Friday, 7 September, 2012

தங்கத்தில் முதலீடு

நிறைய பேர் தங்கத்தில் முதலீடு செய்வது லாபம் என்று நினைக்கிறார்கள். அது மிக மிக தவறானது.

தங்கத்தை பணமாக மாற்றும் போது பாதிக்கு பாதி போய்விடும். எனவே, தங்கத்தை தங்கமாக வைத்துக் கொண்டு, அதன் மீது கடன் மட்டுமே வாங்க முடியும். இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை.

பழைய தங்க நகையை போட்டு புதியது வாங்கும் போது இதேதான் நடக்கிறது. நகை கடைக் காரர்கள்தான் அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள். மத்திய வர்கத்துக்கு இது புரிவதில்லை.

வெறும் விலையை மட்டுமே பார்ப்பது முட்டாள்தனமானது. எந்த பொருளுக்கும் அது பணமாக மாறும் போது கிடைக்கும் ஈவு தொகையைத்தான் கனக்கிட வேண்டும்.

நீங்கள் எந்த நகைக்கடைகாரர்களிடமாவது அல்லது தங்க காசு விற்கும் வங்கிகளில் திருப்பி வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டுப்பாருங்கள்? உண்மை நிலை புரியும்.

குடும்பத்திற்கு எவ்வளவு தங்கம் தேவையோ அதற்கு மேல் வாங்கி வைத்துக் கொள்ளுதல், அவசிய நேரங்களில் சிக்கலை உருவாக்கும்.

அமரர் சுஜாதா கொடுக்கும் டிப்ஸ் - இளைஞர்களுக்கு தங்கள் குடும்பத்தின் மீது பிடிப்பு ஏற்பட


1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம்.

2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது.

3. மூனு மணி மேட்னி ஷோ போகதீர்கள். படிப்பு கெடும். தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.

4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், காதல், கதை தவிர்த்து.

5. ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள்.

6. உங்களுக்கு கீழே உள்ள மக்களை பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.

7. ஞாயிறு - பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும்.

8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள். கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம். வியர்வை சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். இரவுதான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.

10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள்.

இதில் ஏதாவது ஒன்றை தினம் செய்து வாருங்கள். உங்கள் தாய்/தகப்பனார் உங்களை பற்றி குற்றம்/குறை சொல்வதை படிப்படியாக குறைத்து விடுவார்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்.

(நீயா நானா - நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் சொன்னது)

Thursday, 30 August, 2012

வல்லமையில் எனது சிறுகதை

 இந்த கதையின் முடிவு, ஒரு சில பேருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். ஒரு சில பெண்கள் இது போன்ற முடிவு எடுத்ததாக செய்தி தாள்களில் வந்திருக்கின்றன.

http://www.vallamai.com/literature/short-stories/25244/

Thursday, 9 August, 2012

2014ஐ பற்றி இப்போதே யோசிப்போம் - 2


TINA Factor என்று அரசியல் பார்வையாளர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். அதில்தான் காங்கிரசஸ் ரொம்பவும் நம்பியிருக்கிறது. 2014ல் எப்படியும் மீண்டு வந்து விடுவோம். இதே மாதிரி கல்லா கட்டுவதை தொடராலாம் என்று தெம்பாக இருக்கிறார்கள். அதாவது There is no alternative (TINA). கம்யூனிஸ்டுகளும் சரி, பல மாநில கட்சிகளும் சரி தங்கள் அரசியல் வாழ்வுரிமைக்காக பாஜாகவை எதிர்த்து செயல்பட வைக்கிறது. குறைந்த பட்சம் பாஜகாவை ஆதரிக்காமல் எட்டி நிற்கின்றன. மதவாத தீட்டு பட்டுவிடும் என்றும் அதனால் தங்கள் ஓட்டுகள் சரிந்துவிடும் என்று கவலை படுகின்றன. பாஜகவால் தனித்தும், சில மாநில கட்சிகளின் ஆதரவோடும் பெரும்பான்மை எடுத்துவிட முடியாது. எனவே குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், பாஜாக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மீண்டும் காங்கிரஸ் வந்து விடும். இது 2004ல் அவர்கள் பெற்ற வெற்றி மாதிரி இருக்கும். ஆளாளுக்கு காங்கிரஸை மிரட்டுவார்கள். ஆனால் கவிழ்த்து விட மாட்டார்கள். காங்கிரசும் ரொம்ப பயந்த மாதிரி காட்டிக் கொண்டு தங்கள் கொள்ளையை தொடரும். இந்த அவலநிலை இந்தியாவுக்கு நல்லதல்ல. அவ்வளவுதான் தற்போதைக்கு சொல்ல முடியும். கெடுதலை பற்றி நன்றாக புரிந்து கொண்டால நல்லதை நோக்கி மனசு நகரும்.

கல்வி தந்தைகள் கற்றுத் தரும் பாடம்

ஒரு பொறியியல் கல்லூரி கட்டும் கட்டிடம் இடிந்து விழுகிறது என்றால் இவர்களின் கல்வித்தரம் எந்த லட்சனத்திலி இருக்கும் என்பது தெரிகிறது.  இந்த மாதிரி காசு சம்பாரிப்பதற்கு மட்டுமே கடை விரிக்கும் இந்த மௌள்ளமாறி/முடிச்சவிக்கி கல்வி தந்தைகளை என்ன செய்தால் நாடு உருப்படும்?

Sunday, 5 August, 2012

கானாமல் போன காட்சிகள்

எம்.ஜி.ஆர். படங்களில் கனவு காட்சி என்று எப்போதும் உண்டு. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். படங்கள் மட்டுமே ஈஸ்ட்மென் கலரில் வரும். மற்றவையெல்லாம் கருப்பு வெள்ளை படங்கள். அதிலும் அந்த கனவு காட்சிகள் அள்ளி அள்ளி கொட்டும் வண்ணங்களில் கதாநாயகியின் கவர்சியில், நல்ல மெல்லிசையில் பிரமாதமாக இருக்கும். அதில் சிகரமாக நான் கருதுவது உரிமைக்  குரல் படத்தில் வரும் விழியே கதை எழுது என்ற கனவு காட்சி பாடல்தான். அதில் முன்பு சொன்ன மூன்றும் தூக்கலாக இருக்கும். மீனவ நண்பனில் தங்கத்தில் முகமெடுத்து, நேற்று இன்று நாளையில் அங்கே வருவது யாரோ... இது போன்ற பல பாடல்கள்.

அப்போது பல விஷயங்கள் அரிதாக இருந்தன. விழியே கதை எழுது பாடலை கேட்க வேண்டுமானால் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். திடீரென இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தமிழ் சேவை இரண்டில் உரிமைக்குரல் என்று அறிவித்ததும் அது விழியே கதை எழுது பாடலாக இருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும். இந்தியா கிரிக்கெட்டில் காலை வாருவது மாதிரி நம் எண்ணங்களுக்கு எதிர் மாராக பொண்ணா பொறந்தா ஆம்பிளை கிட்டே... என்று வேறு பாடல் வந்து விடும். தூர்தர்ஷனில் விழியே கதை எழுது வரவேண்டுமென்றால் அது அத்தி பூத்த மாதிரிதான்.

ஆனால் இன்று அப்படியல்ல. கூகுள் சர்ச்சில் போய் விழியே கதை எழுது என்று டைப் செய்தால், எம்.ஜி.ஆரும் லதாவும் நமக்காக ஆயிரம் முறை லவ்வுகிறார்கள்.

நான் கல்லூரி படித்த காலத்தில் எனது நண்பன் சேகர் என்பவருக்கு ஒரு தியேட்டர் குத்தகையில் இருந்தது. தஞ்சாவூர் பஸ்டாண்ட் அருகில் ( தற்போது இது பழைய பஸ்டாண்ட்) திருவள்ளுவர் என்ற தியேட்டர்  உள்ளது. அதில் புரொஜெக்டர் ரூமுக்கு  அருகில் உள்ள ரூமில் அவன் தங்கியிருந்தான். ஒரு முறை உரிமைக்குரல் அந்த திரையரங்கில் வெளியாகியது. சரியாக 7.10 க்கு அந்த பாடல் வரும். கிட்டத்தட்ட இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது அந்த சமயத்தில் போய் அந்த பாடலை மட்டும் பார்த்துவிட்டு ஏதோ சந்திரனில் காலடி வைத்து விட்டு வந்த மாதிரி பெருமிதப்பட்டிருக்கிறேன்.

வசதிகள் குறைவாக இருந்த காலங்களில் சந்தோஷங்கள் அதிகமாக இருந்தன.

Tuesday, 31 July, 2012

கனிம கூட்டுக் கொள்ளை

மதுரை மாவட்டத்தில் கனிம வளங்களை திருடியது 16000 கோடி என்று உத்தேசமாக சொல்லியிருக்கிறார்கள். இந்த திருட்டை செய்த கம்பனிகள், அவையோடு தொடர்ப்பு கொண்ட அரசு அலுவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்துக் கணக்கை பார்த்து, அவர்கள் வருமானத்து மேல் சேர்ந்திருந்தால் அதை பறிமுதல் செய்ய வேண்டும். என்னுடைய அனுமானப்படி அவர்கள் வருமான வரியே கட்டியிருக்க மாட்டார்கள். வெகு இலகுவாக உள்ளே பிடித்து போடமுடியும்.

இந்த அரசு செய்யுமா? அல்லது

ஸ்பெக்ட்ரம் கேஸை தன் நேரடி கவனிப்பில் வைத்துக் கொண்ட மாதிரி உயர் நீதி மன்றம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு சாட்டையை சுழற்றுமா?

இந்த கூட்டுக் கொள்ளையில் எவ்வனாவது ஒருவன் இன்னும் ஒரு மாசத்தில் ஜெயிலில் போய் களி சாப்பிட்டான் என்றால், ஜனநாயகம் வாழ்கிறது என்று மகிழ்ந்து, ஒரு பிடி சக்கரையை வாயில் போட்டுக் கொள்வேன்.

சொத்து சேர்க்கும் டிரஸ்டுகள்

டிரஸ்ட் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட பல அமைப்புகளை கோடி கோடியாக சொத்துக்கள் வைத்திருக்கின்றன. எந்த உயரிய நோக்கத்துக்காக அந்த டிரஸ்ட் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் அடுத்த தலைமுறையில் கானாமல் போய்விடுகிறது. வாரிசு சண்டைகள் உருவாகின்றன. டிரஸ்ட் என்பதே ஒரு பொது நலனுக்கான பொது சொத்து. அதில் வாரிசு உரிமை என்பதே கேவலமாக படுகிறது.

இன்று பல டிரஸ்டுகள் ஒரு தனியார் நிறுவனம் போல செயல்படுகின்றன. தென் சென்னையில் முப்பாத்தம்மன் கோயில் அருகில் இருக்கும் ஒரு சபாவின் செயலாளர் காலமாகியதும் அதன் அடுத்த செயலாளராக அவர் மகன்தான் வந்தார். இது போல பல டிரஸ்டுகளில் வாரிசுரிமை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தான் சேர்த்து வைத்ததை தன் வாரிசுக்கு கொடுக்கும் குறுகிய எண்ணம் கொண்டவர்கள்தான் இந்த டிரஸ்டுகளின் முதலாளிகள் (!!!!!).

சொத்து சேர்த்து வைத்துவிட்டு அந்த தலைவர் போனதும், கீழ் மட்டத்தில் குடுமிபிடி சண்டைகள் வருகின்றன. சித்தாந்தத்தில் வேறுபாடுகள் வரலாம் என்ற கருத்துக்கு இடமே இல்லை. தலைவன் கருத்தை சரியாக புரிந்து கொள்ளாத போதுதான் சித்தாந்த புரிதலில் இரண்டை நிலை ஏற்படுகிறது. உண்மையில் அது நானா நீயா என்ற ஈகோ பிரச்சனைதான். அடுத்து சொத்து ஆளுமையில் சண்டை வருகிறது.

இப்படித்தான் பெரியார் மரித்ததும் அவர்களின் சீடர்களுக்குள் சண்டை வந்தது. இன்று பெரியார் சொத்து முழுவதும் ஒருவர் ஆளுமையில் வந்துவிட்டது. இனி அவர், தன் காலத்துக்கு பிறகு யாரிடம் ஒப்படைக்க போகிறார் என்பதை காலம் நிச்சயம் பதிவு செய்யும். அது அவர் வாரிசுக்கு போய்விட்டால், முன்னே சொன்ன சென்னை சபாவுக்கும் அதற்கும் வித்தியாசம் இருக்காது.

ஆழியார் வேதாத்ரி மகரிஷ் மரித்ததும் அவர்களின் சீடர்களுக்குள்ளும் சண்டை வந்தது. ராம்யோகி சுரத்குமார் மடத்தில் ஒரு சிலர் ஓரம் கட்டப்பட்டனர். ஏன், ஆரோவில்லில் கூட பெங்காலி கோஷ்டிகளுக்கும், தமிழ் கோஷ்டிகளுக்கும் மௌனயுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது.

இஸ்கானில் சண்டை. செங்கல்வராயன் டிரஸ்டில் சண்டை. இது போல சொத்துக்கள் சேர சேர சிக்கல்கள் அதிகமாகி கொண்டே போகிறது. சொத்துக்கள் இல்லையென்றால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த சித்தாந்தத்துக்கே மூடுவிழா.

ஒரு முறை காஞ்சி மஹா பெரியவரை ஒருவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பழங்கள் வாங்கிக் கொண்டும் போயிருந்தார். பெரியவர் அந்த பழங்களை அங்கிருப்பவர்களிடம் பிரசாதமாக ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டார். வந்தவர், "இந்த மடத்துக்கு எதாவது செய்யட்டுமா?" என்று கேட்டாராம். உடனே பெரியவர், "ஆபீஸில் ஏதோ தேவை என்று சொன்னார்கள்.போய் பாருங்கள்" என்றாராம். ஆபீஸில் விசாரித்தால் அவர்கள் சில கடிதங்களுக்கு ஸ்டாம்ப் வாங்க வேண்டும் என்றார்களாம். அதை வாங்கிக் கொடுத்துவிட்டு, திருப்தியடையாமல் மீண்டும் பெரியவரிடம் வந்து இன்னும் பெரிசாக ஏதாவது செய்யட்டுமா? என்று கேட்டாராம். "இல்லை. இது போதும். எப்ப வேனுமோ, அப்ப யாராவது வருவா. அவா கொடுப்பா. நீங்க ஏதாவது செய்ணும்னா நீங்களே நேரடியாக மக்களுக்கு செஞ்சுடுங்கோ" என்றாராம்.

இந்த உண்மையான ஜகத்குருவுக்கு இருந்த சிந்தனை இன்று பெரும்பாலான கார்பரேட் சாமியார்களிடம் இல்லை. இதில் காஞ்சி மடமும் விதிவிலகல்ல.

Monday, 30 July, 2012

மது விலக்கு - அம்மாவுக்கு என் ஆலோசனைகள்

1. மஹாராஷ்ட்டிராவில் ஒரு மது கொள்கை இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மதுக் கடை இருப்பது மக்களுக்கு இடைஞ்சலாக, சமூக சிக்கல்களை உருவாக்கக் கூடிய வகையில் இருந்தால், அதை அரசு ஆராய்ந்து அந்த மது கடைகளை மூடிவிடுகிறது. அந்த நடைமுறையை ஆகஸ்ட் - 15ம் தேதியிலிருந்து துவக்கலாம். காலாண்டுக்கு (குவாட்டருக்கு!!!) 10% மது கடைகளுக்கு உச்ச வரம்பு வைத்து குறைத்துக் கொண்டே வரலாம்.

2. பீர்/விஸ்கிக்கு மாற்றாக அரசே மதுக் கடைகள் மூலமாக கள் வியாபாரம் சில காலங்களுக்கு செய்யலாம். இது கள்ள சாராயத்தை பெருமளவு குறைக்க உதவும்.

3. கேரளாவில் மதுக் கடைகளில் பார் இனைப்பு இல்லை. எனவே, பார்களை ஒட்டு மொத்தமாக மூடிவிட வேண்டும். இந்த கரை வேட்டிகள் இங்குதான் கொள்ளையடிக்கிறார்கள்.

4. பொது இடங்களில் மது அருந்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். இதில் பல நண்மைகள் இருக்கின்றன. வீட்டில் போய் குடிக்க பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். இரண்டாவது, குடித்துவிட்டு வண்டி ஓட்டும் கூட்டம் குறையும். விபத்துகள் தவிர்க்கப் படும்.

5. கண்கானிக்கக் கூடிய காவலர்கள் ஏதாவது கையூட்டு பெற்று, புதிய திட்டத்தை குளறுபடி செய்தால் அவர்களும் குண்டர் சட்டத்தில் போடப்படுவார்கள் என்ற உத்திரவு வர வேண்டும்.

6. மிடா குடியர்களை குடியிலிருந்து மீட்க மாவட்டம் தோறும் மருத்துவ முகாம்கள் உருவாககப் பட வேண்டும்.

இதை அத்தனையையும் அம்மா செய்தால், நான் நிச்சயமாக, பகிரங்கமாக அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவேன். அதை பெருமையா நினைப்பேன்.

