Thursday, 19 July 2007

பார்க்காமலே


பார்க்காமலே

குங்குமம் - 26 ஜூலை 2007

சென்னையில் இருக்கும் என் நண்பன் சரவணனின் மகன் திவாகர் இங்கே ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். என்னை ஒரு முறை போய் பார்த்துவிட்டு கடிதம் எழுது என்று சொல்லியிருந்தான். எங்கே நான் வேவு பார்க்க வந்திருக்கிறேனோ என்று அவன் நினைத்துவிடக் கூடாதே என்று எனக்குள் உதறல் இருந்தது.

"சார் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் இப்பதான் வந்தேன். திவாகர் எங்க போயிருக்கான்னு விசாரிச்சுக்கிட்டு வரேன்." அவன் ரூம்மேட் என் கையில் அன்றைய ஹிண்டுவை திணித்து விட்டு போனான்.

நான் என் பார்வையை ஓட்டினேன். ரூம் சுத்தமோ சுத்தம். டேபிளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் முதுகுகளை ஆராய்ந்தேன். பெரும்பாலும் பாட புத்தகங்கள். விவேகானந்தரின் 'கர்மயோகா'! தி.ஜானகிராமனின் 'உயிர்த்தேன்'! சபாஷ். அதனையொட்டி உள்ளங்கை அளவுக்கு செந்திலாண்டவர். அதன் முன் சிறிய வீபூதி டப்பா. டேபிள் லாம்ப்பின் ஸ்விட்சுக்கு அருகில் வட்ட வடிவ ஸ்டிக்கரில் சச்சின் சிரித்துக் கொண்டிருந்தார். அதனை உறுதிப் படுத்துவது மாதிரி சுவரோரத்தில் ஒரு கிரிக்கெட் மட்டையும் ஒரு ஜோடி பேடும் இருந்தன.

ஆர்வ மிகுதியில் உயிர்த்தேனை உருவினேன். 46ம் பக்கம் திறந்து கொண்டது. முக்கியமான பகுதிகளை அடிக் கோடிட்டு அசிங்கப்படுத்தாமல் பென்சிலால் மார்ஜின் பகுதியில் ஒரு சிறிய டிக் செய்திருந்த பாங்கு ரசிக்க வைத்தது. புக் மார்க்குக்கு அவன் பயன்படுத்தியிருந்தது அவன் தங்கையின் போட்டோ!

வாசலில் அரவம் கேட்க புத்தகத்தை அதன் இடத்தில் சரியாக வைத்தேன்.

"திவாகர் வர லேட்டாகும் சார். இங்க பக்கத்துல ஒரு பிளைன்ட் ஸ்கூல் ஒண்ணு இருக்கு. அங்க ரீடிங்குக்காக போயிருக்கான். அதான்."

"ஓஹோ. சரிப்பா. நான் வரேன். அவன் வந்தா இந்த கார்டை கொடுத்துடு". என் விசிட்டிங் கார்டை நீட்டினேன். அப்போது அந்த உண்டியல் கண்ணில் பட்டது.

"அது என்னப்பா?"

"இதுவா சார். இதுவும் திவாகரின் ஏற்பாடு சார். எங்களோட டெய்லி செலவுல ஒரு ரூபா மிச்சம் பிடிச்சு இதுல போடணும். இது மாதிரி எல்லா ரூம்லேயும் வைச்சுருக்கோம். மாசாமாசம் ஒரு பிளாக்ல சேரும் பணத்தை கலெக்ட் செஞ்சு ஏதாவது சோஷியல் வொர்க் செய்வோம் சார்."

எனக்கு திவாகரைப் பார்த்துத்தான் என் நண்பனுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் போயிற்று.

No comments: