என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Monday, 8 March 2010
ஆபரேஷன் மோஹினி
ஆபரேஷன் மோகினி
இந்த கதைக்கு அதி முக்கியமானவர்கள் இருவர். ஒருவன் கோட்டை மனோ. இன்னொருவன் பல்ஸ் முத்து (பல்ஸர் என்பதன் சுருக்). இருவருமே லோக்கல் தாதாக்கள். சினிமாவில் மட்டுமே இவர்களைப் போன்றவர்களை அநியாயத்துக்கு உயர்த்தி காட்டுவார்கள். கண்கள் சிவக்க, கை நரம்புகள் புடைக்க அவர்கள் செய்யும் ரத்தக்களறிக்கு நியாயம் சொல்வார்கள். மும்பை இறக்குமதி பால் பப்பாளி ஹீரோயின்கள் அவர்களை துரத்தி துரத்தி காதலிப்பார்கள். யதார்தத்தில், இந்த கதையில், கோட்டையும் பல்ஸும் கெட்டவன்கள்.
மணலியில் ஆரம்பித்து மூலக்கடை வரை கோட்டையும் பல்ஸும் வைத்ததுதான் சட்டம். மூலக்கடை நாற்சந்தியில் ஒரு குட்டி நகைக்கடை வைத்திருக்கும் மோதிலால் சேட் ஒரு முறை கரீம் பாயிடம் வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடனை தராமல் இழுத்தடித்தான். கோட்டையும் பல்ஸும் உடனே களத்தில் இறங்கினார்கள். அவர்கள் ஸ்டைலே தனி. முதலில் அதிரடி அடி. அப்புறம்தான் பேச்சு. மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொப்பளிக்க மிதிபட்ட கரப்பான் பூச்சி மாதிரி மோதிலால் சேட் தன் ஏராளமான தொப்பையுடன் பிளிறிக்கொண்டே ஓடியதை முன்னூறு பேருக்கு குறையாமல் வேடிக்கை பார்த்தார்கள். அதில் டிராஃபிக் போலீசும் சேர்த்தி. இது போன்ற சாகச பட்டியல்கள் அருகில் இருக்கும் போலீஸ் ரிகார்டுகளில் ஏகமாக குவிந்து, பழுப்பேறிக் கொண்டிருக்கின்றன. எல்லா அட்டகாசங்களையும் காவல் துறை சகித்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மாண்புமிகு மதிவாணன். அதாவது லோக்கல் பேச்சுவழக்கில் 'அமைச்சர்'.
அந்த பேச்சு வழக்கை மீறி மணலி ஏரியாவில் அவரை யாராவது 'மதிவாணன்' என்று பெயர் சொல்லி அழைத்து விட்டால், அவனும் மோதிலால் சேட் மாதிரி ரத்தம் கக்க வேண்டியிருக்கும். இத்தனைக்கும் மதிவாணன் தற்போது அமைச்சர் இல்லை. இருந்தாலும் அந்த கூட்டத்திற்கு அவர் எப்போதும் அமைச்சர்தான். ஒரு காலத்தில், ஒரு அரசியல் கட்சியால் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டு 'அழகு' பார்க்கப்பட்டவர். ஆனாலும் தன் நிழல் சமாசாரங்களை எந்தவிதத்திலும் இம்மியளவும் குறைக்காமல் இருந்துவிட, அந்த அரசியல் கட்சிக்கு அவரை கழட்டி விடும் நிர்பந்தம் வந்தது. மதிவாணனின் சுட்டுவிரல் அசைவுக்கு வட சென்னை கட்டுப்பட்டு இருப்பதால் பதவிக்கு வந்த எந்த அரசியல் கட்சியும் அவரை எதிர்க்க பயந்தன. எவனுக்கும் பயப்படாமல் தெனாவட்டாக இருந்த மதிவாணன் ஒரு சில மாதங்களாக தூக்கமில்லாமல் அலைகிறார். அவருக்கு செக் வைக்க வந்திருப்பவர், அந்த பகுதிக்கு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உதவி போலீஸ் கமிஷ்னர், திரு ரவி யாதவ்.
ஏ.சி. ரவி யாதவை யாரும் முதலில் கண்டு கொள்ளவில்லை. ஆனால் எந்த அரசியல் குறுக்கீடுகளுக்கும் பயப்படாமல் ஒவ்வொரு ரௌடியாக அவர் உள்ளே தள்ள ஆரம்பிக்க, மற்ற கேடிகள் அரை மப்பில் 'மெர்சலான' குடியர்கள் மாதிரி ஆனார்கள். அதுவும் சில நாட்களுக்கு முன்னால், மாத்தூர் மில்க் காலனியில் ஆஸ்டின் செல்வா என்ற ரௌடியை பட்ட பகலில் ஓட ஓட விரட்டி அவர் சுட்டுக்கொன்றதை பக்கம் பக்கமாக எழுதிய பத்திரிக்கைகள், அடுத்த குறி 'கோட்டை?' என்று பரபரப்பை உண்டாக்கியிருந்தன. ரவி யாதவின் வேகத்துக்கு, இன்னும் வலு சேர்க்கும் விதமாக அங்கே உதயமானவள்தான், சிட்டு.
சிட்டுவுக்கு சொந்த ஊர் சித்தூர். ஆனால் நகரியில்தான் தொழில். நெடுஞ்சாலை லாரி டிரைவர்களூம், க்ளீனர்களூம்தான் அவள் வாடிக்கையாளர்கள். இரவு நேர மாமாக்களின் கமிஷன் கட்டிங்குகள், ஆந்திரா போலீசின் மாமுல்கள், மற்ற இதர தொந்தரவுகள் அவளுக்கு பாரமாக இருந்தன. அந்த சமயத்தில்தான் கோட்டை மனோவுக்கு ஓரிரவு விருந்தாகும் வாய்ப்பு வந்தது. சாதாரணமாக இரவு பெண்களை, வந்த வேலை முடிந்ததும், அந்த நிமிடமே மறந்துவிடும் மனோவுக்கு, சிட்டு வித்தியாசமாக தெரிந்தாள். "மணலிக்கு வருகிறாயா?" என்று கேட்டு விட்டான். சிட்டுவும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தாள். ஆனால் மணலிக்கு வந்ததும் சிட்டு கட்சி மாறினாள். அதற்கு காரணம், பல்ஸ்.
கோட்டை மனோவை பொறுத்தவரை பெண் என்பது இரவு நேரத்தில் வயிறு முட்ட குடித்தபின், தூங்குவதற்கு முன்பு கையாளப்படும் ஒரு பாலியல் வஸ்து. அதற்கு ஆசா பாசங்கள் உண்டு என்பதை அறியாத முரடன். இந்த அனுகுமுறை சிட்டுக்கு எரிச்சலை தந்தது. ஆனால் அவன் மூலமாக அறிமுகமான பல்ஸ் அப்படியல்ல. ஒரு பூவை கையாள்வது மாதிரி சிட்டுவை கையாண்டான். மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் படம் காட்டினான். பெரிய பெரிய ஏ.சி. கடைகளில் அழைத்து போய் அவளுக்கு விதவிதமான மார்டன் உடைகளை வாங்கிக் கொடுத்தான். நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்துப்போய், அரை இருட்டில் அவள் காதுகளில் கிசுகிசுத்தான். ஆண்வர்க்கத்தின் உஷ்ண மூச்சுக்காற்றை மட்டுமே அறிந்து வந்தவள், பல்ஸின் மென்மையில் கிறங்கிப்போனாள். பல்ஸ் கொடுத்த தைரியத்தில் கோட்டைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தாள். தான் அழைத்து வந்தவளை, பல்ஸ் கொத்திக் கொண்டு போனது, கோட்டையை உசுப்பி விட்டது. வந்தது பிரச்சனை. பல்ஸ் முத்து, கோட்டையின் முதல் எதிரியானான்.
முதலில் அடிபொடிகளில் ஆரம்பித்த அடிதடி, கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து நேரடி மோதலுக்கு வழி வகுத்தது. கண்ணாமூச்சி விளையாடுபவர்கள் மாதிரி, நாளுக்கு நாள், மூலைக்கு மூலை, கோட்டையின் ஆட்களும், பல்ஸின் ஆட்களும் அடித்துக் கொண்டார்கள். ரவி யாதவ் சுறுசுறுப்பானார். மதிவாணன் கவலையுற்றார். சமரசம் செய்விக்க, இருவரையும் உடனடியாக அழைத்தார்.
மதிவாணனின் நிழல் சமாசாரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகத்துக்குள் அனைவரும் கூடியிருந்தார்கள். வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ ஒன்று டயர்கள் தேய குலுங்கி நிற்கவும், அனைவரும் சுறுசுறுப்பானர்கள். வெள்ளை வேட்டி, மல் ஜிப்பா, வெள்ளை செருப்பு, அரை கிலோ தங்க ஆபரணங்கள் சகிதமாக மதிவாணன் வெளிப்பட்டார். கையில் அசாதாரண நீள அகலத்தில் உறையிடப்படாத செல் ஒன்று இருந்தது.
"என்னப்பா கோட்டை வந்துட்டானா?"
"எல்லோரும் உங்களுக்காக காத்திருக்காங்கண்ணா. ஆனா...."
"ஆனா என்னய்யா?"
"பல்ஸ், அப்பறம் அந்தப் பொண்ணு?"
"என்னவாம்"
"அண்ணே.... அவங்க வரமாட்டாங்களாம்.... பாதுகாப்பு இல்லையாம்...... நீங்க வந்த
சேதி தெரிஞ்சதும்தான் வருவாங்களாம்"
"வந்துட்டேன்ல. வரச்சொல்லு".
அடுத்த பத்து நிமிட பரபரப்புக்கு பின் பல்ஸ் அவன் சகாக்களுடன் வந்தான். ஆளாளுக்கு விரைத்துக் கொண்டார்கள். முறைத்துக் கொண்டார்கள். மதிவாணனின் அதட்டலுக்கு அடங்கினார்கள்.
"கோட்டை, பல்ஸ், உங்க ரெண்டு பேருக்கும் பொதுவா சொல்லறேன். நீங்க ரெண்டுபட்டு நின்னீங்கன்னா, அது நமக்குதான் வீக்கு. நேத்து வரைக்கும் ப்யூசாகிப் போன பார்ட்டிங்க, நாளைக்கு நம்மளை சப்பையா பார்ப்பாங்க. தேவையா? சரி, மனோ, உன் பிரச்சனை என்னன்னு சொல்லு."
"நான்தான் அந்த பொம்பளையை இட்டாந்தேன். ஒண்ணு அவ எனக்கு.... எனக்கு மட்டும் இருக்கணும். இல்லேன்னா இந்த இடத்தை விட்டே போயிடணும்."
மதிவாணன் பல்ஸ் பக்கம் திரும்பினார்.
"அண்ணே. நான் அவளை கட்டிக்கறதா முடிவு செஞ்சுட்டேன்." பல்ஸ் ஆதரவு கோஷ்டி கைதட்டி ஆரவாரம் செய்ய எதிர் கோஷ்டி சூடானது.
"நீ என்னமா சொல்லற"
"ஐயா. இவரு ரொம்ப நல்லவருதாங்க. ஆனா அந்த ஆளு இருக்கிறவரைக்கும் நாங்க நிம்மதியா இருக்க முடியாது. இவரும் தொழில் செய்ய முடியாது. அதுனால நான் போயிடறேங்க."
"சிட்டு நீ ஏன் போகணும். கண்ட சொறி நாயிக்கெல்லாம் பயந்துக்கிட்டு....."
"டேய்! என்னியா சொறி நாயின்னே?" அதுவரை உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த மனோ திடீரென பல்ஸ் மேல் பாய்ந்தான். முதல் கத்திக் குத்து பல்ஸின் விலாவில். அடுத்து அவன் கழுத்துப் பகுதியில். எவ்வளவோ பேர் அவனை விலக்க முயசித்தும், அவன் கை இயங்கிக் கொண்டே இருந்தது. முழுவதுமாக விலக்கி, பல்ஸை விலக்கிப் பார்த்த போது அவன் முழுவதுமாக பஞ்சர் ஆகியிருந்தான்.
"அண்ணே! உன்னை கொன்னுட்டானா அந்த நாயீ..." பல்ஸ் ஆதரவாளன் கதறிக் கொண்டே, தன் இடுப்பிலிருந்து ஒரு ரிவால்வரை எடுத்து கோட்டையை குறி வைத்தான். முதல் குண்டு அவன் கண்களை பதம் பார்த்தது. இரண்டாக மடங்கி விழுந்தவனின் முதுகில் மற்ற குண்டுகள் பொத்தல் போட்டன.
அதன் பிறகு அந்த இடம் போர்க்களமானது. அது முக்கியமில்லை. இந்த தகராறில் இம்மியளவும் பாதிக்காது சிட்டு ஓட்டமெடுத்தாள். இரண்டு மூன்று பஸ்கள் மாறி, கோயம்பேட்டை அடைந்தாள். காலியாக இருந்த திருநெல்வேலி பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். உடம்பில் எங்கோ ஒளித்து வைத்திருந்த செல்லை எடுத்து இயக்கினாள்.
"ஐயா. நான் வடக்கன்குளம் போயிக்கிட்டு இருக்கேங்க. அங்க அல்லாரும் அடிச்சிக்கிட்டு சாவறானுவ. கோட்டை, பல்ஸு ரெண்டு பேருமே அவுட்டு."
"சரி. சரி. நீ ஊருக்கு போய் நான் சொன்ன ஆள பாரு. சின்னதா பொட்டிக் கடை வைக்க உனக்கு உதவி செய்வாரு. உடம்ப விக்கற வேலைய விட்டுட்டு இனிமேலாவது கௌரவமா வாழப் பாரு."
"சரிங்கய்யா."
எதிர் முனையில் செல்லை ஆஃப் செய்த ஏ.சி. ரவி யாதவ், உடனடியாக தன் உயரதிகாரிக்கு தகவல் அனுப்பினார்.
"ஸார்! ஆப்பரேஷன் மோகினி சக்ஸஸ்"
(தினமலர் - வாரமலர் - 07 மார்ச் 2010)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment