Saturday, 12 May 2012

Rags to riches

அடுத்த மாதம் ஜூன் 6 தேதி முதல் ஒரு வாரத்துக்கு குடும்பத்துடன் சிங்கப்பூர் மலேஷியா போகிறேன். முதன் முறையாக அயல் நாடு பயணம். Rags to riches என்கிற ஆங்கில சொற்கள் எனக்கு பொருந்தும் என நினைக்கிறேன். மெலட்டூர் என்கிற கிராமத்தில் வருடத்திற்கு 15 ரூபாய் செலவில் அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறேன். படிக்கும் காலத்தில் ஒரு தடவை கூட ரயிலில் போனது கிடையாது. கடற்கரையை பார்த்தது கிடையாது. கப்பல் தெரியாது. விமானம் கூட எப்பவாது எங்கள் கிராம ஆகாயத்தில் ஒரு சிறு பறவை மாதிரி வெகு உயரத்தில் பறக்கும் போது பார்த்திருக்கிறேன். அதிக விஷமம் செய்வதால் எனது டிராயரின் பின் பக்கத்தில் ஓட்டையாகிவிடும். ஒட்டு துணி கொடுத்து ஓட்டையை மறைத்திருக்கிறேன். சிறு ஓட்டையாக இருக்கும்போது பள்ளி சக நண்பர்கள் அதில் சிறு காகிதங்கள் போஸ்ட் பாக்ஸ் மாதிரி போட்டு கிண்டல் பண்ணியிருக்கிறார்கள். ரொம்ப ஏழ்மை இல்லை. சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை. ஆனால் இந்த மாதிரி சுற்றுலாவெல்லாம் ஒரு ஆடம்பரமாக எட்டாக் கனியாக இருந்தது. எனது சித்தப்பாக்கள் மும்பையில் இருந்தார்கள் .அவர்கள் கோடை விடுமுறைக்கு மெலட்டூர் வருவார்கள். அவர்கள் பேஸ்ட் பிரஷ் உபயோகிப்பார்கள். நாங்கள் கோபால் பல் பொடியை விரல்களால் தேய்ப்பவர்கள். அந்த சில நாட்கள் மட்டும் வாய் மணக்க கோல்கேட் பேஸ்ட் தின்போம். அவர்கள் திரும்பி போகும் போது கொண்டு விடுவதற்கு தஞ்சாவூருக்கு அப்பா போவார். ஒரு சமயம் நானும் வருவேன் என்று அடம்பிடித்து போனேன். காலை வேளை சோழன் எக்ஸ்பிரஸ். முதல் வகுப்பு பெட்டி. டிரெயின் வந்ததும் பக்கி மாதிரி நான் முதலில் ஏறி அந்த முதல் வகுப்பு பெட்டியை மலங்க மலங்க ரசித்தேன். அப்பொது என் சித்தப்பாவின் பெண் 'நீயும் நல்ல வேலை கிடைத்து, இந்த மாதிரி வசதிகளை அடைவாய்' என்று ஆறுதல் கூறினாள். அது பலித்தது. படித்ததும் மும்பை போனேன். நபார்டில் வேலை கிடைத்தது. அடுத்த வருடத்திலேயே முதல் வகுப்பில் சென்னை வந்தேன். அதற்கு அடுத்த இரண்டு வருடத்தில் அப்பா, அம்மாவை டெல்லிக்கு ராஜதானி ஏ.சி. கோச்சில் அழைத்து போனேன். திரும்பி வரும்போது ஏரோபிளேனில் அழைத்து வந்தேன். எங்கள் மூவருக்குமே அது முதல் பயணம். நபார்டில் அதிகாரி ஆனதும் பஸ்ஸில் போவது மாதிரி அடிக்கடி பிளேன் பயணம் ஆனது. கிட்டத்தட்ட 100 முறைக்கு மேல் பிளேன் பயணம் செய்திருப்பேன். ரயில் முதல் வகுப்பு பயணம் என்பதை தாண்டி ஏ.சி. முதல் வகுப்பு வரை பயணம் செய்தாகிவிட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவின் பல பகுதிகளை கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சுற்றியாகிவிட்டது. எழுபதுகளில் ஓட்டை டிராயர் போட்டவன் இன்னும் ஒரு மாதத்தில் சிங்கப்பூர்/மலேஷியா போகப்பொகிறான் என்பதை நினைக்கும் போது வாழ்க்கையின் வீச்சு புரிகிறது. விதையின் வீரியம் மட்டும் முக்கியமில்லை அது விதைக்கப்பட்ட இடமும் முக்கியம் என்பது என் வாழ்க்கை பயணம் சொல்கிறது என்று தெரிகிறது.

2 comments:

Raghav said...

பயணம் இனிதே தொடரட்டும் ....

சீனு said...

எனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் அதை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கின்றேன்


மீண்டு(ம்) வந்தேன்