Friday, 30 January 2009

வா! வா! விரைந்து வா!


குங்குமம் - 01 ஜனவரி 2009

"உட்கார்"

தீபக் சோப்ராவின் அந்த வார்த்தையில் அதிகாரமும் மிரட்டலும் இருந்தது. சோனாலி பொறியில் சிக்கிக் கொண்ட எலி மாதிரி முழித்தாள். எதிரே இருந்த கையில்லா நாற்காலியின் நுனியில் அவஸ்தையுடன் அமர்ந்தாள். சோப்ரா அவளை ஒரு கேவலமான ஜந்துவை பார்ப்பது மாதிரி பார்த்தான்.

"இந்த மாதிரி எத்தனை நாள... இல்லை மாசமா, வருஷமா செஞ்சுக்கிட்டு இருக்கே?"

"சார். இதுதான் முதல் தடவை. ஏதோ இல்லாமையிலே தப்பு செஞ்சுட்டேன் சார். தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க. உங்களை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்." எழுந்து நின்று கொண்டாள்.

சோப்ரா மீண்டும் கைகளை உயர்த்தி அவளை உட்காரச் சொன்னான். "உன்னை அவ்வளவு சுலபமா விட்டுட முடியுமா? நான் யார் தெரியுமா? இருபது வருஷம் மிலிட்டிரியில ஆபீசரா இருந்தவன். எதை வேணும்னாலும் மன்னிப்பேன். திருட்டுக்கு மன்னிப்பே கிடையாது. புரிஞ்சுதா, மை டியர் யங் அண்ட் ப்யூட்டிஃபுல் கேர்ல்"

சோனாலி அடிபட்ட கோழிக்குஞ்சு மாதிரி தலையாட்டினாள். "நீ திருடியிருக்கியே, அந்த ஸ்கர்ட் என்ன விலை இருக்கும் தெரியுமா?"

"சார். என் வீட்டுக்காரருக்கு சரியான வேலை இல்லே. என் சம்பளத்தை நம்பி வீட்டுல ஆறு பேரு இருக்காங்க. அதுவும் பத்தலே. என் பக்கத்துவீட்டுக்காரிதான் ஒண்ணு, ரெண்டு ஸ்கர்ட்டுங்கள எடுத்தா. நான் வித்துத் தரேன். ஆபத்துக்கு பாவமில்லேன்னா. எனக்கு திருடத் தெரியாது சார். அதான் மாட்டிக்கிட்டேன்."

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் செக்யூரிடி ஆபீஸர். நீ திருடினத மறைவா இருந்த க்ளோஸ் சர்க்யூட் கேமிரா படம் புடிச்சிடுச்சு. வசமா மாட்டிக் கிட்டே. இப்ப நான் என் ட்யூட்டிய செஞ்சே ஆகனும்."

"சார். மொதலாளிக்கு தெரிஞ்சா வேலை போயிடும். தவிர, திருடி பட்டத்தோட வெளியில போனா, எங்கையும் வேலை கிடைக்காது. சார்.. சார்.. உங்களை கடவுளா நெனைச்சு...."

"நான் சென்ஸ். உனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா, எம்.டி.கிட்டே சொல்லியிருக்கணும். அல்லது அட்லீஸ்ட் எங்கிட்டேயாவது சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு திருடினா எப்படி?"

"தப்புதான் சார். இந்த தடவை, பெரிய மனசு வைச்சு, விட்டுடுங்க. இனிமே செத்தாலும் திருடமாட்டேன்."

சோப்ரா பதிலேதும் சொல்லாமல் அவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"சார். ப்ளீஸ்."

"ஓகே. நான் உன்னை காப்பாத்தறேன். ஆனா, உன்னை காப்பாத்தறதுல எனக்கு என்ன லாபம்?"

சோப்ரா கோணலாக சிரித்தான். சோனாலியை கீழ் பார்வையில் பார்த்தான். "உனக்கு தண்டனையும் கொடுக்கணும். அதே சமயத்துல எனக்கு லாபமும் இருக்கணும். டூ இன் ஒன். அந்த மாதிரி எங்கிட்டே ஒரு திட்டம் இருக்கு."

"சார். நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியல"

"வேலையில்லாதவன் பொண்டாட்டியா இருந்தாலும், இளமையாகவும், அழகாகவும் இருக்கே....."

சோனாலி விலுக்கென்று எழுந்து கொண்டாள். கண்களில் கோபம் கொப்பளித்தது. "சார். எனக்கு வேலை போனாலும் பரவாயில்லை. நான் அந்த மாதிரி பொண்ணு இல்லே"

எழுந்தவளை மீண்டும் அதட்டினான். "நான் சொல்லறதை முழுசா கேட்காம நீயே ஒரு முடிவுக்கு வந்தா எப்படி?

சோனாலி தன் புடவை தலைப்பை சரி செய்து தோள்களை போர்த்திக் கொண்டாள். "சோனா, நீ நெனைக்கிற மாதிரி உன்னை நான் தப்பு காரியம் செய்ய சொல்லப்போறதில்லே. எனக்கு சில வெளிநாட்டு நண்பர்கள் இருக்காங்க. அவங்கெல்லாம் ஆர்மியில இருந்து ரிடயர் ஆனவங்க. அவங்களுக்கு இந்திய பெண்கள் மேல எப்பவுமே ஒரு கண்ணு உண்டு. அவங்களுக்கு தேவையான பெண்களை தேடி பிடிச்சு, அப்பப்ப நான் கொடுப்பேன். இன்னிக்கு என்னோட ஒரு நண்பருக்கு ஒரு புது மாதிரியான கஸ்டமர் தேவைப்படுது. அவருக்கு வயது எழுபதுக்கு மேலே. உன்னை ஒண்ணும் செய்யமாட்டார். நீ அவருக்கு துணையா இருக்கணும். அப்பப்ப தோள்ல உரசுவாரு. கன்னத்துல முத்தம் கொடுப்பாரு. இடுப்பை பிடிப்பாரு. அவ்வளவுதான். நீ அதை கொஞ்சமும் கண்டுக்காம அவருக்கு டிரிங்க்ஸ் கலந்து கொடுக்கணும். சாப்பிட ஹெல்ப் செய்யணும். ஆனா எல்லை மீற மாட்டார். இதை அவரே சொல்லியிருக்கார்."

"சார். நான் இப்பவும் முடியாதுன்னு சொன்னா?"

"இந்த வேலை போயிடும். குடும்பம் நடு ரோட்டுக்கு வரும். லுக் சோனாலி. இன்னிக்கு, ஒரே ஒரு நாள். உன்னோட பிக் அப்புக்கும், டிராப்புக்கும் பக்காவா ஏற்பாடு செய்யறேன். நாளை காலையிலேர்ந்து நீ ஃப்ரீ"

சோனாலி கெஞ்சினாள். என்னென்னவோ சொல்லி சொல்லி பார்த்தாள். சோப்ரா அசைவதாக இல்லை. "சார். நீங்க என்னை அப்பறம் ஏமாத்த மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?"

"ஓ. உனக்கு அந்த சந்தேகம் இருக்கா. இங்க பாரு. நீ இப்ப பார்த்தியே, நீ திருடினதை. அதை சிஸ்டத்துலேர்ந்து எடுத்து, இந்த சி.டி.யில போட்டுட்டேன். நீயே வேணும்னாலும் செக் பண்ணிக்க. ஆபீஸ்ல எந்த பைல்லையும் இல்லே. நீ எனக்கு இன்னிக்கு ஒத்துழைப்பு கொடுத்துட்டா, அடுத்த நிமிஷமே அந்த சி.டி.ய உங்கிட்டே கொடுத்துடறேன். இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிறத அப்படியே ஒரு ஆடியோ பைலா போட்டு உங்கிட்டே கொடுத்துடறேன். நான் எல்லை மீறினா, இதை மொதலாளிகிட்டே போட்டு காட்டி, என் வேலைக்கு வேட்டு வை. எப்படி! என் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்"

போய்யா, நீயும். உன் ஜெண்டில்மேன் அக்ரிமெண்டும். சோனாலி மனதுக்குள் சோப்ராவை சபித்தாள். "சார். இப்பவே சொல்லறேன். பல்லை கடிச்சுக்கிட்டு, ஒரு தாத்தாவுக்கு, ஒரு தாதி மாதிரி வேலை செஞ்சு ஒப்பேத்திடறேன். எங்கையாவது என்னை கவுக்க முயற்சி செஞ்சீங்கன்னா... நான் உயிருக்கும் அஞ்சாம உங்களை ஒரு வழி செஞ்சுடுவேன். திருட்டு மாதிரியே எனக்கு இதெல்லாம் பழக்கமில்லே."

"அப்ப. நீ வற்ர"

மிகுந்த மகிழ்சியுடன் கைகுலுக்க வந்தவனை தவிர்த்தாள். அவள் வர வேண்டிய இடம், நேரம் ஆகியவற்றை குறித்துக் கொண்டாள். விருட்டென அவன் அறையை விட்டு வெளியேறினாள்.

கீழ்தளம் வந்ததும், தீடீரென அவளுக்குள் ஒரு புதிய சிந்தனை வந்தது. திருடியது தப்பு. அதிலிருந்து தப்பிக்க, அதைவிட கொடுமையான இன்னொரு தப்பை செய்வதா? முதலாளியிடம் சோப்ராவின் கெட்ட எண்ணத்தை சொல்லி அவரிடமே மன்னிப்பை கேட்டால்? அது சரி. ஆனால் திருட்டை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்?

ஆனால் நிச்சயமாக சோப்ரா சொன்ன இடத்துக்கு போகப் போவதில்லை. சோனாலி தீர்மானித்து விட்டாள்.

இந்தக் கதை முடிவு பெற ஒரு சில குறிப்புகளை பின் இணைப்பாக தர அவசியம் இருக்கிறது.

சோப்ராவின் வெளிநாட்டு கிழம் தங்கியிருந்த ஹோட்டல், மும்பையில் உள்ள ஏழு நட்சத்திர தாஜ் ஹோட்டல்.
வரச் சொன்ன தேதி 26-12-2008. இரவு 9.00 மணி.
சோப்ராவும், அந்த கிழமும் தரைதள லவுஞ்சில் சோனாலியின் வருகைக்காக காத்திருந்தார்கள்.
மறுநாள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் இருவர் பெயர்களும் இருந்தன.

No comments: