என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Thursday, 29 November 2007
இல்லையா? இருக்கா?
"இல்லே. இல்லே. எனக்கும் தன்யாவுக்கும் லவ் இல்லே. போதுமா? அம்மா, தன்யா என்னோட ப்ராஜெக்ட் அஸிஸ்டென்ட். ஜஸ்ட் ஒரு கலீக், அவ்வளவுதான்." ஆனந்த் வெடித்தான்.
அம்மாவும் பையனும் வாக்குவாதம் செய்வதை ராகவன் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு மூன்று மாதங்களாகவே இந்த பிரச்சனை வருவதும் போவதுமாக இருக்கிறது.
"அதுக்கில்லைடா. நீ ஆபீஸ் வேலையோட நிறுத்திக்கிட்டா பரவாயில்லையே. நேத்து ஸ்பென்ஸர் பிளாசாவில அவளுக்கு டி-சர்ட் வாங்கிக் கொடுத்தையாமே. ஒரு பாட்டில் கோலா வாங்கி மாத்தி மாத்தி குடிச்சீங்களாமே. பைக்ல போகும் போது அவ உன் தோள பிடிச்சுக்கிட்டு போறாளாமே." அம்மாவின் சரமாரியான குக்ளியில் ஆனந்த் கொஞ்சம் தடுமாறினான்.
"மஞ்ச கண்ணாடி போட்டுப் பார்த்தா எல்லாமே மஞ்சளாதான் தெரியும். யாரோ எதையோ பார்த்துட்டு, உன்கிட்டே பெருசா கதை கட்டி விட்டிருக்காங்க. தன்யா என் லை·ப் பார்ட்னரா வர சான்ஸே இல்லை. எனக்கும் அவளுக்கும் அடிக்கடி முட்டிக்கும். என் டேஸ்ட் வேற. அவ டேஸ்ட் வேற. சொன்னா புரிஞ்சுக்கோம்மா."
"ஆனா உங்க மூவ்மெண்ட்ஸை பார்த்தா அப்படி தெரியலையே ஆனந்த். நான் சொல்லறதை கொஞ்சம் கேக்கறையா. தன்யாவோட மாமா எனக்கு போன் செஞ்சு காச் மூச்னு கத்தறாரு. எனக்கு இதெல்லாம் தேவையா? அவளைத்தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்னு தீர்மானிச்சுட்டா தைரியமா சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கறேன்." ராகவன் இடையில் புகுந்தார்.
"அம்மா. அந்த தன்யா கீழ கார்லதான் இருக்கா. நீயே அவளை கூப்பிட்டு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா கேட்டுடேன்." தங்கை அர்ச்சனா திடீரென கொளுத்தி போடவும் சூடானான் ஆனந்த்.
"வேண்டாம். அசிங்கம் பண்ணாதீங்க. ரொம்ப அப்செட் ஆயிடுவா."
ஆனால் ஆனந்த் சொன்னதை யாரும் கேட்கவில்லை. அர்ச்சனா ஓடிப்போய் தன்யாவை அழைத்து வந்தாள்.
"அங்கிள். ஆனந்த் என் பிரெண்ட். அவ்வளவுதான்! உங்க ரெண்டு பேருக்கும் லவ்வாமேன்னு கிட்டதட்ட எல்லாரும் கேட்டாச்சு. எனக்கும் சொல்லி சொல்லி அலுத்து போச்சு. நீங்க தாராளமா ஆனந்துக்கு பொண்ணு பாருங்க. நான் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதிட்டு மூக்கு பிடிக்க சாப்பிட்டு போறேன். ஓகே. இந்த சேப்ட்டரை இதோட முடிச்சிக்குவோம்." என்று முடித்து வைத்தாள்.
வித்யா உடனடியாக நாலைந்து பெண் போட்டோக்களை தன்யாவிடம் காட்டினாள். அதிலிருந்து ஒன்றை தன்யாவையே செலக்ட் செய்யச் சொன்னாள். அடுத்த வாரம் பெண் பார்க்க போவதாக தீர்மானித்தார்கள்.
அன்று இரவே ஆனந்துக்கு தன்யாவிடமிருந்து போன் வந்தது. "ஆனந்த் நானும் ரொம்ப யோசிச்சு பார்த்தேன்டா. நாம எவ்வளவோ மறுத்தும் அவங்க விடாம அதையே சொல்றாங்கன்னா அதுல ஏதோ இருக்குன்னுதான் தோனுது. நமக்குள் அந்த கெமிஸ்ட்ரி இருக்குன்னுதான் நினைக்கிறேன். பேசாம அவங்க சொன்ன மாதிரியே லவ்விட்டா என்ன?"
"தன்யா! நம்ம ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஒத்துமை பார்த்தியா! நானும் உங்கிட்ட இதயேதான் சொல்லணும்னு இருந்தேன். இல்லே இல்லேன்னு சொன்னாலும் இருக்கு இருக்குன்னு சொன்னீங்களே. ஆமா, இருக்கு. இப்ப என்ன பண்ணுவீங்கன்னு அவங்க முகத்தில கரியை பூசணும். ஐ லவ் யூடா."
இந்த கதைக்கான தீப்பொறி.... (திரு கௌசிக்)
சண்டைக் கோழி மாதிரி இருந்த என் தோழனும் தோழியும் திடீரென ஒரு நாள் இருவரும் சேர்ந்து வந்து 'எங்களுக்கு கல்யாணம்' என்றார்கள். ஆச்சர்யத்தில் என் நண்பனை பிடித்து உலுக்கி 'எப்படிடா?' என்று கேட்டதற்கு அவன் ஸ்டைலாக 'மாப்ளே! இதெல்லாம் லவ்ஸ்ல சகஜமப்பா!' என்றானே பார்க்கலாம்!
விகடன் தீபாவளி மலர் 2007)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment