Monday, 18 December, 2006

டைம் மெஷினில் உட்காருங்க... 35 வருஷம் நான் பின்னால போறேன்...

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தஞ்சையிலிருந்து 20 கிலோ மீட்டரில் உள்ள மெலட்டூர் என்ற கிராமத்தில்தான். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய வீடு. ரெட்டை மனை கட்டு என்று சொல்லுவார்கள். சமையல் ரூம் மட்டுமே 800 சதுர அடி இருக்கும். அதன் பின்னால் கிணற்றடி, அதற்கு பின்னால் கொல்லை என்ற மெகா வீடு.

நானும் என் அண்ணனும் (தற்போது கல்பாக்கம் B.A.RC.ல் உயர் பதவியில் இருக்கிறார்) படு குறும்பர்கள். எங்கள் வலையில் சிக்காதவர்களே கிடையாது. என் அண்ணன் தாத்தா செல்லம். தினமும் அவனுக்கு 10 பைசா தருவார். எனக்கு ஒன்றும் தரமாட்டார். அவருக்கு கண் பார்வை சற்று மந்தம். இதை என் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஒரு நாள் என் அண்ணன் சட்டையை போட்டு கொண்டு திரும்பி நின்று கொண்டேன். ரகசியமாக தருவதாக நினைத்துக் கொண்டு என் கையில் அன்றைய பத்து பைசாவை திணித்து விட்டார் தாத்தா. அடுத்த செகண்டிலேயே நான் யார் என்று தெரிந்துவிட முடியை பிடிக்க எத்தனித்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் நாங்கள் கதற் கதற எங்கள் பாட்டியின் மேற்பார்வையில் வீட்டு திண்ணைக்கு வந்த பார்பரின் அதிரடி தாக்குதலில் முடியை 95% இழந்திருந்தோம். (என் தம்பி கொஞ்சம் ரோஷக்காரன். தலைமுடி போனதை ஏற்றுக் கொள்ள முடியாமல் குளிக்காமலே அழுது கொண்டிருப்பான். பாட்டி தலையில் தண்ணீர் ஊற்ற வந்தால் அங்கும் இங்கும் ஓடுவான். ஸ்கூலில் சம்மர் கிராப் தலையில் கையை வைத்து தேய்பார்கள். கேலி செய்வார்கள் என்ற பயம் அவனுக்கு).

அரை மொட்டையனான நான் எடுத்தேன் ஓட்டம். அரை மணி கழித்து வீட்டுக்கு வந்தால் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பலத்த சண்டை. தாத்தாவோ நான் அந்த பத்து பைசாவை தந்தே ஆகவேண்டும் என்கிறார். பாட்டியோ 'அவனும் உங்கள் பேரன்தானே? கொடுத்தால்தான் என்ன?' என்று மல்லுக்கு நிற்க, எங்களுக்கு ஜாலிலோ ஜிம்கானா!

அடுத்த குறும்புக்கும் எங்கள் தாத்தாதான் ஹீரோ. எங்கள் வீட்டில் ஒரு ரேடியோ இருந்தது. அது வால்வு டைப். போட்டால் உடனே பாடாது. மூன்று நிமிடங்களாவது பிடிக்கும். கிராமங்களில் உள்ள பழங்கால வீடுகளில் காமிரா ரூம் என்று ஒன்று இருக்கும். ஜன்னலை சாத்தினால் கும் இருட்டு இருக்கும். அதனால்தான் என்னவோ அந்த பெயர் அதற்கு வந்து விட்டது. எங்கள் வீட்டு காமிரா ரூமில் ஸ்பெஷல் அட்ராக்ஷனாக ஒரு சுரங்கம் உண்டு. சுவர் ஓரமாக தொங்கிக் கொண்டிருக்கும் சாக்கை விலக்கி கீழே குதித்தால் சுரங்கது படிகள் வரும். தாத்தா பார்க்காத போது நான் ரேடியோவை போட்டுவிட்டு, சுரங்கத்து படிகளில் ஒளிந்து கொள்வேன். திடீரென ரேடியோ பாட, தாத்தா அதை அனைத்து விட்டு காமிரா ரூமில் யாரவது இருக்கிறார்களா என்று எட்டிப் பார்ப்பார். அந்த சமயத்தில் வாசலிலிருந்து என் அண்ணா ஓடி வந்து ரேடியோவை போட்டு விட்டு போய்விடுவான். தாத்தா நிம்மதியாக வழ வழ சாய்வு திண்ணையில் சாயவும், ரேடியோ மீண்டும் அலறும். இந்த முறை வாசலில் போய் பார்ப்பார். என் அண்ணன் பக்கத்து வீட்டு ரேழியில் ஒளிந்து கொண்டிருப்பான். அந்த சைக்கிள் கேப்பில் நான் சுரங்கத்திலிருந்து வெளிப்பட்டு, கூடத்திற்கு வந்து, ரேடியோவை போட்டுவிட்டு, மீண்டும் சுரங்கத்தில் குதித்து விடுவேன். வழக்கம் போல் தாத்தா வாசல் பக்கத்தில் தோல்வி கண்டு திண்ணையில் சரியவும் ரேடியோ அலறவும் சரியாக இருக்கும். ரேடியா தானாகவே பாடுகிறதே என்று எங்கள் தாத்தா டென்ஷனாகி கத்த ஆரம்பிக்க எங்கள் பாட்டி பாத்திர பிரவேசம் செய்ய களை கட்டும்.

எங்கள் குறும்புக்கு வானமே எல்லை. அப்படி நாங்கள் படாய் படுத்திய தாத்தா தான் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன்னால் 'பேரக் குழந்தைகள் எங்கே?' என்று சொன்னதாக என் தந்தை சொன்னார். எங்களை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்குள் அவர் உயிர் பிறிந்து விட்டது. மூக்குப் பொடி தாத்தா நல்ல தாத்தா!