Friday, 23 November 2007

என்னைப் போல் ஒருத்தி


நத்தை மாதிரி ஊர்ந்து கொண்டிருக்கும் இந்த ரெயில் எத்தனை மணிக்கு சென்ட்ரலை அடையும் என்ற யோசனையிலேயே இருந்ததால் தனக்கு எதிரில் இருந்த அந்த பெண்ணை கவனிக்கவில்லை பத்மா.

அவளிடமிருந்து விசும்பல் சங்கிலியாக வர ஆரம்பித்ததும்தான் திடுக்கிட்டு பார்த்தாள். பெட்டியில் இருந்த முக்கால்வாசி பேரின் பார்வையும் அந்த பெண்ணின் மீது பதிந்திருப்பது தெரிந்தது. என்ன தோன்றியதோ சட்டென்று எதிர்பக்கம் இடம் மாறி, அவளை தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள். அழுகை பீறிட்டு வந்தது. நிமிர்ந்தவளை 'ஒன்றும் பேச வேண்டாம்' என்று வாயடக்கினாள். இந்த பெண்ணை அடிக்கடி இதே ரெயிலில் பார்த்திருக்கிறாள். தினமும் ஆவடியில் ஏறுவாள். சென்ட்ரலில் இறங்கி கூட்டத்தில் கரைந்து போவாள்.

அதிர்ஷ்டவசமாக ரெயில் வேகம் பிடித்து சென்ட்ரலுக்குள் நுழைந்தது. கைத்தாங்கலாக அவளை இறக்கி ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தாள். பெயர் விசாரித்ததில் வித்யா என்றாள்.

"சொல்லு வித்யா. என்ன பிரச்சனை?"

"அக்கா. என் ஹஸ்பண்டால ரொம்ப கஷ்டப்படறேங்கா. நான் ரெயில்வேல வேலை பார்க்கறேன். அவருக்கு வேலையில்லை. எக்கசக்கமா குடிக்கிறாரு. எவன் இவருக்கு கிரெடிட் கார்டு கொடுத்தான்னு தெரியலை. ஏகப்பட்ட கடன் வைச்சிருக்காரு. தெனம் அடி உதைதான். தெரு சிரிக்க அசிங்கம் செய்யறாரு. அக்கம் பக்கத்தில யாராவது உதவிக்கு வந்தா அவங்களோட என்னை சேர்த்து வெச்சு பேசறாரு. போலீசை கூட வரவழைச்சு பார்த்தாச்சு. ஒண்ணும் பலன் இல்லே. எனக்கு வேலையை தவிர வேற எந்த சொத்தும் இல்லைக்கா. ஊரு முழுக்க கடன் இருக்கறதால ஒரு உறவுக்காரங்க கூட உதவிக்கு வரமாட்டேங்கறாங்க. பேசாம இவரு செத்து தொலைஞ்சா என்னன்னு ஒரு யோசனை மனசுல ஓடிச்சு. அதான், தாங்க முடியாம அழுதிட்டேன்."

அடாடா! இவளும் நம்ம கேசா?

"வித்யா. கிட்டதட்ட நானும் உன்னை மாதிரிதான். என் கனவரும் சரியில்லை. உன்னை மாதிரியே என் ஹஸ்பண்டு செத்தா என்னன்னு நினைச்சேன். அந்த மாதிரியே ஸ்கூட்டர் ஆக்ஸிடெண்ட்ல செத்து ஒழிஞ்சான். நான் அழவே இல்லை. 'அப்பாடி தொந்திரவு விட்டுச்சு. இனி நிம்மதின்னு' நெனைச்சேன். ஆனா பிரச்சனை வேற ரூபத்தில வந்திச்சு. குடிகாரனோ கடன்காரனோ, புருஷன்னு ஒருத்தன் இருந்ததால மத்த ஓநாய்கள் என் வீட்டு பக்கம் நெருங்காம இருந்திச்சு. இப்ப அவன் போயிட்ட தைரியத்தில எனக்கு தெனம் தெனம் பிரச்சனை. நம்ம சமூகம் முழுக்க முழுக்க ஆண் சார்ந்தது வித்யா. என் அனுபவத்தில சொல்லறேன்... தயவு செய்து புருஷன் சாகணும்னு மட்டும் நினைக்காதே."

"அதுக்காக தெனம் தெனம் அடி உதை வாங்க சொல்றீங்களா?" போய்க் கொண்டே இருந்தவள் சட்டென திரும்பி பத்மாவை கோபமாக பார்த்தாள்.

"அப்படிச் சொல்ல வர்ல வித்யா. எனக்கு தெரிஞ்ச ஒரு தொண்டு நிறுவனம் இருக்கு. உன் அட்ரஸைக் கொடு. இன்னிக்கி சாயந்திரம் போகலாம். அவங்ககிட்ட உன்னை அறிமுகப் படுத்தி வைக்கிறேன். இப்படி எகிறி குதிக்கிற ஆம்பிள்ளைகளையெல்லாம் அடக்க, வழிக்கு கொண்டுவர அவங்ககிட்ட பல டெக்னிக்குகள் இருக்கு. தேவை கொஞ்சம் பொறுமையும் புத்திசாலித்தமும்தான். நீ கவலையே படாதே. தைரியமா இரு. பாரேன்! ஒரே மாசத்தில உன் புருஷன் லைனுக்கு வர்லைன்னா என் பேரு பத்மா இல்லை." வித்யா நம்பிக்கையோடு பத்மாவின் கைகளை பிடித்து அழுத்தவும் வித்யாவின் ஆபீஸ் வந்து விட்டிருந்தது.

இந்த கதைக்கான தீப்பொறி.... (திருமதி நித்யா ரவீந்தர்)

எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி அவள் கணவனோடு ஒத்து போக முடியாமல் மிகுந்த மன வேதனைகளுடன் இருந்தாள். ஓரளவுக்கு சமாளித்து அதிலிருந்து அவள் மீண்டு வந்த போது துரதிர்ஸ்டவசமாக அந்த கணவன் காலமாகிவிட்டார். சமீபத்தில் அவளை சந்தித்த போது, " எனக்கு பழைய வாழ்க்கை கூட கஷ்டமாக தெரியலைடி. கணவன் இல்லாமல் இந்த சமூகத்தில் தனியாக வாழ்வது அதைவிட கொடுமையாஇருக்கு." என்றாள்.

2007 விகடன் தீபாவளி மலர்

No comments: