Monday 20 December, 2010

தேவை ஒரு சர்ஜரி


தேவை ஒரு சர்ஜரி
ஷைலஜா பேருந்தைவிட்டு இறங்கியதுமே அவனை கவனித்துவிட்டாள். புத்தம் புதிய மோட்டார் சைக்கிளின் மீது ஸ்டைலாக சரிந்து கொண்டு ஒரு ஹீரோ லுக் விட்டான்.

பொறுக்கி ராஸ்கல். தினமும் இவனுக்கு இந்த வேலை. நெருங்கிப் போய் நாலு அறை விடலாமா என்று தோன்றியது. அடிக்கப் போய், அது சினிமாத்தனமாக ஆகி..... வேண்டாம்.

அவனை தாண்டிச் செல்ல, முரட்டு பர்ஃயூம் நெடி அவனிடமிருந்து அலையடிப்பது மாதிரி வந்தது. அரைக் கண் பார்வையில் அவன் விரலசைத்து, 'ஹாய்' என்று இளிப்பது தெரிந்தது. பிறகு, அவன் தன் வழக்கமான வேலையை ஆரம்பித்தான். சற்று இடைவெளி விட்டு தன் பைக்கில் பின் தொடர்ந்தான்.

நடையை கூட்டினாள். பின்னால் திரும்பிப் பார்க்கவும் கஷ்டமாக இருந்தது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது? குழப்பமான எண்ணங்கள் அவள் மண்டைக்குள் முறுக்கிக் கொண்டிருந்தன.

ஒரு ஸ்கூடி அவள் அருகில் வந்து நின்றது. நீரஜா! அப்பாடி! பாய்ந்து அதன் பின்னால் ஏறிக் கொண்டாள்.

"தாங்க்ஸ்டி. சரியான சமயத்திலே வந்து காப்பாத்தினே"

"என்னாச்சு ஷைல்? ஏதாவது பிரச்சனையா?"

"நீ கொஞ்ச தூரம் போயேன். நானே சொல்றேன்."

சிக்னலை தாண்டி நீரஜா ஸ்கூட்டியை ஓரம் கட்டினாள். ஸ்விட்ச் போட்ட மாதிரி ஷைலஜா அழத் தொடங்கினாள். "ஷைல்! இது பொது இடம். எமோஷனல் ஆகாதே. விஷயத்தைச் சொல்லு"

ஷைலஜா ஒரு சில கேவல்களோடு எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். "இப்ப நான் என்ன செய்யணும், நீரஜ்? என் அப்பாகிட்டே சொல்லிடட்டுமா? ஆனா, அவர் இந்த பிரச்சனையை விட்டுட்டு என்னை ஆயிரம் கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாரு"

நீரஜா கொஞ்சம் யோசித்தாள். பிறகு சொன்னாள். "ஷைல், கவலைப்படாதே. நாளைக்கு உன்னோட பஸ்ல வரேன். நீ அவனைக் காட்டு. நான் அவனை டைரக்டா டீல் செய்யறேன்."

மறுநாள் அவன் வழக்கம்போல் பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான். நீரஜாவை அவன் கண்டு கொள்ளவேயில்லை. "ஹாய் ஷைல்! உன்னோட பத்தே செகன்டுகள் பேச அனுமதி கிடைக்குமா?"

மிக அமைதியாக வந்து கொண்டிருந்த நீரஜா, திடீரென அவன் இடது கையை பிடித்து முதுகு பக்கம் முறுக்கினாள். கோழிக் குஞ்சு மாதிரி அவள் முன்னால் சரிந்தவனின் கழுத்தை ஒரு பதம் பார்த்தாள். அடுத்து அவள் கால் முட்டியை அவன் தொடையிடுக்கில் பிரயோகிக்க, கலைந்த சீட்டு கட்டு மாதிரி விழுந்தான். விழுந்த வேகத்தில், சுதாரித்து எழுந்து, அடிபட்ட தவளை மாதிரி தத்திக் கொண்டே ஓட்டமெடுத்தான்.

நீரஜா தூசு தட்டுவது மாதிரி தன் உள்ளங்கைகளை தட்டிக் கொண்டாள். "இனிமே அவன்கிட்டேயிருந்து பேச்சோ, பார்வையோ இருக்காது. இனிமே அமைதியோ அமைதி."

"என்னடி, இப்படி செஞ்சுட்ட? நாம போய் அடிதடில இறங்கறது....?"
"ஷைல், எல்லாத்தையும் பொறுத்துக்கணும்னு இருந்திட்டா அது ஏமாளித்தனத்துல முடிஞ்சிடும். ஒரு சில சமயத்தில அமைதி வரணும்னா, நாம ஆயுதங்களை பிரயோகிச்சே ஆகணும், டாக்டர்கள் சர்ஜரி செய்யற மாதிரி. இப்ப நான் இவனுக்கு ட்ரிட்மென்ட் கொடுத்திருக்கேன். மறுபடிம் தேவைப்பட்டா, இதைவிட இன்னும் பெருசா ஒரு சர்ஜரி செஞ்சுடலாம்."
"ரொம்ப தாங்க்ஸ்டி." வெகு நாட்கள் கழித்து ஷைலஜா புன்னகை பூத்தாள்.
(தினமலர் - பெண்கள் மலர் - 27 நவம்பர் 2010)

Sunday 12 December, 2010

கொல்வதற்கு வருகிறேன்


முப்பது டிகிரி கோணத்தில் திறந்திருந்த அந்தக் கதவு எனக்கு போதுமானதாக
இருந்தது. ஆனால் ஒரு சின்ன தப்பு நடந்து விட்டது. 'க்ளக்' என்ற ஓசையுடன்
கதவு சாத்திக் கொண்டது!! குளிரூட்டப் பட்ட மிகப் பெரிய அறை. சிறிய ஓசை
கூட மிகத் துல்லியமாக உள்ளே கேட்டது. முக்கியமாக அஜய் சிங்குக்கு!

நான் யாரைக் கொல்ல வேண்டும் என்று வந்திருக்கிறேனோ, அவனுக்குக் கேட்டு
விட்டது! மிக அருகிலேயே, அரை இருட்டில், நெளியும் பாம்பு மாதிரியான
இரானியத் தட்டிகள் இருந்தன. அதன் பின்னால் போய், அதன் இடுக்குகள் வழியாக
அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

லார்ஜில் சரி பாதியை உள்ளே தள்ளியிருந்த அஜய் சிங் எழுந்ததில்
தள்ளாடினான். திரண்டிருந்த தன் தொந்திக்குக் கீழே கவ்வியிருந்த பைஜாமாவை
மேலே தூக்கி விட்டுக் கொண்டான். 'முட்டாளே! காற்றடித்து கூட கதவு
சாத்திக் கொள்ளலாம். அப்படி யோசியேன்?'. இல்லை! இல்லை! அவனுடைய பார்வை
'யாரோ உள்ளே நுழைந்திருக்கிறார்கள்' என்பதாகச் சொன்னது.

அவன் நேராக நான் இருக்கும் இடத்திற்கு வந்தான். அடடா! எல்லாம் தப்பாகவே
போகிறதே!!

வந்தவன், ஐந்தடி தூரத்திலேயே நின்று கொண்டான். நல்ல வேளை!! முகம்
சுருக்கி அவன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

"கோன் ஹை தும்? சாம்னே ஆஜாவ். நஹி தோ....." (டேய்! யார் நீ? நீயா வரயா...
இல்லே...).

கையில் ஒரு பிஸ்டல் துருத்திக் கொண்டிருந்தது. காக்காய் மாதிரி தலையை
அங்கும் இங்கும் திருப்பிக் கொண்டு ஏதாவது அசைவுகள் தென்படுகிறதா என்று
ஆராய்ந்து கொண்டிருந்தான்.

திரைச்சீலைகள் கொஞ்சமாக அலையடிப்பது மாதிரி அசைந்தன. அதற்கு நான்
காரணமில்லை. மீண்டும் ஒரு காட்டுக் கத்தல் கத்தினான். அவன்
புர்புர்ரென்று மூச்சுவிடுவது எனக்கு நன்றாகக் கேட்டது. எனக்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது. 'உன்னை சட்டென கொல்ல இஷ்டமில்லையடா. சாவு பயத்தை
உன்னுடைய ஒவ்வொரு செல்லும் உணர வேண்டும். அனுபவி. நன்றாக அனுபவி.'

சுட்டு விட்டான்!!

திரைச்சீலைகளை கிழித்துக் கொண்டு, பைபர் கிளாஸ் ஷட்டரை துளைத்துக் கொண்டு
சென்றது புல்லட். பிறகு எல்லாமே கோமாளித்தனம்! சுட்டுக் கொண்டே
இருந்தான். ஈரானிய தட்டியை உரசிக் கொண்டு போனது ஒரு புல்லட்.

சரமாரியான புல்லட்டுகளின் சத்தம் கேட்டு, தடதடவென நாலைந்து தடியர்கள்
ஓடிவந்தார்கள்.

"க்யா சாப்?" (என்ன ஆயிற்று ஐயா?) இனி அவர்கள் ஹிந்தியில் பேசுவதை தமிழ்
படுத்திச் சொல்கிறேன்.

"அவன்... அவன் வந்திருக்கான்னு நெனைக்கிறேன்."

"அவன்னா?"

"அதான்.. கோவிந்த் தவே. என்னைக் கொல்ல வந்திருக்கான். அந்த கர்ட்டனுக்கு
பின்னாடி மறைஞ்சிருக்கான். க்விக். அவனை பிடியுங்க."

"கவலையே படாதீங்க. நீங்க கீழே பாதுகாப்பா போங்க. நாங்க அவனை உயிரோடோ
அல்லது பொணமாவோ கொண்டுவரோம்."

நானாவது உங்களிடம் மாட்டிக் கொள்வதாவது. கிடைத்த ஒரு சில வினாடிகளில்,
சிறிதளவே திறந்திருந்த ஷட்டர் வழியாக வெளியேறினேன். வெளிச்சம் இல்லாத
ஸ்ப்ளிட் ஏசியின் அவுட்டர் பின்னால் மறைந்து கொண்டேன்.

எலி பிடிப்பவர்கள் மாதிரி முன்னால் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நான்
இல்லாத இடத்தில் அந்த தடியர்கள் தேடிக் கொண்டிருக்க, நான் அஜய் சிங்கின்
அடுத்தடுத்த இயங்கங்களை கவனிக்கலானேன். 'போடா! போ! எங்கு வேண்டுமானாலும்
போ! யாரை வேண்டுமானாலும் கூட்டிக் கொண்டு வா! இன்று நான் உன்னைக் கொல்வது
நிச்சயம்.'

அவனை நான் ஏன் கொல்ல வேண்டும்? அதற்கு, இந்த மூன்று பத்திரிக்கை
செய்திகளை நீங்கள் படிக்க வேண்டியது மிக அவசியம். இந்தக் கதையின் பின்
புலத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த இளம் அரசு அதிகாரி
கொலை!!!

ராஞ்சி. ஜனவரி 4. நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் முகுந்த்
தவே என்ற 27 வயது இளம் அரசு அதிகாரி உருட்டு கட்டைகளால் அடித்துக்
கொல்லப்பட்டார். ஐ.ஐ.டி. கான்பூர், பி.டெக் பட்டதாரியான இவர், தங்க
நாற்கர தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்த
முயற்சித்ததால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது.

விசில் ஊதினால் கொலை!
முகுந்த் தவே கொலையின் அதிர்ச்சிகர பின்னனி!!

ராஞ்சி. பிப்ரவரி 28. ஊழல்வாதிகளின் கைக்கூலிகளால் கொல்லப்பட்ட முகுந்த்
தவே, தன் மீது உள்ள அச்சுறுத்தலை தகுந்த ஆதாரங்களுடன் தனது உயர்
அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார். கடைசி முயற்சியாக, டெல்லியின்
உட்ச பட்ச அரசியல் மையத்துக்கு ரகசிய கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கு
'விசில் ஊதுதல்' என்று பெயர். யாரிடம் பாதுகாப்பை எதிரிபார்த்தாரோ,
அவர்களே ஊழல்வாதிகளுக்கு துணை போயிருக்கிறார்கள். முகுந்த் தவே கொடுத்த
ரகசிய ஆவணங்கள் சிதைக்கப்பட்டு, அவரும் கொலையாகியிருக்கிறார்.

அண்ணனை கொன்றவர்களை நான் கொல்லுவேன்!
கோவிந்த் தவே பரபரப்பு பேட்டி!!

ராஞ்சி. மார்ச் 15. முகுந்த் தவே கொலை வழக்கில் நாளுக்கு நாள் பரபரப்பு
கூடி வருகிறது. ஐ.ஐ.டி. மாணவர்கள் ஒன்று சேர்ந்து அதிகார, பண பலத்துக்கு
எதிராக தொடங்கிய போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதற்கு நடுவில், நக்ஸல்
தீவிரவாதியான கோவிந்த் தவே (முகுந்த் தவேயின் தம்பி), இந்த வழக்கில்
சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கொல்வேன் என்று
சூளுரைத்திருப்பதாக தெரிகிறது.

அஜய் சிங் புல் வெளியில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருப்பது
தெரிந்தது. அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். எனக்கு
புரிந்துவிட்டது. அஜய் சிங் இங்கிருந்து தப்பிக்கப் போகிறான்.

ஒரு ஜீப் நிறைய போலீஸ் காண்ஸ்டபிள்கள் வந்திறங்கினார்கள். முழங்கையைத்
தாண்டி நீளும் டார்ச்சை அடித்து ஒவ்வொரு இஞ்ச் இஞ்சாக தேடினார்கள். ஓளிக்
கம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தன. மீண்டும்
இடம் மாற வேண்டியதுதானா?

"மேவலால்! அந்த ஸ்பிளிட் ஏ.சி. அவுட்டர் பின்னால செக் பண்ணு" ஒரு
இன்ஸ்பெக்டர் கத்தினார்.

"ஜீ சாப்."

அந்த கான்ஸ்டபிள் ஒளிக்கம்பத்தை என்னை நோக்கி திருப்புவதற்குள் ஒரு
அதிசயம் நடந்தது. எங்கோ ஒரு மூலையில் சலசலப்பு கேட்க அனைவரும் ஓடினர்.

எனக்கு மிக சௌகர்யமாகப் போனது. யாருமே இல்லை! நிதானமாக கீழே வந்து அஜய்
சிங்குக்காக நிறுத்தியிருந்த காரின் டிக்கியில் ஒளிந்து கொண்டேன்.

நெற்றியில் கட்டைவிரலால் தீற்றிய செந்தூரத்துடன் அஜய் சிங் வந்தான்.
கடவுள் படங்கள் பலவற்றை பிரார்த்தித்துக் கொண்டு காரை கிளப்பினான்.
'மவனே. உனக்கு யாரும் உதவப் போவதில்லை. நீ தொலைந்தாய். வா! நீயே வந்து
வலிய மாட்டிக் கொள்கிறாய்!'

"காரை தரோவா செக் செஞ்சுட்டீங்களா?" அஜய் சிங் காரை உருட்டிக் கொண்டே
கேட்டான்.

"ஜீ சாப்." ஒரு கான்ஸ்டபிள் மரியாதைக்கு பின் சீட்டில் எட்டிப்
பார்த்தான். 'முட்டாள்களே! நான் டிக்கியில் அல்லவா இருக்கிறேன்.'

கார் சீறிக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பாய்ந்து, ஒரு நீண்ட
நெடுஞ்சாலையில் பயணிக்கத் தொடங்கியது. 'நீ எங்கு வேண்டுமானாலும் போ!
உன்னை அங்கு கொல்வேன்'.

எனக்கு உடனே லக் அடித்தது. ஆள் அரவமற்ற சாலையில் போய் கொண்டிருக்கும்
போது திடீரென கார் நின்றது. கிளம்ப சண்டித்தனம் செய்தது. அஜய் பானட்டை
திறந்து குடாய்ந்து கொண்டிருந்தபோது, நான் மெதுவாக டிக்கியிலிருந்து
வந்து பின் சீட்டில் ஒளிந்து கொண்டேன்.

அரை மணி நேர போராட்டங்களுக்கு பிறகு கார் உறுமியது. மீண்டும் கார் பயணம்.
அஜய் சிங் சுத்தமாக நொறுங்கிப் போயிருந்தான். உச்சபட்ச ஏ.சியிலும்
அவனுக்கு வியர்த்தது. நான் பின் சீட்டில் கவலையின்றி பயணித்துக்
கொண்டிருந்தேன். ஏதேச்சையாக பின் சீட்டில் திரும்பிப் பார்த்தவன்,
மிரண்டு போனான்.

"நீ! நீ! நீயா?"

அவன் கைகள் ஸ்டியரிங்கிலிருந்து தடுமாறின. கால்களை கன்னாபின்னாவென
உதைத்தான். அவன் கண்கள் கலவரத்தில் பிதுங்கி வெளியே வந்துவிடுவது மாதிரி
இருந்தன. அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறியது. இரண்டு
கைகளையும் விட்டுவிட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். 'ப்ளக்'கென அவன்
வாயில் நுரை எட்டிப்பார்த்தது. கைகள் ஒரு பக்கமாக 'விலுக், விலுக்'கென
இழுத்துக் கொண்டன. கார் ரோட்டை விட்டு விலகி, ஒரு மைல் கல் மீது மோதி,
கரப்பான் பூச்சி மாதிரி தலை கீழாய் கவிழ்ந்து ஐம்பது அடிக்கு குறையாமல்
தரையை சிராய்த்துக் கொண்டு போனது. தீப்பொறிகள் சிதறின.

கழுத்து திரும்பிய நிலையில் அவன் தன் கடைசி மூச்சை விட காத்திருந்தான்.
நான் உரக்க சப்தமிட்டேன். அவன் அதை கேட்டானா தெரியவில்லை. "நான்தான்டா.
என்னை துடிக்க துடிக்க ஆள் வைத்து கொன்றாயல்லவா? இப்போ நீ துடிக்க
துடிக்க சாவாதை நான் பார்க்கிறேன். செத்துப்போடா சதிகாரா!"

எனக்கு காற்று புகும் சிறு இடைவெளி போதும். கிடைத்த சிறு இடைவெளியில்
வழிந்து நான் வெளியே வந்தேன். இன்னும் மூன்று பேர் இருக்கிறார்கள்.
எனக்கு அவசர வேலைகள் மீதி இருக்கின்றன.

(தினமலர் - வாரமலர் - 14 நவம்பர் 2010)

Monday 4 October, 2010

ரசிகன்



ஆட்டோவை தள்ளிக் கொண்டு என் முன்னால் வந்த குழந்தை ஏசு என் பார்வையை தவிர்க்க பக்கவாட்டில் திரும்பி நின்றிருந்தான்.
"என்னப்பா? நேத்து ஏன் நடைக்கு வரலை?"
அவனிடமிருந்து பதில் வராது என்று எனக்கு தெரியும். அவன் ஆதர்ச ஹீரோ ஆதித்யாவின் படம் நேற்று ரிலீஸ்! எப்படி ஆட்டோ ஓடும்?
ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டிய காம்பவுண்ட் சுவரில் எட்டு கால போஸ்டரில் ஆதித்யா ரத்தம் தோய்ந்த அறிவாளை குரோதத்துடன் ஓங்கியிருந்தான். பக்கத்தில் தொப்புள் தெரிய ஒரு கேரளத்து பைங்கிளி, 'இன்னும் எதை கழற்றி எறியட்டும்' என்பது மாதிரி இருந்தாள். கீழே பாஸ்போர்ட் சைசில் ஏகமாய் மனிதத் தலைகள்.
"சார் நேத்து ரொம்ப பிசின்னு கேள்விப்பட்டேன். கட்டவுட்டுக்கு பால் ஊத்தி அபிஷேகம் செஞ்சீங்களாமே? தீபாராதனை, சுண்டலெல்லாம் கொடுத்தீகளோ? அப்படியே ஒரு கோயிலையும் கட்டி, கும்பாபிஷேகம் செஞ்சிட்டு அங்கனயே பூசாரியா உட்கார்ந்திடறது."
"சார் கிண்டல் பண்ணாதீங்க. வாங்க. உட்காருங்க. போகலாம்." ஏசு விருட்டென ஆட்டோவை கிளப்பினான்.
நான் தினமும் என் அலுவலகத்துக்கு ஆட்டோவில், அதுவும் என் தெரு முனை ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து, குழந்தை ஏசுவின் ஆட்டோவில்தான் போவேன். கிட்டத்தட்ட இரண்டு வருஷ பழக்கம். குழந்தை ஏசு தீவிர சினிமா ரசிகன் என்று சொல்லுவதை விட இன்றைய முன்னனி ஹீரோ ஆதித்தியா மீது பக்தி வெறி பிடித்து அலைபவன் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். அவன் ஆட்டோவின் முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் ஆதித்யாவின் விதவிதமான வண்ணப்படங்கள் எப்போதும் இருக்கும். புது படங்கள் வர வர, ஸ்டிக்கர்கள் மாறுமே தவிர அதில் எப்போதும் ஆத்தியாதான். ஒரு முறை, "எங்கள் பகுதியின் ஆதித்யா நற்பணி மன்றத்தின் செயலாளர் ஆயிட்டேன்" என்று அவன் பெருமை பொங்கச் சொல்ல, அதற்கு நக்கலாக புன்னகைத்துவிட, என்னிடம் இரண்டு நாள் அவன் பேசவில்லை.
ஏசுவோடு எனக்கு ஏற்பட்ட பழக்கமே வித்தியாசமானது. அந்தப் பகுதிக்கு குடி வந்த புதுசில் அவன் ஆட்டோவில்தான் பிரயாணித்தேன். அவன் பெயரே வித்தியாசமாக இருந்தது.
"ஏம்பா! உனக்கு எந்த ஊரு?"
"நாசரேத், தூத்துக்குடி மாவட்டம்"
"நாசரேத்தா? நல்லது. உங்க ஊரோட முக்கியத்துவம் தெரியுமோ?
"தெரியாதுங்களே."
"என்னப்பா, ஆதித்யாவை பத்தி முழு பயோடேட்டா வைச்சுருக்கே. ஒரு கிருஸ்துவனா இருந்துக்கிட்டு நாசரேத் பத்தி தெரியாம இருக்கேயே. ஏசு பெத்தலஹேமில் பிறந்தாலும், நாசரேத்தில்தான் வாழ்ந்தாரு. அந்த ஞாபகமாத்தான் உங்க ஊருக்கு அந்த பேர் வந்திச்சு."
"அப்டீங்களா?", என்னை திரும்பிப் பார்த்து சிரித்தான். "எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்காது இல்லீங்களா? அது சரி, தூத்துக்குடிக்கு ஏன் அப்படி ஒரு பேரு வந்திச்சுன்னு உங்களுக்கு தெரியுமுங்களா?"
நான் அவன் ஹீரோவை சம்பந்தப்படுத்தி காயப்படுத்திவிடேன் என்ற அர்த்தத்தில் எதிர் கேள்வி போட்டு என்னை மடக்கப் பார்த்தான்.
"தெரியுமே? துவர்ப்புக் குடி என்பது மறுகி தூத்துக்குடியாயிடுச்சுன்னு எங்கோ படிச்சிருக்கிறேன். உப்பு காய்ச்சற மக்கள் இருப்பதால அந்த பேரு வந்ததா சொல்றாங்க"
"அது மட்டும் இல்லீங்க. இன்னொரு வழக்கும் இருக்குது. ராமாயண காலத்துல இலங்கைக்கு தூதுவனாப் போன அனுமன் அங்க வந்து தங்கிப் போனதால தூதுவன் குடின்னு பேரு வந்திச்சாம். அதுதான் மறுகி தூத்துக்குடியாயிடுச்சு"
இந்துவாக இருந்துக்கிட்டு இது கூட உங்களுக்கு தெரியலியே என்று சொல்லாமல் சொன்ன மாதிரிப் பட்டது. என் சிறுபிள்ளைதனத்துக்கு சரியான பதிலடியாக இருந்தது. ஆட்டோ ஒட்டுனர்களில் இவன் வித்தியாசமானவன் என்று அப்போதே புரிந்து விட்டது.
"சபாஷ். ரொம்ப துடிப்பாதான் இருக்கே. என்ன படிச்சிருக்கே?"
"சாயர்புரம் போப் கல்லூரில பி.ஏ படிச்சேன், சார். ஏதோ பேருக்கு படிச்சேன். சரியான வேலை கிடைக்கலே. ஒரு தாட்டி நம்ம ஊரு பக்கத்துல தொடுத்தாப்பல நாலூ நாள் தலைவர் சூட்டிங் நடந்திச்சு. ரொம்ப தயக்கத்தோட போய் கை கொடுத்தேன். கொஞ்சமும் அலட்டிக்காம என் கூட பேசினாரு. என் படிப்பை விசாரிச்சாரு. குடும்பத்துக்கு விஸ்வாசமா இருக்கச் சொன்னாரு. அப்ப தொட்டு அவரு என் தலைவர் ஆயிட்டாரு."
ஏசு சிகரெட் பிடித்து நான் பார்த்ததில்லை. அதே மாதிரி அவனுக்கு டாஸ்மாக் பார்களில் ஒதுங்கும் வழக்கமும் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நாசரேத்தில் இருக்கும் தன் தாய் தந்தையருக்கு, மாசம் தவராமல் பணம் அனுப்புவான். அவன் தம்பி பொறியியல் கல்லூரியில் படிக்கிறான். ஆனால் சினிமா வெறித்தனம்தான் முரணாக இருந்தது.
பொதுவாகவே சினிமா, அரசியல், இதைத் தாண்டி சராசரி தமிழன் சிந்திப்பதாக தெரியவில்லை. நாட்டின் பொருளாதரம் பற்றியோ, சமூக சிக்கல்கள் பற்றியோ பெரும்பாலருக்கு தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லை. எல்லா ஊடகங்களிலும் எதிர்மறை பரபரப்பு செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒன்று போனால் இன்னொன்று. பழசு மறந்து போகிறது. புதுசு பற்றி எரிகிறது.
எனக்கும் ஏசுவுக்கும் அடிக்கடி ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். கடைசியில் அது சினிமாவில், அதுவும் ரசிகர் மன்றத்தில்தான் நிலைத்து நிற்கும். அது ரசிகர் மன்றம் இல்லை, நற்பணி மன்றம் என்று எதிர் பேச்சு பேசுவான். சென்னைக்கு அடிக்கடி வரும் அவன் அப்பா சகாயராஜ் என் வீட்டில்தான் ராத்தங்குவார். நிறைய தடவை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.
லேசான மன நெருடல்களுடன் ஆட்டோவில் அமர்ந்தேன். ஏதோ சென்னை நகரமே ஆதித்யாவின் பட ரிலீசுக்கு விழா எடுத்த விட்ட மாதிரி இருந்தது. தெருக்களில் நூறு அடி இடைவெளியில் பெரிதும் சிறிதுமாக கட்டவுட்டுகள்.
"அதென்னப்பா ஆதித்யா பின்னால ஏதோ கொடி மாதிரி வரைஞ்சிருக்குது"
"என்ன சார், நாட்டுநடப்பு எதுவும் தெரியாம இருக்கீங்க!. தலைவரு அரசியல் கட்சி தொடங்கப் போறாரு. வரப்போற சட்டசபை தேர்தல்ல பாருங்க. கலக்கலா இருக்கும்."
எனக்கு மனசு வலித்தது. எவனோ காசு மேல காசு சேர்த்து மாடி மேல மாடி கட்ட இவர்கள் பலக்கு தூக்குகிறார்கள். பகுத்தறிவு பாசறைகள் புறப்பட்ட அதே நிலத்தில்தான் இது போன்ற சமான்யர்களிடையே மூடத்தன வேர்கள் ஆழமாக ஊடுருவியிருக்கின்றன. போன வாரம் ஏசுவோடு விவாதித்தது ஞாபகத்துக்கு வந்தது.
"ஏசு. மும்பையில எந்த ஹிந்தி சினிமா ஹிரோவுக்கும் ரசிகர் மன்றம் இல்லையாம். தெரியுமா? இங்க மட்டும்தான் இப்படி. தவிர, நாம எல்லாமே கொஞ்சம் ஒவர்தான். கத்தி பேசறோம். தனி நபர் துதி ரொம்ப அதிகமா இருக்கு. சினிமாவுல கெடைச்ச பலத்தை வைச்சுகிட்டு, இன்னும் என்ன செய்யலாம்னு ஒரு கூட்டம் அலையுது. அதுக்கு உன்ன மாதிரி ஒரு கூட்டம் பலி கடா ஆகுது."
"சார். நீங்க சினிமாவை ஒரு பொழுது போக்குன்னு சொல்லி, எட்ட நின்னு வேடிக்கை பார்த்துட்டு போயிடறீங்க. ஆனா நாங்க உடம்பு வலிக்க வேலை செய்யறோம் சார். எங்களுக்கு ஒரு வடிகால் வேணுமில்லையா?. கிட்ட போய், முங்கி குளிச்சு, ஆண்டு அனுபவிக்கறோம் சார்."
"இதுவும் ஒரு போதை மாதிரிதான் ஏசு. மயக்கம் இருக்கற வரைக்கும் மகிழ்ச்சியா இருக்கும். தெளிஞ்சதும் ச்சீன்னு ஆயிடும்."
"சார். நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க. பல பேரு திருபதி சாமிக்கோ அல்லது ஐயப்பனுக்கோ விரதமிருந்து, விழா எடுத்து, காசு செலவழிக்கிறாங்க இல்லையா? அதுல அவங்களுக்கு திருப்தி கெடைக்குது. அப்ப அதுவும் ஒரு போதைதானே?"
"ஏசு. எல்லை மீறின எல்லாமே தப்புதான். உப்போட சிறப்பு அதோட அளவுல இருக்குதுன்னு சொல்லுவாங்க. சினிமா ஒரு பொழுது போக்கு அம்சம்பா. அதுக்கு மேல முக்கியத்துவம் கொடுக்காதீங்கன்னு சொல்ல வர்றேன். இந்த மாதிரி வெறி பிடிச்ச ரசிகர்கள் இருப்பதாலத்தான், சில ஹீரோக்களுக்கு என்னென்னமோ ஆசைகள் வருது. செருப்பு காலை பாதுகாக்குது. அது நமக்கு தேவைதான். ஆனா, அதை வாசல்லேயே விட்டுடறதுதான் நல்லது."
"சார். விடுங்க. நான் இன்னிக்கு பொறுப்பா இருக்கேன்னா, அது என் தலைவராலத்தான். ஏதோ என்னால முடிஞ்ச நல்ல காரியங்களை தலைவர் பேரச் சொல்லி செய்யறேன். இன்னும் கூடுதலா, ஒரு அமைப்பா செய்யனும்ணும்னு என் தலைவர் விருப்பப்பட்டார்னா, அதுக்கும் அவர் வழிகாட்டுவார். நான் ஸ்டியாத்தான் இருக்கேன் சார். நீங்கதான் ஏதேதோ கற்பனை செஞ்சுக்கிட்டு, கவலைப்படுறீங்க."
என் அலுவலகம் வந்து விட்டது. ஏசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் இறங்குவதற்கு எதிர் பக்கம் நின்று கொண்டு மீண்டும் என் பார்வையை தவிர்த்தான்.
"ஏசு. என்ன ஆச்சு? தலைவர் படம் ஹிட்டு ஆகனுமேன்னு கவலையா?"
"இல்லை சார். நான் நல்லாத்தான் இருக்கேன். ஒன்னுமில்லே"
"இல்லை ஏசு. உன்னக்குள்ளே ஏதோ பிர்ச்சனை இருக்கு. எங்கிட்ட சொல்ல மாட்டேங்கிற."
"சாயங்காலம் ஆபீஸ் விட்டு வாங்க சார். விவரமா பேசுவோம்." ஏசு வழக்கம் போல விருட்டென ஆட்டோவை ஸ்டார்ட் செய்து, போய் விட்டான்.
எனக்கு ஆபீஸில் வேலையே ஓடவில்லை. ஏசு என்ன சொல்லப் போகிறான் என்பதிலேயே மனசு, சுழல் காற்றில் மிதக்கும் காகிதம் மாதிரி எழும்பியும், அடங்கியதுமாக இருந்தது.
சரியாக ஐந்தரை மணிக்கெல்லாம் ஏசு வந்து விட்டான். முன்னைவிட இறுக்கமாக இருந்தான். வீடு திரும்பும் வரை ஒன்றும் பேசவில்லை. சூடாக ஒரு காப்பி போட்டு அவன் முன்னால் நீட்டினேன். நிமிர்ந்தவன் கண்களில் கண்ணீர்.
"ஏசு. என்னாச்சு?"
"சார். நீங்க அடிக்கடி பல்லக்கு தூக்கறேன்னு சொல்வீங்களே. அது உண்மையாடுச்சு சார். நாங்கெல்லாம் பல்லக்கு தூக்கவும், கொடி கட்டவும், கோஷம் போடவும், எதிர் ஆசாமிங்களோட மல்லுக்கு நிக்கவும்தான் இருக்கோம். பல்லக்குல உட்கார்ந்து போக இன்னொரு கூட்டம் இருக்குது. அதுக்கு முள்ளங்கி பத்தையா நோட்டு வேணும்."
"புரியலை ஏசு. விவரமாச் சொல்லு."
"சார். தலைவரோட ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போது என்னமா உழைச்சிருக்கேன், தெரியுமா? ஆனா கட்சின்னு வரும்போது, கட்சி மாறி வந்த ஒரு துட்டு பார்ட்டிக்குதான் பதவியாம். எனக்கு இல்லே. இது எப்படீங்க நியாயம்?"
"ஏசு. உனக்கு தெரியும்தான். இருந்தாலும் சொல்லறேன். சினிமா ஒரு தொழில்ங்கிற மாதிரி, அரசியலும் ஒரு தொழிலாயிடுச்சுப்பா. இதுலேயும் முதல் போட வேண்டியிருக்கு. லாபம் பார்த்து அடுத்த தேர்தலுக்கு செலவழிக்க வேண்டியிருக்கு. நாட்டு நல்லது செய்யணும்னு அரசியலுக்கு வர்றவங்களே இல்லேன்னு ஆயிடுச்சு."
ஏசு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான். ஆதரவாக அவனை என் தோள்களில் சாய்த்துக் கொண்டேன்.
"ஏசு. அவங்க எப்படி அவங்க தொழில்ல கண்ணும் கருத்துமா இருக்காங்களோ, அதே மாதிரி நீ உன் ஆட்டோ தொழில்ல இருந்துடேன். யாரு வேணும்னாலும் வரட்டும். அதை மக்கள் பார்த்துப்பாங்க. உங்கள மாதிரி ஆசாமிங்க ஒதுங்கி நின்னீங்கன்னா சினிமாவும் உருப்படும். அரசியலும் உருப்படும்."
ஏசு என்னிடமிருந்து விலகி கொஞ்சம் நேரம் குனிந்த படி உட்கார்ந்திருந்தான். திடீரேன எழுந்து ஒரே மடக்கில் அத்தனை காப்பியையும் குடித்து விட்டு, இடக்கை புறங்கையால் வாயை துடைத்துக் கொண்டே எதுவும் சொல்லாமல் போனான். நான் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அதில் வருத்தமில்லை. மனசுக்குள்ளே எங்கோ ஒரு மூலையில் வெளிச்சம் பரவுவது மாதிரி இருந்தது.
மறுநாள் நான் ஆட்டோ ஸ்டாண்டை அடைந்த போது ஏசுவின் ஆடோவை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஆட்டோதானா என்று சந்தேகமாக இருந்தது. ஒரே ஒரு ஸ்டிக்கர் மட்டும் இருந்தது. மரியண்ணை குழந்தை ஏசுவை அணைத்தபடி இருந்தாள். ஆதித்யா அஸ்தமனமாகியிருந்தான்.
"சார். வாங்க. உட்காருங்க. இன்னும் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கு." ஏசு அகலமாக புன்னகைத்தான்.
"ஏசு. எனக்கு தூரத்தை பத்தி கவலையில்லேப்பா. சரியான பாதையா? அதுதான் முக்கியம்"
என் கண் சிமிட்டலுக்கு ஏசுவிடம் மீண்டும் புன்னகை. ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த அனைவரும் குபீரென சிரித்தார்கள்.

(AIR தூத்துக்குடி - படிப்பரங்கம் - 06 ஆகஸ்ட் 2010)

Saturday 13 March, 2010

சந்தோஷத் தீவு

முன் குறிப்பு :-

கடவுள் மனிதனை படைத்தான். மனிதன் தன் பங்குக்கு பிரச்சனைகளை படைத்தான்.
இன்று நாம் சிக்கித் தவிக்கும் பல பிரச்சனைகள், மனிதன் தன் சுய
லாபங்களுக்காக எப்போதோ உருவாக்கப்பட்டவை. வரம் கொடுத்தவனையே பதம் பார்க்க
வந்த பஸ்மாசுரன் மாதிரி, இந்த மாதிரியான பிரச்சனைகள் பல சிக்கல்களுக்கு
உள்ளாகி, வெவ்வேறு வடிவம் எடுத்து, கடைசியில் பூதாகரமாக
உருவெடுத்துவிடும் போது, 'தீர்வு என்ன?' என்று தலையை பிய்த்துக்
கொள்கிறோம். காஷ்மீராகட்டும், காவிரியாகட்டும், கட்சத் தீவாகட்டும், அதன்
வேர்கள் ஒன்றே.

தமிழகக் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில், வங்கக் கடலில் ஒரு தீவு
உருவானால்? கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா? அந்த கற்பனையில்
கொஞ்சம் காரம் சேர்க்க, சில பிரச்சனைகளை அதில் நாம் சேர்ப்போமா? இதோ கதை
தொடங்குகிறது.....

2016, அக்டோபர் மாதம் 14ம் தேதி, வெள்ளிக்கிழமை. மதியம் இரண்டு மணிக்கு
பிடித்த மழை இன்னும் விடவில்லை. சென்னை நகரமே மழை நீரில் பெருங்காயம்
மாதிரி கரைந்து போய்விடுமோ என்ற அளவுக்கு மழையின் தீவிரம் இருந்தது. இது
போதாதென்று, பின் இரவில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் அதிபயங்கர புயல்
தாக்கக்கூடும் என்று வானிநிலை அறிவித்திருந்தது. அதற்கு க்ளாரா என்று
பெயரிட்டிருந்தார்கள்.

ஒரு பக்கம் தமிழக மக்கள் ஈரமும் குளிருமாக தவித்துக் கொண்டிருந்தாலும்
இன்னொரு பக்கம் மாநில போலீசும் அரசுத் துறை அதிகாரிகளும் ஏக டென்ஷனில்
இருந்தார்கள். அவர்கள் அடிக்கடி இரண்டு வார்த்தைகளை அடிக்கடி பிரயோகித்து
கொண்டிருந்தார்கள் அதுதான், சந்தோஷத் தீவு! மழையும், புயலும் சற்றே அதன்
முக்கியத்துவத்தை குறைத்திருந்தாலும், நேற்றும், இன்றும், நாளையும்
அதுதான் செய்திகளின் கதாநாயகன்.

அன்றைய காலை தினசரிகளில் தடித்த எழுத்துக்களில் சந்தோஷத் தீவில் நடக்கப்
போகிற கரசேவை பற்றிய செய்திகளே இடம் பிடித்திருந்தன. 'சந்தோஷத் தீவில்
இனி யாருக்கும் அனுமதி இல்லை! மத்திய அமைச்சரவை ரகசிய முடிவு ?', என்று
கொட்டை எழுத்துக்களுக்கு சிவப்பு அடிக்கோடிட்டு புதிய செய்தியை முந்தித்
தந்திருந்தது ஒரு தினசரி. அதுதான் உண்மையோ என்ற மாதிரி அதை உறுதிப்
படுத்தும் விதமாக அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இன்னொரு தினசரி தன் பங்குக்கு சந்தோஷத் தீவில் நிர்மானிக்கப் படப்போகிற
நாற்பது அடி உயர அனுமன் சிலையின் ஏ4 சைஸ் வண்ண ஃபோட்டோவை இலவச இணைப்பாக
வழங்கியிருந்தது. அரசியல் சார்பு தினசரிகள் ஒருவர் மேல் ஒருவர்
புழுதிவாரி தூற்றிக் கொண்டும் தங்களுக்கு சாதமான விஷயங்களை முன்னிலை
படுத்தியும் செய்திகளை திரித்தும் எழுதியிருந்தன.

அரசியல், மதம், நீதி மன்றம் என்று ஏகப்பட்ட சிக்கல்களில் தற்போது
திண்டாடிக் கொண்டிருக்கும் சந்தோஷ தீவிற்கு பெயரில்தான் சந்தோஷம். கடந்த
மூன்று வருடங்களாக அதன் பிரச்சனைகள் தீவிரமடையும் போதெல்லாம் இயல்பு
வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொது சொத்துக்கள் நாசமாயின. விலைவாசியின்
அம்புக்குறி அடிக்கடி மேல் நோக்கி மிரட்டியது. பங்கு வர்த்தகத்தில்
கரடிக்கு அதிகம் வேலையிருந்தது.

ராமேஸ்வரத்திலிருந்து வடக்கு பக்கமாக 36 நாட்டிகல் மைல் தொலைவில் இரண்டு
கி.மீ. நீளம், மூன்று கி.மீ. அகலத்திற்கு 2010 ஜனவரி மாதத்தில் உருவான
அந்த குட்டித் தீவுக்கு அடுத்த பத்தாவது நாளே சிக்கல் ஆரம்பித்தது.
இந்தியா, இலங்கையும் அதற்கு உரிமை கோரின. ரோந்துப் பணி கப்பலுக்களூக்கு
இடையே அடிக்கடி சிறு சிறு மோதல்கள் ஆரம்பித்தன. வெளிவிவகாரத் துறை
மந்திரிகள், தூதுவர்கள், செயலாளர்கள் ஏசி அறைகளில் அடிக்கடி கூடிக் கூடி
விவாதித்தார்கள். மூக்கை இடிக்கும் செய்தியாளர்களின் மைக்குகளில்
'மீண்டும் சந்திப்போம், பேசுவோம்' என்றார்கள். வரைபடங்கள் சரிபார்க்கப்
பட்டன. பாரளுமன்றம் அடிக்கடி ஸ்தம்பித்தது.

மாநில கட்சிகளும் தங்கள் பங்குக்கு குட்டையை குழப்பினார்கள். சந்தோஷத்
தீவுக்கு அருகில் மீண்பிடிக்கப் போன நூற்றுக் கணக்கான மீனவர்கள் இலங்கை
ராணுவத்தினரால் கைது செய்யப்பட, மீனவர் நலன் என்ற போர்வையில் ஒரு வட்டார
கட்சி களத்தில் இறங்கியது. அதன் வளர்ச்சியை கண்டு சகிக்க முடியாத எதிர்
கட்சி, 'கட்ச தீவைப் போல இந்த தீவுக்கும் இலங்கை உரிமை கோரினால், தமிழ்
நாட்டில் ரத்த ஆறு ஓடும்', என்ற மிரட்டலோடு சிறை நிரப்பும் போராட்டத்தை
துவக்க, ஆளும் கட்சி எதைப் பிடித்தால் தங்களுக்கு அரசியல் இலாபம்
கிடைக்கும் என்று தேடி திண்டாடியது.

ஒரு வழியாக எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அது இந்தியாவுக்குதான்
என்று முடிவானது. ஆனால் அதில் தமிழர் நலனை நிலை நாட்டியது யார் என்பதில்
குடுமிபிடி சண்டைகள் தொடங்கின. அவர்களுக்கு அவர்களே வாழ்த்திக் கொண்டு
போஸ்டர் அடித்து விழா கொண்டாடினார்கள். கவிஞர்கள் தங்கள் அரசியல்
தலைவர்களை வாழ்த்துப் பாமாலை பாடி பரிசில் பெற்றார்கள். சிங்கப்பூருக்கு
அருகில் இருக்கும் சென்டோஸா தீவைப் போல் சந்தோஷத்தீவை மேம்படுத்துவோம்
என்று மெரீனா கடற்கரை கூட்டத்தில் முழங்கிய மாநில முதல்வரின் பேச்சை
கேட்டு வயிறெரிந்தார்கள் எதிர் கட்சியினர்.

அரசியல் குழப்பங்கள் கொஞ்சம் தணிந்ததும் வியாபார போட்டா போட்டிகள்
தொடங்கின. சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஸ்டீமெர்கள் கான்ட்ராக்ட்
கொடுத்ததில்/எடுத்ததில் பெரும் அரசியல் புள்ளிகள் பணம் பார்த்தார்கள்.
காசு பார்க்க முடியாத கோஷ்டியும், காசு ஏராளாமாக கண்டுவிட்ட கோஷ்டியும்
சந்தோஷத் தீவிலேயே துரத்தி துரத்தி அடித்து கொண்டார்கள். அதை வெளியிட்ட
ஒரு புலனாய்வு பத்திரிக்கையின் ரேட்டிங் கூடியது. சந்தோஷத் தீவுக்கு
அடியில் இருக்கும் பவழப் பாறைகளை சுற்றுலா பயணிகளுக்கு காட்டுவதாக
அரசியல் பின்னணியில் ஒரு பெரிய நிறுவனம் களத்தில் குதிக்க, சுற்றுசூழல்
ஆர்வலர்கள் கோர்ட்டுக்கு போக, நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது.

சந்தோஷத் தீவை ஒரு வசூல் ராஜாவாக ஒரு கூட்டம் போற்றி புகழ்ந்தாலும்,
இன்னொரு பிரிவினர் அதை மர்ம நாயகனாகவே பாவித்து செய்திகளில் அவ்வப்போது
பயமுறுத்தி கொண்டிருந்தனர். சந்தோஷத் தீவில் அதிக அளவில் யுரேனிய
படிமங்கள் கண்டுபிடிப்பு! அமெரிக்கா அங்கே ஒரு ராணுவ தளம் அமைக்கும்!
சந்தோஷத் தீவு ஒரு தனித் தீவு அல்ல. இது போல இன்னும் 50க்கும் மேற்பட்ட
தீவுகள் சென்னை வரை உருவாகலாம்! அப்போது துறைமுகங்களுக்கு ஆபத்து வரலாம்!
சுனாமி வருவது சர்வ சாதாரணமாகி விடும்! தென் தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக
மூழ்கக் கூடும்! என்று கிளி ஜோஸ்யம் மாதிரி அரை வேக்காட்டு அறிவியல்
அறிஞர்கள் துணை கொண்டு மர்மங்கள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்தன.

தினம் தினம் ஒரு மர்ம முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருந்த சந்தோஷத் தீவு,
ஒரு புத்தம் புதிய திருப்பம் கண்டது. யாரோ ஒருவர் ராமாயண நிகழ்வுகள்படி
அனுமன் பெரிய உரு கொண்டு இலங்கையை நோக்கி பறக்க உந்தி எழுந்த இடம் அந்த
தீவுதான் என்றும், சந்தோஷத் தீவின் ஒரு பாறையின் மீது அந்த கால் தடங்கள்
இருப்பதாக ஆதார விளக்கங்கள் அளிக்க, பிரச்சனை அனுமன் மாதிரியே விஸ்வரூபம்
எடுத்தது.

மூலை முடுக்கு கோயில்களுக்கெல்லாம் குடும்பம் குடும்பமாக வேன் எடுத்துக்
கொண்டு விசிட் அடித்து சலித்து போய்விட்ட பக்தர்கள் கூட்டத்திற்கு அது
ஒரு பெரிய வரப்பிரசாதமாக போய்விட்டது. அது வரை இயற்கை ஆர்வலர்கள்
விரும்பும் சுற்றுலாத்தலமாக இருந்த சந்தோஷத்தீவின் மீது பக்தர்கள்
படையெடுக்கவும், புதிய ஆதாய கோஷ்டிகள் அங்கே தங்களது சுய இலாபங்களை அங்கே
அரங்கேற்றினர்.

இரவோடு இரவாக ஒரு பக்த கோஷ்டி அனுமன் சிலையை அந்த இடத்தில் பிரதிஸ்டை
செய்து ஒரு தற்காலிக கோயில் செய்துவிட, பிரச்சனை இன்னும் தீவிரம்
அடைந்தது. கூடவே நாலு கால பூஜையும் தொடங்கிவிட்டது. எதிர்ப்பாளார்கள்
கொதித்தெழ விஷயம் நீதி மன்றம் வரை போனது. இதற்கிடையில் தீவின் இன்னொரு
மூலையில் மீனவ கிருஸ்தவர்கள் ஒரு தேவாலயத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட,
சட்ட ஒழுங்கு கெட்டுவிடும் அபாயம் ஏற்பட்டது. துரதிர்ஷடவசமாக, ஒரு சிறு
நாட்டு வெடி குண்டு ஒண்று வெடிக்காத நிலையில் அங்கேகண்டுபிடிக்கப்படவும்,
நாட்டில் பல இடங்களில் மதக் கலவரங்கள் நிகழ்ந்தன.

பெருவாரியான மக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம் என்பதால் தற்போது
உள்ள கோயிலும், கோயில் பூஜையும் தொடரலாம் என்றும் ஆனால் நீதி மன்ற இறுதி
தீர்ப்பு வரும் வரை எந்த வித நிரந்தர கட்டுமானப் பணிகள் கூடாது என்ற ஒரு
குழப்பமான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் அளித்தது. அரசியல் கட்சிகள் இந்த
பக்கமும் அந்த பக்கமும் மாறி மாறி ஊதி தங்கள் கணக்குகளை சரி செய்து
கொண்டார்கள்.

அகில உலக இந்து மக்கள் சேவா தளம் என்ற அமைப்பு அசுர வளர்ச்சி பெற்றது.
அனுமன் எழுந்த இடத்தில் மிகப் பெரிய உருவச் சிலை வைப்பதுதான் சரி என்று
அவர்களே தீர்மானித்து 40 அடி சிலை செய்தார்கள். கன்யாகுமரியில்
திருவள்ளுவருக்கு சிலை இருக்கலாம், ஹைதராபாதில் புத்தருக்கு சிலை
இருக்கலாம், சந்தோஷத் தீவில் அனுமன் சிலை இருக்கக் கூடாதா என சேவா தள
தலைவர் அறைகூவல் விட அவர் மிகவும் பிரபலமானார். மிகப் பெரிய கோயில் கட்ட
மக்களிடம் வசூல் வேட்டை நடந்தது. மக்களின் நம்பிக்கையில் நீதி மன்றம்
தலையிடுவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அறிவித்தது சேவா தளம்.

ஆனால் இந்த விஷயத்தில் ஆன்மிகத்துக்கு துளிகூட சம்பந்தமில்லை என்றும் மத
ரீதியாக மக்களை திசைதிருப்பி அரசியல் ஆதாயம் பார்க்கிறது ஒரு கூட்டம்,
சத்தியம் நிச்சயம் வெல்லும் என்று உண்மையான ஆன்மிகவாதிகள் மறுத்து
அறிக்கை விட்டார்கள்.

இதற்கிடையில் இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் அனுமன் சிலை செய்தியை
ஒளிபரப்பி அதை குரங்குக் கடவுள் என்று சொல்லிவிட நாடு முழுவதும் கண்டன
ஆர்பாட்டங்கள் நடந்தன.

சென்னை கமிஷனரின் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கவும் சொல்லி
வைத்தமாதிரி மழை தீவிரம் சற்று குறைந்தது.

"கமிஷனர் அவர்களே! நாளைய ஊர்வலம் சட்டம் ஒழுங்கு காரணமாக தடை
செய்யப்படுமா?"

"நிச்சயமாக இல்லை. சிலையின் நெடும் பயணத்திற்கு தகுந்த பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஆனால் சட்ட ஒழுங்கு மீறப்பட்டால் கடுமையான
நடவடிக்கைகள் எடுப்போம்."

"சந்தோஷத் தீவில் இருந்த அனைத்து கோயில் நிர்வாகிகளையும் வலுக்கட்டாயமாக
அழைத்து வரப்பட்டார்களா? எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு அந்த கோயில்
தரைமட்டமாக்கப்படும் என்று பேச்சு உள்ளதே?"

"இதற்கு முதலமைச்சர் காலையிலேயே பதிலளித்துவிட்டார். கடும் மழை
காரணமாகத்தான் அவர்கள் சம்மதத்தோடு நாங்கள் அழைத்து வந்தோம். உச்ச நீதி
மன்ற தீர்ப்பு வரும் வரை கோயிலுக்கு எங்களின் பாதுகாப்பு தொடரும். அதில்
தயவு செய்து சந்தேகப் பட வேண்டாம்."

"கமிஷனர் சார். ஒரு தனியார் சேனலில் அவர்கள் போலீசின்
தொந்தரவினால்தான்..."

"பொய் சொல்லுகிறார்கள். எங்களுக்கு அவப் பெயரை உண்டாக்கினால் சிலருக்கு
ஆதாயம் என்பதால் பொய் சொல்ல வைக்கப்படுகிறார்கள்."

"ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக..."

"அது புயல், மழை, வெள்ளத்தை சமாளிக்க. தயவு செய்து இந்த விஷயத்தோடு
முடிச்சு போடாதீர்கள்."

ஒரு தனியார் தொலைக்காட்சி சேவா தளத்தின் தலைவர் அனல் கக்கும் பேட்டியை
நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. நீதி மன்ற தீர்ப்பை மீறி செங்கல்
பூஜை சந்தோஷத் தீவில்தான் நடைபெறும் என்றும் வீராவேசமாக பேசிக்
கொண்டிருந்தார். 'காவிரி பிரச்சனையில் நீதி மன்ற தீர்ப்புக்கு கர்நாடக
அரசாங்கம் எங்கே கட்டுப்பட்டது? முல்லை பெரியார் தீர்ப்பை இன்னமும் கேரள
அரசு மதிக்கவில்லையே? அவர்களுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா?'
என்று பேட்டி சூடு பறக்க போய் கொண்டிருந்தது.

புது டில்லியில் பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த
உள்துறை மந்திரியை நிருபர்கள் சூழ்ந்து சந்தோஷத் தீவு பற்றி சரமாரியாக
கேள்விகள் கேட்கவும் அவர் பதிலளிக்க தொடங்கிய அடுத்த ஐந்தாவது நொடியில்
அனைத்து சானல்களும் நேரடி ஒளிபரப்பை தொடங்கின.

'திட்டமிட்டபடி சேவா தளத்தின் ஊர்வலம் தொடங்குமா?"

"இதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். சேவாதளத்திடம் கேளுங்கள்."

'சேவா தளத்திற்கு உங்கள் கட்சி மறைமுகமாக உதவி வருவதாக பேச்சு
அடிபடுகிறதே?"

"கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் கெட்ட எண்ணங்களோடு எங்களை வீண்
வம்புக்கு இழுக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் கேள்வி இது. எங்கள்
கட்சி நீதி மன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்கும்."

"நீதி மன்றத் தீர்ப்பு உங்கள் கட்சிக்கு சாதகமாக வர வேண்டும்
என்பதற்காகத்தான் தலைமை நீதிபதி சமீபத்தில் ராஜினாமா செய்யும்படி
நிர்பந்திக்கப் பட்டாரா?"

'இங்கே பாருங்கள். உங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதற்காக
ஒரு நீதிபதி தனது உடல் நிலை காரணமாக பதவி விலகியதை திரித்து விஷயத்தை
பெரிது படுத்தாதீர்கள்."

"பிரதமரின் நாளைய அமெரிக்கப் பயணம் சந்தோஷத் தீவு காரணமாக ரத்து செய்யப்
பட்டு விட்டதா?"

"எனக்கு தெரியாது"

தமிழக கடலோரப்பகுதியில் மீண்டும் மழைபிடித்துக் கொண்டுவிட செய்தி
சானல்கள் புயல், மழை, வெள்ளம் என்ற தலைப்புக்கு மாறின.

பிள்ளையார் பிடிக்க குரங்காய் போன இந்த சிக்கலில் போலீசும் அரசுத்துறை
அதிகாரிகளும் முழிபிதுங்கி தவித்தார்கள். அரசியல் கட்சிகளும் வெறுத்து
போனார்கள். சந்தோஷத் தீவுக்கு என்னதான் தீர்வு? இதுவும் அயோத்தி மாதிரி
இழுத்துக் கொண்டே போகுமா? யாரையும் பாதிக்காத ஒரு முடிவுதான் என்ன ?

அந்த முடிவு அன்று இரவே வந்தது. அதிகாலை மூன்று மணியளவில் மாநில
முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், பிரதம மந்திரி, போலீஸ் உயர்
அதிகாரிகளின் படுக்கையறை கதவுகள் தட்டப்பட்டன. செல்போன்கள் சினுங்கின.
மகிழ்சியான செய்திகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாரிக் கொண்டார்கள். அது-

கடும் கடல் கொந்தளிப்பில் சந்தோஷத் தீவு காணாமல் போனது.

(கலைமகள் - அக்டோபர் 2009)

Tuesday 9 March, 2010

சிக்கியது பறவை


அவள் அநியாயத்துக்கு அழகாக இருந்தாள். பார் இணைக்கப்பட்ட அந்த
ரெஸ்டொரண்ட்டின் அரையிருட்டில் கூட பளீரென்று தெரிந்தாள். கன்னம்
குழிவதில் ப்ரீதி ஜிந்தா, நீல கண்களில் ஐஸ்வர்யா ராய், ஸ்லிம் பாடியில்
சிம்ரன், மூக்கில் அந்த காலத்து ஸ்ரீதேவி என்று 'எல்லாம் சேர்ந்த
கலவையாக' இருந்தாள்.

இப்படிக் கூட ஒருத்தி அழகாய் இருக்க முடியுமா? ராஜீவ் வியந்து வியந்து
போனான். 'இவள்தான். இவளேதான். நான் வெகுநாட்களாக தேடிக்கொண்டிருந்தவள்.
என் இன்றைய டார்கெட்', ராஜீவ் மனசில் டிக் செய்து கொண்டான். முதலில் தான்
மட்டும் அவளை 'பார்த்துக் கொண்டிருப்பதாக' நினைத்திருந்தான். அங்கும்
இங்கும் நோட்டம் விட்டதில் இருபது கண்களுக்கு மேல் அவள் மீது மேய்ந்து
கொண்டிருப்பது தெரிந்தது.

அவளோடு வந்திருந்த அந்த தாடித் தடியன் மது மயக்கத்தில் சரிந்திருந்தான்.
முடி குவியலுக்குள் மூக்கும் வாயும் சொருகப்பட்டது மாதிரி இருந்தது.
பிர்... பிர்... என்று ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தான். டேபிளில்
ஏகத்துக்கு தந்தூரி ஐயிட்டங்கள் சிதறி இருந்தன. ஏதோ ஒரு காரணத்துக்காக
எழுந்தவள் விறுவிறுவென ராஜீவை தாண்டிப் போனாள். பின் பக்கத்தில் ஏஞ்சலினா
ஜூலியை ஞாபகப்படுத்தினாள். சராசரிக்கும் அதிகமான உயரம். மெல்லிய சென்ட்
வாசனை அவனை கிறங்க அடித்தது. அவள் திரும்பி வரும் வரை காத்திருந்தான்.

வெயிட்டரிடம் ஏதோ சொல்லிவிட்டு வந்தவளை இடைமறித்தான். "மேடம்.
நீங்கள்தானே ஷெரீன் தாமஸ், சில்வர் மீடியா சொலூஷன்ஸ்"

"நோ. யூ ஆர் ராங்க்." சரசரவென அவனை தாண்டிப் போய்விட்டாள். ராஜீவ் அவளை
விடவில்லை. அவள் டேபிள் அருகே போனான்.

"மேடம். ஐயாம் சாரி. தவறாக சொல்லிவிட்டேன். நீங்கள் வித்யா
ஸ்ரீராம்தானே?"

"மிஸ்டர். உங்களுக்கு என்ன வேண்டும்."

"யு ஆர் ஸ்மார்ட். நீங்கள்தான் வேண்டும். உங்களோடு பேச வேண்டும். நீங்கள்
என்னை என்னவோ பண்ணுகிறீர்கள்." ராஜீவ் கைகளை நீட்டினான். அதற்குள்
தாடித்தடியன் அரைகுறையாக புரிந்து கொண்டு உளர ஆரம்பித்தான். அவனை மெல்லிய
குரலில் அதட்டி அமைதி படுத்தினாள். சிவப்பு நிற திரவம் ஊற்றப்பட்ட
கோப்பையை அவன் கைகளில் திணித்தாள்.

"மிஸ்டர். போங்கள். உங்கள் இடத்திற்கு போய் அளவாக குடியுங்கள். அழகான
பெண்களிடம் தத்துபித்து என்று உளறாதீர்கள். இன்னும் பேச்சைச்
தொடர்ந்தீர்கள் என்றால் கூச்சல் போடுவேன். போலீஸ் வரும்"

"போலீஸ் வராது." ராஜீவ் இரண்டு கைகளையும் அகலமாக விரித்து ஒரு ஒரு அடியாக
பின்னால் போனான். கண்களை சிமிட்டினான். அவள் நிமிர்ந்து அவனை எரிப்பது
போல பார்த்தாள். மை காட்! கோபப்படுவதில் கூட எவ்வளவு அழகாக இருக்கிறாள்!

ராஜீவ் அவளை விட்டுப் பிடிப்பது என்று தீர்மானித்து தன் டேபிளில் வந்து
அமர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு யோசிக்க ஆரம்பித்தான். உடனடியாக
அதிர்ஷ்டக் காற்று அவனை நோக்கி வீசியது, ரம் ரூபத்தில். "ஓ நோ!" என்ற
அவளின் அலறலும் தொடர்ந்து வந்தது.

தாடித்தடியனுக்கும் அவளுக்கும் ஏதோ வாக்குவாதம் வந்திருக்க வேண்டும்.
அவன் மிச்சமிருந்த ரம் கோப்பையை அவள் மீது குறிதவறி வீச அது ராஜீவை இடது
பக்கமாக குளிப்பாட்டியது.

அவள் ஓரேயடியாக மாறிப்போனாள். ஒரு நிமிடத்தில் நூறு சாரி சொன்னாள். அவளே
வலுக்கட்டயமாக ராஜீவின் கோட்டை கழற்றினாள். நடுங்கும் கைகளோடு டிஷ்யூ
பேப்பரால் ரம் கொட்டிய பகுதிகளை துடைத்து விட்டாள். அவளின் குஷன் விரல்
ஸ்பரிசத்தில் ராஜீவுக்கு உச்சி குளிர்ந்தது. நடுநடுவே தாடிக்கார தடியனை
திட்டித் தீர்த்தாள். ராஜீவ் எவ்வளவோ கெஞ்சியும் அவள் கோட்டை
திருப்பித்தரவில்லை. 'உலர் சலவை செய்துதான் திருப்பித் தருவேன்' என்று
அடம்பிடித்தாள். பறவை சிக்கிவிட்டது!

"சார். நீங்கள் உங்கள் பெயரை சொல்லவே இல்லையே." சினேக பார்வையுடன்
மென்மையாக இழுத்தாள்.

"ராஜீவ். சார், மோர் எல்லாம் தேவையில்லை. ராஜீவ் என்று அழைத்தாலே
போதும்."

"நான் ரமா வெங்கடேஷ்"

ராஜீவ் கேள்வியாக அந்த தாடித்தடியனை பார்த்தான். அவள் மப்பில் டேபிளில்
சரிந்திருந்தான்.

"வெங்கடேஷ் என் அப்பா. இவனை விட்டுத்தள்ளுங்கள். இவனால்தான் என்
வாழ்க்கையே நாசமாகிவிட்டது. ராஜீவ், ஒரு சின்ன உதவி செய்யேன். இவனை கீழே
கொண்டு காரில் விட்டுவிட்டு வந்துவிடலாம். டிரைவர் இருக்கிறான். அவன்
பார்த்துக் கொள்வான். நான் இன்னும் சரியாக சாப்பிடவே இல்லை"

ராஜீவும் ரமாவும் அந்த தாடித்தடியனை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போய்
காரில் திணித்தார்கள். அந்த சமயத்தில் ராஜீவுக்கு செல் அழைப்பு வந்தது.

"ஓகே ரமா. நான் போய் எனக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருக்கிறேன்.
இவனை ஒழுங்குபடுத்திவிட்டு மேலே வா"

ராஜீவ் தலை மறையும் வரை ரமா காத்திருந்தாள். லிப்ட் கதவு மூடியதும்
தாடிக்காரனை ஓங்கி ஒரு தட்டு தட்டினாள். அவன் விருட்டென எழுந்து
உட்கார்ந்து கொண்டான். "என்ன பறவை சிக்கிடுச்சா? செம துட்டு பார்ட்டியா?"
ரமா தன் சிவந்த இதழ்களில் விரல் வைத்து 'ஷ்ஷ்' என்றாள்.

"அவன் கோட்டு பாக்கெட்டில் பார்த்தேன். ஏழெட்டு கிரெடிட் கார்டுகள்
வைத்திருக்கிறான். ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக அவன் பர்ஸ் புடைப்பாக
இருந்தது. அரை மணி பொறு. நான் அவனை கொத்திக் கொண்டு வந்துவிடுகிறேன்."

வெகு இயல்பாக லிப்ட் ஏறியவள் ராஜீவை பார்த்ததும் பொய்யான பதட்டத்தை
வரவழைத்துக் கொண்டாள்.

"சொல்லுங்கள் ராஜேஷ். நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்."

"ரமா. நான் ராஜேஷ் இல்லை. ராஜீவ். தி.நகரில் இருக்கும் ஜே,கே.ஆர். கோல்ட்
ஹவுஸ் தெரியுமா?"

ரமாவின் இரண்டு கண்களும் திடீரென ஒளிர்ந்தன.

"யெஸ் ரமா. அதன் நான்கு பார்ட்னர்களில் நானும் ஒருவன். தினம் ஒரு லட்சம்
என்று செலவழித்தால் கூட இன்னும் அறுபது வருஷத்துக்கு கவலையில்லை."

"ராஜீவ். நான் மிகவும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கிறேன். எங்கள்
வீட்டில் சாதாரண மாருதி 800தான் இருந்தது. ஏ.சி. கூட விண்டோ ஏசிதான். என்
அப்பா பாக்கெட் மணியாக கேவலம் ஐநூறு ரூபாய்தான் கொடுப்பார். எனக்கு நிறைய
பணம் தேவைப்பட்டது. மாடலிங்கில் நுழைந்தேன். இந்த தாடிக்காரன் பேச்சை
கேட்டு கொஞ்சம் திசை மாறிப் போய்விட்டேன்"

மெல்லிதாக அழுதாள். ராஜீவ் பதறிப்போய் அவள் கண்களைத் துடைத்தான்.
வேண்டுமென்றே சில பகுதிகளில் கைகளை ஓடவிட்டான். அவள் அதை அனுமதித்தாள்.

"ரமா. நீ என்னிடம் வந்து விட்டாயல்லவா. இனி உன் பிரச்சனை தீர்ந்தது.
இன்னும் ஆறே மாசத்தில் நீதான் நம்பர் ஒன் மாடல். குறித்து வைத்துக் கொள்"

"தாங்க்ஸ் ராஜீவ். உன்னிடம் ஆரம்பத்தில் கோபித்துக் கொண்டு விட்டேன்.
மன்னித்துவிடேன்."

"அதை அப்போதே மறந்துவிட்டேன்."

ரமாவும் ராஜீவும் கீழே வந்த போது அந்த தாடிக்காரன் குடிபோதையில் மயங்கிக்
கிடப்பது மாதிரி கார் பின்சீட்டில் சரிந்திருந்தான்.

"ராஜீவ். நான் உன் காரில் வருகிறேனே." அவன் தோள்களில் சரிந்தாள்.

ராஜீவின் ஷெவர்லே இருந்த இடம் கொஞ்சம் இருளடைந்த பகுதியாக இருந்தது.
முதலில் காரை பார்த்து வியந்தவள், டிரைவர் ஸீட்டில் அமர்ந்த ராஜீவ் மீது
ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, அவனை அணைத்து, இதழ்களை ஈரப்படுத்தினாள். ராஜீவ்
தடுமாறிப்போனான்.

கார் வேகமெடுத்து பிரதான சாலைக்கு வந்தபோது, சென்னை வேக வேகமாக கவியும்
இரவுக்குள் தன்னை ஒடுங்கிக் கொள்ள ஆரம்பித்திருந்தது. ரமா ராஜீவை
தொடர்ந்து தொந்திரவு செய்து கொண்டிருந்தாள். ராஜீவ் மெதுவாக
ஆரம்பித்தான்.

"ரமா. நான் ஒரு உல்லாச ப்ரியன். நான் ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ள
மாட்டாயே?"

"சொல்லு." நிமிண்டும் விரல்களூக்கு சற்று ஓய்வு கொடுத்தாள்.

"என் இரவுக்கு ஒரு பெண் பத்தாது. நீதான் லீட் கிடார் என்றால், எனக்கு
ஐந்து அல்லது ஆறு செகன்டரி கிடார்கள் வேண்டும். உனக்கு தெரிந்தவர்கள்
இருக்கிறார்களா?"

"ராஜீவ்! யூ ஆர் வெரி நாட்டி!" இடுப்பில் குத்தினாள். "பெரிசாக
செலவாகும். பரவாயில்லையா?" என்றாள்.

"பணத்தைப் பற்றி கவலைப் படாதே. எனக்கு வேண்டியது பெண்கள்."

ரமாவின் செல்போன் தொடர்ந்து இயங்கியது. "டன் ராஜீவ். இன்னும் அரை மணியில்
உன்னை மகிழ்விக்க அரை டஜன் அழகுப் பெண்கள் காத்திருப்பார்கள்."

சென்னை புறநகர் பகுதியில் ஒரு சொகுசு பங்களாவின் முன்னால் காரை நிறுத்தச்
சொன்னாள். ராஜீவ் ஆச்சர்யப்பட்டான். 'அட! என்னிடம் கூட இப்படி ஒரு பங்களா
இல்லையே?'.

"இது வாடகை வீடு ராஜீவ். வா! உண்னோடு நிறைய வேலை இருக்கிறது." ராஜீவை
தரதரவென இழுத்துக் கொண்டு போனாள்.

பத்து நிமிட இடைவெளியில் தாடிக்காரனின் கார் சத்தமின்றி நின்றது. அப்போது
பின் சீட்டில் சரிந்திருந்த தடியன் இப்போது முன் சீட்டில் ஒய்யாரமாக
அமர்ந்திருந்தான். பின் சீட்டில் மூன்று தடியர்கள் இருந்தார்கள்.
அவர்களிடம் ஸ்டில் காமிரா, மூவி காமிரா என்று சகல எலக்ட்ரானிக்
வஸ்துகளும் இருந்தன.

"மாம்ஸ். எல்லாரும் கொடுத்த வேலையை சரியா செய்யணும் புரிஞ்சுதா? வேலை
பர்ஃபெக்டா முடிஞ்சா பேமெண்ட் டபுள். ஓகே?"

தலையாட்டினார்கள்.

பங்களாவுக்குள் ரமாவின் அனுமதி வாங்கிக் கொண்டு ஒரு தனிமையான
பாத்ரூமுக்குள் போனான் ராஜீவ். செல்லை இயக்கினான். எதிர் முனையில்

"சார். பறவைகள் கூட்டமா சிக்குது. ஆர் யூ இன் கண்ட்ரோல்?"

"யெஸ். நாங்க எல்லாரும் நீ இருக்கிற பங்களாவிலேர்ந்து இருநூறு மீட்டர்
தூரத்திலே இருக்கோம். கம்பிளீட் கண்ட்ரோல். கவலைப்படாதே."

"ஓகே சார். இன்னும் அரை மணியில என்னோட அடுத்த சிக்னல் வரும். ரவுண்டப்
செஞ்சுடுங்க. பார்டி பெரிய பார்ட்டி. எந்த பறவையையும் விட்டுடாதீங்க."

"கோ அஹேட் மேன்."

மெல்லிய புன்சிரிப்புடன் செல்லை ஆஃப் செய்தான் ராஜீவ் என்ற புனைப் பெயர்
கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன். அஸிஸ்டென்ட் கமிஷ்னர் ரவி யாதவ்
தலைமையில் ஒரு போலீஸ் கூட்டம் வெளியே இருளில் காத்திருந்தது.

(தினமலர் - வாரமலர் - 21 பிப்ரவரி 2010)

Monday 8 March, 2010

ஆபரேஷன் மோஹினி


ஆபரேஷன் மோகினி

இந்த கதைக்கு அதி முக்கியமானவர்கள் இருவர். ஒருவன் கோட்டை மனோ. இன்னொருவன் பல்ஸ் முத்து (பல்ஸர் என்பதன் சுருக்). இருவருமே லோக்கல் தாதாக்கள். சினிமாவில் மட்டுமே இவர்களைப் போன்றவர்களை அநியாயத்துக்கு உயர்த்தி காட்டுவார்கள். கண்கள் சிவக்க, கை நரம்புகள் புடைக்க அவர்கள் செய்யும் ரத்தக்களறிக்கு நியாயம் சொல்வார்கள். மும்பை இறக்குமதி பால் பப்பாளி ஹீரோயின்கள் அவர்களை துரத்தி துரத்தி காதலிப்பார்கள். யதார்தத்தில், இந்த கதையில், கோட்டையும் பல்ஸும் கெட்டவன்கள்.

மணலியில் ஆரம்பித்து மூலக்கடை வரை கோட்டையும் பல்ஸும் வைத்ததுதான் சட்டம். மூலக்கடை நாற்சந்தியில் ஒரு குட்டி நகைக்கடை வைத்திருக்கும் மோதிலால் சேட் ஒரு முறை கரீம் பாயிடம் வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடனை தராமல் இழுத்தடித்தான். கோட்டையும் பல்ஸும் உடனே களத்தில் இறங்கினார்கள். அவர்கள் ஸ்டைலே தனி. முதலில் அதிரடி அடி. அப்புறம்தான் பேச்சு. மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொப்பளிக்க மிதிபட்ட கரப்பான் பூச்சி மாதிரி மோதிலால் சேட் தன் ஏராளமான தொப்பையுடன் பிளிறிக்கொண்டே ஓடியதை முன்னூறு பேருக்கு குறையாமல் வேடிக்கை பார்த்தார்கள். அதில் டிராஃபிக் போலீசும் சேர்த்தி. இது போன்ற சாகச பட்டியல்கள் அருகில் இருக்கும் போலீஸ் ரிகார்டுகளில் ஏகமாக குவிந்து, பழுப்பேறிக் கொண்டிருக்கின்றன. எல்லா அட்டகாசங்களையும் காவல் துறை சகித்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மாண்புமிகு மதிவாணன். அதாவது லோக்கல் பேச்சுவழக்கில் 'அமைச்சர்'.

அந்த பேச்சு வழக்கை மீறி மணலி ஏரியாவில் அவரை யாராவது 'மதிவாணன்' என்று பெயர் சொல்லி அழைத்து விட்டால், அவனும் மோதிலால் சேட் மாதிரி ரத்தம் கக்க வேண்டியிருக்கும். இத்தனைக்கும் மதிவாணன் தற்போது அமைச்சர் இல்லை. இருந்தாலும் அந்த கூட்டத்திற்கு அவர் எப்போதும் அமைச்சர்தான். ஒரு காலத்தில், ஒரு அரசியல் கட்சியால் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டு 'அழகு' பார்க்கப்பட்டவர். ஆனாலும் தன் நிழல் சமாசாரங்களை எந்தவிதத்திலும் இம்மியளவும் குறைக்காமல் இருந்துவிட, அந்த அரசியல் கட்சிக்கு அவரை கழட்டி விடும் நிர்பந்தம் வந்தது. மதிவாணனின் சுட்டுவிரல் அசைவுக்கு வட சென்னை கட்டுப்பட்டு இருப்பதால் பதவிக்கு வந்த எந்த அரசியல் கட்சியும் அவரை எதிர்க்க பயந்தன. எவனுக்கும் பயப்படாமல் தெனாவட்டாக இருந்த மதிவாணன் ஒரு சில மாதங்களாக தூக்கமில்லாமல் அலைகிறார். அவருக்கு செக் வைக்க வந்திருப்பவர், அந்த பகுதிக்கு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உதவி போலீஸ் கமிஷ்னர், திரு ரவி யாதவ்.

ஏ.சி. ரவி யாதவை யாரும் முதலில் கண்டு கொள்ளவில்லை. ஆனால் எந்த அரசியல் குறுக்கீடுகளுக்கும் பயப்படாமல் ஒவ்வொரு ரௌடியாக அவர் உள்ளே தள்ள ஆரம்பிக்க, மற்ற கேடிகள் அரை மப்பில் 'மெர்சலான' குடியர்கள் மாதிரி ஆனார்கள். அதுவும் சில நாட்களுக்கு முன்னால், மாத்தூர் மில்க் காலனியில் ஆஸ்டின் செல்வா என்ற ரௌடியை பட்ட பகலில் ஓட ஓட விரட்டி அவர் சுட்டுக்கொன்றதை பக்கம் பக்கமாக எழுதிய பத்திரிக்கைகள், அடுத்த குறி 'கோட்டை?' என்று பரபரப்பை உண்டாக்கியிருந்தன. ரவி யாதவின் வேகத்துக்கு, இன்னும் வலு சேர்க்கும் விதமாக அங்கே உதயமானவள்தான், சிட்டு.

சிட்டுவுக்கு சொந்த ஊர் சித்தூர். ஆனால் நகரியில்தான் தொழில். நெடுஞ்சாலை லாரி டிரைவர்களூம், க்ளீனர்களூம்தான் அவள் வாடிக்கையாளர்கள். இரவு நேர மாமாக்களின் கமிஷன் கட்டிங்குகள், ஆந்திரா போலீசின் மாமுல்கள், மற்ற இதர தொந்தரவுகள் அவளுக்கு பாரமாக இருந்தன. அந்த சமயத்தில்தான் கோட்டை மனோவுக்கு ஓரிரவு விருந்தாகும் வாய்ப்பு வந்தது. சாதாரணமாக இரவு பெண்களை, வந்த வேலை முடிந்ததும், அந்த நிமிடமே மறந்துவிடும் மனோவுக்கு, சிட்டு வித்தியாசமாக தெரிந்தாள். "மணலிக்கு வருகிறாயா?" என்று கேட்டு விட்டான். சிட்டுவும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தாள். ஆனால் மணலிக்கு வந்ததும் சிட்டு கட்சி மாறினாள். அதற்கு காரணம், பல்ஸ்.

கோட்டை மனோவை பொறுத்தவரை பெண் என்பது இரவு நேரத்தில் வயிறு முட்ட குடித்தபின், தூங்குவதற்கு முன்பு கையாளப்படும் ஒரு பாலியல் வஸ்து. அதற்கு ஆசா பாசங்கள் உண்டு என்பதை அறியாத முரடன். இந்த அனுகுமுறை சிட்டுக்கு எரிச்சலை தந்தது. ஆனால் அவன் மூலமாக அறிமுகமான பல்ஸ் அப்படியல்ல. ஒரு பூவை கையாள்வது மாதிரி சிட்டுவை கையாண்டான். மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் படம் காட்டினான். பெரிய பெரிய ஏ.சி. கடைகளில் அழைத்து போய் அவளுக்கு விதவிதமான மார்டன் உடைகளை வாங்கிக் கொடுத்தான். நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்துப்போய், அரை இருட்டில் அவள் காதுகளில் கிசுகிசுத்தான். ஆண்வர்க்கத்தின் உஷ்ண மூச்சுக்காற்றை மட்டுமே அறிந்து வந்தவள், பல்ஸின் மென்மையில் கிறங்கிப்போனாள். பல்ஸ் கொடுத்த தைரியத்தில் கோட்டைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தாள். தான் அழைத்து வந்தவளை, பல்ஸ் கொத்திக் கொண்டு போனது, கோட்டையை உசுப்பி விட்டது. வந்தது பிரச்சனை. பல்ஸ் முத்து, கோட்டையின் முதல் எதிரியானான்.

முதலில் அடிபொடிகளில் ஆரம்பித்த அடிதடி, கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து நேரடி மோதலுக்கு வழி வகுத்தது. கண்ணாமூச்சி விளையாடுபவர்கள் மாதிரி, நாளுக்கு நாள், மூலைக்கு மூலை, கோட்டையின் ஆட்களும், பல்ஸின் ஆட்களும் அடித்துக் கொண்டார்கள். ரவி யாதவ் சுறுசுறுப்பானார். மதிவாணன் கவலையுற்றார். சமரசம் செய்விக்க, இருவரையும் உடனடியாக அழைத்தார்.

மதிவாணனின் நிழல் சமாசாரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகத்துக்குள் அனைவரும் கூடியிருந்தார்கள். வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ ஒன்று டயர்கள் தேய குலுங்கி நிற்கவும், அனைவரும் சுறுசுறுப்பானர்கள். வெள்ளை வேட்டி, மல் ஜிப்பா, வெள்ளை செருப்பு, அரை கிலோ தங்க ஆபரணங்கள் சகிதமாக மதிவாணன் வெளிப்பட்டார். கையில் அசாதாரண நீள அகலத்தில் உறையிடப்படாத செல் ஒன்று இருந்தது.

"என்னப்பா கோட்டை வந்துட்டானா?"

"எல்லோரும் உங்களுக்காக காத்திருக்காங்கண்ணா. ஆனா...."

"ஆனா என்னய்யா?"

"பல்ஸ், அப்பறம் அந்தப் பொண்ணு?"

"என்னவாம்"

"அண்ணே.... அவங்க வரமாட்டாங்களாம்.... பாதுகாப்பு இல்லையாம்...... நீங்க வந்த
சேதி தெரிஞ்சதும்தான் வருவாங்களாம்"

"வந்துட்டேன்ல. வரச்சொல்லு".

அடுத்த பத்து நிமிட பரபரப்புக்கு பின் பல்ஸ் அவன் சகாக்களுடன் வந்தான். ஆளாளுக்கு விரைத்துக் கொண்டார்கள். முறைத்துக் கொண்டார்கள். மதிவாணனின் அதட்டலுக்கு அடங்கினார்கள்.

"கோட்டை, பல்ஸ், உங்க ரெண்டு பேருக்கும் பொதுவா சொல்லறேன். நீங்க ரெண்டுபட்டு நின்னீங்கன்னா, அது நமக்குதான் வீக்கு. நேத்து வரைக்கும் ப்யூசாகிப் போன பார்ட்டிங்க, நாளைக்கு நம்மளை சப்பையா பார்ப்பாங்க. தேவையா? சரி, மனோ, உன் பிரச்சனை என்னன்னு சொல்லு."

"நான்தான் அந்த பொம்பளையை இட்டாந்தேன். ஒண்ணு அவ எனக்கு.... எனக்கு மட்டும் இருக்கணும். இல்லேன்னா இந்த இடத்தை விட்டே போயிடணும்."

மதிவாணன் பல்ஸ் பக்கம் திரும்பினார்.

"அண்ணே. நான் அவளை கட்டிக்கறதா முடிவு செஞ்சுட்டேன்." பல்ஸ் ஆதரவு கோஷ்டி கைதட்டி ஆரவாரம் செய்ய எதிர் கோஷ்டி சூடானது.

"நீ என்னமா சொல்லற"

"ஐயா. இவரு ரொம்ப நல்லவருதாங்க. ஆனா அந்த ஆளு இருக்கிறவரைக்கும் நாங்க நிம்மதியா இருக்க முடியாது. இவரும் தொழில் செய்ய முடியாது. அதுனால நான் போயிடறேங்க."

"சிட்டு நீ ஏன் போகணும். கண்ட சொறி நாயிக்கெல்லாம் பயந்துக்கிட்டு....."

"டேய்! என்னியா சொறி நாயின்னே?" அதுவரை உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த மனோ திடீரென பல்ஸ் மேல் பாய்ந்தான். முதல் கத்திக் குத்து பல்ஸின் விலாவில். அடுத்து அவன் கழுத்துப் பகுதியில். எவ்வளவோ பேர் அவனை விலக்க முயசித்தும், அவன் கை இயங்கிக் கொண்டே இருந்தது. முழுவதுமாக விலக்கி, பல்ஸை விலக்கிப் பார்த்த போது அவன் முழுவதுமாக பஞ்சர் ஆகியிருந்தான்.

"அண்ணே! உன்னை கொன்னுட்டானா அந்த நாயீ..." பல்ஸ் ஆதரவாளன் கதறிக் கொண்டே, தன் இடுப்பிலிருந்து ஒரு ரிவால்வரை எடுத்து கோட்டையை குறி வைத்தான். முதல் குண்டு அவன் கண்களை பதம் பார்த்தது. இரண்டாக மடங்கி விழுந்தவனின் முதுகில் மற்ற குண்டுகள் பொத்தல் போட்டன.

அதன் பிறகு அந்த இடம் போர்க்களமானது. அது முக்கியமில்லை. இந்த தகராறில் இம்மியளவும் பாதிக்காது சிட்டு ஓட்டமெடுத்தாள். இரண்டு மூன்று பஸ்கள் மாறி, கோயம்பேட்டை அடைந்தாள். காலியாக இருந்த திருநெல்வேலி பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். உடம்பில் எங்கோ ஒளித்து வைத்திருந்த செல்லை எடுத்து இயக்கினாள்.

"ஐயா. நான் வடக்கன்குளம் போயிக்கிட்டு இருக்கேங்க. அங்க அல்லாரும் அடிச்சிக்கிட்டு சாவறானுவ. கோட்டை, பல்ஸு ரெண்டு பேருமே அவுட்டு."

"சரி. சரி. நீ ஊருக்கு போய் நான் சொன்ன ஆள பாரு. சின்னதா பொட்டிக் கடை வைக்க உனக்கு உதவி செய்வாரு. உடம்ப விக்கற வேலைய விட்டுட்டு இனிமேலாவது கௌரவமா வாழப் பாரு."

"சரிங்கய்யா."

எதிர் முனையில் செல்லை ஆஃப் செய்த ஏ.சி. ரவி யாதவ், உடனடியாக தன் உயரதிகாரிக்கு தகவல் அனுப்பினார்.

"ஸார்! ஆப்பரேஷன் மோகினி சக்ஸஸ்"

(தினமலர் - வாரமலர் - 07 மார்ச் 2010)