Friday, 27 September 2013

உயர்திரு அம்மா அவர்களுக்கு

நீங்கள் மழைநீர் சேகரிப்பு திட்டதிற்கு முக்கியத்துவம் கொடுத்துவருவதை இந்த நாடே அறியும். எனவே அது சம்பந்தமாக உங்களிடம் ஒரு சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்.

தமிழக அரசு முத்திரையில் பிரதானமாக விளங்குவது ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் ராஜ கோபுரம்.  அப்படி பெருமைவாய்ந்த அந்த ராஜ கோபுரத்தை கொண்ட அந்த ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி எப்படி இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லவே இந்த பதிவு. 

முதலில் இந்த புகைப்படத்தை பாருங்கள்.


இது நகராட்சியின் மிக நெரிசலான தெருக்களில் (சந்துகளில்) உள்ளடங்கி இருக்கும் ஒரு வைணவ கோயியின் திருக்குளம். இந்த குளத்துக்கு வர வேண்டிய நீர் ஆதாரங்களுக்கான வடிகால்கள் ஆக்கிரமிப்பினால் அடைபட்டு போய்விட்டன. தற்போது ஒரு மிக பெரிய குப்பை குழியாக மாறும் அவலநிலைக்கு உள்ளாகியிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் யாராவது இதை மணல் கொட்டி சமன் செய்து குடியிருப்புகளோ அல்லது வியாபார நிறுவங்களையோ உருவாக்கிவிடலாம். ஆனால் அந்த பகுதியில் பெய்கின்ற மழை நீர் சாக்கடைகள் மூலமாக பெருகி, வடிகால் இல்லாமல் அடைப்பட்டு, வெள்ளமாக பெருக்கெடுத்து, சுகாதார கேடுகளை உருவாக்கி, அரசுக்கு மிகப்பெரிய நிரந்தர தலைவலியை தந்து கொண்டிருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்..

இந்த படத்தை பாருங்கள்.


இந்த கால்வாய் தற்போது  கழிவு நீர் கால்வாயாக மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் இது நல்ல நீர் பெருக்கெடுத்து ஓடிய வாய்க்காலாக இருந்ததாக ஶ்ரீவில்லிப்புத்தூர் மக்கள் சொல்கிறார்கள்.  இது ஏன் இந்த நிலைமைக்கு உள்ளானது?  நீர் வடிகால்களையும், நீர் நிலைகளை பற்றியும் சிறிது கவலைப்படாத சமூகத்தை நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை நல்வழிப்படுத்தி, சுற்று சூழலை பாதுகாக்க வேண்டியது உங்கள் தலைமையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அல்லவா?

இந்த படத்தை பாருங்கள்




இது திருமுக்குளம் என்று ஶ்ரீவில்லிப்புத்தூர் மக்கள் மிக பெருமையுடன் சொன்னார்கள். "என்ன கட்டாந்தரையாக இருக்கிறது.  சொட்டு தண்ணீர் கூட இல்லையே?" என்று கேட்டவுடன் தலையை குனிந்து கொண்டார்கள்.

ஶ்ரீவில்லிப்புத்தூரில் வடிகால்களை சீர் அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒவ்வொரு நீர்பிடிப்பு பகுதிகளையும் சங்கிலி தொடர்போல இணைத்து நாம் செயல்பட்டால் இந்த திருமுக்குளம் நீர் ததும்பி நிற்கும் அழகை நீங்கள் பார்க்கலாம்.
இது சாத்தியமே. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிவயல் என்ற கிராமம் உள்ளது. ராமநாதபுரம் என்றாலே நம் கண் முன்னால் வருவது முள்ளு காடுகளும், கரி மூட்டங்களும்தான். ஆனால் நீங்கள் ஒரிவயல் கிராமத்துக்கு போனால் அங்கு ஏதோ திருச்சி, தஞ்சாவூர் டெல்டா பகுதிக்கு வந்துவிட்ட மாதிரி தோண்றும் (தற்போது திருச்சி, தஞ்சாவூர் டெல்டா பகுதிகள்தான் இராமநாதபுரம் மாதிரி ஆகிக் கொண்டிருக்கின்றன.) 
ஒரிவயல் கிராமத்தில் ஒன்றல்ல இரண்டல்ல, நூற்றுக்கும் மேலான பண்ணைக் குட்டைகளை கிரம மக்களே அமைத்திருக்கிறார்கள். கிராமத்தின் பொதுவான ஊரணியில், மழைக்காலம் தாண்டியும் நீர் ததும்பிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் கூலி வேலைக்காக வெளியூர்களுக்கு சென்ற மக்களை கொண்ட கிராமமாக இருந்த நிலை போய், தற்போது கூலிக்கு மற்ற இடங்களிலிருந்து அங்கு ஆட்கள் வருகிறார்கள்.
இதை நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மழை நீர் சேகரிப்பு என்பது என்னவோ கட்டிடங்களில் விழுகின்ற மழைநீரை மண்ணுக்குள் செலுத்துவதில் மட்டும் முடிந்து போகும் ஒரு விஷயம் அல்ல. பெருகும் நீர் எப்படி நீர்பிடிப்பு பகுதிகளுக்கு சிரமமில்லாமல் வந்தடைய வேண்டும் என்பதாகும்.
ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியின் இனையதளத்துக்கு போனால் அதில்  மழைநீர் சேகரிப்பு பற்றி விளக்கவுரைகளும், எவ்வளவு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்பட்டிருக்கின்றது என்ற புள்ளிவிவரங்களே சிதறியிருக்கின்றன.

ஒரு முழுமையான மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினால் எப்படி ஒரு நகராட்சி தன் நீராதார சிக்கல்களை தீர்த்துக் கொண்டு, சுற்று சூழல் மாசில்லாமல் ஒரு மாதிரி நகராட்சியாகவும், மற்ற நகராட்சிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், ஒரு பயிற்சி களமாகவும் இருக்கும் என்பதற்கு ஶ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியையே ஒரு சோதனை முயற்சியாக எடுத்துக் கொள்ளலாம்.

எனவே, நான் சுருக்கமாக உங்களிடம் வேண்டுவது----

1. ஶ்ரீவில்லிப்புத்தூரின் ஆண்டு மழையளவு, வாய்கால்கள் மூலமாக கிடைக்கும் நீர் அளவுகளை கணக்கிடுங்கள்.

2. அந்த நீர் ஆதாரங்களை எப்படி இயற்கையாக அமைத்துள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் சேமிக்கலாம் என்பதற்க்கு ஒரு திட்ட வரைவு தயார் செய்யச் சொல்லுங்கள்.

3. மக்கள் பங்களிப்போடு நீர் ஆதாரங்களை கெடுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லுங்கள்.

4. நல்ல நீர் பிடிப்பு வடிகால்களையும்  கழிவு நீர் வடிகால்களையும் பிரித்தெடுத்து, கழிவு நீரை சுத்திக்கரிக்கும் நிலையங்களை அமைத்து, கழிவு நீரை சுத்தப்படுத்தி, அவ்வாறு வெளியேறும் நீரை நன்னீர் வடிகால்களுடன் இனைக்க சொல்லுங்கள்.

5. மக்களிடையே திடக்கழிவு மேலாண்மையை பற்றி விழிப்புனர்வு ஏற்பட்டுத்தி, குப்பைகளால் வடிகால்கள் அடைபடும் அவலத்தை நீக்க வழிவகை செய்யச் சொல்லுங்கள்.

6. பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து அதை மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் சாலைகள் போடும் மூலப் பொருட்களாக மாற்றச் சொல்லுங்கள்.

7. மக்கும் குப்பைகளை தனியாக பிரித்து, அதை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக் கொடுங்கள்.

அப்பறம் என்ன? ஶ்ரீவில்லிப்புத்தூர் ஒரு பூத்துக் குலுங்கும் ஒரு அழகிய நகராட்சியாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

Friday, 7 September 2012

தங்கத்தில் முதலீடு

நிறைய பேர் தங்கத்தில் முதலீடு செய்வது லாபம் என்று நினைக்கிறார்கள். அது மிக மிக தவறானது.

தங்கத்தை பணமாக மாற்றும் போது பாதிக்கு பாதி போய்விடும். எனவே, தங்கத்தை தங்கமாக வைத்துக் கொண்டு, அதன் மீது கடன் மட்டுமே வாங்க முடியும். இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை.

பழைய தங்க நகையை போட்டு புதியது வாங்கும் போது இதேதான் நடக்கிறது. நகை கடைக் காரர்கள்தான் அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். மத்திய வர்கத்துக்கு இது புரிவதில்லை.

வெறும் விலையை மட்டுமே பார்ப்பது முட்டாள்தனமானது. எந்த பொருளுக்கும் அது பணமாக மாறும் போது கிடைக்கும் ஈவு தொகையைத்தான் கனக்கிட வேண்டும்.

நீங்கள் எந்த நகைக்கடைகாரர்களிடமாவது அல்லது தங்க காசு விற்கும் வங்கிகளில் திருப்பி வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டுப்பாருங்கள்? உண்மை நிலை புரியும்.

குடும்பத்திற்கு எவ்வளவு தங்கம் தேவையோ அதற்கு மேல் வாங்கி வைத்துக் கொள்ளுதல், அவசிய நேரங்களில் சிக்கலை உருவாக்கும்.

அமரர் சுஜாதா கொடுக்கும் டிப்ஸ் - இளைஞர்களுக்கு தங்கள் குடும்பத்தின் மீது பிடிப்பு ஏற்பட


1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம்.

2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது.

3. மூனு மணி மேட்னி ஷோ போகதீர்கள். படிப்பு கெடும். தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.

4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், காதல், கதை தவிர்த்து.

5. ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள்.

6. உங்களுக்கு கீழே உள்ள மக்களை பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.

7. ஞாயிறு - பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும்.

8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள். கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம். வியர்வை சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். இரவுதான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.

10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள்.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள். உங்கள் தாய்/தகப்பனார் உங்களை பற்றி குற்றம்/குறை சொல்வதை படிப்படியாக குறைத்து விடுவார்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்.

(நீயா நானா - நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் சொன்னது)

Thursday, 30 August 2012

வல்லமையில் எனது சிறுகதை

 இந்த கதையின் முடிவு, ஒரு சில பேருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். ஒரு சில பெண்கள் இது போன்ற முடிவு எடுத்ததாக செய்தி தாள்களில் வந்திருக்கின்றன.

http://www.vallamai.com/literature/short-stories/25244/

Thursday, 9 August 2012

2014ஐ பற்றி இப்போதே யோசிப்போம் - 2


TINA Factor என்று அரசியல் பார்வையாளர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். அதில்தான் காங்கிரசஸ் ரொம்பவும் நம்பியிருக்கிறது. 2014ல் எப்படியும் மீண்டு வந்து விடுவோம். இதே மாதிரி கல்லா கட்டுவதை தொடராலாம் என்று தெம்பாக இருக்கிறார்கள். அதாவது There is no alternative (TINA). கம்யூனிஸ்டுகளும் சரி, பல மாநில கட்சிகளும் சரி தங்கள் அரசியல் வாழ்வுரிமைக்காக பாஜாகவை எதிர்த்து செயல்பட வைக்கிறது. குறைந்த பட்சம் பாஜகாவை ஆதரிக்காமல் எட்டி நிற்கின்றன. மதவாத தீட்டு பட்டுவிடும் என்றும் அதனால் தங்கள் ஓட்டுகள் சரிந்துவிடும் என்று கவலை படுகின்றன. பாஜகவால் தனித்தும், சில மாநில கட்சிகளின் ஆதரவோடும் பெரும்பான்மை எடுத்துவிட முடியாது. எனவே குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், பாஜாக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மீண்டும் காங்கிரஸ் வந்து விடும். இது 2004ல் அவர்கள் பெற்ற வெற்றி மாதிரி இருக்கும். ஆளாளுக்கு காங்கிரஸை மிரட்டுவார்கள். ஆனால் கவிழ்த்து விட மாட்டார்கள். காங்கிரசும் ரொம்ப பயந்த மாதிரி காட்டிக் கொண்டு தங்கள் கொள்ளையை தொடரும். இந்த அவலநிலை இந்தியாவுக்கு நல்லதல்ல. அவ்வளவுதான் தற்போதைக்கு சொல்ல முடியும். கெடுதலை பற்றி நன்றாக புரிந்து கொண்டால நல்லதை நோக்கி மனசு நகரும்.

கல்வி தந்தைகள் கற்றுத் தரும் பாடம்

ஒரு பொறியியல் கல்லூரி கட்டும் கட்டிடம் இடிந்து விழுகிறது என்றால் இவர்களின் கல்வித்தரம் எந்த லட்சனத்திலி இருக்கும் என்பது தெரிகிறது.  இந்த மாதிரி காசு சம்பாரிப்பதற்கு மட்டுமே கடை விரிக்கும் இந்த மௌள்ளமாறி/முடிச்சவிக்கி கல்வி தந்தைகளை என்ன செய்தால் நாடு உருப்படும்?

Sunday, 5 August 2012

கானாமல் போன காட்சிகள்

எம்.ஜி.ஆர். படங்களில் கனவு காட்சி என்று எப்போதும் உண்டு. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். படங்கள் மட்டுமே ஈஸ்ட்மென் கலரில் வரும். மற்றவையெல்லாம் கருப்பு வெள்ளை படங்கள். அதிலும் அந்த கனவு காட்சிகள் அள்ளி அள்ளி கொட்டும் வண்ணங்களில் கதாநாயகியின் கவர்சியில், நல்ல மெல்லிசையில் பிரமாதமாக இருக்கும். அதில் சிகரமாக நான் கருதுவது உரிமைக்  குரல் படத்தில் வரும் விழியே கதை எழுது என்ற கனவு காட்சி பாடல்தான். அதில் முன்பு சொன்ன மூன்றும் தூக்கலாக இருக்கும். மீனவ நண்பனில் தங்கத்தில் முகமெடுத்து, நேற்று இன்று நாளையில் அங்கே வருவது யாரோ... இது போன்ற பல பாடல்கள்.

அப்போது பல விஷயங்கள் அரிதாக இருந்தன. விழியே கதை எழுது பாடலை கேட்க வேண்டுமானால் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். திடீரென இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் சேவை இரண்டில் உரிமைக்குரல் என்று அறிவித்ததும் அது விழியே கதை எழுது பாடலாக இருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும். இந்தியா கிரிக்கெட்டில் காலை வாருவது மாதிரி நம் எண்ணங்களுக்கு எதிர் மாராக பொண்ணா பொறந்தா ஆம்பிளை கிட்டே... என்று வேறு பாடல் வந்து விடும். தூர்தர்ஷனில் விழியே கதை எழுது வரவேண்டுமென்றால் அது அத்தி பூத்த மாதிரிதான்.

ஆனால் இன்று அப்படியல்ல. கூகுள் சர்ச்சில் போய் விழியே கதை எழுது என்று டைப் செய்தால், எம்.ஜி.ஆரும் லதாவும் நமக்காக ஆயிரம் முறை லவ்வுகிறார்கள்.

நான் கல்லூரி படித்த காலத்தில் எனது நண்பன் சேகர் என்பவருக்கு ஒரு தியேட்டர் குத்தகையில் இருந்தது. தஞ்சாவூர் பஸ்டாண்ட் அருகில் ( தற்போது இது பழைய பஸ்டாண்ட்) திருவள்ளுவர் என்ற தியேட்டர்  உள்ளது. அதில் புரொஜெக்டர் ரூமுக்கு  அருகில் உள்ள ரூமில் அவன் தங்கியிருந்தான். ஒரு முறை உரிமைக்குரல் அந்த திரையரங்கில் வெளியாகியது. சரியாக 7.10 க்கு அந்த பாடல் வரும். கிட்டத்தட்ட இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது அந்த சமயத்தில் போய் அந்த பாடலை மட்டும் பார்த்துவிட்டு ஏதோ சந்திரனில் காலடி வைத்து விட்டு வந்த மாதிரி பெருமிதப்பட்டிருக்கிறேன்.

வசதிகள் குறைவாக இருந்த காலங்களில் சந்தோஷங்கள் அதிகமாக இருந்தன.