என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Thursday, 23 August 2007
எது வாழ்க்கை?
எது வாழ்க்கை?
அழுகையும் பயமுமாக ஓடிவந்து அம்மாவின் கால்களை கட்டிக் கொண்டாள் நீரஜா. கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பேச்சு உடனடியாக வராததால் வார்த்தைகள் சிக்கின.
"அம்மா. சின்னசாமி தாத்தா செத்துப் போயிட்டாங்களாம். அவங்க வீட்ல எல்லாரும் அழறாங்க. ஏம்மா. செத்துப் போறதுன்னா என்னம்மா ?"
சின்னப் பெண் திக்கித் திணறி கேட்டாள். மரணம் என்றால் என்ன என்பதை அறியாத வயதில் அதை பார்த்திருக்கிறாள்! தாங்கமுடியாத பேரதிர்ச்சிதான். எப்படி இந்த சின்னஞ்சிறு தளிருக்கு இதை புரியவைப்பது? அம்மா கொஞ்சம் குழம்பிப் போனாள். சட்டென ஒரு ஐடியா வந்தது
"நீரஜ். உன்னோட பொம்மைக்கு சாவி கொடுத்தா ஓடறது இல்லையா? ஆனா, கொஞ்ச நேரம் ஓடின பிறகு நின்னுடுதுதானே. அதே மாதிரிதாம்மா செத்துப் போறதும். சாவி கொடுத்த மாதிரி நமக்குள்ள உயிர் ஓடிக்கிட்டு இருக்கு. முறுக்கி விட்டது தீர்ந்து போனது மாதிரி நாம ஒரு நாளைக்கு செத்து போயிடுவோம். ஆனா அது எப்பன்ணு நமக்கு தெரியாதும்மா?"
ஏதோ ஒரளவுக்கு புரிந்த மாதிரி தலையை ஆட்டியது. இன்னும் சில கேள்விகள் கேட்டது. அம்மா அகல் விளக்கை காட்டி ஏதோ சொன்னாள். பிறகு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பேச்சை மாற்றியதில் குழந்தை சகஜ நிலைக்கு வந்தது. அம்மா நிம்மதியானாள்.
ஆனால் மறுநாளே நீரஜா மீண்டும் அம்மாவை நோக்கி ஓடி வந்தாள்.
"அம்மா. நேத்திக்கு அந்த தாத்தா வீட்டில அவ்வளவு அழுதாங்களே. அதெல்லாம் சும்மா. அவங்க வீட்டு டி.வி.ல வடிவேலு காமெடி பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஹோட்டல்லேர்ந்து டி·பன் வாங்கி சாப்பிட்டுகிட்டிருக்காங்க. அய்ய..."
இரு வேறு நிலைகளை கண்டு குழந்தை குழம்பி போயிருக்கிறது. என்ன சொல்லி விளக்கினால் புரிந்து கொள்வாள்? அம்மா யோசித்ததில் பளீரென மனதில் மின்னலடித்தது. நீரஜாவை வாரியள்ளி கைகளில் ஏந்திக் கொண்டாள்.
"நீரஜ். நீ ஒரு பாதையில முக்கியமான வேலைக்காக போயிகிட்டு இருக்கே. திடீர்னு உன் காலுல ஒரு முள்ளு குத்திடுது. 'ஆ'ன்னு கத்துவ. முள்ள எடுத்து எறிவ. ஆனா அதுக்காக நீ போக வேண்டிய பயணத்தை நிறுத்திடுவியா என்ன? கொஞ்ச நேரம் விந்தி விந்தி நடந்திட்டு வலிய மறந்து நடக்க ஆரம்பிச்சிடுவே இல்லையா? அந்த மாதிரிதான் நாம வாழறதும். ஒரு மரணத்துக்காக நாம எல்லாத்தையும் நிறுத்திட்டு அதையே நினைச்சுக்கிட்டு இருக்க முடியாது. புரிஞ்சுதா?"
சிறுமி இந்த முறை விழிகள் விரித்து இரட்டை பின்னல்கள் அசைய தலையை ஆட்டினாள்.v
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment