Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, 10 May 2012

ரகசிய காமிரா

பத்திர பதிவு அலுவலங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படும். நித்யா நந்தா சாமியார்களின் படுக்கை அறைகளில் சி.சி.டி.வி. பொருத்த வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். இவைகளால் எதுவும் மாறப் போவதில்லை. சார் பதிவாளர் அலுவலகங்களில் எங்கு காமிரா இருக்கிறது, அதன் வீச்சு எதுவரை என்று லஞ்சம் வாங்குபவர்கள் தெரிந்து கொள்வார்கள். அதன் வீச்சு இல்லாத இடத்தில் லஞ்சம் வாங்குவதை தொடர்வார்கள். சாமியார்கள் ஒரு படுக்கையறையில் காமிரா பொருத்துவிட்டு இன்னொரு காமிரா இல்லாத அறையில் சல்லாபம் செய்யமுடியுமல்லவா? யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள் இவர்கள்?

விளம்பரங்களில் கேவலமானவை, நல்லவை

ரொம்ப மட்டரகமான விளம்பரம் என்று யுனிவர் செல்லின் விளம்பரத்தை சொல்லலாம். நம்மோடு இவ்வளவு காலமாக பழகிய ஒரு பொருளை இப்படியா விடை கொடுப்போம். ஹோம குண்டத்தில் போடுவது, வாஷிங் மெஷினில் போடுவது, பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் போடுவது என்று கடுப்பேற்றும் காட்சிகள். என்ன எதிர்மறையான சிந்தனை? இதை விட மஹா மட்டமான விளம்பரம் இருக்கமுடியாது.

அடுத்த கேவலமான விளம்பரம், கனவன் இல்லாத போது கள்ள காதலன் வந்துவிடுகிறான். திடீரென கனவனும் வந்து விடுகிறான். கள்ள காதலன் வி.ஐ.பி. ஸ்ட்ராலி பேக் விற்பனையாளன் மாதிரி நடித்து கொண்டே ஜன்னல் வழியாக தப்பித்து ஓடிவிடுகிறேன். இந்த மாதிரி விளப்பரம் எடுத்தவர்களை கழுவில் ஏற்றினால் என்ன?

கேவலமான இரண்டு விளம்பரங்களை பற்றி சொல்லிவிட்டு நல்ல விளம்பரங்களை சொல்லாமல் விட்டால் எப்படி? காட்பரி சாக்லெட்டின் இனியதொரு ஆரம்பம் என்ற தலைப்பில் சில மாதங்கள் முன்னால் வந்த விளம்பரம் நான் சொல்லப்போவது. ஒரு பெண் வீட்டை விட்டு ஓடிப்போக தன் காதலன் காரில் கனத்த சோகத்துடன் அமர்ந்து, "ம்... போ" என்கிறாள். அதற்கு முன்னால் பின்னால் இருப்பவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு போகலாமே என்று சொல்லி கார் லைட்டை போடுகிறான் காதலன். பின்னால் அவள் அப்பா, அம்மா, சகோதரன். அப்பா, "போகிறதுதான் போகிறாய், ஒரு இனிய ஆரம்பத்துடன் தொடங்கு என்று காட்பரி சாக்லெட்டை நீட்டுகிறாள். அப்போது அந்த பெண் காட்டும் முக உணர்ச்சிகள் பிரமாதம். கொஞ்சம் அதிர்ச்சி. அதிர்ச்சியை தொடர்ந்து மகிழ்ச்சி. அதை விட அந்த சகோதரன், ஓகே. ஓகே. பரவாயில்லை, சாக்லெட் சாப்பிடு என்று சைகை காட்டுவதும் பிரமாதம். மொத்தத்தில் அந்த விளம்பரம் ஒரு உணர்ச்சி குவியல். இன்னும் ஒரு ரசனையான விஷயம், அந்த பெண் வீட்டை விட்டு வரும் போது தனது டெட்டி கரடியை எடுத்துக் கொண்டு கடைசியாக தன் குடும்ப போட்டோவை பார்த்துவிட்டு வருவாள். அதன் பிறகு அந்த தீமில் வந்த எந்த விளம்பரங்களும் மனசில் நிற்கவில்லை.·

Wednesday, 2 May 2012

எல்லாரும் திருந்திட்டாங்களாம்!!!!!

 கொஞ்ச நேரத்துக்கு முன்னால் என் நண்பன் ஒரு ஈமெயில் தட்டியிருந்தான். அதை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். "மாமு, மேட்டர் கேள்வி பட்டியா? இல்லேன்னா, எல்லா நியூஸ் சேனலையும் பாரு. பார்லிமென்ட்ல எல்லா எம்.பி.க்களும் ஒன்னா ஒரு தீர்மாணம் போட்டிருக்காங்களாம். இனிமே ஊழலே நடக்காமா பார்த்திக்குவோம். ஊழல் ஆசாமிங்க யாரா இருந்தாலும் இன்னும் இரண்டே வாரத்திலே அவிங்களை கோர்ட்ல நிறுத்துவோம்னு தீர்மானமே போட்டுட்டாங்க. அதுவும் பாஸ் ஆயிடுச்சு. இப்ப ராஜ்ய சபாவில மேட்டர் ஓடிக்கிட்டு இருக்கு. ஒடனே சுறுசுறுப்பான நம்ம பிரதமர், யார் யார் வெளிநாட்ல துட்டு வைச்சிருக்காங்களோ அவிங்க இன்னும் ரெண்டே வாரத்துல புட்டு புட்டு வைச்சிட்டா தப்பிப்பாங்க. இல்லேன்னா, கம்பி என்ன வேண்டியதுதான்னு அறிவிச்சிட்டாராம். இது மட்டுமா? இன்னும் என்னன்னவோ ஆயிகிட்டு இருக்குது. எல்லா ஸ்டேட்டுலேயும் இதே மாதிரி எம்.எல்.ஏக்களும் தீர்மானம் போடப் போறாங்களாம். ஊழல் இல்லென்னா, லஞ்சத்துக்கு எங்கே வேலை? அதனால நாங்க லஞ்சத்தை ஒட்டு மொத்தமா ஒழிப்போம். அப்படியும் லஞ்சம் வாங்குறவங்களை புடுச்சு கொடுப்போம்னு ஒவ்வொரு அதிகாரிகள் யூனியனும் பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்காங்க. என்னால நம்பவே முடியலைடா. பார்த்து மெர்சலாயிட்டேன்" இப்படி ஒரு மெயில் வந்தால் தலை கிறுகிறுக்காது. நானும் முட்டாள் மாதிரி எல்லா சேனலையும் பார்த்தேன். ஒன்னும் அந்த மாதிரி இல்லை. மீண்டும் இன்பாக்ஸை திறந்தால், " மாமு. நேத்து சங்கர் படம் பார்த்தேன். அடுத்தாப்பல ஏதோ படம் எடுக்க ரூம் போட்டு யோசிக்கிறாங்களாம். சரி, என்னால ரூமெல்லாம் போடமுடியாது. அதனால மோட்டு வளையை பார்த்துக்கிட்டே யோசிச்சேன். அதான் மேட்டரு". டாஸ்மாக் சரக்கு அடிச்சிட்டு கவுத்து கெடக்கறனுங்க, எதுக்கு சங்கர் படம் பார்க்கனும்? அது சரி, மே 1ம் தேதி எப்படி சரக்கு கெடைக்கும்? இது ஒரு மேட்டரா? அட போய்யா!

Thursday, 26 April 2012

ஊடகங்களின் உள்குத்து - அட்சயதிருதியை

அட்சயதிருதியை நகை வியாபாரம் ஒரு கூட்டு கொள்ளை. நகை வியாபாரிகள் தங்கள் கொள்ளையை அரங்கேற்ற வேண்டுமென்றால் ஊடகங்களின் துனை தேவை. ஊடகங்களுக்கும் விளம்பரம் கிடைப்பதால் அவர்களும் அந்த கொள்ளையில் பங்கு கொள்கிறார்கள். எல்லா அச்சு ஊடகங்களும், அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று ஐதீகம் என்ற பொய் பல்லவியை வைத்து ஸ்பெஷல் பக்கங்கள் போட்டிருக்கின்றன. ஐபிஎல் வியாபாரம் நடக்கும் போது அட்சய திருதியை வியாபாரம் எம்மாத்திரம். மூட மக்கள் இருக்கும் வரை கொள்ளையர்கள் கொள்ளையடிப்பார்கள்.

அட்சயதிருதியை என்ற ஒரு தர்ம சிந்தனையை ஒரு வியாபார உக்தியான அவலத்தை நான் ஒரு பத்தியாக எழுதியதற்கு, என் அருமை நண்பர் மக்களை 'இடியட்' என்று எப்படி சொல்லலாம் என்று கோபித்துக்கொண்டார். இடியட் என்பவன் யார்? யார் சொல்பேச்சை அப்படியே கேட்டு, மூளைக்கு கொண்டு பொய் அலசி ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொள்பவன்தான் மூடன். ஆங்கிலத்தில் இடியட். இன்று அட்சயதிருதியை விஷயத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மூளை சலவை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. என் விவசாய நண்பர் இன்று என் வீட்டுக்கு மதியம் வந்தார். பிடித்த மழை விடவில்லை. ஆனால் அவர் நிம்மதியற்று பொறுமையிழந்து கொண்டிருந்தார். என்னவென்று கேட்டேன். "இன்று அட்சய்திருதியை, பாங்கில் போய் இரண்டு தங்க காசு அவசியம் வாங்க வேண்டும். ஆர்டர் செய்திருக்கிறேன், வீட்டம்மா உத்திரவு" என்றார். நான் அவருக்கு பால பாடம் எடுத்தேன். ஆனால் அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. "தங்கம் வாங்கனும், அப்படி செஞ்சாத்தான் குடும்பம் செழிக்கும்னு எல்லாரும் சொல்றாங்க" என்றார். இன்றைக்கு லட்சக்கணக்கான மக்களை அவர்களுக்கே தெரியாமல் இடியெட்டுக்களாக ஆக்கியிருக்கிறார்கள். கோபலவல்லிதாசர் அருமையான ஒரு விஷயத்தை எடுத்துரைத்தார். பிரிடிஷ் வருவதற்க்கு முன்னால் உணவு விற்பது ஒரு பாபகரமான செயலாக இருந்தது. கிடைக்கும் ஐஸ்வர்யத்தில் ஒரு பகுதியை உணவாக மக்களுக்கு கொடுப்பது சத்ரிய மற்றும் வைசிய தர்மமாக இருந்தது. காலப்போக்கில் ஒரு தர்ம சிந்தனையே ஒரு வைசிய தொழிலாக ஆகிவிட்டது

கோபல வல்லிதாசரும் அட்சய திருதியையும்

எனக்கு தூத்துக்குடிக்கு மாறுதல் கிடைத்தபோது, நான் அவ்வளவாக மகிழ்ச்சியடையவில்லை. நான் எதிரிபார்த்தது, பெரம்பலூர் அல்லது கடலூர். ஆனால் எனக்கு வாய்த்தது தூத்துக்குடி. ஆனால் வந்து பிறகுதான் நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறேன் என்று புரிந்தது. கடந்து போயிருக்கும் இந்த மூன்று ஆண்டுகளும் என் வாழ்நாளில் மிக மிக மிக மகிழ்ச்சியான நாட்கள். நான் சமுதாய பணிகளில் என்னென்ன செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினேனோ அனைத்தையும் பார்த்துவிட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் அடிக்கடி சந்திக்கும் மக்கள் வெள்ளந்தியான அருமையான மக்கள். எனக்கே உரித்தான தனித்துவமான முயற்சிகளை செய்து வருகிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் மிகவும் திருப்தியோடு இந்த ஊரைவிட்டு செல்வேன் என நினைக்கிறேன். 

அடுத்தபடியாக இந்த ஊரில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள் மனதிற்கு நிறைவாக இருக்கின்றன. கோபால வல்லிதாசர் என்ற ஒரு வைஷ்னவ ஆன்மீக இளைஞர். மிக அருமையாக பக்தி சொற்பொழிவு நிகழ்த்துகிறார். சுகி சிவம் ஒரு ரசனை என்றால் இவரது பேச்சு இன்னொரு தனி சுவை. இந்த மூன்று வருடங்களில் அவரது தொடர் சொற்பொழிவுகளில் ஐந்து ஆறு கேட்டிருக்கிறேன். அத்தனையும் முத்துக்கள், வைரங்கள்...... கடந்த ஐந்து நாட்களாக ராமானுஜ வைபவம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இன்று அட்சய திருதியை. சச்சின் 200 அடித்தபோது என்ன வேகம் இருந்ததோ, நான் எவ்வளவு ஆனந்தப்பட்டேனோ, அந்த மாதிரி இன்று நான் பரவசப்பட்டேன்.

அட்சயதிருதியை ஏன் அவ்வளவு அதி முக்கியமானது. கோபால வல்லிதாசர் கூறுகிறார். அன்றுதான் பரசுராமர் பிறந்தார். அதாவது கொட்டம் அடிக்கும் சத்திரியர்களை நல்முறை படுத்த எடுத்த ஒரு எழுச்சி. திரேதா யுகம் தொடங்கிய நாள். அதாவது எல்லா மக்களும் நன்மக்களாக வாழ்ந்த ஒரு காலம். சுதாமன் கொடுத்த ஒரு பிடி அவலை கண்ணன் உண்டு களித்த நாள். அதாவது தரித்திரம் பிடித்தவன் ஒரு எளிய தானம் செய்ய, அதற்கு ஆண்டவன் கருனை காட்ட, அவன் குடும்பத்திற்க்கு ஐஸ்வர்யம் வந்த நாள். தன்னிடம் இருக்கும் ஒரு சிறு தனத்தை கொடுக்கும் போது குபேரன் நம் வீட்டில் குடிபுகிறான். 

எனவே தங்கம் வாங்குவது ஒரு சுயநலம். இந்நாளுக்கு எதிரான ஒரு ஆகாத செயல். அதாவது ஒரு கோயிலில் போய் அப்பிரதட்சினமாக சுற்றுவது எவ்வளவு ஆகாத செயலோ அந்த மாதிரி. தந்தையின் பிணம் கிடக்கும் போது ஆடிப்பாடி மகிழ்வது மாதிரி (இது என் சொந்த சரக்கு). தர்மம் செய்து ஐஸ்வர்யத்தை பெருக்குவதுதான் அட்சயதிருதியை. தர்மம்தான் பிரதானம். கிடைக்கும் ஐஸ்வர்யம் அவன் கொடுப்பது. எனவே தங்கம் வாங்கி வீட்டில் வைப்பது, சனாதன தர்மத்திற்கு எதிரானது. 

ஒரு வேளை தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று தோண்றிவிட்டால், ஒரு திருமணம் ஆகாத ஒரு ஏழை பெண்ணை (உங்கள் உறவினராகக் கூட இருக்கலாம்) கூடவே அழைத்து போய் அவர்களுக்கு தானமாக கொடுங்கள். இது அதி விஷேஷம். அந்த ஏழைப் பெண், என் பெண்தான் என்று ஜல்லியடிக்காதீர்கள் (இதுவும் என் சரக்கே). சரி போகட்டும், வாங்கியது வாங்கியாகிவிட்டது. கூடிய சீக்கிரம் ஒரு தர்ம காரியத்தை நிறைவேற்றி, செய்த ஆகாத காரியத்திற்கு பரிகாரம் செய்து விடுங்கள். அடுத்த வருடம் தங்கம் வாங்காதீர்கள். தர்ம காரியம் செய்து, ஒரு நல்ல காரியத்தை தொடங்குங்கள். இந்த பதிவை எவ்வளவு மக்களுக்கு பார்வேர்ட் செய்ய முடியுமோ அவ்வளவு செய்யுங்கள். எந்த ஒரு பத்திரிக்கையும் இதை செய்ய முன் வராது. காரணம், அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரம் போய்விடும். சோஷியல் நெட்வொர்க்தான் செய்யமுடிய்ம். ப்ளீஸ்.....

டிரைவிங் லைசன்ஸ் வாங்கலையோ?

இன்று காலையில் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு போனேன். எனக்கு 50 வயது ஆகிவிட்ட காரணத்தால் தற்போதைய ஓட்டுனர் உரிமம் காலவதியாகிவிட்டது. புரோக்கர்கள் இல்லாமல் நேரடியாக புதுப்பிக்கும் உரிமம் பெறுவது என்ற முடிவோடு போனேன். தேவையான பாரம்ங்களை நெட்டிலிருந்து டவுண்லோடு செய்து கொண்டேன். அதன் படி நேற்று இரவு கால்கடுக்க ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டரிடம் சர்டிபிகேட் வாங்க காத்திருந்து வாங்கினேன். தெரியாத்தனமாக எனது பெயரையும், எனது மச்ச விவரங்களையும் நானே எழுதிவிட்டேன். அதை பார்த்ததும் டாக்டர் பொங்கிவிட்டார். அந்த பார்ம் முழுவதும் அவர்தான் நிரப்ப வேண்டுமாம். தவிர மா.வ.போ.அலுவலகத்துக்கு வெளியே விற்க்கும் பார்ம்தான் சரி, டவுண்லோடு பார்ம் சரியில்லை என்று மீண்டும் அனல் கக்கினார். ராஜேந்திரகுமார் கதையில் வரும் கதாபாத்திரம் மாதிரி 'ஞே' என்று விழித்தேன். ஏதோ கருனை செய்து கையெழுத்து போட்டு, ஐம்பது வாங்கிக் கொண்டார். நாளை எப்படி நடக்கப் போகிறதோ என்று வயிற்றை கலக்கியது.

மா.வ.போ.அலுவலகம் போனதும் யாரை கேட்பது என்று தெரியவில்லை. என்னுடன் வந்த நண்பருக்கு தெரிந்த ஒரு க்ளார்க் பெண்மணியை கேட்டோம். 'எல்காட் பார்ம் எங்கே?' என்றார். அப்படியா? அது என்ன? என்றோம். பின்பக்கம் போய் எல்காட் பார்ம் வாங்கி வாருங்கள் என்றார். ஒரு ரூபாய்தான். அதில் அனைத்து விவரங்களும், அவர்களே நிரப்ப வேண்டும் என்று எழுதியிருந்தது. சரி என்று ஒன்றும் எழுதாமல் போனேன். 'ம். பார்மை நிரப்புங்கள்' என்றார். அப்ப அந்த டாக்டர் சொன்னது? அது டாக்டரோடு போச்சு. கடகடவென்று எழுதினேன். எல்காட் ரூமுக்கு போங்கள் என்றார்.

எல்காட் ரூமில் போனால் வழியெல்லாம் ப்ரோக்கர்கள். எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. எல்காட் ஆசாமி, என் பழைய ஓட்டுனர் உரிமத்தை அப்படியும் இப்படியுமாக பார்த்தார். :இது சென்னை எடுத்தது. தூத்துக்குடியில் செல்லாது. எனவே, சென்னையிலிருந்து தடையில்லா சான்று வாங்கி வாங்க' என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். "வேறு வழியே இல்லையா?" என்று மறுபடியும் 'ஞே' என்று விழித்தேன். அப்போது என்னையே அறியாமல் ஒரு மாஜிக் செய்திருந்தேன். எனது விசிடிங்க் கார்டை முன்னால் இனைத்திருந்தேன். அவருக்கு நபார்டு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மன்மோகன் சிங்கே வந்து மா.வ.போ.அலுவலகத்தில். ஏதாவது கேட்டாலும் அவருடைய பதவி பவிஷூ எடுபடாது, நாம் எந்த மூலை என்று நினைத்திருந்தேன். 'வேண்டுமானால் ஆர்.டி.ஓவை பாருங்கள்' என்று எனது அனைத்து காகிதங்களையும் என்னிடம் திருப்பி கொடுத்துவிட்டார்.

ஆ.டி.ஓ. காபினுக்கு போய் எனது விசிடிங் கார்டை நீட்டினேன். என்ன அதிசயம்! அவர் இன்முகம் காட்டி என்னை உட்காரச் சொல்லி, விசாரித்தார். சென்னை மேட்டருக்கு ஒரு அபிடவிட் கொடுக்கச் சொன்னார். பெல் அடித்து பியூனை வரவழைத்து ஸ்டாம்ப் பேப்பர் வாங்கி வரச் சொன்னார். வந்ததும் அபிடவிட்டை எழுதி கொடுத்தேன். பணம் நான் கொடுக்க பியூன் போய் கட்டி வந்தார். நேராக எல்காட் ரூமுக்கு போய் போட்டோ எடுத்துக் கொண்டேன். அரை மணி நேரத்தில் எனக்கு புதுப்பிக்கப்பட்ட லைசன்ஸ் கிடைத்து விட்டது.
 
 இரண்டு விஷயங்கள் நிரூபணம் ஆனது.
 
1. நபார்டின் விசிடிங் கார்டுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. 
 
2. மா.வ.போ.அலுவகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.·

Sunday, 22 April 2012

அட்சய திருதியை

நாளைக்கு அட்சய திருதியை. தயவு செய்து யாரும் தங்கம் வாங்கி சொத்து சேர்க்காதீர்கள். பீடைதான் பிடிக்கும். முடிந்தால் யாருக்காவது தானம் செய்யுங்கள். நம் தர்மத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அரை பவுனாவது தங்கம் வாங்குவேன் என்று அடம் பிடித்தால் அதை வாங்கி ஒரு ஏழைக்கு தானம் செய்துவிடுங்கள். நான் எழுதி தருகிறேன். உங்கள் குடும்பதிற்கு நல்லது நிச்சயம் நடக்கும்.

ஜெயமோகன்

இன்று கூந்தல் என்ற ஜெயமோகனின் சிறுகதை ஒன்றை படித்தேன். அடுத்த கதையை என்னால் படிக்க முடியவில்லை. என்னமாய் எழுதியிருக்கிறார்! கூந்தலை விரும்பும் ஒரு பெண் விதவை. ஆனால் சமூகம் அவளுக்கு கூந்தலை வைத்துக் கொள்ளும் உரிமையை மறுக்கிறது. அவள் தூங்கும் போது தன் மண்டைக்குள் கூந்தல் வளர்வதை உணர்கிறாள். மயிர் மழிக்கப்படும் போது துடித்துப் போகிறாள். ஆனால் அவளுடைய கொள்ளு பேத்திக்கு கூந்தலே சுமையாய் இருக்கிறது. கூந்தலை வெட்டி எறிய வேண்டும் என்று நினைக்கிறாள். வெட்டினால் டைவர்ஸ் என்கிறான் கனவன். வேதனையில் அவளே கத்திரிக்கோலை எடுத்து சிரமப்பட்டு தன் முடியை வெட்டி ஒரு பைக்குள் போடுகிறாள். ஜெயமோகன், ஒரு நல்ல படைப்பை கொடுத்தமைக்கு நன்றி. டெயில் பீஸ். இந்த கதை குமுதத்தில் வந்தது. ம்... என்ன கொடுமைடா சாமி!

Saturday, 21 April 2012

இடைத் தேர்தல்

சங்கரன் கோயில் தேர்தல் முடிந்த பிறகு ஒரு மைக்செட்காரரை சந்திக்க நேர்ந்தது (என்னை சந்திக்க வந்த விவசாயின் சகோதரர் அவர்).தேர்தலை பற்றி பேச்சு திரும்பியது. ' சார். ஒரு மாசம் செம பிசினெஸ். ராப்பகலா நல்லா சம்பாரிச்சோம்' என்றார். இதே மாதிரி உணவு தயாரிப்பாளர்கள் பலரும் தூத்துக்குடியிலிருந்து சங்கரன் கோயில் போய் நன்கு கல்லா கட்டியிருக்கிறார்கள். எல்லா லாட்ஜுகளும் நிரம்பி வழிந்தனவாம். இஸ்திரிகாரகள் பிழைத்தார்கள். தண்ணீர் விற்றவர்கள் பிழைத்தார்கள். அவர் அடுத்து சொன்னதுதான் நம் ஜனநாயக சீறழிவை காட்டியது. 'சார் அடுத்து எங்கையாவது இடைத் தேர்தல் வருதா சார் ?" என்ற அவரின் கேள்வியை வேறுவிதமாக சொல்லலாம். "யாராவது எம்.எல்.ஏ. செத்து போயிருக்காங்களா?' அவர் மட்டுமல்ல, தமிழகத்தில் பல ஏழை எளிய மக்கள், சிறு உறுபத்தியாளர்கள், வியாபாரிகளின் எதிர்பார்ப்புகள் இப்படி இருக்கின்றன.  அவர் அந்த மாதிரி கேட்டு ஒரு வாரத்தில் புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. நம் எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

பாவம் ஆடுகள்

 தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி பயணித்தபோது மனசை நெருடும் ஒரு விஷயத்தை காணநேர்ந்தது. தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் லாரிகள் மக்காச்சோளம் போன்ற உணவு பொருட்களை ஏற்றி வருகின்றன. ஆனால் மிக பாதுகாப்பாக கொண்டு வராமல் வழியெல்லாம் சிந்த விடுகிறார்கள். சிந்தும் சோள மணிகளை தின்பதற்கு நிறைய ஆடுகள் இங்கும் அங்குமாக அலைகின்றன. ஒரு குட்டி ஆடு இன்று வாகனத்தில் அடிபட பார்த்தது. ஆடுகளுக்கு இது போல இலவசமாக உணவு கிடைத்து ஓசியில் அதன் உடம்பு கொழுத்தால் நல்ல கறி கிடைக்கும் என்று ஆடுகளின் சொந்தக்காரர்கள் இப்படி ஆடுகளை அவிழ்த்து விடுகிறார்கள் யாரை குற்றம் சொல்ல?

நாத்திகம் ஏன் வளரவில்லை?

இருபது வயதில் நாத்திகனாக இருப்பது அதியசமில்லை. அதே மாதிரி நாற்பது வயதில் நாத்திகனாக இல்லாமல் இருப்பதும் அதியசமில்லை என்ற சொல் வழக்கு உண்டு. நாத்திகம் என்பதை மிக தெளிவாக விளக்க வேண்டுமென்றால், இருப்பதை ஏற்றுக்கொள்ளாதது அல்லது இல்லாது இருப்பதை ஏற்றுக் கொள்வது என்பதாகும். 'அது' இருக்கா ? இல்லையா? என்பதை வைத்தே மேற் கூறிய வாக்கியத்தின் உண்மைத் தண்மையை தீர்மானிக்க முடியும். அது என்று சொல்லும்போதே இருக்கிறது என்றாகிவிடுகிறது என்பார்கள் ஆத்திகர்கள். நாத்திகர்களோ நீங்கள் சொல்வது மாதிரி 'அது' ஒரு சூப்பர் போலீஸ் இல்லை. அது வெறுமனே இயங்கி கொண்டோ அல்லது இயங்காமல் இருந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

எவ்வளவோ அறிஞர்களும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் எடுத்துரைத்தும், செயல்விளக்கம் காட்டியும் (மூளை சலவை செய்தும்) நாத்திகத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிலிருந்து கழன்று கொண்டவர்களே அதிகம். அதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது சமூக நிர்பந்தங்கள், வாழ்வியல் சவால்கள்.

ஆத்திகத்தை எடுத்துக் கொண்டால் அது நம்பிக்கையை பொறுத்து இருக்கிறது. அவர்களை கேட்டால் அது நம்பிக்கையல்ல, உண்மை என்பார்கள். தீவிரமாக ஒரு சிந்தனையை பற்றிக் கொள்ளும் போது நம்பிக்கையும், உண்மையும் இரண்டற கலந்து விடுகின்றன.

நாத்திகம் என்பது என்னவோ இந்து மதத்திற்கு மட்டும் உரித்தானது இல்லை. எல்லா மதங்களிலும் எதிர்மறையாளார்கள் இருக்கவே செய்கிறார்கள். ஒன்று, சத்தம் போடாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். அல்லது, எதிர்த்து நின்று மாற்று இயக்கம் காண்கிறார்கள். ஆக, பிற மதங்கள் எல்லாம் ஒரு தொகுப்பு கட்டளைகளாக இருக்கின்றன. எதிர்ப்பவர்களுக்கு அங்கு இடமில்லை. இந்து மதம் என்பதோ ஒரு மதமே இல்லை. இது ஒரு வாழ்வு முறை. பன்முனை நம்பிக்கைகளுக்கு இங்கே இடமுண்டு. எனது கடவுள் சாராயம் சாப்பிடும், பீடி குடிக்கும் என்று நம்பி அந்த மாதிரி விருந்து அதற்கு படைக்கலாம் என்றால் அது சுடலை மாடன் மாதிரி இருக்கலாம். இல்லை, இல்லை, எங்களது கடவுள் சாந்தமானவர், கொழுக் மொழுக் என்று எங்களைப் போன்று இருக்க வேண்டும் என்றால் அவர்களது கடவுள் அப்படியே இருக்கும். பெரும்பாலான பிராம்ண கடவுள்கள் அப்படித்தான் இருக்கின்றன. இல்லை, கடவுளே கிடையாது, மனசுதான் கடவுள் என்றால், அப்படியும் இருக்கலாம். அதற்காக அவர்கள் வெளியேற்றப்படுவது இல்லை. ராமாயணத்தில் ராமரிடம் நாத்திக தர்கம் செய்யும் ஜபாலி என்ற கதாபாத்திரம் வருகிறது.

தமிழ் நாட்டில் நாத்திகம் வளர்ந்த அளவுக்கு மற்ற மாநிலங்களில் அது வளரவில்லை. இங்கு சமூக மாற்றத்தை உருவாக்க கடவுள் மறுப்பு ஒரு கடவு சொல்லாக இருந்தது. அதிகாரங்களும், பணபலமும் ஆத்திகத்துக்கு அடையாளம் காட்டக் கூடிய ஒரு பிரிவினரை அதாவது பிராமினர்களை சார்ந்து இருந்தது. அவர்களின் சமூகப் பார்வை மனிதாபிமானத்துக்கு முரணாக இருந்தது. அவர்களின் செயல்பாட்டில் தீண்டாமை தலை தூக்கியிருந்தது. எனவே, நாத்திகம் விறுவிறுவென வளர்ந்தது. எனவே கோயிலையும் அதில் உள்ள கடவுளையும் மறுத்தால் அங்கு பிராமணர்களின் பிடிப்பு அற்று போகும் என்ற எண்ணத்தில் அது செயல்பட்டது. தீண்டாமையை மிகவும் வலியுறுத்தி வந்த அந்த கால பிராமணர்களின் போக்கு அவர்களுக்கு இலக்கானது.

ஆனால் இன்றைய நிலமை என்ன? அன்று இருந்த அதிகாரமும், பணபலமும் இன்று பரவலாகப்பட்டு இருக்கின்றன. இண்றைய சமுதாய முரண்பாடுகளுக்கு காரணங்களாக இருப்பவர்களாக அவர்களை மட்டுமே சொல்லிவிட முடியாது. சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகம் வராமல் தடுத்தவர்கள் அவர்கள் அல்லவே? அன்றைய அரசு அவர்களின் அடாவடிதனங்களுக்கு பயந்து, எல்லா போக்குவரத்து கழகங்களின் பெயர்களை எடுத்துவிட்டது. இன்று நடக்கும் ஜாதி கலவரங்களில் முக்கியமாக இருப்பது தீண்டாமையே. அதில் பிராமணர்கள் நிச்சயமாக அதிகம் இல்லை. ஜாதி இந்துக்கள் என்று ஒரு பிரிவினரும் தலித்துகளும்தான் அடிக்கடி முட்டிக் கொள்கிறார்கள்.

அரசியலிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. எந்த அமைப்பை எதிர்த்தார்களோ அந்த அமைப்பிலிருந்து வந்த பெண் இன்று ஒரு திராவிட கட்சிக்கு தலைவி. அ.இ.அ.தி.மு.கவில் திருநீறு மற்றும் குங்குமம இட்டுக் கொள்வது ஒரு கொள்கையாகவே ஆகிவிட்டது. தி.மு.க.விலோ தலைவர் மட்டுமே நாத்திகம் பேசுகிறார். அவரது மருமகளோ திருவாரூர் கோயிலில் கைகூப்பி நிற்கிறார். திராவிடம் என்பதற்கு அர்த்தமே இன்று பலருக்கு புரிவதில்லை. புரிந்து கொள்வதிலும் ஆர்வமில்லை.

சமூகமும், அரசியலும் நாத்திகத்தை கழற்றி விட்டன. இனி இருப்பது பொருளாதாரம் தான். நாத்திகத்துக்கு என்னவாயிற்று ?

நாத்திகம் அறிவு சார்ந்த விஷயம். கிட்டதட்ட ஆத்திகத்தின் ஞான மார்க்கத்தை ஒட்டிச் செல்வது. இதில் கேளிக்கைகளுக்கு இடமில்லை. திணிக்கப்படும் பண்டிகைகள் இல்லை. மனசை மயக்கும் இசை இல்லை. என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் இன்னமும் மக்கள் ஆட்டு மந்தை கூட்டங்கள்தான். கஷ்டகாலங்கள் வரும்போது அவர்களை தாங்கிபிடிக்க, ஆறுதல் சொல்ல, நம்பிக்கை காட்ட ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. அங்குதான் நாத்திகம் தோற்றுப் போகிறது.

குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், வந்தவர்கள் கட்சி மாறி போனாலும், இல்லாது இருக்கும் அந்த உண்மை, பொய் என்று ஆகிவிடாது. என்கிறார்கள் நாத்திகவாதிகள்.

ஆத்திகத்தில்தான் என் கூட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் தெரியுமா? என்று சொன்னால், நூறு முட்டாள்களை விட பத்து புத்திசாலிகள் உயர்ந்தவர்கள் என்கிறார்கள் நாத்திகர்கள்.

மிகப் பெரிய கண்டுபிடிப்புகளை செய்தவர்களும், சிருஷ்டியின் மிக அருகில் சென்ற விஞ்ஞானிகளும் ஆத்திகர்களாக இருப்பது விந்தையான ஒரு விஷயம். சச்சின் டென்டுல்கர் ஒரு சாயி பக்தர் என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம்.

விறைப்பாக, அறிவு சார்ந்து நாத்திகம் பேசும் ஒருவன் கூட தனக்கு கஷ்டம் வந்து மருத்தவ மனைகளில் அலையும் போது சிறிதளவு திருநீறு/குங்குமத்துடன் காட்சியளிக்கிறான்.

நாத்திகம் என்பது கசப்பான ஒரு உண்மை. அது நிறைய பேருக்கு பிடிப்பதில்லை.

தேக்கு மரமும் கீதையும்

தூத்துக்குடியில் நான் குடியிருக்கும் வாடகை வீட்டின் வாசலில் ஒரு தேக்கு மரம் இருந்தது. காட்டு மரம் வீட்டில் இருந்தால் வீட்டுக்காரருக்கு ஆகாது என்று யாரோ ஒரு அரைவேக்காடு ஜோசியர் கொளுத்திப் போட சென்னையில் இருக்கும் வீட்டுக்காரர் ஆள் வைத்து அந்த மரத்தை வெட்ட துனிந்தார். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். தேக்கும் முழு வளர்ச்சியும் அடையைவில்லை, வெட்டி விற்றால் கூட ஒன்றும் தேராது என்றும் சொன்னேன். நான் வெளியூர் போயிருக்கும் ஒரு விடுமுறை நாளில், அரசு அனுமதி பெற்று, அந்த மரத்தை, இல்லை, இல்லை, குழந்தையை வெட்டி விட்டார்கள். ஊர் திரும்பியதும் சரிந்து கிடந்த மரத்தை பார்த்து என்னால் வருத்தப்படதான் முடிந்தது.  இரண்டு வாரம் முன்னால் கர்ணன் படம் பார்த்தேன். மரத்தை வைத்தவனும் கண்ணன். வெட்டச் சொன்னவனும் கண்ணன். வெட்டியவனும் கண்ணன். வருத்தப்பட்டவனும் கண்ணன். ஏன்..... மரமும் கண்ணனே என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். என்ன ஆச்சர்யம்.... வெட்டிய இடத்திலிருந்து தேக்கு மரம் துளிர்க்க தொடங்கியிருக்கியிருக்கிறது. ஆத்மாவுக்கு அழிவில்லை என்ற கீதையின் தத்துவதும் இதுதானோ ?

Friday, 20 April 2012

ஆன்மீகம்/சமூகம்

நான் அடிக்கடி அலுவல் நிமித்தமாக தூத்துக்குடியிலிருந்து விளாத்திகுளத்திற்கும் சாத்தான்குளத்திற்கும் போவதுண்டு. அவ்வாறு போகும் போது மிக மிக எளிய மக்கள் கூட்டம் கூட்டமாக திருச்செந்தூருக்கு நடைப்பயணம் போவதை பார்த்திருக்கிறேன். எனக்கு இரண்டு கேள்விகள் மனத்தில் எழுந்தன. இது ஆன்மீகத்தின் வளர்ச்சியா? அல்லது சமூக சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு ஒரு வடிகாலா? இவ்வளவு உடல் வருத்தத்துடன், மன ஒன்றினைப்புடன் செய்யப்படும் இந்த வழிபாட்டு முறைகள் சமூக மாற்றங்களை ஏன் ஏற்படுத்தவில்லை? பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சிதைந்து வரும் குடும்ப உறவுகள், சமூக நல்லிணக்கம் ஆகியவைகளில் முன்னேற்றம் கான இந்த ஆன்மீகம் உதவில்லை. இந்த தீவிர ஆன்மீக செயல்கள் வெறும் சுய நல போக்கின் வெளிப்பாடா? அல்லது வெறும் கேளிக்கைகளா? என்னை பொறுத்தவரையில் சமூக மாற்றத்திற்கு உதவாத ஆன்மிக செயல்கள் கவலையை அளிக்கக் கூடியன. இது ஒரு பக்கம் என்றால் அந்த பக்கத்தில் கோயில்கள் ஒரு வணிக கூடாரங்களாக ஆகி வருகின்றன.

உழவர் பெருவிழா

கிராமம்தோறும் விவசாய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்கும் விதமாக விவசாய உழவர் பெருவிழா நிகழ்ச்சிகளை விவசாய துறை நடத்தி வருகிறது.  ஒரு முக்கியமான விஷயம், இந்த மாதிரி நிகழ்ச்சிகளை கிராமம்தோறும் நடத்த தேவையான விரிவாக்க பணியாளர்கள் விவசாயத் துறையிடம் இல்லை என்பதுதான் உண்மை. உதாரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 408 வருவாய் கிராமங்கள் இருக்கின்றன. 12 வட்டாரங்களில் உள்ள மொத்த அதிகாரிகளே 50ஐ தாண்டாது.  எனவே மற்ற துறைகளில்ருந்து அதிகாரிகளை பிடித்து எப்படியோ நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.  இதில் 13 வகையான விருந்துக்குத்தான் முக்கியத்துவம்.  அடுத்தபடியாக முதலவர் துதிபாடுதல்.  தொழில்நுட்ப்ப பரிமாற்றம் என்பது ஏதோ ஒரு நாளில் நடந்துமுடிகிற விஷயம் அல்ல என்பது இவர்களுக்கு எப்படி புரியவைப்பது? உதாரணமாக மண் பரிசோதனை செய்தல், விதை நேர்த்தி செய்தல். கடந்த பல ஆண்டுகளாக விவசாயத்துறை சொல்லி வருகிறது. ஆனால் இன்றைய தேதியில் எத்தனை சதவிகிதம் இந்த அடிப்படை தொழில் நுட்ப்பம் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது?

கல்வி வியாபாரத்தில் விழும் விட்டில் பூச்சிகள்

ஏதோ பொறியியல் கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, அவர்கள் படித்து, பாஸ் செய்துவிட்டால் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்ற மாயையில் ஏராளமான பெற்றோர்கள் கடனை வாங்கியாவது செலவழிக்க அல்லது லஞ்சம் கொடுக்க அலைகிறார்கள். ஆட்டு மந்தைகள் மாதிரி எல்லோரும் ஓரே மாதிரி இயங்குவது பல சமூக சிக்கல்களை உருவாக்குகிறது. மிகவும் ஏழையான மணிவண்ணன் 26 அரியர்ஸ் வைத்து, மேல் கொண்டு படிப்பை தொடர முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும், தனித்துவமாக திறமை இருக்கிறது. அதில் காசு சம்பாதிக்கும் முறையை உட்புகுத்தி, அவர்களை பெற்றோர்களே வீணாக்குகிறார்கள். சாகடிக்கிறார்கள். எனக்கு தெரிந்து கலைக் கல்லூரிகளில் படித்து விட்டு அதன் பிறகு எம்.பி.ஏ. படித்த பிறகு லட்சலட்ச மாக சம்ப்பாதிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பனம் சம்பாதிக்க பொறியியல் கல்லூரிதான் வாசல் கதவு என்ற மாயை எப்போது அகலும்?

ஆத்திகம்/நாத்திகம்

ஒரு ஆஸ்திகனுக்கு பல வெற்றிகளை தொடர்ந்து ஒரு சில கஷ்டங்களை கொடு. அவனுக்குள் லேசாக நாத்திகம் துளிர்க்கும்.  ஒரு நாத்திகனுக்கு தொடர்ந்து கஷ்டங்களை கொடு.அவனுக்குள் லேசாக ஆத்திகம் துளிர்க்கும். சென்ற மாதம் நான் மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்காக ஒரு மருத்துவ மணைக்கு போயிருந்தேன். தீவிர சிகிச்சை பிரிவின் வெளிப்பகுதியில் காத்திருந்த பெரும்பாலானவர்களின் நெற்றிகளை வீபூதி குங்குமம் இருந்தன. கையில் ஸ்லோக புஸ்தகம். இந்த மாதிரி இடங்களில் நாத்திகம் எப்படி செயல்பட முடியும்? ஞான மார்கமே பின் வாங்கும். பக்தி மார்க்கம்தான் செழித்து வளரும். இந்த வலுவற்ற சூழ்நிலையைதான் பக்தி பிராண்ட் அம்பாசெடர்கள் நன்கு பயண்படுத்திக் கொள்கிறார்கள். ஆத்திகத்தில் மடமை இருக்கிறது. நாத்திகத்தில் வெறுமை இருக்கிறது.

அட்சய திருதியை

அட்சய திருதியை என்பது ஒரு மகத்தான சனாதன தர்மம். அந்நாளில் தர்ம காரியங்கள் பல செய்து, புண்ணியங்கள் சம்பாதித்து, தன் வாழ்வு குறைவில்லா செல்ல வேண்டும், இந்த சமூகமும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. விடுவார்களா நம் வணிகர்கள்? அன்று தங்கம் வாங்கினால் சொத்து சேரும் என்ற பொய்யை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். மேற்கத்திய சிந்தனையில் உள்ள கெடுதலான விஷயங்களுக்கே தொடர்ந்து அடிமையாகி வரும் நம் பெரும்பான்மை தமிழ் சமூகம், அந்நாளில் நகைக் கடைகளில் ஈக்கள் மாதிரி மொய்த்து நிற்கும். தர்மமா? அப்படீன்னா என்ன சார்? துட்டை வலிக்க வழி சொல்லுவீகளா? அதை விட்டுப்புட்டு.......