Wednesday, 27 August 2008

எங்கே ஊனம்?


தேவி - 19 ஆகஸ்ட் 2008

"இப்போது உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சியை அளிக்க திரு ப்ரகாஷ் ஆனந்த் அவர்களை அழைக்கிறேன்"

மைக்காளர் அறிவிக்கவும், ஒரு ஒளிவட்டம் சுழன்று அந்தச் சிறுவன் மேல் விழுந்தது. எழுந்த அவன் மேடையை நோக்கி முன்னேறினான். அடுத்த சில நிமிடங்களுக்கு எதிர்பார்ப்புகளுடன் கூடிய அமைதி நிலவியது. அனைவரின் உள்ளத்திலும் இவனா இவ்வளவு பெரிய எலக்ட்ரானிக் கீபோர்டில் பாட்டிசைக்கப் போகிறான் என்ற கேள்வி இருந்தது. காரணம், அவன் ஒரு சிறப்பு குழந்தை. உருவம் பத்து வயதுக்கு உரியதாக இருந்தாலும் அவன் நடையும் செய்கையும் ஐந்து வயது குறைந்தே இருந்தன.

அப்படியும் இப்படியுமாக சரி பார்த்துக் கொண்டிருந்த ப்ரகாஷ், திருப்தி பட்டு, தலை நிமிர்த்தி, மைக்காளரை கேள்வியாக பார்த்தான். அவர் உடனே கட்டைவிரல் உயர்த்தி தலையசைத்தார்.

அவ்வளவுதான்!!! மடை திறந்த வெள்ளமாக ஒரு இனிய இசை கீபோர்டிலிருந்து வெளிப்பட்டது! அது மிக பிரபலமான திரைப்படப் பாடலின் தொடக்க இசை! அப்போது தொடங்கிய மக்களின் ஆச்சரியம் இதழ் விரிக்கும் மலர்களைப் போலே பன்மடங்காகிக் கொண்டே போனது. ப்ரகாஷ் துளிக்கூட தடுமாறவில்லை. பிய்த்து உதறினான். அந்த பிரபல பாடலில் என்னென்ன நெளிவுகள் குழைவுகள் உண்டோ அத்தனையும் 24 காரட்டுகளாக டாண் டாண் என்று வந்து விழுந்தன. மகுடி பாம்பாய் தாளக் கட்டுக்கு ஏற்ப மக்கள் கைதட்டினார்கள். உற்சாகம் பீறிட்டெழுந்தது. பாடல் முடிந்ததே தெரியவில்லை. கைத்தட்டல் ஓய வெகு நேரம் பிடித்தது.

தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரகாஷின் அம்மா வித்யா கண்கலங்கினாள். அருகில் இருந்த கணவன் ஆனந்த் தோள்களில் சாய்ந்து விம்மினாள். பின்னந்தலை மயிர்க் கற்றையை வருடி சமாதனபடுத்திய ஆனந்த், ஆள்காட்டி விரலால் அவள் முகவாயை நிமிர்த்தினான்.

"வித்யா இப்ப நீ என்ன நெனைக்கற சொல்லட்டுமா?"

"ம்....."

"கடவுளே! எனக்கு இப்படி சாதனைகள் படைக்கிற குழந்தையை எதற்காகக் கொடுத்தாய்? சாதாரண குழந்தையை கொடுத்திருந்தாலே நான் திருப்தி பட்டிருப்பேனே! அப்பிடின்னுதானே?"

"ஆமாங்க. என்னால இதையெல்லாம் மகிழ்ச்சியா ஏத்துக்க முடியலைங்க. நான் யாருக்கும் எந்த கெடுதலும்...."

"புரியாம பேசாத. நாமதான் ரணப்பட்டு ஊனமா போயிட்டோம். ப்ரகாஷை பாரேன். எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கான். அவனொட தனி உலகத்தில ராஜா மாதிரி இருக்கான். அங்கே அவனுக்கு எந்த ஊனமும் இல்லை. எதையோ நெனைச்சுக்கிட்டு, இல்லாததுக்கு ஏங்கி வாழ்க்கையை சிக்கலாக்கிக்கிறோம். இதுவரை நாம நமக்காக வாழ்ந்தாச்சு. இனி அவனுக்காக வாழ்வோமே. எரியற தீபத்துக்கு இருக்கும் ரெண்டு பக்க தடுப்பு மாதிரி நாம இருப்போம். வா."

வித்யா ஓடிச் சென்று ப்ரகாஷ் கன்னத்தில் தொடர் முத்தமிட மக்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.

அண்டங்காக்கை


கல்கி - 31 ஆகஸ்ட் 2008

முருகேசனின் அன்றைய காலைப் பொழுது வழக்கத்துக்கு மாறாகத்தான் விடிந்தது. அலாரக்கடிகாரம் மாதிரி தினமும் விடிகாலையில் வந்தெழுப்பும் காகம் இன்று ஏனோ வரவில்லை. மற்ற காக்கைகள் 'கா..கா' என்று கத்தினால் இந்த கிழட்டு அண்டங்காக்கை மட்டும் ஒரு மாதிரி 'க்ர்ர்ஹ்... க்ஹ்' என்று பால்கனி கட்டையில் உட்கார்ந்து கொண்டு அவனை பார்த்து கத்தும். அதன் நாலாவது ரவுண்டில் முருகு கிட்டத்தட்ட விழித்துக் கொள்வான். அரை தூக்கத்தில் அவன் தரையில் சிதறவிடும் மிக்சர் துகள்களையும், நேற்றைய உணவு மிச்சங்களையும் தத்தி தத்தி உள்ளே வந்து உரிமையோடு கொத்திக்கொண்டு போகும். இனி மீண்டும் மறுநாள் காலைதான்! அவனைப் போலவே அந்த காக்கையையும் அவனைத்தவிர யாரும் ரசிப்பாரில்லை, ரட்சிப்பாரில்லை.

விழிப்பு வந்தபோது, அவன் ஒரு சாக்கடைக்கு பக்கத்தில் உருண்டு கிடப்பது மாதிரி உணர்ந்தான். காரம் கலந்த கெட்ட வாடை அவனை சுற்றியிருந்தது. தலையை தூக்க முடியவில்லை. கைகளை அசைத்ததில் பிசுபிசுப்புடன் கம்பிகளாய் என்னவோ ஒட்டிக் கொண்டு வந்தது. ரிஃப்ளெக்ஸ் வேகத்தில் அடுத்த கையை சோர்வாக வீசியதில் 'சுரீரென' சுட்டது. மண்டைக்குள் தீப்பொறிகள் சிதற.... விழித்துக் கொண்டான். சுற்றியிருந்த பகுதிகள் 'அவுட் ஆஃப் போக்கஸில்' மங்கலாக தெரிந்தன. கண்ணுக்குள் ஒரு பிடி உப்பை கொட்டிய மாதிரி எரிச்சலாக இருந்தது.

'பிளாக்கவுட்' குழப்பங்கள் தீர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக நேற்றைய இரவின் மன கசப்புகள் அறுபட்ட காட்சிகளாக வந்து போயின. நினைவுகளின் வேகம் கூட இன்னும் தலையை வலித்தது. பால்கனி கதவு திறந்திருக்க, அதன் வழியாக வந்த காலைச் சூரியகிரணங்கள் அவன் கால்களை சுட்டன. 'விசுக்கென' கால்களை உள்நோக்கி இழுத்ததில் நிலை தடுமாறி இடதுபக்கமாக சரிந்தான். வயிற்றில் இருந்த அமில மிச்சங்கள் அவன் குரல்வளைப்பகுதியை சங்கடப்படுத்தின.

கொரடாச்சேரி சண்முகநாதன் முருகேசன் என்ற பெயரைச் சொல்வதும், எங்கோ ஒரு புற்றில் போய் கொண்டிருக்கும் ஒரு எறும்பை கை காட்டி சொல்வதும் ஒன்றுதான். கொஞ்சம் உணர்வுபூர்வமாக சொல்வதென்றால் முருகேசன் என்ற பெயருக்கு முகமும் இல்லை, முகவரியும் இல்லை. ஆனால், அதே முருகேசன் என்ற நிழல் முகத்துக்கு வெளிச்சம் தந்த செந்தமிழ்ச்செல்வன் என்ற புனைப்பெயரை சொன்னதும் தமிழ் திரைப்படத்துறை வரலாறு சற்று பத்து வருடங்கள் பின்னோக்கி போய் பவ்யமாக தன் பக்கங்களை திறந்து காட்டும்.

அந்த காலம், முருகேசனின் வசந்த காலம். இரண்டே வருடங்களில் மூன்று மெகா ஹிட்டுகள். அதன் பிறகு ஒன்று சுமாராக ஓடி பெயரை காப்பாற்றியது. அதை தொடர்ந்து மீண்டும் இரண்டு ஹிட்டுகள். இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஒல்லிப்பிச்சான் ஹீரோவுக்கு செந்தமிழின் முதல் படத்தால்தான் பிரேக் கிடைத்தது. செந்தமிழ் அறிமுகப்படுத்திய எல்லா ஹீரோயின்களும் இன்றும் காசை அள்ளி ரியல் எஸ்டேட்டில் குவித்து வருகிறார்கள். எங்கும் எப்போதும் பேசப்பட்டவனை அடுத்தடுத்து மூன்றே முன்று படங்கள் ஒரேயடியாக கவிழ்த்து போட்டன. அதில் கடைசியாக அவனை ஒரே வாரத்தில் 'ஊத்தி மூடியது' அவனுடைய சொந்தப்படம். கார், வீடு எல்லாம் போனது. செக் மோசடி வழக்குகள் அவனை நிம்மதியற்று ஓடஓட விரட்டின. சுவரோரம் குவிக்கப்பட்ட குப்பை போல ஆனவனுக்கு குடி உற்ற துணை ஆனது.

சினிமா பார்த்து வெளியே வந்ததும், பிரக்ஞையின்றி நழுவவிடப்படும் சினிமா டிக்கெட்டாக செந்தமிழ்ச்செல்வன் பிடிகள் அற்று காலவெள்ளத்தில் காணாமல் போனான். எழுச்சியை தந்த அதே வேகத்தில், வீழ்ச்சியையும் கொடுத்தது தமிழ் திரைப்பட உலகம். 'நன்றி கெட்ட ....கள்' என்று செந்தமிழ் அடிக்கடி சொல்வது ஒரு ரசிக்கப்படாத காமெடி டிராக் மாதிரி ஆகிவிட்டது.

ஒன்பது மணிவாக்கில்தான் செந்தமிழால் இயல்பாக எழுந்து கொள்ள முடிந்தது. வயிறு முதுகோடு ஒட்டிக்கொண்ட மாதிரி வலித்தது. சட்டைப்பையில் இருக்கும் பனிரெண்டு ரூபாய் காலை நாஷ்டாவுக்கு போதும். அப்புறம்? யோசிக்க யோசிக்க வெறுமைதான் மிஞ்சியது. சம்பந்தமே இல்லாமல், இன்று வராமல் போய்விட்ட காக்கா என்ன ஆனது என்ற கவலையும் மனசை அப்பிக் கொண்டது.

அனிதா அவனைவிட்டு பிரிந்து போய் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவள் இருக்கும் வரை சில்லறை செலவுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. டான்ஸ் மாஸ்டர் செல்லாவின் குழுவில் பத்தோடு பதினொன்றாக ஆடிக் கொண்டிருந்தவள், தற்போது உதவி நடன இயக்குனராக உயர்ந்திருக்கிறாள். செல்லா அவள் மீது அதிக அக்கறை காட்டுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்றைக்கு செல்லாவை கைநீட்டி அடித்திருக்கக் கூடாது.

இரண்டு தெரு தாண்டிதான் அனிதாவின் அப்பா விடு இருக்கிறது. வீட்டை நெருங்கியபோது வாசலில் இரண்டு காகங்களை பார்த்தான். அதில் அவன் காகம் இல்லை. இரண்டும் அழகாய் இருந்தன. ஒன்று அனிதா என்றால் இன்னொன்று? வேண்டாம்.... செல்லா நினைவுகளை ஓரம் கட்டினான்.

அனிதாவின் அப்பா வீட்டுக்கு வெளியெ சேர் போட்டுக்கொண்டு ஒரு பீடியுடன் லொக் லொக்கிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து 'எதற்கு வந்தாய்?' என்பது மாதிரி பார்வையை வீசிவிட்டு, எதிர் பக்கம் திரும்பிக் கொண்டு, தோள் இடுக்குகளில் சொறிந்து கொண்டார். செந்தமிழுக்கு பட்டாசு திரியில் பற்ற வைத்த மாதிரி கோபம் கிளர்ந்தெழுந்தது. அடக்கிக் கொண்டான்.

அனிதா நைட்டியுடன் காலை நாளிதழின் சினிமா பக்கங்களில் மூழ்கியிருந்தாள். அவளும் அப்பனைப் போலவே நிமிர்ந்தாள். வெறுப்புடன் விடுவிடுவென போய், தன் கைப்பையை திறந்து நூறு ரூபாய் தாளை அருகில் இருந்த டேபிள் மீது வைத்தாள்.

"அனிதா. இதுக்கு பதிலா என் மேல காறி துப்பியிருக்கலாம்."

"மானம், மரியாதையெல்லாம் போன உனக்கு காசுதான முக்கியம். எடுத்துக்கிட்டு போ."

"அனிதா. அன்னிக்கி நான் செஞ்சது தப்புதான். எல்லாரும் கைவிட்டுட்டாங்க. நீயும் அப்படி செஞ்சா எப்படி?" வாசல் கதவு அருகில் லொக்லொக் கேட்டது.

"மொதல்ல உன்னை மாத்திக்க முயற்சி பண்ணு. இன்னமும் உன்னோட பழசை புடிச்சுக்கிட்டு தொங்கிக்கிட்டு இருக்கே. விழுந்தவன் வெறியோடு எழுந்திருக்கணும். அடுத்து அடுத்துன்னு அலை பாயணும். புதுசு புதுசா கத்துக்கணும். முதல்ல, தோத்தவன் குடிக்கக் கூடாது. குடிய விடு. எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி ஒரு ஸ்டோரி டிஸ்கஷனுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தேனே? என்ன செஞ்சே? என் மானம் போச்சு"

"நீ நெனைக்கற மாதிரி அவங்கள்லாம் நல்லவங்க இல்லே. என்னை ஏதோ வேண்டா வெறுப்பா சேர்த்துக்கிட்ட மாதிரி, பிச்சை போடற கணக்கா என்கிட்ட நடந்துக்கிட்டாங்க. நான் சொன்ன ஐடியாவையெல்லாம் நேத்து முளைச்ச அசிஸ்டண்ட் டைரக்டர் பசங்க அவங்களுக்குள்ள சிரிச்சு கேவலப்படுத்தினாங்க. குப்பையா படம் எடுக்கிறாங்க."

"காந்தக்ட் சர்டிஃபிகேட் கொடுக்க உன்னை அனுப்பல. சொல்ல சொல்ல கேட்காம ஆடினதோட பலனை இப்ப அனுபவிக்கிற. இன்னிக்கி சினிமா எவ்வளவோ மாறிடுச்சு. உன்னோட ஆகாசத்தில பறக்கறத விட்டுட்டு, தரையில நடக்க பாரு. இப்ப இங்கிருந்து போ." அதற்குள் அவன் அப்பா செந்தமிழை தரதரவென கையைபிடித்து வெளியே இழுத்தார். பீடி நாற்றம் குடலை பிடுங்கியது. நூறு ரூபாய் தாளை சட்டைப்பையில் வலுக்கட்டாயமாகச் சொருகினார்.

"இதான் கடைசி. இனிமே இந்த பக்கம் வராத. நீ வர்றதை பார்த்தா உன் கடன்காரங்க என் வீட்டு சாமான் செட்டை தூக்கிக்கிட்டு போயிடுவானுங்க. எங்களையாவது நிம்மதியா இருக்கவுடு"

கிழவனை எதிர்த்து மல்லுக்கு நிற்க செந்தமிழிடம் மனசிலும், உடம்பிலும் வலுவில்லை. சிற்றுண்டிக்கும், ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கும் சேர்த்து நாற்பது ரூபாய் ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு முன்னாலேயே, காசு கொடுத்தால்தான் சாப்பாடு என்று தெளிவாக சொல்லிவிட்டார் ஹோட்டல் முதலாளி.

"அண்ணெ, மீதி காசு கொடுங்க" அனிதா கொடுத்த நூறை நீட்டினான்.

"அதெப்படி? உன்னோட பழைய கணக்கெல்லாம் எவன் தருவான். போவயா?" முதலாளி செந்தமிழை ஒரு செத்த எலி மாதிரி பார்த்தார்.

"அண்ணே, ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்ணே. ஒருத்தன் கீழே விழுந்தா ஒரேயடியா போயிடணும். இல்லேன்னா இரக்கமே இல்லாம கல்லால அடிச்சே கொன்னுடுவீங்க"

"முருகு. உன்னோட எனக்கு மல்லுகட்டி பேச நேரமில்லே. வியாபாரம் ஆகணும். இடத்தை காலி பண்ணு"

வெளியே ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபோது, காக்கைகளின் பேரிசைச்சல் கேட்டது. காக்கை ஏதாவது இறந்து போனால் மற்ற காக்கைகள் இதே மாதிரிதான் கத்தும். கரையும் காகங்களுக்கு மத்தியில் தன்னுடைய காகம் இருக்கிறதா என்று தேடினான். எதுவுமே அவன் வீட்டுக்கு வரும் அண்டங்காக்கையை போலில்லை.

இன்று மதிய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? ஒரு டி.வி. சீரியலுக்கு இருபது எபிசோடுகள் அவன் இயக்கியிருந்ததற்கு இன்னும் பணம் தரவில்லை. அதில் கொஞ்சம் கேட்டு வாங்கினால் என்ன?

அந்த டி.வி. சீரியல் தயாரிப்பு அலுவலகம் வெறிச்சோடியிருந்தது. வாட்ச்மேன் கூட செந்தமிழை மதிக்கவில்லை. இரண்டு மணிநேரம் கழித்து வரச்சொன்னான். அது மாதிரி நான்கு முறை ஆனது. மாலை ஆறு மணிக்குதான் சீரியல் தயாரிப்பாளர் வந்தார். ஒரு மணி நேரம் கழித்துதான் அவனை உள்ளே அழைத்தார்.

"என்னைய்யா வேணும்? ஏன் தொந்திரவு பண்ணறே?" எடுத்த எடுப்பிலேயே எரிந்து விழுந்தார்.

"சார். என் கணக்கை செட்டில் பண்ணுங்க"

"சரி. நான் செட்டில் பண்ணிடறேன். நீ மத்தவனுக்கெல்லாம் போட்டிருக்கியே பட்டை நாமம், அதை யார் செட்டில் பண்ணறது? அவங்க நோட்டீஸ் கொடுத்திருக்காங்கய்யா."

"சார். வெக்கத்தை விட்டு கேக்கறேன். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கேன். ஏதாவது கொஞ்சமாவது கொடுங்க" இருக்கும் சேரையெல்லாம் விலக்கிவிட்டு குறுக்குவாட்டில் அப்படியே அவர் கால்களில் கீழே விழுந்தான்.

"யோவ். எழுந்திருய்யா. செத்து கித்து போய்டப்போறே. இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு, நீ வேற வில்லங்கம் எதுவும் செஞ்சிடாதே"

திடீரென மனசு மாறி இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அவன் சட்டைப்பையில் திணித்தார். 'இனி மேல் காசு கேட்டு இந்த பக்கம் வரக்கூடாது' என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்.

செந்தமிழ் வெளியே வந்தபோது இருட்டிவிட்டது. மதியம் சாப்பிடாதது வயிற்றை சுண்டி இழுத்தது. ஒரு ஹோட்டலை தேடிய அவன் கண்களில் டாஸ்மாக் கடை கண்களில் பட்டது. மனசு அலைபாய்ந்தது. குவாட்டரை பேண்ட் பாக்கெட்டுக்குள் சொருகிக் கொண்டு, ஆம்லெட்டுக்கு ஆர்டர் கொடுத்தபோது அவன் தோள்களின் மீது இரண்டு கைகள் விழுந்தன. திரும்பியதில்...

"என்ன முருகு. ஆயிரம் ரூபாயை அப்படியே வலிச்சுக்கினு போயிடாலாம்னு பார்க்கிறயா? எங்களுக்கு அதிலே பங்கு வேணாம்?"

"வேணாம் சேகரு. நான் ரொம்ப நொந்திருக்கேன். உன் கணக்கை சீக்கிரம் செட்டில் பண்ணிடறேன்."

செந்தமிழ் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், சேகர் என்பவன் செந்தமிழை இறுக்கி பிடித்துக் கொள்ள அவன் கூட வந்தவன், சட்டை பையிலிருந்த அத்தனை பணத்தையும் காலி செய்தான். திமிறிய செந்தமிழை கீழே தள்ளிவிட்டான். சுதாரித்து எழுந்த செந்தமிழ் காசு போன விரக்த்தியில் அவர்களை நோக்கி ஓடினான். ஏதோ ஒரு யோசனையில் அவர்களை நோக்கி குவார்டரை வீசியடித்தான். அது குறி தப்பி ரோட்டில் விழுந்து உடைந்தது. திரும்பிய அவர்கள் ஒரு வேகத்துடன் வந்து, செந்தமிழை சரமாரியாக தாக்கினார்கள்.

கோடிக்கணக்கான பட்ஜெட்டில் படங்களை இயக்கிய செந்தமிழ்ச்செல்வன் ஒரு சாலையோர சாக்கடைக்கு பக்கத்தில் இரண்டு மணி நேரம் அப்படியே கிடந்திருந்தான். மயக்கம் தெளிந்து எழுந்தபோது அவனிடம் எல்லாம் போய்விட்டிருந்தது. அழ எத்தனித்தான். அது கூட வரவில்லை. 'க்ர்ர்ஹ்... க்ஹ்' என்ற ஓசையே வெளிப்பட்டது.

முதல் முறையாக அவன் தேடிவந்த அந்த அண்டங்காக்கை அவனுக்குள்ளே இருப்பதை உணர்ந்தான்.

Monday, 11 August 2008

பூமராங்



மாதம் - 1

எம்.டி. பிரகாஷ் அதிரிச்சியுடன் கேட்டார். "என்ன ரமேஷ் இது! 150 பேரை வேலையை விட்டு தூக்கணும்னு எழுதியிருக்கீங்க"

ஜி.எம். ரமேஷ் நிதானமாகச் சொன்னார்... "ஆமாம் சார். நம்ம பொருட்கள் மார்கெட்ல நிக்கணும்னா, அதிரடியா விலைகளை கொறைச்சே ஆகணும். இல்லேன்னா, போட்டி கம்பனிகள் நம்மள சாப்பிட்டுட்டுடும். நம்ப தொழில்சாலையிலும், ஆபீஸ்லயும் ஒரு ரகசிய சர்வே செஞ்சேன். அதன்படி 150 பேர் அதிகப்படியா இருக்காங்க. இவங்களை தூக்கிட்டா உற்பத்தி செலவுகள் கணிசமா குறையும்."

"திடீர்னு வேலையை விட்டு எப்படி அனுப்ப முடியும்? எல்லாரும் பல வருஷம் சர்வீஸ் போட்டவங்க. பிரச்சனையாகிடாதா?"

"சார். பிசினெஸ்னு வந்துட்டா நோ சென்ட்டிமென்ட்ஸ். தீ பிடிச்சு குடிசைங்க எரியும்போது, அந்த தீயிலேர்ந்து காப்பாத்த, நல்ல குடிசை கூரைகளை பிரிச்சு எறியறோம் இல்லையா? அந்த மாதிரி மொத்த கம்பனியும் நஷ்டமாகி எல்லோர் வயத்திலேயும் ஈரத்துணி போடறதுக்கு பதிலா ஒரு சிலரை வீட்டு அனுப்பறதுதான் புத்திசாலித்தனம்."

மாதம் - 2

பல தொழிலாளர்கள் டிஸ்மிஸ் செய்யபட்டனர். முரண்டு பிடித்த சிலர் மீது பொய் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு, கடைசியில் மனம் வெறுத்து அவர்களாகவே விலகினர். ரமேஷ் ஒரே தீர்மானமாக இருந்தான். அதன் பலனும் உடனே கிடைத்தது. அதிரடி விலை குறைப்பில், கம்பனியின் லாபம் கிடுகிடுவென உயர்ந்தது.

மாதம் - 3

பிரகாஷ் அவசரம் அவசரமாக ரமேஷை வரவழைத்தார்.

"ரமேஷ்! நம்ம அக்ரிமெண்ட்படி ஒரு மாச நோட்டீஸ் கொடுக்கணும் இல்லையா? அதன்படி இந்த மாசம்தான் உங்களுக்கு கடைசி மாசம்."

"சார்ர்....." அதிர்ந்தான் ரமேஷ்.

"ஆமாம்பா. என் மகன் எம்.பி.ஏ படிப்பை முடிச்சிட்டு அடுத்த மாசம் வர்றான். யோசிச்சு பார்த்தேன். அவன் இருக்கிற பட்சத்திலே உன் வேலை உபரியா பட்டுது. அதனால நீ விலகிடு. எனக்கும் உற்பத்தி செலவுகளை கொறைச்ச மாதிரி ஆகும். சரிதானே?"

(குங்குமம் - 14 ஆகஸ்ட் 2008)

Wednesday, 6 August 2008

பாகவதர்களுக்கு ஒரு நம்பிக்கை விளக்கு




அமுதசுரபி - ஆகஸ்ட் 2008

பக்தி மார்க்கத்தில் நாம சங்கீர்த்தனம்தான் பிரதானம். ஜோதி வடிவான இறைவனை இனிய இசையால் மனமுருகி பாடி அவன் அருளை பெறுவதற்காக எண்ணற்ற பஜனை பாடல்களை அரிய பொக்கிஷங்களாக வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்கள் பாகவதர்கள் என்றழைக்கப்படும் இசை கலைஞர்கள்.

மனசுக்குள் இறைவனை நிலை நிறுத்திக் கொண்டால் அது ஜபம். அதையே கொஞ்சம் இசை சேர்த்து வார்த்தைகளால் அர்ச்சித்தால் அது நாம சங்கீர்த்தனம். "ஒவ்வொரு ன்மீகவாதிக்கும் நாம சங்கீர்த்தனம் என்பது அவன் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் மூச்சாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பஜனை பாடல்கள் என்றால் ஒரு மனம் மகிழ் கலை நிகழ்சியாகவோ அல்லது ஒரு பொழுது போக்கு அம்சமாகவோ எண்ண வேண்டாம்" என்கிறார் உடையாளூர் கல்யாணராமன்.

"எப்படி காலையில் எழுந்தால் பல் தேய்ப்பது, புத்தகம் படிப்பது, பிழைப்புக்காக வேலைக்கு போவது என்று லௌகீக அனுஷ்டானங்கள்¢ல் ஈடுபடுகிறோமோ, அதே போல தினமும் கொஞ்ச நேரமாவது அந்த நாதஸ்வரூபனுக்கு ஒன்றிரெண்டு நாமவளிகள் சொல்வது நமக்கு நல்லது. சிக்கல்கள் நிறைந்த இன்றைய வாழ்க்கையில், நற்சிந்தனைகள் நல்ல செயல்களுக்கு நம்மை இழுத்துச் சென்று நல்ல வினைகளை உண்டாக்கும்" என்கிறார் அவர்.

சபா மேடைகளில் நாம சங்கீர்த்தனம் என்ற புதிய அணுகுமுறையை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் திரு கல்யாணராமன். இது எப்படி சாத்தியமாயிற்று?

"நாங்கள் ஒன்றும் புதிதாக செய்துவிடவில்லை. பஜனை என்றாலே காட்டு கத்தாலாக ஒரு பெரிய கோஷ்டி, சகல வாத்தியங்களுடன் உச்ச ஸ்தாயில் எம்பி எம்பி குதிப்பார்கள். மக்களும் மகுடி பாம்பாக உணர்சிவசப்பட்டு சேர்ந்திசைப்பார்கள் என்ற மனோபாவம் இன்று பல பேர்களுக்கு இருக்கிறது. உண்மை அதுவல்ல. நம் பாகவதர்கள் மிகப் பெரிய இசை பண்டிதர்கள். எல்லா மொழிகளிலும் எல்லா தெய்வங்களையும் மிக அழகாக பாடி வைத்திருக்கிறார்கள். அவைகளை நாங்கள் மாலை தொடுப்பது மாதிரி இன்றைய கால கட்டத்துக்கு ஏற்றவாறு துல்லிய உச்சரிப்பு, சுத்தமான ஸ்வரராக கர்நாடக சங்கீதம், அளவான பக்கவாத்தியம், எல்லோரும் பங்கேற்கும் எளிமையான பாடல்கள் என்று ரசிகர்களுக்கு தருகிறோம். நல்ல சங்கீதம் வேண்டுபவர்களும் திருப்தியடைகிறார்கள். பக்தி மார்கத்தினர்களும் பரவசமடைகிறார்கள். வயது, மொழி, ஜாதி வித்தியாசமில்லாமல் அனைத்து மக்களுக்கும் எளிதில் சென்றடைகிறது. நாம சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவமும் புரிந்து விடுகிறது. அதுதான் நாங்கள் விரும்புவது. எங்களுக்கு கிடைத்த பக்கவாத்திய கலைஞர்கள் எங்களது பொக்கிஷம். அவர்களால் எங்களது எண்ணம் எளிதாகிவிட்டது. அதை விட முக்கியமானது, அவன் ட்டுவிக்கிறான். நாங்கள் (பா)டுகிறோம்." என்கிறார் அவையடக்கத்துடன்.

நாம சங்கீர்த்தனத்தின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்து செ(¡)ல்லுவது மட்டுமில்லாமல் அடுத்த உயரத்திற்கு சென்றிருக்கிறார் உடையாளுர். "ஒரு முறை தூத்துக்குடியில் நாம சங்கீர்த்தனதிற்காக போயிருந்தோம். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒரு யாதவர் ஹார்மோனியம் வாசிக்க வாய்ப்பு கேட்டார். எங்கள் மனசை சங்கடப்படுத்தியது. பாகவதர்கள் பாடிய பாடல்களை பாடி நாம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோமே, ஏன் வசதியற்ற பாகவதர்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பை உருவாக்கக் கூடாது என்று தோன்றியது. அதற்கு காஞ்சி பெரியவரின் சியும் கிடைத்தது. உடனே ‘பாகவதா சேவா டிரஸ்ட்’ என்ற அமைப்பை உருவாக்கி விட்டோம். நாங்கள் கச்சேரிக்காக போகும் இடங்களில்லாம் இன்றைய பாகவதர்களின் நிலமையை எடுத்துச் சொல்லுவோம். சொன்ன மாத்திரத்தில் பொருளுதவி குவிகிறது. இன்று 30 பாகவதர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை அளிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. நாம சங்கீர்த்தனத்தில் என்றுமே சாதி வித்தியசம் இருந்ததில்லை. எனவே சேவா டிரஸ்டில் தற்போது நலிவடைந்த ஓதுவார்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் உடையாளுர்.

"எனது சங்கீதப் பயணம் இத்தோடு முடிவடைந்துவிடவில்லை. இறைவனின் சந்நிதானத்தில் இருந்த நாம சங்கீர்த்தனத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க சபா மேடைகளை ஒரு ஊடகமாகத்தான் பயண்படுத்தி வருகிறேன். இதை மக்கள் இல்லங்களில் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியமென கருதுகிறேன். இன்றைக்கு பாகவதர்கள் பாடிக் கொண்டிருக்கும் தக்ஷிண ப்ராச்சின பஜனை சம்ப்ரதாயத்தை வகுத்து கொடுத்தவர் மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள். அந்த பாதையில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி இளைஞர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த நாம சங்கீர்த்தனத்தை ஒரு அகாடமி வாயிலாக முழுமையாக தருவதற்கு முயற்சித்து வருகிறேன். அதன் பூர்வாங்க வேலைகள் முடிந்து விட்டன. இரண்டு செமஸ்டர்கள் கொண்ட ஒரு வருட பட்டைய படிப்பாக கொண்டு வர உத்தேசித்திருக்கிறோம். இன்னும் ஒரு சில மாதங்களில் அகாடமி அதன் பணியை துவங்கும்" என்று முடித்தார் திரு உடையாளூர் கல்யாண ராமன். நாம சங்கீர்த்தனத்தில் பகாவன் நாமைவைச் சொல்லி 'ஜே' போடுவோம். இங்கே உடையாளூரின் முயற்சி வெற்றியடைய நாமும் ஒரு 'ஜே' போடுவோம்.

பெட்டி செய்தி

பாகவதர்களும் பகவத் ஸ்வரூபங்களே - ஒரு புராணக் கதை

ஒரு முறை நாரதர் வைகுண்டத்தின் வாசலை அடைந்த போது, அதன் வாயிற்காப்போர்களான ஜெயன் விஜயன் கிய இருவரும் அவரை தடுத்தனராம். 'நாராயணனை பார்ப்பதற்கு நீங்கள் தடா போடமுடியாது.' என்று அடம் பிடித்தாராம் நாரதர். அதற்கு வாயிற்காப்போர்கள், 'எம்பெருமான் பூஜை செய்து கொண்டிருக்கிறார். யாரும் தொந்திரவு செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்' என்றனராம். இருந்தாலும் நாரதர் தான் பிடித்தபிடியிலேயே இருக்க, ஒரு வாயிற்காப்போன் உள்ளே போய் நாரதர் வருவதற்கு உத்திரவு கேட்டாராம். அனந்த சயனனும் 'உள்ளே வரச் சொல்' என்றாராம். வந்து பார்த்த நாரதருக்கு சிரிப்பாக வந்ததாம். 'எம் பெருமானே, நாங்கள் உங்களை பூஜித்து மகிழ்கிறோம். நீங்களோ ஒரு பிடி மண்ணை வைத்துக் கொண்டு பூஜை செய்கிறீர்களே. என்ன விந்தை இது? உங்களுக்கு மஹாபாரதப் போர் முடிந்தும் இன்னும் அந்த மண்ணின் மீது இருக்கும் பிரேமை போகவில்லையா?' என்றாராம். அதற்கு அந்த பவளவாய் கமலச் செங்கண் அச்சுதன், ' இதோ நீ பார்க்கிறாயே, இது சாதாரண மண் அல்ல. இது என் பாகவதர்கள் காலடி பட்ட மண். அவர்கள் ஒரு முறை கோவிந்தா என்று அழைத்தற்கே, பிரதியுபகாரமாக என்ன கைங்கர்யம் செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. எனவேதான் என்னால் முடிந்த இந்த பூஜை' என்றாராம்.

Monday, 14 July 2008

...எனவே, இந்தக்கதை முடியவில்லை


ஆனந்த விகடன் 16 ஜூலை 2008

காலை மெரீனா மிகவும் உற்சாகமாக இருந்தது. ப்ளூ டூத் அணிந்த தொப்பையர்களும் வழுக்கையர்களும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வளப்பமான பெண்கள் தங்கள் கணவருடனோ அல்லது சடை நாயுடனோ வாக்கிக் கொண்டிருந்தார்கள். அர்த்தமில்லாமல் ஒரு கூட்டம் உரக்க சிரித்துக் கொண்டிருந்தது. பழுப்பு நிற சூரிய கிரணங்கள் அம்புகளாய் இறங்க ஆரம்பிக்க, வியர்க்க தொடங்கி விட்டது.

அவ்வளவுதான்! என் வாங்கிங் முடிந்து விட்டது. எனது காரை நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனை கவனித்தேன். என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான், நிழல் மாதிரி.

"சார்! போட்டோஸ் பார்க்கறீங்களா?"

மெரீனாவில் இது போன்ற தொந்திரவுகள் நிறைய உண்டு. வேண்டாம் என்றாலும் விடமாட்டார்கள். அவனை ஒதுக்கி, எனது காரை பார்க்கிங் ஸ்லாட்டிலிருந்து ரிவர்ஸ் எடுத்தபோதுதான் அவன் டோன் மாறியது.

"ரமேஷ் சார். உங்க போட்டோஸ்தான் பார்க்கறீங்களா?"

விருட்டென நிமிர்ந்தேன். கார் கண்ணாடியில் ஒரு சாம்பிள் போட்டோவை ஒட்டிய மாதிரி எனக்கு மட்டும் காட்டினான். வெலவெலத்து போனேன். நானும், நம்ருதாவும் தப்பு காரியம் செய்து கொண்டிருந்தோம். இது எப்படி இவனிடம்? யார் எடுத்தார்கள்? எப்படி எடுத்தார்கள்? சுறுசுறுவென வெப்பம் தலைக்கேறியது. ஸ்டியரிங்கிலிருந்த கை நழுவியது.

"டேய்! யார் நீ? ஏது இந்த போட்டோஸ்?" படீரென வெளியே வந்தேன்.

"கூல் டவுன் சார். கூல் டவுன். கொஞ்சம் அப்படி ஒதுக்குபுறமா போய் பிசினெஸ் பேசுவோமா?"

என்னை ஆபத்து சூழ்கிறது. பிளாக் மெயில் செய்கிறான். பொறுக்கி! சட்டையை பிடிக்கப் போனேன். வேண்டாம்! மக்கள் அங்கும் இங்குமாக போய் கொண்டிருக்கிறார்கள்.

காரை வேகமாக ரிவர்ஸ் எடுத்து லைட் ஹவுஸ் தாண்டி ஒரு அமைதியான இடத்தில் நிறுத்தினேன். அதற்குள் அவன் கையில் ரம்மி விளையாடுவது மாதிரி போட்டோக்களை விசிறியாக்கியிருந்தான். அவன் கையிலிருந்து அனைத்தையும் பிடுங்கினேன். சரக் சரக்கென ஒவ்வொன்றாக பார்த்தேன். எல்லாம் அசிங்கமோ அசிங்கம். நம்ருதா தன் காது, மூக்கு, தொப்புள் வளையங்களைத் தவிர வேறு எதுவும் அணிந்திருக்கவில்லை. அதில் வெட்கமும் இல்லை. நானும் முழுக்க உரிக்கப்பட்டிருந்தேன். பிளடி பிட்ச்! ஆசை காட்டி லைட் போட்டு ஏமாற்றியிருக்கிறாள். ஒரு கூட்டமாக செயல்பட்டு என்னை பொறி வைத்து மாட்ட வைத்திருக்கிறாள். போட்டோக்களை அவன் முகத்தில் விசிறியடித்தேன். கிட்டத்தட்ட ஒரு எலி மாதிரிதான் என்னால் முழிக்க முடிந்தது. அவமானத்திலும் வெறுப்பிலும் மூச்சுக்காற்று தாறுமாறானது. நெஞ்சை அடைத்தது.

"மிஸ்டர் ரமேஷ். ஆர்.எல்.எம்.இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர். இளம் தொழிலதிபர். வயசு நாற்பது. சொத்து மதிப்பு ஐநூறு கோடி இருக்கலாம். சமூகத்தில் ரொம்ப நல்ல பெயர். ஆனால் கொஞ்ச சபல புத்தி. ரகசியமாக சில தப்புகள் அடிக்கடி செய்வார். அது தெரியாமல் இருக்க என்ன விலை வேண்டுமானலும் தருவார். வீடியோவும் இருக்கு, ரமேஷ் சார். பார்க்கறீங்களா?"

"ராஸ்கல். என்ன திமிரு இருந்தா என் பேர் சொல்லி கூப்பிடுவே?". கையை ஓங்கினேன். அது இயலாமையில் அப்படியே நின்றது. அவன் கொஞ்சமும் கவலைப்படவில்லை. நிதானமாக போட்டோக்களை பொறுக்கிக் கொண்டிருந்தான்..

"எனக்கு அர்ஜெண்டா இருபது லட்சம் வேணும். அதுவும் நாளைக்குள்ளே. எங்கே வரட்டும்" என்றான். அவன் சிரித்தபோது பல்வரிசை வாழைப்பூவை ஞாபகப்படுத்தியது.

என்னால் ஆரம்ப ஷாக்கிலிருந்தே வெளிவர முடியவில்லை. பத்தே நிமிஷ சபலம் எப்படி கொண்டுபோய் விட்டிருக்கிறது? என்னை நானே நொந்து கொண்டேன். வெறுப்பில் ஸ்டியரிங்கை குத்தினேன். "போடா. என்ன மிரட்டரயா? நீ யார் கிட்டே வேணுமின்னாலும் காட்டிக்க. நான் ஒரு பைசா கூட தர முடியாது?

"ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க. உடம்புக்கு ஆகாது. நான் வரேன் சார். நாளைக்கு ஹோட்டல் ப்ரசிடெண்ட்ல எட்டு மணிக்கு சந்திக்கிறோம். அடுத்த ரவுண்டு பேச்சு வார்த்தை நடத்தறோம். மொதல்ல ஒண்ணு புரிஞ்சுக்குங்க. போலீசுக்கு போனீங்க, அப்பறம் நடக்கறதே வேற. ஜாக்கிரதை. வர்ட்டா"

போய்விட்டான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிளாட்பாரத்தில் காரை ஏற்றி அவனை கொன்று விடலாமா என்று கூட தோன்றியது. அது முடியாது என்றே பட்டது. அவன் காற்றில் கரைந்து போய் விட்டான்.

'ரமேஷ். நான் உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன். ச்சீ! நீ இவ்வளவு கேவலமானவனா நீ" இது அனிதா. "உன்னை அப்பான்னு சொல்லிக்கவே பிடிக்கலே." இது ப்ரீதி. 'இளம் தொழிலதிபரின் காம லீலைகள்' பத்திரிக்கைகளில் பரபரப்பு செய்திகள்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இருபது லட்சமென்ன, ஒரு கோடி கொடுத்தாலும், அவன் கேட்டுக் கொண்டே இருப்பான். என்னால் நிம்மதியாக இருக்கமுடியாது. ஆனால் போலீஸ் வேண்டாம். திடீரென கிரீஷ் ஞாபகம் வந்தது. டாஷ் போர்டில் குடாய்ந்ததில் அவன் கார்டு கிடைத்தது. சென்னை ப்ரைவேட் போலீஸ்!

"கிரீஷ். ஐயாம் இன் ட்ரபுள்" எல்லா விவரங்களையும் சொன்னேன்.

"குட். நீ நேரடியாக என் அலுவலகத்துக்கு வராமல் செல்லில் பேசினாயே அதுவே ஒரு புத்திசாலித்தனம். இனி உன்னோட ஒவ்வொரு அசைவையும் அந்த கூட்டம் கவனிக்கும். அதனால ஜாக்கிரதை. இன்னிக்கு பதினொரு மணிக்கு உன் கம்பெனிக்கு வாட்டர் கூலர் விற்கும் மார்கெடிங் ஆசாமி மாதிரி என் ஸ்டாப் ரெண்டு பேர் வருவாங்க. அவங்க அடிப்படை தகவல்கள் சேகரிப்பாங்க. நீ கவலைப்படாதே. கோழியை அமுக்குவது மாதிரி எல்லாரையும் அமுக்கிடறேன்."

கிரீஷ் சொன்ன மாதிரியே இருவர் வந்தனர். வாய்ஸ் ரெக்கார்டரில் ஆதி முதல் அந்தம் வரை எல்லா விஷயங்களையும் துருவித் துருவி கேட்டனர். நம்ருதா சம்பந்தப்பட்ட எல்லா குப்பைகளையும் கேட்டு வாங்கிக் கொண்டனர்.

"சார். எங்கள் வேலை முடிஞ்சிடுச்சு. எங்கள் தலைவர்கிட்டேயிருந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான விவரங்கள் உங்களுக்கு வரும். மனசுல நோட் பண்ணிக்குங்க, இந்த கேஸின் ரகசிய சங்கேத வார்த்தை 'ரமேஷ் சிவலிங்கம் 45' அதாவது 'ஆர்.எஸ்.45'. நாங்கள் வர்றோம்."

ஐந்து மணிக்கு கிரீஷ் போன் செய்தான். "ரமேஷ் நாளைக்கு அந்த ஆளை சந்திக்கப் போ. சும்மா இரண்டு லட்சம் கொடு. இன்னும் டைம் வாங்கு. தைரியமாக எதிர் கேள்விகள் கேள். நீ எந்த டேபிளில் உட்காருகிறாயோ, அந்த டேபிளுக்கான சர்வர்களாக எங்கள் ஸ்டாப் இருப்பார்கள். ரகசியமாக போட்டோக்கள் எடுப்பார்கள். இன்னும் அரை மணியில் உனக்கு ஒரு கூரியர் வரும். அதில் ஒரு மோதிரம் மாதிரி ஒன்று இருக்கும். அதை உன் கையில் போட்டுக்கொள். அது பவர்·புல் மைக்ரோ போன். பார்த்தால் அப்படி தெரியாது. கார் பார்கிங்கிலிருந்து எங்கள் ஆட்கள் உன் பேச்சு அனைத்தையும் ரிகார்ட் செய்வார்கள்."

"கிரீஷ்! எந்த சிக்கலும் இல்லாமல் விஷயத்தை முடித்துவிடுவாய் அல்லவா. எனக்கு பயமாயிருக்கிறது. பணம் பெரிதில்லை. ஆனால்....?'

"நான் எதிர்பார்த்ததை விட அவர்களின் நெட்வொர்க் கொஞ்சம் சிறியதுதான் என்று நினைக்கிறேன். அவர்களை ரவுண்டு கட்டி பிடிப்பதை விட அவர்கள் பிளாக் மெயில் செய்கிறார்கள் என்பதற்கான ஆவனங்களை தயார் செய்ய வேண்டும். அப்போதுதான் போலீஸ் எங்களை நம்பும். சினிமா மாதிரி அதிரடியாக செய்துவிடலாம் என்று நினைக்காதே. எங்களுக்கு பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன."

மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் நான் அங்கே போய்விட்டேன். ஆனால் அவன் அரை மணி கழித்துதான் வந்தான். கொடுத்த இரண்டு லட்சத்தை முகத்திலடித்தான். நான் அசரவில்லை. 'சிங்கிள் பேமெண்ட். எவ்வளவு வேண்டுமானலும் சொல்' என்றேன். ஒரு கோடி கேட்டான். ஒரு வாரம் டைம் கேட்டேன். 'அதன் பிறகும் உன் தொந்திரவுகள் தொடர்ந்தால் என் நடவடிக்கைகள் வேறு விதமாக இருக்கும்' என்று மிரட்டினேன். முனகிக் கொண்டே போனான்.

மூன்றே நாட்களில் ஒரு மாலை வேளையில் கிரீஷிடமிருந்து தகவல் வந்தது. "ஆர்.எஸ்.45 சக்ஸஸ். உடனே என் அலுவலகத்து வருகிறாயா?" என்றான். போனேன்.

"ரமேஷ். பார்ட்டி இந்த வேலைக்கு கொஞ்சம் புதுசு. மாமா வேலையிலிருந்து இப்போதுதான் பிளாக் மெயிலுக்கு வந்திருக்கிறான். உன்னை அவன் சந்தித்த அன்றைய தினமே அவன் செல் போனையும் பர்ஸையும் ஆள் வைத்து அடித்து பிடுங்கினோம். அதன் மூலம் அவன் கூட்டத்தினரின் யார்? எங்கே இருக்கிறார்கள் என்ற விவரங்கள் செல் கம்பனிகள் மூலமாக கிடைத்தது. கிரெடிட் கார்டுகள், வங்கிக் கணக்குகள் எல்லாவற்றையும் அசுர வேகத்தில் முடக்கினோம். போதுமான விவரங்கள் கிடைத்ததும், பைல் தயார் செய்து, போலீஸ் உதவியுடன் ஒவ்வொருவராக அமுக்கிவிட்டோம். அவர்கள் மேல் ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் இருந்ததால் அவர்களை பிடிக்க நாங்கள் போலீசுக்கு உதவிய மாதிரி ஆகிவிட்டது. ஸ்டில் காமிரா, மூவி காமிரா, கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க், சிடி, பென் டிரைவ் என்று சகலத்தையும் அள்ளிக் கொண்டு வந்துவிட்டேன். எல்லாம் பிடுங்கப்பட்டதும் அவன் குதியாய் குதித்தான். போலீஸ் அனுமதியுடன் மூஞ்சியில் ஒரு குத்து விட்டேன்."

"ரொம்ப தாங்கஸ் கிரீஷ். நான் ஒழிந்தேன் என்று நினைத்தேன். நீதான் காப்பாற்றியிருக்கிறாய். என்ன வேண்டும் என்று சொல். தருகிறேன்."

"இந்த நாலு நாட்களில் எக்கசக்கமாக என் ஆட்கள் உழைத்திருக்கிறார்கள். ஒரு பெரிய அமௌண்டுக்கு எங்கள் கம்பனியின் சின்ன பில் வரும். செட்டில் செய்துவிடு. இது பார்ட் ஒன்"

"என்ன பார்ட் ஒன்னா?"

"ஆமாம். பார்ட் டூ. உன்னோடு இன்னொரு முக்கியமான விஷயம் பேசணுமே" என்றான் நமுட்டு சிரிப்புடன்.

நான் அதிர்ந்து போனேன். "டேய்! நீ.... நீ...."

"முட்டாளே. பதறாதே. நான் உன்னிடம் நிதி கேட்கப்போவதில்லை. நீதி சொல்லப்போகிறேன். கையில் கோடிக்கணக்கில் காசு புரண்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்காதே. கொஞ்சம் நிதானமாக இரு. ஒழுங்காக வாழு."

"அப்படியே ஆகட்டும் என் குருவே" ஜப்பானிய ஸ்டைலில் குனிந்து கிரீஷ¤க்கு வணக்கம் தெரிவித்தேன்.

பின் குறிப்பு:

இந்த கதை இத்துடன் முடிவடையவில்லை. சென்னை ப்ரைவேட் போலீஸ் அந்த பிளாக் மெயில் ஆசாமியை சுற்றி வளைப்பதற்கு முன்னால், அவன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் கிராமத்தில் இருக்கும் தன் நண்பனுக்கு 'ஜாக்கிரதையாக பத்திரப்படுத்து' என்ற குறிப்புடன் ஒரு சின்ன பார்சல் அனுப்பியிருந்தான். அதற்குள்ளே இருந்த சிடியில் ரமேஷ¤ம், நம்ருதாவும் தப்பு காரியம் செய்து கொண்டிருந்தார்கள்.

புதிய நீதி - எந்த குற்றத்தையும் முழுமையாக அழிக்க முடியாது. எனவே இந்தக் கதை இன்னும் முடிவடையவில்லை.

Monday, 16 June 2008

உதித் நாராயணுக்கு ஒரு திறந்த கடிதம்

உயர்திரு உதித் நாராயண் அவர்களுக்கு

உங்களுக்கு தமிழ் தெரியாதுதான். இருந்தாலும் இந்தக் கடிதம் தமிழில் எழுதப்படுவதன் காரணம், உங்களுக்கு தமிழ் திரைப்படத்துறையோடு மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதைவிட, நான் சொல்ல வருவது அரை மயக்கத்திலிருக்கும் என் இனிய தமிழ் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதுதான்.

சமீபத்தில் வெளியான 'யாரடி நீ மோகினி' என்ற திரைப்படத்தில் நீங்கள் பாடிய 'எங்கேயோ பார்த்த மயக்கம்...' என்ற பாடலை கேட்க வேண்டிய துர்பாக்கியத்தை நான் அடைந்தேன். நீங்கள் செய்திருப்பது அப்பட்டமான தமிழ்ப் படுகொலை. ஒவ்வெரு வார்த்தையையும் கடித்து, துப்பியிருக்கிறீர்கள். உங்கள் வரிகள், எங்கள் காதுகளுக்குப் போய், சிறிது கால அவகாசத்துக்கு பிறகு, புத்தி மூலமாக மொழிமாற்றம்(!) ஆன பிறகுதான், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது.

நீங்கள் தமிழில் பாடுவது புதிதல்ல என்றாலும், நீங்கள் முன்பு பாடியது சின்னச் சின்ன கொலைகள் என்றால் (காதல் பிச்சாசே... பருவாயில்லை...), இது ஈவு இரக்கமற்ற படுகொலை. சிறிதளவேனும் மானமும், தமிழ் உணர்வும் கொண்ட எந்தத் தமிழனும், உங்களின் இந்த 'சீரிய தமிழ் பங்களிப்புக்கு' சிறிதளவேனும் வருத்தப்பட்டிருப்பான். இந்த தொடர் தமிழ் படுகொலைகளுக்கு, ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்படத்துறையும் பக்க பலமாக இருப்பதுதான் தமிழின் மானக்கேடு.

துதிபாடிகளை கொஞ்சம் ஓரம் கட்டுங்கள். உங்களுக்கு மிகுந்த நம்பிக்கையுள்ள ஒரு தமிழனை கூப்பிட்டு அந்தப் பாடலைக் கேட்கச் சொல்லுங்கள். உண்மையான மதிப்பீடை நீங்களே கேளுங்கள். ஒரே ஒரு நிமிஷம் கண் மூடி யோசியுங்கள். கலை மதிக்கப்பட வேண்டும். அது விற்பனைக்கு அல்ல. அப்படி விற்கப்படும்போது, கலைஞனின் தன்மானமும் விலை போகிறது என்பதை உணர்வீர்கள்.

நீங்கள் மிகச் சிறந்த பாடகர் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. உங்களுடைய 'பாப்பா கஹதேஹைங் படா நாம் கரேகா....' என்ற முதல் பாடல் வெளியானதும் இந்தித் திரைப்படவுலகம் உங்களை ஆச்சர்யத்தோடு பார்த்தது. உங்களுடைய 'பெஹலா நஷா' (முதல் மயக்கம்) பாடலுக்கு கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் உங்கள் குரலில் மயங்கிப் போனார்கள். இன்றும் உங்களின் ஹிந்திப்பாடலை ரசிக்க முடிகிறது. அதற்குக் காரணம், நீங்கள் அறிந்த மொழியில் பாடுவதால்தான்.

உங்களுக்கு ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். பாடும் நிலா பாலு எங்களால் அன்போடு அழைக்கப்படுகிற திரு எஸ்.பி.பி. அவர்கள் தெலுங்கு மொழிக்காரர். ஒரு முறை அவர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் தெலுங்கு பாடல் பதிவில் பாடிக்கொண்டிருந்தாராம். அது ஒரு மிக பிரபலமான தமிழ்ப்பாடலின் தெலுங்கு வடிவம். அதே ஸ்டூடியோவில், இன்னொரு படப்பிடிப்பில் திரு எம்.ஜி.ரின் காதுகளுக்கு அது சென்றிருக்கிறது. உடனே எம்.ஜி.ர். அவரை அழைத்து விசாரித்தாராம். தனது அடுத்த படத்தில் அவரை பயன்படுத்திக் கொள்ளுமாறு இசையமைப்பாளரை கேட்டுக் கொண்டாராம். அதற்கு இசையமைப்பாளர், எஸ்.பி.பியிடம் 'உனக்கு தமிழ் தெரியுமா?' என்றாராம். எஸ்.பி.பி. 'தெரியாது' என்று சொல்ல, 'தமிழ் உச்சரிப்பு சரியாக தெரிந்து கொண்ட பிறகுதான் உனக்கு சான்ஸ்' என்று சொல்லிவிட்டாரம். அதன் பிறகு நல்ல தமிழ் கற்றுக் கொண்டு எஸ்.பி.பி. பாடி எங்களுக்கு கிடைத்ததுதான், 'இயற்கையெனும் இளைய கன்னி', 'ஆயிரம் நிலவே வா', 'பொட்டு வைத்த முகமோ' போன்ற ஆயிரக்கணக்கான பாடல்கள்.

மீண்டும் உங்களிடம் வருகிறேன். உங்கள் மனசைத் தொட்டுச் சொல்லுங்கள். யாராவது ஒருத்தர் வடநாட்டில் போய் ஹிந்திப்பாடலை சரியாக உச்சரிக்காமல் பாடினால், அவர் எவ்வளவு அவமானத்துக்கு உள்ளாவார்? னால் இங்கே, நிலமை தலைகீழாக இருக்கிறதே. உங்கள் சக பாடகியான சாதனா சர்கமும் சளைத்தவர் இல்லை. 'கொஞ்சும் மைனாக்களே, கொஞ்சும் மைனாக்களே வந்து குளக்கேற்றில் (குளக்கரையில்?) வந்து கூடுங்கள்.... தேபாவளி (தீபாவளி?) பண்டிகை' என்று பாடியவர்தானே!

உங்களைச் சொல்லிச் குற்றமில்லை. 'இளையராஜா' என்று அழகிய தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற தமிழ்த் திருமகன் பெற்றெடுத்த தவப்புதல்வர்தான், உங்களை வலிய வரவழைத்து பாட வைக்கிறார். தனது திரைப்படங்களில் அழகிய தமிழ்ப்பெயர்களை வைக்கும் சூப்பர் ஸ்டாரின் மருமகன்தான் படத்தின் ஹீரோவாக இருக்கிறார். செல்வராகவன் என்ற அழகிய தமிழ்ப்பெயரைக் கொண்டவரின் கதைதான் படமாகியிருக்கிறது. யாருக்கும் தமிழுக்கு நடக்கும் படுகொலையைப் பற்றி கவலையில்லை. வியாபாரம் ஆனால் சரி. யாருக்கும் வெட்கமில்லை என்ற 'சோ' வின் திரைப்படப் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது,

'யாரடி நீ மோகினி' என்று அழகிய தமிழ்ப் பெயர் வைத்தால், அந்த திரைப்படத்திற்கு புனிதத்துவம் கிடைத்துவிட்டதாக தமிழக அரசு கருதுகிறது. தமிழ் மக்கள் வியர்வை சிந்தி செலுத்தும் வரியை, அந்த தமிழ்ப் பாதுகாவலர்களுக்கு சீதனமாக கொடுக்கிறது. ஆனால் அந்த பெயருக்கு கீழே நடக்கும் தமிழ் அத்துமீறல்களை கொஞ்சம் கூட கவனிப்பதில்லை. இதுவும் ஒரு காலத்தின் கோலம்.

உங்களை தமிழில் பாடக்கூடாது என்று தடுக்கவில்லை. தயவு செய்து மொழி உச்சரிப்பைப் புரிந்து கொண்டு பாட வாருங்கள். வரவில்லையா? விட்டுவிடுங்கள். தமிழை கடித்துத் துப்புவதை எந்த மானமுள்ள தமிழனும் பொறுத்துக் கொள்ள மாட்டான். நீங்கள் தமிழில் பாடித்தான் பெயரும் புகழும் இனி அடையவேண்டும் என்பதில்லை. எவ்வளவோ நல்ல குரல்வளம் கொண்ட தமிழ் உச்சரிப்பு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளே வரட்டும். முடிந்தால் கைகாட்டுங்கள். அது உங்களுக்கும், தமிழுக்கும் புண்ணியமாகப் போகும்.

நீங்கள் எதையும் பற்றி கவலைப்படாமல், இப்படியே தொடர்ந்தால், வருங்காலம் உங்களை மன்னிக்காது. 'உதித் நாராயணணா? அவர் நல்ல பாடகர்தான். ஆனால் அவர் மொழியறியாமல் கொன்று குவித்த தமிழ்ப்பாடல்கள் ஏராளம்' என்ற அவப்பெயரை சிலுவையாக சுமக்க வேண்டியதை இப்போதிருந்துதே தவிர்க்கப்பாருங்கள்.

சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன். ஊதவேண்டிய சங்கை ஊதியாகிவிட்டது. இனி உங்கள் இஷ்டம்.

இப்படிக்கு

மானமுள்ள ஒரு தமிழன்.

இந்த கடிதத்தை பிரபல பத்திரிக்கைகளுக்கு பிரசுரிக்க அனுப்பினேன். ஒரு பத்திரிக்கை கூட கண்டு கொள்ளவில்லை. அவர்களும் இந்த மாதிரியான தமிழ் கொலைகளை ஏற்றுக் கொண்டு விட்டார்களா அல்லது இதை பற்றி எழுதுவதில் எந்த பிரயோசனுமும் இல்லை என்பதாலா என்று புரியவில்லை. வலை நண்பர்களே உங்கள் கருத்து என்ன?

Thursday, 10 April 2008

சுஜாதாவும் பூர்ணம் விஸ்வநாதனும்


ஊஞ்சலை தேடினோம்

எழுத்தாளர் சுஜாதவின் விஞ்ஞானக் கதைகளில் கால இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு பின்னோக்கி பயணிப்பது மாதிரி கற்பனைகள் வரும். அந்த மாதிரி நாம் 25 வருடங்கள் பின்னோக்கிப் போக வாய்ப்புக் கிடைத்தால், அதே சுஜாதா பூர்ணம் விஸ்வநாதனோடு கை கோர்த்துக் கொண்டு வழங்கிய மேடை நாடகங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.

டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், அடிமைகள், ஊஞ்சல், அன்புள்ள அப்பா என்று பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் மேடையேற்றிய நாடகங்கள் ஒரு எழுச்சியை உண்டாக்கின. அவைகளில் விஞ்சி நிற்பது சுஜாதாவின் எழுத்தாற்றலா, பூர்ணத்தின் நடிப்பாற்றலா என்று பட்டி மன்றமே நிகழ்த்தலாம். தன் நீண்ட கால நாடக அனுபவங்களில் சிலவற்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார் பூர்ணம்.

அதெப்படி சுஜாதா உங்களுக்கு எழுதிய நாடகங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டது மாதிரி இருக்கிறது என்று கேட்டோம்.

"சுஜாதா பூர்ணம் நியூ தியேட்டர்ஸுக்காக நாடகம் எழுத யோசிக்கும் போதே என்னை மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கலாம். அவருக்கும் அவர் அப்பாவுக்கும் உள்ள அன்யோன்யம் என் மூலமாக வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். தவிர, அவரோடு கலந்து பேசி சில மாற்றங்கள் கொண்டு வருவோம். அது இன்னும் மெருகு சேர்க்கும். அந்த மாதிரி பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தில் என் பேத்தி 'நீங்க பாட்டியை பெண் பார்க்க போன போது என்ன பேசினீர்கள்' என்று கேட்பாள். அதற்கு நான் சொல்லும் டயலாக் ஸ்கிரிப்டில் உள்ளதைவிட கொஞ்சம் கூடுதலாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருக்கும். அந்த சீன் வரும்போது சுஜாதா சீட்டின் நுனிக்கே வந்து மிக ஆர்வமாக கவனித்து ரசித்திருக்கிறார்" என்றார் பூர்ணம்.

ஒர் ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது பூர்ணத்துக்கு முழுக்கப் பொருந்தும். பூர்ணம் மேடையில் சுடர் விட்டுப் பிரகாசித்தார் என்றால் அதற்கு இன்றும் இயங்கு சக்தியாக இருப்பவர் திருமதி சுசீலா விஸ்வநாதன்.

"பூர்ணம் நியூ தியேட்டர் சென்னையை மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருந்தாலும் ஸ்கிரிப்ட் எழுதித்தரும் சுஜாதா அந்த சமயத்தில் பெங்களூரில்தான் இருந்தார். சாதா போஸ்டில்தான் ஸ்கிரிப்ட் வரும். சுஜாதாவின் எக்ஸ்பிரஸ் ஸ்பீட் கையெழுத்தைப் படிப்பது என்பதே மிகப் பெரிய சவால். பெரும்பாலும் அந்தப் பணி எனக்குத்தான் வரும். கடிதம் வந்ததும் அந்தக் கணமே படிக்க வேண்டும் என்பார் என் கணவர். என்க்கு நானே ஒரு முறை தனியாக ரிஹர்சல் செய்து கொண்டு படித்தால்தான், அவர் மனம் கோனாமல் பிசிறில்லாமல் படிக்க வரும். எனவே கடிதம் வந்ததும் யாருக்கும் தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, நான் முழுவதுமாக தயாரான பிறகுதான் கடிதத்தையே அவர் கண் முன்னால் காட்டுவேன்" என்றார் திருமதி சுசீலா பூர்ணம்.

"சுஜாதாவின் பல நாடகங்களில் உச்சமான நாடகமாக நான் கருதுவது ஊஞ்சல் நாடகம்தான். அதில்தான் சுஜாதா எழுத்தின் வீச்சு மிகவும் உயர்ந்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் நான் நடித்தபோது அந்தப் பாத்திரத்தை ரசித்து ரசித்து செய்திருக்கிறேன். அந்த நாடகத்தில் நான் ஓர் அறிவு ஜீவி. ஆனால் எனது கண்டுபிடிப்புகள் நிகழ்காலத்துக்கு ஒத்துவராது என்பதை அறியாதவன். அப்படிச் சொன்னாலும் அதை ஏற்க மறுப்பவன். நிகழ்காலத்தால் உதாசீனப்படுத்தப்படும் ஒர் இறந்தகால மனிதன். ஒரு கட்டத்தில் என் ப்ராஜெக்ட்டுக்காக என் மகள் தன் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்திருக்கும் மேமிப்பிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாயைக் கடனாக கேட்பேன். என் மகளும் தன் தந்தை படும் மன வேதனையை உணர்ந்து தர ஒப்புக் கொள்வாள். ஆனால் என் மனைவியோ அதை வன்மையாக கண்டிப்பாள். மனதை பிழியும் காட்சி அது. இது கற்பனை என்றாலும் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த என் மகள் பத்மஜா உணர்ச்சிக் கொந்தளிப்பில் நாடகம் முடிந்ததும் ரூபாய் பதினைந்தாயிரத்துக்கு என் பெயருக்கு செக் எழுதி என் டேபிளில் வைத்துவிட்டாள். அப்பறம் அவளுக்கு புரியவைத்து சமாதானபடுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இன்றும் அவளைக் கிண்டலடிக்க 'அந்த பதினைந்தாயிரம் செக்' என்று சொல்லி சொல்லி சிரித்து மகிழ்வோம். என்னால் அந்த பரிமாணத்தை கொடுக்க முடிந்ததற்கு காரணம் சுஜாதாவின் எழுத்துதான்".

" ஊஞ்சல் நாடகத்துக்காக மும்பை போனதை என்னால் மறக்கவே முடியாது. இந்த நாடகத்துக்கு முக்கிய செட் பிராப்பர்டி மேடையில் பிரதானமாக முன்னும் பின்னுமாக ஆடும் ஊஞ்சல்தான். ஆனால் மும்பை வந்து சேர்ந்ததும் எங்களுக்கு ஆரம்ப சோதனையே அந்த ஊஞ்சல்தான். எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஊஞ்சல் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. தெரிந்தவர்களின் விலாசங்களை வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கினோம். நேரம் ஆக ஆக ஒரு நாள் கிரிக்கெட்டின் கடைசி ஓவர்கள் மாதிரி டென்ஷன் தலைக்கேற ஆரம்பித்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக கடைசி ஒரு சில மணி நேரங்களில் கண்டேன் சீதையை என்ற மாதிரி ஒரு ஊஞ்சலை கண்டு கொண்டோம். மும்பை ஊஞ்சல் நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றால் அதில் அந்த ஊஞ்சலுக்கும் பங்குண்டு" என்று சிரித்தார் பூர்ணம்.

"மற்ற நாடகக் குழுவில் இருப்பது போல தனக்கு ஏ.சி. ரூம் மற்றவர்களுக்கு சாதாரண ரூம்கள் என்பது பூர்ணம் நியூ தியேட்டரில் கிடையாது. பூர்ணமும் சுஜாதாவும் அந்த நாட்களில் எங்களோடு இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணித்திருக்கிறார்கள். ஒரு முறை வெளியூருக்குச் சென்றிருந்தபோது அவர்கள் அளித்திருந்த ரூம்கள் சராசரிக்கும் குறைவாக இருந்தது என்பதை எங்கள் முக பாவனைகளிலேயே புரிந்து கொண்ட பூர்ணம், உடனடியாக செயலில் இறங்கி மாற்று ஏற்பாடுகள் செய்து அதன் பிறகுதான் சாப்பிட்டார்" என்கிறார் நாடக மற்றும் டி.வி. சீரியல் நடிகையான உஷா.

அமுதசுரபி - ஏப்ரல் 2008