Sunday, 19 February, 2012

எதிரும் புதிரும்


"ம்.....பேஷண்ட் பேரு சொல்லுங்க" ரிசப்ஷனில் பீமனுக்கு தங்கை மாதிரி இருந்த நர்ஸ், கம்ப்யூட்டர் மானிடரை பார்த்துக் கொண்டே ஹிந்தியில் கேட்டாள்.
ராஜாராமன் சொன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தார். பதில் வராமல் போகவே, திடீரென நிமிர்ந்தாள்.
நெற்றிக் கண் பார்வை.
"ம்.... அது வந்து.... பிரியம்வதா..... ராஜாராமன்......"
குனிந்தாள். நான்கு நொடிகள் கழித்து, மீண்டும் நிமிர்ந்தாள். இந்த முறை ஆங்கிலம். "ரூம் நம்பர் 302. மூனாவது மாடி. ..... ஒன் மினிட்... அவங்க பேரு பிரியம்வதா ராஜகோபால்.... நீங்க கேட்டது....."
ராஜாராமனுக்கு திடீரென உறைத்தது..... "ஆமாம்....அவங்களேதான்....."
அவளேதான் என்று நாக்கு வரை வந்ததை, கடைசி நொடியில் மாற்றிக் கொண்டார். "அவங்க பிரியம்வதா.... நான் ராஜாராமன் .... ரெண்டையும் சேர்த்து சொல்லிட்டேன். ஸாரி" சே! என்ன அசட்டுத்தனம்.
அவள் ராஜாராமனை கேள்வியாக பார்த்தாள். "நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?"
ராஜாராமனுக்கு என்ன சொல்வது? எப்படிச் சொல்வது என்று புரியவில்லை? திடீரென, இங்கு வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது. எல்லை தெய்வமே ஆயிரம் எதிர் கேள்வி கேட்கிறதே?
"... ம்.... அது வந்து..." தடுமாறினார்.அவளுக்கு பின்னால் கைகளை உயர்த்தி ஆசிர்வதிக்துக் கொண்டிருந்த ஏசுவின் மீது பார்வையை ஓட்டி 'ஏதாவது ஐடியா கொடேன்' என்பது மாதிரி மனதுக்குள் இறைஞ்சினார்.
"சொல்லுங்க சார்.... ப்ரெண்டா.? இல்லே, ரிலேட்டிவ்வா?"
"...மொதல்ல ப்ரெண்ட்... அப்பறமா.... ரிலேட்டிவ்.... இப்ப பிரெண்ட்..."
அவளுக்கு சுத்தமாக புரியவில்லை என்பதற்கு நெற்றியை சுருக்கினாள். அதற்குள் பின்னாலிருந்து 'வாங்கோ' என்ற சத்தம் கேட்டது. ராஜாரமன் சட்டென திரும்பவும்...
கல்யாணி மாமி! அப்பாடி!
"என்ன மாமி. எப்படி இருக்கேள்? சௌக்கியமா? ஹாஸ்பிடல்ல என்ன சௌக்கியமான்னு கேக்கறது தப்புதான். நீங்கதான் பேஷண்ட் இல்லையே. அதுனால பரவாயில்ல"
கல்யாணி மாமி சிரித்தாள். "இவாள்ட என்ன கேட்டுண்டு இருந்தேள்?"
"இவ நான் யாருன்னு கேக்கிறா? அப்படி சொன்னாத்தான் உள்ள விடுவா போலிருக்கு."
மாமி இரண்டடி முன்னே வந்தாள். "இங்க பாரும்மா. இவர் என்னோட மாப்ளே. போலாமில்லையா?"
"ஆண்டி. விசிட்டர் டைம் முடிஞ்சிருச்சு. பெரிய டாக்டர் வர்ற நேரம். சீக்கிரமா பார்த்துட்டு போகச் சொல்லுங்க. கூட்டமா இருந்தீங்கன்னா எனக்கு வேலை போயிடும்"
படபடவென எண்ணெயில் விழுந்த ஆப்பம் மாதிரி புரியாத ஹிந்தியில் பொறிந்தாள். மாமி அவளை நோக்கி ஒரு வெற்று பார்வையை உதிர்த்து மௌனமாக தலையாட்டிவிட்டு, லிஃடை நோக்கி நடந்தாள்.
"இந்த காலத்து பொண்னுகளெல்லாம் ராட்சசிகள்" மாமி கீழ் பார்வை பார்த்துக் கொண்டே சொன்னாள்.
ராஜாரமனுக்கு சிரிப்பு வந்தது. "மாமி. இதை உங்க பொண்ணுக்கு முன்னால சொல்லாதீங்கோ. உங்களை கீசகனை வதம் செஞ்ச மாதிரி ரெண்டா கிழிச்சு போட்டுவா. பொம்மனாடி ராட்சசிகள்னா, இந்த ஆம்பிள்ளைகளெல்லாம் அரக்கர்கள்னு சொல்லுவா"
"இப்ப அவதான் கிழிஞ்சு கெடக்கா. கர்பப்பையை எடுத்தாச்சு. பையாப்ஸிக்கு போயிருக்கு. கான்சரா, என்னேன்னு தெரியலை........எனக்கென்ன பயம்? தாராளமா அவகிட்டேயே சொல்லுவேன். சொல்லியிருக்கேன். இப்பல்லாம் முன்னமாதிரி நான் சும்மா இருக்கறதுல்லே. நான்னா ஒரு வாரத்துக்கு வலிக்கிறமாதிரி திருப்பி கேட்டுடறேன். தைரியம் வந்துடுத்து."
திடீரென ராஜாரமனுக்கு ஞாபகம் வந்தது. அட சட். ஒண்ணுமே வாங்கிக் கொண்டு வரவில்லையே! வழக்கமாக எல்லோரும் வாங்கிக் கொண்டு வரும் ஆரஞ்சு பழம், ஆப்பிள், ஹார்லிக்ஸ் பாட்டில்... குறைந்த பட்சம் அவளுக்கு பிடித்த பெர்க் சாக்லெட்.... நல்லவேளை இப்போதாவது ஞாபகம் வந்ததே. ஒரு வேளை நேரே போயிருந்தால்..... "அம்மா. உன்னோட அருமை மாப்பிள்ளை மாறவே இல்லை. கைய வீசிண்டு வந்துட்டு, நீ குடுத்த காப்பியை குடிச்சுட்டு போயிட்டேர். ரொம்ப பெருமையா இருக்கு. மெச்சிக்கோ"
லிஃட் தரைக்கு வந்து தன்னை இரண்டாக பிளந்து கொண்டது. ஒவ்வொருவராக வெளியேர தொடங்கினர். ராஜாராமனுக்கு பின்னால் இருந்தவர்கள் வெப்ப மூச்சுக் காற்றுடன் உள்ளே பாய்வதற்கு தயாராக இருந்தனர். ராஜாராமன் ஒரு அரை வட்டம் அடித்து, உடனடியாக க்யூவை விட்டு வெளியே வரவும், மாமி கலவரமானார்.
"மாமி. ஒரு நிமிஷம். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்ரேன்......காரை சரியா லாக் பண்ணலேன்னு நெனைக்கறேன். சரியா தெரியலை. பார்த்துட்டு தோ வந்துடறேன்...... ஆமா நீங்க எதுக்கு கீழே வந்தேள்....."
"அதுவா. ஒண்ணுமில்லே. ப்ரியாவுக்கு மருந்து வாங்கனும். இங்கேயேதான் எதிர் பில்டிங்கல இருக்கு. நான் வாங்கிக்கறேன். நீங்க போயிட்டு நேர 302க்கு வந்துடுங்கோ"
மாமி கையில் ஒரு நீள சீட்டு இருப்பதை அப்போதுதான் கவனித்தார்.
"இல்லே. அந்த சீட்டை இப்படி கொடுங்கோ. நான் பேஸ்மெண்ட் போயிட்டு, மாத்திரை மருந்த வாங்கிண்டு வந்துடறேன். நீங்க ரூமுக்கு போங்கோ."
கடைசி ஆளாக மாமியை லிஃட்டுக்குள் திணித்தார். மாமி என்ன ஏது என்று முடிவு எடுப்பதற்குள் லிஃட் கதவுகள் மூடிக் கொண்டன.
ராஜாராமன் தரை தளத்தின் மைய பகுதி வரை வந்து அங்கேயே நின்று சிறிது நேரம் யோசிக்கலானார். நேற்று காலையில்தான் டெல்லி வந்தார். ஆபீஸ் விஷயமாக குர்கானில் நான்கு நாள் மீட்டிங். கனாட்பிளேசில் ரூம் போட்டிருந்தார்கள். ராத்திரி எட்டு மணிக்கு அப்பா போன் செய்தார்.
"ராமா, ப்ரியா ஹாஸ்பிடலைஸ்டு தெரியுமா?"
"தெரியாது. தெரிஞ்சுக்கணும்னு அவசியமும் இல்லே."
அப்பா சில நொடிகள் பதில் கொடுக்கவில்லை. "ஏன்டா. எவ்வளவு நாள் தனியா இருக்கப் போற? நான் போய்டேன்னா, சீர் பட்டு போகப்போறே."
"கமான்ப்பா. எத்தனையோ பேச்சலர்ஸ் தனியாதான் இருக்காங்க. அவங்க சீர் கெட்டா போயிட்டாங்க? அம்மா போனதுக்கு அப்பறம் நீங்க தனியாதானே இருக்கேள். கெட்டா போயிட்டேள். உங்களுக்கு ஏதோ ஒன்னு நடக்கனும். அத சுத்தி வளைச்சு பேசறேள். அதான் டைவர்ஸ் வரைக்கும் போயாச்சே. இனிமே என்ன இருக்கு?"
"ஏய். கோர்ட்டுல தீர்ப்பாகற வரைக்கும் அவ ஒன்னோட பொண்டாட்டிதான். அது கெடக்கட்டும். கல்யாணத்துக்கு முன்னால நாலு வருஷம் பிரண்ட்ஸா இருந்திருக்கே. என்னமா வழிஞ்சுருக்கே. அதுக்காவாவது.... அது சரி... அவ என்னடா பெரிய தப்பு பண்ணிட்டா? அவளுக்கு ஒரு தனி ஐடெண்ட்டிடி வேணும்னு எதிர்பார்த்தா. அது தப்பா?"
"அப்பா, நான்தான் லீட் கிடார். நான் என்ன வாசிக்கறேனோ அதுக்கு ஒத்த மாதிரி அவ வாசிக்கனும். அவ தனியா இன்னொரு ஆர்கெஸ்ட்ரா நடத்தக்கூடாது. உனக்கு இதெல்லாம் புரியாது. வீட்ல ரெண்டு ஹஸ்பெண்டா இருந்தோம். தேர் வாஸ் நோ வைஃப். வேற ஏதாவது பேசு."
"சரி. பேசறேன்..... ம்.... மன்மோகன் சிங் சௌக்கியமா?"
அப்பா ரொம்பவும் விட்டி காரெக்ட்டர். "இந்த கிண்டல்தானே, வேண்டாங்கிறது."
"நீ வைஃபா இருந்திருக்க வேண்டியதுதானே. அதை விடு......நான் சொல்லறது கொஞ்சம் கேளு. யு கோ வித் ஓப்பன் மைன்ட். ஒரு பொக்கே வாங்கிக்கோ. கெட் வெல். வித் ரிகார்ட்ஸ். சந்திரமௌலின்னு கார்டு போட்டு அவ கிட்டே கொடு. அவ நல்ல பொண்ணுடா. என்ன மக நட்சத்திரம்? அப்படிதான் கொஞ்சம் அப்பர் ஹாண்டா இருப்பா..."
அப்பா சீரியஸ்ஸாக பேசினால் இங்கிலீஷ் புகுந்து விளையாடும். "அப்பா. யூ ஆர் சைல்டிஷ்."
"இப்பவும் ஒண்ணும் குடிமுழுகிப் போகலை. வேண்டாம் வேண்டாம் சொல்ல சொல்ல ஈஷோ ஈஷிண்டு நீங்கதான் காதல் செஞ்சிங்க. வேண்டாம் வேண்டாம் சொல்ல சொல்ல சண்டை போட்டீங்க. டைவர்ஸ் நோட்டீஸ் கொடுக்கறதுக்கு முன்னால என்னை ஒரு வார்த்தை கேட்டியா? நீங்கதான் ஃபூல்ஸ். முட்டாள்கள் ரெகன்ஸைல் பண்ணிகறதுல தப்பே இல்லே."
"அப்பாவா இருக்கறதுனால யு கெ நாட் டிக்டேட் டர்ம்ஸ் ஆன் மி."
"டூ வாட் ஐ சே மை சன்." அப்பாவின் குரல் உயர்ந்தது. கொஞ்சம் மௌனம் நீடித்தது.
"ஓகே. ஓகே. நானா எதுவும் ஆரம்பிக்க மாட்டேன். அவளா ஏதாவது சொன்னா, ஐ மே..... ஐ மே..."
"ஐ ஜூன்.... ஐ ஜூலை... போடா. போய் பாரு. கிழிச்ச நாரா கெடக்காளாம். கோ வித் பொக்கே அன்ட் ஃப்ரீ மைண்ட், மை டியர் டர்டி கூஸ்."
அப்பாவுக்கும் மகம் நட்சத்திரமாக இருந்திருக்குமோ என்று ராஜாராமனுக்கு அப்போது சந்தேகம் வந்தது.
ராஜாராமன் ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்து ஒரு பெரிய கூடை பொக்கே ஒன்றை வாங்கி, கார்டில் அப்பா பெயரை போட்டார். ஏ4 சைசில் ஒரு காட்பெரி கிஃட் பேக் ஒன்றை வாங்கிக் கொண்டார். அதில் பெர்க் இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டார்.
அதே நேரத்தில் கல்யாணி மாமி 302ஐ அடைந்திருந்தாள்.
"ப்ரியா. மாப்பிள்ளை வந்திருக்கார். ரிஷப்ஷன்லே பார்த்தேன். இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவார்."
ப்ரியா முகம் சுருக்கினாள். "மாப்பிளையாவது மண்ணாங்கட்டியாவது? வொய் த ஹெல் ஹி இஸ் கமிங். எல்லாம் முடிஞ்சு போச்சே."
"இங்க பாரு. தஸ் புஸ்னு எங்கிட்ட இங்லீஷ்ல பேசாத. நான் மடச்சியாகவே இருந்துட்டு போறேன். வரவர்கிட்டே இந்த மாதிரி எரிஞ்சு விழாத."
"எனக்கு யாரையும் பார்க்க இஷ்டமில்லே. நீ வேனா கீழே போய் பார்த்து அப்படியே அனுப்பிடு."
அதற்குள் கதவு திறக்க, ஒரு நர்ஸ் கைகளில் ஒரு ட்ரேயுடன் உள்ளே வந்தாள். வந்தவள் அங்கிருந்த அசாதாரண சூழ்நிலையை குறிப்பறிந்து கொண்டாள்.
"மேடம். மார்னிங்தான் ஆபரேஷன் ஆயிருக்கு. ஸ்டிச்சஸ் டிஸ்டர்ப் ஆகக் கூடாது. இரைஞ்சு சத்தம் போட்டு பேசக் கூடாது. அவாய்ட் பண்ணுங்க. டாக்டர் சொல்லிருக்காருல்ல."
"சிஸ்டர். நீங்க சிஸ்டர் லேலையை மட்டும் பாருங்க. நான் ஒன்னும் அடி முட்டாள் இல்லே. புரிஞ்சுதா. கீப் யுவர் லிமிட்ஸ் ப்ளீஸ்." ப்ரியா சுளீரென திருப்பி கொடுத்தாள்.
நர்ஸ் அந்த சாட்டையடியை எதிர்பார்க்க வில்லை. எக்கேடு கெட்டுப் போ என்கிறது மாதிரி ரியாக்ஷன் செய்த்து விட்டு மாத்திரைகளை சரமாரியாக டப்பாக்களில் அடைத்து விட்டு போனாள். அவள் போன இரண்டாவது நொடியில் கதவு மீண்டும் தட்டப்பட்டது.
இந்த முறை ராஜாராமன்.
கல்யாணி மாமி மீண்டும் 'வாங்கோ' என்றாள். ப்ரியா கொஞ்சம் கூட சலனமில்லாமல் தன் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டாள். ராஜாராமன் அப்பா கொடுக்கச் சொன்ன பொக்கேயை அவளை நோக்கி நீட்டினார். ப்ரியா அம்மாவை நோக்கி கைகாட்டினாள். கல்யாணி மாமி ப்வயமாக வாங்கி, ப்ரியாவிடம் காட்டிவிட்டு அருகிலிருந்த டேபிள் மீது வைத்தாள். ராஜாராமன் கேள்வியே கேட்காமல் கிஃட் பாக்கெட்டையும் மாமியிடமே கொடுத்தார். அதுவும் இயந்திர கதியாக டேபிளுக்கு போனது.
"ஹவ் ஆர் யூ?"
"ம். இருக்கேன்."
'கொஞ்சம் ஒடம்புக்கு ஏத்த வேலை செய்யறது."
"நீங்க அட்வைஸ் செய்யுற காலமெல்லாம் போயிடுத்து."
கல்யாணி மாமி கலவரமாக ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தாள்.
"அப்பா அவசியம் போய் பார்த்துட்டு வான்னு சொன்னார். அதான்....."
"அப்ப நீங்களா வர்லே.. இல்லியா."
ப்ரியா கொஞ்சம் வாலி டைப். எதிராளியின் பலத்தை சரி பாதி வாங்கிவிடுவாள். அந்த நிமிடமே ராஜாராமன் பிடி அற்று போனது.
"ஓகே. ஓகே. கெட் வெல். கீப் குட் ஹெல்த்." ஒரு மாதிரி சமாளித்து, மாமி பக்கம் திரும்பி, "என்ன மாமி? எப்படி இருக்கேள்?"
மாமி ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு, "ம்.. ஏதோ இருக்கேன்பா. இந்த ஊர் ஹிந்தி ஒரு எழவும் புரியலை. ஏதோ பாம்பே ஹிந்தியை வைச்சுண்டு சமாளிக்கறேன். இவ என்னடான்னா விக்கிரமாதித்தன் மாதிரி காடாறு மாசம், நாடாறு மாசம்னு தேசாந்திரம் போயிடறா. பெரிய வீட்டுல, தன்னந்தனியா....."
"அம்மா போறும். ஐ ஆம் சிக் ஆஃப் யுவர் கம்ப்ளெயிண்ட்ஸ்."
'இந்த மாதிரிதான் இங்கிலீஷ்ல பேசி வாயை அடைச்சுடுவா. அவர் கூடவே நானும் மேல போய்டா நல்லது. நாளை எண்ணிண்டு இருக்கேன்."
அதற்கு மேல் ராஜாராமன் அங்கிருக்க ப்ரியப்படவில்லை. போய்விட்டார். கல்யாணி மாமியும் கூடவே போனாள்.
கால் மணி கழித்து திரும்பி வந்தாள். முகமெல்லாம் சிவந்திருந்தது.
"இருந்தாலும், ஒனக்கு இவ்வளவு துராங்காரம் கூடாது."
"இப்ப என்னதான் சொல்லவர்ற. பழங்காலத்து தமிழ் சினிமாவுல கெடுத்த வில்லனை திருத்தனும். அப்பறம் அவனுக்கே அவளை கட்டி வைக்கனும்கிற மாதிரி நான் அவரோட எகெயின் குடும்பம் நடத்தனுமா?. அம்மா, ஒனக்கு என்ன மூளை மழுங்கிடுத்தா?"
"சரிடி. நீ இப்படியே இரு. இன்னிக்கு வயத்தை கிழிச்சாச்சு. நாளைக்கு என்ன நடக்கப் போறதோ. ஈஸ்வரா!"
"இங்க பாரு. உன்னால முடியலைன்னா சொல்லு. நாளைக்கே டிரெயின் ஏத்திவிடறேன். உங்க அண்ணாவாத்துக்கு போ."
"ஏன் மாமான்னு சொல்ல முடியாதோ?"
"எனக்கு யாரும் வேண்டாம். எல்லாரும் போய் தொலைங்கோ."
கல்யாணி மாமி பதில் பேசாமல் அழுதாள்.
"அம்மா. உனக்கு உன் மாப்ளை அப்படியே சத்யசீலர்ன்னு நினைப்பு. ஆனா அந்த ஆள் மாதிரி மேல் சாவனிஸ்ட் வேற எங்கையும் பார்க்க முடியாது. உள்ளுக்குள்ள உளுத்து போன பிலாசபி. வெளியிலே பெரிய இன்ட்டெலிக்சுவல்னு பந்தா. எல்லாம் வேஷம். ரெண்டு மூனு தடவை என்னை அடிச்சிருக்கான். கடைசியா அடிக்க வந்த போது கையை புடிச்சு ஒரு முறுக்கு முறுக்கினேன். கை ப்ராக்சர் ஆகி, இரண்டும் வாரம் ஆபீஸ் போகல ஒரு மாசம் இடது கையால லாப் டாப்ல டைப் அடிச்சான். உன் மாப்ளே சரியான க்ராக்."
"ஆமா. நீ அப்படியே புடம் போட்ட தங்கம் பாரு. எல்லாம் என் தப்பு."
"என்ன தப்பு?"
"ஒன்னை பெத்ததே தப்பு."
"அதை ஒன் புருஷன்கிட்டே செல்லியிருக்கனும்."
கல்யாணி மாமி ஒன்றும் பேசவில்ல. ஒரு வெற்று பார்வை பார்த்தாள். "நல்ல வேளைடி. உங்களுக்கு கொழந்தைகள் பொறக்கலை. இல்லேன்னா அதுக படற பாட்டை கண்ணு கொண்டு பார்க்க முடியாது."
"அம்மா. இனிமே இந்த டாப்பிக்கை எடுக்காதே"
"ஏண்டி, நீ கொஞ்சம் இறங்கி வரப்படாதா?"
"வரலாம். என்னை மாதிரி அட்ஜெஸ்ட் செஞ்சுண்டு போற ஆள் வேறு யாரும் கிடையாதுன்னு எனக்கு ஆபீஸ்ல பேரு. ஆனா, உன் மாப்ளை கொஞ்சாமாவது லீட் கொடுத்தாரோ? வந்தவுடனேயே அட்வைஸ் செய்ய ஆரம்பிச்சாச்சு. அப்பறம் எப்ப மெட்றாஸ் வரப்போறன்னு அடுத்த கேள்வி வரும். எனக்கு டெல்லிய விட்டு போக முடியாது."
"ஆபீஸ்ல... அதென்ன... ஆங்... அட்ஜெஸ்ட் பண்ணிப்ப. வீட்ல அதை பண்ண மாட்டே. நான்னாருக்கு உன் நியாயம். என்னையும்தான் உங்க அப்பா அடிச்சிருக்கார். ஒரு தடவை காலால மிதிச்சே இருக்கார். அப்பறந்தான் நான் அவர் கோபத்தை கிளர்ற மாதிரி பேசிருக்கேன் தெரிஞ்சது. அப்பறம் எப்படி கேட்டா, பதில் பாந்தமா வரும்னு புரிஞ்சுண்டேன். சாகற சமயத்திலே, நான் போய்டா, நீ என்னடீ பண்ணுவே? என்னடீ பண்ணுவேன்னு கண்ணீர் விட்டு கதறினார்....."
"அம்மா. போதும்மா. உன் அடிமை புராணம். இப்பெல்லாம் ஆணும் பெண்னும் ஒண்னு."
"ஒண்ணு, ஒண்ணு இல்லேடி. ஒண்ணுக்காக இன்னொண்ணு."
"சரி, என்ன எழவோ விடு. இந்த ராஜாராமருக்கு நீயே இன்னொரு சீதையை, ஒரு அடிமை சீதையை கல்யாணம் பண்ணி வை. என்னை இழுக்காதே. எனக்கு தூக்கம் வர்றது."
அதன் பிறகு கல்யாணி மாமி எதுவும் பேசவில்லை.
ராஜாராமன் சென்னை வந்த ஒரு மாதம் கழித்து, ஈ.சி.ஆர்.ரோட்டில் அவர் காரை ஒரு கன்ட்டெயினர் லாரி பதம் பார்த்தது. உடனடியாக அப்போலோ ஐ.சி.யூ.வில் அட்மிட் செய்யப்பட்டார். அந்த சமயத்தில் ப்ரியம்வதா தன் கம்பனி விஷயமாக சென்னை வந்திருந்தாள். கூடவே அவள் அம்மாவும் வந்திருந்தாள். தகவல் கிடைத்ததும், அம்மாவின் பிடுங்கலின்படி ப்ரியம்வதா சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹாஸ்பிடல் வர ஒத்துக் கொண்டாள்.
இருவரும் கால் டாக்ஸி பிடித்து ஹாஸ்பிடலை அடைந்தனர். ரிஷப்ஷனில் இருந்த ஒல்லியான சின்ன உடம்புக்காரி ப்ரியம்வதாவை பார்த்து கேட்டாள். "ம்.... பேஷண்ட் பேரு சொல்லுங்கம்மா?"
கல்யாணி மாமி கவலை அப்பிய முகத்தோடு ப்ரியம்வதாவை பார்த்தாள்