Tuesday, 24 March, 2009

துளசியில் மீண்டும் நான்

சென்ற வாரம் வெள்ளிக் கிழமை நான் நடித்த காட்சி துளசி தொலைகாட்சி தொடரில் வந்தது. அதன் விடியோ இதோ:

Monday, 23 March, 2009

இந்த மாத அமுதசுரபியில் எனது கட்டுரை


காமராஜர் தாமதத்தால் மேம்பாலம் கிடைத்தது

தமிழ் திரைப்படத் துறையில் தொழிலாளர் பிரச்சனைகள் என்பதும் கடற்கரையில் தோன்றி மறையும் அலைகள் என்பதும் ஒன்றே. அப்படி இருக்கும் போதிலும், இன்றைக்கும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் உரிமையை போராடி பெரும் அளவுக்கு ஒரு வலுவான அமைப்பு பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர்களில் மிக முக்கியமானவர் 'பாலா மூவீஸ்' கிருஷ்ணசாமி அவர்கள்.

83 வயதான இவர், ஒரு இனிய காலை வேளையில், தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

"இந்தியாவிலேயே அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட முதல் திரைப்பட தொழில்நுட்ப கல்லூரி சென்னையில்தான் உருவானது என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விஷயம். 'ஓளிப்பதிவு மற்றும் ஒலி பொறியியல்' என்ற பெயரில் அது பிராட்வேயில் வெகுகாலம் செயல்பட்டது. பிறகுதான் அது தரமணியில் திரைப்பட தொழில் கல்லூரியாக உருவெடுத்தது. அப்படி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் படித்து வெளிவந்த முதல் கலைஞனாக நான் இருந்தது எனக்கு பெருமை. கூடவே அதிர்ஷ்டமும் இருந்தது. படிப்பை முடித்த கையோடு ஜெமினி ஸ்டூடியோவில் உதவி ஒளிப்பதிவாளராக வேலையும் கிடைத்தது. அப்போதே சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கான ஒரு அமைப்பை ஆரம்பிக்க ஆர்வம் காட்டினேன். Cine Technicians Association என்ற அமைப்பில் இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதால், என் பெயருக்கு முன்னால் சி.டி.ஏ என்ற அடைமொழி ரொம்ப காலம் இருந்தது."

"நான் ஜெமினி ஸ்டூடியோவில் வேலைக்கு சேர்ந்தது ஆகஸ்டு 11. அடுத்த ஐந்தாவது நாளே, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. நாடே விழாக் கோலத்தில் இருந்தபோது, ஜெமினி அதிபர் வாசன் இந்திய விடுதலையைக் கொண்டாடும் விதமாக அன்று இரவு சிறப்பானதொரு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் கல்கி, டி,டி,கே, கொத்தமங்கலம் சுப்பு போன்ற பிரமுகர்கள் கலந்து கொண்டனர். எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாலும், கூடவே ஒரு வருத்தமும் இருந்தது. இந்த விடுதலை பொன்நாளை கண்டு களித்திட சத்தியமூர்த்தி இல்லையே என்ற ஏக்கம்தாம் அது"

"காமராஜரையும், மஹாத்மாவையும் என் இரு கண்களாக பாவித்து வருகிறேன். தேசப்பிதாவின் தீண்டாமை கருத்துக்களை தமிழ் திரைப்பட வாயிலாக மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக 'ஒன்றே குலம்' என்ற தமிழ் திரைப்படம் ஒன்றை 1954ல் நான் இயக்கினேன். அதன் துவக்க விழாவுக்கு, அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜரை அழைத்திருந்தேன். முன் கூட்டியே அவர் தன் வீட்டிலிருந்து கிளம்பி விட்டாலும், கோடம்பாக்கம் ரெயில்வே கேட் மூடியிருந்ததால் அவருக்கு காலதாமதமாகி விட்டது. என் விழாவுக்கு வந்ததும், அவர் உதித்த முதல் வார்த்தை 'மேம்பாலம்' என்பதாகும். ஒரு விதத்தில் கோடம்ப்பாகம் மேம்பாலம் வருவதற்கு நான் காரணமாக இருந்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது."
"ஒன்றே குலம் படம் வெளியானதும், அது ஏகப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்தது. சட்டசபையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. ஆதரவாக பேசியவர்கள், அந்த திரைப்படத்தை தமிழக அரசே வாங்கி வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இது பற்றி காமராஜருக்கு போக, அவரோ, "கிருஷ்ணசாமி என் நண்பன். அவன் படத்தை வாங்க நான் கையெழுத்துப் போட்டால் அது தவறான முன் உதாரணமாகிவிடும்", என்று சொல்லி தடுத்து விட்டாராம்! இதுவல்லவோ அப்பழுக்கற்ற அரசியல் நேர்மை!! எனவே, எனது அடுத்த வெற்றி தயாரிப்பான 'படிக்காதை மேதை' என்ற படத்திற்கு கர்ம வீரரை நினைவு படுத்தும் வகையில் பெயர் வைத்தேன்"

"திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி சேர்க்கும் விதமாக ஹிந்தி மற்றும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிகெட் போட்டியை சென்னையில் முதன் முறையாக 1952ல் நடத்தினேன். அதில் சென்னை அணிக்காக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் மட்டை பிடித்தார்கள். அதே அணியில் ஜெமினி கனேசணும், சாவித்ரி மற்றும் புஷ்பவல்லியோடு களம் இறங்கியது இன்னொரு சுவாரஸ்யமான தகவல். பம்பாய் அணியில் ராஜ் கபூர், தேவ் ஆனந்த், திலீப் குமார், நர்கீஸ், நூதன் போன்றவர்கள் பங்கேற்றார்கள். அவர்களுக்காக பம்பாயிலிருந்து ஒரு தனி விமானமே ஏற்பாடு செய்யப்பட்டது. ரிப்பன் கட்டிடத்தின் பின்னால் இருந்த கார்ப்பரேஷன் மைதானத்தில்தான் அந்த போட்டி நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்னால் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் மக்களிடையே வின்டேஜ் கார்களில் பவனி வந்தார்கள். சென்னையில் மிகப் பெரிய கோலாகலம் என்றால் பம்பாயில் படப்பிடிப்பே ஸ்தம்பித்து போனது. அவ்வளவு சிறப்பு பெற்ற போட்டிக்கு நான் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டேன். அதே போல இந்தியாவில் நடைபெற்ற முதன் முதல் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் நான் ஒருகினைப்பாளன்"

"முன்பெல்லாம் தேசிய விருது என்றால் அது நடிகர், நடிகை, தயாரிப்பாளர் என்பதிலேயே முடிந்து விடும். சினிமா என்பது பல தொழில் நுட்ப கலைஞர்களால் உருவாக்கப்படுவது என்பது உணர்த்த, அவர்களுக்கும் விருதுகள் கிடைக்க, மத்திய அரசாங்கத்தோடு பல முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியிருக்கிறேன். மொரார்ஜி நிதி மந்திரியாக இருந்த போது, சினிமா நெகடிவ்களுக்கு பத்து சதவிகித வெட்டு அறிவித்தார். ஒட்டுமொத்த திரைப்படத் துறையே கவலையில் ஆழ்ந்தது. சென்னையில் பிரும்மாண்ட பேரணி நடந்தது. ஆனால் மொரார்ஜி பிடிவாதக்காரர். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அப்போது லால்பகதூர் சாஸ்திரிதான் வர்த்தக மந்திரி. அவரை சந்தித்து சாதுர்யமாக திரைப்பட பிலிம் சுருள்களை 'ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்தில்' சேர்த்துவிட ஏற்பாடு செய்து விட்டேன். அதனால், வெளிநாட்டில், இன்னும் மலிவான விலையில், அதிக அளவில் பிலிம் சுருள்கள் வாங்க முடிந்தது."

"எனக்கு புதுமைகள் செய்வது பிடிக்கும். சினிமாவை குறைந்த செலவில் அரங்கம் வாயிலாக கிராம மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையான திறந்த வெளி திரை அரங்கை வடிவமைத்து, அதை சோமங்கலம் என்ற கிராமத்தில் செயல்விளக்கம் செய்தும் காட்டினேன். அது ஏனோ வர்த்தக ரீதியாக எடுபடவில்லை."

"கர்நாடக இசையிலும் ஏதாவது புதுமைகள் செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது. திருவையாற்றில் எப்படி தியாக ப்ரும்மத்தின் பஞ்ச ரத்ன க்ருதிகளை பாடுவார்களோ, அதே மாதிரி முன்னனி இசை கலைஞர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, மிக சிறப்பான முறையில் ஒலிப்பதிவு செய்து வெளியிட்டேன்."

"சுதந்திர போராட்டங்களை பார்த்த, படித்த, கேட்ட அனுபவங்கள் இருப்பதால் அது சம்பந்தமாக திரைப்படத் துறையில் வாயிலாக மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற ஆவல் எனக்கு ரொம்ப நாட்களாக இருந்தது. தேச விடுதலைக்காக சினிமாத்துறையும், நாடகத்துறையும் தங்கள் பங்களிப்பை மிக திறமையாக அளித்திருக்கிறது. எனவே எல்லா விவரங்களையும் ஒன்று திரட்டி நாடக பாணியில் டாக்குமென்ட்ரி தயாரிக்க முடிவு செய்த்தேன். முதலில் 1995-ல் 'சுதந்திர போராட்டத்தில் தமிழ் சினிமாவின் பங்கு' என்ற தலைப்பில் 80 நிமிட விவரனப்படம் தயாரித்தேன். இதில் விஸ்வநாத தாஸ், டி.கே.சண்முகம், டி.பி.ராஜலக்ஷ்மி போன்றவர்கள் எப்படி சினிமா மற்றும் மேடை நாடகங்கள் மூலம் இந்திய விடுதலைக்கு பாடுபட்டார்கள் என்பதை பற்றி எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நாடக வடிவில் அதை பதிவு செய்தேன். இதன் வெற்றியை தொடர்ந்து, சுதந்திர இந்தியாவின் பொன்விழா ஆண்டில், 'சுதந்திர இந்தியாவுக்கு மேடை நாடகங்களின் பங்கு' என்ற தலைப்பில் 12 அரை மணி நேரத் தொடரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற இந்திய மொழிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த நாடக கலைஞர்கள் ஆற்றிய வீர தீர செயல்களை இந்தியா முழுவதும் அறியும்படி வெளிக்கொணர்ந்தேன்."

பழைய நினைவுகளிருந்து திரும்பி வந்தவரை, 'இந்தக் கால தொலைக்காட்சி தொடர்கள் திருப்தியளிக்கிறதா?' என்று கேட்கவும்,

"மிகப் பெரிய காவியமான சம்பூர்ணராமாயணமே ஒரு இரவுக்குள் சொல்லப்பட்டுவிடுகிறது. ஆனால் இவர்கள் ஒரு சாண் நீள கதையை அதன் தன்மைக்கு முரணாக ஆண்டுக் கணக்கில் இழுப்பதில் ஒரு படைப்பாளியான என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஆரோக்கியமானதல்ல. சீக்கிரமே மக்களை சலிப்படைய செய்து விடும்." என்று முடித்தார் கிருஷ்ணசாமி.

--மெலட்டூர்.இரா.நடராஜன்

Thursday, 12 March, 2009

துளசியில் நான்

திங்கள் முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைகாட்சியில் இரவு 10 மணி முதல் 10.30 மணி வரை வரும் துளசி என்கிற தமிழ் தொலைகாட்சி தொடரில் நான் நடித்து வருகிறேன். நேற்று நான் நடித்த காட்சி வந்தது. பண்புடன் நண்பர்களுக்காக இதோ அந்த வீடியோ பதிவு:

மெலட்டூரான்.

Wednesday, 4 March, 2009

தெய்வம் தந்த வீடு


சிவாவுக்குள் பிசாசு மனம் கூச்சலிட்டது. "ஏமாந்தியா, முட்டாளே. ஹைகோர்ட்டே சொல்லியும் உன் சித்தப்பா கேட்கல. அப்பீல் செஞ்சிருக்காரு, பாரு. நான் சொல்லறத கேளு. ஒரே வாரத்தில சித்தப்பா உன் காலடில வீட்டு சாவியை மரியாதையோடு வைப்பாரு."

கொஞ்சம் நின்று யோசித்தான். சித்தப்பாவாயிற்றே என்று இரக்கப்பட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி என் வீட்டை தான் சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?

ஆனால் அடுத்த நொடியே அப்பா சொன்னது ஞாபகம் வந்தது. "சிவா. அவனுக்கு இன்னும் ஆறே மாசம் டைம் கொடுடா. உன் சித்தியின் கேன்சர் டிரீட்மெண்டுக்காக அலைஞ்சுக்கிட்டிருக்கான்டா."

"அப்பா பேச்சை கேட்கப் போறியா? போச்சு. நாலு வருசமா பெண் கல்யாணக் கடன்களைச் சொல்லி ஏமாத்தியாச்சு. இப்போ கேன்சர். அதற்கு பிறகு ஏதாவது இல்லாமலா போய்விடும்?"

மனப்பிசாசு சொல்வதுதான் சரி.

"சாரி அப்பா."

தனக்குள் பேசிக் கொண்டே வந்த சிவா ரோட்டில் கிடந்த அமாவாசை பூசனிக்காயை கவனிக்கவில்லை. மடேரென்று வழுக்கி விழுந்தான். பின் மண்டையிலும் இடுப்புப் பகுதியிலும் சரியான அடி. பின்புறம் அனலாய் தகித்தது. எழ முயன்றான். முடியவில்லை. மணிக்கட்டு பகுதியில் ஆயிரம் ஊசிகளை சொருகிவிட்ட மாதிரி வலித்தது.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ரோடு. ஆட்டோக்களும் பைக்குகளும் விர்விர்ரென்று போய் கொண்டிருந்தாலும் உதவிட யாருமில்லை.

வேகமாக போய் கொண்டிருந்த ஒரு ஆட்டோ திடீரென ஓரம் கட்டி நின்றது. அதிலிருத்து குதித்து இறங்கினான் ஒரு இனைஞன். மகேஷ்! சித்தப்பாவின் இரண்டாவது மகன்.

முதுகு பக்கம் அவன் பிடிக்க, அவன் நண்பன் கால் பக்கம் பிடிக்க சிவா ஆட்டோவில் திணிக்கப்பட்டான்.

உடனே பிசாசு உரக்க கத்தியது. "சிவா மறுபடியும் ஏமாறாதே. உதவி செய்யுற மாதிரி செஞ்சுட்டு வீட்டை அமுக்கிடுவாங்க. ஜாக்கிரதை"

"ரொம்ப நன்றி மகேஷ். நீ மட்டும் இல்லேன்னா நான் ரோட்டில அனாதையாக கிடந்து செத்தே போயிருப்பேன். உங்க குடும்பத்துக்கு பொறுக்கமுடியாத தொல்லைகள் எவ்வளவோ கொடுத்திருக்கேன். இருந்தாலும், எனக்கு உதவியிருக்கியே, யு ஆர் கிரேட்!"

"அண்ணா, உங்களுக்கும் அப்பாவுக்கும் இருக்கும் சண்டையில எனக்கு என்னன்னா சம்பந்தம்?"

அந்த பதிலில் சிவா கூனிக் குறுகிப் போனான். "அது சரி, வேறு வீட்டுக்கு என்ன செய்யப் போகிறீங்க?"

"கஷ்டம்தான்னா. இவ்வளவு காலம் படியளந்த கடவுள் இதுக்கும் வழி காட்டாமலா போவார்"

கொஞ்சம் அவஸ்தையான யோசனைகளுக்கு பிறகு, "வேண்டாம், மகேஷ். அப்பாகிட்டே சொல்லிடு. நீங்க அங்கேயே இருந்துகுங்க.."

வீடு, வீடு என்று பேராசையில் அலைந்து, கடைசியில் தூக்க ஆளில்லாமல் வீதியில் சாக கிடந்தேனே! என்ன முட்டாள் நான்?

மறுபடியும் பிசாசு குரல் எழுப்ப எத்தனிக்க, "ஓடிப்போ பிசாசே. உள்ளத்தினுள் அகல் விளக்கை இப்போதுதான் ஏற்றி வைத்திருக்கிறேன்."

"என்ன அண்ணா?"

"ஒன்றுமில்லை." தம்பியை அணைத்த கைகள் வலித்தன. ஆனால் மனசில் வலி இல்லை.

(கலைமகள் - மார்ச் 2009)

Friday, 30 January, 2009

வா! வா! விரைந்து வா!


குங்குமம் - 01 ஜனவரி 2009

"உட்கார்"

தீபக் சோப்ராவின் அந்த வார்த்தையில் அதிகாரமும் மிரட்டலும் இருந்தது. சோனாலி பொறியில் சிக்கிக் கொண்ட எலி மாதிரி முழித்தாள். எதிரே இருந்த கையில்லா நாற்காலியின் நுனியில் அவஸ்தையுடன் அமர்ந்தாள். சோப்ரா அவளை ஒரு கேவலமான ஜந்துவை பார்ப்பது மாதிரி பார்த்தான்.

"இந்த மாதிரி எத்தனை நாள... இல்லை மாசமா, வருஷமா செஞ்சுக்கிட்டு இருக்கே?"

"சார். இதுதான் முதல் தடவை. ஏதோ இல்லாமையிலே தப்பு செஞ்சுட்டேன் சார். தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க. உங்களை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்." எழுந்து நின்று கொண்டாள்.

சோப்ரா மீண்டும் கைகளை உயர்த்தி அவளை உட்காரச் சொன்னான். "உன்னை அவ்வளவு சுலபமா விட்டுட முடியுமா? நான் யார் தெரியுமா? இருபது வருஷம் மிலிட்டிரியில ஆபீசரா இருந்தவன். எதை வேணும்னாலும் மன்னிப்பேன். திருட்டுக்கு மன்னிப்பே கிடையாது. புரிஞ்சுதா, மை டியர் யங் அண்ட் ப்யூட்டிஃபுல் கேர்ல்"

சோனாலி அடிபட்ட கோழிக்குஞ்சு மாதிரி தலையாட்டினாள். "நீ திருடியிருக்கியே, அந்த ஸ்கர்ட் என்ன விலை இருக்கும் தெரியுமா?"

"சார். என் வீட்டுக்காரருக்கு சரியான வேலை இல்லே. என் சம்பளத்தை நம்பி வீட்டுல ஆறு பேரு இருக்காங்க. அதுவும் பத்தலே. என் பக்கத்துவீட்டுக்காரிதான் ஒண்ணு, ரெண்டு ஸ்கர்ட்டுங்கள எடுத்தா. நான் வித்துத் தரேன். ஆபத்துக்கு பாவமில்லேன்னா. எனக்கு திருடத் தெரியாது சார். அதான் மாட்டிக்கிட்டேன்."

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் செக்யூரிடி ஆபீஸர். நீ திருடினத மறைவா இருந்த க்ளோஸ் சர்க்யூட் கேமிரா படம் புடிச்சிடுச்சு. வசமா மாட்டிக் கிட்டே. இப்ப நான் என் ட்யூட்டிய செஞ்சே ஆகனும்."

"சார். மொதலாளிக்கு தெரிஞ்சா வேலை போயிடும். தவிர, திருடி பட்டத்தோட வெளியில போனா, எங்கையும் வேலை கிடைக்காது. சார்.. சார்.. உங்களை கடவுளா நெனைச்சு...."

"நான் சென்ஸ். உனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா, எம்.டி.கிட்டே சொல்லியிருக்கணும். அல்லது அட்லீஸ்ட் எங்கிட்டேயாவது சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு திருடினா எப்படி?"

"தப்புதான் சார். இந்த தடவை, பெரிய மனசு வைச்சு, விட்டுடுங்க. இனிமே செத்தாலும் திருடமாட்டேன்."

சோப்ரா பதிலேதும் சொல்லாமல் அவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"சார். ப்ளீஸ்."

"ஓகே. நான் உன்னை காப்பாத்தறேன். ஆனா, உன்னை காப்பாத்தறதுல எனக்கு என்ன லாபம்?"

சோப்ரா கோணலாக சிரித்தான். சோனாலியை கீழ் பார்வையில் பார்த்தான். "உனக்கு தண்டனையும் கொடுக்கணும். அதே சமயத்துல எனக்கு லாபமும் இருக்கணும். டூ இன் ஒன். அந்த மாதிரி எங்கிட்டே ஒரு திட்டம் இருக்கு."

"சார். நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியல"

"வேலையில்லாதவன் பொண்டாட்டியா இருந்தாலும், இளமையாகவும், அழகாகவும் இருக்கே....."

சோனாலி விலுக்கென்று எழுந்து கொண்டாள். கண்களில் கோபம் கொப்பளித்தது. "சார். எனக்கு வேலை போனாலும் பரவாயில்லை. நான் அந்த மாதிரி பொண்ணு இல்லே"

எழுந்தவளை மீண்டும் அதட்டினான். "நான் சொல்லறதை முழுசா கேட்காம நீயே ஒரு முடிவுக்கு வந்தா எப்படி?

சோனாலி தன் புடவை தலைப்பை சரி செய்து தோள்களை போர்த்திக் கொண்டாள். "சோனா, நீ நெனைக்கிற மாதிரி உன்னை நான் தப்பு காரியம் செய்ய சொல்லப்போறதில்லே. எனக்கு சில வெளிநாட்டு நண்பர்கள் இருக்காங்க. அவங்கெல்லாம் ஆர்மியில இருந்து ரிடயர் ஆனவங்க. அவங்களுக்கு இந்திய பெண்கள் மேல எப்பவுமே ஒரு கண்ணு உண்டு. அவங்களுக்கு தேவையான பெண்களை தேடி பிடிச்சு, அப்பப்ப நான் கொடுப்பேன். இன்னிக்கு என்னோட ஒரு நண்பருக்கு ஒரு புது மாதிரியான கஸ்டமர் தேவைப்படுது. அவருக்கு வயது எழுபதுக்கு மேலே. உன்னை ஒண்ணும் செய்யமாட்டார். நீ அவருக்கு துணையா இருக்கணும். அப்பப்ப தோள்ல உரசுவாரு. கன்னத்துல முத்தம் கொடுப்பாரு. இடுப்பை பிடிப்பாரு. அவ்வளவுதான். நீ அதை கொஞ்சமும் கண்டுக்காம அவருக்கு டிரிங்க்ஸ் கலந்து கொடுக்கணும். சாப்பிட ஹெல்ப் செய்யணும். ஆனா எல்லை மீற மாட்டார். இதை அவரே சொல்லியிருக்கார்."

"சார். நான் இப்பவும் முடியாதுன்னு சொன்னா?"

"இந்த வேலை போயிடும். குடும்பம் நடு ரோட்டுக்கு வரும். லுக் சோனாலி. இன்னிக்கு, ஒரே ஒரு நாள். உன்னோட பிக் அப்புக்கும், டிராப்புக்கும் பக்காவா ஏற்பாடு செய்யறேன். நாளை காலையிலேர்ந்து நீ ஃப்ரீ"

சோனாலி கெஞ்சினாள். என்னென்னவோ சொல்லி சொல்லி பார்த்தாள். சோப்ரா அசைவதாக இல்லை. "சார். நீங்க என்னை அப்பறம் ஏமாத்த மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?"

"ஓ. உனக்கு அந்த சந்தேகம் இருக்கா. இங்க பாரு. நீ இப்ப பார்த்தியே, நீ திருடினதை. அதை சிஸ்டத்துலேர்ந்து எடுத்து, இந்த சி.டி.யில போட்டுட்டேன். நீயே வேணும்னாலும் செக் பண்ணிக்க. ஆபீஸ்ல எந்த பைல்லையும் இல்லே. நீ எனக்கு இன்னிக்கு ஒத்துழைப்பு கொடுத்துட்டா, அடுத்த நிமிஷமே அந்த சி.டி.ய உங்கிட்டே கொடுத்துடறேன். இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிறத அப்படியே ஒரு ஆடியோ பைலா போட்டு உங்கிட்டே கொடுத்துடறேன். நான் எல்லை மீறினா, இதை மொதலாளிகிட்டே போட்டு காட்டி, என் வேலைக்கு வேட்டு வை. எப்படி! என் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்"

போய்யா, நீயும். உன் ஜெண்டில்மேன் அக்ரிமெண்டும். சோனாலி மனதுக்குள் சோப்ராவை சபித்தாள். "சார். இப்பவே சொல்லறேன். பல்லை கடிச்சுக்கிட்டு, ஒரு தாத்தாவுக்கு, ஒரு தாதி மாதிரி வேலை செஞ்சு ஒப்பேத்திடறேன். எங்கையாவது என்னை கவுக்க முயற்சி செஞ்சீங்கன்னா... நான் உயிருக்கும் அஞ்சாம உங்களை ஒரு வழி செஞ்சுடுவேன். திருட்டு மாதிரியே எனக்கு இதெல்லாம் பழக்கமில்லே."

"அப்ப. நீ வற்ர"

மிகுந்த மகிழ்சியுடன் கைகுலுக்க வந்தவனை தவிர்த்தாள். அவள் வர வேண்டிய இடம், நேரம் ஆகியவற்றை குறித்துக் கொண்டாள். விருட்டென அவன் அறையை விட்டு வெளியேறினாள்.

கீழ்தளம் வந்ததும், தீடீரென அவளுக்குள் ஒரு புதிய சிந்தனை வந்தது. திருடியது தப்பு. அதிலிருந்து தப்பிக்க, அதைவிட கொடுமையான இன்னொரு தப்பை செய்வதா? முதலாளியிடம் சோப்ராவின் கெட்ட எண்ணத்தை சொல்லி அவரிடமே மன்னிப்பை கேட்டால்? அது சரி. ஆனால் திருட்டை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்?

ஆனால் நிச்சயமாக சோப்ரா சொன்ன இடத்துக்கு போகப் போவதில்லை. சோனாலி தீர்மானித்து விட்டாள்.

இந்தக் கதை முடிவு பெற ஒரு சில குறிப்புகளை பின் இணைப்பாக தர அவசியம் இருக்கிறது.

சோப்ராவின் வெளிநாட்டு கிழம் தங்கியிருந்த ஹோட்டல், மும்பையில் உள்ள ஏழு நட்சத்திர தாஜ் ஹோட்டல்.
வரச் சொன்ன தேதி 26-12-2008. இரவு 9.00 மணி.
சோப்ராவும், அந்த கிழமும் தரைதள லவுஞ்சில் சோனாலியின் வருகைக்காக காத்திருந்தார்கள்.
மறுநாள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் இருவர் பெயர்களும் இருந்தன.

Monday, 19 January, 2009

கோயில் அத்தை


(2008 தினமலர் வார மலர் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை)
பெரிய அத்தையின் விரல் நிரடல்களில் கோலமாவு வளைந்தும் நெளிந்தும் ஓடிக்கொண்டிருந்தது. அவள் போடும் கோல அழகைக் காண்பதற்கு கருவறையில் வீற்றிருக்கும் அந்த லஷ்மிநாராயணரே வெளியே வந்து விட்டலநாராயணன் மாதிரி இடுப்பில் கை வைத்துக்கொண்டு ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்ப்பார் என்றே நினைக்கிறேன். சரி, அத்தையாகவே நிமிர்ந்து பார்க்கட்டும், அது வரை நானும் ரசிப்பது என்று தீர்மானமாக நின்று கொண்டிருந்தேன்.

கோலத்தை நிறைவு செய்த்துவிட்ட திருப்தியுடன் அதை பார்த்துக் கொண்டே பிரதட்சிணமாக வலம் வந்தவள், காதோரத்தில் அரும்பியிருந்த வியர்வையை கட்டைவிரலால் வழிக்கப்போனவள், குறுக்கிட்ட என்னை நிமிர்ந்து பார்த்து திகைத்துப் போனாள். சிரமப்பட்டு அடையாளம் கண்டு கொண்டாள். பரவசத்தில் கண்கள் அகலமாக விரிந்தன.

"சுரேஷ்! நீயாடா? எப்படா வந்தே? யாரோ அர்சனை செய்ய வந்திருக்காங்கன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். சே! என்ன முட்டாள் நான்? இவ்வளவு நேரம் காக்க வைச்சிட்டேனே? என்னடா இப்படி திடீர்னு?"

அகன்ற புன்னகையை மட்டுமே பதிலாக வைத்தேன். சாதாரணமாகவே அத்தைக்கு என்னைக் கண்டால் தலைகால் புரியாது. அதுவும் பல வருடங்கள் கழித்து அவளை பார்ப்பதற்காகவே டெல்லியிருந்து களஞ்சேரிக்கு திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்திருக்கிறேன் என்றதும் பதட்டம் கூடிப் போனது. நடுங்கும் கைகளோடு என் கையை பிடித்துப் பார்த்தாள். கோலமாவு கையாலேயே தலையை கோதினாள். என்ன செய்கிறோம் என்று புரியாமல் சின்னக் குழந்தை மாதிரி அங்கும் இங்கும் ஓடினாள். விறுவிறுவென என்னை கோயிலுக்கு வெளியே இழுத்து வந்து வெளிச்சத்தில் ஆசை தீர பார்த்தாள். என்னென்னவோ தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே வந்தாள். எதிர்ப்படுபவர்களிடம், "என் மருமவன். என்னை பார்க்கணும்னு வந்திருக்கான். டெல்லியிலே நல்ல வேலையிலே இருக்கான்." என்று சொல்லி பெருமை பட்டுக் கொண்டே இருந்தாள்.

"அத்தை. உங்க கோயில் வேலை முடிஞ்சிடுச்சா? வீட்டுல போய் நிதானமா பேசலாமே? எதிர் வீட்டுல என் பொட்டிய கொடுத்திட்டு வந்திருக்கேன்"

"இன்னும் பத்து நிமிஷ வேலைதான்டா. கொஞ்சம் பொறு. இல்லைன்னா, பிரகாரத்தை நாலு தடவை சுத்து. வாச படியிலே வந்து உட்கார்ந்துக்க. இதோ வந்திட்டேன்"

எழுபது வயது ஆனாலும், எவ்வளவோ கஷ்டங்கள் வந்து அவளை அலைக்கழித்தாலும், அதை துளி கூட பொருட்படுத்தாமல் சிரித்த முகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் என் அத்தையை பார்க்கும்போது நெஞ்சில் ரத்தம் கசிந்தது. பின்னுக்கு போய்விட்ட நினைவுகள் மீண்டும் சிலிர்த்தெழுந்து என்னுள் முட்டி மோதின.

எனக்கு அத்தைகள் இரண்டு என்றாலும் அத்தான் ஒன்றுதான். கிரிஜா அத்தைதான் பெரிய அத்தை. சொந்த மாமாவுக்குதான் கட்டிக் கொடுத்தார்கள். அத்தானுக்கு மேலக்குளத்துக்கு பக்கத்தில் சின்னதாக ஒரு ரைஸ் மில் இருந்தது. அது நஷ்டத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது. அத்தை தன் உழைப்பை கொட்டி ஒரே வருடத்தில் லாபம் காட்டினாள். அந்த வருடமே கடைத்தெருவில் ஒரு மளிகை கடை போட்டு அதில் அத்தானை உட்கார வைத்துவிட்டு தான் ரைஸ்மில்லின் முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டாள். காசு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை என்று எல்லோரும் சொல்ல ஆரம்பிக்க, ஒரு துணிச்சலோடு என் சின்ன அத்தை வனஜாவையே, அத்தானுக்கு இரண்டாம் தாரமாக கட்டி வைத்தாள். அக்காளும், தங்கையுமாக இருந்தால், சொத்து பிரச்சனை, சக்களத்தி சண்டை வராது என்பதை பொய்யாக்கியவள் என் சின்ன அத்தை.

அப்போதெல்லாம் எனக்கு பள்ளிக்கூடம் போகும் வயது. சின்ன அத்தை, பெரிய அத்தையை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வதும், இரண்டு பேர்களுக்கு நடுவே என் அத்தான் தடுமாறி தவிப்பதும், ஆளாளுக்கு வந்து வக்காலத்து வாங்குவதும் அடிக்கடி நடக்கும். பெரிய அத்தை உழைக்கும் வகை என்பதால் எப்போதும் தன்னை அலங்கரித்து கொள்வதில் நாட்டம் கொண்டதில்லை. தனி ஆளாக ஒரு மூட்டை நெல்லை எடுத்து ஹல்லரில் கவிழ்ப்பாள். பெரும்பாலும் இரவில்தான் கரண்டு வரும் என்பதால் சில நாட்கள் நெல் மூட்டை மீது படுத்து தூங்கிவிடுவாள். வேலையாள் இல்லையென்றால் அவளே மாவரைப்பாள். தவிடு பிடிப்பாள். வீட்டில் தன் பிடி அற்று போவது தெரியாமல் பொன்னும் பொருளும் சேர்த்து கொடுத்துக் கொண்டிருந்த சொந்த அக்கா, தன் தங்கையாலேயே ஏமாற்றப்பட்டாள்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அது ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை. வனஜா அத்தை தலைவிரி கோலமாக நடுதெருவில் நின்று கொண்டு ஏகத்துக்கும் சத்தம் போட்டு தகாராறு செய்ய, ஊரே கூடியது. என் அப்பாவும் தாத்தாவும் மற்ற உறவுக்காரர்களும் வரவழைக்கப்பட்டு விடிய விடிய பேசினார்கள். அதன்படி கோயில் பக்கத்தில் அரதபழசான, ஓடு வேய்ந்த வீட்டுக்கு மட்டும் பெரிய அத்தை சொந்தக்காரியானாள். அத்தான் பெயரிலும், பெரிய அத்தை பெயரிலும் இருக்கும் மற்ற எல்லா சொத்துக்களும் வனஜா அத்தையின் பெயருக்கு உடனடியாக மாற்றி கொடுத்துவிட வேண்டும் என்பதாக முடிவானது. சின்ன அத்தையை அடிக்கப்போன அத்தானை பெரிய அத்தைதான் தடுத்தாள்.

சொத்துக்கள் தன் கைக்கு வந்ததும், கொஞ்ச நாட்களிலேயே எல்லாவற்றையும் விற்று விட்டு தன் மூன்று பெண் குழந்தைகளுடன் தஞ்சாவூர் போனாள் சின்ன அத்தை. அங்கு மளிகை கடை வைத்தாள். அத்தான் சின்ன அத்தைக்கு தெரியாமல் அவ்வப்போது களஞ்சேரிக்கு வந்துவிட்டு போவார். அந்த சமயத்தில்தான் அத்தானின் முகத்தில் நிம்மதியை பார்க்கமுடியும். ரைஸ் மில் கையைவிட்டு போய்விட்டாலும், பெரிய அத்தை உழைப்பதை நிறுத்தவில்லை. ஊரில் ஒரு வீடு பாக்கியில்லாமல் எந்த வேலையென்றாலும் முகம் சுளிகாமல் இழுத்து போட்டுக் கொண்டு செய்வாள்.

பெரிய அத்தைக்கு நன்றாக பாட வரும். கிணற்றடியில் துணி தோய்க்கும் கல்லில் பெரிய அத்தை குத்துகாலிட்டு மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருக்க அத்தான் அதற்கு பக்கத்திலிருக்கும் தூணில் சரிந்தவாறு ரசித்துக் கொண்டிருப்பார். காதல் கசிந்துருகிக்கொண்டிருக்கும் போது நான் கரடியாய் பல தடவை நுழைந்திருக்கிறேன்.

"வாடா மீசை மொளைச்ச என் மருமவனே! ரம்யாவை கட்டிக்கிறயா?" என்பாள். ரம்யா வனஜா அத்தையின் மூத்தப் பெண்.

"போ அத்தை! வனஜா அத்தை மாமியார்னா வேண்டாம். நீ எனக்கு மாமியாரா இருக்கியா? கட்டிக்கறேன்"

"பார்த்தீங்களா, உங்க மருமவன் பேசறத"

அத்தான் சாமர்த்தியமாக பேச்சை மாற்றிவிடுவார். பெரிய அத்தையிடம் வசதிகள் குறைவாக இருந்தாலும் எனக்கு பெரிய அத்தைதான் பிடிக்கும். நான் படிப்பதற்க்கு சென்னை போனதும் பெரிய அத்தையிடமிருந்து தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. படிப்பு முடித்து, எனக்கு டெல்லியில் வேலை கிடைத்ததும், நான் அப்பா, அம்மாவை அழைத்துக் கொண்டு டெல்லி வந்துவிட்டேன்.

அதன் பிறகு இரண்டு சம்பவங்கள் மிக முக்கியமானது. சின்ன அத்தையின் மூத்த பெண், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே யாரோ ஒருவனை காதலித்திருக்கிறாள். கொஞ்சம் வசதி குறைவு. கீழ் ஜாதி வேறு. சின்ன அத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ரம்யா ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், அந்த பையனுடன் களஞ்சேரி பெரிய அத்தை வீட்டில் தஞ்சம் புகுந்து விட்டாள். பெரிய அத்தை எல்லாவற்றையும் விசாரித்து விட்டு, அத்தானை வர வழைத்து, அவர் கையாலேயே ஆசிகள் வாங்க வைத்து திருமணத்தை நடத்திவிட்டாள். சின்ன அத்தை போலீசை வரவழைத்து ஊரே வேடிக்கை பார்க்கும் படி செய்தாளாம். ஆனால் பெரிய அத்தையின் உறுதியை கண்டு, அத்தானே மிரண்டு போனாராம்.

அடுத்து என் அத்தான் காலமானது. நாட்கள் போக போக, அத்தான் அதிக நாட்கள் பெரிய அத்தை வீட்டிலேயே இருப்பது அதிகமானதாம். அத்தான் உடலளவில் திடமாக இருந்து வந்தாலும், மனசளவில் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தார். களஞ்சேரி வீட்டில் இருந்தபோது அவர் இறந்து போயிருக்கிறார். அதுவும் பெரிய அத்தையின் மடியில். சின்ன அத்தைக்கு தகவல் போனதாம். அதன் பிறகு அவள் செய்ததுதான் மிகக் கொடூரம். எல்லோர் பேச்சையும் மீறி அத்தானின் சவத்தை தஞ்சாவூர் எடுத்துக் கொண்டு போனாள். பெரிய அத்தையை அந்த சமயத்திலிருந்து எந்த சடங்கிலும் சேர்த்துக் கொள்ளவேயில்லை. பெரிய அத்தை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், எங்கள் உறவிலும், உள்ளூர் மக்களும் ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.

அதன் பிறகு பெரிய அத்தையின் உழைப்பு பெருமாளை நோக்கி திரும்பி விட்டது. சதா சர்வகாலமும் லஷ்மிநாராயணரே கதி என்று இருந்துவிட்டாள். 'என் சன்னிதி சுத்தமோ சுத்தம். ஆஹா!' என்று அந்த கடவுளே பெருமை பட்டுக்கொள்கிறார் என்றால் அதற்கு பெரிய அத்தைதான் காரணம். கோயிலுக்காகவே தன்னை கட்டிப்போட்டுக் கொண்டுவிட்டதால் பெரிய அத்தை ஊருக்கு கோயில் அத்தை ஆனாள்.

பெருமாளுக்கு சாயரட்சை ஆனது. அதன் பிறகுதான் பெரிய அத்தை வந்தாள். நானும் பெரிய அத்தையும் ரொம்ப நேரம் பேசிக் கொண்டே இருந்தோம். நாளைக்கே போக வேண்டும் என்றதும் பொய்யாக கோபித்துக் கொண்டாள். அப்புறம் தானே சமாதானம் செய்து கொண்டாள். அடிக்கடி வரச்சொன்னாள். குடும்பத்தோடு வரச்சொன்னாள். அவசியம் தஞ்சாவூர் போய் சின்ன அத்தையையும் பார்த்துவிட்டு போகச் சொன்னாள். அதற்கு என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். சின்ன அத்தைக்கு இப்போது படுத்த படுக்கையாக இருக்கிறாளாம். ஆனால் வசதிக்கு எந்த குறைவும் இல்லையாம்.

நான் களஞ்சேரிக்கு வந்த வேலை இனிமேல்தான் ஆரம்பிக்க இருக்கிறது. அத்தையை எப்படியாவது சமாளித்து, டெல்லிக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று என் மனைவி சொல்லியனுப்பியிருக்கிறாள். ஆனால், அத்தையின் போக்கை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும், மெதுவாக ஆரம்பித்தேன்.

"அத்தை! நீங்க இங்க ஒண்டியா இருந்துக்கிட்டு எதுக்கு கஷ்டப்படனும். என் கூட வந்திடுங்களேன். சரளா நீங்க டெல்லிக்கு வரப்போறதை ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா?"

என் பேச்சை பெரிய அத்தை எதிர்பார்க்கவில்லை. கொஞ்ச நேரம் கண் மூடி யோசித்தாள். பிறகு நிதானமாக கீழ் குரலில் ஆரம்பித்தாள்.

"சுரேஷ் ! மஹாபாரத போர்ல கிருஷ்ணன் யார் பக்கங்கிறதுலேங்கறதுல துரியோதனனுக்கும், அர்ஜுனனுக்கும் போட்டா போட்டி நடந்துச்சாம். அந்த கதை தெரியுமா?"

"ஏதோ ஓரளவுக்கு தெரியும். இருந்தாலும் நீங்களே சொல்லுங்களேன்"

"கதை ரொம்ப பெரிசு. அதனால சுருக்கமாச் சொல்லறேன். கிருஷ்ணர் துரியோதனன்கிட்டே, 'உனக்கு நான் மட்டும் வேணுமா? இல்லே, என்னுடைய யாதவ சேனை மொத்தமும் வேணுமா?' ன்னு கேட்டாராம். அதுக்கு துரியோதனன், 'உன் யாதவ சேனைதான் வேணும்' னு சொன்னானாம். 'கிருஷ்ணா! எனக்கு நீ மட்டும் இருந்தா போதும்' னு அர்ஜுனன் சொன்னானாம். துரியோதனன் போன பிறகு, கிருஷ்ணர் அர்ஜுனன் கிட்டே அதுக்கான விளக்கம் கேட்டாராம். 'கிருஷ்ணா! நீ எங்கே இருக்கே என்பதுதான் முக்கியம். எனக்கு யாதவ சேனை எவ்வளவு பெரிசு என்பது முக்கியமில்லை' ன்னு அர்ஜுனன் அதுக்கு பதில் சொன்னானாம். அந்த மாதிரி என்கிட்டே காசு பணம் வேணுமானா கொறைவா இருந்திருக்கலாம். ஆனா உங்க அத்தான் மனசு எப்போதும் என்னோடதான்டா இருந்துச்சு. அவர் மனக்கஷ்டத்தோட நொந்து வரும்போதெல்லாம் நாந்தான்டா அவருக்கு மருந்தா இருந்திருக்கேன். அவருக்கு சாவு வந்தபோதுகூட, அது என் மடியிலேதான் வந்திச்சு. நிம்மதியா செத்தார். அதுக்கப்பறம் அந்த உடம்புதான் அவ கிட்டே போச்சு. நான் எப்போதுமே அவர் என்னை விட்டு பிரிஞ்சதா நெனைக்கலே. கிருஷ்ண பரமாத்மா மாதிரி என்னோட எப்பவும் இருக்காரு. அவருக்கு ரெண்டு பொண்டாட்டி மாதிரி நம்ம ஊரு பெருமாளுக்கும் ருக்மணி, சத்யபாபான்னு ரெண்டு பொண்டாட்டி. இப்ப நான் அவருக்கு ஊழியம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு ஒரு குறைவும் இல்லாம அவர் என்னை காப்பாத்திக்கிட்டு வராரு. ஊரே 'கோயில் அத்தை! கோயில் அத்தை!' ன்னு என்னை கொண்டாடுது. நான் இன்னமும் பெருமாளை வேண்டறது என்ன தெரியுமா? 'பெருமாளே! அந்த வனஜாவுக்கு நல்லதை செய். அவ சம்சாரி. அவளை ஏதாவது தண்டிக்கணும்னா, அந்த தண்டனையை எனக்கு கொடு' ன்னு கெஞ்சுவேன். சுரேஷ்! நான் என்னிக்கும் தைரியமா இருக்கறதுக்கு ஒரே காரணம், அத்தான் இருந்த வரைக்கும் அத்தான். அவர் போன பிறகு நம்ம பெருமாள். காசு பணமெல்லாம் யாதவ சேனை மாதிரி. அது முக்கியமேயில்லே....."

"அது சரி அத்தை, உங்களுக்கு வயசாகிறது இல்லையா?"

"அதை பத்தி நான் கவலைப்பட்டதே இல்லே, சுரேஷ். பாஞ்சாலி முழு சரணாகதி அடைஞ்ச மாதிரி நான் பெருமாள் கிட்டே என்னை கொடுத்திட்டேன். அவர் பார்த்துப்ப்பார். அத்தான் போகும் போது, எனக்கு பெருமாள் கிட்டே கை காமிச்சு விட்ட மாதிரி, பெருமாளே ஒரு நாள், 'சுரேஷ்! உன் அத்தையை கூட்டிக்கிட்டு போ'ன்னு சொல்லுவாரு. அப்படி ஒரு நிலை ஏற்பட்டா நான் வந்துதானே ஆகனும்."

என் கண்களுக்கு பெரிய அத்தை தெரியவில்லை. தாயார் சன்னிதியில் கொலுவீற்றிருக்கும் அந்த கற்சிலையே உருமெடுத்து எதில் அமர்ந்திருப்பதாகப் பட்டது. எழுந்து, நெற்றி நிலத்தில் பட அவளை நமஸ்கரித்தேன். கோயில் அத்தை அப்போதும் புன்னகை பூத்திருந்தாள்.

(தினமலர்-வாரமலர் 21 டிசம்பர் 2008)