Sunday, 12 December 2010

கொல்வதற்கு வருகிறேன்


முப்பது டிகிரி கோணத்தில் திறந்திருந்த அந்தக் கதவு எனக்கு போதுமானதாக
இருந்தது. ஆனால் ஒரு சின்ன தப்பு நடந்து விட்டது. 'க்ளக்' என்ற ஓசையுடன்
கதவு சாத்திக் கொண்டது!! குளிரூட்டப் பட்ட மிகப் பெரிய அறை. சிறிய ஓசை
கூட மிகத் துல்லியமாக உள்ளே கேட்டது. முக்கியமாக அஜய் சிங்குக்கு!

நான் யாரைக் கொல்ல வேண்டும் என்று வந்திருக்கிறேனோ, அவனுக்குக் கேட்டு
விட்டது! மிக அருகிலேயே, அரை இருட்டில், நெளியும் பாம்பு மாதிரியான
இரானியத் தட்டிகள் இருந்தன. அதன் பின்னால் போய், அதன் இடுக்குகள் வழியாக
அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

லார்ஜில் சரி பாதியை உள்ளே தள்ளியிருந்த அஜய் சிங் எழுந்ததில்
தள்ளாடினான். திரண்டிருந்த தன் தொந்திக்குக் கீழே கவ்வியிருந்த பைஜாமாவை
மேலே தூக்கி விட்டுக் கொண்டான். 'முட்டாளே! காற்றடித்து கூட கதவு
சாத்திக் கொள்ளலாம். அப்படி யோசியேன்?'. இல்லை! இல்லை! அவனுடைய பார்வை
'யாரோ உள்ளே நுழைந்திருக்கிறார்கள்' என்பதாகச் சொன்னது.

அவன் நேராக நான் இருக்கும் இடத்திற்கு வந்தான். அடடா! எல்லாம் தப்பாகவே
போகிறதே!!

வந்தவன், ஐந்தடி தூரத்திலேயே நின்று கொண்டான். நல்ல வேளை!! முகம்
சுருக்கி அவன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

"கோன் ஹை தும்? சாம்னே ஆஜாவ். நஹி தோ....." (டேய்! யார் நீ? நீயா வரயா...
இல்லே...).

கையில் ஒரு பிஸ்டல் துருத்திக் கொண்டிருந்தது. காக்காய் மாதிரி தலையை
அங்கும் இங்கும் திருப்பிக் கொண்டு ஏதாவது அசைவுகள் தென்படுகிறதா என்று
ஆராய்ந்து கொண்டிருந்தான்.

திரைச்சீலைகள் கொஞ்சமாக அலையடிப்பது மாதிரி அசைந்தன. அதற்கு நான்
காரணமில்லை. மீண்டும் ஒரு காட்டுக் கத்தல் கத்தினான். அவன்
புர்புர்ரென்று மூச்சுவிடுவது எனக்கு நன்றாகக் கேட்டது. எனக்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது. 'உன்னை சட்டென கொல்ல இஷ்டமில்லையடா. சாவு பயத்தை
உன்னுடைய ஒவ்வொரு செல்லும் உணர வேண்டும். அனுபவி. நன்றாக அனுபவி.'

சுட்டு விட்டான்!!

திரைச்சீலைகளை கிழித்துக் கொண்டு, பைபர் கிளாஸ் ஷட்டரை துளைத்துக் கொண்டு
சென்றது புல்லட். பிறகு எல்லாமே கோமாளித்தனம்! சுட்டுக் கொண்டே
இருந்தான். ஈரானிய தட்டியை உரசிக் கொண்டு போனது ஒரு புல்லட்.

சரமாரியான புல்லட்டுகளின் சத்தம் கேட்டு, தடதடவென நாலைந்து தடியர்கள்
ஓடிவந்தார்கள்.

"க்யா சாப்?" (என்ன ஆயிற்று ஐயா?) இனி அவர்கள் ஹிந்தியில் பேசுவதை தமிழ்
படுத்திச் சொல்கிறேன்.

"அவன்... அவன் வந்திருக்கான்னு நெனைக்கிறேன்."

"அவன்னா?"

"அதான்.. கோவிந்த் தவே. என்னைக் கொல்ல வந்திருக்கான். அந்த கர்ட்டனுக்கு
பின்னாடி மறைஞ்சிருக்கான். க்விக். அவனை பிடியுங்க."

"கவலையே படாதீங்க. நீங்க கீழே பாதுகாப்பா போங்க. நாங்க அவனை உயிரோடோ
அல்லது பொணமாவோ கொண்டுவரோம்."

நானாவது உங்களிடம் மாட்டிக் கொள்வதாவது. கிடைத்த ஒரு சில வினாடிகளில்,
சிறிதளவே திறந்திருந்த ஷட்டர் வழியாக வெளியேறினேன். வெளிச்சம் இல்லாத
ஸ்ப்ளிட் ஏசியின் அவுட்டர் பின்னால் மறைந்து கொண்டேன்.

எலி பிடிப்பவர்கள் மாதிரி முன்னால் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நான்
இல்லாத இடத்தில் அந்த தடியர்கள் தேடிக் கொண்டிருக்க, நான் அஜய் சிங்கின்
அடுத்தடுத்த இயங்கங்களை கவனிக்கலானேன். 'போடா! போ! எங்கு வேண்டுமானாலும்
போ! யாரை வேண்டுமானாலும் கூட்டிக் கொண்டு வா! இன்று நான் உன்னைக் கொல்வது
நிச்சயம்.'

அவனை நான் ஏன் கொல்ல வேண்டும்? அதற்கு, இந்த மூன்று பத்திரிக்கை
செய்திகளை நீங்கள் படிக்க வேண்டியது மிக அவசியம். இந்தக் கதையின் பின்
புலத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த இளம் அரசு அதிகாரி
கொலை!!!

ராஞ்சி. ஜனவரி 4. நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் முகுந்த்
தவே என்ற 27 வயது இளம் அரசு அதிகாரி உருட்டு கட்டைகளால் அடித்துக்
கொல்லப்பட்டார். ஐ.ஐ.டி. கான்பூர், பி.டெக் பட்டதாரியான இவர், தங்க
நாற்கர தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்த
முயற்சித்ததால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது.

விசில் ஊதினால் கொலை!
முகுந்த் தவே கொலையின் அதிர்ச்சிகர பின்னனி!!

ராஞ்சி. பிப்ரவரி 28. ஊழல்வாதிகளின் கைக்கூலிகளால் கொல்லப்பட்ட முகுந்த்
தவே, தன் மீது உள்ள அச்சுறுத்தலை தகுந்த ஆதாரங்களுடன் தனது உயர்
அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார். கடைசி முயற்சியாக, டெல்லியின்
உட்ச பட்ச அரசியல் மையத்துக்கு ரகசிய கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கு
'விசில் ஊதுதல்' என்று பெயர். யாரிடம் பாதுகாப்பை எதிரிபார்த்தாரோ,
அவர்களே ஊழல்வாதிகளுக்கு துணை போயிருக்கிறார்கள். முகுந்த் தவே கொடுத்த
ரகசிய ஆவணங்கள் சிதைக்கப்பட்டு, அவரும் கொலையாகியிருக்கிறார்.

அண்ணனை கொன்றவர்களை நான் கொல்லுவேன்!
கோவிந்த் தவே பரபரப்பு பேட்டி!!

ராஞ்சி. மார்ச் 15. முகுந்த் தவே கொலை வழக்கில் நாளுக்கு நாள் பரபரப்பு
கூடி வருகிறது. ஐ.ஐ.டி. மாணவர்கள் ஒன்று சேர்ந்து அதிகார, பண பலத்துக்கு
எதிராக தொடங்கிய போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதற்கு நடுவில், நக்ஸல்
தீவிரவாதியான கோவிந்த் தவே (முகுந்த் தவேயின் தம்பி), இந்த வழக்கில்
சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கொல்வேன் என்று
சூளுரைத்திருப்பதாக தெரிகிறது.

அஜய் சிங் புல் வெளியில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருப்பது
தெரிந்தது. அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். எனக்கு
புரிந்துவிட்டது. அஜய் சிங் இங்கிருந்து தப்பிக்கப் போகிறான்.

ஒரு ஜீப் நிறைய போலீஸ் காண்ஸ்டபிள்கள் வந்திறங்கினார்கள். முழங்கையைத்
தாண்டி நீளும் டார்ச்சை அடித்து ஒவ்வொரு இஞ்ச் இஞ்சாக தேடினார்கள். ஓளிக்
கம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தன. மீண்டும்
இடம் மாற வேண்டியதுதானா?

"மேவலால்! அந்த ஸ்பிளிட் ஏ.சி. அவுட்டர் பின்னால செக் பண்ணு" ஒரு
இன்ஸ்பெக்டர் கத்தினார்.

"ஜீ சாப்."

அந்த கான்ஸ்டபிள் ஒளிக்கம்பத்தை என்னை நோக்கி திருப்புவதற்குள் ஒரு
அதிசயம் நடந்தது. எங்கோ ஒரு மூலையில் சலசலப்பு கேட்க அனைவரும் ஓடினர்.

எனக்கு மிக சௌகர்யமாகப் போனது. யாருமே இல்லை! நிதானமாக கீழே வந்து அஜய்
சிங்குக்காக நிறுத்தியிருந்த காரின் டிக்கியில் ஒளிந்து கொண்டேன்.

நெற்றியில் கட்டைவிரலால் தீற்றிய செந்தூரத்துடன் அஜய் சிங் வந்தான்.
கடவுள் படங்கள் பலவற்றை பிரார்த்தித்துக் கொண்டு காரை கிளப்பினான்.
'மவனே. உனக்கு யாரும் உதவப் போவதில்லை. நீ தொலைந்தாய். வா! நீயே வந்து
வலிய மாட்டிக் கொள்கிறாய்!'

"காரை தரோவா செக் செஞ்சுட்டீங்களா?" அஜய் சிங் காரை உருட்டிக் கொண்டே
கேட்டான்.

"ஜீ சாப்." ஒரு கான்ஸ்டபிள் மரியாதைக்கு பின் சீட்டில் எட்டிப்
பார்த்தான். 'முட்டாள்களே! நான் டிக்கியில் அல்லவா இருக்கிறேன்.'

கார் சீறிக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பாய்ந்து, ஒரு நீண்ட
நெடுஞ்சாலையில் பயணிக்கத் தொடங்கியது. 'நீ எங்கு வேண்டுமானாலும் போ!
உன்னை அங்கு கொல்வேன்'.

எனக்கு உடனே லக் அடித்தது. ஆள் அரவமற்ற சாலையில் போய் கொண்டிருக்கும்
போது திடீரென கார் நின்றது. கிளம்ப சண்டித்தனம் செய்தது. அஜய் பானட்டை
திறந்து குடாய்ந்து கொண்டிருந்தபோது, நான் மெதுவாக டிக்கியிலிருந்து
வந்து பின் சீட்டில் ஒளிந்து கொண்டேன்.

அரை மணி நேர போராட்டங்களுக்கு பிறகு கார் உறுமியது. மீண்டும் கார் பயணம்.
அஜய் சிங் சுத்தமாக நொறுங்கிப் போயிருந்தான். உச்சபட்ச ஏ.சியிலும்
அவனுக்கு வியர்த்தது. நான் பின் சீட்டில் கவலையின்றி பயணித்துக்
கொண்டிருந்தேன். ஏதேச்சையாக பின் சீட்டில் திரும்பிப் பார்த்தவன்,
மிரண்டு போனான்.

"நீ! நீ! நீயா?"

அவன் கைகள் ஸ்டியரிங்கிலிருந்து தடுமாறின. கால்களை கன்னாபின்னாவென
உதைத்தான். அவன் கண்கள் கலவரத்தில் பிதுங்கி வெளியே வந்துவிடுவது மாதிரி
இருந்தன. அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறியது. இரண்டு
கைகளையும் விட்டுவிட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டான். 'ப்ளக்'கென அவன்
வாயில் நுரை எட்டிப்பார்த்தது. கைகள் ஒரு பக்கமாக 'விலுக், விலுக்'கென
இழுத்துக் கொண்டன. கார் ரோட்டை விட்டு விலகி, ஒரு மைல் கல் மீது மோதி,
கரப்பான் பூச்சி மாதிரி தலை கீழாய் கவிழ்ந்து ஐம்பது அடிக்கு குறையாமல்
தரையை சிராய்த்துக் கொண்டு போனது. தீப்பொறிகள் சிதறின.

கழுத்து திரும்பிய நிலையில் அவன் தன் கடைசி மூச்சை விட காத்திருந்தான்.
நான் உரக்க சப்தமிட்டேன். அவன் அதை கேட்டானா தெரியவில்லை. "நான்தான்டா.
என்னை துடிக்க துடிக்க ஆள் வைத்து கொன்றாயல்லவா? இப்போ நீ துடிக்க
துடிக்க சாவாதை நான் பார்க்கிறேன். செத்துப்போடா சதிகாரா!"

எனக்கு காற்று புகும் சிறு இடைவெளி போதும். கிடைத்த சிறு இடைவெளியில்
வழிந்து நான் வெளியே வந்தேன். இன்னும் மூன்று பேர் இருக்கிறார்கள்.
எனக்கு அவசர வேலைகள் மீதி இருக்கின்றன.

(தினமலர் - வாரமலர் - 14 நவம்பர் 2010)

1 comment:

சீனு said...

அருமையான பேய் கதை சார். நம்ப முடியாத நேரத்தில் ஒரு திருப்பம்