள் மாதிரி நீண்ட நீண்ட ஜாடா முடியை கொண்டவர், என்ன கேட்டாலும் வாயே திறக்காதவர் என்று விதவிதமான தாந்த்ரீகளை அந்த சமயத்தில் பார்க்கலாம்.



காமாக்யா கோயிலின் கருவறையில் சக்தி அரூபமாக காட்சியளிக்கிறாள். யோனி பீடமான அந்த பாறையின் மீது ஒரு சிவப்பு துணி போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். அருகிலேயே ஒரு சுனையிலிருந்து நீர் ஓடிக் கொண்டே இருக்கிறது. கோயில் வாசலிலேயே நமக்கு வழி காட்ட நூற்றுக் கணக்கான பாண்டாக்கள் (நம்ம ஊர் குருக்கள் மாதிரி) காத்திருக்கிறார்கள். நாம் கேட்கிறோமோ இல்லையோ, கைடு மாதிரி முழு கதையையும் சொல்கிறார்கள். பீடத்துக்கு பக்கத்திலேயே பிரதான பாண்டா அமர்ந்திருக்கிறார். நம்மை அழைத்து வந்த பாண்டா ஒரு சில மந்திரங்களை சொல்லச் சொல்கிறார், நாம் கொண்டு போகும் மலர்களையும், பிரசாதங்களையும் தட்சினையோடு சேர்த்து மெயின் பாண்டாவிடம் கொடுத்தால் அவர் நம் தலையை தெட்டு ஆசிர்வதிக்கிறார். பிறகு நாமே குனிந்து ஓடிக் கொண்டிருக்கும் சுனையிலிருந்து நீரை கைகளால் அள்ளி தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். அங்கே எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்குகளைத்தவிர எந்த வெளிச்சமும் கிடையாது. மிகவும் குறுகலான படிகள். அதிக நேரம் அங்கே நின்றால் மூச்சு முட்டும். கருவறையின் கூரைப் பகுதியை தவிர மற்றவை யாவும் கற்பாறைகள். கண் மூடி தியானித்து அரூபமான அந்த சக்தியை வழிபடும் போது உள்ளுக்குள்ளே ஒரு பரவசம் கிளைத்தெழுகிறது. காமாக்யாவில் பிரசாதம் என்பது தேங்காய் பத்தை, இனிப்புகள், ஊற வைத்த கொண்டை கடலை போன்றவைகள்தான். சமைக்கப்பட்ட எந்த உணவும் காமாக்யாவில் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

துர்கா பூஜா நாட்களை விட மிக முக்கியமாக கருதப்படுவது ஆஷாட மாதத்தில் வரும் 'அந்த மூன்று நாட்கள்' தான். காமாக்யாவை பூமித்தாயாகவும் வழிபடுகிறார்கள். மானுட பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் மாதவிலக்கு என்றால் காமாக்யா வருடத்தில் ஒரு முறை மூன்று நாட்கள் 'கோயிலுக்கு வெளியே' அமர்கிறாள். அதற்கு அம்புவாசி என்று பெயர். அந்த மூன்று நாட்களிலும் கோயிலின் பிரதான கதவு இழுத்து பூட்டப்படுகிறது. காமாக்யாவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள், அந்த மூன்று நாட்களில் எந்தவித சமைத்த உணவையும் உண்ணாமல், பழங்களையும், நீரில் ஊற வைத்த கொண்டைகடலையும் உண்டு விரதமிருக்கிறார்கள். காமாக்யா கோயிலைத் தவிர சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அந்த மூன்று நாட்களில் பூட்டப்படுகின்றன. நிலத்தில் உழுவதும் அல்லது விதைகளை ஊன்றுவதும் தவிர்க்கப்படுகிறது. கருவரையிலிருந்து நாள் முழுவதும் நிறமற்ற நிலையில் ஓடி வரும் சுனை நீர், அந்த மூன்று நாட்களில் மட்டும் சிவப்பு நிறத்தில் இருக்கும். அந்த நீரை புனிதமாக கருதி, சிவப்பு நிற துணிகளை துண்டு துண்டாக வெட்டி அதில் ஊற வைக்கிறார்கள். பிறகு அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். அதை பெறுவதற்கு பலத்த போட்டா போட்டி ஏற்படுகிறது. அதிர்ஷ்டக்கார பக்தர்கள் அதை தங்கள் பூஜை அறையில் வைத்து பூஜிக்கிறார்கள்.

நாலாம் நாள், காமாக்யா கோயில் மிகுந்த கோலாகலத்துடன் திறக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் அவர்களது வீட்டை கழுவி விடுகிறார்கள். அன்று காமாக்யா தனது தீட்டை கழித்து, சுத்தமாகி விடுகிறாள். அன்றைய தினம் மக்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

காமாக்யா தாந்த்ரீக கடவுள் என்பதால், மிருக பலி கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. பெரும்பாலும் ஆடுகளே பலியாக கொடுக்கப்படுகின்றன. ஒரு சில பக்தர்களிடம் அரிதான ஐந்து பலி என்ற வழக்கமும் இருக்கிறது. அதாவது ஒரு எருமை, ஒரு ஆடு, ஒரு வெள்ளாடு, ஒரு கோழி, ஒரு மைனா என்று ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து பலி கொடுக்கிறார்கள். ஒரு சிலர் ஐந்து ஆடுகளை, ஐந்து பலியாக கொடுக்கின்றனர். அந்தப் பகுதி முழுவதுமே ரத்தக் களறியாக இருக்கிறது. குட்டி ஆடுகள் சொத் சொத்தென்று அடுத்தடுத்து வெட்டப்படும் போது மனசு கனக்கிறது. காமாக்யாவில் நெருடலான விஷயம் இது ஒன்றுதான்.

சென்னை எக்மோரிலிருந்து குவஹாட்டிக்கு போவதற்கு நேரடி டிரெயின் வசதி இருக்கிறது. இல்லையேல் சென்னை சென்ட்ரலிலிருந்து கொல்கத்தா போய் அங்கிருந்து கிளம்பும் குவஹாட்டி டிரெயினிலும் போகலாம். விமான சேவை கொல்கத்தா வழியாக குவஹாட்டி வரை இருக்கிறது.

பெட்டி செய்தி

51 சக்தி பீடங்கள்

வ. எண் சக்தியின் பகுதி விழுந்த இடம்
1 முதுகு கன்யாகுமரி, தமிழ்நாடு
2 பற்கள் (மேல் பகுதி) சுசீந்திரம், தமிழ் நாடு
3 வலது கை நகை ஸ்ரீசைலம், ஆந்திரபிரதேசம்
4 முகவாய் கோதாவரிதீர், ஆந்திரபிரதேசம்
5 கன்னம் ஜன்ஸ்தான், மஹாராஷ்ட்ரா
6 இதயம் அம்பாஜி, குஜராத்
7 வயிறு பிரபாஸ், குஜராத்
8 கை விரல்கள் ப்ரயாக், உத்திரபிரதேசம்
9 காது தோடு வாரனாசி, உத்திரபிரதேசம்
10 ஸ்தனம் ராம் கிரி, உத்திரபிரதேசம்
11 தலை நகை பிருந்தாவன், உத்திரபிரதேசம்
12 காதுகள் கான்பூர், உத்திரபிரதேசம்
13 பற்கள் (கீழ் பகுதி) பஞ்ச்சாகர், உத்ராஞ்சல்
14 இடது குதம் கால்மதேவ், மத்திய பிரதேசம்
15 வலது குதம் ஷோன் தேஷ், மத்திய பிரதேசம்
16 மேல் உதடு பைரவ பர்வத், மத்திய பிரதேசம்
17 பல் தாந்தேவாட, சத்தீஸ்கார்
18 இடது பாத விரல்கள் பிராட், ராஜஸ்தான்
19 வளையல்கள் மணிபந்த், ராஜஸ்தான்
20 கால் எலும்பு குருஷேத்திரம், ஹரியானா
21 நாக்கு ஜ்வாலமுகி, பஞ்சாப்
22 தொண்டை அமர்நாத், காஷ்மீர்
23 தொப்புள் பிரஜா, ஒரிஸா
24 இடது கை மேல் பகுதி பஹுலா, மேற்கு வங்காளம்
25 வலது கை மணிக்கட்டு உஜானி, மேற்கு வங்காளம்
26 இடது கால் சால்பாரி, மேற்கு வங்காளம்
27 இடது கால் கட்டை விரல் ஜுகாட்யா, மேற்கு வங்காளம்
28 வலது கால் கட்டை விரல் காளிகாட், மேற்கு வங்காளம்
29 கிரீடம் கிரீத், மேற்கு வங்காளம்
30 ஒரு சில எலும்புகள் கன்கலிதா, மேற்கு வங்காளம்
31 கால் மணிக்கட்டு எலும்பு விபாஷ், மேற்கு வங்காளம்
32 வலது தோள் ரத்னாவளி, மேற்கு வங்காளம்
33 கால் எலும்பு நல்ஹாட்டி, மேற்கு வங்காளம்
34 இரு புருவங்களுக்கு இடை பட்ட பகுதி பக்ரேஷ்வர், மேற்கு வங்காளம்
35 உதடு அட்டஹாஸ், மேற்கு வங்காளம்
36 கழுத்து அணிகலன் சைந்தியா, மேற்கு வங்காளம்
37 யோனி காமாக்யா, அசாம்
38 வலது கால் ராதா கிஷோர்பூர், திரிபுரா
39 வலது கை மேல் பகுதி சந்திரநாத், திரிபுரா
40 புருவம் நைனத் தீவு, இலங்கை
41 கண் நைனா, பாகிஸ்தான்
42 தலையின் ஒரு பகுதி ஹிங்குலா, பாகிஸ்தான்
43 மூக்கு சுகந்தா, பங்களாதேஷ்
44 இடது தொடை ஜயந்தி, பங்களாதேஷ்
45 கழுத்து ஸ்ரீஷாயில், பங்களாதேஷ்
46 உள்ளங்கை ஜஸ்ஸூர்வாரி, பங்களாதேஷ்
47 இடது கை நகை பவானிபூர், பங்களாதேஷ்
48 இடது தோள் மிதிலா, நேபாளம்
49 கால் மணிக்கட்டு குஜ்ஜேஷ்வரி, நேபாளம்
50 நெற்றி கண்டகி, நேபாளம்
51 வலது கை மானஸ், திபெத்

அமுதசுரபி - அக்டோபர் 2008

Tuesday 16 September, 2008

கம்பன் கண்ட இளைஞர் - அமுதசுரபி - செப்டம்பர் 2008



சென்ற மாதம் சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில், நடந்த வெவ்வேறு இலக்கிய போட்டிகளில், பத்து பரிசுகளை தட்டிச் சென்றிருக்கிறார் 19 வயது இளைஞர் ஒருவர். இவரது பெயரிலேயே இலக்கிய மணம் வீசுகிறது. சாதாரணமாக 'சக்கரவர்த்தி' என்று அழகு தமிழில்(!!) பெயர் வைத்துக் கொள்ள சைப் படும் இந்த கால கட்டத்தில், இவர் 'மன்னர் மன்னன்' என்ற செந்தமிழ் பெயரைக் கொண்டுள்ளார். "எனது தாயாருக்கும், தந்தைக்கும் வடமொழி சொற்களாலான பெயர்கள் அமைந்துவிட்டன (ராஜமாணிக்கம், சரோஜா). அதை மறுக்கும் விதமாக எனக்கு நல்ல தமிழில் பெயர் வைத்தார்கள்" என்கிறார் இவர்.

தனது இலக்கிய ர்வத்துக்கு தன் மாமாவை அடையாளம் காட்டுகிறார்."என் மாமா ஒரு தமிழாசிரியர். இலக்கிய ஈடுபாடு கொண்டவர். மூப்பின் காரணமாக அவரால் அதிகம் படிக்க முடியவில்லை. எனவே என்னை தினமும் கம்பராமாயணம் படிக்கச் சொல்லுவார். அவர் 'கம்பராமாயணத்தில் திருக்குறளின் தாக்கம்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். மாணவப் பருவத்திலேயே என்னையறியாமல் என் ழ்மனதில் கம்பராமாயணத்தின் மீது ர்வம் பதிந்து விட்டது என நினைக்கிறேன்." என்கிறார் மன்னர் மன்னன்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இவர், மேல் படிப்புக்காக சென்னைக்கு வந்திருக்கிறார். எதேச்சையாக 'இலக்கியச் சாரல்' என்ற அமைப்பின் மாதாந்திர கூட்டத்திற்கு போயிருக்கிறார். "அங்குதான் என் இலக்கிய ர்வம் தொடங்கிற்று என்று சொல்லலாம். அப்போதிலிருந்து நிறைய புத்தகங்கள் படிக்க ரம்பித்தேன். அது ஒரு வெறியாகவே வளர்ந்தது. தினமும் என்னுடைய இரண்டு மணி நேர பேருந்து பயணத்தில் ஏதாவது ஒரு இலக்கிய புத்தகம் இடம் பெற்றிருக்கும். எனது செலவுகளை மிச்சம் பிடித்து புத்தகங்களாக வாங்கினேன். அப்படியாக என்னிடம் இப்போது 2000 புத்தகங்கள் சேர்ந்துவிட்டன" என்று சொல்லி புன்னகைக்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு இவர் ஒரு நல்ல உதாரணம்.

"சென்ற வருடம் கம்பன் விழாவில் பல போட்டிகளில் கலந்து கொண்டேன். எனக்கு ஒரே ஒரு பரிசுதான் கிடைத்தது. கொஞ்சம் மனவருத்தம் இருந்தாலும், எனது முயற்சியை விடவில்லை. கிடைத்த ஒரு வருட கால இடைவெளியில் என்னை இன்னும் பட்டை தீட்டிக் கொண்டேன். முழு மூச்சாக என்னை தயார் செய்து கொண்டேன். எந்த ஐயப்பாடு வந்தாலும், குறிப்புகள் தேவைப்பட்டாலும், தயக்கமின்றி வல்லுனர்களை தொடர்பு கொண்டேன். மிக குறிப்பாகச் சொல்லப்போனால், ஹைதராபாதைச் சேர்ந்த இளையவன் என்ற என் இனிய நண்பர் பேருதவி செய்தார். போர்க்கால அடிப்படையில் எனது எல்லா ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி இருந்ததால், போட்டிகளில் எனக்கு எந்த சிரமும் இல்லை. மிக எளிதாக பத்து பரிசுகளை பெற்றுவிட்டேன்." என்று முடித்தார் வெற்றி நாயகர், மன்னர் மன்னன்.

வெற்றிகள் என்றைக்குமே வியக்க வைக்கும். அதன் பின்னால் இருக்கும் உழைப்பு நம்மை யோசிக்க வைக்கும். இந்த இளைஞரின் வெற்றி ஒரு சரித்திரம் என்றால், அது நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

Wednesday 27 August, 2008

எங்கே ஊனம்?


தேவி - 19 ஆகஸ்ட் 2008

"இப்போது உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சியை அளிக்க திரு ப்ரகாஷ் ஆனந்த் அவர்களை அழைக்கிறேன்"

மைக்காளர் அறிவிக்கவும், ஒரு ஒளிவட்டம் சுழன்று அந்தச் சிறுவன் மேல் விழுந்தது. எழுந்த அவன் மேடையை நோக்கி முன்னேறினான். அடுத்த சில நிமிடங்களுக்கு எதிர்பார்ப்புகளுடன் கூடிய அமைதி நிலவியது. அனைவரின் உள்ளத்திலும் இவனா இவ்வளவு பெரிய எலக்ட்ரானிக் கீபோர்டில் பாட்டிசைக்கப் போகிறான் என்ற கேள்வி இருந்தது. காரணம், அவன் ஒரு சிறப்பு குழந்தை. உருவம் பத்து வயதுக்கு உரியதாக இருந்தாலும் அவன் நடையும் செய்கையும் ஐந்து வயது குறைந்தே இருந்தன.

அப்படியும் இப்படியுமாக சரி பார்த்துக் கொண்டிருந்த ப்ரகாஷ், திருப்தி பட்டு, தலை நிமிர்த்தி, மைக்காளரை கேள்வியாக பார்த்தான். அவர் உடனே கட்டைவிரல் உயர்த்தி தலையசைத்தார்.

அவ்வளவுதான்!!! மடை திறந்த வெள்ளமாக ஒரு இனிய இசை கீபோர்டிலிருந்து வெளிப்பட்டது! அது மிக பிரபலமான திரைப்படப் பாடலின் தொடக்க இசை! அப்போது தொடங்கிய மக்களின் ஆச்சரியம் இதழ் விரிக்கும் மலர்களைப் போலே பன்மடங்காகிக் கொண்டே போனது. ப்ரகாஷ் துளிக்கூட தடுமாறவில்லை. பிய்த்து உதறினான். அந்த பிரபல பாடலில் என்னென்ன நெளிவுகள் குழைவுகள் உண்டோ அத்தனையும் 24 காரட்டுகளாக டாண் டாண் என்று வந்து விழுந்தன. மகுடி பாம்பாய் தாளக் கட்டுக்கு ஏற்ப மக்கள் கைதட்டினார்கள். உற்சாகம் பீறிட்டெழுந்தது. பாடல் முடிந்ததே தெரியவில்லை. கைத்தட்டல் ஓய வெகு நேரம் பிடித்தது.

தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரகாஷின் அம்மா வித்யா கண்கலங்கினாள். அருகில் இருந்த கணவன் ஆனந்த் தோள்களில் சாய்ந்து விம்மினாள். பின்னந்தலை மயிர்க் கற்றையை வருடி சமாதனபடுத்திய ஆனந்த், ஆள்காட்டி விரலால் அவள் முகவாயை நிமிர்த்தினான்.

"வித்யா இப்ப நீ என்ன நெனைக்கற சொல்லட்டுமா?"

"ம்....."

"கடவுளே! எனக்கு இப்படி சாதனைகள் படைக்கிற குழந்தையை எதற்காகக் கொடுத்தாய்? சாதாரண குழந்தையை கொடுத்திருந்தாலே நான் திருப்தி பட்டிருப்பேனே! அப்பிடின்னுதானே?"

"ஆமாங்க. என்னால இதையெல்லாம் மகிழ்ச்சியா ஏத்துக்க முடியலைங்க. நான் யாருக்கும் எந்த கெடுதலும்...."

"புரியாம பேசாத. நாமதான் ரணப்பட்டு ஊனமா போயிட்டோம். ப்ரகாஷை பாரேன். எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கான். அவனொட தனி உலகத்தில ராஜா மாதிரி இருக்கான். அங்கே அவனுக்கு எந்த ஊனமும் இல்லை. எதையோ நெனைச்சுக்கிட்டு, இல்லாததுக்கு ஏங்கி வாழ்க்கையை சிக்கலாக்கிக்கிறோம். இதுவரை நாம நமக்காக வாழ்ந்தாச்சு. இனி அவனுக்காக வாழ்வோமே. எரியற தீபத்துக்கு இருக்கும் ரெண்டு பக்க தடுப்பு மாதிரி நாம இருப்போம். வா."

வித்யா ஓடிச் சென்று ப்ரகாஷ் கன்னத்தில் தொடர் முத்தமிட மக்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.

அண்டங்காக்கை


கல்கி - 31 ஆகஸ்ட் 2008

முருகேசனின் அன்றைய காலைப் பொழுது வழக்கத்துக்கு மாறாகத்தான் விடிந்தது. அலாரக்கடிகாரம் மாதிரி தினமும் விடிகாலையில் வந்தெழுப்பும் காகம் இன்று ஏனோ வரவில்லை. மற்ற காக்கைகள் 'கா..கா' என்று கத்தினால் இந்த கிழட்டு அண்டங்காக்கை மட்டும் ஒரு மாதிரி 'க்ர்ர்ஹ்... க்ஹ்' என்று பால்கனி கட்டையில் உட்கார்ந்து கொண்டு அவனை பார்த்து கத்தும். அதன் நாலாவது ரவுண்டில் முருகு கிட்டத்தட்ட விழித்துக் கொள்வான். அரை தூக்கத்தில் அவன் தரையில் சிதறவிடும் மிக்சர் துகள்களையும், நேற்றைய உணவு மிச்சங்களையும் தத்தி தத்தி உள்ளே வந்து உரிமையோடு கொத்திக்கொண்டு போகும். இனி மீண்டும் மறுநாள் காலைதான்! அவனைப் போலவே அந்த காக்கையையும் அவனைத்தவிர யாரும் ரசிப்பாரில்லை, ரட்சிப்பாரில்லை.

விழிப்பு வந்தபோது, அவன் ஒரு சாக்கடைக்கு பக்கத்தில் உருண்டு கிடப்பது மாதிரி உணர்ந்தான். காரம் கலந்த கெட்ட வாடை அவனை சுற்றியிருந்தது. தலையை தூக்க முடியவில்லை. கைகளை அசைத்ததில் பிசுபிசுப்புடன் கம்பிகளாய் என்னவோ ஒட்டிக் கொண்டு வந்தது. ரிஃப்ளெக்ஸ் வேகத்தில் அடுத்த கையை சோர்வாக வீசியதில் 'சுரீரென' சுட்டது. மண்டைக்குள் தீப்பொறிகள் சிதற.... விழித்துக் கொண்டான். சுற்றியிருந்த பகுதிகள் 'அவுட் ஆஃப் போக்கஸில்' மங்கலாக தெரிந்தன. கண்ணுக்குள் ஒரு பிடி உப்பை கொட்டிய மாதிரி எரிச்சலாக இருந்தது.

'பிளாக்கவுட்' குழப்பங்கள் தீர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக நேற்றைய இரவின் மன கசப்புகள் அறுபட்ட காட்சிகளாக வந்து போயின. நினைவுகளின் வேகம் கூட இன்னும் தலையை வலித்தது. பால்கனி கதவு திறந்திருக்க, அதன் வழியாக வந்த காலைச் சூரியகிரணங்கள் அவன் கால்களை சுட்டன. 'விசுக்கென' கால்களை உள்நோக்கி இழுத்ததில் நிலை தடுமாறி இடதுபக்கமாக சரிந்தான். வயிற்றில் இருந்த அமில மிச்சங்கள் அவன் குரல்வளைப்பகுதியை சங்கடப்படுத்தின.

கொரடாச்சேரி சண்முகநாதன் முருகேசன் என்ற பெயரைச் சொல்வதும், எங்கோ ஒரு புற்றில் போய் கொண்டிருக்கும் ஒரு எறும்பை கை காட்டி சொல்வதும் ஒன்றுதான். கொஞ்சம் உணர்வுபூர்வமாக சொல்வதென்றால் முருகேசன் என்ற பெயருக்கு முகமும் இல்லை, முகவரியும் இல்லை. ஆனால், அதே முருகேசன் என்ற நிழல் முகத்துக்கு வெளிச்சம் தந்த செந்தமிழ்ச்செல்வன் என்ற புனைப்பெயரை சொன்னதும் தமிழ் திரைப்படத்துறை வரலாறு சற்று பத்து வருடங்கள் பின்னோக்கி போய் பவ்யமாக தன் பக்கங்களை திறந்து காட்டும்.

அந்த காலம், முருகேசனின் வசந்த காலம். இரண்டே வருடங்களில் மூன்று மெகா ஹிட்டுகள். அதன் பிறகு ஒன்று சுமாராக ஓடி பெயரை காப்பாற்றியது. அதை தொடர்ந்து மீண்டும் இரண்டு ஹிட்டுகள். இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஒல்லிப்பிச்சான் ஹீரோவுக்கு செந்தமிழின் முதல் படத்தால்தான் பிரேக் கிடைத்தது. செந்தமிழ் அறிமுகப்படுத்திய எல்லா ஹீரோயின்களும் இன்றும் காசை அள்ளி ரியல் எஸ்டேட்டில் குவித்து வருகிறார்கள். எங்கும் எப்போதும் பேசப்பட்டவனை அடுத்தடுத்து மூன்றே முன்று படங்கள் ஒரேயடியாக கவிழ்த்து போட்டன. அதில் கடைசியாக அவனை ஒரே வாரத்தில் 'ஊத்தி மூடியது' அவனுடைய சொந்தப்படம். கார், வீடு எல்லாம் போனது. செக் மோசடி வழக்குகள் அவனை நிம்மதியற்று ஓடஓட விரட்டின. சுவரோரம் குவிக்கப்பட்ட குப்பை போல ஆனவனுக்கு குடி உற்ற துணை ஆனது.

சினிமா பார்த்து வெளியே வந்ததும், பிரக்ஞையின்றி நழுவவிடப்படும் சினிமா டிக்கெட்டாக செந்தமிழ்ச்செல்வன் பிடிகள் அற்று காலவெள்ளத்தில் காணாமல் போனான். எழுச்சியை தந்த அதே வேகத்தில், வீழ்ச்சியையும் கொடுத்தது தமிழ் திரைப்பட உலகம். 'நன்றி கெட்ட ....கள்' என்று செந்தமிழ் அடிக்கடி சொல்வது ஒரு ரசிக்கப்படாத காமெடி டிராக் மாதிரி ஆகிவிட்டது.

ஒன்பது மணிவாக்கில்தான் செந்தமிழால் இயல்பாக எழுந்து கொள்ள முடிந்தது. வயிறு முதுகோடு ஒட்டிக்கொண்ட மாதிரி வலித்தது. சட்டைப்பையில் இருக்கும் பனிரெண்டு ரூபாய் காலை நாஷ்டாவுக்கு போதும். அப்புறம்? யோசிக்க யோசிக்க வெறுமைதான் மிஞ்சியது. சம்பந்தமே இல்லாமல், இன்று வராமல் போய்விட்ட காக்கா என்ன ஆனது என்ற கவலையும் மனசை அப்பிக் கொண்டது.

அனிதா அவனைவிட்டு பிரிந்து போய் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவள் இருக்கும் வரை சில்லறை செலவுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. டான்ஸ் மாஸ்டர் செல்லாவின் குழுவில் பத்தோடு பதினொன்றாக ஆடிக் கொண்டிருந்தவள், தற்போது உதவி நடன இயக்குனராக உயர்ந்திருக்கிறாள். செல்லா அவள் மீது அதிக அக்கறை காட்டுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்றைக்கு செல்லாவை கைநீட்டி அடித்திருக்கக் கூடாது.

இரண்டு தெரு தாண்டிதான் அனிதாவின் அப்பா விடு இருக்கிறது. வீட்டை நெருங்கியபோது வாசலில் இரண்டு காகங்களை பார்த்தான். அதில் அவன் காகம் இல்லை. இரண்டும் அழகாய் இருந்தன. ஒன்று அனிதா என்றால் இன்னொன்று? வேண்டாம்.... செல்லா நினைவுகளை ஓரம் கட்டினான்.

அனிதாவின் அப்பா வீட்டுக்கு வெளியெ சேர் போட்டுக்கொண்டு ஒரு பீடியுடன் லொக் லொக்கிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து 'எதற்கு வந்தாய்?' என்பது மாதிரி பார்வையை வீசிவிட்டு, எதிர் பக்கம் திரும்பிக் கொண்டு, தோள் இடுக்குகளில் சொறிந்து கொண்டார். செந்தமிழுக்கு பட்டாசு திரியில் பற்ற வைத்த மாதிரி கோபம் கிளர்ந்தெழுந்தது. அடக்கிக் கொண்டான்.

அனிதா நைட்டியுடன் காலை நாளிதழின் சினிமா பக்கங்களில் மூழ்கியிருந்தாள். அவளும் அப்பனைப் போலவே நிமிர்ந்தாள். வெறுப்புடன் விடுவிடுவென போய், தன் கைப்பையை திறந்து நூறு ரூபாய் தாளை அருகில் இருந்த டேபிள் மீது வைத்தாள்.

"அனிதா. இதுக்கு பதிலா என் மேல காறி துப்பியிருக்கலாம்."

"மானம், மரியாதையெல்லாம் போன உனக்கு காசுதான முக்கியம். எடுத்துக்கிட்டு போ."

"அனிதா. அன்னிக்கி நான் செஞ்சது தப்புதான். எல்லாரும் கைவிட்டுட்டாங்க. நீயும் அப்படி செஞ்சா எப்படி?" வாசல் கதவு அருகில் லொக்லொக் கேட்டது.

"மொதல்ல உன்னை மாத்திக்க முயற்சி பண்ணு. இன்னமும் உன்னோட பழசை புடிச்சுக்கிட்டு தொங்கிக்கிட்டு இருக்கே. விழுந்தவன் வெறியோடு எழுந்திருக்கணும். அடுத்து அடுத்துன்னு அலை பாயணும். புதுசு புதுசா கத்துக்கணும். முதல்ல, தோத்தவன் குடிக்கக் கூடாது. குடிய விடு. எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி ஒரு ஸ்டோரி டிஸ்கஷனுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தேனே? என்ன செஞ்சே? என் மானம் போச்சு"

"நீ நெனைக்கற மாதிரி அவங்கள்லாம் நல்லவங்க இல்லே. என்னை ஏதோ வேண்டா வெறுப்பா சேர்த்துக்கிட்ட மாதிரி, பிச்சை போடற கணக்கா என்கிட்ட நடந்துக்கிட்டாங்க. நான் சொன்ன ஐடியாவையெல்லாம் நேத்து முளைச்ச அசிஸ்டண்ட் டைரக்டர் பசங்க அவங்களுக்குள்ள சிரிச்சு கேவலப்படுத்தினாங்க. குப்பையா படம் எடுக்கிறாங்க."

"காந்தக்ட் சர்டிஃபிகேட் கொடுக்க உன்னை அனுப்பல. சொல்ல சொல்ல கேட்காம ஆடினதோட பலனை இப்ப அனுபவிக்கிற. இன்னிக்கி சினிமா எவ்வளவோ மாறிடுச்சு. உன்னோட ஆகாசத்தில பறக்கறத விட்டுட்டு, தரையில நடக்க பாரு. இப்ப இங்கிருந்து போ." அதற்குள் அவன் அப்பா செந்தமிழை தரதரவென கையைபிடித்து வெளியே இழுத்தார். பீடி நாற்றம் குடலை பிடுங்கியது. நூறு ரூபாய் தாளை சட்டைப்பையில் வலுக்கட்டாயமாகச் சொருகினார்.

"இதான் கடைசி. இனிமே இந்த பக்கம் வராத. நீ வர்றதை பார்த்தா உன் கடன்காரங்க என் வீட்டு சாமான் செட்டை தூக்கிக்கிட்டு போயிடுவானுங்க. எங்களையாவது நிம்மதியா இருக்கவுடு"

கிழவனை எதிர்த்து மல்லுக்கு நிற்க செந்தமிழிடம் மனசிலும், உடம்பிலும் வலுவில்லை. சிற்றுண்டிக்கும், ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கும் சேர்த்து நாற்பது ரூபாய் ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு முன்னாலேயே, காசு கொடுத்தால்தான் சாப்பாடு என்று தெளிவாக சொல்லிவிட்டார் ஹோட்டல் முதலாளி.

"அண்ணெ, மீதி காசு கொடுங்க" அனிதா கொடுத்த நூறை நீட்டினான்.

"அதெப்படி? உன்னோட பழைய கணக்கெல்லாம் எவன் தருவான். போவயா?" முதலாளி செந்தமிழை ஒரு செத்த எலி மாதிரி பார்த்தார்.

"அண்ணே, ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்ணே. ஒருத்தன் கீழே விழுந்தா ஒரேயடியா போயிடணும். இல்லேன்னா இரக்கமே இல்லாம கல்லால அடிச்சே கொன்னுடுவீங்க"

"முருகு. உன்னோட எனக்கு மல்லுகட்டி பேச நேரமில்லே. வியாபாரம் ஆகணும். இடத்தை காலி பண்ணு"

வெளியே ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபோது, காக்கைகளின் பேரிசைச்சல் கேட்டது. காக்கை ஏதாவது இறந்து போனால் மற்ற காக்கைகள் இதே மாதிரிதான் கத்தும். கரையும் காகங்களுக்கு மத்தியில் தன்னுடைய காகம் இருக்கிறதா என்று தேடினான். எதுவுமே அவன் வீட்டுக்கு வரும் அண்டங்காக்கையை போலில்லை.

இன்று மதிய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? ஒரு டி.வி. சீரியலுக்கு இருபது எபிசோடுகள் அவன் இயக்கியிருந்ததற்கு இன்னும் பணம் தரவில்லை. அதில் கொஞ்சம் கேட்டு வாங்கினால் என்ன?

அந்த டி.வி. சீரியல் தயாரிப்பு அலுவலகம் வெறிச்சோடியிருந்தது. வாட்ச்மேன் கூட செந்தமிழை மதிக்கவில்லை. இரண்டு மணிநேரம் கழித்து வரச்சொன்னான். அது மாதிரி நான்கு முறை ஆனது. மாலை ஆறு மணிக்குதான் சீரியல் தயாரிப்பாளர் வந்தார். ஒரு மணி நேரம் கழித்துதான் அவனை உள்ளே அழைத்தார்.

"என்னைய்யா வேணும்? ஏன் தொந்திரவு பண்ணறே?" எடுத்த எடுப்பிலேயே எரிந்து விழுந்தார்.

"சார். என் கணக்கை செட்டில் பண்ணுங்க"

"சரி. நான் செட்டில் பண்ணிடறேன். நீ மத்தவனுக்கெல்லாம் போட்டிருக்கியே பட்டை நாமம், அதை யார் செட்டில் பண்ணறது? அவங்க நோட்டீஸ் கொடுத்திருக்காங்கய்யா."

"சார். வெக்கத்தை விட்டு கேக்கறேன். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கேன். ஏதாவது கொஞ்சமாவது கொடுங்க" இருக்கும் சேரையெல்லாம் விலக்கிவிட்டு குறுக்குவாட்டில் அப்படியே அவர் கால்களில் கீழே விழுந்தான்.

"யோவ். எழுந்திருய்யா. செத்து கித்து போய்டப்போறே. இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு, நீ வேற வில்லங்கம் எதுவும் செஞ்சிடாதே"

திடீரென மனசு மாறி இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அவன் சட்டைப்பையில் திணித்தார். 'இனி மேல் காசு கேட்டு இந்த பக்கம் வரக்கூடாது' என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்.

செந்தமிழ் வெளியே வந்தபோது இருட்டிவிட்டது. மதியம் சாப்பிடாதது வயிற்றை சுண்டி இழுத்தது. ஒரு ஹோட்டலை தேடிய அவன் கண்களில் டாஸ்மாக் கடை கண்களில் பட்டது. மனசு அலைபாய்ந்தது. குவாட்டரை பேண்ட் பாக்கெட்டுக்குள் சொருகிக் கொண்டு, ஆம்லெட்டுக்கு ஆர்டர் கொடுத்தபோது அவன் தோள்களின் மீது இரண்டு கைகள் விழுந்தன. திரும்பியதில்...

"என்ன முருகு. ஆயிரம் ரூபாயை அப்படியே வலிச்சுக்கினு போயிடாலாம்னு பார்க்கிறயா? எங்களுக்கு அதிலே பங்கு வேணாம்?"

"வேணாம் சேகரு. நான் ரொம்ப நொந்திருக்கேன். உன் கணக்கை சீக்கிரம் செட்டில் பண்ணிடறேன்."

செந்தமிழ் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், சேகர் என்பவன் செந்தமிழை இறுக்கி பிடித்துக் கொள்ள அவன் கூட வந்தவன், சட்டை பையிலிருந்த அத்தனை பணத்தையும் காலி செய்தான். திமிறிய செந்தமிழை கீழே தள்ளிவிட்டான். சுதாரித்து எழுந்த செந்தமிழ் காசு போன விரக்த்தியில் அவர்களை நோக்கி ஓடினான். ஏதோ ஒரு யோசனையில் அவர்களை நோக்கி குவார்டரை வீசியடித்தான். அது குறி தப்பி ரோட்டில் விழுந்து உடைந்தது. திரும்பிய அவர்கள் ஒரு வேகத்துடன் வந்து, செந்தமிழை சரமாரியாக தாக்கினார்கள்.

கோடிக்கணக்கான பட்ஜெட்டில் படங்களை இயக்கிய செந்தமிழ்ச்செல்வன் ஒரு சாலையோர சாக்கடைக்கு பக்கத்தில் இரண்டு மணி நேரம் அப்படியே கிடந்திருந்தான். மயக்கம் தெளிந்து எழுந்தபோது அவனிடம் எல்லாம் போய்விட்டிருந்தது. அழ எத்தனித்தான். அது கூட வரவில்லை. 'க்ர்ர்ஹ்... க்ஹ்' என்ற ஓசையே வெளிப்பட்டது.

முதல் முறையாக அவன் தேடிவந்த அந்த அண்டங்காக்கை அவனுக்குள்ளே இருப்பதை உணர்ந்தான்.

Monday 11 August, 2008

பூமராங்



மாதம் - 1

எம்.டி. பிரகாஷ் அதிரிச்சியுடன் கேட்டார். "என்ன ரமேஷ் இது! 150 பேரை வேலையை விட்டு தூக்கணும்னு எழுதியிருக்கீங்க"

ஜி.எம். ரமேஷ் நிதானமாகச் சொன்னார்... "ஆமாம் சார். நம்ம பொருட்கள் மார்கெட்ல நிக்கணும்னா, அதிரடியா விலைகளை கொறைச்சே ஆகணும். இல்லேன்னா, போட்டி கம்பனிகள் நம்மள சாப்பிட்டுட்டுடும். நம்ப தொழில்சாலையிலும், ஆபீஸ்லயும் ஒரு ரகசிய சர்வே செஞ்சேன். அதன்படி 150 பேர் அதிகப்படியா இருக்காங்க. இவங்களை தூக்கிட்டா உற்பத்தி செலவுகள் கணிசமா குறையும்."

"திடீர்னு வேலையை விட்டு எப்படி அனுப்ப முடியும்? எல்லாரும் பல வருஷம் சர்வீஸ் போட்டவங்க. பிரச்சனையாகிடாதா?"

"சார். பிசினெஸ்னு வந்துட்டா நோ சென்ட்டிமென்ட்ஸ். தீ பிடிச்சு குடிசைங்க எரியும்போது, அந்த தீயிலேர்ந்து காப்பாத்த, நல்ல குடிசை கூரைகளை பிரிச்சு எறியறோம் இல்லையா? அந்த மாதிரி மொத்த கம்பனியும் நஷ்டமாகி எல்லோர் வயத்திலேயும் ஈரத்துணி போடறதுக்கு பதிலா ஒரு சிலரை வீட்டு அனுப்பறதுதான் புத்திசாலித்தனம்."

மாதம் - 2

பல தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யபட்டனர். முரண்டு பிடித்த சிலர் மீது பொய் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு, கடைசியில் மனம் வெறுத்து அவர்களாகவே விலகினர். ரமேஷ் ஒரே தீர்மானமாக இருந்தான். அதன் பலனும் உடனே கிடைத்தது. அதிரடி விலை குறைப்பில், கம்பனியின் லாபம் கிடுகிடுவென உயர்ந்தது.

மாதம் - 3

பிரகாஷ் அவசரம் அவசரமாக ரமேஷை வரவழைத்தார்.

"ரமேஷ்! நம்ம அக்ரிமெண்ட்படி ஒரு மாச நோட்டீஸ் கொடுக்கணும் இல்லையா? அதன்படி இந்த மாசம்தான் உங்களுக்கு கடைசி மாசம்."

"சார்ர்....." அதிர்ந்தான் ரமேஷ்.

"ஆமாம்பா. என் மகன் எம்.பி.ஏ படிப்பை முடிச்சிட்டு அடுத்த மாசம் வர்றான். யோசிச்சு பார்த்தேன். அவன் இருக்கிற பட்சத்திலே உன் வேலை உபரியா பட்டுது. அதனால நீ விலகிடு. எனக்கும் உற்பத்தி செலவுகளை கொறைச்ச மாதிரி ஆகும். சரிதானே?"

(குங்குமம் - 14 ஆகஸ்ட் 2008)

Wednesday 6 August, 2008

பாகவதர்களுக்கு ஒரு நம்பிக்கை விளக்கு




அமுதசுரபி - ஆகஸ்ட் 2008

பக்தி மார்க்கத்தில் நாம சங்கீர்த்தனம்தான் பிரதானம். ஜோதி வடிவான இறைவனை இனிய இசையால் மனமுருகி பாடி அவன் அருளை பெறுவதற்காக எண்ணற்ற பஜனை பாடல்களை அரிய பொக்கிஷங்களாக வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்கள் பாகவதர்கள் என்றழைக்கப்படும் இசை கலைஞர்கள்.

மனசுக்குள் இறைவனை நிலை நிறுத்திக் கொண்டால் அது ஜபம். அதையே கொஞ்சம் இசை சேர்த்து வார்த்தைகளால் அர்ச்சித்தால் அது நாம சங்கீர்த்தனம். "ஒவ்வொரு ன்மீகவாதிக்கும் நாம சங்கீர்த்தனம் என்பது அவன் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் மூச்சாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பஜனை பாடல்கள் என்றால் ஒரு மனம் மகிழ் கலை நிகழ்சியாகவோ அல்லது ஒரு பொழுது போக்கு அம்சமாகவோ எண்ண வேண்டாம்" என்கிறார் உடையாளூர் கல்யாணராமன்.

"எப்படி காலையில் எழுந்தால் பல் தேய்ப்பது, புத்தகம் படிப்பது, பிழைப்புக்காக வேலைக்கு போவது என்று லௌகீக அனுஷ்டானங்கள்¢ல் ஈடுபடுகிறோமோ, அதே போல தினமும் கொஞ்ச நேரமாவது அந்த நாதஸ்வரூபனுக்கு ஒன்றிரெண்டு நாமவளிகள் சொல்வது நமக்கு நல்லது. சிக்கல்கள் நிறைந்த இன்றைய வாழ்க்கையில், நற்சிந்தனைகள் நல்ல செயல்களுக்கு நம்மை இழுத்துச் சென்று நல்ல வினைகளை உண்டாக்கும்" என்கிறார் அவர்.

சபா மேடைகளில் நாம சங்கீர்த்தனம் என்ற புதிய அணுகுமுறையை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் திரு கல்யாணராமன். இது எப்படி சாத்தியமாயிற்று?

"நாங்கள் ஒன்றும் புதிதாக செய்துவிடவில்லை. பஜனை என்றாலே காட்டு கத்தாலாக ஒரு பெரிய கோஷ்டி, சகல வாத்தியங்களுடன் உச்ச ஸ்தாயில் எம்பி எம்பி குதிப்பார்கள். மக்களும் மகுடி பாம்பாக உணர்சிவசப்பட்டு சேர்ந்திசைப்பார்கள் என்ற மனோபாவம் இன்று பல பேர்களுக்கு இருக்கிறது. உண்மை அதுவல்ல. நம் பாகவதர்கள் மிகப் பெரிய இசை பண்டிதர்கள். எல்லா மொழிகளிலும் எல்லா தெய்வங்களையும் மிக அழகாக பாடி வைத்திருக்கிறார்கள். அவைகளை நாங்கள் மாலை தொடுப்பது மாதிரி இன்றைய கால கட்டத்துக்கு ஏற்றவாறு துல்லிய உச்சரிப்பு, சுத்தமான ஸ்வரராக கர்நாடக சங்கீதம், அளவான பக்கவாத்தியம், எல்லோரும் பங்கேற்கும் எளிமையான பாடல்கள் என்று ரசிகர்களுக்கு தருகிறோம். நல்ல சங்கீதம் வேண்டுபவர்களும் திருப்தியடைகிறார்கள். பக்தி மார்கத்தினர்களும் பரவசமடைகிறார்கள். வயது, மொழி, ஜாதி வித்தியாசமில்லாமல் அனைத்து மக்களுக்கும் எளிதில் சென்றடைகிறது. நாம சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவமும் புரிந்து விடுகிறது. அதுதான் நாங்கள் விரும்புவது. எங்களுக்கு கிடைத்த பக்கவாத்திய கலைஞர்கள் எங்களது பொக்கிஷம். அவர்களால் எங்களது எண்ணம் எளிதாகிவிட்டது. அதை விட முக்கியமானது, அவன் ட்டுவிக்கிறான். நாங்கள் (பா)டுகிறோம்." என்கிறார் அவையடக்கத்துடன்.

நாம சங்கீர்த்தனத்தின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்து செ(¡)ல்லுவது மட்டுமில்லாமல் அடுத்த உயரத்திற்கு சென்றிருக்கிறார் உடையாளுர். "ஒரு முறை தூத்துக்குடியில் நாம சங்கீர்த்தனதிற்காக போயிருந்தோம். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒரு யாதவர் ஹார்மோனியம் வாசிக்க வாய்ப்பு கேட்டார். எங்கள் மனசை சங்கடப்படுத்தியது. பாகவதர்கள் பாடிய பாடல்களை பாடி நாம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோமே, ஏன் வசதியற்ற பாகவதர்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பை உருவாக்கக் கூடாது என்று தோன்றியது. அதற்கு காஞ்சி பெரியவரின் சியும் கிடைத்தது. உடனே ‘பாகவதா சேவா டிரஸ்ட்’ என்ற அமைப்பை உருவாக்கி விட்டோம். நாங்கள் கச்சேரிக்காக போகும் இடங்களில்லாம் இன்றைய பாகவதர்களின் நிலமையை எடுத்துச் சொல்லுவோம். சொன்ன மாத்திரத்தில் பொருளுதவி குவிகிறது. இன்று 30 பாகவதர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை அளிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. நாம சங்கீர்த்தனத்தில் என்றுமே சாதி வித்தியசம் இருந்ததில்லை. எனவே சேவா டிரஸ்டில் தற்போது நலிவடைந்த ஓதுவார்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் உடையாளுர்.

"எனது சங்கீதப் பயணம் இத்தோடு முடிவடைந்துவிடவில்லை. இறைவனின் சந்நிதானத்தில் இருந்த நாம சங்கீர்த்தனத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சபா மேடைகளை ஒரு ஊடகமாகத்தான் பயண்படுத்தி வருகிறேன். இதை மக்கள் இல்லங்களில் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியமென கருதுகிறேன். இன்றைக்கு பாகவதர்கள் பாடிக் கொண்டிருக்கும் தக்ஷிண ப்ராச்சின பஜனை சம்ப்ரதாயத்தை வகுத்து கொடுத்தவர் மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள். அந்த பாதையில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி இளைஞர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த நாம சங்கீர்த்தனத்தை ஒரு அகாடமி வாயிலாக முழுமையாக தருவதற்கு முயற்சித்து வருகிறேன். அதன் பூர்வாங்க வேலைகள் முடிந்து விட்டன. இரண்டு செமஸ்டர்கள் கொண்ட ஒரு வருட பட்டைய படிப்பாக கொண்டு வர உத்தேசித்திருக்கிறோம். இன்னும் ஒரு சில மாதங்களில் அகாடமி அதன் பணியை துவங்கும்" என்று முடித்தார் திரு உடையாளூர் கல்யாண ராமன். நாம சங்கீர்த்தனத்தில் பகாவன் நாமைவைச் சொல்லி 'ஜே' போடுவோம். இங்கே உடையாளூரின் முயற்சி வெற்றியடைய நாமும் ஒரு 'ஜே' போடுவோம்.

பெட்டி செய்தி

பாகவதர்களும் பகவத் ஸ்வரூபங்களே - ஒரு புராணக் கதை

ஒரு முறை நாரதர் வைகுண்டத்தின் வாசலை அடைந்த போது, அதன் வாயிற்காப்போர்களான ஜெயன் விஜயன் கிய இருவரும் அவரை தடுத்தனராம். 'நாராயணனை பார்ப்பதற்கு நீங்கள் தடா போடமுடியாது.' என்று அடம் பிடித்தாராம் நாரதர். அதற்கு வாயிற்காப்போர்கள், 'எம்பெருமான் பூஜை செய்து கொண்டிருக்கிறார். யாரும் தொந்திரவு செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்' என்றனராம். இருந்தாலும் நாரதர் தான் பிடித்தபிடியிலேயே இருக்க, ஒரு வாயிற்காப்போன் உள்ளே போய் நாரதர் வருவதற்கு உத்திரவு கேட்டாராம். அனந்த சயனனும் 'உள்ளே வரச் சொல்' என்றாராம். வந்து பார்த்த நாரதருக்கு சிரிப்பாக வந்ததாம். 'எம் பெருமானே, நாங்கள் உங்களை பூஜித்து மகிழ்கிறோம். நீங்களோ ஒரு பிடி மண்ணை வைத்துக் கொண்டு பூஜை செய்கிறீர்களே. என்ன விந்தை இது? உங்களுக்கு மஹாபாரதப் போர் முடிந்தும் இன்னும் அந்த மண்ணின் மீது இருக்கும் பிரேமை போகவில்லையா?' என்றாராம். அதற்கு அந்த பவளவாய் கமலச் செங்கண் அச்சுதன், ' இதோ நீ பார்க்கிறாயே, இது சாதாரண மண் அல்ல. இது என் பாகவதர்கள் காலடி பட்ட மண். அவர்கள் ஒரு முறை கோவிந்தா என்று அழைத்தற்கே, பிரதியுபகாரமாக என்ன கைங்கர்யம் செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. எனவேதான் என்னால் முடிந்த இந்த பூஜை' என்றாராம்.

Monday 14 July, 2008

...எனவே, இந்தக்கதை முடியவில்லை


ஆனந்த விகடன் 16 ஜூலை 2008

காலை மெரீனா மிகவும் உற்சாகமாக இருந்தது. ப்ளூ டூத் அணிந்த தொப்பையர்களும் வழுக்கையர்களும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வளப்பமான பெண்கள் தங்கள் கணவருடனோ அல்லது சடை நாயுடனோ வாக்கிக் கொண்டிருந்தார்கள். அர்த்தமில்லாமல் ஒரு கூட்டம் உரக்க சிரித்துக் கொண்டிருந்தது. பழுப்பு நிற சூரிய கிரணங்கள் அம்புகளாய் இறங்க ஆரம்பிக்க, வியர்க்க தொடங்கி விட்டது.

அவ்வளவுதான்! என் வாங்கிங் முடிந்து விட்டது. எனது காரை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனை கவனித்தேன். என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான், நிழல் மாதிரி.

"சார்! போட்டோஸ் பார்க்கறீங்களா?"

மெரீனாவில் இது போன்ற தொந்திரவுகள் நிறைய உண்டு. வேண்டாம் என்றாலும் விடமாட்டார்கள். அவனை ஒதுக்கி, எனது காரை பார்க்கிங் ஸ்லாட்டிலிருந்து ரிவர்ஸ் எடுத்தபோதுதான் அவன் டோன் மாறியது.

"ரமேஷ் சார். உங்க போட்டோஸ்தான் பார்க்கறீங்களா?"

விருட்டென நிமிர்ந்தேன். கார் கண்ணாடியில் ஒரு சாம்பிள் போட்டோவை ஒட்டிய மாதிரி எனக்கு மட்டும் காட்டினான். வெலவெலத்து போனேன். நானும், நம்ருதாவும் தப்பு காரியம் செய்து கொண்டிருந்தோம். இது எப்படி இவனிடம்? யார் எடுத்தார்கள்? எப்படி எடுத்தார்கள்? சுறுசுறுவென வெப்பம் தலைக்கேறியது. ஸ்டியரிங்கிலிருந்த கை நழுவியது.

"டேய்! யார் நீ? ஏது இந்த போட்டோஸ்?" படீரென வெளியே வந்தேன்.

"கூல் டவுன் சார். கூல் டவுன். கொஞ்சம் அப்படி ஒதுக்குபுறமா போய் பிசினெஸ் பேசுவோமா?"

என்னை ஆபத்து சூழ்கிறது. பிளாக் மெயில் செய்கிறான். பொறுக்கி! சட்டையை பிடிக்கப் போனேன். வேண்டாம்! மக்கள் அங்கும் இங்குமாக போய் கொண்டிருக்கிறார்கள்.

காரை வேகமாக ரிவர்ஸ் எடுத்து லைட் ஹவுஸ் தாண்டி ஒரு அமைதியான இடத்தில் நிறுத்தினேன். அதற்குள் அவன் கையில் ரம்மி விளையாடுவது மாதிரி போட்டோக்களை விசிறியாக்கியிருந்தான். அவன் கையிலிருந்து அனைத்தையும் பிடுங்கினேன். சரக் சரக்கென ஒவ்வொன்றாக பார்த்தேன். எல்லாம் அசிங்கமோ அசிங்கம். நம்ருதா தன் காது, மூக்கு, தொப்புள் வளையங்களைத் தவிர வேறு எதுவும் அணிந்திருக்கவில்லை. அதில் வெட்கமும் இல்லை. நானும் முழுக்க உரிக்கப்பட்டிருந்தேன். பிளடி பிட்ச்! ஆசை காட்டி லைட் போட்டு ஏமாற்றியிருக்கிறாள். ஒரு கூட்டமாக செயல்பட்டு என்னை பொறி வைத்து மாட்ட வைத்திருக்கிறாள். போட்டோக்களை அவன் முகத்தில் விசிறியடித்தேன். கிட்டத்தட்ட ஒரு எலி மாதிரிதான் என்னால் முழிக்க முடிந்தது. அவமானத்திலும் வெறுப்பிலும் மூச்சுக்காற்று தாறுமாறானது. நெஞ்சை அடைத்தது.

"மிஸ்டர் ரமேஷ். ஆர்.எல்.எம்.இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர். இளம் தொழிலதிபர். வயசு நாற்பது. சொத்து மதிப்பு ஐநூறு கோடி இருக்கலாம். சமூகத்தில் ரொம்ப நல்ல பெயர். ஆனால் கொஞ்ச சபல புத்தி. ரகசியமாக சில தப்புகள் அடிக்கடி செய்வார். அது தெரியாமல் இருக்க என்ன விலை வேண்டுமானலும் தருவார். வீடியோவும் இருக்கு, ரமேஷ் சார். பார்க்கறீங்களா?"

"ராஸ்கல். என்ன திமிரு இருந்தா என் பேர் சொல்லி கூப்பிடுவே?". கையை ஓங்கினேன். அது இயலாமையில் அப்படியே நின்றது. அவன் கொஞ்சமும் கவலைப்படவில்லை. நிதானமாக போட்டோக்களை பொறுக்கிக் கொண்டிருந்தான்..

"எனக்கு அர்ஜெண்டா இருபது லட்சம் வேணும். அதுவும் நாளைக்குள்ளே. எங்கே வரட்டும்" என்றான். அவன் சிரித்தபோது பல்வரிசை வாழைப்பூவை ஞாபகப்படுத்தியது.

என்னால் ஆரம்ப ஷாக்கிலிருந்தே வெளிவர முடியவில்லை. பத்தே நிமிஷ சபலம் எப்படி கொண்டுபோய் விட்டிருக்கிறது? என்னை நானே நொந்து கொண்டேன். வெறுப்பில் ஸ்டியரிங்கை குத்தினேன். "போடா. என்ன மிரட்டரயா? நீ யார் கிட்டே வேணுமின்னாலும் காட்டிக்க. நான் ஒரு பைசா கூட தர முடியாது?

"ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. உடம்புக்கு ஆகாது. நான் வரேன் சார். நாளைக்கு ஹோட்டல் ப்ரசிடெண்ட்ல எட்டு மணிக்கு சந்திக்கிறோம். அடுத்த ரவுண்டு பேச்சு வார்த்தை நடத்தறோம். மொதல்ல ஒண்ணு புரிஞ்சுக்குங்க. போலீசுக்கு போனீங்க, அப்பறம் நடக்கறதே வேற. ஜாக்கிரதை. வர்ட்டா"

போய்விட்டான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிளாட்பாரத்தில் காரை ஏற்றி அவனை கொன்று விடலாமா என்று கூட தோன்றியது. அது முடியாது என்றே பட்டது. அவன் காற்றில் கரைந்து போய் விட்டான்.

'ரமேஷ். நான் உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன். ச்சீ! நீ இவ்வளவு கேவலமானவனா நீ" இது அனிதா. "உன்னை அப்பான்னு சொல்லிக்கவே பிடிக்கலே." இது ப்ரீதி. 'இளம் தொழிலதிபரின் காம லீலைகள்' பத்திரிக்கைகளில் பரபரப்பு செய்திகள்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இருபது லட்சமென்ன, ஒரு கோடி கொடுத்தாலும், அவன் கேட்டுக் கொண்டே இருப்பான். என்னால் நிம்மதியாக இருக்கமுடியாது. ஆனால் போலீஸ் வேண்டாம். திடீரென கிரீஷ் ஞாபகம் வந்தது. டாஷ் போர்டில் குடாய்ந்ததில் அவன் கார்டு கிடைத்தது. சென்னை ப்ரைவேட் போலீஸ்!

"கிரீஷ். ஐயாம் இன் ட்ரபுள்" எல்லா விவரங்களையும் சொன்னேன்.

"குட். நீ நேரடியாக என் அலுவலகத்துக்கு வராமல் செல்லில் பேசினாயே அதுவே ஒரு புத்திசாலித்தனம். இனி உன்னோட ஒவ்வொரு அசைவையும் அந்த கூட்டம் கவனிக்கும். அதனால ஜாக்கிரதை. இன்னிக்கு பதினொரு மணிக்கு உன் கம்பெனிக்கு வாட்டர் கூலர் விற்கும் மார்கெடிங் ஆசாமி மாதிரி என் ஸ்டாப் ரெண்டு பேர் வருவாங்க. அவங்க அடிப்படை தகவல்கள் சேகரிப்பாங்க. நீ கவலைப்படாதே. கோழியை அமுக்குவது மாதிரி எல்லாரையும் அமுக்கிடறேன்."

கிரீஷ் சொன்ன மாதிரியே இருவர் வந்தனர். வாய்ஸ் ரெக்கார்டரில் ஆதி முதல் அந்தம் வரை எல்லா விஷயங்களையும் துருவித் துருவி கேட்டனர். நம்ருதா சம்பந்தப்பட்ட எல்லா குப்பைகளையும் கேட்டு வாங்கிக் கொண்டனர்.

"சார். எங்கள் வேலை முடிஞ்சிடுச்சு. எங்கள் தலைவர்கிட்டேயிருந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான விவரங்கள் உங்களுக்கு வரும். மனசுல நோட் பண்ணிக்குங்க, இந்த கேஸின் ரகசிய சங்கேத வார்த்தை 'ரமேஷ் சிவலிங்கம் 45' அதாவது 'ஆர்.எஸ்.45'. நாங்கள் வர்றோம்."

ஐந்து மணிக்கு கிரீஷ் போன் செய்தான். "ரமேஷ் நாளைக்கு அந்த ஆளை சந்திக்கப் போ. சும்மா இரண்டு லட்சம் கொடு. இன்னும் டைம் வாங்கு. தைரியமாக எதிர் கேள்விகள் கேள். நீ எந்த டேபிளில் உட்காருகிறாயோ, அந்த டேபிளுக்கான சர்வர்களாக எங்கள் ஸ்டாப் இருப்பார்கள். ரகசியமாக போட்டோக்கள் எடுப்பார்கள். இன்னும் அரை மணியில் உனக்கு ஒரு கூரியர் வரும். அதில் ஒரு மோதிரம் மாதிரி ஒன்று இருக்கும். அதை உன் கையில் போட்டுக்கொள். அது பவர்·புல் மைக்ரோ போன். பார்த்தால் அப்படி தெரியாது. கார் பார்கிங்கிலிருந்து எங்கள் ஆட்கள் உன் பேச்சு அனைத்தையும் ரிகார்ட் செய்வார்கள்."

"கிரீஷ்! எந்த சிக்கலும் இல்லாமல் விஷயத்தை முடித்துவிடுவாய் அல்லவா. எனக்கு பயமாயிருக்கிறது. பணம் பெரிதில்லை. ஆனால்....?'

"நான் எதிர்பார்த்ததை விட அவர்களின் நெட்வொர்க் கொஞ்சம் சிறியதுதான் என்று நினைக்கிறேன். அவர்களை ரவுண்டு கட்டி பிடிப்பதை விட அவர்கள் பிளாக் மெயில் செய்கிறார்கள் என்பதற்கான ஆவனங்களை தயார் செய்ய வேண்டும். அப்போதுதான் போலீஸ் எங்களை நம்பும். சினிமா மாதிரி அதிரடியாக செய்துவிடலாம் என்று நினைக்காதே. எங்களுக்கு பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன."

மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் நான் அங்கே போய்விட்டேன். ஆனால் அவன் அரை மணி கழித்துதான் வந்தான். கொடுத்த இரண்டு லட்சத்தை முகத்திலடித்தான். நான் அசரவில்லை. 'சிங்கிள் பேமெண்ட். எவ்வளவு வேண்டுமானலும் சொல்' என்றேன். ஒரு கோடி கேட்டான். ஒரு வாரம் டைம் கேட்டேன். 'அதன் பிறகும் உன் தொந்திரவுகள் தொடர்ந்தால் என் நடவடிக்கைகள் வேறு விதமாக இருக்கும்' என்று மிரட்டினேன். முனகிக் கொண்டே போனான்.

மூன்றே நாட்களில் ஒரு மாலை வேளையில் கிரீஷிடமிருந்து தகவல் வந்தது. "ஆர்.எஸ்.45 சக்ஸஸ். உடனே என் அலுவலகத்து வருகிறாயா?" என்றான். போனேன்.

"ரமேஷ். பார்ட்டி இந்த வேலைக்கு கொஞ்சம் புதுசு. மாமா வேலையிலிருந்து இப்போதுதான் பிளாக் மெயிலுக்கு வந்திருக்கிறான். உன்னை அவன் சந்தித்த அன்றைய தினமே அவன் செல் போனையும் பர்ஸையும் ஆள் வைத்து அடித்து பிடுங்கினோம். அதன் மூலம் அவன் கூட்டத்தினரின் யார்? எங்கே இருக்கிறார்கள் என்ற விவரங்கள் செல் கம்பனிகள் மூலமாக கிடைத்தது. கிரெடிட் கார்டுகள், வங்கிக் கணக்குகள் எல்லாவற்றையும் அசுர வேகத்தில் முடக்கினோம். போதுமான விவரங்கள் கிடைத்ததும், பைல் தயார் செய்து, போலீஸ் உதவியுடன் ஒவ்வொருவராக அமுக்கிவிட்டோம். அவர்கள் மேல் ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் இருந்ததால் அவர்களை பிடிக்க நாங்கள் போலீசுக்கு உதவிய மாதிரி ஆகிவிட்டது. ஸ்டில் காமிரா, மூவி காமிரா, கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க், சிடி, பென் டிரைவ் என்று சகலத்தையும் அள்ளிக் கொண்டு வந்துவிட்டேன். எல்லாம் பிடுங்கப்பட்டதும் அவன் குதியாய் குதித்தான். போலீஸ் அனுமதியுடன் மூஞ்சியில் ஒரு குத்து விட்டேன்."

"ரொம்ப தாங்கஸ் கிரீஷ். நான் ஒழிந்தேன் என்று நினைத்தேன். நீதான் காப்பாற்றியிருக்கிறாய். என்ன வேண்டும் என்று சொல். தருகிறேன்."

"இந்த நாலு நாட்களில் எக்கசக்கமாக என் ஆட்கள் உழைத்திருக்கிறார்கள். ஒரு பெரிய அமௌண்டுக்கு எங்கள் கம்பனியின் சின்ன பில் வரும். செட்டில் செய்துவிடு. இது பார்ட் ஒன்"

"என்ன பார்ட் ஒன்னா?"

"ஆமாம். பார்ட் டூ. உன்னோடு இன்னொரு முக்கியமான விஷயம் பேசணுமே" என்றான் நமுட்டு சிரிப்புடன்.

நான் அதிர்ந்து போனேன். "டேய்! நீ.... நீ...."

"முட்டாளே. பதறாதே. நான் உன்னிடம் நிதி கேட்கப்போவதில்லை. நீதி சொல்லப்போகிறேன். கையில் கோடிக்கணக்கில் காசு புரண்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்காதே. கொஞ்சம் நிதானமாக இரு. ஒழுங்காக வாழு."

"அப்படியே ஆகட்டும் என் குருவே" ஜப்பானிய ஸ்டைலில் குனிந்து கிரீஷ¤க்கு வணக்கம் தெரிவித்தேன்.

பின் குறிப்பு:

இந்த கதை இத்துடன் முடிவடையவில்லை. சென்னை ப்ரைவேட் போலீஸ் அந்த பிளாக் மெயில் ஆசாமியை சுற்றி வளைப்பதற்கு முன்னால், அவன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் கிராமத்தில் இருக்கும் தன் நண்பனுக்கு 'ஜாக்கிரதையாக பத்திரப்படுத்து' என்ற குறிப்புடன் ஒரு சின்ன பார்சல் அனுப்பியிருந்தான். அதற்குள்ளே இருந்த சிடியில் ரமேஷ¤ம், நம்ருதாவும் தப்பு காரியம் செய்து கொண்டிருந்தார்கள்.

புதிய நீதி - எந்த குற்றத்தையும் முழுமையாக அழிக்க முடியாது. எனவே இந்தக் கதை இன்னும் முடிவடையவில்லை.

Monday 16 June, 2008

உதித் நாராயணுக்கு ஒரு திறந்த கடிதம்

உயர்திரு உதித் நாராயண் அவர்களுக்கு

உங்களுக்கு தமிழ் தெரியாதுதான். இருந்தாலும் இந்தக் கடிதம் தமிழில் எழுதப்படுவதன் காரணம், உங்களுக்கு தமிழ் திரைப்படத்துறையோடு மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதைவிட, நான் சொல்ல வருவது அரை மயக்கத்திலிருக்கும் என் இனிய தமிழ் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதுதான்.

சமீபத்தில் வெளியான 'யாரடி நீ மோகினி' என்ற திரைப்படத்தில் நீங்கள் பாடிய 'எங்கேயோ பார்த்த மயக்கம்...' என்ற பாடலை கேட்க வேண்டிய துர்பாக்கியத்தை நான் அடைந்தேன். நீங்கள் செய்திருப்பது அப்பட்டமான தமிழ்ப் படுகொலை. ஒவ்வெரு வார்த்தையையும் கடித்து, துப்பியிருக்கிறீர்கள். உங்கள் வரிகள், எங்கள் காதுகளுக்குப் போய், சிறிது கால அவகாசத்துக்கு பிறகு, புத்தி மூலமாக மொழிமாற்றம்(!) ஆன பிறகுதான், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது.

நீங்கள் தமிழில் பாடுவது புதிதல்ல என்றாலும், நீங்கள் முன்பு பாடியது சின்னச் சின்ன கொலைகள் என்றால் (காதல் பிச்சாசே... பருவாயில்லை...), இது ஈவு இரக்கமற்ற படுகொலை. சிறிதளவேனும் மானமும், தமிழ் உணர்வும் கொண்ட எந்தத் தமிழனும், உங்களின் இந்த 'சீரிய தமிழ் பங்களிப்புக்கு' சிறிதளவேனும் வருத்தப்பட்டிருப்பான். இந்த தொடர் தமிழ் படுகொலைகளுக்கு, ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்படத்துறையும் பக்க பலமாக இருப்பதுதான் தமிழின் மானக்கேடு.

துதிபாடிகளை கொஞ்சம் ஓரம் கட்டுங்கள். உங்களுக்கு மிகுந்த நம்பிக்கையுள்ள ஒரு தமிழனை கூப்பிட்டு அந்தப் பாடலைக் கேட்கச் சொல்லுங்கள். உண்மையான மதிப்பீடை நீங்களே கேளுங்கள். ஒரே ஒரு நிமிஷம் கண் மூடி யோசியுங்கள். கலை மதிக்கப்பட வேண்டும். அது விற்பனைக்கு அல்ல. அப்படி விற்கப்படும்போது, கலைஞனின் தன்மானமும் விலை போகிறது என்பதை உணர்வீர்கள்.

நீங்கள் மிகச் சிறந்த பாடகர் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. உங்களுடைய 'பாப்பா கஹதேஹைங் படா நாம் கரேகா....' என்ற முதல் பாடல் வெளியானதும் இந்தித் திரைப்படவுலகம் உங்களை ஆச்சர்யத்தோடு பார்த்தது. உங்களுடைய 'பெஹலா நஷா' (முதல் மயக்கம்) பாடலுக்கு கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் உங்கள் குரலில் மயங்கிப் போனார்கள். இன்றும் உங்களின் ஹிந்திப்பாடலை ரசிக்க முடிகிறது. அதற்குக் காரணம், நீங்கள் அறிந்த மொழியில் பாடுவதால்தான்.

உங்களுக்கு ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். பாடும் நிலா பாலு எங்களால் அன்போடு அழைக்கப்படுகிற திரு எஸ்.பி.பி. அவர்கள் தெலுங்கு மொழிக்காரர். ஒரு முறை அவர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் தெலுங்கு பாடல் பதிவில் பாடிக்கொண்டிருந்தாராம். அது ஒரு மிக பிரபலமான தமிழ்ப்பாடலின் தெலுங்கு வடிவம். அதே ஸ்டூடியோவில், இன்னொரு படப்பிடிப்பில் திரு எம்.ஜி.ரின் காதுகளுக்கு அது சென்றிருக்கிறது. உடனே எம்.ஜி.ர். அவரை அழைத்து விசாரித்தாராம். தனது அடுத்த படத்தில் அவரை பயன்படுத்திக் கொள்ளுமாறு இசையமைப்பாளரை கேட்டுக் கொண்டாராம். அதற்கு இசையமைப்பாளர், எஸ்.பி.பியிடம் 'உனக்கு தமிழ் தெரியுமா?' என்றாராம். எஸ்.பி.பி. 'தெரியாது' என்று சொல்ல, 'தமிழ் உச்சரிப்பு சரியாக தெரிந்து கொண்ட பிறகுதான் உனக்கு சான்ஸ்' என்று சொல்லிவிட்டாரம். அதன் பிறகு நல்ல தமிழ் கற்றுக் கொண்டு எஸ்.பி.பி. பாடி எங்களுக்கு கிடைத்ததுதான், 'இயற்கையெனும் இளைய கன்னி', 'ஆயிரம் நிலவே வா', 'பொட்டு வைத்த முகமோ' போன்ற ஆயிரக்கணக்கான பாடல்கள்.

மீண்டும் உங்களிடம் வருகிறேன். உங்கள் மனசைத் தொட்டுச் சொல்லுங்கள். யாராவது ஒருத்தர் வடநாட்டில் போய் ஹிந்திப்பாடலை சரியாக உச்சரிக்காமல் பாடினால், அவர் எவ்வளவு அவமானத்துக்கு உள்ளாவார்? னால் இங்கே, நிலமை தலைகீழாக இருக்கிறதே. உங்கள் சக பாடகியான சாதனா சர்கமும் சளைத்தவர் இல்லை. 'கொஞ்சும் மைனாக்களே, கொஞ்சும் மைனாக்களே வந்து குளக்கேற்றில் (குளக்கரையில்?) வந்து கூடுங்கள்.... தேபாவளி (தீபாவளி?) பண்டிகை' என்று பாடியவர்தானே!

உங்களைச் சொல்லிச் குற்றமில்லை. 'இளையராஜா' என்று அழகிய தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற தமிழ்த் திருமகன் பெற்றெடுத்த தவப்புதல்வர்தான், உங்களை வலிய வரவழைத்து பாட வைக்கிறார். தனது திரைப்படங்களில் அழகிய தமிழ்ப்பெயர்களை வைக்கும் சூப்பர் ஸ்டாரின் மருமகன்தான் படத்தின் ஹீரோவாக இருக்கிறார். செல்வராகவன் என்ற அழகிய தமிழ்ப்பெயரைக் கொண்டவரின் கதைதான் படமாகியிருக்கிறது. யாருக்கும் தமிழுக்கு நடக்கும் படுகொலையைப் பற்றி கவலையில்லை. வியாபாரம் ஆனால் சரி. யாருக்கும் வெட்கமில்லை என்ற 'சோ' வின் திரைப்படப் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது,

'யாரடி நீ மோகினி' என்று அழகிய தமிழ்ப் பெயர் வைத்தால், அந்த திரைப்படத்திற்கு புனிதத்துவம் கிடைத்துவிட்டதாக தமிழக அரசு கருதுகிறது. தமிழ் மக்கள் வியர்வை சிந்தி செலுத்தும் வரியை, அந்த தமிழ்ப் பாதுகாவலர்களுக்கு சீதனமாக கொடுக்கிறது. ஆனால் அந்த பெயருக்கு கீழே நடக்கும் தமிழ் அத்துமீறல்களை கொஞ்சம் கூட கவனிப்பதில்லை. இதுவும் ஒரு காலத்தின் கோலம்.

உங்களை தமிழில் பாடக்கூடாது என்று தடுக்கவில்லை. தயவு செய்து மொழி உச்சரிப்பைப் புரிந்து கொண்டு பாட வாருங்கள். வரவில்லையா? விட்டுவிடுங்கள். தமிழை கடித்துத் துப்புவதை எந்த மானமுள்ள தமிழனும் பொறுத்துக் கொள்ள மாட்டான். நீங்கள் தமிழில் பாடித்தான் பெயரும் புகழும் இனி அடையவேண்டும் என்பதில்லை. எவ்வளவோ நல்ல குரல்வளம் கொண்ட தமிழ் உச்சரிப்பு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளே வரட்டும். முடிந்தால் கைகாட்டுங்கள். அது உங்களுக்கும், தமிழுக்கும் புண்ணியமாகப் போகும்.

நீங்கள் எதையும் பற்றி கவலைப்படாமல், இப்படியே தொடர்ந்தால், வருங்காலம் உங்களை மன்னிக்காது. 'உதித் நாராயணணா? அவர் நல்ல பாடகர்தான். ஆனால் அவர் மொழியறியாமல் கொன்று குவித்த தமிழ்ப்பாடல்கள் ஏராளம்' என்ற அவப்பெயரை சிலுவையாக சுமக்க வேண்டியதை இப்போதிருந்துதே தவிர்க்கப்பாருங்கள்.

சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன். ஊதவேண்டிய சங்கை ஊதியாகிவிட்டது. இனி உங்கள் இஷ்டம்.

இப்படிக்கு

மானமுள்ள ஒரு தமிழன்.

இந்த கடிதத்தை பிரபல பத்திரிக்கைகளுக்கு பிரசுரிக்க அனுப்பினேன். ஒரு பத்திரிக்கை கூட கண்டு கொள்ளவில்லை. அவர்களும் இந்த மாதிரியான தமிழ் கொலைகளை ஏற்றுக் கொண்டு விட்டார்களா அல்லது இதை பற்றி எழுதுவதில் எந்த பிரயோசனுமும் இல்லை என்பதாலா என்று புரியவில்லை. வலை நண்பர்களே உங்கள் கருத்து என்ன?

Thursday 10 April, 2008

சுஜாதாவும் பூர்ணம் விஸ்வநாதனும்


ஊஞ்சலை தேடினோம்

எழுத்தாளர் சுஜாதவின் விஞ்ஞானக் கதைகளில் கால இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு பின்னோக்கி பயணிப்பது மாதிரி கற்பனைகள் வரும். அந்த மாதிரி நாம் 25 வருடங்கள் பின்னோக்கிப் போக வாய்ப்புக் கிடைத்தால், அதே சுஜாதா பூர்ணம் விஸ்வநாதனோடு கை கோர்த்துக் கொண்டு வழங்கிய மேடை நாடகங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.

டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், அடிமைகள், ஊஞ்சல், அன்புள்ள அப்பா என்று பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் மேடையேற்றிய நாடகங்கள் ஒரு எழுச்சியை உண்டாக்கின. அவைகளில் விஞ்சி நிற்பது சுஜாதாவின் எழுத்தாற்றலா, பூர்ணத்தின் நடிப்பாற்றலா என்று பட்டி மன்றமே நிகழ்த்தலாம். தன் நீண்ட கால நாடக அனுபவங்களில் சிலவற்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார் பூர்ணம்.

அதெப்படி சுஜாதா உங்களுக்கு எழுதிய நாடகங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டது மாதிரி இருக்கிறது என்று கேட்டோம்.

"சுஜாதா பூர்ணம் நியூ தியேட்டர்ஸுக்காக நாடகம் எழுத யோசிக்கும் போதே என்னை மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கலாம். அவருக்கும் அவர் அப்பாவுக்கும் உள்ள அன்யோன்யம் என் மூலமாக வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். தவிர, அவரோடு கலந்து பேசி சில மாற்றங்கள் கொண்டு வருவோம். அது இன்னும் மெருகு சேர்க்கும். அந்த மாதிரி பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தில் என் பேத்தி 'நீங்க பாட்டியை பெண் பார்க்க போன போது என்ன பேசினீர்கள்' என்று கேட்பாள். அதற்கு நான் சொல்லும் டயலாக் ஸ்கிரிப்டில் உள்ளதைவிட கொஞ்சம் கூடுதலாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருக்கும். அந்த சீன் வரும்போது சுஜாதா சீட்டின் நுனிக்கே வந்து மிக ஆர்வமாக கவனித்து ரசித்திருக்கிறார்" என்றார் பூர்ணம்.

ஒர் ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது பூர்ணத்துக்கு முழுக்கப் பொருந்தும். பூர்ணம் மேடையில் சுடர் விட்டுப் பிரகாசித்தார் என்றால் அதற்கு இன்றும் இயங்கு சக்தியாக இருப்பவர் திருமதி சுசீலா விஸ்வநாதன்.

"பூர்ணம் நியூ தியேட்டர் சென்னையை மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருந்தாலும் ஸ்கிரிப்ட் எழுதித்தரும் சுஜாதா அந்த சமயத்தில் பெங்களூரில்தான் இருந்தார். சாதா போஸ்டில்தான் ஸ்கிரிப்ட் வரும். சுஜாதாவின் எக்ஸ்பிரஸ் ஸ்பீட் கையெழுத்தைப் படிப்பது என்பதே மிகப் பெரிய சவால். பெரும்பாலும் அந்தப் பணி எனக்குத்தான் வரும். கடிதம் வந்ததும் அந்தக் கணமே படிக்க வேண்டும் என்பார் என் கணவர். என்க்கு நானே ஒரு முறை தனியாக ரிஹர்சல் செய்து கொண்டு படித்தால்தான், அவர் மனம் கோனாமல் பிசிறில்லாமல் படிக்க வரும். எனவே கடிதம் வந்ததும் யாருக்கும் தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, நான் முழுவதுமாக தயாரான பிறகுதான் கடிதத்தையே அவர் கண் முன்னால் காட்டுவேன்" என்றார் திருமதி சுசீலா பூர்ணம்.

"சுஜாதாவின் பல நாடகங்களில் உச்சமான நாடகமாக நான் கருதுவது ஊஞ்சல் நாடகம்தான். அதில்தான் சுஜாதா எழுத்தின் வீச்சு மிகவும் உயர்ந்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் நான் நடித்தபோது அந்தப் பாத்திரத்தை ரசித்து ரசித்து செய்திருக்கிறேன். அந்த நாடகத்தில் நான் ஓர் அறிவு ஜீவி. ஆனால் எனது கண்டுபிடிப்புகள் நிகழ்காலத்துக்கு ஒத்துவராது என்பதை அறியாதவன். அப்படிச் சொன்னாலும் அதை ஏற்க மறுப்பவன். நிகழ்காலத்தால் உதாசீனப்படுத்தப்படும் ஒர் இறந்தகால மனிதன். ஒரு கட்டத்தில் என் ப்ராஜெக்ட்டுக்காக என் மகள் தன் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்திருக்கும் மேமிப்பிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாயைக் கடனாக கேட்பேன். என் மகளும் தன் தந்தை படும் மன வேதனையை உணர்ந்து தர ஒப்புக் கொள்வாள். ஆனால் என் மனைவியோ அதை வன்மையாக கண்டிப்பாள். மனதை பிழியும் காட்சி அது. இது கற்பனை என்றாலும் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த என் மகள் பத்மஜா உணர்ச்சிக் கொந்தளிப்பில் நாடகம் முடிந்ததும் ரூபாய் பதினைந்தாயிரத்துக்கு என் பெயருக்கு செக் எழுதி என் டேபிளில் வைத்துவிட்டாள். அப்பறம் அவளுக்கு புரியவைத்து சமாதானபடுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இன்றும் அவளைக் கிண்டலடிக்க 'அந்த பதினைந்தாயிரம் செக்' என்று சொல்லி சொல்லி சிரித்து மகிழ்வோம். என்னால் அந்த பரிமாணத்தை கொடுக்க முடிந்ததற்கு காரணம் சுஜாதாவின் எழுத்துதான்".

" ஊஞ்சல் நாடகத்துக்காக மும்பை போனதை என்னால் மறக்கவே முடியாது. இந்த நாடகத்துக்கு முக்கிய செட் பிராப்பர்டி மேடையில் பிரதானமாக முன்னும் பின்னுமாக ஆடும் ஊஞ்சல்தான். ஆனால் மும்பை வந்து சேர்ந்ததும் எங்களுக்கு ஆரம்ப சோதனையே அந்த ஊஞ்சல்தான். எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஊஞ்சல் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. தெரிந்தவர்களின் விலாசங்களை வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கினோம். நேரம் ஆக ஆக ஒரு நாள் கிரிக்கெட்டின் கடைசி ஓவர்கள் மாதிரி டென்ஷன் தலைக்கேற ஆரம்பித்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக கடைசி ஒரு சில மணி நேரங்களில் கண்டேன் சீதையை என்ற மாதிரி ஒரு ஊஞ்சலை கண்டு கொண்டோம். மும்பை ஊஞ்சல் நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றால் அதில் அந்த ஊஞ்சலுக்கும் பங்குண்டு" என்று சிரித்தார் பூர்ணம்.

"மற்ற நாடகக் குழுவில் இருப்பது போல தனக்கு ஏ.சி. ரூம் மற்றவர்களுக்கு சாதாரண ரூம்கள் என்பது பூர்ணம் நியூ தியேட்டரில் கிடையாது. பூர்ணமும் சுஜாதாவும் அந்த நாட்களில் எங்களோடு இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணித்திருக்கிறார்கள். ஒரு முறை வெளியூருக்குச் சென்றிருந்தபோது அவர்கள் அளித்திருந்த ரூம்கள் சராசரிக்கும் குறைவாக இருந்தது என்பதை எங்கள் முக பாவனைகளிலேயே புரிந்து கொண்ட பூர்ணம், உடனடியாக செயலில் இறங்கி மாற்று ஏற்பாடுகள் செய்து அதன் பிறகுதான் சாப்பிட்டார்" என்கிறார் நாடக மற்றும் டி.வி. சீரியல் நடிகையான உஷா.

அமுதசுரபி - ஏப்ரல் 2008

Thursday 6 March, 2008

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ஊர்!

வட இந்திய சுற்றுலா என்றால் சாதாரணமாக நினைவு வருவது டெல்லி, க்ரா, மதுரா, ஜெய்பூர், உதய்பூர், வராணாசி, அலஹாபாத் கியவைகள்தான். ஏனோ லக்னோ என்ற ஊர் ஒன்று இருக்கிறது, அங்கு பார்த்து அதிசயப்பட வேண்டிய இடங்கள் இருக்கின்றன என்பது பலருக்கு தெரியவே இல்லை.


லக்னோ ரெயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் உடனே நம் காமிராவுக்கு வேலை வந்து விடுகிறது. உள்ளூர் மக்களால் சார்பாக் என்று செல்லமாக அழைக்கப் படும் அந்த ஸ்டேஷனின் வெளிப்புறத் தோற்றம் கொள்ளை அழகு. முன்பு லக்னோவை ண்ட நாவாப்களின் கட்டிடகலையை பறை சாற்றும் விதமாக இருக்கிறது. தற்காலத்து ஏற்ப ஸ்டேஷனுக்குள் பல மாற்றங்கள் வந்தாலும் வெளித் தோற்றத்தை புராதன பொலிவோடு இன்னமும் பாதுகாத்து வரும் ரெயில்வே துறைக்கு ஒரு 'ஓ' போடலாம்.


லக்னோவின் பிரதான டூரிஸ்ட் ஸ்பாட்டே 'படா இமாம்பாரா' என்று அழைக்கப்படும் பூல்புலையா (bhool bhulaiya) தான். 1784ம் ண்டு அஸ்ப் உத்தௌலா என்ற நவாப்பினால் கட்டப்பட்ட இந்த மிகப் பெரிய மசூதியின் மையப் பகுதிக்கு போவதுதான் த்ரில்ங் அனுபவம். சிறுவர்களை கவர பத்திரிகைகளில் ட்டுக்குட்டிகளை அதன் தாயோடு சேர வழிகாட்டவும், நாய் இங்கே ரொட்டித் துண்டு அங்கே என்று மத்தியில் சிக்கலான கட்டங்கள் போட்டு முளைக்கு வேலை கொடுப்பார்களே அந்த மாதிரி ஒரு கட்டிடமே நம் முன்னால் இருந்தால்? அப்படி இருக்கிறது இந்த இமாம்பாரா.

சின்ன நுழைவாயில். அரை இருட்டில் நீண்டு போகும் குறுகலான சந்து போன்ற பாதையை பார்த்தால் மொபசல் ஏரியா சினிமா தியேட்டர்களின் டிக்கெட் கௌண்டர்கள் ஞாபகத்துக்கு வரும். திடீர் திடீரென திருப்பங்கள். நாம் சரியாகதான் போய் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து ஒரு திருப்பத்தில் திரும்பினால் பாதை அங்கே முடிவடைந்து சுவர்தான் இருக்கும். ஏமாற்றத்தோடு வந்த பாதையிலேயே திரும்பி வர வேண்டும். ஒரே ஒரு பாதைதான் சரியான பாதை. அது தெரியாதவர்கள் சுற்றி சுற்றி வரவேண்டியதுதான். கைடுகள் கூட கொஞ்ச நேரம் நம்மை திண்டாடவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

மைய பகுதில் நவாப்பின் தர்பார் இருக்கிறது. மேல் பகுதியில் சின்ன சின்ன பால்கனிகள் இருக்கின்றன. ராணிகளும் அவர்களின் சேடிகளும் அந்த பால்கனியில் அமர்ந்து ராஜபரிபாலனத்தை கண்டு மகிழ்வார்களாம். இந்தப் பக்க பால்கனிகும் எதிர் பக்க பால்கனிக்கும் கிட்டத்தட்ட 500 அடி தூரம் இருக்கிறது. னால் இந்தப் பக்கத்திலிருந்து தீப்பெட்டியில் தீக்குச்சியை தேய்த்து கொளுத்தும் போது வரும் சத்தம் கூட அந்தப்பக்கம் உள்ளவர்களுக்கு கேட்கிறது. சுற்றுலா பயணிகள் பிரமித்து போகிறார்கள். சரக் சரக்கென்று தீக்குச்சி உரசும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆக்ரா-·பதேபூர் சீக்ரியில் அக்பர் கட்டிய புலந்த்தர்வாஜா (bhuland dharwaja) மாதிரி பிரும்மாண்டமாக இல்லாவிட்டாலும் கட்டிட கலையம்சத்தோடு கூடிய ரூமி தர்வாஜா லக்னொவில் இருக்கிறது. இது துருக்கி காண்ஸ்டாண்டி நோபிளில் உள்ள கட்டிடத்தின் கார்பன் காப்பி கும். இந்த கட்டிடம் மட்டும் உயரமானது அல்ல. நவாப்பின் மனசும்தான். அவர் ட்சி காலத்தில் கொடுமையான பஞ்சம் வந்ததாம். மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், அதே நேரத்தில் தன் கலை தாகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த ரூமி வாசலை கட்டினாராம். வாழ்க மன்னர்.


ஈராக்கிலிருந்து 200 கி,மி. தொலைவில் உள்ள நஜ·ப் நகரை ஞாபகப்படுத்தும் விதமாக ஷா நஜ·ப் இமாம்பாரா என்று ஒண்று உள்ளது. நஜ·ப் தர்காவில் ஹஸ்ரத் அலியின் உடல் புதைக்கப்பட்டிருக்கிறது என்றால் இங்கு காசிஉத்தின் ஹைதர் என்ற நவாப்பின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. அவர் சமாதி தவிர அவரது ஏராள மனைவிகளின் சமாதிகளும் உள்ளன. அதில் ஒரு வெள்ளைக்காரி ராணியும் அடக்கம் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். வெள்ளியும் தங்கமுமாக கும்பங்கள் ஜொலிக்கின்றன. உள்ளே சுவர் வேலைப்பாடுகளையும், தொங்கும் சாண்டிலியர்களையும் திகட்ட திகட்ட பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதைப்போல இன்னும் பல புராதன கட்டிடங்கள் லக்னோவில் மூலைக்கு மூலை இருக்கின்றன.

கட்டிடங்களை பார்த்து போரடித்து போனவர்களுக்கு இருக்கவே இருக்கிறது. ஹஸ்ரத் கஞ்ச். எல்லா ஷாப்பிங் மால்களும் இங்குதான் இருக்கின்றன. நம் பர்ஸ்களுக்கு பத்து காத்திருக்கிறது. 'சிக்கன்' எம்பிராய்டரி(இதற்கும் கோழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) வேலைப்பாடு கொண்ட சேலைகள் சுடிதார்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. உத்திரப்பிரதேசத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தயாராகும் அத்தனை கைவினைப் பொருட்களும் கொட்டிக் கிடக்கின்றன. நம்மூர் சங்கு மார்க் லுங்கிகளையும் திருப்பூர் பனியன் சமாசாரங்களையும் நம்மிடமே கூவிகூவி விற்கிறார்கள்.

பிக்னிக் ஸ்பாட் எதுவும் இல்லையா என்று கேட்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது முதலைப் பண்ணை. காட்டிலாக்கா மேற்பார்வையில் இந்தப் பகுதி இருப்பதால் இயற்கை சூழல் படு ரம்மியமாக இருக்கிறது.

லக்னோவில் இன்னமும் சைக்கிள் ரிக்ஷாக்கள் இருக்கின்றன. மூன்று கி.மி. தூரம் உள்ள இடத்துக்கு கூட வெறும் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு நெரிசலான தெருக்களில் பொறுமையாக அழைத்து போகிறார்கள். அடாவடித்தனம் இல்லை. பணத்தை வாங்கி கொள்ளும் போது கும்பிடுகிறார்கள். ஒரு பக்கம் வெள்ளையும் சொள்ளையுமாக வாயில் பான்பராக் மணக்க ஏ.சி.காரில் வலம் வரும் மேல்தட்டு மக்கள். முழங்காலுக்கு மேல் கட்டிய அழுக்கு வேட்டியுடன் அஞ்சுக்கும் பத்துக்கும் லாய் பறக்கும் ஏழை மக்கள்.

லக்னொ ரயில் நிலையத்துக்கு திரும்பும் வழியில் ஒரு நீண்ட கலையம்சம் கொண்ட கட்டத்தை பார்க்க நேரிட்டது. அது என்னவென்று விசாரித்ததில் அது உத்திரபிரதேசத்தின் சட்டசபையாம். உ.பி அரசியல் அழுக்கும் அசிங்கமாகவும் இருக்கலாம். னால் லக்னோ அழகுதான்.

(அமுதசுரபி - மார்ச் 2008)

Wednesday 5 March, 2008

படுத்துக் கொண்டே ஜெயித்தவர்- பாபா ஆம்தே


இந்த தேசம் மற்றுமொரு மகத்தான காந்தியவாதியை இழந்திருக்கிறது. 93 வயது முரளீதர் தேவதாஸ் ஆம்தே சென்ற மாதம் அமரரானார். பாபா என்றவுடன் ஏதோ ஒரு ஆன்மிகவாதி என்று எண்ணிவிட வேண்டாம். மராட்டியர்கள் மதிப்பிற்குறிய பெரியவர்களை 'பாபா' என்றே அழைப்பார்கள்.

பாபா தன் வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே செலவிட்டிருக்கிறார். அப்போதெல்லாம் தொழு நோயாளிகள் என்றால் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் அல்லது பால்வினை நோய் என்றும் கருதுவதுண்டு. அவர்களை தொடுவதாலும் அல்லது அவர்கள் அருகில் இருப்பதாலும் நமக்கும் அந்நோய் வந்துவிடும். எனவே அவர்கள் சமுதாயத்திற்கு தேவையற்றவர்கள் என்ற தவறான எண்ணங்கள் இருந்தன. நோயின் தீவிரம் மற்றும் சமுதாய புறக்கணிப்புகளால் அவர்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி, கவனிப்பாறின்றி செத்து மடிந்தனர்.

1951ம் ஆண்டு சந்திராபூர் மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் 'ஆனந்த வனம்' என்ற ஆசிரமத்தை நிறுவினார் பாபா. சுற்றியுள்ள கிராமங்களில் பிரத்யேக க்ளினிக்குகள் தொடங்கப்பட்டன. அங்கு தொழு நோயாளிகளுக்கு உயர்தர மருத்துவம் அளிக்கப்பட்டது. ஆனந்த வனத்தை அவர் நிறுவியபோது அவருக்கு முப்பதிஏழு வயதுதான். கல்யாணம் ஆகி ஐந்தே வருடங்கள்! 'தேசிய விடுதலை என்கிற லட்சிய வேட்கையோடு போராடிய காந்தியடிகளை தன் நெஞ்சில் நிறுத்தி வாழ்வின் விளிம்புகளில் தத்தளிக்கும் மக்களுக்கு நேசக்கரம் நீட்டியவர் பாபா' என்று புகழ்மாலை சூட்டுகிறார்கள் சமுகவியலார். அவர் அன்று தொடங்கிய இயக்கம் தொய்வில்லாமல் இன்றும் தொடர்கிறது. அவரது மகன்களும், மருமகள்களும், பேரப்பிள்ளைகளும் இதே சமுதாயப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

'தொழுநோயாளிகளை விட மிக மோசமான ஒரு வாழ்க்கையை பழங்குடியினர் பெற்றிருக்கிறார்கள். இவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியாவின் வளர்ச்சியை பற்றி பேசுவது பேத்தலானது. மிகப் பெரிய அணைகள் கட்டப்படும்போது காடுகள் அழிகின்றன. பழங்குடியினர் அலைகழிக்கப்படுகிறார்கள். அரசாங்கம் அவர்களுக்கு மாற்று குடியமர்த்தல் ஏற்பாடுகளை கடனே என்று செய்கிறது. முடிவில் அவர்கள் நகரவீதிகளில் பிச்சை எடுக்கும் அவலத்திற்கு உள்ளாகிறார்கள்' என்கிறார் பாபா.

மேதா பட்கர் தலைமையில் 'நர்மதாவை காப்பாற்றுவோம்' என்ற ஏழுச்சி தீவிரம் அடைந்தபோது, பாபா துணிந்து ஒரு காரியம் செய்தார். நர்மதையில் அணை வருவதால் மூழ்கக்கூடிய நிஜிபல் என்ற கிராமத்துக்கு தனது வசிப்பிடத்தை மாற்றினார். மத்திய பிரதேச அரசு பாபாவின் போராட்டத்தை கண்டு மிரண்டது. ஒரு கட்டத்தில் போலீஸ் உதவியுடன் அவரை வலுக்கட்டாயமாக அந்த கிராமத்திலிருந்து அப்புறப்படுத்தியது. போராட்டம் தீவிரம் அடைய, அரசு பணிந்து வந்து, பேச்சு வார்த்தைகள் நடத்தியது. அதன் பலனாக பழக்குடியினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.

பாபாவின் மன உறுதிக்கு நேரெதிராக அவர் உடல் நிலை இருந்தது. முதுகுத்தண்டில் இரண்டு எலும்புகள் செயலற்று போனதால் அவரால் உட்கார முடியாது. நிற்கவும் படுக்கவும் முடியும். ஆனால் அவர் அசரவில்லை. படுத்துக் கொண்டே பல சாதனைகள் செய்தார்.

"பன்னாட்டு நிறுவனங்கள் நாடோடிகள் மாதிரி இங்கே வந்து, காலப்போக்கில் நம்மை ஆளுமை செய்கின்றன. வானுயர கட்டிடங்களும், பெப்சியும், கோக்ககோலாவும் இந்தியாவின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் அல்ல. ஒரு ஏழை பழங்குடி பெண் எந்த அவமானங்களுக்கும் உள்ளாகாமல் அவள் காலைக்கடன்களை கழிக்க முடிந்ததென்றால் அதுதான் இந்தியாவின் வளர்ச்சியென்பேன்" என்கிறார் பாபா. மேற்கத்திய பொருளாதார சிந்தனையில் திளைத்திருக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு அம்ட்டே விடுத்திருக்கும் இந்த எச்சரிக்கை காதில் விழுந்தால் இந்த தேசத்திற்கு நல்லது.

(அமுதசுரபி - மார்ச் 2008)

Thursday 28 February, 2008

தலைச்சன்


இந்த கதை தொடங்கும் காலத்தை எப்படி சொல்வது என்பதில் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. ஆண்டு, மாதம், நாள் என்ற கால அளவீடுகள் எல்லாம் ஒழிந்து போய், உயிர் வாழ்தலே ஒரு சவாலாக இருக்கும் ஒரு சூன்யமான காலகட்டம் என்று சொல்ல முடிகிறது. இந்த நூற்றாண்டிலிருந்து குறைந்த பட்சமாக ஆறு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன எனக் கொள்ளலாம். அரசாங்கம், பொருளாதாரம், சமூகம் என்ற வரையறைகள் அற்றுப் போய்விட்ட காலம் என்று சொல்லி உங்களை பயமுறுத்த வேண்டியிருக்கிறது.

ஏன் இப்படி ஆயிற்று ? அதற்கு பல காரணங்கள்.

சுற்று சூழல் ஆர்வலர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்த உலக நாடுகளுக்கு 2192ல் முதல் அடி கிடைத்தது. நியூஸிலாந்தின் தென் கோடி நகரமான டுநோடினை கடல் கொண்டது. அதற்கு அன்டார்டிக் பனிப்பாறைகள் உருகி வருவதே காரணம் என்றார்கள். அதன் தொடர்ச்சியாக கனடாவின் க்யூபெக் தீவுக் கூட்டங்களில் பல தீடீர் திடீரென கானாமல் போயின. ஒரே மாதத்தில் மாலத்தீவுகள் அனைத்தும் கடலில் மூழ்கின. பசிபிக் தீவுகள் பலவும் இதே நிலைமைக்கு ஆளாயின. இயற்கை ஒரு பக்கம் வஞ்சித்துக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து மற்ற நாடுகளை பொருளாதார சிக்கலில் லோல்பட வைத்து தங்களின் சுகமான வாழ்க்கையை தொடர்ந்தார்கள். அதன் விளைவாக அரசியல் பகை மேலும் மேலும் வலு பெற்றது. இரான், இராக், வட கொரியா, லெபனான், சிரியா, லிபியா, பிரேசில், பெரு போன்ற நாடுகள் ஒன்று சேர்ந்து மேலை நாடுகளை நேரடியாக எதிர்க்க ஆரம்பித்தன. உகலளாவிய தீவிரவாதம் ஒரு மாபெரும் தீய சக்தியாக உருவெடுத்து கொண்டிருந்தாலும், பேரழிவின் ஆரம்பம் 2356ம் ஆண்டு என்று சொல்லலாம். அந்த ஆண்டு, ஒரு உயிரியல் போர் தாக்குதலில் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் ஒரு கோடி பேர் மாண்டார்கள். அதற்கு உடனடி பதிலடியாக இரானின் பாதி பகுதியை அமெரிக்க படைகள் குண்டு வீசி அழித்தன. அதன் பிறகு எல்லாமே கோளாறு. டன் டன்னாக யுரேனியமும் தோரியமும் விண்ணிலும் மண்ணிலும் தன் சாகசங்களை நிகழ்த்தின. சரித்திரத்தில் குறிப்பெழுத அவசியமில்லாவிட்டாலும் நாம் அதனை கடைசி உலகப்போர் என கொள்ளலாம். நிலம், நீர், காற்று, ஆகாயம் விஷமாக போய்விட, உலக சீதோஷ்ண நிலையே நிலை தடுமாறி போனது.

அதன் பிறகு இரண்டே நூற்றாண்டுகளில் கிட்டதட்ட 95% உயிரினங்கள் அழிந்து போய்.... போதும். கதைக்கு வருவோமா ?

மெல்லிய இருட்டின் சில்லவுட்டில் அவர்கள் இருவரும் பெண்கள் என்று தெரிகிறது. இருவரும் வேகவேகமாக எங்கிருந்தோ தப்பித்து வருகிறார்கள் என்பது அவர்களின் பதட்டத்திலிருந்து புரிகிறது. இருவருக்குமே இலைகளும் தழைகளும் உடைகளாக இருக்கின்றன. இருவரில் ஒருத்தி நிறைமாத கர்பிணி. மூச்சு வாங்க சற்று பின்னால் ஓடி வந்தவள் ஒரு கட்டத்தில் களைத்துப் போய் கால்பரப்பி உட்கார்ந்து விட்டாள். வலியில் ஓலமிட முன்னால் சென்றவள் ஓடி வந்து அவள் வாயை பொத்தினாள்.

"டேரா, வா. இன்னும் கொஞ்ச தூரம் போய்விடுவோம். உன் அலறல் அவர்களுக்கு கேட்டுவிட்டால் காரியம் கெட்டுவிடும்."

"என்னால் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. சிகா, விட்டுவிடு. நடப்பது நடக்கட்டும்."

சிகா ஒரு தீர்மானத்தோடு டேராவை கைகளில் தூக்கிக் கொண்டு ஓடினாள். சகதியான ஒரு ஓடையை தாண்டி மேட்டில் ஏறத் தொடங்கும் போது டேராவின் அலறல் வேகமெடுத்தது. ஒருவித திருப்தியோடு அவளை அந்த பாறையில் படுக்க வைத்தாள். பரபரவென இயங்கினாள். டேராவின் உச்சபட்ச கத்தலின் தொடர்ச்சியாக, கொஞ்ச நேரத்திலேயே ரத்தமும் சதையும் அப்பியவாறு ஒரு குழந்தை வெளிப்பட்டது.

"என்ன குழந்தை சிகா?"

"தலைச்சன்"

"அப்படியென்றால் ?"

"முதல் குழந்தை பிள்ளையென்றால் அந்த காலத்தில் தலைச்சன் என்று சொல்வார்கள்."

"போச்சு. அப்படியானால் இவர்களின் சட்டப்படி இதை கொன்று விடுவார்களே. என்ன செய்ய ?"

"கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன். இவர்களின் கூட்டத்திலிருந்து தப்பித்து போக முயற்சி செய்வோம். நான் உன் குழந்தையை காப்பாற்றித் தருகிறேன். குழந்தை சோனியாகத்தான் இருக்கிறது. பிழைத்துக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்."

கொஞ்ச தூரம் போய் ஓடையின் அழுக்குத் தண்ணிரில் குழந்தையை கழுவி எடுத்து வந்தாள். பாறையின் இடுக்கில் ஒளித்து வைத்திருந்த இலைப் பசையை எடுத்து டேராவிடம் தின்ன கொடுத்தாள்.

"போதும், இந்த இலைப் பசை வயிற்றை குமட்டுகிறது. கிழங்குமாதிரி எதுவும் கிடைக்கவில்லையா ?"

"பிறகு தருகிறேன். அவர்களின் சேமிப்பிலிருந்து திருடி வைத்திருக்கிறேன். இப்போதைக்கு பிழைக்கும் வழியைப் பார். அவர்கள் தேடி வருவதற்குள் நாம் வெகு தூரம் போய்விட வேண்டும்."

சிகா குறிப்பிட்ட 'அவர்கள்' கூட்டமாக அங்கே குழுமியிருந்தனர். ஆற்றங்கரையை ஒட்டி ஆண்களும் பெண்களுமாக சுமார் இருபது பேர் நிறுத்த வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கைகளும் வாயும் கொடிகளாலும் தழைகளாலும் கட்டப்பட்டிருந்தன. கூட்டத் தலைவன் ஜோடோ அமைதியாக வந்து அவர்கள் எதிரே வணங்கினான்.

"நம் நிலைமையை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நம் குறிக்கோள் இந்த மனித சமுதாயத்தை நீட்டிக்க வேண்டும் என்பதே தவிர நாம் வாழ வேண்டும் என்பது அல்ல. நீங்கள் பசியில் வாடி செத்துப் போவதைவிட இப்போது ஆற்றில் மூழ்கி செத்துப் போய்விடுவதே நல்லது. உணவு கையிருப்பு ரொம்பவும் குறைந்து விட்டது. அனைவரும் ஒட்டு மொத்தமாக செத்துப் போவது தவிர்கப்பட வேண்டும். வயதான ஆண்களான உங்களால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அதே மாதிரி அளவுக்கு அதிகமாகவே பிள்ளை பேற்றை பெற்று நலிந்து போய்விட்ட பெண்களான உங்களாலும் எந்த பயனும் இல்லை. எனவே உங்கள் சம்மதத்தோடு உங்களை ஆற்றில் தள்ளிவிட உத்திரவிடுகிறேன். சரியா ?"

ஜோடோ அவர்களை உற்று பார்த்தான். கொஞ்சம் மிரட்சியோடு அவர்கள் தலையாட்டினார்கள். ஆற்றை நோக்கி திரும்பி நின்று கொண்டார்கள். வேறு வழியில்லை. அவர்களுக்கு நேற்று முழுவதும் உணவு தரப்படாததால் மிகவும் களைத்திருந்தார்கள். ஜோடோ ஒருவனுக்கு சைகை காட்டினான். அவன் மரக்குச்சியால் ஒவ்வொருவரையும் ஆற்றில் தள்ளிவிட்டான். நதியில் அவர்கள் அடித்து போவதை எந்த சலனமும் இல்லாமல் கூட்டம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

"போச்சு. எல்லாம் போச்சு. நாம் ஒட்டு மொத்தமாக அழிந்து போகப் போகிறோம். நம் மக்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள். சுகா அவர்களே, ஏன் ஒன்றும் பேசமாட்டீர்களா ?" ஜோடோ இயலாமையில் கத்தினான்.

கண்ணெதிரே உயிர்கள் கொல்லப்படுவதின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாமல் சுகா தடுமாறிக் கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் அதிகம் விஷயம் தெரிந்தவர் அவர்தான். பதிலுக்காக ஜோடோ இன்னும் காத்திருப்பதைப் பார்த்ததும் அவர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தொண்டையை செருமினார்.

"பேச என்ன இருக்கிறது? இனிமேலும் நம் உயிர் வாழ்தல் ரொம்பவும் சிரமம் என்றே தெரிகிறது. முன்பெல்லாம் நம் உணவு சேமிப்பையும், சந்ததிகளை உண்டாக்க வேண்டும் என்பதற்காக இளம் பெண்களையும் கொள்ளையடிக்கும் கூட்டம் அடிக்கடி வரும். அவர்கள் எங்கே போனார்கள் ? உயிரோடு இருக்கிறார்களா தெரியவில்லை. இலைப் பசை அதிகம் கிடைக்கிறது. ஆனால் மீன்களும் கிழங்குகளும் குறைந்துவிட்டன. அந்தப் பகுதியில் ஒரு பாறையை விலக்கிப் பார்த்தேன். நீளநீளமாக புழுக்களைப் பார்த்தேன். இனிமேல் அதை சாப்பிட வேண்டியதுதான். நாம் அழிந்து போனாலும் அவைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன். எனவே உலகம் ஒட்டு மொத்தமாக அழிந்துவிடாது என்றே நினைக்கிறேன்."

"முன்பெல்லாம் ஆகாயத்தில் சிவப்பாக ஒன்று வருமாமே. கண்கள் கூசுமாமே. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?"

"இல்லை. எனக்கு முன்னால் இருந்தவர்கள் சொல்ல நான் உங்களுக்கு சொல்கிறேன். அதற்கு சூரியன் என்று பெயர். பெரும் தூசு மண்டலம் அதை மறைத்திருக்கிறது. அது எப்போது விலகுமோ அப்போதுதான் நமக்கு வாழ்வு. நேரடியான சூரிய வெளிச்சம் நமக்கு வேண்டும். முதலில் இந்த அழுக்கு மழை நிற்க வேண்டும். அது வரைக்கும் நாம் இழுத்து பிடித்து வாழவேண்டும். இல்லையேல் அது எந்த பகுதியில் தெரிகிறதோ அங்கே போக வேண்டும். அந்த காலத்தில் படு வேகமாக இந்த பகுதியிலிருந்து அந்த பகுதிக்கு விண்ணிலும் மண்ணிலும் செல்வார்களாம். இது போல பல விஷயங்கள் வெறும் செய்திகளாக நம்மிடம் இருக்கின்றன. அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை."

"சுகா. கொஞ்சம் பொறுங்கள். ஒரு வேளை அந்த பகுதி நமக்கு கிடைத்துவிட்டால் கூட அங்கு உயிர்வாழ்தல் கடினம் என்று ஒரு முறை சொன்னீர்களே?"

"ஆமாம். அந்த அச்சுறுத்தலும் இருக்கிறது. வேண்டாம். நாம் இங்கேயே இருப்போம்."

ஜோடோ தன் கூட்டத்திலிருப்பவர்களை கணக்கெடுக்கச் சொன்னான். 320 பேர். அதில் நாற்பது பேர்களே பெண்கள். அதிலும் 15 பெண்களே பிள்ளைபேறு பெறக் கூடியவர்கள்.

"மக்களே! கேட்டுக் கொள்ளுங்கள். நமக்கு உடனடியாக இரண்டு தேவைகள் இருக்கின்றன. ஒண்று உணவு. சாப்பிட நிறைய உணவு வேண்டும். இரண்டாவது, நமது எண்ணிக்கையை அதிகரிக்க பெண் குழந்தைகள் அதிகம் வேண்டும். மீன்கள் அதிகமாக கிடைக்கும் வரை உணவாக இலை பசையே தரப்படும். இனி ஒரு வேளை மட்டுமே கிழங்கு தரப்படும். அரைகுறை வெளிச்சம் இருக்கும் போது எவ்வளவு உணவு கிடைக்குமோ அவ்வளவையும் கொண்டு வாருங்கள். புதிதாக ஏதாவது தென்பட்டால் அவசரப்பட்டு எதுவும் செய்து விடாதீர்கள். அது விஷப் பொருளாகவும் இருக்கலாம். சுகாவை கேட்டுச் செய்யுங்கள்."

அப்போது ஒருவன் கொஞ்சம் தயக்கத்தோடு முன்னே வந்து நின்றான். "ஜோடோ! டேராவையும் சிகாவையும் காணவில்லை."

"என்ன ! டேராவை காணவில்லையா? அவளுக்கு எந்த நேரமும் குழந்தை பிறக்கும்படியாகத்தானே இருந்தது."

"ஆமாம் ஜோடோ. ஆனால் அவள் கொஞ்ச நாட்களாகவே சரியில்லை. நம் கொள்கைபடி நான்காவதாக பிறக்கும் ஆண்மகவை மட்டுமே வைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு உரிமையுண்டு என்பதை அவள் ஏற்றுக் கொள்ளமாட்டாளாம். அதற்கு சிகாவும் உடந்தை. சிகாவுக்கு இனிமேல் பிள்ளை பெறும் வாய்ப்பில்லை. அவளுக்கு செத்துப் போக விருப்பமில்லையாம். எனவே அவர்கள் தப்பித்து போயிருக்கலாம் என்று தெரிகிறது."

ஜோடோவின கண்கள் சிவந்தன. ஆத்திரத்தில் பற்களை நரநரவென கடித்தான். "போங்கள். போய் டேராவை தேடுங்கள். சிகா தேவையில்லை. டேராவும் அவள் குழந்தையும் நமக்கு அவசியம் தேவை."

"அதற்கு அவசியம் இல்லை". ஜோடோவின் பெயரை உரக்க அழைத்துக் கொண்டு இருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு மையப் பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்களின் பின்னால் டேராவும், சிகாவும். சிகா டேராவின் குழந்தையை இறுக பற்றியிருந்தாள். கொஞ்ச நேரம் அங்கே அமைதி நிலவியது.

"சுகா அவர்களே. நீங்களே விசாரணையை நடத்துங்கள். முதலில் அந்த குழந்தை என்னது என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்."

"தலைச்சன். ஆண் பிள்ளை. ஆனால் இதை கொல்ல நான் அனுமதிக்க மாட்டேன். எந்த உயிரையும் கொல்ல யாருக்கும் உரிமையில்லை தெரியுமா?" சிகா வெடித்தாள்.

"அது அந்தக் காலம். இப்போது நாங்கள் என்ன சொல்கிறோமோ அதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்." ஜோடோ கத்தினான்.

டேரா சுகாவின் முன்னால் மண்டியிட்டாள். " சுகா அவர்களே. என் குழந்தையை கொன்று விடாதீர்கள். அடுத்த குழந்தை நிச்சயம் பெண்ணாக பிறக்கும். உங்களுக்கு என் வாழ்நாளில் பத்து குழந்தைகள் வரை பெண்களாய் பெற்று தருகிறேன். இதை மட்டும் விட்டுவிடுங்கள். என் முதல் குழந்தை. எனக்கு மட்டும் உணவு கொடுங்கள். போதும். நான் சமாளித்துக் கொள்கிறேன்."

"உனக்கு உணவு குறைந்து போனால் எப்படி அடுத்தடுத்து குழந்தைகள் பெற்றுக் கொள்வாய். முட்டாள்தனமாக பேசாதே. ஜோடோவிடம் குழந்தையை ஒப்படைத்துவிடு. அதுதான் உனக்கு நல்லது." சுகா ஆகாயத்தை பார்த்துக் கொண்டே பதிலளித்தார்.

அதற்கு பிறகு அதிகம் பேச்சில்லை. ஒருவன் டேராவை தரதரவென இழுத்துக் கொண்டு போனான். சிகாவிடமிருந்து குழந்தை வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டது. அதன் கைகளும் வாயும் கட்டப்பட்டன. சிகா ஒரே பாய்ச்சலில் ஜோடோவை நெருங்கி அவனை பிராண்டினாள். மற்றவர்கள் விலக்குவதற்குள், ஜோடோவின் இடது தோள்பட்டை பகுதியில் தோல் கிழிந்து ரத்தம் பீறிட்டது. ஜோடோ மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அமைதி திரும்பியது.

"ஜோடோ! என்ன சொல்கிறாய் ?" சுகாவின் குரல் கம்மியிருந்தது.

"சொல்வதற்கு என்ன இருக்கிறது. நம்மிடம் நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். விதிகளை மாற்ற இப்போதைக்கு அவசியமில்லை. ஆற்றில் வீசிவிடச் சொல்லுங்கள்."

ஜோடோவின் ஆணை நிறைவேறுவதைப் பார்க்க சகிக்காமல் சுகா சிறிது தூரம் விலகிப் போய் திரும்பி நின்று கொண்டார்.

"சுகா அவர்களே! மிகவும் உணர்ச்சிவசப் பட்டுவிட்டீர்களா? நீங்களே இப்படிச் செய்தால் நான் என்ன செய்ய? எனக்கு எதற்கு இந்த தலைவர் பதவி ?" ஜோடோ பின் தொடர்ந்தான்.

"ஜோடோ என்னை மன்னித்து விடு. என் புத்தி ஒத்துக் கொண்டாலும் மனசு ஒத்துக் கொள்ள மறுக்கிறது. டேராவின் அலறல் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளை கொன்று விடுவார்களாம் !"

" அப்படியா ! பைத்தியக்கார்கள். " ஜோடோ ஆச்சர்யப்பட்டான்.

(குங்குமம் - 6 மார்ச் 2008)

Monday 25 February, 2008

காதலைச் சொல்லிவிடு


ஸ்ரீலேகா போட்டிக்கு தயாரானாள். பாஸ்கெட் பந்தை தரையில் இரு முறை தட்டி கூடையை நோக்கி வீச அது வளையத்தில் மோதி வலைக்குள் விழாமல் பக்கவாட்டில் விழுந்தது. கோர்ட்டுக்கு வெளியிலிருந்து அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் கோச் செல்வா. ரிலாக்ஸாக இருப்பது மாதிரி காட்டிக் கொண்டாலும் அவனுக்குள் ஒரு பூகம்பமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஸ்ரீலேகாவும் அவள் தோழி ஸ்வாதியும் அவனிடம் பாஸ்கெட் பால் கோச்சிங் எடுத்துக் கொள்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். அழகிய கல்லூரி மாணவிகள். ஸ்வாதியை செல்வாவுக்கு ரொம்ப பிடிக்கும். அமைதியானவள். தான் உண்டு தன் விளையாட்டு பயிற்சி உண்டு என்று இருப்பவள். பாஸ்கெட் பால் கோர்ட்டில் எந்த அளவுக்கு அவள் எதிரணியை அலற வைப்பாளோ அந்த அளவுக்கு படிப்பிலும் சூரப்புலி என்று கேள்விப்பட்டிருக்கிறான். அவளை ஏன் காதலிக்க கூடாது என்று சில வாரங்களாக அவனுக்குள் அலையடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை அவளிடம் சொல்லத் தயக்கம். ஒரு வார்த்தை ஏதாவது எக்ஸ்ட்ராவாக பேசினால்தானே காதலைச் சொல்ல நம்பிக்கையும் தைரியமும் வரும். அப்படியே வலுக்கட்டாயமாக சொல்லி வைத்து, அவள் 'சாரி சார். எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டால் ?'

ஸ்ரீலேகா அதற்கு நேர் எதிர். லொடலொடவென்று ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாள். எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ் அனுப்புவாள். பூனை குட்டி மாதிரி செல்வாவை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருப்பாள். உரிமையோடு முதுகில் குத்துவாள். மூக்கை கிள்ளுவாள். அவள் தன்னை காதலிக்கிறாளோ என்ற பயம் செல்வாவுக்கு இருக்கிறது. உன் மேல் எனக்கு காதல் இல்லை ஸ்வாதியிடம்தான் என்று மூஞ்சியில் அடித்த மாதிரி எப்படி அவளிடம் சொல்வது? அதுவும் தப்பாகப் போய், 'சார். நீங்கள் உங்கள் கோச் வேலையை மட்டும் பாருங்கள். வீணாக எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள்' என்று ஆரம்பித்து வேலைக்கே உலை வைத்துவிட்டால் ?

சே! ஒருத்தியிடம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இன்னொருத்தியிடம் இல்லை என்று சொல்ல வேண்டும். காதலை சொல்வதில் எவ்வளவு சிக்கல் ? யோசித்து யோசித்து கடைசியில் செல்வாவுக்கு ஒரு ஐடியா உதித்தது. பாஸ்கெட் பாலில் ஸ்ரீலேகாவை ஒரு போட்டிக்கு இழுக்க வேண்டும். அது கடினமாக இருக்க வேண்டும். தோற்கடித்து தன் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும்.

"செல்வா சார்! நான் ரெடி. போட்டியை ஆரம்பிக்கலாமா?"

"ஸ்ரீ. கவனமா கேளு. இந்த போஸ்டிலிருந்து எதிர் போஸ்ட் வரைக்கும் நடந்துகிட்டே பந்தை மேல் நோக்கி தட்டிக்கிட்டே வரனும். நிற்கவோ, பந்தை கையால பிடிச்சுக்கிட்டோ நடக்கவோ கூடாது. பத்து தப்படில மொத்த தூரத்தையும் கடக்கனும். தவிர, நான் ஏதாவது பேச்சு கொடுப்பேன். அதுக்கும் பதிலும் சொல்லனும். ஓகே?"

"ஓகே. நான் ஜெயிச்சா நான் என்ன சொல்வேனோ அதை நீங்கள் கேட்கனும்."

"ஓகே. அதே மாதிரி நான் ஜெயிச்சா...."

"அதற்கு சான்ஸே இல்லை. நான்தான் ஜெயிப்பேன்."

ஆனால் செல்வாவுக்கு நம்பிக்கை இருந்தது. நிச்சயம் தோற்றுவிடுவாள். ரெகுலர் ஸ்போர்ட்ஸ் டிரெஸில் வராமல் சுடிதாரில் வந்திருக்கிறாள். துப்பட்டா நிச்சயம் தொந்திரவு செய்யும்.

ஸ்ரீலேகா முதல் அடி எடுத்து வைத்தாள். "ஸ்ரீ. இன்று நீ ரொம்பவும் அழகாய் இருக்கிறாய்."

"என்ன கிண்டலா?" ஹீரோ ஸ்டைலில் பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கொண்டு குறுக்கிட்ட செல்வாவை சாமர்த்தியமாக கடந்து போனாள் ஸ்ரீலேகா.

செல்வா அடுத்த ஆயுதத்தை எடுத்தான்.

"ஆனால் உன் மூக்கு. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது."

"போட்டி முடியட்டும் சார். அதற்குள் உங்கள் மூக்கை இன்ஷூர் செஞ்சுடுங்க"

செல்வா சரமாரியாக கேள்விகளை அம்புகளாக வீசி வந்தாலும் ஸ்ரீ£லேகா அசரவில்லை. எட்டு தப்படி முடித்துவிட்டாள். இன்னும் இரண்டே தப்படிதான். செல்வாவுக்கு உலகமே காலுக்கடியில் சரிவது போல இருந்தது. தப்பு கணக்கு போட்டுவிட்டோமோ? வேறு வழியே இல்லை. எடு பிரமாஸ்திரத்தை. அதிரடியாக கேள்விகள் கேட்க வேண்டியதுதான். அதை கேட்டு அவள் கவனம் சிதற வேண்டும். அவள் தோற்க வேண்டும்.

"லுக். ஸ்ரீ. இது பர்சனல். உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அதில் நட்பு மட்டுமே இருக்கு. அதற்கு மேல் இல்லை...."

"அப்படியா? போட்டி முடியட்டுமே. அதை நான் தீர்மானித்துவிடுவேனே?"

சரியாக பத்து தப்படியில் முடித்துவிட்டாள். பந்து கீழே விழவேயில்லை. சே! என்ன முட்டாள்தனம் !

"ஸ்ரீ. நீ ஜெயிசுட்ட. ஓகே. ஆனால் நான் சொல்லறத கொஞ்சம் கேளு. வாழ்கையென்பது ஒரு போட்டியில் முடிவு செய்யக் கூடிய அற்பமான விஷயமில்லை. இரண்டு மனசு சம்பந்தப்பட்டது." தோல்வி பயத்தில் செல்வா உளறினான்.

"அதெப்படி? போட்டி வைச்சது நீங்கள். ஜெயிச்சது நான். என்ன சொல்லணும்கிறத நான்தான் தீர்மானிப்பேன்."

"சரி. சொல்லு."

செல்வா அவஸ்தையாக நெளிந்தான். ஸ்ரீ£லேகா வெற்றிக் களிப்பில் செல்வா அருகில் வந்தாள். கண்ணோடு கண் நோக்கினாள். சட்டென்று விலகி பெரிசாக ஓடி ஓடி சிரித்தாள்.

"ஸார். தப்பா நினைச்சுக்காதீங்க. இப்ப உங்க மூஞ்சி ப்யூஸ் ஆன பல்பு மாதிரி இருக்கு."

"ஸ்ரீ... ப்ளீஸ்"

"ஓகே. ஐயாம் சீரியஸ். செல்வா சார். நீங்க ஸ்வாதியை கல்யாணம் செஞ்சுப்பீங்களா? அவ உங்ககிட்ட சொல்லத் தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கா. நீங்க அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டா அவ மனசு உடைஞ்சு போயிடுவா. நீங்க போட்டின்ணு சொன்னதும் எனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக பட்டது. அவளுக்காகத்தான் இந்த போட்டிக்கே நான் ஒத்துக்கிட்டேன்."

"தாங்க்ஸ் ஸ்ரீ. ஐ ஆம் சாரி. உன்னை எப்படியாவது ஜெயிக்கனுங்கற வேகத்துல உன் மனசு நோகற மாதிரி பேசிட்டேன்."

"பரவாயில்லை சார். நீங்க உண்மைத்தானே சொன்னீங்க. சார் நட்பை தவிர நம்மிடையே இன்னொன்றும் இருக்கு. அது இந்த பாஸ்கெட் பால் விளையாட்டு. அதைதான் நான் மிகவும் விரும்புகிறேன். இந்தாருங்கள்." பந்தை செல்வா நோக்கி வீசிவிட்டு சிட்டாக பறந்தாள் ஸ்ரீலேகா. செல்வாவின் இதயத்தில் பட்டாம் பூச்சிகள் பறந்தன.

(தேவி - 27 பிப்ரவரி 2008)

Friday 1 February, 2008

சில ரகசியங்கள்


ஆனந்த விகடன் - 06 பிப்ரவரி 2008

மாலதி ஈமெயில் அனுப்பியிருந்தாள். 'உன் ரிடர்ன் டிக்கெட்டை உடனே கேன்செல் செய். வெள்ளி இரவு ஹாம்பர்கிலிருந்து லுப்தான்ஸாவில் நான் மும்பை வருகிறேன். நாம் இருவரும் சேர்ந்து திருப்பனந்தாள் போய் மாமாவை பார்க்கிறோம்' என்று எழுதியிருந்தாள்.

மாமா! திருப்பனந்தாள் சேது மாமா! நினைத்ததுமே இனிக்கும் அந்த வார்த்தைகள் என்னை கிறங்க அடித்து பின்னோக்கி இழுத்து சென்றன.

எங்கள் சின்ன வயசு விஷம காலங்களில் மாமாவைப் போல் இனிதான விஷயம் வேறு எதுவும் இருந்ததாக நினைவில்லை. என் அப்பாவுக்கு உகான்டா இந்திய தூதரகத்தில் வேலை என்பதால் நாங்கள் எங்கள் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தோம். செங்கல்பட்டில் வேலை பார்த்துக் கொண்டு சனி ஞாயிறுகளில் வந்து போகும் சேதுதான் எங்கள் உற்ற நண்பன். அதனால்தான் என்னவோ எங்களுக்கு சேதுவுக்கு மாமா என்ற ச·பிக்ஸ் கூட தேவையில்லாத வார்த்தையாக இருந்தது. வெள்ளிக்கிழமை நெருங்க நெருங்க எங்கள் பேச்சு சேதுவை பற்றியே இருக்கும். அதே மாதிரி ஞாயிறு இரவு பழி சோகம் அப்பிக்கொள்ளும். வெள்ளிக்கிழமை வரை எங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உள்ளூர் தோழர் தோழிகளை சனி ஞாயிறுகளில் டூ விட்டு விடுவோம்.

ஒவ்வொரு முறையும் இந்த தடவை சேது வரும் வரை எப்படியாவது முழித்துக் கொண்டிருப்பது என்று நாங்கள் தீர்மானம் செய்வோம். ஆனால் அது நடக்காது. எட்டரை மணி ஆனதும் என் தலையாட்டம் ஆரம்பித்துவிடும். மாலு அடிக்கடி மூஞ்சி அலம்பி விட்டு என்னை கவலையாக பார்ப்பாள். தாத்தாவின் ரயில் வண்டி புகை மாதிரியான தொடர் திட்டுகள் ஆரம்பித்து விடும். 'போடு லெட்டரை. உகான்டாவுக்கு அனுப்பு இந்த வானரங்களை. கல்யாணம் பண்ணி விட்டாச்சு. கடமை முடிஞ்சுது. எனக்கெதுக்கு இந்த தலைவலி ?' என்று ஆரம்பித்துவிடுவார். மாலு விறுக் விறுக்கென்று என்னையும் இழுத்துக் கொண்டு தேரடி பஸ் ஸ்டாப் வரை நான்கைந்து முறை போய் வருவாள். 'எனக்கு தூக்கம் வர்றதுடி' என்று நான் நச்சரிக்க ஆரம்பிப்பேன். தூரத்தில் தெரியும் ஒவ்வொரு இரட்டை வெளிச்ச புள்ளிகளையும் காண்பித்து அதுதான் சேது வரும் பஸ் என்பாள். ஆனால் அது அதுவாக இருக்காது. கடைசியில் வெறுத்துப்போய் என் பிடுங்கல் தாங்காமல் வீட்டுக்கு வந்துவிடுவோம். இத்தனைக்கும் பத்து மணிகூட ஆகியிருக்காது.

சொல்லி வைத்த மாதிரி ஒவ்வொரு தடவையும் எங்கள் தலை சாய்ந்த பிறகே மாமா வருவாராம். 'பேய் மாதிரி ராத்திரி பதினோரு மணிக்கு என்னடா சாப்பாடு? செங்கல்பட்டுலேயே சாப்புட்டு வரக் கூடாது. இதே வழக்கமா போச்சு. அதுகள் அஞ்சு நாள் அடிக்கற லூட்டிய தாங்கமுடிலைன்னா, இவனும் அதுகளோட சேர்ந்துக்கிட்டு...' என்ற தாத்தாவின் கீறல் விழுந்த பிளேட்டை எங்களை மாதிரியே மாமாவும் சட்டை செய்யமாட்டாராம். விடிகாலையில் அரைதூக்கத்தில் நான் காலை தூக்கி போடவும் அதில் மாமாவின் ஸ்பரிஸம் புரியும். 'சேது' என்று விழி அகல ஆச்சர்யப்பட்டு மாமாவை கட்டிக் கொள்வேன். அந்த சந்தோஷத்திலேயே ஒரு பத்து நிமிஷம் குட்டித் தூக்கம் போடுவேன். ஒவ்வொரு முறையும் நாங்கள் 'சேது' என்று உரக்க சப்தமிட்டு கூப்பிட 'அவன் முழங்கால் அளவு கூட இல்லை, என்னவோ இதுக பேரு வச்சமாதிரி சேதுன்னு கூப்பிடதுக. டேய்! மாமான்னு சொல்லணும் புரிஞ்சுதா' என்று பாட்டி எவ்வளவோ சொல்லியும் நாங்கள் கேட்டதே இல்லை. அஞ்சரை அடி ஒல்லிபிச்சான் சேது எங்களோடு பழகும் போது மூன்றடி சிறுவனாகி போய்விடுவார்.

வார நாட்களில் வீட்டுக் கொல்லையிலேயே பல் தேய்ப்பது, குளிப்பது என்றால் சனி ஞாயிறுகளில் எங்களுக்கு எல்லாம் மண்ணியாற்றில்தான். மாமா ஒரு துண்டை எடுத்து முண்டாசு கட்டிக் கொள்வார். இடுப்பு வேட்டியில் பிரஷ், பேஸ்ட், சோப்பு டப்பா வகையறாக்களை முடிந்து கொண்டு எனக்கும் ஒரு சின்ன முண்டாசு கட்டி விடுவார். 'சேது. சங்கரை அழைச்சிகிட்டு போ. மாலு வேண்டாமே' என்று பாட்டி சொல்லிக் கொண்டே இருப்பாள். 'போ பாட்டி. முடியாது. நானும் போவேன்' என்று மாலு எங்களுக்கு முன்னால் கிளம்பிவிடுவாள். தெரு தாண்டும் வரைதான் அமரிக்கையாக வருவாள். செல்லியம்மன் கோயில் வந்ததும் அவளும் ஆம்பிளை காமாட்சி ஆகிவிடுவாள். கலியமூர்த்தி கடையில் இரண்டு வாடகை சைக்கிள் எடுத்துக் கொள்வோம். மாமா என்னை டபுள்ஸ் ஏற்றிக் கொள்ள மாலு இன்னொரு சைக்கிளில் வருவாள்.

மண்ணியாற்றில் ஒரு மூலையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். அரையடி ஆழ தண்ணீரில் எதிர்பக்கமாக தடதடவென ஓடி பொத்தென்று விழுவோம். கண்கள் சிவந்து போகும் வரை கைகால்கள் பரப்பி மல்லாந்து படுத்துக் கொண்டு தண்ணீரில் ஊறிக் கொண்டிருப்போம். குளித்து கரையேறியதும் கரையோரம் வந்து இடுக்குகளில் ஒளிந்திருக்கும் தண்ணீர் பாம்புகளை சீண்டுவோம். மாமா பாம்பின் தலை எந்த பக்கம் இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு வால் பக்கம் குத்துவார். பாம்பு சீற்றத்தோடு வெளியே வரவும் கவட்டை மாதிரி இருக்கும் குச்சியால் தலையை அமுக்கிவிடுவார். சரண்டர் ஆன பாம்பின் வால் சரசரவென வெளியே வரும். நிதானமாக வாலை பிடித்து தீபாவளி பட்டாசில் சாட்டையை பிடிப்பது மாதிரி தூக்கிப் பிடிப்பார். அது ஸ்ப்ரிங் ஆக்ஷனில் சுழன்று சுழன்று வாயை பிளக்கும். நான் பயந்து ஓடுவேன். ஆனால் திரிதண்டி மாலு கொஞ்சமும் பதட்டப்படாமல் மாமாவின் தைரியத்தில் கொஞ்ச நேரம் பிடித்துக் கொண்டு என் பக்கம் ஆட்டுவாள். மாமா ஒரு வீர விளையாட்டுக்காக பாம்பை பிடிப்பாரே தவிர அதை கொல்ல மாட்டார். மறுபடியும் தண்ணீரில் வீசி எறிந்து விடுவார். அது தண்ணீரில் எஸ் போட்டுக் கொண்டே போவது வேடிக்கையாக இருக்கும்.

ஆற்றங்கரைக்கு பக்கத்திலேயே நிறைய மாந்தோப்புகள் உண்டு. மாமாவும் மாலுவும் வேலியை பிரித்து தோட்டக்காரனுக்கு தெரியாமல் மரத்தில் ஏறுவார்கள். வடு மாங்காய்களை பறித்து ஆற்றில் வீசி எறிவார்கள். என் வேலை அதை பொறுக்கி வைத்துக் கொள்வதுதான். இத்தனைக்கும் அந்த தோட்டத்தின் முதலாளி மாமாவுக்கு தெரிந்தவர்தான். என்ன இருந்தாலும் திருட்டு மாங்காயின் ருசியே தனிதான்.

மாமாவுக்கு இயல், இசை நாடகம் எல்லாமே அத்துபடி. எல்லாவற்றிலும் நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாக இருப்பதுதான் ஸ்பெஷாலிடி. மாமாவுக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. லேடஸ்ட் சினிமா பாடல்களை சுருதி சுத்தமாக பாடி காட்டுவார். வேடிக்கைக்கு சோகப் பாடல்களை டப்பாங்குத்து மெட்டில் பாடி எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். சினிமா கதை சொன்னால் முதல் எழுத்து போடுவதில் ஆரம்பித்து சீன் பை சீனாக பிஜிஎம்மோடு சொல்வார். நம்பியார் அப்படி திரும்பி பார்ப்பார், 'டண்ட்ர டைன்' என்று ம்யூசிக் எ·பக்டோடு சொல்லும் போது நாங்கள் நம்பியாரையே நேரில் பார்ப்போம். பைட் சீன் சினிமாவில் பத்து நிமிடங்கள் வந்தால் மாமா குறைந்த பட்சம் அதை மூன்று நிமிடங்களுக்கு குறையாமல் 'எம்.ஜி.ஆர். இப்படி கையை மடக்கி குத்து விட்டார். ஜெஸ்டின் அப்படி உருண்டு விழுந்தான்' என்று விளக்கிச் சொல்வார். அவர் சொல்ல சொல்ல என் கை மற்றும் முக பாவனைகள் அதற்கு ஏற்ற மாதிரி போகும். மாலுவும் நானும் சண்டை போட்டுக் கொள்ளும் போது கூட அந்த உத்திகள் வெளிப்படும். அதே மாதிரி மாமா தான் அமர்சித்ரகதாவில் படித்த டூப்டூப் முதலை, சமடாகா நரி, காலியா காக்கை பற்றிய கதைகள் சொல்லும் போது முகத்தில் ஏக சேஷ்டைகள் செய்து சொல்வார்.


திருப்பனந்தாளில் பச்சை காளி பவழ காளி திருவிழா நடக்கும். பச்சையிலும் சிவப்பிலும் பெரிது பெரிதாக முகமூடிகளை கட்டிக் கொண்டு நடு ரோட்டில் நடனம் ஆடிக் கொண்டு காளிகள் வரும். அந்த வாரம் எங்களுக்கு மாமா பச்சை காளி பழவ காளி டான்ஸ் ஆடி காட்டுவார். அதற்கும் வாயாலேயே 'டன்டனக்கா, டன்டனக்கா' என்று ம்யூசிக் போட்டுக் கொள்வார். அப்போதெல்லாம் சினிமாவில் ட்விஸ்ட் நடனம் ரொம்பவும் பாபுலர். ஒரு முறை மாலு அது மாதிரி எப்படி ஆடுவது என்று கேட்டு வைக்க, மாமா எளிதாக கற்றுக் கொடுத்தார். 'ரொம்ப சிம்பிள். மாலு. தையல் மிஷினில் டைலர் துணியை தள்ளுவது பார்த்திருக்கிறாயா? அதே மாதிரிதான் இதுவும்' என்று சொல்லி அதே மாதிரி செய்து காட்டுவார். இதை நான் என் ஸ்கூலில் அபிநயம் செய்து ஹெட்மாஸ்டரிடம் பேர் வாங்கினேன்.

மாமா சீட்டுக் கட்டில் பல பிரமிக்கதக்க விளையாட்டுக்கள் செய்வார். அதில் சில விளையாட்டின் சூட்சுமங்களை சொல்லியிருக்கிறார். அது தெரிந்ததும் சே! இவ்வளவுதானா என்று தோன்றும். சிலவற்றுக்கு எவ்வளவு கெஞ்சியும் சொல்ல மாட்டார். 'வேண்டாம் சங்கர். சில ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும். அப்பத்தான் அதுக்கு மதிப்பு' என்பார். அதில் முக்கியமான விளையாட்டு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சீட்டுக் கட்டிலிருந்து பத்து கார்டுகளை எடுத்து தான் பார்த்துவிட்டு பத்து பேர்களிடம் கொடுப்பார். பத்து பேர்களும் அவர் சொன்ன இடத்தில் நிற்க வேண்டும். தங்கள் கார்டை இன்னொருவரிடம் எத்தனை முறை வேண்டுமானலும் யாரிடமும் மாற்றிக் கொள்ளலாம். பத்து பதினைந்து பரிவர்தனைகளுக்கு பிறகு மாமா யாரிடம் என்ன கார்டு இப்போது இருக்கிறது என்று சரியாக சொல்வார். அது எப்படி சாத்தியம் என்று இன்று வரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 'ரொம்ப சிம்பிள் சங்கர். என்னென்னு தெரிஞ்சா ஒண்ணுமேயில்லை' என்பார்.

மாலு பெரியவள் ஆனதும் தாத்தாவின் நச்சரிப்பு அதிகமானது. அந்த சமயத்தில் அப்பாவுக்கும் இங்கிலாந்துக்கு டிராண்ஸ்பர் ஆனது. எங்கோ ஒரு பலவீனமான சந்தர்பத்தில் பாட்டி ஏதோ யாரிடமோ சொல்லப்போக அதற்கு கைகால் முளைத்து வேறு விதமாக என் அப்பாவுக்கு போய் சேர்ந்தது. அதன் பலன் ஒரே வாரத்தில் நாங்கள் திருப்பனந்தாளிலிருந்து பிடுங்க்கப்பட்டு லண்டனில் நடப்பட்டோம். மாலு சமாளித்துக் கொண்டாள். நான்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பெரியவர்கள் போட்ட யுத்த சத்தத்தில் எங்கள் மாமா கோவில் குளத்தில் கரைத்த வெல்லம் மாதிரி காணாமல் போனார். மாலு கல்யாணம் ஆகி ஹாம்பர்க் போனாள். நான் படிப்பை முடித்ததும் நாரதர் மாதிரி திரிலோக சஞ்சாரி ஆகி தற்போது சிட்னியில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். இப்போது மாலுவுக்காக காத்திருக்கிறேன்.

சொல்லி வைத்த மாதிரி மாலு வெள்ளி இரவு வந்தாள். படபடவென திருப்பனந்தாள் போக எல்லா ஏற்பாடுகளும் செய்தாள். சென்னை போய் டூரிஸ்ட் டாக்சியில் அமர்ந்து தாம்பரம் தாண்டியதும் மாமாவை பற்றிய அதிர்ச்சியான விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள். என்னால் நம்பவே முடியவில்லை.

"ஏன் மாலு. மாமா கல்யாணமே பண்ணிக்கலை. மாமாவுக்கு இப்ப 60 வயசு இருக்குமா?"

"இருக்கும். சிரிக்க சிரிக்க பேசறவங்க பின்னாடி ஒரு சோகம் இருக்கும்னு சொல்வாங்க இல்லையா? அது மாமாவுக்கும் ஒட்டிக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். மாமாவுக்கு குழந்தை மாதிரி வெள்ளை மனசுடா. வெள்ளந்தியா எல்லாகிட்டையும் பழகுவாரு. அதுவே அவருக்கு பல சமயங்கள்ல பலவீனமா போயிருக்கு. ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா காதலிச்சாராம். அது அவரை ஏமாத்தின அதிர்ச்சியை அவரால தாங்க முடியலையாம். ஒரு வழியா சமாளிச்சு எழுந்து நின்னவரை பிசினெஸ் பண்ணலாம் வான்னு சொல்லி அவரோட ஒரு சில நண்பர்களே அவரை கவுத்துட்டாங்களாம். இதெல்லாம் நடந்து இருபது வருஷத்துக்கும் மேல ஆயிருக்குது. திடீர்னு ஒரு நாள் மாமா ஊர விட்டு ஓடி போய் எங்கேயோ கண்கணாத இடத்தில இருந்தாராம். போன வருஷம்தான் ஏதோ கொஞ்ச காசு பணம் சேர்த்துக்கிட்டு ஊருக்கு திரும்பி வந்திருக்கிறாராம். சொல்லிக்கிற மாதிரி இல்லையாம். ஒரு வாடகை வீட்டிலே இருக்காராம். இதெல்லாம் நம்ப அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சிருக்குடா. நம்ம கிட்டே சொல்லவே இல்லை. எனக்கு போன வாரம்தான் தெரிஞ்சுது. ஆடி போய்டேன்டா."

மாலு அழ ஆரம்பித்தாள். டிரைவர் திரும்பி பார்க்கவும் கொஞ்சம் நாசூக்காக குறைத்துக் கொண்டாள். ஒரு தலைகாணியை எடுத்து வயிற்றில் கட்டிக் கொண்டு, பொட்டலம் கட்டுவது போல பேப்பரை கூம்பு மாதிரி சுருட்டி தலையில் குல்லாவாக வைத்துக் கொண்டு, 'ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி, சிரிக்கும் பச்சைகிளி' என்று ப·பூன் மாதிரி ஆட்டம் ஆடின சேதுதான் மனதில் வந்து போனார். அவருக்கு இப்படி ஒரு நிலைமையா?

திருப்பனந்தாள் வந்ததும் மாமாவை இதுதான் அந்த சேது என்று அடையாளம் காண வெகு நேரம் ஆயிற்று. அதை வீடு என்று கூட சொல்ல முடியாது. பத்துக்கு பத்து ஒரு ஷெட் என்றுதான் சொல்ல வேண்டும். சுத்தமாக ஓட்டையாண்டி. எங்களுக்கு டீ வாங்கிக் குடுக்க காசுக்கு தடுமாறினார். கூடு விழுந்த கண்கள். அழுக்கான தாடி. இரும ஆரம்பித்தால் சங்கிலியாக ஐந்து நிமிடங்களுக்கு குறைவில்லாமல் இருமினார். கைகள் நடுங்கின.

எங்களை பார்த்ததும் கூட்டம் கூடி விட்டது. எல்லோரும் கோரஸாக 'நீங்கள் கூட்டிக் கொண்டு போய்விடுங்கள்' என்று சொன்னார்கள். மாமா ரொம்பவும் முரண்டு பிடித்தார்.

அதிர்ச்சியில் உறைந்து போய் பேச்சற்று போன நான் ஏதோ ஒரு வேகத்தில் மாமாவை தரதரவென காரை நோக்கி இழுத்து வந்தேன். பின் கதவை திறந்து நின்ற டிரைவர் கூட அசூயையாக பார்த்தான். மாமாவை உள்ளே தள்ளி 'வண்டியை எடு' என்று சத்தம் போட்டேன். அடுத்த சில நிமிடங்களில் மாலு அங்கு உள்ள எல்லா கணக்குகளையும் செட்டில் செய்தாள்.

வண்டி அணைக்கரையை தாண்டும் வரை நாங்கள் இருவரும் பேச்சற்று இருந்தோம். பிறகு எனக்குதான் பேச தைரியம் வந்தது. "என்ன ஆச்சு மாமா? ஏன் இப்படி? எங்ககிட்ட சொல்லியிருக்கலாம் இல்லையா ? "

மாமா கண்ணை மூடிக் கொண்டார். "சங்கர், சில விஷயங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டுமே. விட்டுடேன்" மாமாவின் மூடிய கண்களிலிருந்து நீர் கோடாக இறங்கிக் கொண்டிருந்தது.