Showing posts with label 02கல்கி. Show all posts
Showing posts with label 02கல்கி. Show all posts

Wednesday, 27 August 2008

அண்டங்காக்கை


கல்கி - 31 ஆகஸ்ட் 2008

முருகேசனின் அன்றைய காலைப் பொழுது வழக்கத்துக்கு மாறாகத்தான் விடிந்தது. அலாரக்கடிகாரம் மாதிரி தினமும் விடிகாலையில் வந்தெழுப்பும் காகம் இன்று ஏனோ வரவில்லை. மற்ற காக்கைகள் 'கா..கா' என்று கத்தினால் இந்த கிழட்டு அண்டங்காக்கை மட்டும் ஒரு மாதிரி 'க்ர்ர்ஹ்... க்ஹ்' என்று பால்கனி கட்டையில் உட்கார்ந்து கொண்டு அவனை பார்த்து கத்தும். அதன் நாலாவது ரவுண்டில் முருகு கிட்டத்தட்ட விழித்துக் கொள்வான். அரை தூக்கத்தில் அவன் தரையில் சிதறவிடும் மிக்சர் துகள்களையும், நேற்றைய உணவு மிச்சங்களையும் தத்தி தத்தி உள்ளே வந்து உரிமையோடு கொத்திக்கொண்டு போகும். இனி மீண்டும் மறுநாள் காலைதான்! அவனைப் போலவே அந்த காக்கையையும் அவனைத்தவிர யாரும் ரசிப்பாரில்லை, ரட்சிப்பாரில்லை.

விழிப்பு வந்தபோது, அவன் ஒரு சாக்கடைக்கு பக்கத்தில் உருண்டு கிடப்பது மாதிரி உணர்ந்தான். காரம் கலந்த கெட்ட வாடை அவனை சுற்றியிருந்தது. தலையை தூக்க முடியவில்லை. கைகளை அசைத்ததில் பிசுபிசுப்புடன் கம்பிகளாய் என்னவோ ஒட்டிக் கொண்டு வந்தது. ரிஃப்ளெக்ஸ் வேகத்தில் அடுத்த கையை சோர்வாக வீசியதில் 'சுரீரென' சுட்டது. மண்டைக்குள் தீப்பொறிகள் சிதற.... விழித்துக் கொண்டான். சுற்றியிருந்த பகுதிகள் 'அவுட் ஆஃப் போக்கஸில்' மங்கலாக தெரிந்தன. கண்ணுக்குள் ஒரு பிடி உப்பை கொட்டிய மாதிரி எரிச்சலாக இருந்தது.

'பிளாக்கவுட்' குழப்பங்கள் தீர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக நேற்றைய இரவின் மன கசப்புகள் அறுபட்ட காட்சிகளாக வந்து போயின. நினைவுகளின் வேகம் கூட இன்னும் தலையை வலித்தது. பால்கனி கதவு திறந்திருக்க, அதன் வழியாக வந்த காலைச் சூரியகிரணங்கள் அவன் கால்களை சுட்டன. 'விசுக்கென' கால்களை உள்நோக்கி இழுத்ததில் நிலை தடுமாறி இடதுபக்கமாக சரிந்தான். வயிற்றில் இருந்த அமில மிச்சங்கள் அவன் குரல்வளைப்பகுதியை சங்கடப்படுத்தின.

கொரடாச்சேரி சண்முகநாதன் முருகேசன் என்ற பெயரைச் சொல்வதும், எங்கோ ஒரு புற்றில் போய் கொண்டிருக்கும் ஒரு எறும்பை கை காட்டி சொல்வதும் ஒன்றுதான். கொஞ்சம் உணர்வுபூர்வமாக சொல்வதென்றால் முருகேசன் என்ற பெயருக்கு முகமும் இல்லை, முகவரியும் இல்லை. ஆனால், அதே முருகேசன் என்ற நிழல் முகத்துக்கு வெளிச்சம் தந்த செந்தமிழ்ச்செல்வன் என்ற புனைப்பெயரை சொன்னதும் தமிழ் திரைப்படத்துறை வரலாறு சற்று பத்து வருடங்கள் பின்னோக்கி போய் பவ்யமாக தன் பக்கங்களை திறந்து காட்டும்.

அந்த காலம், முருகேசனின் வசந்த காலம். இரண்டே வருடங்களில் மூன்று மெகா ஹிட்டுகள். அதன் பிறகு ஒன்று சுமாராக ஓடி பெயரை காப்பாற்றியது. அதை தொடர்ந்து மீண்டும் இரண்டு ஹிட்டுகள். இன்றைக்கு முன்னணியில் இருக்கும் ஒல்லிப்பிச்சான் ஹீரோவுக்கு செந்தமிழின் முதல் படத்தால்தான் பிரேக் கிடைத்தது. செந்தமிழ் அறிமுகப்படுத்திய எல்லா ஹீரோயின்களும் இன்றும் காசை அள்ளி ரியல் எஸ்டேட்டில் குவித்து வருகிறார்கள். எங்கும் எப்போதும் பேசப்பட்டவனை அடுத்தடுத்து மூன்றே முன்று படங்கள் ஒரேயடியாக கவிழ்த்து போட்டன. அதில் கடைசியாக அவனை ஒரே வாரத்தில் 'ஊத்தி மூடியது' அவனுடைய சொந்தப்படம். கார், வீடு எல்லாம் போனது. செக் மோசடி வழக்குகள் அவனை நிம்மதியற்று ஓடஓட விரட்டின. சுவரோரம் குவிக்கப்பட்ட குப்பை போல ஆனவனுக்கு குடி உற்ற துணை ஆனது.

சினிமா பார்த்து வெளியே வந்ததும், பிரக்ஞையின்றி நழுவவிடப்படும் சினிமா டிக்கெட்டாக செந்தமிழ்ச்செல்வன் பிடிகள் அற்று காலவெள்ளத்தில் காணாமல் போனான். எழுச்சியை தந்த அதே வேகத்தில், வீழ்ச்சியையும் கொடுத்தது தமிழ் திரைப்பட உலகம். 'நன்றி கெட்ட ....கள்' என்று செந்தமிழ் அடிக்கடி சொல்வது ஒரு ரசிக்கப்படாத காமெடி டிராக் மாதிரி ஆகிவிட்டது.

ஒன்பது மணிவாக்கில்தான் செந்தமிழால் இயல்பாக எழுந்து கொள்ள முடிந்தது. வயிறு முதுகோடு ஒட்டிக்கொண்ட மாதிரி வலித்தது. சட்டைப்பையில் இருக்கும் பனிரெண்டு ரூபாய் காலை நாஷ்டாவுக்கு போதும். அப்புறம்? யோசிக்க யோசிக்க வெறுமைதான் மிஞ்சியது. சம்பந்தமே இல்லாமல், இன்று வராமல் போய்விட்ட காக்கா என்ன ஆனது என்ற கவலையும் மனசை அப்பிக் கொண்டது.

அனிதா அவனைவிட்டு பிரிந்து போய் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவள் இருக்கும் வரை சில்லறை செலவுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. டான்ஸ் மாஸ்டர் செல்லாவின் குழுவில் பத்தோடு பதினொன்றாக ஆடிக் கொண்டிருந்தவள், தற்போது உதவி நடன இயக்குனராக உயர்ந்திருக்கிறாள். செல்லா அவள் மீது அதிக அக்கறை காட்டுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்றைக்கு செல்லாவை கைநீட்டி அடித்திருக்கக் கூடாது.

இரண்டு தெரு தாண்டிதான் அனிதாவின் அப்பா விடு இருக்கிறது. வீட்டை நெருங்கியபோது வாசலில் இரண்டு காகங்களை பார்த்தான். அதில் அவன் காகம் இல்லை. இரண்டும் அழகாய் இருந்தன. ஒன்று அனிதா என்றால் இன்னொன்று? வேண்டாம்.... செல்லா நினைவுகளை ஓரம் கட்டினான்.

அனிதாவின் அப்பா வீட்டுக்கு வெளியெ சேர் போட்டுக்கொண்டு ஒரு பீடியுடன் லொக் லொக்கிக் கொண்டிருந்தார். நிமிர்ந்து 'எதற்கு வந்தாய்?' என்பது மாதிரி பார்வையை வீசிவிட்டு, எதிர் பக்கம் திரும்பிக் கொண்டு, தோள் இடுக்குகளில் சொறிந்து கொண்டார். செந்தமிழுக்கு பட்டாசு திரியில் பற்ற வைத்த மாதிரி கோபம் கிளர்ந்தெழுந்தது. அடக்கிக் கொண்டான்.

அனிதா நைட்டியுடன் காலை நாளிதழின் சினிமா பக்கங்களில் மூழ்கியிருந்தாள். அவளும் அப்பனைப் போலவே நிமிர்ந்தாள். வெறுப்புடன் விடுவிடுவென போய், தன் கைப்பையை திறந்து நூறு ரூபாய் தாளை அருகில் இருந்த டேபிள் மீது வைத்தாள்.

"அனிதா. இதுக்கு பதிலா என் மேல காறி துப்பியிருக்கலாம்."

"மானம், மரியாதையெல்லாம் போன உனக்கு காசுதான முக்கியம். எடுத்துக்கிட்டு போ."

"அனிதா. அன்னிக்கி நான் செஞ்சது தப்புதான். எல்லாரும் கைவிட்டுட்டாங்க. நீயும் அப்படி செஞ்சா எப்படி?" வாசல் கதவு அருகில் லொக்லொக் கேட்டது.

"மொதல்ல உன்னை மாத்திக்க முயற்சி பண்ணு. இன்னமும் உன்னோட பழசை புடிச்சுக்கிட்டு தொங்கிக்கிட்டு இருக்கே. விழுந்தவன் வெறியோடு எழுந்திருக்கணும். அடுத்து அடுத்துன்னு அலை பாயணும். புதுசு புதுசா கத்துக்கணும். முதல்ல, தோத்தவன் குடிக்கக் கூடாது. குடிய விடு. எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி ஒரு ஸ்டோரி டிஸ்கஷனுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தேனே? என்ன செஞ்சே? என் மானம் போச்சு"

"நீ நெனைக்கற மாதிரி அவங்கள்லாம் நல்லவங்க இல்லே. என்னை ஏதோ வேண்டா வெறுப்பா சேர்த்துக்கிட்ட மாதிரி, பிச்சை போடற கணக்கா என்கிட்ட நடந்துக்கிட்டாங்க. நான் சொன்ன ஐடியாவையெல்லாம் நேத்து முளைச்ச அசிஸ்டண்ட் டைரக்டர் பசங்க அவங்களுக்குள்ள சிரிச்சு கேவலப்படுத்தினாங்க. குப்பையா படம் எடுக்கிறாங்க."

"காந்தக்ட் சர்டிஃபிகேட் கொடுக்க உன்னை அனுப்பல. சொல்ல சொல்ல கேட்காம ஆடினதோட பலனை இப்ப அனுபவிக்கிற. இன்னிக்கி சினிமா எவ்வளவோ மாறிடுச்சு. உன்னோட ஆகாசத்தில பறக்கறத விட்டுட்டு, தரையில நடக்க பாரு. இப்ப இங்கிருந்து போ." அதற்குள் அவன் அப்பா செந்தமிழை தரதரவென கையைபிடித்து வெளியே இழுத்தார். பீடி நாற்றம் குடலை பிடுங்கியது. நூறு ரூபாய் தாளை சட்டைப்பையில் வலுக்கட்டாயமாகச் சொருகினார்.

"இதான் கடைசி. இனிமே இந்த பக்கம் வராத. நீ வர்றதை பார்த்தா உன் கடன்காரங்க என் வீட்டு சாமான் செட்டை தூக்கிக்கிட்டு போயிடுவானுங்க. எங்களையாவது நிம்மதியா இருக்கவுடு"

கிழவனை எதிர்த்து மல்லுக்கு நிற்க செந்தமிழிடம் மனசிலும், உடம்பிலும் வலுவில்லை. சிற்றுண்டிக்கும், ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கும் சேர்த்து நாற்பது ரூபாய் ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு முன்னாலேயே, காசு கொடுத்தால்தான் சாப்பாடு என்று தெளிவாக சொல்லிவிட்டார் ஹோட்டல் முதலாளி.

"அண்ணெ, மீதி காசு கொடுங்க" அனிதா கொடுத்த நூறை நீட்டினான்.

"அதெப்படி? உன்னோட பழைய கணக்கெல்லாம் எவன் தருவான். போவயா?" முதலாளி செந்தமிழை ஒரு செத்த எலி மாதிரி பார்த்தார்.

"அண்ணே, ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்ணே. ஒருத்தன் கீழே விழுந்தா ஒரேயடியா போயிடணும். இல்லேன்னா இரக்கமே இல்லாம கல்லால அடிச்சே கொன்னுடுவீங்க"

"முருகு. உன்னோட எனக்கு மல்லுகட்டி பேச நேரமில்லே. வியாபாரம் ஆகணும். இடத்தை காலி பண்ணு"

வெளியே ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபோது, காக்கைகளின் பேரிசைச்சல் கேட்டது. காக்கை ஏதாவது இறந்து போனால் மற்ற காக்கைகள் இதே மாதிரிதான் கத்தும். கரையும் காகங்களுக்கு மத்தியில் தன்னுடைய காகம் இருக்கிறதா என்று தேடினான். எதுவுமே அவன் வீட்டுக்கு வரும் அண்டங்காக்கையை போலில்லை.

இன்று மதிய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? ஒரு டி.வி. சீரியலுக்கு இருபது எபிசோடுகள் அவன் இயக்கியிருந்ததற்கு இன்னும் பணம் தரவில்லை. அதில் கொஞ்சம் கேட்டு வாங்கினால் என்ன?

அந்த டி.வி. சீரியல் தயாரிப்பு அலுவலகம் வெறிச்சோடியிருந்தது. வாட்ச்மேன் கூட செந்தமிழை மதிக்கவில்லை. இரண்டு மணிநேரம் கழித்து வரச்சொன்னான். அது மாதிரி நான்கு முறை ஆனது. மாலை ஆறு மணிக்குதான் சீரியல் தயாரிப்பாளர் வந்தார். ஒரு மணி நேரம் கழித்துதான் அவனை உள்ளே அழைத்தார்.

"என்னைய்யா வேணும்? ஏன் தொந்திரவு பண்ணறே?" எடுத்த எடுப்பிலேயே எரிந்து விழுந்தார்.

"சார். என் கணக்கை செட்டில் பண்ணுங்க"

"சரி. நான் செட்டில் பண்ணிடறேன். நீ மத்தவனுக்கெல்லாம் போட்டிருக்கியே பட்டை நாமம், அதை யார் செட்டில் பண்ணறது? அவங்க நோட்டீஸ் கொடுத்திருக்காங்கய்யா."

"சார். வெக்கத்தை விட்டு கேக்கறேன். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கேன். ஏதாவது கொஞ்சமாவது கொடுங்க" இருக்கும் சேரையெல்லாம் விலக்கிவிட்டு குறுக்குவாட்டில் அப்படியே அவர் கால்களில் கீழே விழுந்தான்.

"யோவ். எழுந்திருய்யா. செத்து கித்து போய்டப்போறே. இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு, நீ வேற வில்லங்கம் எதுவும் செஞ்சிடாதே"

திடீரென மனசு மாறி இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அவன் சட்டைப்பையில் திணித்தார். 'இனி மேல் காசு கேட்டு இந்த பக்கம் வரக்கூடாது' என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்.

செந்தமிழ் வெளியே வந்தபோது இருட்டிவிட்டது. மதியம் சாப்பிடாதது வயிற்றை சுண்டி இழுத்தது. ஒரு ஹோட்டலை தேடிய அவன் கண்களில் டாஸ்மாக் கடை கண்களில் பட்டது. மனசு அலைபாய்ந்தது. குவாட்டரை பேண்ட் பாக்கெட்டுக்குள் சொருகிக் கொண்டு, ஆம்லெட்டுக்கு ஆர்டர் கொடுத்தபோது அவன் தோள்களின் மீது இரண்டு கைகள் விழுந்தன. திரும்பியதில்...

"என்ன முருகு. ஆயிரம் ரூபாயை அப்படியே வலிச்சுக்கினு போயிடாலாம்னு பார்க்கிறயா? எங்களுக்கு அதிலே பங்கு வேணாம்?"

"வேணாம் சேகரு. நான் ரொம்ப நொந்திருக்கேன். உன் கணக்கை சீக்கிரம் செட்டில் பண்ணிடறேன்."

செந்தமிழ் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், சேகர் என்பவன் செந்தமிழை இறுக்கி பிடித்துக் கொள்ள அவன் கூட வந்தவன், சட்டை பையிலிருந்த அத்தனை பணத்தையும் காலி செய்தான். திமிறிய செந்தமிழை கீழே தள்ளிவிட்டான். சுதாரித்து எழுந்த செந்தமிழ் காசு போன விரக்த்தியில் அவர்களை நோக்கி ஓடினான். ஏதோ ஒரு யோசனையில் அவர்களை நோக்கி குவார்டரை வீசியடித்தான். அது குறி தப்பி ரோட்டில் விழுந்து உடைந்தது. திரும்பிய அவர்கள் ஒரு வேகத்துடன் வந்து, செந்தமிழை சரமாரியாக தாக்கினார்கள்.

கோடிக்கணக்கான பட்ஜெட்டில் படங்களை இயக்கிய செந்தமிழ்ச்செல்வன் ஒரு சாலையோர சாக்கடைக்கு பக்கத்தில் இரண்டு மணி நேரம் அப்படியே கிடந்திருந்தான். மயக்கம் தெளிந்து எழுந்தபோது அவனிடம் எல்லாம் போய்விட்டிருந்தது. அழ எத்தனித்தான். அது கூட வரவில்லை. 'க்ர்ர்ஹ்... க்ஹ்' என்ற ஓசையே வெளிப்பட்டது.

முதல் முறையாக அவன் தேடிவந்த அந்த அண்டங்காக்கை அவனுக்குள்ளே இருப்பதை உணர்ந்தான்.

Saturday, 24 February 2007

இரண்டும் ஒன்று


இரண்டும் ஒன்று

2007 ஜனவரி 14 கல்கி

ராகவன் அவர்கள் வந்ததினால் கண் விழித்தானா அல்லது அவன் கண் விழித்தபோது அவர்கள் வந்தார்களா என்பது தெரியவில்லை. புன்னகையோடு அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் தெரிந்தவர்கள். நெஞ்சு வரை நினைவிருக்கிறது. ஆனால் யார் என்று உடனே சொல்லத் தெரியவில்லை.

"உங்களை அறிந்திருக்கிறேன். ஆனால் யார் என்று தெரியவில்லை."

"நீயாகவே கண்டுபிடியேன் பார்க்கலாம்." அதற்கும் சிரிப்பு.

ஆஸ்பிடலின் தூக்கலான டெட்டால் வாசனை ராகவனை சங்கடப்படுத்தியது. வலது கையை பார்க்க முடிந்ததே தவிர அசைக்க முடியவில்லை. தலையின் மேல் ஒரு கல்லை வைத்திருப்பது மாதிரி அவஸ்தை. கொஞ்சம் இடுப்புப் பகுதியை அசைக்கலாம் என்று முயற்சித்ததில் 'சுரீர்' என்று மின்னல் மாதிரி ஒரு வலி தண்டுவட நுனியில் புறப்பட்டு கழுத்து வரை வந்தது.

"உங்களை யார் உள்ளே விட்டார்கள். இங்கு யாருக்கும் அனுமதியில்லை."

"சிறப்பு அனுமதி உண்டு"

"சரி, அப்படித்தான் உள் மனது சொல்கிறது. எதற்கு வந்திருக்கிறீர்கள், நீங்கள் இருவரும்."

"இருவரும்?" ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். "நாங்கள் ஒருவர்" என்றார்கள் கோரஸாக. அது ராகவனுக்கு எரிச்சலை தந்தது. கோபமாக வெற்றுப் பார்வை பார்த்தான்.

"சரி. சரி. நாங்கள் இருவர். அப்படியே வைத்துக் கொள்வோம், ஒரு பேச்சுக்கு?" என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்கள்.

"என்ன சிரிக்கிறீர்கள். என் கண் முன்னால் இருவரும் தெளிவாக தெரிகிறீர்கள். என் கண்கள் பழுதில்லை. இன்னொரு முறை கெக்க பிக்கே என்று சிரித்தீர்களானால் சத்தம் போட்டு உங்களை வெளியேற்றி விடுவேன்."

சிரிப்பது நின்று கொஞ்சம் சீரீயஸ்னஸ் வந்தது. "ஒரே மூச்சில் இரண்டு கேள்விகள் கேட்டாலும் பதில் ஒன்றுதான். இருப்பதும் பார்ப்பதும் வெவ்வேறு நிலைகள்."

"புரியவில்லை."

"மணியும் நூலும் இரண்டாக இருந்தாலும் மாலை ஒன்றுதான் அல்லவா. கண்கள் இரண்டானாலும் பார்வை ஒன்றல்லவா. சாதாரண மனிதனுக்கு கல் கல்லாகத்தான் தெரியும். ஒரு சிற்பிக்கு அதனுள் இருக்கும் சிலை புரியும். கல் ஒன்று. பார்வை இரண்டு. ஆனால் இரண்டும் ஒன்று."

"சபாஷ். நீங்கள் இருவரும் ஒருவரா? நான் நம்ப வேண்டும். அப்படியானால் நான் இருவரா?"

"ஆமாம். உடல் தெரிகிறது. உயிர் உன்னிலும் உன்னைச் சுற்றியும் இருக்கிறது. அது தெரியவில்லை. ஆனால் இரண்டும் ஒன்றே."

ராகவனுக்கு தலை சுற்றியது. "இல்லை. நாத்திகனான நான் உங்கள் ஆத்திக கருத்துக்களை ஏற்க மாட்டேன்."

"அதில் தவறில்லை. இரண்டும் ஒன்றே."

"இதென்ன புது குழப்பம்."

"ஆமாம். ஒன்று இருப்பதாக நம்புபவர்கள் ஆத்திகர்கள். அதை பூஜ்ஜியம் என்று சொல்பவர்கள் நாத்திகர்கள். அவ்வளவே. இரண்டும் ஒன்றே."

"நீங்கள் சொல்வது லாஜிக்கலாக இருந்தாலும் என் புத்தி ஏற்க மறுக்கிறது. இருக்கிறது. இல்லை. இவைகள் இரண்டு மட்டும்தான் இருக்கின்றனவா?"

"ஆமாம். கம்ப்யூட்டரில் பைனரி கோட் என்று சொல்லுகிறீகளே. அது என்ன? இரண்டு என்பது பெயரளவுக்குத்தான். அதாவது, ஒன்றுமில்லை என்பதாக பூஜ்ஜியம். இருப்பதாக ஒன்று. இரண்டு இருக்கின்றன. ஆனால் இரண்டு என்ற எண் இல்லவே இல்லை."

"சரி. இதை மெனக்கெட்டு என்னிடம் வந்து சொல்லக் காரணம்? நான் உங்களையும் உங்கள் பேச்சையும் நம்பிவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை."

"அது உன் இஷ்டம். உன் கண்களுக்கு புலப்படவில்லை என்பதற்காக ஒரு உண்மையை இல்லை என்று சொல்வது முட்டாள்தனம். சூரியனில் இரண்டு ஹைட்ரோஜன் துகள்கள் ஒன்று சேர்ந்து ஒளியாகிறது. அதுவே பல வண்ணங்களாகிறது. இரண்டு உயிரனுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு உயிரை உண்டாக்குகின்றன. இல்லையென்பது உருவாகும். உருவானது இல்லையென்பது ஆகும். ஆக இரண்டும் ஒன்று."

அப்போதுதான் ராகவன் கவனித்தான். அவர்கள் இருக்கிறார்கள் என்பது புத்திக்கு எட்டியதே தவிர, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர முடியவில்லை. அவர்கள் இருவருமே ஒரே மாதிரி இருந்தார்கள். முகம் வட்டமாக இருந்தது. சில கணங்களில் அவர்களே ஒரு வட்டத்துக்குள் இருந்த மாதிரி இருந்தது. பின் அதுவே நீள் வாக்கில் இருப்பதாகப் பட்டது. மனதுக்கு பிடித்த பிரகாசமான ஜோதி ரூபமாக தெரிந்தார்கள். அவர்களை உருவத்தில் சேர்ப்பதா இல்லை அருவத்தில் சேர்ப்பதா என்ற குழப்பம் இருந்தது.

"எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. நீங்கள் பேய்களா? அல்லது நான் செத்துப் போன பின் என்னை அழைத்து போக வந்திருக்கும் எம கிங்கிரர்களா? பேய்களும் எம கிங்கிரர்களும் கோரமாக இருப்பார்கள் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் அப்படி இல்லையே? யார் நீங்கள்?"

"மரண பயத்தின் கற்பனை வெளிப்பாடுதான் பேய்களும் எம கிங்கிரர்களும். பிறப்பு எப்படி ஒரு நிகழ்வோ அப்படித்தான் மரணமும்."

"அப்படியானால் எனக்கு மரணமா? என் வாழ்க்கை முடியப் போகிறதா? இதோ நான் கத்தப் போகிறேன். நீங்கள் யார். சொல்லுங்கள். என் மன பிரமைதானே?

"கொஞ்சம் நெருங்கி வந்திருக்கிறாய்."

"யார் நீங்கள். எனக்கு பொறுமை இல்லை. சொல்லுங்கள். சொல்லுங்கள். சொல்லுங்கள்."

"சரி. சொல்லும் வேளை வந்துவிட்டது என்றே நினைக்கிறோம். நாங்கள் யாரா? ஒன்று இல்லை. மற்றொன்று இருக்கிறது. ஆக இரண்டுமாக ஒன்று. அதாவது நீதான் நாங்கள்."

"மை காட். நானா? என்ன விளையாடுகிறீர்களா?"

"இதோ உன் இந்த விளையாட்டு முடிந்து கொண்டிருக்கிறது. ரிலே ரேஸ் மாதிரி அடுத்த ஓட்டத்துக்கான குச்சி உன்னிடமிருந்து எங்களிடம் வந்து கொண்டிருக்கிறது. நீ நினைப்பது போல் இது முடிவல்ல. சுழற்சியின் ஒரு அங்கம். இப்போது வரை நீ ஒன்று. இனிமேல் நீயான நாங்கள் இரண்டானோம். பிறகு மீண்டும் ஒன்றாவோம். இது தொடர்ந்து கொண்டே இருக்கும். வருகிறோம்."

ராகவனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அடுத்த இரண்டாவது நொடியில் செத்து போனான்.

மறுநாள் ராகவனுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. "ஒரு சகாப்தம் நிறைவு பெற்றது" என்றார் ஒருவர். "ராகவனின் உடல் மறைந்தாலும் அவர் அவரது நினைவுகளால் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்" என்றார் இன்னொருவர். இரண்டும் ஒன்று.

Friday, 23 February 2007

அந்த ஒரு கேள்வி


அந்த ஒரு கேள்வி

2006 நவம்பர் 19 கல்கி

அந்த வயதானவர் எங்களையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"சேகர். அங்க நிக்கிறாரே அவர் யார்றா?"

"என்னடா. இவரை தெரியாது? எங்க ஷூட்டிங் நடந்தாலும் அங்க வந்திடுவாரு. என்ன, சான்ஸ் கேட்கத்தான். விட்றா. நம்ம வேலைய பார்போம். ஆர்டிஸ்ட் சீக்கெளன்ஸ் ரெடி செஞ்சுட்டியா,"

ஆனால் என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அவர் பார்த்த பார்வை ஏதோ சொல்லியது. என் பார்வையின் கூர்மையை உணர்ந்ததும் என்னை நோக்கி வந்தார்.

"ஸார். வணக்கம். இன்னிக்கு எனக்கு எதாவது ரோல் கிடைக்குமா?"

ஒல்லியான தேகம். முள்ளுமுள்ளான தாடி ஒரு வாரத்தை சொல்லியது. போட்டிருப்பது நிச்சயம் அவர் சட்டையாக இருக்காது.

அன்றைய ஷூட்டிங் ஷெட்யூலை புரட்டினேன். அவருக்கு ஏற்ற ரோலை தேடியதில்....

இருந்தது. ஆனால் டைரக்டர் அல்லது ப்ரொடக்ஷன் மேனேஜரை கேட்காமல் சொல்ல முடியாது.

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டைரக்டர் வரட்டும். "

போய் தன் பழைய இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு, வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

டைரக்டர் வர மணி பத்தாகி விட்டது. வந்ததும் வராததுமாய் அந்த கேரக்டரை சொல்லி அவரைக் காட்டி கேட்டேன். அவரும் கொஞ்சம் யோசித்துவிட்டு சரியென சொல்லிவிட்டு ஃபீல்டுக்குள் போய்விட்டார்.

மிகுந்த உற்சாகத்தோடு அவரை அழைத்துச் சொன்னேன்.

"நிச்சயமா உண்டா?"

அவர் கேள்வி புதிராக இருந்தது.

"ஏன் கேட்கிறீங்க. டைரக்டரே ஓக்கே சொல்லியாச்சு. நிச்சயம் உண்டு."

"அப்ப, நான் டிபன் சாப்பிட்டுக்கலாம் இல்லையா."

அந்த பதிலில் பொதிந்திருந்த அவலம் என்னை என்னவோ செய்தது.

Sunday, 18 February 2007

செல்வி


செல்வி

2006 ஜூன் 25 கல்கி

இரண்டு சின்ன தோள்களிலும் ஈரத்துணிகளை பெருமாளுக்கு சாத்திய துளசி மாலைகள் மாதிரி நிறைத்துக் கொண்டு செல்வி பால்கனிக்கு மூச்சு முட்ட வந்தபோது கிட்ட தட்ட விடிந்தேவிட்டது. லேட். அரை மணிக்கும் மேல் லேட்.

துணிகளை வீசி வீசி கொடிகளில் போட்டு வேகம் வேகமாக கிளிப்புகள் போட்டாள். இன்னும் ஐந்தே நிமிடங்களில் குழந்தைகள் எழுந்துவிடும். அப்புறம் திண்டாட்டம்தான். வேலை செய்ய பத்து கைகள் வேண்டும்.

பனி கொட்டிக்கொண்டு இருந்தாலும் செல்விக்கு வியர்த்துக் கொட்டியது. கடைசியாக பெரிய சைஸ் போர்வையை பால்கனி கட்டையில் தொங்கவிட்டுவிட்டு நிமிர்ந்து, வலது பக்கம் பார்த்தபோது....

அப்பா வந்து கொண்டிருந்தார்.

'அப்பா'.

சந்தோஷ உச்சத்தில் செல்வி துள்ளளோடு திரும்பியதில், கீழே இருந்த பூந்தொட்டியை கவனிக்கவில்லை. கால் இடறியதில், அது நிலை தடுமாறி ஒரு பக்கமாக உருண்டு எதிர் சுவரில் முட்டி உடைந்தது.

ஹாலில் டி.வியும் ரிமோட்டுமாய் செல்வியையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த கிழவி டிவி சத்தத்துக்கும் மேலாக கத்த ஆரம்பிக்க அந்த வீடே களேபரம் ஆனது.

செல்வியின் சின்ன பாதங்கள் ஈரமண்ணோடு இருந்த பூந்தொட்டியை மோதியதில் உயிரே போகிற மாதிரி வலித்தது. இரண்டு கைகளாலும் பாதத்தை பிடித்துக் கொண்டு முட்டியை அணைத்தபடி உட்கார்ந்துவிட்டாள். கட்டைவிரல் நுனியில் லேசாக ரத்தம் எட்டிப்பார்த்தது.

தூக்க கலக்கத்தோடு புயல் மாதிரி வந்த சுமதி மண் குவியலுக்கு மத்தியில் சோகமாய் சரிந்து கிடந்த ரோஜா செடியை பார்த்தாள். சுறுசுறுவென ஆத்திரம் கொப்பளிக்க செல்வியின் கன்னத்தில் ஓங்கி அறைய, காலிங் பெல் ஒலித்தது.

ஆறுமுகத்துக்கு வரவேற்பே பிரமாதமாக இருந்தது. கிழவி ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. சுமதி ஆறுமுகத்தை இழுக்காத குறையாக பால்கனிக்கு அழைத்துபோனாள்.

"வாங்க. வந்து பாருங்க. உங்க பொண்ணு செஞ்சிருக்கும் அக்கிரமத்தை. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? நேத்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய கொட்டினாள். இன்னிக்கி ஒரு பூந்தொட்டி போச்சு. பால்கனி முழுக்க மண்ணு. போச்சு. எல்லாம் போச்சு."

முதலில் ஆறுமுகத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. அரண்டு போய் நிற்கும் செல்வியை தேற்றுவதா? பொருள் நஷ்டத்தை சொல்லி சொல்லி புலம்பும் வீட்டுக்கார அம்மாவுக்கு பதில் சொல்வதா? என்று தெரியாமல் குழம்பினார்.

அவருக்கு பூந்தமல்லியில் உள்ள ஒரு ஃபாக்டரியில் வாட்ச்மேன் வேலை. அதன் முதலாளி பெரிய மனது பண்ணியதில் அவர் குடும்பம் ஒண்டுவதற்கு அங்கேயே இடம் கிடைத்தது.அதை வசிக்கும் இடம் என்று சொல்லுவதே கடினம். வெயில் காலத்தில் சுட்டு பொசுக்கும். மழை காலத்தில் நாலா பக்கமும் ஒழுகி கொட்டும். இந்த அழகில் அவர் மனைவி வடிவு ஆறு மாதமாக படுத்த படுக்கையாக இருக்கிறாள். என்ன வியாதி என்றே தெரியவில்லை. அவள் சம்பாத்தியமும் நின்று போனதில் பண கஷ்டத்தில் குடும்பம் நிலை தடுமாறியது.

வேறு வழி இல்லாமல் கனத்த மனசோடுதான் பதிமூன்றே வயதான செல்வியை வீட்டு வேலைக்கு அனுப்பினார். செல்வி வண்டி மாடு மாதிரி முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறாள். வேலைக்கு சேர்த்துவிட்ட மூன்றே மாதத்தில் பத்து தடவைக்கு மேல் வந்து பஞ்சாயத்து செய்தாகிவிட்டது. நேற்று எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல போனில் பிழிய பிழிய அழ, ஒரு தீர்மானத்தோடு விடிகாலையிலேயே புறப்பட்டு வந்தால்...

"இங்க பாருங்க ஆறுமுகம். போறும். பேசாம உங்க பொண்ணை கூட்டிக்கிட்டு போயிடுங்க. ரொம்ப தாங்க்ஸ். நான் வேற ஆள் பார்த்துக்கறேன். இவ கொடுக்கற டார்ச்சர்ல என்னால ஆபீஸ்ல நிம்மதியா வேலை பார்க்க முடியலை. நேத்திக்கி டயர்டா ஆபீஸ் விட்டு வீடு வந்தா.... கிச்சன் முழுக்க எண்ணெயை கொட்டி... நாலு மணி நேரம் ஆச்சு, எல்லாத்தையும் சரி செய்ய. இவளால ஏற்படற நஷ்டம் இவளுக்கு கொடுக்கபோற சம்பளத்தை விட அதிகம். எத்தனை தடவை சொல்லியாச்சு? ஒழுங்கா வேலைய பாருன்னு. ஏதாவது அவசர வேலையா ஆள் தேடினா எங்கையாவது ஒரு மூலையில நின்னுகிட்டு அழுதுகிட்டு இருப்பா. வேணாம்.... போதும்.... கூட்டிக்கிட்டு போங்க."

"அம்மா. கொஞ்சம் பொறுங்க. செல்வி சின்ன பொண்ணு. அவ்வளவு விவரம் பத்தாது. நான் இன்னிக்கு தெளிவா எடுத்து சொல்லிடறேங்க. அரை மணி செல்விய வெளில கூட்டிக்கிட்டு போறெங்க. எல்லாம் சரியாயிடும். அம்மா. நீங்க செய்யற தயவாலத்தான் அங்க என் குடும்பத்துல அரை வயிராவது சாப்பிட முடியுதுங்க. கொஞ்சம் தயவு செஞ்சி...."

ஒரு வழியாக செல்வியை பக்கத்தில் உள்ள பார்க்குக்கு அழைத்து போனார். பாவம். செல்வியால் நடக்கக்கூட முடியவில்லை. விந்தி விந்திதான் நடக்க முடிந்தது.

மூன்றே மாதத்தில் உதிர்ந்து விழுந்த கருவேலங் குச்சி மாதிரி... ஆறுமுகத்துக்கு நெஞ்சு வலித்தது.

"என்னம்மா. உன்னால அங்க இருந்து வேல செய்ய முடியலயா?"

செல்வியால் நேரடியாக அப்பாவை பார்க்க முடியவில்லை.

"இல்லப்பா. அம்மாவையும் தம்பிப்பயலையும் விட்டுட்டு இங்க என்னால இருக்க முடியல. அவங்க வீட்டு ஐயா குழந்தைகளோடு விளையாடுவாரு. உப்பு மூட்டை தூக்குவாரு. அதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு தம்பி ஞாபகம் வருதுப்பா. அந்த கெளவி வேற ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கு."

"செல்வி. இங்க பாரு. பொறுமையா இரு. உனக்கு பதிமூனு வயசு ஆயிட்டு. இன்னமும் நீ சின்ன புள்ள இல்லே. அம்மா சீக்காளியா படுத்திருக்கு. என் சம்பளமும் பத்தல. சின்னப் பயலுக்கு போன வாரம் ஒரேயடியா பேதியாகி கிளிச்சு போட்ட நாரு மாதிரி கெடக்கு. நீயும் அங்க வந்திட்டா என்னால எப்படிப்பா சமாளிக்க முடியும்."

செல்விக்கு பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மெல்லியதாக கண்ணீர் முட்டியது.

"போப்பா. அந்தம்மா என்ன வாளில தண்ணீ எடுத்தார சொல்லறாங்க. மூனு மாடி என்னால தூக்கியாற முடியல. கையெல்லாம் காச்சு போவுது. மீந்து போனதெல்லாம் சாப்பிட கொடுக்கிறாங்கப்பா. அந்த கொளந்தங்க தப்பி தவறி ஏதாவது திங்க கொடுத்திட்டா அந்த கெளவி கத்தி கூப்பாடு போடுது. அடிக்குது."

"அப்படியா. நான் தெளிவா சொல்லிட்டு போறேன். எதுவானாலும் எங்கிட்ட சொல்லுங்க. அடிக்காதீங்கன்னு. நீ புத்திசாலி பொண்ணு இல்லையா. நெலமைக்கு ஏத்த மாதிரி நடந்துக்கம்மா. உன்னால முடியலைன்னா தைரியமா எடுத்து சொல்லிடு. பயப்படாதெ. சரியா."

" ". செல்வி விசும்புவதை ஆறுமுகத்தால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

"இன்ணும் மூனே மாசம்மா. மொதலாளி சம்பளத்தை கூட்டி தரேன்னு சொல்லியிருக்காரு. பதினாலு வயசு கட்டும். அந்த கம்பனிலேயே உனக்கும் ஏதாவது வேலை போட்டு தரேன்னு சொல்லியிருக்காரு. கொஞ்சம் பொறும்மா."

சொல்லிக்கொண்டே வந்தவர் சட்டென கண் கலங்கி...

"என்ன கஷ்டம்மா. நம்ம பொழப்பு நாய் பொழப்பு. வேண்டாம்மா. அடுத்த ஜன்மத்துலயாவது நீ கொஞ்சம் வசதியானவங்க குடும்பதுல பொறந்து தொலை. என்ன பாவம் செஞ்சேனோ, உன்னை இப்படி வாட்டுது. நீ சம்பாரிச்சு நாங்க சோறு திங்கனும்கிறது நரகல சாப்பிடறத விட கேவலம். என்னை மன்னிச்சுடும்மா."

நடுங்கும் கைகளால் செல்வியின் சவலை கைகளை பிடிக்க, " என்னப்பா. இந்த பேச்சை இத்தோட நிறுத்துப்பா. வசதி இல்லாட்டாலும் உன்ன மாதிரி அப்பா எனக்கு இனிமே கெடைக்கமாட்டாங்க. அது நிச்சயம். எனக்கு வசதியெல்லாம் வேண்டாம்பா. நீங்க, அம்மா, சேகரு போதும்.... சரிப்பா. இன்னும் மூனு மாசம்தானே. நான் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா போங்க. போறதுக்கு முன்னாடி அந்த கெளவிய பத்தி அந்தம்மாகிட்டே தெளிவா சொல்லிடுங்க... அப்பறம்.... சரி... நான் சமாளிச்சுக்கறேன்..."

பேச்சு அழுகையோடு கலந்துதான் வந்தது.

திமிறி வந்து கன்னங்களில் வழிந்த கண்ணீரை இனிமேல் அழப்போவதில்லை என்ற மாதிரி பிஞ்சு விரல்களால் வழித்துப் போட்டாள்.

தன் நெஞ்சு வரை வளர்ந்திருந்த செல்வியை அப்படியே சில நிமிடங்கள் மௌனத்துடன் அணைத்துக் கொண்டார் ஆறுமுகம். மனசு கசங்கிய காகிதம் மாதிரி ஆகிவிட்டது. கால்கள் துவண்டு உடம்பு முழுவதும் ஒரு ஆயாசம் இருந்தது.

வீட்டுக்கு திரும்பி வந்ததும் குழந்தைகள் செல்வியை கண்டதும் மகிழ்ச்சியில் ஓலமிட்டன. கிழவி பேச்சற்று ஒரு விரோத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஆறுமுகம் கெஞ்சி கூத்தாடி வீட்டுக்கார அம்மாவை சம்மதிக்க வைத்துவிட்டார்.

செல்வி ஓடியாடி சகஜமாக வேலை செய்வதை பார்த்த திருப்தியோடு ஆறுமுகம் போனார். செல்வி பால்கனியிலிருந்து கையசைத்ததில் நம்பிக்கை தெரிந்தது.

சுமதி ஆபீஸ் போய்விட்டாள். கிழவி தூங்க போய்விட்டது. குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும். ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் உட்கார்ந்து கொண்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்தன.

செல்விக்கு சேகரோடு கிராமத்து பம்ப் செட்டில் குளித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கொட்டமடிப்பார்கள். பெரிய குழந்தை தண்ணீரை வாரி சின்னதின் மேல் அடிக்கவும், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அது செல்வியின் பின்னால் ஒளிந்து கொண்டது.

சேகருக்கு வலது காலை விட இடது கால் சற்று சிறியது. கொஞ்சம் இழுத்து இழுத்துதான் நடப்பான். ஆனாலும் துரத்தினால் ஓட்டமாய் ஓடுவான்.

அவளுக்குள் இருந்த குழந்தை குணம் அவளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்க, செல்வி அழத்தொடங்கினாள். ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம், யாருக்கும் தெரியாமல்.

Thursday, 15 February 2007

ஒரு வழிப்பாதை


ஒரு வழிப் பாதை

2006 பிப்ரவரி 26 கல்கி

"ஃபேன் ஆஃப்."

ராட்சஸ மின்விசிறிகள் மெளனித்தன.

"லைட்ஸ் ஆன்."

பளீரென்று வெள்ளையும் நீலமுமாய் அத்தனை விளக்குகளும் உயிர்பெற்றன.

"ஸ்டார்ட்."

இயக்குனர் மிச்சமிருந்த சிகரெட்டை கீழே போட்டு காலால் நசுக்கினார். ப்ளெக்டர்களையும், கம்பி வலைகளையும் பிடித்திருந்தவர்களின் முகங்கள் சீரியஸ் ஆகின.

"ரோலிங்."

காமிராமென் மெல்லிய குரலில் இயக்குனர் காதில் விழும்படித் தெரிவிக்க, ஒருவன் கிளாப் கட்டையை காமிராவின் மூஞ்சிக்குக் காட்டிவிட்டு வேகமாக ஒதுங்கிக் கொண்டான்.

"ஆக்ஷன்".

ஏதோ ஸ்விட்சை தட்டிவிட்ட மாதிரி உடனடியாக அவள் அழ ஆரம்பித்தாள். அழுகை என்றால் சங்கிலித் தொடராய் அழுகை. அவள் எவ்வளவு நேரம் அழ வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக இயக்குனர் சைகை செய்ய காத்திருந்தார்.

அந்த பெண் ஒரு ரவுண்டு அழுது முடித்து கர்ச்சீப்பை மூக்கின் மீது வைத்து 'டொர்' ரெனச் செய்யவும் இயக்குனரின் விரல் அசைந்தது.

வேலுச்சாமி தளர்வாக உள்ளே வந்து அந்த பெண்ணின் அருகில் நின்றார்.

"ஏம்மா அழுவுறீங்க. என்னைத் தெரியுதா?"

"கட். யோவ். பெரிசு. ப்ரியா டயலாக் முடிச்ச அப்பாலதாய்யா ஒங்க டயலாக். ஏன்யா உசிர வாங்குறீங்க?"

கருப்புத் துணிக்குள் தன் தலையை விட்டுக்கொண்டு மானிடரில் பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் துணியை விலக்கிக்கொண்டு கத்தினார்.

"ஸார். அவங்க டயலாக் சொல்ல விட்டுட்டாங்க. அதுனால நான் தொடங்கிட்டேன்."

"பேசாத. என்னவோச் சொல்ல வருது. நீ என்ன செய்யணுமோ அதைச் செய்தா போதும். புரிஞ்சுதுதா? காலைல பத்து மணிக்கு ஷாட்டு வச்சு இன்னும் ரெண்டு சீன் கூட முடியல்ல. எல்லாம் என் நேரம். பாலு, பெரிசுகிட்ட விவரமாச் சொல்லு. அடுத்த ஷாட்ல ஓகே ஆகல்ல, எனக்கு கெட்ட கோபம் வரும்."

'சாவு கிராக்கிங்க' என்று அவர் மெல்லிய குரலில் முடித்தாலும் வேலுச்சாமிக்கு தெளிவாகக் கேட்டது. ஒளிர்ந்த விளக்குகள் அணைந்து மின்விசிறிகள் தங்கள் பேரிரைச்சலைத் தொடர்ந்தன.

வேலுச்சாமிக்கு ஆத்திரமாக வந்தது. அவமானமாகவும் இருந்தது. அவரை இதுவரை யாரும் பெரிசு என்று தரக்குறைவாக அழைத்தது இல்லை. பார்ப்பதற்கு கொஞ்சம் ஏழ்மையின் பிரதிபலிப்பு இருப்பதால் ஆளாளுக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று ஆகிவிட்டது.

முதல் டேக்கில் கொஞ்சம் காமிராக் கோணத்திலிருந்து விலகி நின்றுவிட்டார். அதற்கு ஒரு கேலி இருந்தது. அப்புறம் தவறுதலாக கொஞ்சம் டயலாக் கூடிவிட, 'ஸ்க்ரிப்டில் உள்ளதை மட்டும் சொன்னால் போதும்' என்று அறிவுரை சூடாய் வந்தது. ஆனால் இரண்டாவது டேக்கில் அந்த பெண் சொதப்பியபோதும் அடுத்தடுத்த ஷாட்டுகளில் டயலாக்குகளை தன் இஷ்டத்துக்கு மாற்றியமைத்த போதும் யாரும் கண்டு கொள்ளாதது ஏன்?

வேலுச்சாமியும் ஒரு காலத்தில் பிரபலம்தான். ஆனால் அறுபதுகளில் உச்சத்தில் இருந்த யதார்த்தம் பொன்னுசாமி பாய்ஸ் கம்பனியை பற்றி இங்கு ஒருவருக்கும் தெரியவில்லை. "அப்படியா. இப்ப என்ன சீரியல் செய்யுறீங்க".

நாடகங்கள் ஓய்ந்து சென்னை சபாக்களில் சுருண்டபோது ஏதோ அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருந்தார். பிறகு அதையும் குறைத்துக் கொண்டு தான் உண்டு நங்கநல்லூர் ஆஞ்சனேயர் உண்டு என்று இருந்துவிட்டார். இப்படியே பல வருடங்கள் போய்விட்டன.

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன வழி என்ற நிலை வந்த போதுதான் எதிர் பிளாட் சிவா ஐடியா கொடுத்தான். "தாத்தா. நீங்க ஏன் சீரியல்ல நடிக்க முயற்சி செய்யக்கூடாது? உங்களுக்குத்தான் டிராமா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதே". அவன் அப்படியும் இப்படியுமாக சில சீரியல்களில் தலை காட்டுவான். பல டிவி கம்பனிகளில் ஏறி இறங்கினார். அதன் பலன் இன்று.

எட்டு மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்று சொன்னதால் மூன்று பஸ் பிடித்து வேர்க்க விறுவிறுக்க அங்கே போனால் ஷூட்டிங் நடப்பதற்கான அறிகுறியேயில்லை. ஒன்பது மணிக்குத்தான் ஒவ்வொருவராக வந்தார்கள்.

மணி பன்னிரெண்டான போதுதான் அவரை அழைத்து டயலாக் சொன்னார்கள். மேக்கப்புக்காக இருந்த ஒரே சேரில் தடியான ஒரு பெண் அமர்ந்திருந்ததால் அருகிலிருந்த ஸ்டூலில் உட்கார வைத்து இரண்டே நிமிடத்தில் மேக்கப் போடப்பட்டது. இந்த மூஞ்சிக்கு இது போதும் என்ற மாதிரி இருந்தது. இதிலென்ன தப்பு என்று மேலோட்டமாக தோன்றினாலும் எங்கோ இடிப்பதாகவே அடிமனதில் பட்டது.

"வேலுமணி சார். இங்க வாங்க. உங்க டயலாக்கை மறுபடி சொல்லுங்க." கிளிப் பேடு அஸிஸ்டென்ட் அழைத்தான்.

"தம்பி.. என் பேரு வேலுச்சாமி.. வேலுமணி இல்லே."

"ம். அதனால் என்ன. வேலுங்கறது சரிதானே."

"அதெப்படி தம்பி சரியாகும். உங்களை பாலுன்னு கூப்பிடறாங்க. அதை மாத்தி கோபாலுன்னு கூப்பிட முடியுமா?"

"ஏங்க நீங்க நடிக்க வந்தீங்களா, இல்லே வம்பு செய்ய வந்தீங்களா?"

எதேச்சையாக அருகில் சென்ற இன்னொரு அஸிஸ்டென்ட், "என்ன பெரிசு இன்டஸ்ட்ரிக்கு புதுசா, அதான். டைரக்டரான்ட பதிலுக்கு பதில் பேசற. சொல்லறத மட்டும் கேளுய்யா. அவரு எவ்வளோ பெரிய டைரக்டரு தெரியுமா?"

"சார். வேலுச்சாமி ஸார். உங்க விளக்க உரையெல்லாம் வேண்டாம். புரியுதா. எங்களுக்கு கேக்க பொறுமையில்ல. மூன்று மானிடர் ஷாட்ஸ் முடிந்து இது ஐந்தாவது டேக். யாருக்குதான் கோவம் வராது,"

நல்லவேளையாக அடுத்த ஷாட் ஓக்கே ஆனது. அது கூட கொஞ்சம் அரை திருப்தி, முக்கால் திருப்தியோடு சொன்னமாதிரி இருந்தது. அதன் பிறகு பிட்டு பிட்டாக சில சீன்கள் வந்தன.

போகலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

பணம் செட்டில் செய்யக்கூடிய நபரை தேடிக் கண்டுபிடிப்பதில் அரை மணியும் ஒரு கிலோ மீட்டர் நடையும் ஆனது.

"பேமென்டா. உங்க பேமென்டை உங்க ஏஜென்டுகிட்டத்தான் கேட்கனும். என்கிட்டே கேட்டா?"

"மிஸ்டர். நான் டயலாக் ஆர்டிஸ்ட். உங்க குமார் சார் சொல்லி வந்திருக்கேன்."

"அப்படியா. அதுக்கு எதுக்கு சார் சூடாகிறீங்க,"

"நீங்களா ஒரு கற்பனை செஞ்சுக்கிட்டு பேசினா நான் என்ன செய்ய முடியும்?"

"வில்லங்கம் புடிச்ச ஆளா இருப்பே போலிருக்கே. சரி.. சரி... டப்பிங் சமயத்துல வாங்கிக்க."

சிவா தெளிவாக சொல்லியிருந்தான். வேலுச்சாமி விடவில்லை. "இல்லை சார். எனக்கு செட்டில் செஞ்சுடுங்க. எனக்கு பல செலவுகள் இருக்கு."

வேலுச்சாமி அடித்து பிடித்து ஒரு மணி நேரம் காத்திருந்து பணம் வாங்கிவிட்டார். விட்டால் போதும் என்று வீட்டுக்கு வந்து விழுந்த போது மணி ஆறு ஆகிவிட்டது.

இரவு ஒன்பது மணிவாக்கில் சிவா வந்தான். "என்ன தாத்தா. எப்படி இருந்திச்சு முதல் நாள் அனுபவம்?"

"அத ஏன் கேக்கிற போ. பாடா படுத்திட்டாங்க. மரியாதைன்னா என்ன விலைன்னு கேக்கறாங்க."

"அப்படியா. பொதுவாவே என்ன வாழுதாம்? அது சரி... எந்த கம்பனிக்கு போனீங்க."

வேலுச்சாமி சொன்னார்.

"ஓ. அதுவா. பணம் கொடுத்தாங்களா? இழுத்தடிச்சிருப்பாங்களே,"

"கொஞ்சம் முரண்டு புடிச்சாங்க. நான் விடல. வாங்கிட்டேன்."

"நல்லது. அந்த கம்பனியோட சீரியல் எல்லாம் இப்ப டவுன். அதான்... அப்பறம் தாத்தா.... நீங்க நினைக்கற மாதிரி எல்லா கம்பனிகளும் இப்படி இல்லே".

"எனக்கென்னவோ சரியாப்படல சிவா. இனிமே வேண்டாம்னு மனசுக்கு படுது. நாலு காசு சம்பாரிச்சாலும் மரியாதை முக்கியமில்லையா, தலையில குட்டி போடற சாப்பாடு வேண்டாம்." வேலுச்சாமி வேதனையோடு சொன்னார்.

"அட போங்க நீங்க. போகப் போக பழகிடும். இண்டஸ்ட்ரில இதெல்லாம் சகஜம்."

"என் டிராமா அனுபவத்துல இதுமாதிரி அனுபவிச்சதில்லே." வேலுச்சாமியின் கண்களில் நீர் முட்டிவிட்டது.

"தாத்தா. அது அந்தக் காலம். இப்ப எல்லாமே மாறிப்போச்சு. எல்லா எடத்திலும் மரியாதை சரியா சமமா கிடைப்பதில்லே. வாழ்வா சாவான்னு இருக்கும்போது நீதியாவது நியாயமாவது, இப்ப மெகா சீரியல்னு ஞாயிற்று கிழமைகூட விடாம ஷூட்டிங் நடத்தறாங்க. காலைல ஆரம்பிச்சு ராத்திரி வரைக்கும். அது தவிர எடிட்டிங், மிக்சிங், டப்பிங்னு ஏகப்பட்ட வேல. இத்தனைக்கும் மத்தியில அவங்களுக்கு கொடுக்கற சம்பளம் கம்மி. ஸ்டார்களுக்குத்தான் மரியாதை. பணம் வரலன்னா ஸ்பாட்டுக்கு வர மாட்டாங்க. டப்பிங்கை இழுத்தடிப்பாங்க. அதுனால ப்ரொடக்ஷன் ஆசாமிங்க நம்ம மாதிரி ஆசாமிகள் கிட்டத்தான் மிச்சம் புடிக்கறாங்க."

வேலுச்சாமிக்கு ரொம்ப ஆயாசமாக இருந்தது. வெகுநேரம் தூக்கமில்லை. 'ஏய் பெரிசு' என்று இப்பவும் யாரோ கூப்பிடுவது போல இருந்தது.

அடுத்த சில நாட்களில் மறந்தே போய்விட்டார். அதன் பிறகு யாரும் நடிக்க கூப்பிடவும் இல்லை.

ஒரு மாதம் கழித்து திடீரென்று அவர் நடித்த சீன் வந்ததும் சிவா ஓடிவந்து கூப்பிட்டான். எத்தனையோ நாடகங்களில் நடித்திருந்தாலும் மின்னும் திரையில் தன் பிம்பத்தை பார்த்ததில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அவருக்கு பதிலாக யாரோ டப்பிங் கொடுத்திருந்தார்கள்.

வேலுச்சாமி அந்த காலனியின் திடீர் பிரபலம் ஆகிவிட்டார். சீரியல் முடிந்ததுமே ஏகப்பட்ட போன் கால்கள். நேரில் சந்திக்க பல பேர் வந்து விட்டனர்.

விசாரிப்புகள் மறுநாளும் தொடர்ந்தன. பால் வாங்கும் போது பார்த்தவர்கள் விசாரித்தார்கள். ஆட்டோ ஸ்டாண்டில் சூழ்ந்து கொண்டார்கள். ஸ்கூல் போகும் குழந்தைகள் கூட 'ஹேய் டிவி சீரியல் தாத்தா' என்று சொல்லிவிட்டு போனார்கள். ஒரு சிலர் வேலுச்சாமியிடமே சான்ஸ் கேட்டார்கள்.

"ஸார் ரஜினி காந்த் படம் ஒண்ணு புதுசா வரப்போவுதாம். போய் போட்டோ கொடுங்க. அதுல உங்களுக்கு சான்ஸ் மட்டும் கிடைச்சுது, நீங்க எங்கயோ போயிடுவீங்க."

அன்று மதியமே இன்னோரு கம்பனியிலிருந்து அவருக்கு போன் வந்தது, சிவா வீட்டு நம்பரில்.

"ஒரு நாள் ஷூட்டிங். நானூறு ரூபாய். பயணப்படி கிடையாது. வரீங்களா?" வேலுச்சாமி யோசிக்கத் தொடங்கினார்.

"என்ன? சீக்கிரம் சொல்லுங்க."

"சரி. வர்ரேன்."

தான் ஏன் அப்படிச் சொன்னோம் என்பது அவர் புத்திக்கு எட்டவேயில்லை.

Wednesday, 14 February 2007

செல்லாக் காசு


செல்லாக் காசு

2001 ஜூன் 24 கல்கி

தெரு முனையில் என்றும் இல்லாத அளவுக்கு ஏகமாய் கூட்டம். சாதாரணமாக சிவராமன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மாலை வாக்கிங்கை முடித்தோமா வீட்டுக்குள் சென்று அடைந்தோமா என்ற டைப்தான். ஆனால் கூட்டத்திலிருந்து வந்த சத்தமும் மக்களின் பரபரப்பும் அவரை சலனமடைய செய்தன. ஏழரை மணிக்குத்தான் டி.வி. சீரியல். அது வரை என்ன செய்ய? கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு வந்தால் என்ன?

கூட்டம் அடர்த்தியாக இருந்தது. இலேசில் உள்ளே நுழைய முடியவில்லை. கொஞ்சம் இங்கே அங்கே சுற்றி இண்டு இடுக்கை ஆராய்ந்து ஒரு வழியாக உள்ளே நுழைந்துவிட்டார்.

எட்டிப் பார்த்ததில்...

ஒரு சோனிக் கிழவன் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்தான். மத்தியில் ஒரு அழுக்குத் துணி விரிந்து கிடக்க, அங்கும் இங்குமாக சில்லறைகள். ஒரு பெண் தண்ணீர்க் குடம் ஒன்றை வட்டத்துக்குள் வைத்தாள்.

இரண்டு முறை சாதாரணமாகச் சுற்றி வந்த கிழவன் திடீரென குனிந்து தண்ணீர் குடத்தை எடுத்து தலை மீது வைத்துக் கொண்டான். கைகளை விட்டுவிட்டான். கூட்டத்தினர் கைதட்டி ஆர்பரிக்க சில்லறைகள் விழுந்த வண்ணம் இருந்தன.

சிவராமன் போய் விடலாமா என்று யோசித்தார். வித்தையில் என்ன வேடிக்கை? மக்கள் என்னவோ ஆர்பரித்து மகிழ்ந்தாலும் அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கிழவனுக்கு அறுபது வயசு இருக்கலாம். வித்தை காட்டுகிற வயசா இது? எழுபத்து மூன்று வயதில் இரண்டு முறை இரண்டாவது மாடி ஏறவே மூச்சு வாங்குகிறது. கிழவன் இந்த வயதில் தன்னை இப்படி வருத்திக் கொண்டு வீதி வீதியாகப் போய் வித்தை காட்டி பிழைக்க வேண்டிய அளவுக்கு என்ன கஷ்டமோ?

மனசு பொறுக்கவில்லை. வெளியே வந்து விட்டார். விடுவிடுவென நடையை போட்டார். ஏன் போய் பார்த்தோம் என்றாகிவிட்டது.

அது சரி, கிழவன் அவன் பிழைப்புக்காக தன்னை வருத்திக் கொள்கிறான். இதில் தான் வருத்தப்பட என்ன இருக்கிறது? கிழவனில் தன்னைப் பொறுத்திப் பார்த்ததில் வந்த விளைவோ?

சிவராமன் ரிடையர் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. ரிடயர் ஆன போது பிராவிடண்ட் ஃபண்டு பணம்தான் கிடைத்தது. பென்ஷன் இல்லை. கிராஜுவிட்டி எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒரு லட்சத்து இருபத்தி எட்டாயிரம் கொடுத்தார்கள். நல்லவேளையாக ரிடையர் ஆவதற்கு முன்பே மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்துவிட்டார். அடித்து பிடித்து என்பதினாயிரத்தில் அறுநூறு சதுர அடியில் இரண்டாவது மாடியில் தண்ணீருக்கு ஆலாய் பறக்கும் மேற்கு மாம்பலத்தில் பிளாட்தான் வாங்க முடிந்தது. அதை ஆத்மா பெயரில் வாங்கியது எவ்வளவு பிசகு என்பதை பிறகுதான் உணரமுடிந்தது.

ஆத்மா ஒரே மகன். இன்னமும் நிலையான வேலையில்லை. நாற்பது வயதிலும் கம்பனிக்கு கம்பனி மாறிக் கொண்டிருக்கிறான்.

பையன் துரதிர்ஷ்டம் என்றால் வாய்த்த மருமகள் அதிர்ஷ்டம். சாந்தியின் சப்போர்ட் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் இந்த கிழவன் மாதிரி வீதிக்கு வந்திருப்பாரோ என்னவோ?

பி. எஃப். பணத்தின் மிச்சத்திலிருந்து சில ஆயிரங்களுக்கு தன் மூன்று பெண்களுக்கும் கிரைண்டர், பீரோ மாதிரி சிலவற்றை வாங்கிக் கொடுத்தார். அது ஆத்மாவுக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உரசல்கள் அதிகமாகி ஒரு வழியாக இருவருக்கும் பேச்சுவார்த்தை நின்றே போனது. அதன் பிறகு எல்லாமே சாந்தி மூலமாகத்தான்.

ரிடையர் ஆனதில் கசண்டு போல மிச்சமிருந்த இருபதினாயிரம் ரூபாய்க்கும் பிறகு கேடு வந்தது. சாந்தியின் இரண்டாவது பிரசவத்தில் ஏகப்பட்ட சிக்கல். என்ன ஏது என்றே புரியாமலே தொடர்ச்சியாய் சில ஆப்பரேஷன்கள். சாந்தியை வீட்டுக்கு அழைத்து வர தன்னிடம் உள்ள பணத்தை கொடுத்தால் ஒழிய வேறு வழியில்லை என்ற நிலைமை. கொடுத்துவிட்டார்.

ஆத்மா வீராப்பாக ஆறே மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவதாகச் சொன்னான். தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும்.

ஆயிற்று. மூன்று வருடங்கள்.

சிவராமன் கையில் சுத்தமாக சல்லி காசில்லை. புகையிலைக்கும் புளிப்பு மிட்டய்க்கும் சாந்தி மூலமாக கேட்டு பெற வேண்டியிருக்கிறது. சாந்தி அவ்வப்போது கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தாலும் ஆத்மா கணக்கு எழுதுகிறேன் பேர்வழி என்று நோகடிப்பான்.

ஒரு முறை பேரன் ராகவ் மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று தாத்தாவை நச்சரிக்க 'அப்பாவிடமிருந்து என் பணம் வரும். அதில் வாங்கித் தருகிறேன்' என்று சாந்தி மூலமாக சொன்னதற்கு, 'ராகவுக்கு எப்போது சைக்கிள் வாங்கித்தர வேண்டும் என்று எனக்கு தெரியும். அப்பாவை வம்பு செய்யாமல் சும்மாயிருக்கச் சொல்' என்று அவன் கத்த என் பணம் உன் பணம் என்று வீடே ரகளையானது.

சிவராமன் செல்லாக்காசாய் போய்விட்டார்.

சரி. இங்கே இருந்தால்தான் மனஸ்தாபம் என்று சில நாட்களுக்கு தன் பெண்களை பார்க்க சென்றால், 'எனக்கு செலவு வைக்க வேண்டுமென்றே அப்பா அடிக்கடி அக்காக்களை பார்க்க போய்விடுகிறாரா?' என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு கத்துவான். இத்தனைக்கும் மூன்று டஜன் வாழைப்பழங்களும் சில பிஸ்கட்டுகளும்தான்.

ஆத்மா ஒன்றை புரிந்துகொள்வில்லை. தான் பணத்தைத் திருப்பி கேட்பது ஏதோ தொடர்ச்சியாகச் செலவு செய்வதற்கு என நினைத்துக் கொண்டிருக்கிறான். தன்னிடம் பணம் இருப்பது ஒரு பாதுகாப்புக்கும் ஒரு மரியாதைக்கும் என்பதை எப்படி புரிய வைப்பது? சாந்தியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாயிற்று. அவளுக்கு தன்னால்தான் அப்பாவுக்கு அவஸ்தை என்ற சுயப்பச்சாதாபம் வேறு.

போன வாரம் ஒரு வழியாக சொல்லி முடித்து விட்டான். அவனுக்கு ஆபீஸில் ஏகப்பட்ட டென்ஷனாம். தன்னைத்தான் சரியாக படிக்க வைக்க வில்லை. நல்ல வேளையில் சேர்த்து விடவில்லை. தன் அக்காக்களை கவனித்துக் கொண்ட மாதிரி தன்னைக் கவனிக்கவில்லை. இனி மேல்கொண்டாவது தனக்கு மன கஷ்டங்களை கொடுக்காமல் சும்மயிருக்கச் சொல் என்று வழக்கம் போல சாந்தி மூலமாகச் சொல்லிவிட்டான்.

பாவம். அந்த பெண். ஸ்விட்ச் போட்ட மாதிரி அழுகிறது. எங்கே இந்த பிரச்சனையால் மீண்டும் ஏதாவது அவள் உடம்புக்கு வந்துவிடக் கூடாதே என்று முற்று புள்ளி வைத்து விட்டார். செல்லாக் காசாய் சொச்ச காலத்தை தள்ள வேண்டும் என்பது தலையெழுத்து என்பதை மனசளவில் ஏற்றுக் கொண்டு விட்டார். எல்லாவற்றுக்கும் மரணம்தான் சரியான தீர்வு. ஆனால் அது வர மாட்டேன் என்கிறதே.

வாசலில் இருந்த வாட்ச்மேன் சாந்தி வெளியே போயிருப்பதாகச் சொன்னான். சாவி வாங்கிக் கொண்டு தானே கதவை திறந்து தனியாக வீட்டில் இருக்க அலுப்பாக இருந்தது. நேரம்தான் இருக்கிறதே. அந்த கிழவனை மீண்டும் ஒரு முறை போய் பார்த்துவிட்டு வந்தாலென்ன? சைக்கிள் கூத்தும் இந்நேரம் முடிந்திருக்கும்.

எதிர்பார்த்த மாதிரியே கிழவன் சில்லறை காசுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். சைக்கிள் ஓரமாக சாத்தப்பட்டு இருந்தது. அதுவும் அவனை மாதிரியே நோஞ்சானாய் இருந்தது.

அப்போதுதான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. எல்லோரும் சில்லறை போட்டார்களே, தான் ஒன்றுமே அவனுக்கு கொடுக்கவில்லையே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு ஒன்றும் கொடுக்காமல் போவது பிசகல்லவா?

சட்டைப் பையை துழாவினார். ஒரே ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு இருந்தது. தனக்கு பாதுகாப்பும் மரியாதையும்தான் பிரச்சனை என்றால் இவனுக்கு சோறு கிடைப்பதே பெரிய பிரச்சனை.

எதோ ஒரு வேகத்தில் ஐம்பது ரூபாயை அவன் அழுக்கு துணியில் போட்டார். குனிந்து சில்லறைகளை எண்ணிக் கொண்டிருந்தவன் ஐம்பது ரூபாய்த் தாளை பார்த்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவன் பார்வையில் மிரட்சி இருந்தது.

"ஐயா ரொம்ப நன்றிங்க".

"ஏம்பா. இந்த வயசுல சைக்கிள் மிதிச்சு வித்தை காட்டறயே. கஷ்டமாயில்லை? உடம்பு தாங்குமா?"

"என்னங்க செய்யறது. மூனு பசங்க இருக்காங்க. இருந்தும் சரியில்லை. ஒரே ஒரு பொட்டை புள்ளே இருக்குது. அதுவும் சீக்காளியா போக சொல்ல அவ வூட்டுக்காரன் வுட்டுட்டு போயிட்டான். கொஞ்ச நாள் பிச்சை எடுத்துப் பார்த்தேன். ரொம்ப அவமானமா இருந்திச்சு. சரி, எனக்கு தெரிஞ்சது இது ஒண்ணுதான். ஏதோ தெம்பு இருக்கங்காட்டிப் பொழப்பு ஓடுது. அப்பால... அவன் பார்த்துப்பான்."

கிழவன் மேலே காட்டினான்.

"சரிப்பா. ஒடம்பு வலுவுக்கேத்த வேல செஞ்சு பொழச்சுக்கோ. வருமானம் கம்மியா இருந்தாக்கூட பரவாயில்ல. ஏடாகூடமா நாம ஏதாவது செஞ்சுட்டு மத்தவங்களுக்கு பாரமா போயிடக் கூடாதில்லையா? அந்த ஆதங்கத்துல சொல்லறேன்."

"ஒங்க நல்ல சொல்லுக்கு எனக்கு அது மாதிரி எதுவும் வராதுங்க. ரொம்ப நன்றிங்க."

சிவராமனுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. மனசு ஒப்பிக் கொடுக்கும் போதுதான் எவ்வளவு மகிழ்ச்சி. திரும்பி பாதி தூரம் வந்தவருக்கு சொரேலென்றது. சாயந்திரம்தான் சாந்தி அந்த ஐம்பது ரூபாயை கொடுத்தாள். ராகவுக்கு நாளை ஸ்கூல் திறக்கிறது. பிரட்டும் பட்டரும் வாங்கி விட்டு மிச்ச பணத்தை கைசெலவுக்கு வைத்துக் கொள்ள சொல்லியிருந்தாள்.

ஐயைய்யோ. இப்போது என்ன செய்ய? சாந்தியிடம் போய் விஷயத்தைச் சொல்லி மேலும் இருபது ரூபாய் கேட்பதா? கேட்டால் என்ன நினைப்பாள்?

ஆத்மாவை எப்படிச் சமாளிப்பது? நானே ஒரு செல்லாக் காசு. இதில் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாயிற்று.

செய்வதறியாமல் தவித்தார். கிழவனிடம் மீண்டும் போய் இருபது ரூபாயை மட்டும் கேட்டால் என்ன? ஆனால் அதை உடனே நிராகரித்தார். சே! தானம் கொடுத்தைத் திருப்பிக் கேட்பது கேவலம். வேண்டாம். சாந்தியிடமே.... சாந்தி வேறு வீட்டில் இல்லையே.

இரண்டு தப்படி முன்னே போவதும், திரும்பி வருவதுமாக திண்டாடினார். கடைசியில் கிழவனிடம் வெட்கத்தை விட்டுக் கேட்டுவிடுவது என்று தீர்மானித்துவிட்டார்.

கிழவன் சைக்கிள் அருகில் நின்று கொண்டிருந்தான். தயங்கி, தயங்கி, அவன் அருகில் போய் தலையை சொறிந்தவாறே நின்றார். எப்படி கேட்பது? பேச்சு வரவில்லை.

"என்னங்கய்யா"

"அது வந்துப்பா. எங்கிட்ட சில்லறை இல்லே. உன் கஷ்டத்தைப் பார்த்த போது சில்லறை மாத்தறது பெரிசாப் படலை. அதான் ஐம்பது ரூபாயையும் அப்படியே போட்டுட்டேன். அப்பறந்தான் என் மண்டைக்கு ஒறைச்சது. இருபது ரூபாய்க்கு இப்போ உடனடியா செலவு இருக்கு. அதனால நீ முப்பது ரூபா எடுத்தின்டு"

"என்னாங்க சாமி. என்ணெண்வோ பேசிக்கிட்டு, உங்களோட பெரிய மனசே போதுங்க. இந்தாங்க இருபது ரூபா."

கிழவன் கொடுத்த அந்த இருபது ரூபாயை லட்சரூபாய் மாதிரி பத்திரமாக பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு மிகுந்த தளர்வோடு திரும்பினார்.

சே! என்ன முட்டாள்தனம். செல்லாக் காசுக்கு தான தர்மம் ஒரு கேடா?

கொஞ்ச தூரம்கூட தாண்டியிருக்கமாட்டார். பின்னாலிருந்து அவர் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பியதில், கிழவன் சைக்கிளோடு நின்று கொண்டிருந்தான்.

"ஐயா, மன்னிச்சுக்கணும். என் பேச்சுக்கு கோவிச்சுக்க கூடாது. எனக்குள்ள எவ்வளவு துக்கமிருக்குதுன்னு நீங்க எப்படி உணர்ந்தீங்களோ அந்த மாதிரி உங்களுக்குள்ளேயும் ஏதோ நோவு இருக்குதுன்னு எனக்கு தோணுதுங்கய்யா. என்னோட கஷ்டத்தை விட்டுத் தள்ளுங்க. அது என்னோட விதி. என் கூடவே பொறந்தது. அதை நான்தான் கவனிக்கோணும். உங்களை கஷ்டப்படுதறது ரொம்ப பாவங்க. அதனால தயவு செஞ்சி தப்பா எடுத்துக்காம இந்த முப்பது ரூபாயையும் வாங்கிக்குங்க. உங்களை காட்டியும் எனக்கு கொஞ்சம் வலு இருக்குது. உங்க நல்ல மனசுக்கு நீங்க சுகமா இருந்தா அது போதுங்க. இந்தாங்க."

சட்டைப்பையில் மூன்று பத்து ரூபாய் தாள்களை திணித்து விட்டு சைக்கிளை மிதித்து போய்விட்டான் கிழவன்.