Thursday 26 April, 2012

கோபல வல்லிதாசரும் அட்சய திருதியையும்

எனக்கு தூத்துக்குடிக்கு மாறுதல் கிடைத்தபோது, நான் அவ்வளவாக மகிழ்ச்சியடையவில்லை. நான் எதிரிபார்த்தது, பெரம்பலூர் அல்லது கடலூர். ஆனால் எனக்கு வாய்த்தது தூத்துக்குடி. ஆனால் வந்து பிறகுதான் நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறேன் என்று புரிந்தது. கடந்து போயிருக்கும் இந்த மூன்று ஆண்டுகளும் என் வாழ்நாளில் மிக மிக மிக மகிழ்ச்சியான நாட்கள். நான் சமுதாய பணிகளில் என்னென்ன செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினேனோ அனைத்தையும் பார்த்துவிட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் அடிக்கடி சந்திக்கும் மக்கள் வெள்ளந்தியான அருமையான மக்கள். எனக்கே உரித்தான தனித்துவமான முயற்சிகளை செய்து வருகிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் மிகவும் திருப்தியோடு இந்த ஊரைவிட்டு செல்வேன் என நினைக்கிறேன். 

அடுத்தபடியாக இந்த ஊரில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள் மனதிற்கு நிறைவாக இருக்கின்றன. கோபால வல்லிதாசர் என்ற ஒரு வைஷ்னவ ஆன்மீக இளைஞர். மிக அருமையாக பக்தி சொற்பொழிவு நிகழ்த்துகிறார். சுகி சிவம் ஒரு ரசனை என்றால் இவரது பேச்சு இன்னொரு தனி சுவை. இந்த மூன்று வருடங்களில் அவரது தொடர் சொற்பொழிவுகளில் ஐந்து ஆறு கேட்டிருக்கிறேன். அத்தனையும் முத்துக்கள், வைரங்கள்...... கடந்த ஐந்து நாட்களாக ராமானுஜ வைபவம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இன்று அட்சய திருதியை. சச்சின் 200 அடித்தபோது என்ன வேகம் இருந்ததோ, நான் எவ்வளவு ஆனந்தப்பட்டேனோ, அந்த மாதிரி இன்று நான் பரவசப்பட்டேன்.

அட்சயதிருதியை ஏன் அவ்வளவு அதி முக்கியமானது. கோபால வல்லிதாசர் கூறுகிறார். அன்றுதான் பரசுராமர் பிறந்தார். அதாவது கொட்டம் அடிக்கும் சத்திரியர்களை நல்முறை படுத்த எடுத்த ஒரு எழுச்சி. திரேதா யுகம் தொடங்கிய நாள். அதாவது எல்லா மக்களும் நன்மக்களாக வாழ்ந்த ஒரு காலம். சுதாமன் கொடுத்த ஒரு பிடி அவலை கண்ணன் உண்டு களித்த நாள். அதாவது தரித்திரம் பிடித்தவன் ஒரு எளிய தானம் செய்ய, அதற்கு ஆண்டவன் கருனை காட்ட, அவன் குடும்பத்திற்க்கு ஐஸ்வர்யம் வந்த நாள். தன்னிடம் இருக்கும் ஒரு சிறு தனத்தை கொடுக்கும் போது குபேரன் நம் வீட்டில் குடிபுகிறான். 

எனவே தங்கம் வாங்குவது ஒரு சுயநலம். இந்நாளுக்கு எதிரான ஒரு ஆகாத செயல். அதாவது ஒரு கோயிலில் போய் அப்பிரதட்சினமாக சுற்றுவது எவ்வளவு ஆகாத செயலோ அந்த மாதிரி. தந்தையின் பிணம் கிடக்கும் போது ஆடிப்பாடி மகிழ்வது மாதிரி (இது என் சொந்த சரக்கு). தர்மம் செய்து ஐஸ்வர்யத்தை பெருக்குவதுதான் அட்சயதிருதியை. தர்மம்தான் பிரதானம். கிடைக்கும் ஐஸ்வர்யம் அவன் கொடுப்பது. எனவே தங்கம் வாங்கி வீட்டில் வைப்பது, சனாதன தர்மத்திற்கு எதிரானது. 

ஒரு வேளை தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று தோண்றிவிட்டால், ஒரு திருமணம் ஆகாத ஒரு ஏழை பெண்ணை (உங்கள் உறவினராகக் கூட இருக்கலாம்) கூடவே அழைத்து போய் அவர்களுக்கு தானமாக கொடுங்கள். இது அதி விஷேஷம். அந்த ஏழைப் பெண், என் பெண்தான் என்று ஜல்லியடிக்காதீர்கள் (இதுவும் என் சரக்கே). சரி போகட்டும், வாங்கியது வாங்கியாகிவிட்டது. கூடிய சீக்கிரம் ஒரு தர்ம காரியத்தை நிறைவேற்றி, செய்த ஆகாத காரியத்திற்கு பரிகாரம் செய்து விடுங்கள். அடுத்த வருடம் தங்கம் வாங்காதீர்கள். தர்ம காரியம் செய்து, ஒரு நல்ல காரியத்தை தொடங்குங்கள். இந்த பதிவை எவ்வளவு மக்களுக்கு பார்வேர்ட் செய்ய முடியுமோ அவ்வளவு செய்யுங்கள். எந்த ஒரு பத்திரிக்கையும் இதை செய்ய முன் வராது. காரணம், அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரம் போய்விடும். சோஷியல் நெட்வொர்க்தான் செய்யமுடிய்ம். ப்ளீஸ்.....

No comments: