Saturday 12 May, 2012

Rags to riches

அடுத்த மாதம் ஜூன் 6 தேதி முதல் ஒரு வாரத்துக்கு குடும்பத்துடன் சிங்கப்பூர் மலேஷியா போகிறேன். முதன் முறையாக அயல் நாடு பயணம். Rags to riches என்கிற ஆங்கில சொற்கள் எனக்கு பொருந்தும் என நினைக்கிறேன். மெலட்டூர் என்கிற கிராமத்தில் வருடத்திற்கு 15 ரூபாய் செலவில் அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறேன். படிக்கும் காலத்தில் ஒரு தடவை கூட ரயிலில் போனது கிடையாது. கடற்கரையை பார்த்தது கிடையாது. கப்பல் தெரியாது. விமானம் கூட எப்பவாது எங்கள் கிராம ஆகாயத்தில் ஒரு சிறு பறவை மாதிரி வெகு உயரத்தில் பறக்கும் போது பார்த்திருக்கிறேன். அதிக விஷமம் செய்வதால் எனது டிராயரின் பின் பக்கத்தில் ஓட்டையாகிவிடும். ஒட்டு துணி கொடுத்து ஓட்டையை மறைத்திருக்கிறேன். சிறு ஓட்டையாக இருக்கும்போது பள்ளி சக நண்பர்கள் அதில் சிறு காகிதங்கள் போஸ்ட் பாக்ஸ் மாதிரி போட்டு கிண்டல் பண்ணியிருக்கிறார்கள். ரொம்ப ஏழ்மை இல்லை. சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை. ஆனால் இந்த மாதிரி சுற்றுலாவெல்லாம் ஒரு ஆடம்பரமாக எட்டாக் கனியாக இருந்தது. எனது சித்தப்பாக்கள் மும்பையில் இருந்தார்கள் .அவர்கள் கோடை விடுமுறைக்கு மெலட்டூர் வருவார்கள். அவர்கள் பேஸ்ட் பிரஷ் உபயோகிப்பார்கள். நாங்கள் கோபால் பல் பொடியை விரல்களால் தேய்ப்பவர்கள். அந்த சில நாட்கள் மட்டும் வாய் மணக்க கோல்கேட் பேஸ்ட் தின்போம். அவர்கள் திரும்பி போகும் போது கொண்டு விடுவதற்கு தஞ்சாவூருக்கு அப்பா போவார். ஒரு சமயம் நானும் வருவேன் என்று அடம்பிடித்து போனேன். காலை வேளை சோழன் எக்ஸ்பிரஸ். முதல் வகுப்பு பெட்டி. டிரெயின் வந்ததும் பக்கி மாதிரி நான் முதலில் ஏறி அந்த முதல் வகுப்பு பெட்டியை மலங்க மலங்க ரசித்தேன். அப்பொது என் சித்தப்பாவின் பெண் 'நீயும் நல்ல வேலை கிடைத்து, இந்த மாதிரி வசதிகளை அடைவாய்' என்று ஆறுதல் கூறினாள். அது பலித்தது. படித்ததும் மும்பை போனேன். நபார்டில் வேலை கிடைத்தது. அடுத்த வருடத்திலேயே முதல் வகுப்பில் சென்னை வந்தேன். அதற்கு அடுத்த இரண்டு வருடத்தில் அப்பா, அம்மாவை டெல்லிக்கு ராஜதானி ஏ.சி. கோச்சில் அழைத்து போனேன். திரும்பி வரும்போது ஏரோபிளேனில் அழைத்து வந்தேன். எங்கள் மூவருக்குமே அது முதல் பயணம். நபார்டில் அதிகாரி ஆனதும் பஸ்ஸில் போவது மாதிரி அடிக்கடி பிளேன் பயணம் ஆனது. கிட்டத்தட்ட 100 முறைக்கு மேல் பிளேன் பயணம் செய்திருப்பேன். ரயில் முதல் வகுப்பு பயணம் என்பதை தாண்டி ஏ.சி. முதல் வகுப்பு வரை பயணம் செய்தாகிவிட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவின் பல பகுதிகளை கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சுற்றியாகிவிட்டது. எழுபதுகளில் ஓட்டை டிராயர் போட்டவன் இன்னும் ஒரு மாதத்தில் சிங்கப்பூர்/மலேஷியா போகப்பொகிறான் என்பதை நினைக்கும் போது வாழ்க்கையின் வீச்சு புரிகிறது. விதையின் வீரியம் மட்டும் முக்கியமில்லை அது விதைக்கப்பட்ட இடமும் முக்கியம் என்பது என் வாழ்க்கை பயணம் சொல்கிறது என்று தெரிகிறது.

Friday 11 May, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - அதற்கான ஒரு ரிஹர்சல்

1. ரூபாய் 1000த்துக்கான கேள்வி -  தூரத்து பச்சை _______ குளிர்ச்சி

ஏ. கண்ணுக்கு  பி. காலுக்கு    சி. கைக்கு   டி. தலைக்கு

2. ரூபாய் 2000த்துக்கான கேள்வி -  சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயர் பெயர் கொண்ட சினிமா நடிகர் யார் ?

ஏ. கமல்   பி, ரஜினி    சி. சிவாஜி    டி. எம்.ஜி.ஆர்

3. ரூபாய் 3000த்துக்கான கேள்வி - சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலை எழுதியவர் யார் ?

ஏ. கல்கி    பி. லஷ்மி    சி. சுஜாதா  டி. ஜெயகாந்தன்

4. ரூபாய் 5000த்துக்கான கேள்வி - சூரிய கிரகனம் என்பது என்ன?

ஏ. வெள்ளி சூரியனை மறைப்பது  பி. சந்திரன் பூமியை மறைப்பது சி. சந்திரன் சூரியனை மறைப்பது  டி. பூமி சூரியனை மறைப்பது

5. ரூ 10000த்துக்கான கேள்வி - புனே நகரம் எந்த மாநிலத்தில் உள்ளது?

ஏ. கேரளா  பி. ஹரியானா   சி. உத்திரபிரதேசம்   டி.மஹாராஷ்டிரா

6. ரூபாய் 20000த்துக்கான கேள்வி - 2016ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக்ஸ் எந்த நகரத்தில் நடக்க இருக்கிறது?

ஏ. மும்பை   பி. ஹாம்பர்க்  சி. டப்ளின்  டி. ரியோடிஜெனிரோ

7. ரூபாய் 40000த்துக்கான கேள்வி - கிராம நிர்வாக அலுவர்கள் என்பவர்கள் எந்த துறையை சார்ந்தவர்கள்?

ஏ. வருவாய் துறை  பி. உள்ளாட்சி துறை  சி. ஊரக மேம்பாட்டு துறை
டி. பொதுப்பணித்துறை

8. ரூபாய் 80000த்துக்கான கேள்வி - ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த நகரம் எது?

ஏ. சண்டிகர்  பி. லூதியானா சி. அமிர்தசரஸ்  டி. லாகூர்

9. ரூபாய் 160000த்துக்கான கேள்வி - பாராக்  _______ ஒபாமா . அமெரிக்க ஜனாதிபதியின் விடுபட்ட நடு பெயர் என்ன?

ஏ. ஹாசன்  பி. ஹுசைன்  சி. ஹென்றி  டி.ராபர்ட்

10. ரூபாய் 3200000த்துக்கான கேள்வி - 1975ல் நடைபெற்ற முதல் உலக கோப்பை இறுதி போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர் கொண்ட அணி எது?

ஏ. இந்தியா  பி. இங்கிலாந்து  சி. பாகிஸ்தான் டி. ஆஸ்திரேலியா

11. ரூபாய் 6400000த்துக்கான கேள்வி - மொகலாய மன்னர் ஹுமாயூனை தோற்கடித்து டில்லியை கைபற்றிய மன்னர் யார்?

ஏ. ஜெங்கிஸ்கான்  பி. ஷெர்ஷா சூரி  சி. கஜினி முகம்மது  டி.இல்துமுஷ்.

12. ரூபாய் 1250000த்துக்கான கேள்வி - எந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் நடந்த போது விளையாட்டு வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள்?

ஏ. 1980 மாஸ்கோ  பி. 2004 ஏதென்ஸ்  சி. 1972 ம்யூனிச்  டி. 1984 லாஸ் ஏஞ்சலஸ்

13. ரூபாய் 2500000த்துக்கான கேள்வி - மஹாபாரதத்தில் சிகண்டியின் முன் ஜென்ம பெயர் என்ன?

ஏ. அம்பிகை   பி. துஸ்யலா  சி. அம்பை  டி. இடும்பி

14. ரூபாய் 5000000த்துக்கான கேள்வி = டாக்ட்ரின் ஆஃப் லாப்ஸ் என்ற கொள்கையை கொண்டு வந்து இந்திய பகுதிகளை கிழக்கிந்திய கம்பனியில் இனைத்த கவர்னர் ஜெனரல் யார்?

ஏ. லார்ட் கானிங்  பி. லார்ட் ரிப்பன்  சி. லார்ட் டல்ஹௌசி  டி. லார்ட் காரன்வாலிஸ்

15. ரூபாய் ஒரு கோடிக்கான கேள்வி - சூப்பர் செவ்வாய் என்பது எந்த நாட்டில் பிரபலம்?

ஏ. இத்தாலி  பி. பிரான்ஸ்   சி. அமெரிக்கா  டி. இங்கிலாந்து




Thursday 10 May, 2012

ரகசிய காமிரா

பத்திர பதிவு அலுவலங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படும். நித்யா நந்தா சாமியார்களின் படுக்கை அறைகளில் சி.சி.டி.வி. பொருத்த வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். இவைகளால் எதுவும் மாறப் போவதில்லை. சார் பதிவாளர் அலுவலகங்களில் எங்கு காமிரா இருக்கிறது, அதன் வீச்சு எதுவரை என்று லஞ்சம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்வார்கள். அதன் வீச்சு இல்லாத இடத்தில் லஞ்சம் வாங்குவதை தொடர்வார்கள். சாமியார்கள் ஒரு படுக்கையறையில் காமிரா பொருத்துவிட்டு இன்னொரு காமிரா இல்லாத அறையில் சல்லாபம் செய்யமுடியுமல்லவா? யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள் இவர்கள்?

திருமலை

சென்ற ஞாயிறு திருமலையில் இருந்தேன். 50 ரூபாய் ஈ டிக்கெட் வாங்கிக்கொண்டு போயிருந்தேன். நங்கள் மொத்தம் 17 பேர். பஸ்டாண்டிலிருந்து கோயிலுக்கு எப்படி போவது என்று தெரியவில்லை. வைகுண்டம் 1 போக வேண்டுமென்றால் கார் வைக்க வேண்டும் என்றார்கள். 200 ரூபாய் பழுத்தது. சாப்பாட்டுக்கு ஒரு புறம். செருப்பு வைக்க ஒரு புறம். லக்கேஜ் வைக்க ஒரு புறம் என்று அலைய வேண்டியிருந்தது. க்யூவில் நிற்க 2 மணிக்கு போக வேண்டும். 1.30க்கே அனுமதித்துவிட்டார்கள். ஆட்டு மந்தை மாதிரி மக்கள். கோயிலில் சாமி பார்க்க நிற்கும் போது கூட அசௌகர்யங்களுக்கு கோபப்பட்டார்கள். சண்டை போட்டார்கள். யாரையும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கூண்டு கூண்டாக தாண்டி வந்தபோது ஒருவரி ஒரு கேட்டை மூடி கொண்டிருந்தார். என்ன என்று விசாரித்தேன். "200 ரூபாய் கொடு, உள்ளே விடுகிறேன்" என்றார். ஸ்வாமியின் கட்டிடத்துக்குள்ளேயே லஞ்சம். இந்த நாடு உருப்பட்டுவிடும். கொடுக்கும் மக்கள் இருக்கும் போது, கேட்பவர்கள் இருக்கத்தானே செய்வார்கள். இரண்டு காரியங்கள் நடந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஒன்று, பக்தர்களை மிருகங்களை போல் நடத்தாமல், அமைதியாக வரிசையில் கடவுளை கான செய்ய வேண்டும். காசு கொடுத்தால் கடவுளின் கழுத்தின் மீது ஏறி உட்காரலாம் என்ற பணதிமிர் கொண்டவர்களை திருமலையின் அடிவாரம் ஓட ஓட அடித்து விரட்ட வேண்டும். நடக்குமா?

தூத்துக்குடி பீச்

எல்லா பீச்சுக்கும் வித்தியாசமாக தூத்துக்குடி பீச் இருக்கிறது. இங்குள்ள மணலில் களி அதிகம் இருப்பதால் நம் வாகனத்தை அலையடிக்கும் இடம் வரை எடுத்துவரலாம். மெரீனாவில் இருப்பது மாதிரி நீண்ட மணல் பகுதி இங்கு மிஸ்ஸிங்க். பார்க்க ஆவலா இருக்கா? அப்ப தூத்துக்குடிக்கு வாங்க.

விளம்பரங்களில் கேவலமானவை, நல்லவை

ரொம்ப மட்டரகமான விளம்பரம் என்று யுனிவர் செல்லின் விளம்பரத்தை சொல்லலாம். நம்மோடு இவ்வளவு காலமாக பழகிய ஒரு பொருளை இப்படியா விடை கொடுப்போம். ஹோம குண்டத்தில் போடுவது, வாஷிங் மெஷினில் போடுவது, பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் போடுவது என்று கடுப்பேற்றும் காட்சிகள். என்ன எதிர்மறையான சிந்தனை? இதை விட மஹா மட்டமான விளம்பரம் இருக்கமுடியாது.

அடுத்த கேவலமான விளம்பரம், கனவன் இல்லாத போது கள்ள காதலன் வந்துவிடுகிறான். திடீரென கனவனும் வந்து விடுகிறான். கள்ள காதலன் வி.ஐ.பி. ஸ்ட்ராலி பேக் விற்பனையாளன் மாதிரி நடித்து கொண்டே ஜன்னல் வழியாக தப்பித்து ஓடிவிடுகிறேன். இந்த மாதிரி விளப்பரம் எடுத்தவர்களை கழுவில் ஏற்றினால் என்ன?

கேவலமான இரண்டு விளம்பரங்களை பற்றி சொல்லிவிட்டு நல்ல விளம்பரங்களை சொல்லாமல் விட்டால் எப்படி? காட்பரி சாக்லெட்டின் இனியதொரு ஆரம்பம் என்ற தலைப்பில் சில மாதங்கள் முன்னால் வந்த விளம்பரம் நான் சொல்லப்போவது. ஒரு பெண் வீட்டை விட்டு ஓடிப்போக தன் காதலன் காரில் கனத்த சோகத்துடன் அமர்ந்து, "ம்... போ" என்கிறாள். அதற்கு முன்னால் பின்னால் இருப்பவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு போகலாமே என்று சொல்லி கார் லைட்டை போடுகிறான் காதலன். பின்னால் அவள் அப்பா, அம்மா, சகோதரன். அப்பா, "போகிறதுதான் போகிறாய், ஒரு இனிய ஆரம்பத்துடன் தொடங்கு என்று காட்பரி சாக்லெட்டை நீட்டுகிறாள். அப்போது அந்த பெண் காட்டும் முக உணர்ச்சிகள் பிரமாதம். கொஞ்சம் அதிர்ச்சி. அதிர்ச்சியை தொடர்ந்து மகிழ்ச்சி. அதை விட அந்த சகோதரன், ஓகே. ஓகே. பரவாயில்லை, சாக்லெட் சாப்பிடு என்று சைகை காட்டுவதும் பிரமாதம். மொத்தத்தில் அந்த விளம்பரம் ஒரு உணர்ச்சி குவியல். இன்னும் ஒரு ரசனையான விஷயம், அந்த பெண் வீட்டை விட்டு வரும் போது தனது டெட்டி கரடியை எடுத்துக் கொண்டு கடைசியாக தன் குடும்ப போட்டோவை பார்த்துவிட்டு வருவாள். அதன் பிறகு அந்த தீமில் வந்த எந்த விளம்பரங்களும் மனசில் நிற்கவில்லை.·

Wednesday 2 May, 2012

எல்லாரும் திருந்திட்டாங்களாம்!!!!!

 கொஞ்ச நேரத்துக்கு முன்னால் என் நண்பன் ஒரு ஈமெயில் தட்டியிருந்தான். அதை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். "மாமு, மேட்டர் கேள்வி பட்டியா? இல்லேன்னா, எல்லா நியூஸ் சேனலையும் பாரு. பார்லிமென்ட்ல எல்லா எம்.பி.க்களும் ஒன்னா ஒரு தீர்மாணம் போட்டிருக்காங்களாம். இனிமே ஊழலே நடக்காமா பார்த்திக்குவோம். ஊழல் ஆசாமிங்க யாரா இருந்தாலும் இன்னும் இரண்டே வாரத்திலே அவிங்களை கோர்ட்ல நிறுத்துவோம்னு தீர்மானமே போட்டுட்டாங்க. அதுவும் பாஸ் ஆயிடுச்சு. இப்ப ராஜ்ய சபாவில மேட்டர் ஓடிக்கிட்டு இருக்கு. ஒடனே சுறுசுறுப்பான நம்ம பிரதமர், யார் யார் வெளிநாட்ல துட்டு வைச்சிருக்காங்களோ அவிங்க இன்னும் ரெண்டே வாரத்துல புட்டு புட்டு வைச்சிட்டா தப்பிப்பாங்க. இல்லேன்னா, கம்பி என்ன வேண்டியதுதான்னு அறிவிச்சிட்டாராம். இது மட்டுமா? இன்னும் என்னன்னவோ ஆயிகிட்டு இருக்குது. எல்லா ஸ்டேட்டுலேயும் இதே மாதிரி எம்.எல்.ஏக்களும் தீர்மானம் போடப் போறாங்களாம். ஊழல் இல்லென்னா, லஞ்சத்துக்கு எங்கே வேலை? அதனால நாங்க லஞ்சத்தை ஒட்டு மொத்தமா ஒழிப்போம். அப்படியும் லஞ்சம் வாங்குறவங்களை புடுச்சு கொடுப்போம்னு ஒவ்வொரு அதிகாரிகள் யூனியனும் பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்காங்க. என்னால நம்பவே முடியலைடா. பார்த்து மெர்சலாயிட்டேன்" இப்படி ஒரு மெயில் வந்தால் தலை கிறுகிறுக்காது. நானும் முட்டாள் மாதிரி எல்லா சேனலையும் பார்த்தேன். ஒன்னும் அந்த மாதிரி இல்லை. மீண்டும் இன்பாக்ஸை திறந்தால், " மாமு. நேத்து சங்கர் படம் பார்த்தேன். அடுத்தாப்பல ஏதோ படம் எடுக்க ரூம் போட்டு யோசிக்கிறாங்களாம். சரி, என்னால ரூமெல்லாம் போடமுடியாது. அதனால மோட்டு வளையை பார்த்துக்கிட்டே யோசிச்சேன். அதான் மேட்டரு". டாஸ்மாக் சரக்கு அடிச்சிட்டு கவுத்து கெடக்கறனுங்க, எதுக்கு சங்கர் படம் பார்க்கனும்? அது சரி, மே 1ம் தேதி எப்படி சரக்கு கெடைக்கும்? இது ஒரு மேட்டரா? அட போய்யா!