Sunday, 22 April 2012

கொலை வெறி சொல்லும் பாடம்

தனுஷ் அந்த வொய் திஸ் கொலைவெறி பாடலை பாடினாலும் பாடினார். அது மொழி கடந்து, இனம் கடந்து, தேசம் கடந்து போனது. ஓபாமாவும் மன்மோகன் சிங்கும் அந்த பாடலுக்கு கட்டிபிடித்து டான்ஸ் ஆடவில்லை அவ்வளவுதான். 3 படத்தின் எதிர்பார்ப்பு ஒரே நாளில் எண்ணமுடியாத உச்சத்தை தொட்டது.

படம் வெளியாகியது. உச்சாதான் போனது. தனுஷ் தலைமறைவு. ரஜினி எனக்கும் 3 படத்தின் விற்பனைக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வெளியிடுகிறார்.

ஏன் இந்த கொலைவெறி?

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தமிழ் சினிமாவில் இரண்டு அடுக்குகள் இருக்கின்றன. ஒன்று படம் எடுத்தல். இன்னொன்று படத்தை வியாபாரம் செய்தல்.

எந்த ஒரு பொருளை உற்பத்தி செய்தாலும் அது சந்தையை சார்ந்துதான் அதன் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. அதனால்தான் சந்தையை பற்றி ஆய்வு செய்ய பெரிய பெரிய கம்பனிகள் ஒரு பிரயேக டீமை வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து சந்தையை கண்கானிக்கிறார்கள். அதற்கு ஏற்றால் போல மாற்றங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது? ஒரு சினிமாவின் கதை இரண்டு மூன்று மாதங்களில் முடிவாகி விடுகிறது. தயாரிப்பாளருக்கு அந்த கதையின் வலு சந்தையில் எப்படி நிற்க்கும் என்ற தகவல் கூட கொடுப்பதில்லை. அப்படி அவர் கேட்டுவிட்டால் அது இயக்குனரின் ஈகோவை பாதிக்கிறது. கடைசியில் பார்த்தால் அந்த படத்தின் கதை அரைத்த மாவாகவே இருந்துவிடுகிறது. கதைதான் வியாபாரத்தின் உந்து சக்தி. ஆனால் இவர்கள் படத்தின் பிரபலங்களை வைத்து வியாபாரம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஒரு கொலை வெறி பாடல் எப்படி ஒரு படத்தின் வெற்றியை தீர்மாணிக்க முடியும்? ரஜினியின் மகள் எடுக்கும் படம் என்றால் குப்பை கூட தங்கம் ஆகிவிட முடியுமா? நம் இயக்குனர்கள் காதலை தாண்டி வேறு கதைகள் சொல்ல முயற்சிப்பதே இல்லை.

ஷாருக்கான் தான் அமெரிக்காவில் பட்ட அவமானங்களை வைத்து மை நேம் இஸ் கான் என்ற படம் எடுத்தார். அந்த கதையின் வீரியத்தை பாருங்கள்!

நம் தமிழ் சினிமாவின் இன்னொரு சாபம், பிரபலங்களின் படங்களுக்கு தனியாக கதை என்று ஓன்று வேண்டாம் என்பது தான். விஜய் நடித்த பத்து படங்களை எடுத்தால் அதில் ஏழு படங்கள் ஓரே மாதிரி இருக்கும். இந்த கோபக்கார இளைஞன், தெரு பொறுக்கி ஹீரோ என்பதை தாண்டி என்றைக்கு இந்த இயக்குனர்கள் யோசிக்க தொடங்குவார்கள்?  சூர்யா கூட தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஆறு மாதிரியான பொறுக்கி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதாகிவிட்டது. ஆக, ஒரு ஹீரோவுக்கு அறிமுகம் லவர் பாய்யாக கிடைக்கிறது. அதை தாண்டி மாஸ் ஹீரோவாக வரவேண்டுமானல் அவருக்கு தெரு பொறுக்கி கதை தேவை. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு எல்லோருமே அப்படித்தான் வந்தவர்கள்.  நடுநடுவே நானும் நல்லவன் என்று போலீஸ் உடுப்பு போட்டு சில படங்கள் வந்துவிடும். கதைக்கு ஹீரோவை தேடாமல் ஹீரோவுக்கு கதை எழுதும் அவலம்தான் 3 படம் மாதிரியான பிரச்சனைக்கு உள்ளாக்குகிறது.

முதலில் கதை ரெடியாக வேண்டும். அதன் சந்தை தன்மை பற்றி ஒரு ஆய்வு செய்ய வேண்டும். இயக்குனர், தயாரிப்பாளரை தாண்டி ஒரு வல்லுனர்கள் குழுவின் ஆலேசனைகள் பெற வேண்டும். அனைத்து ஸ்டேக் ஹொல்டர்களின் கலந்தாலொசிப்பு வேண்டும்.

அடுத்து தமிழ் சினிமாவின் வியாபார உத்தி. ஒன்று அவுட் ரைட் முறை. இரண்டாவது ஷேர் முறை. முதலாவது கிட்டத்தட்ட சூதாட்டம் தான். 3 வியாபாரத்தில் இதுதான் நடந்தது. இந்த குதிரை நிச்சயம் ஜெயிக்கும் என்று ஏகத்துக்கும் பணத்தை கொடி வாங்கிய பிறகு அந்த குதிரை பாதியிலேயே சுருண்டு விழுந்தால் என்ன ஆகும்? அது தான் ஆனது. ஏன் இந்த சூதாட்ட முறை? இனி எல்லா படங்களும் ஷேரிங் முறையில் வரட்டுமே!

அதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. நம் மக்கள் கலெக்ஷ்ன் தகவல்களை சரியாக சொல்லமாட்டார்கள். எந்த வியாயாரியையும் கேட்டுப்பாருங்கள். எப்படி வியாபாரம் போகிறது? அதுவா, ஒன்னும் சுகமில்லே என்பார். ஆனால் நேற்றைக்குதான் பிஎம்டபியூ கார் வாங்கியிருப்பார். கலெக்ஷன் முறையில் ஆள்படைகள் போட்டு, எற்படும் பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து செய்வது என்பது போதும் போதும் என்றாகிவிடும். காரணம், எங்கும் ஒழுங்கற்ற தன்மை. கொஞ்சம் அசந்தால், முதலுக்கே மோசம் வந்து நம்மை மூழ்கடித்துவிடுவார்கள்.

இவ்வளவும் நடந்தால்தான் தழிழ் சினிமா உருப்படும். இல்லையேல் அவ்வப்போது இந்த மாதிரி 3 அடிக்கடி நடக்கும்.

No comments: