Saturday, 21 April 2012

நாத்திகம் ஏன் வளரவில்லை?

இருபது வயதில் நாத்திகனாக இருப்பது அதியசமில்லை. அதே மாதிரி நாற்பது வயதில் நாத்திகனாக இல்லாமல் இருப்பதும் அதியசமில்லை என்ற சொல் வழக்கு உண்டு. நாத்திகம் என்பதை மிக தெளிவாக விளக்க வேண்டுமென்றால், இருப்பதை ஏற்றுக்கொள்ளாதது அல்லது இல்லாது இருப்பதை ஏற்றுக் கொள்வது என்பதாகும். 'அது' இருக்கா ? இல்லையா? என்பதை வைத்தே மேற் கூறிய வாக்கியத்தின் உண்மைத் தண்மையை தீர்மானிக்க முடியும். அது என்று சொல்லும்போதே இருக்கிறது என்றாகிவிடுகிறது என்பார்கள் ஆத்திகர்கள். நாத்திகர்களோ நீங்கள் சொல்வது மாதிரி 'அது' ஒரு சூப்பர் போலீஸ் இல்லை. அது வெறுமனே இயங்கி கொண்டோ அல்லது இயங்காமல் இருந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

எவ்வளவோ அறிஞர்களும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் எடுத்துரைத்தும், செயல்விளக்கம் காட்டியும் (மூளை சலவை செய்தும்) நாத்திகத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிலிருந்து கழன்று கொண்டவர்களே அதிகம். அதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது சமூக நிர்பந்தங்கள், வாழ்வியல் சவால்கள்.

ஆத்திகத்தை எடுத்துக் கொண்டால் அது நம்பிக்கையை பொறுத்து இருக்கிறது. அவர்களை கேட்டால் அது நம்பிக்கையல்ல, உண்மை என்பார்கள். தீவிரமாக ஒரு சிந்தனையை பற்றிக் கொள்ளும் போது நம்பிக்கையும், உண்மையும் இரண்டற கலந்து விடுகின்றன.

நாத்திகம் என்பது என்னவோ இந்து மதத்திற்கு மட்டும் உரித்தானது இல்லை. எல்லா மதங்களிலும் எதிர்மறையாளார்கள் இருக்கவே செய்கிறார்கள். ஒன்று, சத்தம் போடாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். அல்லது, எதிர்த்து நின்று மாற்று இயக்கம் காண்கிறார்கள். ஆக, பிற மதங்கள் எல்லாம் ஒரு தொகுப்பு கட்டளைகளாக இருக்கின்றன. எதிர்ப்பவர்களுக்கு அங்கு இடமில்லை. இந்து மதம் என்பதோ ஒரு மதமே இல்லை. இது ஒரு வாழ்வு முறை. பன்முனை நம்பிக்கைகளுக்கு இங்கே இடமுண்டு. எனது கடவுள் சாராயம் சாப்பிடும், பீடி குடிக்கும் என்று நம்பி அந்த மாதிரி விருந்து அதற்கு படைக்கலாம் என்றால் அது சுடலை மாடன் மாதிரி இருக்கலாம். இல்லை, இல்லை, எங்களது கடவுள் சாந்தமானவர், கொழுக் மொழுக் என்று எங்களைப் போன்று இருக்க வேண்டும் என்றால் அவர்களது கடவுள் அப்படியே இருக்கும். பெரும்பாலான பிராம்ண கடவுள்கள் அப்படித்தான் இருக்கின்றன. இல்லை, கடவுளே கிடையாது, மனசுதான் கடவுள் என்றால், அப்படியும் இருக்கலாம். அதற்காக அவர்கள் வெளியேற்றப்படுவது இல்லை. ராமாயணத்தில் ராமரிடம் நாத்திக தர்கம் செய்யும் ஜபாலி என்ற கதாபாத்திரம் வருகிறது.

தமிழ் நாட்டில் நாத்திகம் வளர்ந்த அளவுக்கு மற்ற மாநிலங்களில் அது வளரவில்லை. இங்கு சமூக மாற்றத்தை உருவாக்க கடவுள் மறுப்பு ஒரு கடவு சொல்லாக இருந்தது. அதிகாரங்களும், பணபலமும் ஆத்திகத்துக்கு அடையாளம் காட்டக் கூடிய ஒரு பிரிவினரை அதாவது பிராமினர்களை சார்ந்து இருந்தது. அவர்களின் சமூகப் பார்வை மனிதாபிமானத்துக்கு முரணாக இருந்தது. அவர்களின் செயல்பாட்டில் தீண்டாமை தலை தூக்கியிருந்தது. எனவே, நாத்திகம் விறுவிறுவென வளர்ந்தது. எனவே கோயிலையும் அதில் உள்ள கடவுளையும் மறுத்தால் அங்கு பிராமணர்களின் பிடிப்பு அற்று போகும் என்ற எண்ணத்தில் அது செயல்பட்டது. தீண்டாமையை மிகவும் வலியுறுத்தி வந்த அந்த கால பிராமணர்களின் போக்கு அவர்களுக்கு இலக்கானது.

ஆனால் இன்றைய நிலமை என்ன? அன்று இருந்த அதிகாரமும், பணபலமும் இன்று பரவலாகப்பட்டு இருக்கின்றன. இண்றைய சமுதாய முரண்பாடுகளுக்கு காரணங்களாக இருப்பவர்களாக அவர்களை மட்டுமே சொல்லிவிட முடியாது. சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகம் வராமல் தடுத்தவர்கள் அவர்கள் அல்லவே? அன்றைய அரசு அவர்களின் அடாவடிதனங்களுக்கு பயந்து, எல்லா போக்குவரத்து கழகங்களின் பெயர்களை எடுத்துவிட்டது. இன்று நடக்கும் ஜாதி கலவரங்களில் முக்கியமாக இருப்பது தீண்டாமையே. அதில் பிராமணர்கள் நிச்சயமாக அதிகம் இல்லை. ஜாதி இந்துக்கள் என்று ஒரு பிரிவினரும் தலித்துகளும்தான் அடிக்கடி முட்டிக் கொள்கிறார்கள்.

அரசியலிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. எந்த அமைப்பை எதிர்த்தார்களோ அந்த அமைப்பிலிருந்து வந்த பெண் இன்று ஒரு திராவிட கட்சிக்கு தலைவி. அ.இ.அ.தி.மு.கவில் திருநீறு மற்றும் குங்குமம இட்டுக் கொள்வது ஒரு கொள்கையாகவே ஆகிவிட்டது. தி.மு.க.விலோ தலைவர் மட்டுமே நாத்திகம் பேசுகிறார். அவரது மருமகளோ திருவாரூர் கோயிலில் கைகூப்பி நிற்கிறார். திராவிடம் என்பதற்கு அர்த்தமே இன்று பலருக்கு புரிவதில்லை. புரிந்து கொள்வதிலும் ஆர்வமில்லை.

சமூகமும், அரசியலும் நாத்திகத்தை கழற்றி விட்டன. இனி இருப்பது பொருளாதாரம் தான். நாத்திகத்துக்கு என்னவாயிற்று ?

நாத்திகம் அறிவு சார்ந்த விஷயம். கிட்டதட்ட ஆத்திகத்தின் ஞான மார்க்கத்தை ஒட்டிச் செல்வது. இதில் கேளிக்கைகளுக்கு இடமில்லை. திணிக்கப்படும் பண்டிகைகள் இல்லை. மனசை மயக்கும் இசை இல்லை. என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் இன்னமும் மக்கள் ஆட்டு மந்தை கூட்டங்கள்தான். கஷ்டகாலங்கள் வரும்போது அவர்களை தாங்கிபிடிக்க, ஆறுதல் சொல்ல, நம்பிக்கை காட்ட ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. அங்குதான் நாத்திகம் தோற்றுப் போகிறது.

குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், வந்தவர்கள் கட்சி மாறி போனாலும், இல்லாது இருக்கும் அந்த உண்மை, பொய் என்று ஆகிவிடாது. என்கிறார்கள் நாத்திகவாதிகள்.

ஆத்திகத்தில்தான் என் கூட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் தெரியுமா? என்று சொன்னால், நூறு முட்டாள்களை விட பத்து புத்திசாலிகள் உயர்ந்தவர்கள் என்கிறார்கள் நாத்திகர்கள்.

மிகப் பெரிய கண்டுபிடிப்புகளை செய்தவர்களும், சிருஷ்டியின் மிக அருகில் சென்ற விஞ்ஞானிகளும் ஆத்திகர்களாக இருப்பது விந்தையான ஒரு விஷயம். சச்சின் டென்டுல்கர் ஒரு சாயி பக்தர் என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம்.

விறைப்பாக, அறிவு சார்ந்து நாத்திகம் பேசும் ஒருவன் கூட தனக்கு கஷ்டம் வந்து மருத்தவ மனைகளில் அலையும் போது சிறிதளவு திருநீறு/குங்குமத்துடன் காட்சியளிக்கிறான்.

நாத்திகம் என்பது கசப்பான ஒரு உண்மை. அது நிறைய பேருக்கு பிடிப்பதில்லை.

No comments: