Sunday 5 August, 2012

கானாமல் போன காட்சிகள்

எம்.ஜி.ஆர். படங்களில் கனவு காட்சி என்று எப்போதும் உண்டு. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். படங்கள் மட்டுமே ஈஸ்ட்மென் கலரில் வரும். மற்றவையெல்லாம் கருப்பு வெள்ளை படங்கள். அதிலும் அந்த கனவு காட்சிகள் அள்ளி அள்ளி கொட்டும் வண்ணங்களில் கதாநாயகியின் கவர்சியில், நல்ல மெல்லிசையில் பிரமாதமாக இருக்கும். அதில் சிகரமாக நான் கருதுவது உரிமைக்  குரல் படத்தில் வரும் விழியே கதை எழுது என்ற கனவு காட்சி பாடல்தான். அதில் முன்பு சொன்ன மூன்றும் தூக்கலாக இருக்கும். மீனவ நண்பனில் தங்கத்தில் முகமெடுத்து, நேற்று இன்று நாளையில் அங்கே வருவது யாரோ... இது போன்ற பல பாடல்கள்.

அப்போது பல விஷயங்கள் அரிதாக இருந்தன. விழியே கதை எழுது பாடலை கேட்க வேண்டுமானால் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். திடீரென இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் சேவை இரண்டில் உரிமைக்குரல் என்று அறிவித்ததும் அது விழியே கதை எழுது பாடலாக இருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும். இந்தியா கிரிக்கெட்டில் காலை வாருவது மாதிரி நம் எண்ணங்களுக்கு எதிர் மாராக பொண்ணா பொறந்தா ஆம்பிளை கிட்டே... என்று வேறு பாடல் வந்து விடும். தூர்தர்ஷனில் விழியே கதை எழுது வரவேண்டுமென்றால் அது அத்தி பூத்த மாதிரிதான்.

ஆனால் இன்று அப்படியல்ல. கூகுள் சர்ச்சில் போய் விழியே கதை எழுது என்று டைப் செய்தால், எம்.ஜி.ஆரும் லதாவும் நமக்காக ஆயிரம் முறை லவ்வுகிறார்கள்.

நான் கல்லூரி படித்த காலத்தில் எனது நண்பன் சேகர் என்பவருக்கு ஒரு தியேட்டர் குத்தகையில் இருந்தது. தஞ்சாவூர் பஸ்டாண்ட் அருகில் ( தற்போது இது பழைய பஸ்டாண்ட்) திருவள்ளுவர் என்ற தியேட்டர்  உள்ளது. அதில் புரொஜெக்டர் ரூமுக்கு  அருகில் உள்ள ரூமில் அவன் தங்கியிருந்தான். ஒரு முறை உரிமைக்குரல் அந்த திரையரங்கில் வெளியாகியது. சரியாக 7.10 க்கு அந்த பாடல் வரும். கிட்டத்தட்ட இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது அந்த சமயத்தில் போய் அந்த பாடலை மட்டும் பார்த்துவிட்டு ஏதோ சந்திரனில் காலடி வைத்து விட்டு வந்த மாதிரி பெருமிதப்பட்டிருக்கிறேன்.

வசதிகள் குறைவாக இருந்த காலங்களில் சந்தோஷங்கள் அதிகமாக இருந்தன.

1 comment:

Raghav said...

http://www.happyplanetindex.org/data/

:)