மெலட்டூரிலிருந்து தஞ்சை வரும்போதெல்லாம் நான் தவறாமல் சிவகங்கை பூங்காவுக்கு போயிருக்கிறேன். தற்போது சிங்கப்பூர் சன்டோஸா போய் வந்த பிறகு சிவகங்ககை பூங்காவெல்லாம் ஜுஜுபி என்று தோன்றலாம். ஆனாலும் என்னை சின்ன வயசில் அது பரவச படுத்தியிருக்கிறது.
சிவகங்கை பூங்காவின் நினைவுகள் அதன் வாசலிலேயே துவங்கி விடுகின்றன. அப்போது பத்து பைசாவுக்கு பால் ஐஸ் என்று ஒன்று கிடைக்கும். இப்போது அது கிடைக்கிறதா? என்ன விலை இருக்கும் என்று தெரியவில்லை. வெள்ளை வெளேரென்று ஸ்வீட்/அரிசி மாவில் ஐஸொடு கொடுத்தமாதிரி இருக்கும். முழு ஐஸையும் அதன் மத்திய குச்சியிலிருந்து விழுந்து விடாமல் ஒரு முறை கூட சாப்பிட்டதில்லை. உள்ளங்கயில் தொடங்கி முழங்கை வரை அது கரைந்து சொட்டும். சாட்சாத் ஷீர சாகரத்திலிருந்து வந்த அந்த அமிரதத்தை விட மனசே வராது. முழங்கையிலிருந்து உள்ளங்கைவரை நக்கும் அந்த ரசனையே தனி. இப்படி நக்கும் போது மிச்சமுள்ள ஐஸை அதன் குச்சியிலிருந்து நழுவிவிட கூடாதே என்ற கவலை வேறு. அன்று தின்ற ஐஸ் இப்போதும் என் நெஞ்சுக்குள் இனிப்பாக இருக்கிறது.
சிவகங்கை கார்டனை சுற்றி வருவதற்கு ஒரு டிரெயின் ஒன்று உண்டு. டிராக்டரை ரயில்வே எஞ்சினாக மாற்றிய மாதிரிதான் அந்த டிரெயினின் இஞ்சின் இருக்கும். பயங்கரமாக சத்தம் போடும். குலுங்கும். என்ன ஆனாலும் அந்த பயணம் அந்த வயதில் போயிங் 380 சமமாகாது. நடுவில் புள்ளிமான் கரடு என்ற ஸ்டேஷன் வேறு வரும். ஸ்டைலாக இறங்கி நிற்போம். வாட்ச்மேன் விடட்டவும் சத்தம் போட்டுக் கொண்டே மீண்டும் ஏறுவோம்.
விலங்குகள் அதிகம் இருந்ததாக சரித்திரம் இல்லை. தரித்திர சூழலில்தான் அன்றும் மிருகங்கள் வாழ்ந்தன. கருங்குரங்குகள் இருக்கும் கூண்டில்தான் அதிகமாக கூட்டம் இருக்கும். கூண்டுக்குள் ஒரு ஊஞ்சல் உண்டு. மக்கள் குரங்குகளாக மாறிவிட உள்ளே இருக்கும் அந்த மிரண்ட ஜந்து ஊஞ்சலை ஓங்கி பின்னங்கால்களால் உதைக்கும். அந்த பெருத்த ஓசை வெளியில் இருக்கும் குரங்குகளை பரவசப்படுத்தும். கையில் இருக்கும் எதை வேண்டுமானாலும் மக்கள் திங்க கொடுப்பார்கள். கிடைப்பதையெல்லாம் தாடைக்கு கீழே அடக்கி வைத்திருக்கு, அந்த குரங்குகள் கொள்ளை அழகு (!)
எப்போதும் உறங்கிக் கொண்டே இருக்கும் முள்ளம்பன்றியையும், புனுகு பூனையையும் பல முறை வருத்தத்தோடு கடந்திருக்கிறேன். மற்றபடி பெரிதாக விலங்கினங்கள் என் நினைவில் வரவில்லை.
அடுத்ததாக குளத்தின் நடுவே உள்ள தீவுக்கு போவதற்கு அரதல் பழசான ஒரு கேபிள் கார் இருக்கும். ஒரு நிமிட மட்டுமே பிரயாணம். ஆனாலும் என்மோ அனுமார் இலங்கையை கடந்தமாதிரி ஒரு பெருமிதம் எங்களுக்கு வரும்.
தற்போது தஞ்சையில் உள்ளவர்கள் சிவகங்கை பூங்காவின் இன்றைய நிலையை எழுதினால் நல்லது. இல்லையேல் நானே அங்கு போய் பார்த்துவிட்டு வரலாம் என்று இருக்கிறேன்.
டெயில் பீஸ்: பால் ஐஸை சொல்லிவிட்டு அதன் அண்ணன் தம்பிகளை சொல்லாமல் விட்டால் எப்படி? கெட்டியான ஐஸ் கட்டி கலர் கல்ராக குச்சியில் செருகப்பட்டிருக்கும். அப்போது அது ஐந்து பைசாதான். கடுக் கடுக்கென்று என் தம்பி கடித்து சாப்பிடுவான். எரிச்சலாக வரும். நான் ஒரு சுக வாசி. அதை சப்பி சப்பி சூம்பு மாதிரி ஆகும் வரை விடமாட்டேன். ஐஸ் ப்ரூட் என்று சொல்லுவார்கள். அது Brute அல்ல, fruit என்று மும்பை போன பிறகு தான் தெரிந்தது. அதை பாக்கியராஜ் கொச்சை படுத்தி சொல்லவும், அது புரிந்துவிடவும், எனக்கு பாக்கிராஜின் மீது மதிப்பு சடாரென குறைந்து போனது.
இந்த பனிகட்டி ஐஸ் ப்ரூட்டுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். அது சேமியா ஐஸ். பொமரேனியன் நாய் குட்டி மாதிரி சடையப்ப வள்ளலாக அந்த ஐஸ் இருக்கும். வாங்கியதும் அதன் பொலிவை பல முறை இப்படியும் அப்படியுமாக பார்த்துவிட்டுதான் அதை சுவைத்திருக்கிறேன். அது அப்போது பத்து பைசா.
அடுத்தது காமார்கட்டு. தற்போது அது இருக்கிறதா. தேங்காயும் வெல்லப்பாகும் கலந்தது. அதே மாதிரி மெலட்டூர் தீமிதியின் போது கலர் கலராக சாக்கட்டி மாதிரி குச்சி மிட்டாய் கிடைக்கும். வாய் முழுக்க கலராகிவிடும். ஆஹா.... அந்த நாள் வாராதோ !!!!!
1 comment:
"பொமரேனியன் நாய் குட்டி மாதிரி சடையப்ப வள்ளலாக அந்த ஐஸ் இருக்கும்" - hahah...
பத்து பைசாவா... 100 பங்குக்கும் மேல் ஏறியிருக்கும் விலை.
பால் ஐஸ், குச்சி ஐஸ் எல்லாம் இப்போது சென்னை போன்ற நகரங்களில் supermarket வாசலில் brand name -ஓடு விற்கிறார்கள்.
முப்பது ரூபாய்க்கு கம்மியாக இருக்காது என்றெண்ணுகிறேன்.
சிவகங்கை பூங்கா சில வருடங்களுக்கு முன்பு போய் வந்த ஞாபகம். என் அப்பா மன்னார்குடியில் இருந்து school tour வந்து tiffin box -உம் தன்னையும் அந்த குளத்தில் நழுவ விட இருந்த கதை ஞாபகம் வந்தது. நான் பார்த்த பொது அந்த குளத்தில் தண்ணீர் சிறிய குட்டையாக எங்கோ இருந்தது. தீவில் இருந்த மண்டபம் பூதத்தின் இருப்பிடம் போல் இருந்தது. rope car எங்கோ உடைந்து கிடந்தது!
Post a Comment