Friday, 16 November 2007

தனியே.. தன்னந்தனியே


"ஒன். டு. த்ரீ. ·போர்..... ஹாப்பி பர்த் டே டு யூ. ஹாப்பி பர்த் டே டு அனிதா. ஹாப்பி பர்த் டே டு யூ."

கண் விழித்த அனிதா, மிரண்டு போய் விலுக்கென எழுந்து உட்கார்ந்தாள். மாமனாரில் ஆரம்பித்து நாத்தனார் வரை அவள் படுக்கையை சுற்றி நின்று கொண்டு டாப் ஆ·ப் த வாய்ஸில் பாடினால், யார்தான் அரண்டு போகாமல் இருப்பார்கள்? ஆனால் சீக்கிரமே, 'இன்று உனக்கு பிறந்த நாள்டீ !' என்று புத்தி எடுத்துரைக்க, அனிதா மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனாள்.

"அனிதா! இந்தா... என் பிறந்த நாள் கி·ப்ட்!" நாத்தனார் ரம்யா மெகா சைஸ் டெடி பியரை நீட்டினாள். அதை தொடர்ந்து மச்சினன் பிரசன்னாவிடமிருந்து ஒரு ஆப்பிள் ஐபாடும் மாமியாரிடமிருந்து ஒரு சுடிதார் செட்டும் பிறந்த நாள் பரிசாக கிடைத்தன.

"என்னடா விக்னேஷ்! எங்கடா உன் கி·ப்ட்?" மாமனார் சந்தானம் அதட்டி கேட்டார்.

"அவர் ராத்திரி பன்னிரெண்டு மணிக்கே கொடுத்துட்டார், மாமா!" என்று வெட்கத்தோடு, தன் விரலில் இருந்த வைர மோதிரத்தை காண்பித்தாள் அனிதா.

"திருட்டுப் பயலே" என்று செல்லமாக சந்தானம் விக்னேஷ் முதுகில் செல்லமாக குத்த, வீடே கலகலப்பானது. அனிதா கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு வந்ததும் வரும் முதல் பிறந்த நாள் என்பதால் அதை வித்தியாசமாக அவள் அசந்து போகும் படி செய்ய வேண்டும் என்று மாஸ்டர் பிளான் போட்டிருந்தார் சந்தானம். அது சரியாக ஒர்க் அவுட் ஆனதில் அவருக்கு ரொம்ப திருப்தி.

"சரி, எல்லாரும் பரிசு கொடுத்தாச்சு, மாமா, உங்க பரிசு எங்கே?" என்று உரிமையாக கேட்டாள் அனிதா.

"என் பரிசுதானே... வெயிட்! எல்லாரும் ப்ரேக் ·பாஸ்ட் சாப்டுட்டு ரெடியாகுங்க." என்று சொல்லி, சஸ்பென்ஸ் வைத்தார். டிபன் முடிந்ததும், ஆவலாய் 'எங்கே மாமா அந்த கி·ப்ட்' என்று மீண்டும் கேட்க, சந்தானம் சிரித்துக் கொண்டே அனைவரையும் வாசலுக்கு அழைத்து வந்து காரில் ஏற்றினார்.

கார் பெசண்ட் நகரை நோக்கி விரைந்தது. ஒரு புதிய அபார்ட்மெண்ட் முன்னால் நின்றது. லி·ப்டில் ஏறி, இரண்டாவது மாடியில் ஒரு ப்ளாட் கதவை திறந்து காட்ட அனைவரும் அசந்து போயினர்! அனைத்து வசதிகளும் கொண்ட அற்புதமான ·ப்ளாட்!

"அனிதா! இதுதான் உன் பிறந்த நாளுக்கு நான் தர்ற கி·ப்ட்! இனிமே இதுதான் உன் வீடு. நம்ப தி.நகர் ப்ளாட் ரொம்ப சின்னதும்மா. நீங்க இங்க கொஞ்சம் ·ப்ரீயா இருக்கலாம். வீக் எண்டுக்கு தி.நகர் வாங்க. நாங்களும் அப்பப்ப இங்க வர்றோம். என்ன, சந்தோஷமா? எப்படி என் கி·ப்ட்? பிடிச்சிருக்கா?"

அனிதா திடீரென மௌனமானாள். கொஞ்ச யோசனைகளுக்கு பிறகு மெதுவாக,

"மாமா நான் ஒண்ணு சொல்லட்டுமா. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா நான் தனியாதான் வளர்ந்திருக்கேன். அக்கா, தங்கை, அண்ணா, தம்பி உறவு பற்றியெல்லாம் கேள்விதான் பட்டிருக்கேனே தவிர அந்த சுகத்தை அனுபவிச்சதில்லை. விக்னேஷ்தான் என் ஹஸ்பண்டுன்னு நிச்சயமான உடனே நான் ரொம்ப மகிழ்ந்த ஒரு விஷயம், இனிமே தனிமையில போரடிச்சுக்கிட்டு இருக்காம, வீட்டோட இருக்கற அம்மா, நாத்தனார், தம்பின்னு ஜாலியா இருக்கலாம்கிறதுதான். நீங்க என்னடான்னா, இப்படி தனியா இருக்க வைச்சிட்டீங்களே! வேண்டாம் மாமா. இவர் ஒன்பது மணிக்கு ஆபீஸ் போனா ராத்திரி எட்டு மணிக்குதான் திரும்பி வராரு. அது வரைக்கும் டி.வியும் பால்கனி காத்துமாக இருக்கறதுக்கு எனக்கு போரடிக்கும். ஒரு மியூசியம் மாதிரி அமைதியா இருக்கற வீடு எனக்கு அலுத்துப் போச்சு. சென்டரல் ஸ்டேஷன் மாதிரி கலகலப்பா இருக்கிற உண்மையான வீடுதான் மாமா எனக்கு வேணும். அது தி.நகர் வீடுதான். வாங்க போகலாம். சனி, ஞாயிறுகள்ல வேனா எல்லாருமா இங்க வரலாம்!" என்றாள்.

இந்த கதைக்கான தீப்பொறி..... (திருமதி தேவதர்ஷிணி)

ஒரு பெண் என்னிடம் வந்து, "டி.வி. தொடரில் நடிக்க சான்ஸ் வாங்கித்தர முடியுமா?" என்று கேட்டாள். வீட்டில் போரடிக்கிறது என்பதற்காக நடிக்க வேண்டுமாம். 'ஏன் இதே ஊரில் இருக்கும் உன் மாமனார் மாமியாரோடு தங்கி இருக்கலாமே?' என்று கேட்டதற்கு 'ப்ச்' என்று உதட்டை பிதுக்கினாள்.

2007 விகடன் தீபாவளி மலர்

1 comment:

Srikanth said...

Nice story. I wish to read your other stories as well.