Friday, 9 November 2007

புதுசா ஒரு கடை


"வாங்க சார். என்ன ரொம்ப நாளா காணம்?" முகம் மலர்ந்த சிரிப்புடன் ராமநாதனை வரவேற்றார் பொன்னம்பல நாடார்.

ராமநாதன் அனிச்சையாக அவருக்கு பக்கத்தில், ஆனால் கடைக்கு வெளியே உப்பு மூட்டைக்கு பக்கத்திலிருந்த சிறிய ஸ்டூலில் உட்கார்ந்தார். மளிகைக் கடையிலிருந்து எல்லாம் கலந்து கட்டி வரும் கார வாசனை ராமநாதனுக்கு ரொம்பவும் பிடிக்கும். ஊரில் இருந்தால் தினமும் மாலை வேளையில் அரை மணியாவது பொன்னம்பல நாடார் கடையில் உட்கார்ந்து ஊர் உலக கதைகளை பேசா விட்டால் ராமநாதனுக்கு தலை வெடித்துவிடும்.

"ஒரு வாரத்துக்கு ஊருக்கு போயிருந்தேன் பொன்னம்பலம்" என்று பதில் சொல்லிவிட்டு கடையை நோட்டம் விட்டார். என்னவோ கஸ்டமர்கள் குறைந்து விட்டதாக அவருக்கு தோன்றியது.

அதற்கு காரணம் இருந்தது. நாலு கடை தள்ளி திடீரென புதிதாக ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் முளைத்திருந்தது. மூவாயிரம் சதுர அடியில் முழுவதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு அனைத்து மளிகை சாமான்களும் கையெட்டும் தூரத்தில் இருந்தன.

"பொன்னம்பலம். இன்னிக்கு வந்ததும் முதல் வேலையா அந்த டிபார்மென்ட்டல் ஸ்டோர்ஸ் போயிருந்தேன்."

"எப்படி இருந்திச்சு. ஏ.சி. சுகம் கண்டீங்களாக்கும்." பொன்னம்பலம் வெள்ளந்தியாக சிரித்தார்.

"ஏசியெல்லாம் இருக்குது. ஆனா கண்ணை கட்டி காட்ல விட்டாப்ல இருக்குது. எது எங்க இருக்குதுன்னு சொல்ல ஆளு இல்லை. தேடித் தேடியே கால் வலிகண்டு போவுது. கைல பிளாஸ்டிக் தொட்டியை வைச்சிக்கிட்டு அலைய வேண்டியிருக்குது. இந்த சின்ன புள்ளைங்க வேற... ஜகடை வச்ச தள்ளு வண்டிய அங்கியும் இங்கியும் உருட்டிக்கிட்டு தொந்திரவு செய்யுதுங்க. இந்த மாதிரி கடையெல்லாம் வர விடக் கூடாதுங்க. நீங்களெல்லாம் ஒண்ணு சேர்ந்து எதிர்த்திருக்கணும். முதல்ல விலை குறைச்சு காட்டுவாங்க. இருநூறு சதுர அடில இருக்க வேண்டிய கடையை ஏகத்துக்கும் பரப்பி அதுக்கு ஏ.சி.யும் போட்டு பிளாஸ்டிக் தொட்டி, ஜகடை வண்டிக்கெல்லாம் செலவு செஞ்சு கடைசில அந்த செலவை நம்ம தலைலதான் கட்டுவாங்க."

"அது வந்துங்க...."

"இருங்க....இதுல இன்னொரு விஷயம் பாருங்க. எல்லா பொருட்களையும் கவர்ச்சியா அடுக்கி வைச்சிருக்காங்களா? தேவையா இல்லையா என்பதை யோசிக்காம நாம பாட்டுக்கு கூடையில அள்ளிப் போட்டுகிட்டு வந்திடறோம். பில்லு போடும் போதுதான் கொஞ்சம் உறைக்குது. திரும்பி கொடுக்க வறட்டு கௌரவம் இடம் கொடுக்குமா? சரி, பரவாயில்லை போன்னு மனசை சமாதானம் செஞ்சு, வாங்கிக்கிட்டு வந்திடறோம். இது தேவையா, சொல்லுங்க. எனக்கு தெரிஞ்ச வக்கீல் இருக்காரு. நீங்க உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. கேசு போட்டு, நாலே நாள்ல கடையை இழுத்து மூட நானாச்சு!"
"அப்படீங்களா? உங்கள மாதிரி ஆசாமிங்க இங்க வாங்க. அந்த மாதிரி ஸ்டைலு விரும்பறவங்க அங்க போகட்டும்."

"அதுக்கில்லை பொன்னம்பலம். நீங்க இப்ப சும்மா இருந்தீங்க, நாளைக்கு உங்க கடையையே ஸ்வாகா பண்ணிடுவாங்க, ஆமா!."

"அப்படியெல்லாம் ஆகாதுங்க! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேன். அது தெரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க. அந்தக் கடை போட்டிருக்கிறது வேற யாருமில்ல... நம்ம மருமக பையன்தான். ஆங்.. கஸ்டமர்களை கவனிக்க ஆளு இல்லேன்னு சொன்னீங்களே, அதை சரி செய்யச் சொல்லறேன். சரீங்களா?"

ராமநாதன் அசடு வழிந்தார்.

இந்த கதைக்கான தீப்பொறி.... (செல்வி தீபா வெங்கட்)

ஒரு ஷ¥ட்டிங் ஸ்பாட்டில், பிரேக்கின்போது சக ஆர்டிஸ்டுகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒருத்தி கொஞ்சம் நிறம் கம்மி. அதற்கானகழிவிரக்கமும் அவளுக்கு உண்டு. என் போதாத காலம் ஒரு மேக்கப் மேனைப் பற்றி குறிப்பிடும் போது நான் வாய் தவறி 'அவர் கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பார்' என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்! அவள் அந்த 'லும்' என்பதை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டுவிட்டாள். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நான் படாத பாடு பட்டேன்.

2007 விகடன் தீபாவளி மலர்

1 comment:

உடுவை எஸ். தில்லைநடராசா said...

நல்லது தொடர்ந்து எழுதுங்கள்.