தேவை ஒரு வடிகட்டி

ஒரு முறை காஞ்சி மஹா பெரியவருக்கு கண்புரை நீக்கம் செய்யப்பட்டதாம். அதை முடித்து வைத்தவுடன் அந்த மருத்துவர், "இனி நான் என்ன செய்யட்டும்" என்று கேட்ட்டாராம். எனக்கு கெடைச்ச இந்த மாதிரி மருத்துவப் பணி காசு இல்லாம இருக்கிற பல ஏழைகளுக்கு கிடைக்கனும். உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பண்ணு என்று சொன்னாராம். 
அவர் ஜகத்குரு. அவர் ஒன்று என்றால் இப்போது இருப்பதெல்லாம் பூஜ்ஜியங்கள்.  கண்தானம் செய்தால் மோட்சம் கிடைக்காது என்பது போன்ற உளரல்கள் வருகின்றன.
 இது போல பழமைவாத குணங்கள் பல போப்புகளிடமும்/முல்லாக்களிடமும் இருக்கின்றன. நாம்தான் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

Sunday, 29 July, 2012

தமிழக அரசின் பார்வையில் ஒரு மாற்றம் தேவை


முதலாவது குடியர்களை ஒரு வாடிக்கையாளர் என்று பார்ப்பது தவறு. அரசு லாபம் சாம்பாதிக்க டாஸ்மாக் கடைகளை திறக்கவில்லை. எனவே சமூக அக்கறை கொண்ட எந்த ஒரு அரசும், இந்த மாதிரியான ஒரு கூட்டம் குறைய வேண்டும் என்பதாகதான் இருக்க வேண்டும்.

இரண்டாவது, அதிகமாக குடித்து தெருவில் மட்டையாகி கிடக்கும் குடியர்களை இந்த சமூகம் வெறுக்க கூடாது. அரசு அவர்களை நோயாளிகளாக பாவித்து அவர்களை குடியின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

ஒரு பெண்னை தலைமை பொறுப்பில் கொண்ட இந்த அரசு செய்யுமா?

Saturday, 28 July, 2012

தேவை ஒரு ரண சிகிச்சை

தாம்பரம் முடிச்சூர் சியோன் பள்ளி துயர சம்பவத்திற்கு பிறகு, எல்லா தனியார் பள்ளிகளையும் அரசுடமை ஆக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதை ஒரு பக்கம் பார்த்தால் சரி என்றே படும். ஆனால் நிர்வகிக்க லாயக்கில்லாத கல்வி துறையால் ஒட்டுமொத்த சீரழிவே ஏற்படும். மக்களே விரும்ப மாட்டார்கள்.

தனியார் கல்வி நிலையங்கள் மலைமுழுங்கிகளாக இருந்தாலும் மக்கள் அதை நோக்கி இன்னமும் போகிறார்கள் என்றால் அதில் காரணம் இருக்கிறது. அரசு பள்ளிகளில் உள்கடமைப்பு குறைபாடுகள் இருக்கின்றன. ஆசிரியர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

அப்படியென்றால் என்னதான் தீர்வு? எனக்கு தோன்றிய சில கருத்துக்களை தெரிவிக்கிறேன். அரசு இதை அறிமுகப்படுத்தலாம்.

1. முதலில் கல்வி நிலையங்களில் அனைத்து நிதி நடவடிக்கைகளும் காசோலை மூல்மாதான் நடக்க வேண்டும். உள்ளே வரும் பணம், வெளியே போகும் பணம் அனைத்தும் வங்கி கணக்குகள் மூலமாகத்தான் போக வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளியும் கண்கானிக்கப்பட வேண்டும்.

2. பள்ளிகளின் அனைத்து சொத்து வளர்ச்சிகளும் இந்த வங்கி கணக்கோடு இனைத்து பார்க்க வேண்டும். கணக்குகளில் வராத எந்த புதிய சொத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் இரண்டாம் கணக்கு (இரண்டாம் பில் புக்) வைத்து பணம் வாங்கும் வழக்கம் அடியோடு ஓய்ந்து போகும்.

3. பள்ளிகள் அனைத்தும் டிரஸ்ட் சட்டத்தில் வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சதவிகதத்திற்கு மேல் இலாபம் வந்தால் அது முதலமைச்சர் பொது நிதிக்கு மாற்றப்படும் என்ற அதிரடி உத்திரவை அரசு போட வேண்டும்.

4. கல்வித் துறையிலிருந்து ஒரு நபர், பெற்றோர் குழுமத்திலிருந்து ஒரு நபர், ஆசிரியர்களிருந்து ஒரு நபர், ஒரு சமூக ஆர்வலர் என்ற தொடர் கண்கானிப்பு குழுவை அமர்த்தலாம்.

4. கடுமையான தணிக்கை, கடுமையான கண்கானிப்பு இருந்தால் கல்வி கொள்ளையர்கள், போதும்டா சாமி, இனிமேல் இதில் சம்பாதிக்க முடியாது என்று கஞ்சா காய்ச போய்விடுவார்கள். கல்வித்துறை பிழைக்கும்.

Friday, 27 July, 2012

கல்வியும் சாராயமும்

ஒரு டி.வி. நிகழ்ச்சியில் ஒருவர் சொன்னது.

முன்பெல்லாம் அரசாங்கம் கல்வியை கொடுத்தது. ரௌடிகள் சாராயம் விற்றார்கள். தற்போது அந்த ரௌடிகள் கல்வித் தந்தைகளாகிவிட்டார்கள். அரசாங்கம் சாராயம் விற்கிறது.

தமிழக அரசுக்கு வெட்கம்/மானம்/சூடு/சொரனை எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.

இதில் தாத்தாவும், அம்மாவும் ஒரே கட்சி.

களவானிகள் ஜாக்கிரதை

சமீபத்தில் சென்னை சென்றிருந்தேன். ஒரு அரசியல் நண்பரை சந்தித்தேன். முதலமைச்சர் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களை கடிந்து கொண்டது பற்றி பேச்சு திரும்பியது. ஒரு கவுன்சிலர் இப்படி சொன்னாராம். " நாங்கெல்லாம் என்ன சமூக சேவை செய்யவா அரசியலுக்கு வந்திருக்கோம். முப்பது லட்டச ரூபா முதல் போட்டு இந்த சீட் போட்டு இன்னும் அது மாதிரி ரெண்டு பங்கு செலவழிச்சு வந்திருக்கேன். போட்ட காசுக்கும் மேல ரெண்டு மடங்கு எடுத்தாத்தானே அடுத்த எலக்‌ஷனுக்கு தேவையா இருக்கும். இந்த கணக்கு அம்மாவுக்கு புரியாம என்னவோ பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்க அரசியல் அப்படி. என் அரசியல் இப்படி"

இது எப்படி இருக்கு. தி.மு.க போய் அ.தி.மு.க. வந்தாலும் அல்லது இரண்டுக்கும் மாற்றாக தே.மு.தி.க. அல்லது பா.ம.க. அல்லது ம.தி.மு.க என்று யோசித்தாலும் களவானிகள் எப்படியும் எங்கும் இருப்பார்கள்.

ஆண்டவா. என்ன இது நம் நாட்டுக்கு வந்த சோதனை.

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் கவனத்திற்கு


வணக்கம். இந்த கடிதம் எழுதும் சமயத்தில் மனசு கனத்துப் போயிருக்கிறது. உணர்ச்சி கொந்தளிப்பை கொஞ்சம் அடக்கி அறிவு பூர்வமாக ஒரு சில கருத்துக்களை சொல்ல விழைகிறேன்.

தமிழக அரசு அதிகார வர்கத்தில் லஞ்சம் என்பது இரண்டற கலந்து விட்ட ஒரு விஷம் என்பது ஒரு ஊரரிந்த ரகசியம். அதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நேற்று தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு சின்னஞ்சிறு மழலை பலியாக யார் காரணம்? ஒரு குழந்தை உள்ள விழும் அளவுக்கு ஓட்டை உள்ள ஒரு வண்டிக்கு தகுதி சான்று கொடுக்கும் தைரியம் எப்படி ஒரு போக்குவரத்து ஆய்வாளருக்கு வந்தது? குழந்தை உயிர் பறிபோனது தெரிந்தும் கூட எங்களுக்கு அந்த துயர சம்பவத்தில் நேரடி பொறுப்பில்லை என்று சொல்ல சொல்ல ஒரு தாளாளருக்கு எப்படி ஒரு தைரியம் வருகிறது? மக்கள் இப்படி கொஞ்ச நாட்கள் கத்தி கதறுவார்கள், அதன் பிறகு நாம் மீண்டும் கூட்டுக் கொள்ளையை தொடரலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் மீண்டும் அளிக்கும் அந்த அதிகார சக்தியின் வீர்யம் எங்கிருக்கிறது?

நான் உங்களை ஒரு மக்களின் காப்பாளராக பார்க்கிறேன். புரையோடி போயிருக்கும் இந்த மலினங்களை எப்படி கவனிக்காமல் இருந்து விட முடியும்?

இந்த வார விகடனில் போலீஸ் துறையை பற்றிய விரிவான அலசல் வந்திருக்கிறது. மக்களை காக்க வேண்டிய போலீஸ் துறை எப்படி மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறார்கள் என்பதை தெள்ள தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது. உண்மையான திருடர்கள் போலீஸ் அல்லவா? போலீஸ் அதிகாரிகளுக்குள் லஞ்சம் பிரிப்பதில் தகராறு வந்து கட்டிபுரண்டு சண்டையிட்டார்கள் என்ற செய்தி சில நாட்கள் முன்னால் செய்திதாள்களில் வந்தது. இதுவும் ஒரு சோறு பதம்தான். இதை வேறோடு பிடுங்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

உங்கள் உளவுத்துறையில் உள்ள நம்பிக்கையான ஒரு சிலரை வைத்து நான் தரும் இந்த துறைகளில் ஒரு சர்வே எடுங்கள். உங்களுக்கு சீழ் பிடித்து போன அதிகாரத் துறையின் லட்ச்சனம் புரியும்:

1. பத்திர பதிவு துறை

2. பொது பணித்துறை

3. வட்டார போக்குவரத்து துறை

4. வருவாய் துறை

5. அரசு பொது மருத்துவ மனைகள்

இந்த பட்டியல் ஏதோ ஒரு எடுத்துக் காட்டுக்குதான். கான்சர் உடம்பு முழுவது பரவிட்ட மாதிரி அனைத்து துறைகளிலும் லஞ்சம் பரவியிருக்கிறது. இது இந்த ஆட்சி அந்த ஆட்சி என்று இல்லாமல் எல்லா ஆட்சியிலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

இங்கு மக்கள் படும் பாட்டை விட அரசுக்கு வரவேண்டிய வருமானம் பெருமளவு அரசு அதிகார வர்கத்து பாக்கெட்டுகளில் போய்விடுகிறது என்ற உண்மையும் புரியும்.

எனக்கு தெரிந்த எளிய சிறு வழி முறைகளை சொல்ல விரும்புகிறேன்.

1. நீங்கள் சட்ட சபையில் நேரடியாக அரசு அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடவேண்டும். லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை என்று தெள்ள தெளிவாக ஆனித்தரமாக தெரிவிக்க வேண்டும்.

2. அரசு அலுவலங்களில் அரசு அதிகாரிகளை தவிர அங்கும் இங்கும் அலையும் புரோக்கர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.

3. ஒரு துறையிலும் நுழைவாயிலில் ஒரு வரவேறபறை உருவாக்கி வரும் பொதுமக்களுக்கு லஞ்சமில்லா உதவிகள் செய்ய வேண்டும்.

4. லஞ்சம் வாங்குவோரை கையும் களவமாக பிடிக்க சிறப்பு படைகளை உருவாக்க வேண்டும். மக்கள் வந்து புகார் கொடுத்தால்தான் என்று இல்லாமல் சந்தேகப்படும் நபர்களை பொறிவைத்து பிடிக்கும் தனிப்படைகளை உருவாக்க வேண்டும்.

5. அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு, அதை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்ய வேண்டும்.

6. பொது மக்களுக்கு லஞ்சம் பற்றிய தகவல்களை ரகசியமாக தெரிவிக்க 'தபால் தலை இல்லா - அனுப்புனர் முகவரி இல்லா' கடிதங்களை வரவேற்க வேண்டும். தகுந்த தபால் தலை செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.

7. மக்கள் தைரியமாக லஞ்ச தகவல்களை தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் ஒரு பெட்டி வைக்க வேண்டும்.

8. 100, 108 மாதிரி மிக எளிதாக மனதில் வைக்கும் படியாக ஒரு தொலைபேசி எண்ணை லஞ்ச ஒழிப்புக்காக உருவாக்கி அதை செய்தி தாள்களில் அறிவிக்க வேண்டும்.

இது மாதிரி ஒரு போரை துவங்குங்கள். மக்கள் நிச்சயம் உங்கள் பக்கம் இருப்பார்கள்.


Wednesday, 25 July, 2012

ஜீவ - மரணம்

இசை

நீர் மேலாண்மை

தஞ்சை நினைவுகள் - 2

Saturday, 12 May, 2012

Rags to riches

அடுத்த மாதம் ஜூன் 6 தேதி முதல் ஒரு வாரத்துக்கு குடும்பத்துடன் சிங்கப்பூர் மலேஷியா போகிறேன். முதன் முறையாக அயல் நாடு பயணம். Rags to riches என்கிற ஆங்கில சொற்கள் எனக்கு பொருந்தும் என நினைக்கிறேன். மெலட்டூர் என்கிற கிராமத்தில் வருடத்திற்கு 15 ரூபாய் செலவில் அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறேன். படிக்கும் காலத்தில் ஒரு தடவை கூட ரயிலில் போனது கிடையாது. கடற்கரையை பார்த்தது கிடையாது. கப்பல் தெரியாது. விமானம் கூட எப்பவாது எங்கள் கிராம ஆகாயத்தில் ஒரு சிறு பறவை மாதிரி வெகு உயரத்தில் பறக்கும் போது பார்த்திருக்கிறேன். அதிக விஷமம் செய்வதால் எனது டிராயரின் பின் பக்கத்தில் ஓட்டையாகிவிடும். ஒட்டு துணி கொடுத்து ஓட்டையை மறைத்திருக்கிறேன். சிறு ஓட்டையாக இருக்கும்போது பள்ளி சக நண்பர்கள் அதில் சிறு காகிதங்கள் போஸ்ட் பாக்ஸ் மாதிரி போட்டு கிண்டல் பண்ணியிருக்கிறார்கள். ரொம்ப ஏழ்மை இல்லை. சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை. ஆனால் இந்த மாதிரி சுற்றுலாவெல்லாம் ஒரு ஆடம்பரமாக எட்டாக் கனியாக இருந்தது. எனது சித்தப்பாக்கள் மும்பையில் இருந்தார்கள் .அவர்கள் கோடை விடுமுறைக்கு மெலட்டூர் வருவார்கள். அவர்கள் பேஸ்ட் பிரஷ் உபயோகிப்பார்கள். நாங்கள் கோபால் பல் பொடியை விரல்களால் தேய்ப்பவர்கள். அந்த சில நாட்கள் மட்டும் வாய் மணக்க கோல்கேட் பேஸ்ட் தின்போம். அவர்கள் திரும்பி போகும் போது கொண்டு விடுவதற்கு தஞ்சாவூருக்கு அப்பா போவார். ஒரு சமயம் நானும் வருவேன் என்று அடம்பிடித்து போனேன். காலை வேளை சோழன் எக்ஸ்பிரஸ். முதல் வகுப்பு பெட்டி. டிரெயின் வந்ததும் பக்கி மாதிரி நான் முதலில் ஏறி அந்த முதல் வகுப்பு பெட்டியை மலங்க மலங்க ரசித்தேன். அப்பொது என் சித்தப்பாவின் பெண் 'நீயும் நல்ல வேலை கிடைத்து, இந்த மாதிரி வசதிகளை அடைவாய்' என்று ஆறுதல் கூறினாள். அது பலித்தது. படித்ததும் மும்பை போனேன். நபார்டில் வேலை கிடைத்தது. அடுத்த வருடத்திலேயே முதல் வகுப்பில் சென்னை வந்தேன். அதற்கு அடுத்த இரண்டு வருடத்தில் அப்பா, அம்மாவை டெல்லிக்கு ராஜதானி ஏ.சி. கோச்சில் அழைத்து போனேன். திரும்பி வரும்போது ஏரோபிளேனில் அழைத்து வந்தேன். எங்கள் மூவருக்குமே அது முதல் பயணம். நபார்டில் அதிகாரி ஆனதும் பஸ்ஸில் போவது மாதிரி அடிக்கடி பிளேன் பயணம் ஆனது. கிட்டத்தட்ட 100 முறைக்கு மேல் பிளேன் பயணம் செய்திருப்பேன். ரயில் முதல் வகுப்பு பயணம் என்பதை தாண்டி ஏ.சி. முதல் வகுப்பு வரை பயணம் செய்தாகிவிட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவின் பல பகுதிகளை கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சுற்றியாகிவிட்டது. எழுபதுகளில் ஓட்டை டிராயர் போட்டவன் இன்னும் ஒரு மாதத்தில் சிங்கப்பூர்/மலேஷியா போகப்பொகிறான் என்பதை நினைக்கும் போது வாழ்க்கையின் வீச்சு புரிகிறது. விதையின் வீரியம் மட்டும் முக்கியமில்லை அது விதைக்கப்பட்ட இடமும் முக்கியம் என்பது என் வாழ்க்கை பயணம் சொல்கிறது என்று தெரிகிறது.

Friday, 11 May, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - அதற்கான ஒரு ரிஹர்சல்

1. ரூபாய் 1000த்துக்கான கேள்வி -  தூரத்து பச்சை _______ குளிர்ச்சி

ஏ. கண்ணுக்கு  பி. காலுக்கு    சி. கைக்கு   டி. தலைக்கு

2. ரூபாய் 2000த்துக்கான கேள்வி -  சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயர் பெயர் கொண்ட சினிமா நடிகர் யார் ?

ஏ. கமல்   பி, ரஜினி    சி. சிவாஜி    டி. எம்.ஜி.ஆர்

3. ரூபாய் 3000த்துக்கான கேள்வி - சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலை எழுதியவர் யார் ?

ஏ. கல்கி    பி. லஷ்மி    சி. சுஜாதா  டி. ஜெயகாந்தன்

4. ரூபாய் 5000த்துக்கான கேள்வி - சூரிய கிரகனம் என்பது என்ன?

ஏ. வெள்ளி சூரியனை மறைப்பது  பி. சந்திரன் பூமியை மறைப்பது சி. சந்திரன் சூரியனை மறைப்பது  டி. பூமி சூரியனை மறைப்பது

5. ரூ 10000த்துக்கான கேள்வி - புனே நகரம் எந்த மாநிலத்தில் உள்ளது?

ஏ. கேரளா  பி. ஹரியானா   சி. உத்திரபிரதேசம்   டி.மஹாராஷ்டிரா

6. ரூபாய் 20000த்துக்கான கேள்வி - 2016ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக்ஸ் எந்த நகரத்தில் நடக்க இருக்கிறது?

ஏ. மும்பை   பி. ஹாம்பர்க்  சி. டப்ளின்  டி. ரியோடிஜெனிரோ

7. ரூபாய் 40000த்துக்கான கேள்வி - கிராம நிர்வாக அலுவர்கள் என்பவர்கள் எந்த துறையை சார்ந்தவர்கள்?

ஏ. வருவாய் துறை  பி. உள்ளாட்சி துறை  சி. ஊரக மேம்பாட்டு துறை
டி. பொதுப்பணித்துறை

8. ரூபாய் 80000த்துக்கான கேள்வி - ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த நகரம் எது?

ஏ. சண்டிகர்  பி. லூதியானா சி. அமிர்தசரஸ்  டி. லாகூர்

9. ரூபாய் 160000த்துக்கான கேள்வி - பாராக்  _______ ஒபாமா . அமெரிக்க ஜனாதிபதியின் விடுபட்ட நடு பெயர் என்ன?

ஏ. ஹாசன்  பி. ஹுசைன்  சி. ஹென்றி  டி.ராபர்ட்

10. ரூபாய் 3200000த்துக்கான கேள்வி - 1975ல் நடைபெற்ற முதல் உலக கோப்பை இறுதி போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை எதிர் கொண்ட அணி எது?

ஏ. இந்தியா  பி. இங்கிலாந்து  சி. பாகிஸ்தான் டி. ஆஸ்திரேலியா

11. ரூபாய் 6400000த்துக்கான கேள்வி - மொகலாய மன்னர் ஹுமாயூனை தோற்கடித்து டில்லியை கைபற்றிய மன்னர் யார்?

ஏ. ஜெங்கிஸ்கான்  பி. ஷெர்ஷா சூரி  சி. கஜினி முகம்மது  டி.இல்துமுஷ்.

12. ரூபாய் 1250000த்துக்கான கேள்வி - எந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் நடந்த போது விளையாட்டு வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள்?

ஏ. 1980 மாஸ்கோ  பி. 2004 ஏதென்ஸ்  சி. 1972 ம்யூனிச்  டி. 1984 லாஸ் ஏஞ்சலஸ்

13. ரூபாய் 2500000த்துக்கான கேள்வி - மஹாபாரதத்தில் சிகண்டியின் முன் ஜென்ம பெயர் என்ன?

ஏ. அம்பிகை   பி. துஸ்யலா  சி. அம்பை  டி. இடும்பி

14. ரூபாய் 5000000த்துக்கான கேள்வி = டாக்ட்ரின் ஆஃப் லாப்ஸ் என்ற கொள்கையை கொண்டு வந்து இந்திய பகுதிகளை கிழக்கிந்திய கம்பனியில் இனைத்த கவர்னர் ஜெனரல் யார்?

ஏ. லார்ட் கானிங்  பி. லார்ட் ரிப்பன்  சி. லார்ட் டல்ஹௌசி  டி. லார்ட் காரன்வாலிஸ்

15. ரூபாய் ஒரு கோடிக்கான கேள்வி - சூப்பர் செவ்வாய் என்பது எந்த நாட்டில் பிரபலம்?

ஏ. இத்தாலி  பி. பிரான்ஸ்   சி. அமெரிக்கா  டி. இங்கிலாந்து
Thursday, 10 May, 2012

ரகசிய காமிரா

பத்திர பதிவு அலுவலங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படும். நித்யா நந்தா சாமியார்களின் படுக்கை அறைகளில் சி.சி.டி.வி. பொருத்த வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். இவைகளால் எதுவும் மாறப் போவதில்லை. சார் பதிவாளர் அலுவலகங்களில் எங்கு காமிரா இருக்கிறது, அதன் வீச்சு எதுவரை என்று லஞ்சம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்வார்கள். அதன் வீச்சு இல்லாத இடத்தில் லஞ்சம் வாங்குவதை தொடர்வார்கள். சாமியார்கள் ஒரு படுக்கையறையில் காமிரா பொருத்துவிட்டு இன்னொரு காமிரா இல்லாத அறையில் சல்லாபம் செய்யமுடியுமல்லவா? யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள் இவர்கள்?

திருமலை

சென்ற ஞாயிறு திருமலையில் இருந்தேன். 50 ரூபாய் ஈ டிக்கெட் வாங்கிக்கொண்டு போயிருந்தேன். நங்கள் மொத்தம் 17 பேர். பஸ்டாண்டிலிருந்து கோயிலுக்கு எப்படி போவது என்று தெரியவில்லை. வைகுண்டம் 1 போக வேண்டுமென்றால் கார் வைக்க வேண்டும் என்றார்கள். 200 ரூபாய் பழுத்தது. சாப்பாட்டுக்கு ஒரு புறம். செருப்பு வைக்க ஒரு புறம். லக்கேஜ் வைக்க ஒரு புறம் என்று அலைய வேண்டியிருந்தது. க்யூவில் நிற்க 2 மணிக்கு போக வேண்டும். 1.30க்கே அனுமதித்துவிட்டார்கள். ஆட்டு மந்தை மாதிரி மக்கள். கோயிலில் சாமி பார்க்க நிற்கும் போது கூட அசௌகர்யங்களுக்கு கோபப்பட்டார்கள். சண்டை போட்டார்கள். யாரையும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கூண்டு கூண்டாக தாண்டி வந்தபோது ஒருவரி ஒரு கேட்டை மூடி கொண்டிருந்தார். என்ன என்று விசாரித்தேன். "200 ரூபாய் கொடு, உள்ளே விடுகிறேன்" என்றார். ஸ்வாமியின் கட்டிடத்துக்குள்ளேயே லஞ்சம். இந்த நாடு உருப்பட்டுவிடும். கொடுக்கும் மக்கள் இருக்கும் போது, கேட்பவர்கள் இருக்கத்தானே செய்வார்கள். இரண்டு காரியங்கள் நடந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஒன்று, பக்தர்களை மிருகங்களை போல் நடத்தாமல், அமைதியாக வரிசையில் கடவுளை கான செய்ய வேண்டும். காசு கொடுத்தால் கடவுளின் கழுத்தின் மீது ஏறி உட்காரலாம் என்ற பணதிமிர் கொண்டவர்களை திருமலையின் அடிவாரம் ஓட ஓட அடித்து விரட்ட வேண்டும். நடக்குமா?

தூத்துக்குடி பீச்

எல்லா பீச்சுக்கும் வித்தியாசமாக தூத்துக்குடி பீச் இருக்கிறது. இங்குள்ள மணலில் களி அதிகம் இருப்பதால் நம் வாகனத்தை அலையடிக்கும் இடம் வரை எடுத்துவரலாம். மெரீனாவில் இருப்பது மாதிரி நீண்ட மணல் பகுதி இங்கு மிஸ்ஸிங்க். பார்க்க ஆவலா இருக்கா? அப்ப தூத்துக்குடிக்கு வாங்க.

விளம்பரங்களில் கேவலமானவை, நல்லவை

ரொம்ப மட்டரகமான விளம்பரம் என்று யுனிவர் செல்லின் விளம்பரத்தை சொல்லலாம். நம்மோடு இவ்வளவு காலமாக பழகிய ஒரு பொருளை இப்படியா விடை கொடுப்போம். ஹோம குண்டத்தில் போடுவது, வாஷிங் மெஷினில் போடுவது, பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் போடுவது என்று கடுப்பேற்றும் காட்சிகள். என்ன எதிர்மறையான சிந்தனை? இதை விட மஹா மட்டமான விளம்பரம் இருக்கமுடியாது.

அடுத்த கேவலமான விளம்பரம், கனவன் இல்லாத போது கள்ள காதலன் வந்துவிடுகிறான். திடீரென கனவனும் வந்து விடுகிறான். கள்ள காதலன் வி.ஐ.பி. ஸ்ட்ராலி பேக் விற்பனையாளன் மாதிரி நடித்து கொண்டே ஜன்னல் வழியாக தப்பித்து ஓடிவிடுகிறேன். இந்த மாதிரி விளப்பரம் எடுத்தவர்களை கழுவில் ஏற்றினால் என்ன?

கேவலமான இரண்டு விளம்பரங்களை பற்றி சொல்லிவிட்டு நல்ல விளம்பரங்களை சொல்லாமல் விட்டால் எப்படி? காட்பரி சாக்லெட்டின் இனியதொரு ஆரம்பம் என்ற தலைப்பில் சில மாதங்கள் முன்னால் வந்த விளம்பரம் நான் சொல்லப்போவது. ஒரு பெண் வீட்டை விட்டு ஓடிப்போக தன் காதலன் காரில் கனத்த சோகத்துடன் அமர்ந்து, "ம்... போ" என்கிறாள். அதற்கு முன்னால் பின்னால் இருப்பவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு போகலாமே என்று சொல்லி கார் லைட்டை போடுகிறான் காதலன். பின்னால் அவள் அப்பா, அம்மா, சகோதரன். அப்பா, "போகிறதுதான் போகிறாய், ஒரு இனிய ஆரம்பத்துடன் தொடங்கு என்று காட்பரி சாக்லெட்டை நீட்டுகிறாள். அப்போது அந்த பெண் காட்டும் முக உணர்ச்சிகள் பிரமாதம். கொஞ்சம் அதிர்ச்சி. அதிர்ச்சியை தொடர்ந்து மகிழ்ச்சி. அதை விட அந்த சகோதரன், ஓகே. ஓகே. பரவாயில்லை, சாக்லெட் சாப்பிடு என்று சைகை காட்டுவதும் பிரமாதம். மொத்தத்தில் அந்த விளம்பரம் ஒரு உணர்ச்சி குவியல். இன்னும் ஒரு ரசனையான விஷயம், அந்த பெண் வீட்டை விட்டு வரும் போது தனது டெட்டி கரடியை எடுத்துக் கொண்டு கடைசியாக தன் குடும்ப போட்டோவை பார்த்துவிட்டு வருவாள். அதன் பிறகு அந்த தீமில் வந்த எந்த விளம்பரங்களும் மனசில் நிற்கவில்லை.·

Wednesday, 2 May, 2012

எல்லாரும் திருந்திட்டாங்களாம்!!!!!

 கொஞ்ச நேரத்துக்கு முன்னால் என் நண்பன் ஒரு ஈமெயில் தட்டியிருந்தான். அதை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். "மாமு, மேட்டர் கேள்வி பட்டியா? இல்லேன்னா, எல்லா நியூஸ் சேனலையும் பாரு. பார்லிமென்ட்ல எல்லா எம்.பி.க்களும் ஒன்னா ஒரு தீர்மாணம் போட்டிருக்காங்களாம். இனிமே ஊழலே நடக்காமா பார்த்திக்குவோம். ஊழல் ஆசாமிங்க யாரா இருந்தாலும் இன்னும் இரண்டே வாரத்திலே அவிங்களை கோர்ட்ல நிறுத்துவோம்னு தீர்மானமே போட்டுட்டாங்க. அதுவும் பாஸ் ஆயிடுச்சு. இப்ப ராஜ்ய சபாவில மேட்டர் ஓடிக்கிட்டு இருக்கு. ஒடனே சுறுசுறுப்பான நம்ம பிரதமர், யார் யார் வெளிநாட்ல துட்டு வைச்சிருக்காங்களோ அவிங்க இன்னும் ரெண்டே வாரத்துல புட்டு புட்டு வைச்சிட்டா தப்பிப்பாங்க. இல்லேன்னா, கம்பி என்ன வேண்டியதுதான்னு அறிவிச்சிட்டாராம். இது மட்டுமா? இன்னும் என்னன்னவோ ஆயிகிட்டு இருக்குது. எல்லா ஸ்டேட்டுலேயும் இதே மாதிரி எம்.எல்.ஏக்களும் தீர்மானம் போடப் போறாங்களாம். ஊழல் இல்லென்னா, லஞ்சத்துக்கு எங்கே வேலை? அதனால நாங்க லஞ்சத்தை ஒட்டு மொத்தமா ஒழிப்போம். அப்படியும் லஞ்சம் வாங்குறவங்களை புடுச்சு கொடுப்போம்னு ஒவ்வொரு அதிகாரிகள் யூனியனும் பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்காங்க. என்னால நம்பவே முடியலைடா. பார்த்து மெர்சலாயிட்டேன்" இப்படி ஒரு மெயில் வந்தால் தலை கிறுகிறுக்காது. நானும் முட்டாள் மாதிரி எல்லா சேனலையும் பார்த்தேன். ஒன்னும் அந்த மாதிரி இல்லை. மீண்டும் இன்பாக்ஸை திறந்தால், " மாமு. நேத்து சங்கர் படம் பார்த்தேன். அடுத்தாப்பல ஏதோ படம் எடுக்க ரூம் போட்டு யோசிக்கிறாங்களாம். சரி, என்னால ரூமெல்லாம் போடமுடியாது. அதனால மோட்டு வளையை பார்த்துக்கிட்டே யோசிச்சேன். அதான் மேட்டரு". டாஸ்மாக் சரக்கு அடிச்சிட்டு கவுத்து கெடக்கறனுங்க, எதுக்கு சங்கர் படம் பார்க்கனும்? அது சரி, மே 1ம் தேதி எப்படி சரக்கு கெடைக்கும்? இது ஒரு மேட்டரா? அட போய்யா!

Thursday, 26 April, 2012

சுஜாதா

திரு சுஜாதா அவர்களை முதன் முதலாக ஏதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. 1997 என நினைக்கிறேன். எங்கள் நாடகத்தை பார்க்க வந்திருந்தார். கொஞ்சம் கூட தயங்காமல், கிடைத்த அரிய சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு, வார இதழ்கள் மீது எனக்குள்ள கோபத்தை கொட்டினேன். அப்போது அவர் ஒரு சில டிப்ஸ் கொடுத்தார். அது எனக்கு வேதமாகவே தோன்றியது.

"நடராஜன், ஒரு பத்திரிக்கை உங்கள் கதையை திருப்பியனுப்பிவிட்டால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் என்ன மாதிரி எதிர்பார்க்கிறார்கள் என்பதை நுட்பமாக கவனியுங்கள். அதற்கு ஏற்றமாதிரி உங்கள் கதைகளை அமையுங்கள். சோம்பல் படாமல் அடித்து, திருத்தி, மாற்றியமையுங்கள். உங்கள் சிந்தனை முற்றிலும் புதிய கோணத்தில், வித்தியாசமான களன்களில் இருந்தால் நல்லது. பளிச்சென்று தொடங்குங்கள். தொய்வில்லாமல் விறுவிறுவென சொல்லுங்கள். முடிவை வாசகன் நெருங்கும் போது 'அட' என்று அவன் வியக்கும்படி செய்ய வேண்டும். அதுதான் உங்கள் வெற்றி" என்றார். அதன் பிறகுதான் என் பல சிறுகதைகள் பிரசுரம் ஆயின.

சிறுகதையில் ஒரு வாக்கியத்தை உருவினால் அந்த சிறுகதையே சரிந்து விடும் என்ற அளவுக்கு வார்த்தை சிக்கனம் வேண்டும் என்றார். 


சுஜாதாவின் ஆரம்ப கால கதைகளில் நீரஜா என்ற கதாபாத்திரம் வரும். என் இரண்டாவது பெண்ணின் பெயர் நீரஜா.

ஊடகங்களின் உள்குத்து - அட்சயதிருதியை

அட்சயதிருதியை நகை வியாபாரம் ஒரு கூட்டு கொள்ளை. நகை வியாபாரிகள் தங்கள் கொள்ளையை அரங்கேற்ற வேண்டுமென்றால் ஊடகங்களின் துனை தேவை. ஊடகங்களுக்கும் விளம்பரம் கிடைப்பதால் அவர்களும் அந்த கொள்ளையில் பங்கு கொள்கிறார்கள். எல்லா அச்சு ஊடகங்களும், அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று ஐதீகம் என்ற பொய் பல்லவியை வைத்து ஸ்பெஷல் பக்கங்கள் போட்டிருக்கின்றன. ஐபிஎல் வியாபாரம் நடக்கும் போது அட்சய திருதியை வியாபாரம் எம்மாத்திரம். மூட மக்கள் இருக்கும் வரை கொள்ளையர்கள் கொள்ளையடிப்பார்கள்.

அட்சயதிருதியை என்ற ஒரு தர்ம சிந்தனையை ஒரு வியாபார உக்தியான அவலத்தை நான் ஒரு பத்தியாக எழுதியதற்கு, என் அருமை நண்பர் மக்களை 'இடியட்' என்று எப்படி சொல்லலாம் என்று கோபித்துக்கொண்டார். இடியட் என்பவன் யார்? யார் சொல்பேச்சை அப்படியே கேட்டு, மூளைக்கு கொண்டு பொய் அலசி ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொள்பவன்தான் மூடன். ஆங்கிலத்தில் இடியட். இன்று அட்சயதிருதியை விஷயத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மூளை சலவை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. என் விவசாய நண்பர் இன்று என் வீட்டுக்கு மதியம் வந்தார். பிடித்த மழை விடவில்லை. ஆனால் அவர் நிம்மதியற்று பொறுமையிழந்து கொண்டிருந்தார். என்னவென்று கேட்டேன். "இன்று அட்சய்திருதியை, பாங்கில் போய் இரண்டு தங்க காசு அவசியம் வாங்க வேண்டும். ஆர்டர் செய்திருக்கிறேன், வீட்டம்மா உத்திரவு" என்றார். நான் அவருக்கு பால பாடம் எடுத்தேன். ஆனால் அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. "தங்கம் வாங்கனும், அப்படி செஞ்சாத்தான் குடும்பம் செழிக்கும்னு எல்லாரும் சொல்றாங்க" என்றார். இன்றைக்கு லட்சக்கணக்கான மக்களை அவர்களுக்கே தெரியாமல் இடியெட்டுக்களாக ஆக்கியிருக்கிறார்கள். கோபலவல்லிதாசர் அருமையான ஒரு விஷயத்தை எடுத்துரைத்தார். பிரிடிஷ் வருவதற்க்கு முன்னால் உணவு விற்பது ஒரு பாபகரமான செயலாக இருந்தது. கிடைக்கும் ஐஸ்வர்யத்தில் ஒரு பகுதியை உணவாக மக்களுக்கு கொடுப்பது சத்ரிய மற்றும் வைசிய தர்மமாக இருந்தது. காலப்போக்கில் ஒரு தர்ம சிந்தனையே ஒரு வைசிய தொழிலாக ஆகிவிட்டது

கோபல வல்லிதாசரும் அட்சய திருதியையும்

எனக்கு தூத்துக்குடிக்கு மாறுதல் கிடைத்தபோது, நான் அவ்வளவாக மகிழ்ச்சியடையவில்லை. நான் எதிரிபார்த்தது, பெரம்பலூர் அல்லது கடலூர். ஆனால் எனக்கு வாய்த்தது தூத்துக்குடி. ஆனால் வந்து பிறகுதான் நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறேன் என்று புரிந்தது. கடந்து போயிருக்கும் இந்த மூன்று ஆண்டுகளும் என் வாழ்நாளில் மிக மிக மிக மகிழ்ச்சியான நாட்கள். நான் சமுதாய பணிகளில் என்னென்ன செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினேனோ அனைத்தையும் பார்த்துவிட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் அடிக்கடி சந்திக்கும் மக்கள் வெள்ளந்தியான அருமையான மக்கள். எனக்கே உரித்தான தனித்துவமான முயற்சிகளை செய்து வருகிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் மிகவும் திருப்தியோடு இந்த ஊரைவிட்டு செல்வேன் என நினைக்கிறேன். 

அடுத்தபடியாக இந்த ஊரில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள் மனதிற்கு நிறைவாக இருக்கின்றன. கோபால வல்லிதாசர் என்ற ஒரு வைஷ்னவ ஆன்மீக இளைஞர். மிக அருமையாக பக்தி சொற்பொழிவு நிகழ்த்துகிறார். சுகி சிவம் ஒரு ரசனை என்றால் இவரது பேச்சு இன்னொரு தனி சுவை. இந்த மூன்று வருடங்களில் அவரது தொடர் சொற்பொழிவுகளில் ஐந்து ஆறு கேட்டிருக்கிறேன். அத்தனையும் முத்துக்கள், வைரங்கள்...... கடந்த ஐந்து நாட்களாக ராமானுஜ வைபவம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இன்று அட்சய திருதியை. சச்சின் 200 அடித்தபோது என்ன வேகம் இருந்ததோ, நான் எவ்வளவு ஆனந்தப்பட்டேனோ, அந்த மாதிரி இன்று நான் பரவசப்பட்டேன்.

அட்சயதிருதியை ஏன் அவ்வளவு அதி முக்கியமானது. கோபால வல்லிதாசர் கூறுகிறார். அன்றுதான் பரசுராமர் பிறந்தார். அதாவது கொட்டம் அடிக்கும் சத்திரியர்களை நல்முறை படுத்த எடுத்த ஒரு எழுச்சி. திரேதா யுகம் தொடங்கிய நாள். அதாவது எல்லா மக்களும் நன்மக்களாக வாழ்ந்த ஒரு காலம். சுதாமன் கொடுத்த ஒரு பிடி அவலை கண்ணன் உண்டு களித்த நாள். அதாவது தரித்திரம் பிடித்தவன் ஒரு எளிய தானம் செய்ய, அதற்கு ஆண்டவன் கருனை காட்ட, அவன் குடும்பத்திற்க்கு ஐஸ்வர்யம் வந்த நாள். தன்னிடம் இருக்கும் ஒரு சிறு தனத்தை கொடுக்கும் போது குபேரன் நம் வீட்டில் குடிபுகிறான். 

எனவே தங்கம் வாங்குவது ஒரு சுயநலம். இந்நாளுக்கு எதிரான ஒரு ஆகாத செயல். அதாவது ஒரு கோயிலில் போய் அப்பிரதட்சினமாக சுற்றுவது எவ்வளவு ஆகாத செயலோ அந்த மாதிரி. தந்தையின் பிணம் கிடக்கும் போது ஆடிப்பாடி மகிழ்வது மாதிரி (இது என் சொந்த சரக்கு). தர்மம் செய்து ஐஸ்வர்யத்தை பெருக்குவதுதான் அட்சயதிருதியை. தர்மம்தான் பிரதானம். கிடைக்கும் ஐஸ்வர்யம் அவன் கொடுப்பது. எனவே தங்கம் வாங்கி வீட்டில் வைப்பது, சனாதன தர்மத்திற்கு எதிரானது. 

ஒரு வேளை தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று தோண்றிவிட்டால், ஒரு திருமணம் ஆகாத ஒரு ஏழை பெண்ணை (உங்கள் உறவினராகக் கூட இருக்கலாம்) கூடவே அழைத்து போய் அவர்களுக்கு தானமாக கொடுங்கள். இது அதி விஷேஷம். அந்த ஏழைப் பெண், என் பெண்தான் என்று ஜல்லியடிக்காதீர்கள் (இதுவும் என் சரக்கே). சரி போகட்டும், வாங்கியது வாங்கியாகிவிட்டது. கூடிய சீக்கிரம் ஒரு தர்ம காரியத்தை நிறைவேற்றி, செய்த ஆகாத காரியத்திற்கு பரிகாரம் செய்து விடுங்கள். அடுத்த வருடம் தங்கம் வாங்காதீர்கள். தர்ம காரியம் செய்து, ஒரு நல்ல காரியத்தை தொடங்குங்கள். இந்த பதிவை எவ்வளவு மக்களுக்கு பார்வேர்ட் செய்ய முடியுமோ அவ்வளவு செய்யுங்கள். எந்த ஒரு பத்திரிக்கையும் இதை செய்ய முன் வராது. காரணம், அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரம் போய்விடும். சோஷியல் நெட்வொர்க்தான் செய்யமுடிய்ம். ப்ளீஸ்.....

டிரைவிங் லைசன்ஸ் வாங்கலையோ?

இன்று காலையில் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு போனேன். எனக்கு 50 வயது ஆகிவிட்ட காரணத்தால் தற்போதைய ஓட்டுனர் உரிமம் காலவதியாகிவிட்டது. புரோக்கர்கள் இல்லாமல் நேரடியாக புதுப்பிக்கும் உரிமம் பெறுவது என்ற முடிவோடு போனேன். தேவையான பாரம்ங்களை நெட்டிலிருந்து டவுண்லோடு செய்து கொண்டேன். அதன் படி நேற்று இரவு கால்கடுக்க ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டரிடம் சர்டிபிகேட் வாங்க காத்திருந்து வாங்கினேன். தெரியாத்தனமாக எனது பெயரையும், எனது மச்ச விவரங்களையும் நானே எழுதிவிட்டேன். அதை பார்த்ததும் டாக்டர் பொங்கிவிட்டார். அந்த பார்ம் முழுவதும் அவர்தான் நிரப்ப வேண்டுமாம். தவிர மா.வ.போ.அலுவலகத்துக்கு வெளியே விற்க்கும் பார்ம்தான் சரி, டவுண்லோடு பார்ம் சரியில்லை என்று மீண்டும் அனல் கக்கினார். ராஜேந்திரகுமார் கதையில் வரும் கதாபாத்திரம் மாதிரி 'ஞே' என்று விழித்தேன். ஏதோ கருனை செய்து கையெழுத்து போட்டு, ஐம்பது வாங்கிக் கொண்டார். நாளை எப்படி நடக்கப் போகிறதோ என்று வயிற்றை கலக்கியது.

மா.வ.போ.அலுவலகம் போனதும் யாரை கேட்பது என்று தெரியவில்லை. என்னுடன் வந்த நண்பருக்கு தெரிந்த ஒரு க்ளார்க் பெண்மணியை கேட்டோம். 'எல்காட் பார்ம் எங்கே?' என்றார். அப்படியா? அது என்ன? என்றோம். பின்பக்கம் போய் எல்காட் பார்ம் வாங்கி வாருங்கள் என்றார். ஒரு ரூபாய்தான். அதில் அனைத்து விவரங்களும், அவர்களே நிரப்ப வேண்டும் என்று எழுதியிருந்தது. சரி என்று ஒன்றும் எழுதாமல் போனேன். 'ம். பார்மை நிரப்புங்கள்' என்றார். அப்ப அந்த டாக்டர் சொன்னது? அது டாக்டரோடு போச்சு. கடகடவென்று எழுதினேன். எல்காட் ரூமுக்கு போங்கள் என்றார்.

எல்காட் ரூமில் போனால் வழியெல்லாம் ப்ரோக்கர்கள். எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. எல்காட் ஆசாமி, என் பழைய ஓட்டுனர் உரிமத்தை அப்படியும் இப்படியுமாக பார்த்தார். :இது சென்னை எடுத்தது. தூத்துக்குடியில் செல்லாது. எனவே, சென்னையிலிருந்து தடையில்லா சான்று வாங்கி வாங்க' என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். "வேறு வழியே இல்லையா?" என்று மறுபடியும் 'ஞே' என்று விழித்தேன். அப்போது என்னையே அறியாமல் ஒரு மாஜிக் செய்திருந்தேன். எனது விசிடிங்க் கார்டை முன்னால் இனைத்திருந்தேன். அவருக்கு நபார்டு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மன்மோகன் சிங்கே வந்து மா.வ.போ.அலுவலகத்தில். ஏதாவது கேட்டாலும் அவருடைய பதவி பவிஷூ எடுபடாது, நாம் எந்த மூலை என்று நினைத்திருந்தேன். 'வேண்டுமானால் ஆர்.டி.ஓவை பாருங்கள்' என்று எனது அனைத்து காகிதங்களையும் என்னிடம் திருப்பி கொடுத்துவிட்டார்.

ஆ.டி.ஓ. காபினுக்கு போய் எனது விசிடிங் கார்டை நீட்டினேன். என்ன அதிசயம்! அவர் இன்முகம் காட்டி என்னை உட்காரச் சொல்லி, விசாரித்தார். சென்னை மேட்டருக்கு ஒரு அபிடவிட் கொடுக்கச் சொன்னார். பெல் அடித்து பியூனை வரவழைத்து ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி வரச் சொன்னார். வந்ததும் அபிடவிட்டை எழுதி கொடுத்தேன். பணம் நான் கொடுக்க பியூன் போய் கட்டி வந்தார். நேராக எல்காட் ரூமுக்கு போய் போட்டோ எடுத்துக் கொண்டேன். அரை மணி நேரத்தில் எனக்கு புதுப்பிக்கப்பட்ட லைசன்ஸ் கிடைத்து விட்டது.
 
 இரண்டு விஷயங்கள் நிரூபணம் ஆனது.
 
1. நபார்டின் விசிடிங் கார்டுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. 
 
2. மா.வ.போ.அலுவகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.·

Monday, 23 April, 2012

சிறுகதை எழுதலாம் வாங்க

முதலில் ஒன்றை தெளிவு படுத்திவிடுகிறேன். தயவு செய்து நான் சொல்லுவதுதான் சிறுகதையின் இலக்கணம் என்று எண்ணிவிட வேண்டாம். எனது அனுபவத்தில்,  என்னை செம்மைப்படுத்திக் கொள்ள, நான் முட்டி மோதி அறிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. ஒரு சிலருக்காவது இவை பயண்பட்டால் அது என் பாக்கியமே.

எது நல்ல சிறுகதை என்று யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியாது. அதனால்தான் என்னவோ, முதல் பரிசு பெற்ற சிறுகதை நமக்கு சாதாரணமாக தெரியலாம். ஆறுதல் பரிசு பெற்ற கதை முதல் பரிசுக்கு உரியதாக இருக்கலாம். அதே மாதிரி சிறுகதையின் எல்லைகளை யாராலும் தீர்மாணிக்க இயலாது. ஆனால் ஒன்று. ஒரு சிறுகதை, நம் உள் வட்ட நண்பர்களை, உறவினர்களை தாண்டி, ஒரு சிலரையேனும் திருப்தி படுத்திவிட்டது என்றால் அது நமக்கு வெற்றியே. அந்த பெருவாரியான ரசிப்புத்தன்மையை நோக்கியே ஒரு ஆரம்ப எழுத்தாளன் இயங்க வேண்டும்.

1. சிறுகதை என்பது ஒரு சிறு நிகழ்வு. எனவே இதில் நாம் எடுத்துக் கொள்வது ஒரு சிறிய சம்பவமாக இருக்கட்டும். அதை மையமாக வைத்து முன்னே பிளாஷ்பேக் சேர்த்து, பின் பகுதியில் முடிவைச் சொல்லி கதை செய்யலாம். மாதங்கள், வருடங்கள் என்றெல்லாம் உருட்டுவது ஆரம்ப எழுத்தாளர்கள் தவிர்க வேண்டியவை ஆகும்.

2. கதைக்கு தொடக்க வார்த்தைகள் மிக மிக அவசியம். இவைகள்தான் வாசகர்களை படிக்க தூண்டுபவை. எனவே நேரடியாக கதைக்கு சம்பந்தமான விஷயங்களை கொண்டுவந்துவிடுதல் நல்லது. 'ஒரு நல்ல தொடக்கம், பாதி முடிவை எட்டும்' என்று ஒரு பேச்சு இருக்கிறது. இன்றைய உலகம் அவசர உலகம். கதையை படிப்பதற்கு முன்னால் எவ்வளவு பக்கம் என்று பார்க்கும் மனப்பாண்மை கொண்டது. எனவே குழப்பமில்லாமல், ஜெட் வேகத்தில் சுறு சுறுவென தொடங்கும் கதை நிச்சயம் படிக்கப்படும். இன்னும் சொல்லப்போனால் தலைப்பே மிக சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.  கதையின் தலைப்பை படித்து, அதனால் ஈக்கப்பட்டு கதையை படிக்கப் போகிற வாசகர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

3. சிறுகதையில் எந்தவித தேவையில்லாத வார்த்தைகளும் இருக்கக் கூடாது. இந்த ஒரு வரியை எடுத்துவிடுவதால் அந்த கதை விழுந்துவிடும் என்ற அளவுக்கு வார்த்தை சிக்கனம் வேண்டும். கதையை எழுதியவுடன் ஒரு வேற்று மனிதனாக இருந்து தானே படிக்கும் போது அதிகப்படியானவை பளிச்சென்று தெரிந்துவிடும்.

4. கதை சொல்லும் வார்த்தைகளில் ஒரு ரசிப்புத் தன்மை இருக்க வேண்டும். அந்த வார்த்தைகளை படிக்கும் வாசகனை அது எந்த விதத்திலாவது பாதிக்க வேண்டும். வார்த்தைகளில் உள்ள ஜாலம்தான் உங்களுக்கு ஒரு முத்திரையை அளிக்கிறது. எனவே மேம்போக்காக எழுதாமல், ஒரு சிற்பக் கலைஞன் சிற்பி மாதிரி வார்த்தைகளை கையாள வேண்டும்.

5. நடுநடுவே வரும் வசனங்கள் பளிச் பளிச் என்று ஆணித்தரமாக இருக்க வேண்டும். அது கதையின் ஓட்டத்தை தீர்மாணிப்பதாக இருக்க வேண்டும். வெட்டியாக வரும் வசனங்கள் வாசகனை வெறுப்பேற்றும்.

6. முடிவு நெத்தியடியாக இருக்க வேண்டும். அந்த வரியை படித்ததும், வாசகன் 'அட' என்று வியக்க வேண்டும். அவன் திருப்தியுடன் ஒரு புன்னகை செய்தால் அது உங்களுடைய வெற்றி.

7. கதை எழுதுவதற்கு முன்னால் அதை பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொன்றிலும் என்ன சொல்லப் போகிறோம், அவைகள் சீராக இருக்கின்றனவா என்று மனசுக்குள் ஒரு காட்சி மாதிரி ஓடவிட்டு பார்த்துவிட்டு எழுத உட்கார்ந்தால் நல்லது.

8. ஒரு கதைக்கான கரு கிடைத்துவிட்டால், அதை மனசுக்குள் கொஞ்ச நாட்கள் உருட்டிக் கொண்டே இருங்கள். அது சம்பந்தமாக விவரங்கள், விவரனைகள், தர்க வாதங்கள், உங்களின் அனுமானங்கள் ஆகியனவற்றை அலசி செம்மை படுத்த வேண்டும்.

9. இன்றைய பத்திரிக்கை உலகில் சிறுகதைகள் என்பது A4 சைஸ் பேப்பரில் எழுத்துரு 10ல் இரண்டரை பக்கங்களுக்கு மிக கூடாது. புதிய எழுத்தாளர்கள், தங்களின் கையெழுத்து மிக தெளிவாக இருந்தால் மட்டுமே, கையிலால் எழுதி அனுப்பலாம். கொஞ்சம் மோசமான கையெழுத்து கொண்டவர்கள் கம்ப்யூட்டரில் அடித்து அனுப்புவது நல்லது. தற்போதைய சூழலில் பொறுமையாக படிக்க ஆளில்லை.

10. கதைக்கான களம் மிகவும் வித்தியானமானதாக இருந்தால் மிக நல்லது. மண்வாசனை கொண்ட கதைகளுக்கு என்றுமே மரியாதை உண்டு. அதற்காக வாசகர்களை ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது. புதிய கோணத்தில் கதை சொல்லுவது ஜெயிக்கும் குதிரையில் பணம் கட்டுவது மாதிரி.

11. முதலில் உங்கள் கதை ஒரு பத்திரிக்கையால் நிராகரிப்பட்டால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள். வளரும் எழுத்தாளருக்கு எதிர்மறை விமர்சனங்களை பண்புடன் எற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். ஏன் இந்தக் கதை அவர்களை திருப்தி படுத்தவில்லை? என்ற கேள்வி போட்டு ஆராயுங்கள். அந்த பத்திரிக்கையில் வரும் கதைகளின் போக்கை கவனியுங்கள். அவர்களின் மன ஓட்டம் புரியும். அதற்கு ஒத்துப்போக முடிந்தால் நல்லது. இல்லையேல் அதை விட்டுவிட்டு வேறு பத்திரிக்கையை பாருங்கள்.

12. ஒரு கதை நிராகரிப்பட்டததும், அதை மாற்றி எழுத சோம்பல் படவே கூடாது. வளர்ந்து வரும் எழுத்தாளர்களை கேட்டுப் பாருங்கள். அவர்களது பல சிறுகதைகள், மாற்றி எழுதப்பட்டு, வேறு பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கும்.

13. கதை எழுதுவதற்கு மிக அடித்தளமாக இருப்பது அப்ஸர்வேஷன். நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை உண்ணிப்பாக கவனியுங்கள். ஒரு குடிகாரனை பற்றி எழுதினீர்களானால், அவன் இயல்பை ரசிப்புத்தன்மையோடு எழுதுங்கள். வண்ணதாசன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் எழுத்துக்களை படியுங்கள். அவர்கள் எப்படி எழுத்துக்களை நகர்த்துகிறார்கள் என்பது புரியும். கதை படிக்கும் போது எழுத்துக்கள், ஆடி வரும் தேர் மாதிரி மனசை கொள்ளை கொள்ள வேண்டும்.

14. கதையில் ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது டெக்னிகலான விஷயங்கள் பற்றியோ எழுதப்போகிறீர்கள் என்றால் அதை பற்றி விலாவாரியாக படியுங்கள். அதன் பிறகு எழுதினால், அதன் உண்மைத்தண்மை வாசகர்களை ஈர்க்கும். வாசகனின் தேடுதல் வேட்க்கையை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்.

15. கூடுமானவரை உங்களது அனுபவங்களை, நீங்கள் பார்த்ததை, எழுத்தில் கொண்டுவாருங்கள். அதை அப்படியே நேரடியாக எழுதாமல் உங்கள் கற்பனையை ஓடவிட்டு, ஒட்டு சேருங்கள். ஆண் சம்பந்தப்பட்டதை பெண் ஆக்குங்கள். ஒரிஜினல் சித்தப்பாவை கதையில் மாமாவாக்குங்கள். அவர்கள் கதையை அப்படியே எழுதினால் பல பிரச்சனைகள் பின்னால் எழலாம். தவிர, உங்களது தனித்தன்மை அடிப்பட்டு போய்விடும்.

16. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. ஒரு சில பத்திரிக்கைகள் கொஞ்சம் விலங்கமான/லைட்டான கதைகள் எதிர்பார்க்கும். ஆனால் அதுவே மற்ற பத்திரிக்கையில் எடுபடாது. பெண்கள் பத்திரிக்கையில் குடும்ப பிரச்சனைகளை அலசும் கதைகள் வரவேற்கப்படும். ஒரு பக்க கதையென்றால் 70 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் கதைக்கான படம் மற்றும் லே- அவுட்டை டிசைனை கணக்கில் கொண்டு பத்திரிக்கையின் ஒரு பக்கத்தில்  கொண்டுவர முடியும்.  பத்திரிக்கையின் எடிடோரியல் செய்ய வேண்டிய எடிடிங் வேலையை நீங்கள் குறையுங்கள்.

17. கதையை எழுதி முடித்தவுடன், உங்கள் நண்பர் குழுவில் எந்தவித சங்கோஜமும் இல்லாமல் நேரடியாக விமர்சனம் செய்யும் ஒருவரிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். ஒரு வாசகனாக அவருக்கு வரும் சந்தேகங்களை குறித்துக் கொண்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.

18. ஒரு கதைக்கான கரு நேரடியாக கிடைக்காது. ஒரு நிகழ்வின் தாக்கம்தான் ஒரு கதைக்கான கருவாக இருக்கமுடியும். சிக்னலில் ஸ்கூட்டரின் பின் சீட்டில் அம்மாவின் தோளில் தலை தொங்கி தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை பார்க்கிறீர்கள். இதில் ஒரு கதைக்கான கரு உங்களுக்கு தோன்றலாம். எனக்கு அது மாதிரி ஒரு கரு தோண்றி, அதை கதையாகி குங்குமத்தில் வெளி வந்தது. ராஜேஷ்குமாரின் நிறைய க்ரைம் கதைகளுக்கு அவர் தினம் படிக்கும் செய்தித்தாள்களே அதிகம் உதவுவதாக ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

19. எழுத எழுததான் வார்த்தைகள் வசப்படும். எனவே நிறைய எழுதுங்கள். அதற்காக நிறைய படியுங்கள். வார்த்தைகளை கொட்டித்தள்ளாமல் அம்மா கைமுறுக்கு சுற்றுவது மாதிரி நிதானமாக கையாளுங்கள். ஒரு அரை மணிநேர கச்சேரிக்கு பின்னால் ஒரு நூறு மணிநேர உழைப்பு இருக்கும். எனவே பலமுறை அடித்து திருத்தி மாற்றியமைத்து உங்கள் மனசுக்கு திருப்தியாகும் வரை முயற்சி செய்யுங்கள்.

20.ஒரு கதையின் நீளத்தை அந்த கதைதான் தீர்மானிக்க வேண்டும். ஒரு பக்க கதைக்கான விஷயத்தை வைத்துக் கொண்டு டி.வி.சீரியல் மாதிரி மூன்று பக்கங்களுக்கு இழுக்காதீர்கள்.  உங்களை மிகவும் கவர்ந்த ஒரு சில வார்த்தைகள், பாராக்கள், நீங்கள் கதையில் சேர்த்திருப்பீர்கள். அது கதையின் போக்குக்கு அதிகப்படியாக இருக்குமானால், யோசிக்காமல் வெட்டித்தள்ளுங்கள்.

என்ன, சரிதானே. புறப்படுங்கள்.

Sunday, 22 April, 2012

அட்சய திருதியை

நாளைக்கு அட்சய திருதியை. தயவு செய்து யாரும் தங்கம் வாங்கி சொத்து சேர்க்காதீர்கள். பீடைதான் பிடிக்கும். முடிந்தால் யாருக்காவது தானம் செய்யுங்கள். நம் தர்மத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அரை பவுனாவது தங்கம் வாங்குவேன் என்று அடம் பிடித்தால் அதை வாங்கி ஒரு ஏழைக்கு தானம் செய்துவிடுங்கள். நான் எழுதி தருகிறேன். உங்கள் குடும்பதிற்கு நல்லது நிச்சயம் நடக்கும்.

ஜெயமோகன்

இன்று கூந்தல் என்ற ஜெயமோகனின் சிறுகதை ஒன்றை படித்தேன். அடுத்த கதையை என்னால் படிக்க முடியவில்லை. என்னமாய் எழுதியிருக்கிறார்! கூந்தலை விரும்பும் ஒரு பெண் விதவை. ஆனால் சமூகம் அவளுக்கு கூந்தலை வைத்துக் கொள்ளும் உரிமையை மறுக்கிறது. அவள் தூங்கும் போது தன் மண்டைக்குள் கூந்தல் வளர்வதை உணர்கிறாள். மயிர் மழிக்கப்படும் போது துடித்துப் போகிறாள். ஆனால் அவளுடைய கொள்ளு பேத்திக்கு கூந்தலே சுமையாய் இருக்கிறது. கூந்தலை வெட்டி எறிய வேண்டும் என்று நினைக்கிறாள். வெட்டினால் டைவர்ஸ் என்கிறான் கனவன். வேதனையில் அவளே கத்திரிக்கோலை எடுத்து சிரமப்பட்டு தன் முடியை வெட்டி ஒரு பைக்குள் போடுகிறாள். ஜெயமோகன், ஒரு நல்ல படைப்பை கொடுத்தமைக்கு நன்றி. டெயில் பீஸ். இந்த கதை குமுதத்தில் வந்தது. ம்... என்ன கொடுமைடா சாமி!

கொலை வெறி சொல்லும் பாடம்

தனுஷ் அந்த வொய் திஸ் கொலைவெறி பாடலை பாடினாலும் பாடினார். அது மொழி கடந்து, இனம் கடந்து, தேசம் கடந்து போனது. ஓபாமாவும் மன்மோகன் சிங்கும் அந்த பாடலுக்கு கட்டிபிடித்து டான்ஸ் ஆடவில்லை அவ்வளவுதான். 3 படத்தின் எதிர்பார்ப்பு ஒரே நாளில் எண்ணமுடியாத உச்சத்தை தொட்டது.

படம் வெளியாகியது. உச்சாதான் போனது. தனுஷ் தலைமறைவு. ரஜினி எனக்கும் 3 படத்தின் விற்பனைக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வெளியிடுகிறார்.

ஏன் இந்த கொலைவெறி?

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தமிழ் சினிமாவில் இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. ஒன்று படம் எடுத்தல். இன்னொன்று படத்தை வியாபாரம் செய்தல்.

எந்த ஒரு பொருளை உற்பத்தி செய்தாலும் அது சந்தையை சார்ந்துதான் அதன் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான் சந்தையை பற்றி ஆய்வு செய்ய பெரிய பெரிய கம்பனிகள் ஒரு பிரயேக டீமை வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து சந்தையை கண்கானிக்கிறார்கள். அதற்கு ஏற்றால் போல மாற்றங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது? ஒரு சினிமாவின் கதை இரண்டு மூன்று மாதங்களில் முடிவாகி விடுகிறது. தயாரிப்பாளருக்கு அந்த கதையின் வலு சந்தையில் எப்படி நிற்க்கும் என்ற தகவல் கூட கொடுப்பதில்லை. அப்படி அவர் கேட்டுவிட்டால் அது இயக்குனரின் ஈகோவை பாதிக்கிறது. கடைசியில் பார்த்தால் அந்த படத்தின் கதை அரைத்த மாவாகவே இருந்துவிடுகிறது. கதைதான் வியாபாரத்தின் உந்து சக்தி. ஆனால் இவர்கள் படத்தின் பிரபலங்களை வைத்து வியாபாரம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஒரு கொலை வெறி பாடல் எப்படி ஒரு படத்தின் வெற்றியை தீர்மாணிக்க முடியும்? ரஜினியின் மகள் எடுக்கும் படம் என்றால் குப்பை கூட தங்கம் ஆகிவிட முடியுமா? நம் இயக்குனர்கள் காதலை தாண்டி வேறு கதைகள் சொல்ல முயற்சிப்பதே இல்லை.

ஷாருக்கான் தான் அமெரிக்காவில் பட்ட அவமானங்களை வைத்து மை நேம் இஸ் கான் என்ற படம் எடுத்தார். அந்த கதையின் வீரியத்தை பாருங்கள்!

நம் தமிழ் சினிமாவின் இன்னொரு சாபம், பிரபலங்களின் படங்களுக்கு தனியாக கதை என்று ஓன்று வேண்டாம் என்பது தான். விஜய் நடித்த பத்து படங்களை எடுத்தால் அதில் ஏழு படங்கள் ஓரே மாதிரி இருக்கும். இந்த கோபக்கார இளைஞன், தெரு பொறுக்கி ஹீரோ என்பதை தாண்டி என்றைக்கு இந்த இயக்குனர்கள் யோசிக்க தொடங்குவார்கள்?  சூர்யா கூட தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஆறு மாதிரியான பொறுக்கி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாகிவிட்டது. ஆக, ஒரு ஹீரோவுக்கு அறிமுகம் லவர் பாய்யாக கிடைக்கிறது. அதை தாண்டி மாஸ் ஹீரோவாக வரவேண்டுமானல் அவருக்கு தெரு பொறுக்கி கதை தேவை. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு எல்லோருமே அப்படித்தான் வந்தவர்கள்.  நடுநடுவே நானும் நல்லவன் என்று போலீஸ் உடுப்பு போட்டு சில படங்கள் வந்துவிடும். கதைக்கு ஹீரோவை தேடாமல் ஹீரோவுக்கு கதை எழுதும் அவலம்தான் 3 படம் மாதிரியான பிரச்சனைக்கு உள்ளாக்குகிறது.

முதலில் கதை ரெடியாக வேண்டும். அதன் சந்தை தன்மை பற்றி ஒரு ஆய்வு செய்ய வேண்டும். இயக்குனர், தயாரிப்பாளரை தாண்டி ஒரு வல்லுனர்கள் குழுவின் ஆலேசனைகள் பெற வேண்டும். அனைத்து ஸ்டேக் ஹொல்டர்களின் கலந்தாலொசிப்பு வேண்டும்.

அடுத்து தமிழ் சினிமாவின் வியாபார உத்தி. ஒன்று அவுட் ரைட் முறை. இரண்டாவது ஷேர் முறை. முதலாவது கிட்டத்தட்ட சூதாட்டம் தான். 3 வியாபாரத்தில் இதுதான் நடந்தது. இந்த குதிரை நிச்சயம் ஜெயிக்கும் என்று ஏகத்துக்கும் பணத்தை கொடி வாங்கிய பிறகு அந்த குதிரை பாதியிலேயே சுருண்டு விழுந்தால் என்ன ஆகும்? அது தான் ஆனது. ஏன் இந்த சூதாட்ட முறை? இனி எல்லா படங்களும் ஷேரிங் முறையில் வரட்டுமே!

அதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. நம் மக்கள் கலெக்ஷ்ன் தகவல்களை சரியாக சொல்லமாட்டார்கள். எந்த வியாயாரியையும் கேட்டுப்பாருங்கள். எப்படி வியாபாரம் போகிறது? அதுவா, ஒன்னும் சுகமில்லே என்பார். ஆனால் நேற்றைக்குதான் பிஎம்டபியூ கார் வாங்கியிருப்பார். கலெக்ஷன் முறையில் ஆள்படைகள் போட்டு, எற்படும் பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து செய்வது என்பது போதும் போதும் என்றாகிவிடும். காரணம், எங்கும் ஒழுங்கற்ற தன்மை. கொஞ்சம் அசந்தால், முதலுக்கே மோசம் வந்து நம்மை மூழ்கடித்துவிடுவார்கள்.

இவ்வளவும் நடந்தால்தான் தழிழ் சினிமா உருப்படும். இல்லையேல் அவ்வப்போது இந்த மாதிரி 3 அடிக்கடி நடக்கும்.

Saturday, 21 April, 2012

இடைத் தேர்தல்

சங்கரன் கோயில் தேர்தல் முடிந்த பிறகு ஒரு மைக்செட்காரரை சந்திக்க நேர்ந்தது (என்னை சந்திக்க வந்த விவசாயின் சகோதரர் அவர்).தேர்தலை பற்றி பேச்சு திரும்பியது. ' சார். ஒரு மாசம் செம பிசினெஸ். ராப்பகலா நல்லா சம்பாரிச்சோம்' என்றார். இதே மாதிரி உணவு தயாரிப்பாளர்கள் பலரும் தூத்துக்குடியிலிருந்து சங்கரன் கோயில் போய் நன்கு கல்லா கட்டியிருக்கிறார்கள். எல்லா லாட்ஜுகளும் நிரம்பி வழிந்தனவாம். இஸ்திரிகாரகள் பிழைத்தார்கள். தண்ணீர் விற்றவர்கள் பிழைத்தார்கள். அவர் அடுத்து சொன்னதுதான் நம் ஜனநாயக சீறழிவை காட்டியது. 'சார் அடுத்து எங்கையாவது இடைத் தேர்தல் வருதா சார் ?" என்ற அவரின் கேள்வியை வேறுவிதமாக சொல்லலாம். "யாராவது எம்.எல்.ஏ. செத்து போயிருக்காங்களா?' அவர் மட்டுமல்ல, தமிழகத்தில் பல ஏழை எளிய மக்கள், சிறு உறுபத்தியாளர்கள், வியாபாரிகளின் எதிர்பார்ப்புகள் இப்படி இருக்கின்றன.  அவர் அந்த மாதிரி கேட்டு ஒரு வாரத்தில் புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. நம் எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

பாவம் ஆடுகள்

 தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி பயணித்தபோது மனசை நெருடும் ஒரு விஷயத்தை காணநேர்ந்தது. தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் லாரிகள் மக்காச்சோளம் போன்ற உணவு பொருட்களை ஏற்றி வருகின்றன. ஆனால் மிக பாதுகாப்பாக கொண்டு வராமல் வழியெல்லாம் சிந்த விடுகிறார்கள். சிந்தும் சோள மணிகளை தின்பதற்கு நிறைய ஆடுகள் இங்கும் அங்குமாக அலைகின்றன. ஒரு குட்டி ஆடு இன்று வாகனத்தில் அடிபட பார்த்தது. ஆடுகளுக்கு இது போல இலவசமாக உணவு கிடைத்து ஓசியில் அதன் உடம்பு கொழுத்தால் நல்ல கறி கிடைக்கும் என்று ஆடுகளின் சொந்தக்காரர்கள் இப்படி ஆடுகளை அவிழ்த்து விடுகிறார்கள் யாரை குற்றம் சொல்ல?

நாத்திகம் ஏன் வளரவில்லை?

இருபது வயதில் நாத்திகனாக இருப்பது அதியசமில்லை. அதே மாதிரி நாற்பது வயதில் நாத்திகனாக இல்லாமல் இருப்பதும் அதியசமில்லை என்ற சொல் வழக்கு உண்டு. நாத்திகம் என்பதை மிக தெளிவாக விளக்க வேண்டுமென்றால், இருப்பதை ஏற்றுக்கொள்ளாதது அல்லது இல்லாது இருப்பதை ஏற்றுக் கொள்வது என்பதாகும். 'அது' இருக்கா ? இல்லையா? என்பதை வைத்தே மேற் கூறிய வாக்கியத்தின் உண்மைத் தண்மையை தீர்மானிக்க முடியும். அது என்று சொல்லும்போதே இருக்கிறது என்றாகிவிடுகிறது என்பார்கள் ஆத்திகர்கள். நாத்திகர்களோ நீங்கள் சொல்வது மாதிரி 'அது' ஒரு சூப்பர் போலீஸ் இல்லை. அது வெறுமனே இயங்கி கொண்டோ அல்லது இயங்காமல் இருந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

எவ்வளவோ அறிஞர்களும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் எடுத்துரைத்தும், செயல்விளக்கம் காட்டியும் (மூளை சலவை செய்தும்) நாத்திகத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிலிருந்து கழன்று கொண்டவர்களே அதிகம். அதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது சமூக நிர்பந்தங்கள், வாழ்வியல் சவால்கள்.

ஆத்திகத்தை எடுத்துக் கொண்டால் அது நம்பிக்கையை பொறுத்து இருக்கிறது. அவர்களை கேட்டால் அது நம்பிக்கையல்ல, உண்மை என்பார்கள். தீவிரமாக ஒரு சிந்தனையை பற்றிக் கொள்ளும் போது நம்பிக்கையும், உண்மையும் இரண்டற கலந்து விடுகின்றன.

நாத்திகம் என்பது என்னவோ இந்து மதத்திற்கு மட்டும் உரித்தானது இல்லை. எல்லா மதங்களிலும் எதிர்மறையாளார்கள் இருக்கவே செய்கிறார்கள். ஒன்று, சத்தம் போடாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். அல்லது, எதிர்த்து நின்று மாற்று இயக்கம் காண்கிறார்கள். ஆக, பிற மதங்கள் எல்லாம் ஒரு தொகுப்பு கட்டளைகளாக இருக்கின்றன. எதிர்ப்பவர்களுக்கு அங்கு இடமில்லை. இந்து மதம் என்பதோ ஒரு மதமே இல்லை. இது ஒரு வாழ்வு முறை. பன்முனை நம்பிக்கைகளுக்கு இங்கே இடமுண்டு. எனது கடவுள் சாராயம் சாப்பிடும், பீடி குடிக்கும் என்று நம்பி அந்த மாதிரி விருந்து அதற்கு படைக்கலாம் என்றால் அது சுடலை மாடன் மாதிரி இருக்கலாம். இல்லை, இல்லை, எங்களது கடவுள் சாந்தமானவர், கொழுக் மொழுக் என்று எங்களைப் போன்று இருக்க வேண்டும் என்றால் அவர்களது கடவுள் அப்படியே இருக்கும். பெரும்பாலான பிராம்ண கடவுள்கள் அப்படித்தான் இருக்கின்றன. இல்லை, கடவுளே கிடையாது, மனசுதான் கடவுள் என்றால், அப்படியும் இருக்கலாம். அதற்காக அவர்கள் வெளியேற்றப்படுவது இல்லை. ராமாயணத்தில் ராமரிடம் நாத்திக தர்கம் செய்யும் ஜபாலி என்ற கதாபாத்திரம் வருகிறது.

தமிழ் நாட்டில் நாத்திகம் வளர்ந்த அளவுக்கு மற்ற மாநிலங்களில் அது வளரவில்லை. இங்கு சமூக மாற்றத்தை உருவாக்க கடவுள் மறுப்பு ஒரு கடவு சொல்லாக இருந்தது. அதிகாரங்களும், பணபலமும் ஆத்திகத்துக்கு அடையாளம் காட்டக் கூடிய ஒரு பிரிவினரை அதாவது பிராமினர்களை சார்ந்து இருந்தது. அவர்களின் சமூகப் பார்வை மனிதாபிமானத்துக்கு முரணாக இருந்தது. அவர்களின் செயல்பாட்டில் தீண்டாமை தலை தூக்கியிருந்தது. எனவே, நாத்திகம் விறுவிறுவென வளர்ந்தது. எனவே கோயிலையும் அதில் உள்ள கடவுளையும் மறுத்தால் அங்கு பிராமணர்களின் பிடிப்பு அற்று போகும் என்ற எண்ணத்தில் அது செயல்பட்டது. தீண்டாமையை மிகவும் வலியுறுத்தி வந்த அந்த கால பிராமணர்களின் போக்கு அவர்களுக்கு இலக்கானது.

ஆனால் இன்றைய நிலமை என்ன? அன்று இருந்த அதிகாரமும், பணபலமும் இன்று பரவலாகப்பட்டு இருக்கின்றன. இண்றைய சமுதாய முரண்பாடுகளுக்கு காரணங்களாக இருப்பவர்களாக அவர்களை மட்டுமே சொல்லிவிட முடியாது. சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகம் வராமல் தடுத்தவர்கள் அவர்கள் அல்லவே? அன்றைய அரசு அவர்களின் அடாவடிதனங்களுக்கு பயந்து, எல்லா போக்குவரத்து கழகங்களின் பெயர்களை எடுத்துவிட்டது. இன்று நடக்கும் ஜாதி கலவரங்களில் முக்கியமாக இருப்பது தீண்டாமையே. அதில் பிராமணர்கள் நிச்சயமாக அதிகம் இல்லை. ஜாதி இந்துக்கள் என்று ஒரு பிரிவினரும் தலித்துகளும்தான் அடிக்கடி முட்டிக் கொள்கிறார்கள்.

அரசியலிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. எந்த அமைப்பை எதிர்த்தார்களோ அந்த அமைப்பிலிருந்து வந்த பெண் இன்று ஒரு திராவிட கட்சிக்கு தலைவி. அ.இ.அ.தி.மு.கவில் திருநீறு மற்றும் குங்குமம இட்டுக் கொள்வது ஒரு கொள்கையாகவே ஆகிவிட்டது. தி.மு.க.விலோ தலைவர் மட்டுமே நாத்திகம் பேசுகிறார். அவரது மருமகளோ திருவாரூர் கோயிலில் கைகூப்பி நிற்கிறார். திராவிடம் என்பதற்கு அர்த்தமே இன்று பலருக்கு புரிவதில்லை. புரிந்து கொள்வதிலும் ஆர்வமில்லை.

சமூகமும், அரசியலும் நாத்திகத்தை கழற்றி விட்டன. இனி இருப்பது பொருளாதாரம் தான். நாத்திகத்துக்கு என்னவாயிற்று ?

நாத்திகம் அறிவு சார்ந்த விஷயம். கிட்டதட்ட ஆத்திகத்தின் ஞான மார்க்கத்தை ஒட்டிச் செல்வது. இதில் கேளிக்கைகளுக்கு இடமில்லை. திணிக்கப்படும் பண்டிகைகள் இல்லை. மனசை மயக்கும் இசை இல்லை. என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் இன்னமும் மக்கள் ஆட்டு மந்தை கூட்டங்கள்தான். கஷ்டகாலங்கள் வரும்போது அவர்களை தாங்கிபிடிக்க, ஆறுதல் சொல்ல, நம்பிக்கை காட்ட ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. அங்குதான் நாத்திகம் தோற்றுப் போகிறது.

குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், வந்தவர்கள் கட்சி மாறி போனாலும், இல்லாது இருக்கும் அந்த உண்மை, பொய் என்று ஆகிவிடாது. என்கிறார்கள் நாத்திகவாதிகள்.

ஆத்திகத்தில்தான் என் கூட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் தெரியுமா? என்று சொன்னால், நூறு முட்டாள்களை விட பத்து புத்திசாலிகள் உயர்ந்தவர்கள் என்கிறார்கள் நாத்திகர்கள்.

மிகப் பெரிய கண்டுபிடிப்புகளை செய்தவர்களும், சிருஷ்டியின் மிக அருகில் சென்ற விஞ்ஞானிகளும் ஆத்திகர்களாக இருப்பது விந்தையான ஒரு விஷயம். சச்சின் டென்டுல்கர் ஒரு சாயி பக்தர் என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம்.

விறைப்பாக, அறிவு சார்ந்து நாத்திகம் பேசும் ஒருவன் கூட தனக்கு கஷ்டம் வந்து மருத்தவ மனைகளில் அலையும் போது சிறிதளவு திருநீறு/குங்குமத்துடன் காட்சியளிக்கிறான்.

நாத்திகம் என்பது கசப்பான ஒரு உண்மை. அது நிறைய பேருக்கு பிடிப்பதில்லை.

ஒரு எழுத்தாளனின் இயலாமை

நான் நல்ல நல்ல சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். கிட்டத்தட்ட 80 சிறுகதைகளுக்கு மேல் இருக்கும்.  எல்லா சிறுகதைகளும் ஒரே பேட்டர்னில் இல்லாமல் வெவ்வேறு தளங்களில் எழுதியிருக்கிறேன். பல வெகுஜன பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே என்ற பல முயற்சிகள் எடுத்தேன். சிறுகதைகளுக்கு எப்படி பத்திரிக்கைகளில் ஆதரவு இல்லையோ அதே மாதிரிதான் தொகுப்பு வெளியிட பதிப்பகத்தார்களிடம் ஆதரவு இல்லை.  நானே எனது தொகுப்பை வெளியிட்டு, என் சொந்த காசை பெருமளவு செலவழித்து, அச்சடித்த புத்தகங்களை வீட்டில் புழுதியடையாமல் பாதுகாக்க சிரமப்பட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு, நண்பர்களிடம் விற்க முயற்சித்து அவர்களிடம் மன கசப்பு கொண்டு, கிடைக்காத லைப்ரரி ஆர்டருக்காக அலையாய் அலைந்து அல்லோல படுவதை விட ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தேன். அதாவது, தற்கால லேசர் பிரிண்டர்களில் ஒரு ஏ4 பேப்பரில் நான்கு பக்கங்கள் குறுக்காக அடிக்கும் படியான லெஃப்ட் ரைட் பைண்டிங் வசதி உள்ளது. அதாவது 1ம் மற்றும் 16ம் பக்கம் ஒரு தாளில் குறுக்காக இருக்கும். பின் பக்கத்தில் 2ம் மற்றும் 15ம் பக்கம் வரும். இந்த மாதிரி 16 பக்கங்கள் வரும் மாதிரி தனித் தனி செட் தயார் செய்து, ஒரு மாஸ்டர் செட் தயார் செய்து கொண்டேன். பிறகு அதை ஜெராக்ஸ் கடையில் கொடுத்து 40 காப்பி எடுத்தேன். பெயரளவுக்கு ஒரு சாதாரண அட்டை தயார் செய்து கொண்டேன். பைண்டிங் கடைகளில் பர்ஃபெக்ட் பைண்டிங் என்று தொழில்நுட்பத்தில் பைண்டிங் செய்து தருகிறார்கள். அந்த மாதிரி முதலில் 40 அதன் பிறகு அடுத்து 40 என என் தேவைக்கு ஏற்ப பைண்டிங்க் செய்து கொண்டேன். இனி எனக்கு பதிப்பாளர்கள் தேவையில்லை, வீட்டில் ஸ்டாக் வைக்க வேண்டாம். என் நண்பர்கள் என்னை கண்டு ஓடமாட்டார்கள். லைப்ரரி ஆர்டர் பிடிக்க அலைய வேண்டாம். என் சிறுகதைகளை படிக்க விரும்புகிறவர்களுக்கு, இனைய வசதி இல்லாதவர்களுக்கு அன்பளிப்பாகவே கொடுத்து விடுகிறேன். ஒரு எழுத்தாளன் என்னமாய் ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது? ஆனால் அதே நேரத்தில் ஓபாமா, கடலை மாவு என்று இனையத்திலிருந்து காப்பி யடித்து, கொஞ்சம் ஜல்லியடிச்சு ஒரு புத்தகம் போட்டால் பதிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை, இன்றைய வணிகம் அப்படி!

தேக்கு மரமும் கீதையும்

தூத்துக்குடியில் நான் குடியிருக்கும் வாடகை வீட்டின் வாசலில் ஒரு தேக்கு மரம் இருந்தது. காட்டு மரம் வீட்டில் இருந்தால் வீட்டுக்காரருக்கு ஆகாது என்று யாரோ ஒரு அரைவேக்காடு ஜோசியர் கொளுத்திப் போட சென்னையில் இருக்கும் வீட்டுக்காரர் ஆள் வைத்து அந்த மரத்தை வெட்ட துனிந்தார். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். தேக்கும் முழு வளர்ச்சியும் அடையைவில்லை, வெட்டி விற்றால் கூட ஒன்றும் தேராது என்றும் சொன்னேன். நான் வெளியூர் போயிருக்கும் ஒரு விடுமுறை நாளில், அரசு அனுமதி பெற்று, அந்த மரத்தை, இல்லை, இல்லை, குழந்தையை வெட்டி விட்டார்கள். ஊர் திரும்பியதும் சரிந்து கிடந்த மரத்தை பார்த்து என்னால் வருத்தப்படதான் முடிந்தது.  இரண்டு வாரம் முன்னால் கர்ணன் படம் பார்த்தேன். மரத்தை வைத்தவனும் கண்ணன். வெட்டச் சொன்னவனும் கண்ணன். வெட்டியவனும் கண்ணன். வருத்தப்பட்டவனும் கண்ணன். ஏன்..... மரமும் கண்ணனே என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். என்ன ஆச்சர்யம்.... வெட்டிய இடத்திலிருந்து தேக்கு மரம் துளிர்க்க தொடங்கியிருக்கியிருக்கிறது. ஆத்மாவுக்கு அழிவில்லை என்ற கீதையின் தத்துவதும் இதுதானோ ?

Friday, 20 April, 2012

ஆன்மீகம்/சமூகம்

நான் அடிக்கடி அலுவல் நிமித்தமாக தூத்துக்குடியிலிருந்து விளாத்திகுளத்திற்கும் சாத்தான்குளத்திற்கும் போவதுண்டு. அவ்வாறு போகும் போது மிக மிக எளிய மக்கள் கூட்டம் கூட்டமாக திருச்செந்தூருக்கு நடைப்பயணம் போவதை பார்த்திருக்கிறேன். எனக்கு இரண்டு கேள்விகள் மனத்தில் எழுந்தன. இது ஆன்மீகத்தின் வளர்ச்சியா? அல்லது சமூக சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு ஒரு வடிகாலா? இவ்வளவு உடல் வருத்தத்துடன், மன ஒன்றினைப்புடன் செய்யப்படும் இந்த வழிபாட்டு முறைகள் சமூக மாற்றங்களை ஏன் ஏற்படுத்தவில்லை? பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சிதைந்து வரும் குடும்ப உறவுகள், சமூக நல்லிணக்கம் ஆகியவைகளில் முன்னேற்றம் கான இந்த ஆன்மீகம் உதவில்லை. இந்த தீவிர ஆன்மீக செயல்கள் வெறும் சுய நல போக்கின் வெளிப்பாடா? அல்லது வெறும் கேளிக்கைகளா? என்னை பொறுத்தவரையில் சமூக மாற்றத்திற்கு உதவாத ஆன்மிக செயல்கள் கவலையை அளிக்கக் கூடியன. இது ஒரு பக்கம் என்றால் அந்த பக்கத்தில் கோயில்கள் ஒரு வணிக கூடாரங்களாக ஆகி வருகின்றன.

உழவர் பெருவிழா

கிராமம்தோறும் விவசாய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்கும் விதமாக விவசாய உழவர் பெருவிழா நிகழ்ச்சிகளை விவசாய துறை நடத்தி வருகிறது.  ஒரு முக்கியமான விஷயம், இந்த மாதிரி நிகழ்ச்சிகளை கிராமம்தோறும் நடத்த தேவையான விரிவாக்க பணியாளர்கள் விவசாயத் துறையிடம் இல்லை என்பதுதான் உண்மை. உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 408 வருவாய் கிராமங்கள் இருக்கின்றன. 12 வட்டாரங்களில் உள்ள மொத்த அதிகாரிகளே 50ஐ தாண்டாது.  எனவே மற்ற துறைகளில்ருந்து அதிகாரிகளை பிடித்து எப்படியோ நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.  இதில் 13 வகையான விருந்துக்குத்தான் முக்கியத்துவம்.  அடுத்தபடியாக முதலவர் துதிபாடுதல்.  தொழில்நுட்ப்ப பரிமாற்றம் என்பது ஏதோ ஒரு நாளில் நடந்துமுடிகிற விஷயம் அல்ல என்பது இவர்களுக்கு எப்படி புரியவைப்பது? உதாரணமாக மண் பரிசோதனை செய்தல், விதை நேர்த்தி செய்தல். கடந்த பல ஆண்டுகளாக விவசாயத்துறை சொல்லி வருகிறது. ஆனால் இன்றைய தேதியில் எத்தனை சதவிகிதம் இந்த அடிப்படை தொழில் நுட்ப்பம் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது?

கல்வி வியாபாரத்தில் விழும் விட்டில் பூச்சிகள்

ஏதோ பொறியியல் கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, அவர்கள் படித்து, பாஸ் செய்துவிட்டால் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்ற மாயையில் ஏராளமான பெற்றோர்கள் கடனை வாங்கியாவது செலவழிக்க அல்லது லஞ்சம் கொடுக்க அலைகிறார்கள். ஆட்டு மந்தைகள் மாதிரி எல்லோரும் ஓரே மாதிரி இயங்குவது பல சமூக சிக்கல்களை உருவாக்குகிறது. மிகவும் ஏழையான மணிவண்ணன் 26 அரியர்ஸ் வைத்து, மேல் கொண்டு படிப்பை தொடர முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும், தனித்துவமாக திறமை இருக்கிறது. அதில் காசு சம்பாதிக்கும் முறையை உட்புகுத்தி, அவர்களை பெற்றோர்களே வீணாக்குகிறார்கள். சாகடிக்கிறார்கள். எனக்கு தெரிந்து கலைக் கல்லூரிகளில் படித்து விட்டு அதன் பிறகு எம்.பி.ஏ. படித்த பிறகு லட்சலட்ச மாக சம்ப்பாதிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பனம் சம்பாதிக்க பொறியியல் கல்லூரிதான் வாசல் கதவு என்ற மாயை எப்போது அகலும்?

ஆத்திகம்/நாத்திகம்

ஒரு ஆஸ்திகனுக்கு பல வெற்றிகளை தொடர்ந்து ஒரு சில கஷ்டங்களை கொடு. அவனுக்குள் லேசாக நாத்திகம் துளிர்க்கும்.  ஒரு நாத்திகனுக்கு தொடர்ந்து கஷ்டங்களை கொடு.அவனுக்குள் லேசாக ஆத்திகம் துளிர்க்கும். சென்ற மாதம் நான் மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்காக ஒரு மருத்துவ மணைக்கு போயிருந்தேன். தீவிர சிகிச்சை பிரிவின் வெளிப்பகுதியில் காத்திருந்த பெரும்பாலானவர்களின் நெற்றிகளை வீபூதி குங்குமம் இருந்தன. கையில் ஸ்லோக புஸ்தகம். இந்த மாதிரி இடங்களில் நாத்திகம் எப்படி செயல்பட முடியும்? ஞான மார்கமே பின் வாங்கும். பக்தி மார்க்கம்தான் செழித்து வளரும். இந்த வலுவற்ற சூழ்நிலையைதான் பக்தி பிராண்ட் அம்பாசெடர்கள் நன்கு பயண்படுத்திக் கொள்கிறார்கள். ஆத்திகத்தில் மடமை இருக்கிறது. நாத்திகத்தில் வெறுமை இருக்கிறது.

அட்சய திருதியை

அட்சய திருதியை என்பது ஒரு மகத்தான சனாதன தர்மம். அந்நாளில் தர்ம காரியங்கள் பல செய்து, புண்ணியங்கள் சம்பாதித்து, தன் வாழ்வு குறைவில்லா செல்ல வேண்டும், இந்த சமூகமும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. விடுவார்களா நம் வணிகர்கள்? அன்று தங்கம் வாங்கினால் சொத்து சேரும் என்ற பொய்யை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். மேற்கத்திய சிந்தனையில் உள்ள கெடுதலான விஷயங்களுக்கே தொடர்ந்து அடிமையாகி வரும் நம் பெரும்பான்மை தமிழ் சமூகம், அந்நாளில் நகைக் கடைகளில் ஈக்கள் மாதிரி மொய்த்து நிற்கும். தர்மமா? அப்படீன்னா என்ன சார்? துட்டை வலிக்க வழி சொல்லுவீகளா? அதை விட்டுப்புட்டு.......

பரிதவிக்கும் தமிழ்

நீங்கள் நீ.வெ.ஒ. கோடி நிகழ்ச்சி பார்ப்பவரா? சமீபத்தில் கமல் பெண் சுருதி ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அவர் தினமும் ஒரு படம் பார்பார்களாம். ஆனால் அவள் அப்பா நடித்த அவள் ஒரு தொடர்கதை பற்றி எதுவும் தெரியாதாம். என் நண்பன் ஒரு முறை வேடிக்கையாக சொன்னது இது. இந்தக் கால டாலர் துரத்தும் இளைஞர்களுக்கு அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் என்று தெரியாது. சுருதிக்கு ஆங்கில சினிமா பற்றி அனைத்தும் தெரியும். ஆனால் தமிழ் சினிமாவில் அப்பாவின் படம் கூட தெரியாது. வாழ்க தமிழ். வளர்க தமிழ் இனம். ஆங்கில மோகம் தமிழை மறைக்கிறது. கமல் சொன்னது மாதிரி ஆங்கில யானை மோதி தமிழ் செத்துக் கொண்டு இருக்கிறது.

ஐ.பி.எல்

கிரிகெட் என்றாலே வணிகம் தான். அதிலும் ஐ.பி.எல். வணிகத்திலும் வணிகம். எனவே, ஐ.பி.எல்லை பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். கடந்த முன்று ஐ.பி.எல்லை நான் பார்ப்பது இல்லை. இது போல நிறைய பேர் ஒன்று சேர்ந்து உதாசின படுத்தினால்தான், கிரிகெட்டில் வணிகத்தின் தாக்கம் குறையும். என் பங்கை நான் செய்துவிட்டேன். மற்றவர்கள்?

Thursday, 19 April, 2012

ஷோலே - காலத்தை வென்ற படம்

இரண்டு வாரங்கள் முன்னால் ஷோலே ஹிந்தி படம் பார்த்தேன். 1975ல் வெளிவந்தது. அப்போது எனக்கு 13 வயது. ஹிந்தி தெரியாமலே அந்த படத்தை ரசித்திருக்கிறேன். தற்போது அட்சர சுத்தமாக டயலாக் புரிதலுடன் படம் பார்த்த போது பிரமிக்க வைக்கிறது. புதிதாக படம் எடுக்க வேண்டும் என்று தவிக்கும் இளம் இயக்குனர்கள் எப்படி ரசனையான திரைக்கதையை அமைக்க முடியும் என்பதற்கு பார்க்க வேண்டிய படம். பல வசனங்களை தமிழ் படுத்தி எழுத வேண்டும் என்று நினைத்தேன். கால தாமத்தில் மறந்து விட்டது.

அதெப்படி?

அதெப்படி? அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், தி.மு.க அமைச்சர்கள் மற்றும் மா.செ. எல்லாம் சட்டத்தை மீறியவர்கள் மாதிரியும் அவர்கள் மீது போலீஸ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கிறது. அம்மா ஆட்சிக்கு வந்தற்க்கு ஒரு நாள் முன்னால் வரை போலீஸ் துரத்தல்களில் இருந்த அ.தி.மு.க. அனுதாபிகள் திடீரென போலிஸ் பார்வையில் பவித்ரமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கழித்து இந்த நிலமை தலைகீழாக மாறும். இந்த ஜனநாயக கேலி கூத்துக்கு எப்போதுதான் விடிவுகாலம் வரும்? தற்போது காசு பார்த்துக் கொண்டிருக்கும் ஆளும்கட்சி ஜால்ராக்களுக்கு இந்த ஆட்சியிலேயே ஆப்பு அடிக்கப்பட வேண்டும். அது நடப்பதாக இல்லை. கலி காலத்தில் கைமேல் பலன் என்ற கருத்து அரசியலுக்கு பொருந்தாது போலிருக்கிறது. எனவே, அடுத்த தேர்தலில் தி.மு.க.வுக்கு ஓட்டு போட இப்போதே நான் தயாராகிவிட்டேன்.

தூத்துக்குடி முதலூரில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் என் பேச்சு

Sunday, 19 February, 2012

எதிரும் புதிரும்


"ம்.....பேஷண்ட் பேரு சொல்லுங்க" ரிசப்ஷனில் பீமனுக்கு தங்கை மாதிரி இருந்த நர்ஸ், கம்ப்யூட்டர் மானிடரை பார்த்துக் கொண்டே ஹிந்தியில் கேட்டாள்.
ராஜாராமன் சொன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தார். பதில் வராமல் போகவே, திடீரென நிமிர்ந்தாள்.
நெற்றிக் கண் பார்வை.
"ம்.... அது வந்து.... பிரியம்வதா..... ராஜாராமன்......"
குனிந்தாள். நான்கு நொடிகள் கழித்து, மீண்டும் நிமிர்ந்தாள். இந்த முறை ஆங்கிலம். "ரூம் நம்பர் 302. மூனாவது மாடி. ..... ஒன் மினிட்... அவங்க பேரு பிரியம்வதா ராஜகோபால்.... நீங்க கேட்டது....."
ராஜாராமனுக்கு திடீரென உறைத்தது..... "ஆமாம்....அவங்களேதான்....."
அவளேதான் என்று நாக்கு வரை வந்ததை, கடைசி நொடியில் மாற்றிக் கொண்டார். "அவங்க பிரியம்வதா.... நான் ராஜாராமன் .... ரெண்டையும் சேர்த்து சொல்லிட்டேன். ஸாரி" சே! என்ன அசட்டுத்தனம்.
அவள் ராஜாராமனை கேள்வியாக பார்த்தாள். "நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?"
ராஜாராமனுக்கு என்ன சொல்வது? எப்படிச் சொல்வது என்று புரியவில்லை? திடீரென, இங்கு வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது. எல்லை தெய்வமே ஆயிரம் எதிர் கேள்வி கேட்கிறதே?
"... ம்.... அது வந்து..." தடுமாறினார்.அவளுக்கு பின்னால் கைகளை உயர்த்தி ஆசிர்வதிக்துக் கொண்டிருந்த ஏசுவின் மீது பார்வையை ஓட்டி 'ஏதாவது ஐடியா கொடேன்' என்பது மாதிரி மனதுக்குள் இறைஞ்சினார்.
"சொல்லுங்க சார்.... ப்ரெண்டா.? இல்லே, ரிலேட்டிவ்வா?"
"...மொதல்ல ப்ரெண்ட்... அப்பறமா.... ரிலேட்டிவ்.... இப்ப பிரெண்ட்..."
அவளுக்கு சுத்தமாக புரியவில்லை என்பதற்கு நெற்றியை சுருக்கினாள். அதற்குள் பின்னாலிருந்து 'வாங்கோ' என்ற சத்தம் கேட்டது. ராஜாரமன் சட்டென திரும்பவும்...
கல்யாணி மாமி! அப்பாடி!
"என்ன மாமி. எப்படி இருக்கேள்? சௌக்கியமா? ஹாஸ்பிடல்ல என்ன சௌக்கியமான்னு கேக்கறது தப்புதான். நீங்கதான் பேஷண்ட் இல்லையே. அதுனால பரவாயில்ல"
கல்யாணி மாமி சிரித்தாள். "இவாள்ட என்ன கேட்டுண்டு இருந்தேள்?"
"இவ நான் யாருன்னு கேக்கிறா? அப்படி சொன்னாத்தான் உள்ள விடுவா போலிருக்கு."
மாமி இரண்டடி முன்னே வந்தாள். "இங்க பாரும்மா. இவர் என்னோட மாப்ளே. போலாமில்லையா?"
"ஆண்டி. விசிட்டர் டைம் முடிஞ்சிருச்சு. பெரிய டாக்டர் வர்ற நேரம். சீக்கிரமா பார்த்துட்டு போகச் சொல்லுங்க. கூட்டமா இருந்தீங்கன்னா எனக்கு வேலை போயிடும்"
படபடவென எண்ணெயில் விழுந்த ஆப்பம் மாதிரி புரியாத ஹிந்தியில் பொறிந்தாள். மாமி அவளை நோக்கி ஒரு வெற்று பார்வையை உதிர்த்து மௌனமாக தலையாட்டிவிட்டு, லிஃடை நோக்கி நடந்தாள்.
"இந்த காலத்து பொண்னுகளெல்லாம் ராட்சசிகள்" மாமி கீழ் பார்வை பார்த்துக் கொண்டே சொன்னாள்.
ராஜாரமனுக்கு சிரிப்பு வந்தது. "மாமி. இதை உங்க பொண்ணுக்கு முன்னால சொல்லாதீங்கோ. உங்களை கீசகனை வதம் செஞ்ச மாதிரி ரெண்டா கிழிச்சு போட்டுவா. பொம்மனாடி ராட்சசிகள்னா, இந்த ஆம்பிள்ளைகளெல்லாம் அரக்கர்கள்னு சொல்லுவா"
"இப்ப அவதான் கிழிஞ்சு கெடக்கா. கர்பப்பையை எடுத்தாச்சு. பையாப்ஸிக்கு போயிருக்கு. கான்சரா, என்னேன்னு தெரியலை........எனக்கென்ன பயம்? தாராளமா அவகிட்டேயே சொல்லுவேன். சொல்லியிருக்கேன். இப்பல்லாம் முன்னமாதிரி நான் சும்மா இருக்கறதுல்லே. நான்னா ஒரு வாரத்துக்கு வலிக்கிறமாதிரி திருப்பி கேட்டுடறேன். தைரியம் வந்துடுத்து."
திடீரென ராஜாரமனுக்கு ஞாபகம் வந்தது. அட சட். ஒண்ணுமே வாங்கிக் கொண்டு வரவில்லையே! வழக்கமாக எல்லோரும் வாங்கிக் கொண்டு வரும் ஆரஞ்சு பழம், ஆப்பிள், ஹார்லிக்ஸ் பாட்டில்... குறைந்த பட்சம் அவளுக்கு பிடித்த பெர்க் சாக்லெட்.... நல்லவேளை இப்போதாவது ஞாபகம் வந்ததே. ஒரு வேளை நேரே போயிருந்தால்..... "அம்மா. உன்னோட அருமை மாப்பிள்ளை மாறவே இல்லை. கைய வீசிண்டு வந்துட்டு, நீ குடுத்த காப்பியை குடிச்சுட்டு போயிட்டேர். ரொம்ப பெருமையா இருக்கு. மெச்சிக்கோ"
லிஃட் தரைக்கு வந்து தன்னை இரண்டாக பிளந்து கொண்டது. ஒவ்வொருவராக வெளியேர தொடங்கினர். ராஜாராமனுக்கு பின்னால் இருந்தவர்கள் வெப்ப மூச்சுக் காற்றுடன் உள்ளே பாய்வதற்கு தயாராக இருந்தனர். ராஜாராமன் ஒரு அரை வட்டம் அடித்து, உடனடியாக க்யூவை விட்டு வெளியே வரவும், மாமி கலவரமானார்.
"மாமி. ஒரு நிமிஷம். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்ரேன்......காரை சரியா லாக் பண்ணலேன்னு நெனைக்கறேன். சரியா தெரியலை. பார்த்துட்டு தோ வந்துடறேன்...... ஆமா நீங்க எதுக்கு கீழே வந்தேள்....."
"அதுவா. ஒண்ணுமில்லே. ப்ரியாவுக்கு மருந்து வாங்கனும். இங்கேயேதான் எதிர் பில்டிங்கல இருக்கு. நான் வாங்கிக்கறேன். நீங்க போயிட்டு நேர 302க்கு வந்துடுங்கோ"
மாமி கையில் ஒரு நீள சீட்டு இருப்பதை அப்போதுதான் கவனித்தார்.
"இல்லே. அந்த சீட்டை இப்படி கொடுங்கோ. நான் பேஸ்மெண்ட் போயிட்டு, மாத்திரை மருந்த வாங்கிண்டு வந்துடறேன். நீங்க ரூமுக்கு போங்கோ."
கடைசி ஆளாக மாமியை லிஃட்டுக்குள் திணித்தார். மாமி என்ன ஏது என்று முடிவு எடுப்பதற்குள் லிஃட் கதவுகள் மூடிக் கொண்டன.
ராஜாராமன் தரை தளத்தின் மைய பகுதி வரை வந்து அங்கேயே நின்று சிறிது நேரம் யோசிக்கலானார். நேற்று காலையில்தான் டெல்லி வந்தார். ஆபீஸ் விஷயமாக குர்கானில் நான்கு நாள் மீட்டிங். கனாட்பிளேசில் ரூம் போட்டிருந்தார்கள். ராத்திரி எட்டு மணிக்கு அப்பா போன் செய்தார்.
"ராமா, ப்ரியா ஹாஸ்பிடலைஸ்டு தெரியுமா?"
"தெரியாது. தெரிஞ்சுக்கணும்னு அவசியமும் இல்லே."
அப்பா சில நொடிகள் பதில் கொடுக்கவில்லை. "ஏன்டா. எவ்வளவு நாள் தனியா இருக்கப் போற? நான் போய்டேன்னா, சீர் பட்டு போகப்போறே."
"கமான்ப்பா. எத்தனையோ பேச்சலர்ஸ் தனியாதான் இருக்காங்க. அவங்க சீர் கெட்டா போயிட்டாங்க? அம்மா போனதுக்கு அப்பறம் நீங்க தனியாதானே இருக்கேள். கெட்டா போயிட்டேள். உங்களுக்கு ஏதோ ஒன்னு நடக்கனும். அத சுத்தி வளைச்சு பேசறேள். அதான் டைவர்ஸ் வரைக்கும் போயாச்சே. இனிமே என்ன இருக்கு?"
"ஏய். கோர்ட்டுல தீர்ப்பாகற வரைக்கும் அவ ஒன்னோட பொண்டாட்டிதான். அது கெடக்கட்டும். கல்யாணத்துக்கு முன்னால நாலு வருஷம் பிரண்ட்ஸா இருந்திருக்கே. என்னமா வழிஞ்சுருக்கே. அதுக்காவாவது.... அது சரி... அவ என்னடா பெரிய தப்பு பண்ணிட்டா? அவளுக்கு ஒரு தனி ஐடெண்ட்டிடி வேணும்னு எதிர்பார்த்தா. அது தப்பா?"
"அப்பா, நான்தான் லீட் கிடார். நான் என்ன வாசிக்கறேனோ அதுக்கு ஒத்த மாதிரி அவ வாசிக்கனும். அவ தனியா இன்னொரு ஆர்கெஸ்ட்ரா நடத்தக்கூடாது. உனக்கு இதெல்லாம் புரியாது. வீட்ல ரெண்டு ஹஸ்பெண்டா இருந்தோம். தேர் வாஸ் நோ வைஃப். வேற ஏதாவது பேசு."
"சரி. பேசறேன்..... ம்.... மன்மோகன் சிங் சௌக்கியமா?"
அப்பா ரொம்பவும் விட்டி காரெக்ட்டர். "இந்த கிண்டல்தானே, வேண்டாங்கிறது."
"நீ வைஃபா இருந்திருக்க வேண்டியதுதானே. அதை விடு......நான் சொல்லறது கொஞ்சம் கேளு. யு கோ வித் ஓப்பன் மைன்ட். ஒரு பொக்கே வாங்கிக்கோ. கெட் வெல். வித் ரிகார்ட்ஸ். சந்திரமௌலின்னு கார்டு போட்டு அவ கிட்டே கொடு. அவ நல்ல பொண்ணுடா. என்ன மக நட்சத்திரம்? அப்படிதான் கொஞ்சம் அப்பர் ஹாண்டா இருப்பா..."
அப்பா சீரியஸ்ஸாக பேசினால் இங்கிலீஷ் புகுந்து விளையாடும். "அப்பா. யூ ஆர் சைல்டிஷ்."
"இப்பவும் ஒண்ணும் குடிமுழுகிப் போகலை. வேண்டாம் வேண்டாம் சொல்ல சொல்ல ஈஷோ ஈஷிண்டு நீங்கதான் காதல் செஞ்சிங்க. வேண்டாம் வேண்டாம் சொல்ல சொல்ல சண்டை போட்டீங்க. டைவர்ஸ் நோட்டீஸ் கொடுக்கறதுக்கு முன்னால என்னை ஒரு வார்த்தை கேட்டியா? நீங்கதான் ஃபூல்ஸ். முட்டாள்கள் ரெகன்ஸைல் பண்ணிகறதுல தப்பே இல்லே."
"அப்பாவா இருக்கறதுனால யு கெ நாட் டிக்டேட் டர்ம்ஸ் ஆன் மி."
"டூ வாட் ஐ சே மை சன்." அப்பாவின் குரல் உயர்ந்தது. கொஞ்சம் மௌனம் நீடித்தது.
"ஓகே. ஓகே. நானா எதுவும் ஆரம்பிக்க மாட்டேன். அவளா ஏதாவது சொன்னா, ஐ மே..... ஐ மே..."
"ஐ ஜூன்.... ஐ ஜூலை... போடா. போய் பாரு. கிழிச்ச நாரா கெடக்காளாம். கோ வித் பொக்கே அன்ட் ஃப்ரீ மைண்ட், மை டியர் டர்டி கூஸ்."
அப்பாவுக்கும் மகம் நட்சத்திரமாக இருந்திருக்குமோ என்று ராஜாராமனுக்கு அப்போது சந்தேகம் வந்தது.
ராஜாராமன் ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்து ஒரு பெரிய கூடை பொக்கே ஒன்றை வாங்கி, கார்டில் அப்பா பெயரை போட்டார். ஏ4 சைசில் ஒரு காட்பெரி கிஃட் பேக் ஒன்றை வாங்கிக் கொண்டார். அதில் பெர்க் இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டார்.
அதே நேரத்தில் கல்யாணி மாமி 302ஐ அடைந்திருந்தாள்.
"ப்ரியா. மாப்பிள்ளை வந்திருக்கார். ரிஷப்ஷன்லே பார்த்தேன். இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவார்."
ப்ரியா முகம் சுருக்கினாள். "மாப்பிளையாவது மண்ணாங்கட்டியாவது? வொய் த ஹெல் ஹி இஸ் கமிங். எல்லாம் முடிஞ்சு போச்சே."
"இங்க பாரு. தஸ் புஸ்னு எங்கிட்ட இங்லீஷ்ல பேசாத. நான் மடச்சியாகவே இருந்துட்டு போறேன். வரவர்கிட்டே இந்த மாதிரி எரிஞ்சு விழாத."
"எனக்கு யாரையும் பார்க்க இஷ்டமில்லே. நீ வேனா கீழே போய் பார்த்து அப்படியே அனுப்பிடு."
அதற்குள் கதவு திறக்க, ஒரு நர்ஸ் கைகளில் ஒரு ட்ரேயுடன் உள்ளே வந்தாள். வந்தவள் அங்கிருந்த அசாதாரண சூழ்நிலையை குறிப்பறிந்து கொண்டாள்.
"மேடம். மார்னிங்தான் ஆபரேஷன் ஆயிருக்கு. ஸ்டிச்சஸ் டிஸ்டர்ப் ஆகக் கூடாது. இரைஞ்சு சத்தம் போட்டு பேசக் கூடாது. அவாய்ட் பண்ணுங்க. டாக்டர் சொல்லிருக்காருல்ல."
"சிஸ்டர். நீங்க சிஸ்டர் லேலையை மட்டும் பாருங்க. நான் ஒன்னும் அடி முட்டாள் இல்லே. புரிஞ்சுதா. கீப் யுவர் லிமிட்ஸ் ப்ளீஸ்." ப்ரியா சுளீரென திருப்பி கொடுத்தாள்.
நர்ஸ் அந்த சாட்டையடியை எதிர்பார்க்க வில்லை. எக்கேடு கெட்டுப் போ என்கிறது மாதிரி ரியாக்ஷன் செய்த்து விட்டு மாத்திரைகளை சரமாரியாக டப்பாக்களில் அடைத்து விட்டு போனாள். அவள் போன இரண்டாவது நொடியில் கதவு மீண்டும் தட்டப்பட்டது.
இந்த முறை ராஜாராமன்.
கல்யாணி மாமி மீண்டும் 'வாங்கோ' என்றாள். ப்ரியா கொஞ்சம் கூட சலனமில்லாமல் தன் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டாள். ராஜாராமன் அப்பா கொடுக்கச் சொன்ன பொக்கேயை அவளை நோக்கி நீட்டினார். ப்ரியா அம்மாவை நோக்கி கைகாட்டினாள். கல்யாணி மாமி ப்வயமாக வாங்கி, ப்ரியாவிடம் காட்டிவிட்டு அருகிலிருந்த டேபிள் மீது வைத்தாள். ராஜாராமன் கேள்வியே கேட்காமல் கிஃட் பாக்கெட்டையும் மாமியிடமே கொடுத்தார். அதுவும் இயந்திர கதியாக டேபிளுக்கு போனது.
"ஹவ் ஆர் யூ?"
"ம். இருக்கேன்."
'கொஞ்சம் ஒடம்புக்கு ஏத்த வேலை செய்யறது."
"நீங்க அட்வைஸ் செய்யுற காலமெல்லாம் போயிடுத்து."
கல்யாணி மாமி கலவரமாக ரெண்டு பேரையும் மாறி மாறி பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தாள்.
"அப்பா அவசியம் போய் பார்த்துட்டு வான்னு சொன்னார். அதான்....."
"அப்ப நீங்களா வர்லே.. இல்லியா."
ப்ரியா கொஞ்சம் வாலி டைப். எதிராளியின் பலத்தை சரி பாதி வாங்கிவிடுவாள். அந்த நிமிடமே ராஜாராமன் பிடி அற்று போனது.
"ஓகே. ஓகே. கெட் வெல். கீப் குட் ஹெல்த்." ஒரு மாதிரி சமாளித்து, மாமி பக்கம் திரும்பி, "என்ன மாமி? எப்படி இருக்கேள்?"
மாமி ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு, "ம்.. ஏதோ இருக்கேன்பா. இந்த ஊர் ஹிந்தி ஒரு எழவும் புரியலை. ஏதோ பாம்பே ஹிந்தியை வைச்சுண்டு சமாளிக்கறேன். இவ என்னடான்னா விக்கிரமாதித்தன் மாதிரி காடாறு மாசம், நாடாறு மாசம்னு தேசாந்திரம் போயிடறா. பெரிய வீட்டுல, தன்னந்தனியா....."
"அம்மா போறும். ஐ ஆம் சிக் ஆஃப் யுவர் கம்ப்ளெயிண்ட்ஸ்."
'இந்த மாதிரிதான் இங்கிலீஷ்ல பேசி வாயை அடைச்சுடுவா. அவர் கூடவே நானும் மேல போய்டா நல்லது. நாளை எண்ணிண்டு இருக்கேன்."
அதற்கு மேல் ராஜாராமன் அங்கிருக்க ப்ரியப்படவில்லை. போய்விட்டார். கல்யாணி மாமியும் கூடவே போனாள்.
கால் மணி கழித்து திரும்பி வந்தாள். முகமெல்லாம் சிவந்திருந்தது.
"இருந்தாலும், ஒனக்கு இவ்வளவு துராங்காரம் கூடாது."
"இப்ப என்னதான் சொல்லவர்ற. பழங்காலத்து தமிழ் சினிமாவுல கெடுத்த வில்லனை திருத்தனும். அப்பறம் அவனுக்கே அவளை கட்டி வைக்கனும்கிற மாதிரி நான் அவரோட எகெயின் குடும்பம் நடத்தனுமா?. அம்மா, ஒனக்கு என்ன மூளை மழுங்கிடுத்தா?"
"சரிடி. நீ இப்படியே இரு. இன்னிக்கு வயத்தை கிழிச்சாச்சு. நாளைக்கு என்ன நடக்கப் போறதோ. ஈஸ்வரா!"
"இங்க பாரு. உன்னால முடியலைன்னா சொல்லு. நாளைக்கே டிரெயின் ஏத்திவிடறேன். உங்க அண்ணாவாத்துக்கு போ."
"ஏன் மாமான்னு சொல்ல முடியாதோ?"
"எனக்கு யாரும் வேண்டாம். எல்லாரும் போய் தொலைங்கோ."
கல்யாணி மாமி பதில் பேசாமல் அழுதாள்.
"அம்மா. உனக்கு உன் மாப்ளை அப்படியே சத்யசீலர்ன்னு நினைப்பு. ஆனா அந்த ஆள் மாதிரி மேல் சாவனிஸ்ட் வேற எங்கையும் பார்க்க முடியாது. உள்ளுக்குள்ள உளுத்து போன பிலாசபி. வெளியிலே பெரிய இன்ட்டெலிக்சுவல்னு பந்தா. எல்லாம் வேஷம். ரெண்டு மூனு தடவை என்னை அடிச்சிருக்கான். கடைசியா அடிக்க வந்த போது கையை புடிச்சு ஒரு முறுக்கு முறுக்கினேன். கை ப்ராக்சர் ஆகி, இரண்டும் வாரம் ஆபீஸ் போகல ஒரு மாசம் இடது கையால லாப் டாப்ல டைப் அடிச்சான். உன் மாப்ளே சரியான க்ராக்."
"ஆமா. நீ அப்படியே புடம் போட்ட தங்கம் பாரு. எல்லாம் என் தப்பு."
"என்ன தப்பு?"
"ஒன்னை பெத்ததே தப்பு."
"அதை ஒன் புருஷன்கிட்டே செல்லியிருக்கனும்."
கல்யாணி மாமி ஒன்றும் பேசவில்ல. ஒரு வெற்று பார்வை பார்த்தாள். "நல்ல வேளைடி. உங்களுக்கு கொழந்தைகள் பொறக்கலை. இல்லேன்னா அதுக படற பாட்டை கண்ணு கொண்டு பார்க்க முடியாது."
"அம்மா. இனிமே இந்த டாப்பிக்கை எடுக்காதே"
"ஏண்டி, நீ கொஞ்சம் இறங்கி வரப்படாதா?"
"வரலாம். என்னை மாதிரி அட்ஜெஸ்ட் செஞ்சுண்டு போற ஆள் வேறு யாரும் கிடையாதுன்னு எனக்கு ஆபீஸ்ல பேரு. ஆனா, உன் மாப்ளை கொஞ்சாமாவது லீட் கொடுத்தாரோ? வந்தவுடனேயே அட்வைஸ் செய்ய ஆரம்பிச்சாச்சு. அப்பறம் எப்ப மெட்றாஸ் வரப்போறன்னு அடுத்த கேள்வி வரும். எனக்கு டெல்லிய விட்டு போக முடியாது."
"ஆபீஸ்ல... அதென்ன... ஆங்... அட்ஜெஸ்ட் பண்ணிப்ப. வீட்ல அதை பண்ண மாட்டே. நான்னாருக்கு உன் நியாயம். என்னையும்தான் உங்க அப்பா அடிச்சிருக்கார். ஒரு தடவை காலால மிதிச்சே இருக்கார். அப்பறந்தான் நான் அவர் கோபத்தை கிளர்ற மாதிரி பேசிருக்கேன் தெரிஞ்சது. அப்பறம் எப்படி கேட்டா, பதில் பாந்தமா வரும்னு புரிஞ்சுண்டேன். சாகற சமயத்திலே, நான் போய்டா, நீ என்னடீ பண்ணுவே? என்னடீ பண்ணுவேன்னு கண்ணீர் விட்டு கதறினார்....."
"அம்மா. போதும்மா. உன் அடிமை புராணம். இப்பெல்லாம் ஆணும் பெண்னும் ஒண்னு."
"ஒண்ணு, ஒண்ணு இல்லேடி. ஒண்ணுக்காக இன்னொண்ணு."
"சரி, என்ன எழவோ விடு. இந்த ராஜாராமருக்கு நீயே இன்னொரு சீதையை, ஒரு அடிமை சீதையை கல்யாணம் பண்ணி வை. என்னை இழுக்காதே. எனக்கு தூக்கம் வர்றது."
அதன் பிறகு கல்யாணி மாமி எதுவும் பேசவில்லை.
ராஜாராமன் சென்னை வந்த ஒரு மாதம் கழித்து, ஈ.சி.ஆர்.ரோட்டில் அவர் காரை ஒரு கன்ட்டெயினர் லாரி பதம் பார்த்தது. உடனடியாக அப்போலோ ஐ.சி.யூ.வில் அட்மிட் செய்யப்பட்டார். அந்த சமயத்தில் ப்ரியம்வதா தன் கம்பனி விஷயமாக சென்னை வந்திருந்தாள். கூடவே அவள் அம்மாவும் வந்திருந்தாள். தகவல் கிடைத்ததும், அம்மாவின் பிடுங்கலின்படி ப்ரியம்வதா சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹாஸ்பிடல் வர ஒத்துக் கொண்டாள்.
இருவரும் கால் டாக்ஸி பிடித்து ஹாஸ்பிடலை அடைந்தனர். ரிஷப்ஷனில் இருந்த ஒல்லியான சின்ன உடம்புக்காரி ப்ரியம்வதாவை பார்த்து கேட்டாள். "ம்.... பேஷண்ட் பேரு சொல்லுங்கம்மா?"
கல்யாணி மாமி கவலை அப்பிய முகத்தோடு ப்ரியம்வதாவை பார்த்தாள்