Tuesday, 27 November 2007

தேவை ஒரு குடும்பம்


"மேடம். கொஞ்சம் வித்தியாசமா முதல்ல உங்களை பத்தி எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டு அப்பறம் என்னை பத்தி சொல்லறேனே?"

என்ன தைரியம் இந்த பெண்ணுக்கு! 'நீ யாரம்மா? உனக்கு என்ன வேணும்?' என்று கேட்டதற்கு இப்படியா பதில் சொல்வாள் ஒருத்தி !

"சரிம்மா. உன் வழிக்கே வரேன். சொல்லு" என்றேன். ஏதோ பீடிகை போடுகிறாள். என்னவென்று பார்ப்போமே!

"உங்க பேரு விஜயலஷ்மி. நீங்க ரொம்ப துணிச்சலானவங்க. ஆசையான கணவன். அமைதியான வாழ்க்கை. ஆனா கல்யாணம் ஆன ஆறாவது வருஷத்திலேயே திடீர்னு கணவர் காலமாயிட்டாரு. மகன் போன சோகத்தை சொல்லியே எல்லா சொத்தையும் பிடுங்கிக்கிட்டு உங்க மாமனார் உங்களை வீட்டைவிட்டு தொரத்திட்டாரு. இப்ப நீங்க டீச்சர் வேலை பார்த்துக்கிட்டு, இந்த லேடீஸ் ஹாஸ்டல்ல தனியா இருக்கீங்க. என்ன சரியா?"

"சரிம்மா. எனக்கு தெரிஞ்ச விஷயத்தை எனக்கு ஏம்மா சொல்லற ? என்ன ஏதாவது ஜோஸ்யமா? எனக்கு அதில சுத்தமா நம்பிக்கையில்லை."

"இருங்க. உங்களுக்கு சோமசேகரை தெரியுமா? இந்த தெரு முனை பாங்கில காஷியரா இருக்காரே?"

"ம்.. தெரியும். அதுக்கென்ன இப்போ?"

"அவரோட கதையும் இதே மாதிரிதான். தன் மனைவியை உயிருக்கு உயிரா நேசிச்சாரு. அவரு கீழ் சாதி. அவங்க மேல் சாதி. விடுவாங்களா? ரெண்டு பக்க உறவுக்காரங்களும் சாதிப் பிரச்சனையை ஊதி ஊதி பெரிசாக்கினாங்க. அதிலேயே மனசு ஒடிஞ்சு நோவு வந்து அந்தம்மா செத்து போனாங்க. தன் மிச்ச வாழ்கையை குடும்பத்துக்காகவே அர்ப்பணிச்சுக்கிட்டு, மறு கல்யாணமே பண்ணிக்காம தனியா வாழ்ந்துக்கிட்டு இருக்காரு."

"நீ என்னம்மா சொல்லவர?"

"இருங்க. என் பேரு இந்திரா. போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு. அதுக்கு அப்பறம்தான் கணவன் மனைவி உறவோட முக்கியத்துவம் புரிஞ்சுது. ஒரு வயதான தம்பதியரை எதேச்சையா சந்திச்சேன். அப்ப அந்த தாத்தா சொன்ன வார்த்தைகள் என்னை புரட்டி போட்டிடுச்சு. 'கணவன், மனைவி, குழந்தைகள்ங்கிறது ஒரு முக்கோணம் மாதிரி. உன் பாதுகாப்புக்கு எப்படி வாழ்க்கைத் துனை தேவையோ அந்த மாதிரி குழந்தைகளுக்கும் அப்பா அம்மா அவசியம் வேணும். அதை யாரு ஈடு செஞ்சாலும் மனசுல அது ஒரு ஏக்கமாதான் இருக்கும்'ன்னாரு. எனக்கு இப்ப நாலு மாசம். இதுவரை எனக்கு வராத அம்மா ஏக்கம், கன்சீவ் ஆகியிருக்கிற இந்த நேரத்துல அதிகமா மனசை அழுத்துது. டெலிவரி சமயத்துல தோள் சாஞ்சுக்க எனக்கு ஒரு அம்மா வேணும். அதுனால...."

"அதுனால.... நான் என்னம்மா பண்ணனும்."

"நீங்க, நான், சோமசேகர் மூணு பேரும் ஒண்ணா இணையணும். இனி இருக்கும் காலத்தை நீங்க மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையோடும் வாழனும். தெனம் தெனம் தனிமையில புழுங்கிக்கிட்டு இருக்கிற சோமசேகர் ஒரு புது வாழ்வு வாழணும். எனக்கு அம்மா இல்லாத குறையை நீங்கதான் தீர்த்து வைக்கணும். அந்த சோமசேகர்தான் இந்த இந்திராவோட அப்பா. நீங்க வார்த்தைக்கு வார்த்தை அம்மான்னு சேர்த்து என்னை கூப்பிட்டீங்க. இப்ப நான் அப்படி கூப்பிடலாமா? அம்மா! எங்க அப்பாவை நீங்க கல்யாணம் செஞ்சுப்பீங்களா?"

இந்த கதைக்கான தீப்பொறி.... (செல்வி மமதி சாரி)

நன்கு வசதியாக வாழ்ந்து, அடுத்தடுத்து தந்தை தாயை இழந்து, உற்றார் உறவினர்களால் கசக்கி பிழியப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ஒரு பெண் எங்களிடம் வேலைக்கு சேர்ந்தாள். அவள் அடிக்கடி சோர்ந்த போதெல்லாம் அவளுக்கு தைரியம் ஊட்டி வசதிகளை கொடுத்து பாதுகாத்து வந்தோம். ஆனால் மீண்டும் மீண்டும் அவள் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டாள். திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டாள். ஏன் அப்படி செய்தாள்? புரியவில்லை. அவளுடைய உறுதியற்ற மனைநிலை காரணமா? அவளை சுற்றியிருந்த அழுக்கு சமூகத்தின் ஆக்கிரமிப்பா? ஒருவேளை தந்தை தாயின் அரவணைப்பில் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ? வெறும் கேள்விகளே மிஞ்சியிருக்கின்றன.

2007 விகடன் தீபாவளி மலர்

No comments: