Friday, 27 September, 2013

உயர்திரு அம்மா அவர்களுக்கு

நீங்கள் மழைநீர் சேகரிப்பு திட்டதிற்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதை இந்த நாடே அறியும். எனவே அது சம்பந்தமாக உங்களிடம் ஒரு சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்.

தமிழக அரசு முத்திரையில் பிரதானமாக விளங்குவது ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் ராஜ கோபுரம்.  அப்படி பெருமைவாய்ந்த அந்த ராஜ கோபுரத்தை கொண்ட அந்த ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி எப்படி இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லவே இந்த பதிவு. 

முதலில் இந்த புகைப்படத்தை பாருங்கள்.


இது நகராட்சியின் மிக நெரிசலான தெருக்களில் (சந்துகளில்) உள்ளடங்கி இருக்கும் ஒரு வைணவ கோயியின் திருக்குளம். இந்த குளத்துக்கு வர வேண்டிய நீர் ஆதாரங்களுக்கான வடிகால்கள் ஆக்கிரமிப்பினால் அடைபட்டு போய்விட்டன. தற்போது ஒரு மிக பெரிய குப்பை குழியாக மாறும் அவலநிலைக்கு உள்ளாகியிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் யாராவது இதை மணல் கொட்டி சமன் செய்து குடியிருப்புகளோ அல்லது வியாபார நிறுவங்களையோ உருவாக்கிவிடலாம். ஆனால் அந்த பகுதியில் பெய்கின்ற மழை நீர் சாக்கடைகள் மூலமாக பெருகி, வடிகால் இல்லாமல் அடைப்பட்டு, வெள்ளமாக பெருக்கெடுத்து, சுகாதார கேடுகளை உருவாக்கி, அரசுக்கு மிகப்பெரிய நிரந்தர தலைவலியை தந்து கொண்டிருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்..

இந்த படத்தை பாருங்கள்.


இந்த கால்வாய் தற்போது  கழிவு நீர் கால்வாயாக மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் இது நல்ல நீர் பெருக்கெடுத்து ஓடிய வாய்க்காலாக இருந்ததாக ஶ்ரீவில்லிப்புத்தூர் மக்கள் சொல்கிறார்கள்.  இது ஏன் இந்த நிலைமைக்கு உள்ளானது?  நீர் வடிகால்களையும், நீர் நிலைகளை பற்றியும் சிறிது கவலைப்படாத சமூகத்தை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை நல்வழிப்படுத்தி, சுற்று சூழலை பாதுகாக்க வேண்டியது உங்கள் தலைமையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அல்லவா?

இந்த படத்தை பாருங்கள்
இது திருமுக்குளம் என்று ஶ்ரீவில்லிப்புத்தூர் மக்கள் மிக பெருமையுடன் சொன்னார்கள். "என்ன கட்டாந்தரையாக இருக்கிறது.  சொட்டு தண்ணீர் கூட இல்லையே?" என்று கேட்டவுடன் தலையை குனிந்து கொண்டார்கள்.

ஶ்ரீவில்லிப்புத்தூரில் வடிகால்களை சீர் அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒவ்வொரு நீர்பிடிப்பு பகுதிகளையும் சங்கிலி தொடர்போல இணைத்து நாம் செயல்பட்டால் இந்த திருமுக்குளம் நீர் ததும்பி நிற்கும் அழகை நீங்கள் பார்க்கலாம்.
இது சாத்தியமே. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிவயல் என்ற கிராமம் உள்ளது. ராமநாதபுரம் என்றாலே நம் கண் முன்னால் வருவது முள்ளு காடுகளும், கரி மூட்டங்களும்தான். ஆனால் நீங்கள் ஒரிவயல் கிராமத்துக்கு போனால் அங்கு ஏதோ திருச்சி, தஞ்சாவூர் டெல்டா பகுதிக்கு வந்துவிட்ட மாதிரி தோண்றும் (தற்போது திருச்சி, தஞ்சாவூர் டெல்டா பகுதிகள்தான் இராமநாதபுரம் மாதிரி ஆகிக் கொண்டிருக்கின்றன.) 
ஒரிவயல் கிராமத்தில் ஒன்றல்ல இரண்டல்ல, நூற்றுக்கும் மேலான பண்ணைக் குட்டைகளை கிரம மக்களே அமைத்திருக்கிறார்கள். கிராமத்தின் பொதுவான ஊரணியில், மழைக்காலம் தாண்டியும் நீர் ததும்பிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் கூலி வேலைக்காக வெளியூர்களுக்கு சென்ற மக்களை கொண்ட கிராமமாக இருந்த நிலை போய், தற்போது கூலிக்கு மற்ற இடங்களிலிருந்து அங்கு ஆட்கள் வருகிறார்கள்.
இதை நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மழை நீர் சேகரிப்பு என்பது என்னவோ கட்டிடங்களில் விழுகின்ற மழைநீரை மண்ணுக்குள் செலுத்துவதில் மட்டும் முடிந்து போகும் ஒரு விஷயம் அல்ல. பெருகும் நீர் எப்படி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு சிரமமில்லாமல் வந்தடைய வேண்டும் என்பதாகும்.
ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியின் இனையதளத்துக்கு போனால் அதில்  மழைநீர் சேகரிப்பு பற்றி விளக்கவுரைகளும், எவ்வளவு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்பட்டிருக்கின்றது என்ற புள்ளிவிவரங்களே சிதறியிருக்கின்றன.

ஒரு முழுமையான மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினால் எப்படி ஒரு நகராட்சி தன் நீராதார சிக்கல்களை தீர்த்துக் கொண்டு, சுற்று சூழல் மாசில்லாமல் ஒரு மாதிரி நகராட்சியாகவும், மற்ற நகராட்சிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், ஒரு பயிற்சி களமாகவும் இருக்கும் என்பதற்கு ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியையே ஒரு சோதனை முயற்சியாக எடுத்துக் கொள்ளலாம்.

எனவே, நான் சுருக்கமாக உங்களிடம் வேண்டுவது----

1. ஶ்ரீவில்லிப்புத்தூரின் ஆண்டு மழையளவு, வாய்கால்கள் மூலமாக கிடைக்கும் நீர் அளவுகளை கணக்கிடுங்கள்.

2. அந்த நீர் ஆதாரங்களை எப்படி இயற்கையாக அமைத்துள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் சேமிக்கலாம் என்பதற்க்கு ஒரு திட்ட வரைவு தயார் செய்யச் சொல்லுங்கள்.

3. மக்கள் பங்களிப்போடு நீர் ஆதாரங்களை கெடுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லுங்கள்.

4. நல்ல நீர் பிடிப்பு வடிகால்களையும்  கழிவு நீர் வடிகால்களையும் பிரித்தெடுத்து, கழிவு நீரை சுத்திக்கரிக்கும் நிலையங்களை அமைத்து, கழிவு நீரை சுத்தப்படுத்தி, அவ்வாறு வெளியேறும் நீரை நன்னீர் வடிகால்களுடன் இனைக்க சொல்லுங்கள்.

5. மக்களிடையே திடக்கழிவு மேலாண்மையை பற்றி விழிப்புனர்வு ஏற்பட்டுத்தி, குப்பைகளால் வடிகால்கள் அடைபடும் அவலத்தை நீக்க வழிவகை செய்யச் சொல்லுங்கள்.

6. பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து அதை மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் சாலைகள் போடும் மூலப் பொருட்களாக மாற்றச் சொல்லுங்கள்.

7. மக்கும் குப்பைகளை தனியாக பிரித்து, அதை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக் கொடுங்கள்.

அப்பறம் என்ன? ஶ்ரீவில்லிப்புத்தூர் ஒரு பூத்துக் குலுங்கும் ஒரு அழகிய நகராட்சியாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

1 comment:

Rathnavel Natarajan said...

ஸ்ரீவில்லிபுத்தூரின் நீர் இல்லாமல், நீர் வரும் பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பினாலும், சரியான பராமரிப்பு இல்லாமல் பாழாகியிருப்பதை நண்பர் திரு மெலட்டூர் இரா நடராஜன் அவரது பதிவில் அருமையாக விளக்கியிருக்கிறார். நகராட்சியும், அரசாங்கமும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய. நமது மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நமது பத்திரிகைகளும் - The Hindu, Indian Express, தினமலர், தினத்தந்தி, தினமணி - ஆகிய பத்திரிகைகளும் கவனம் செலுத்தி செய்திகள் வெளிவர செய்ய வேண்டும். இந்த பயனுள்ள பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நீங்கள் எங்கள் ஊருக்கு வந்ததால் எங்கள் ஊருக்கு விடிவு வரட்டும். நன்றி சார் திரு Natarajan Melattur.