Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, 9 March 2007

எது நல்ல கதை ? - ஒரு நகைச்சுவை விருந்து


நிலாச்சாரல்.காம் - 01 ஜனவரி 2007

1. டாக்டர்

"கதையோட கரு கலையாம நிலைச்சு நின்னு முடியும்போது நறுக்னு மனசுல தச்ச மாதிரி இருக்கணும்."

2. லிஃப்ட் ஆப்பரேட்டர்

"கதை ஆரம்பிச்சதுலேர்ந்து முடியரவரைக்கும் ஜிவ்னு மேல மேல போய்கிட்டே இருக்கணும்."

3. குத்துச்சண்டை வீரர்

"விறுவிறுப்பா தொடங்கி படிக்கறவங்களை திக்குமுக்காட வைச்சு நெத்தியடியா முடிக்கணும்."

4. குடிகாரன்

"என்னதான் கதை அப்படி இப்படி போனாலும் அதன் மெயின் தீம் ஸ்டெடியா நிக்கணும்."

5. பாத்திர கடைக்காரர்

"கலகலன்னு கதை போய்கிட்டே இருந்து ஒவ்வொரு பாத்திரமும் பளிச் பளிச்னு இருக்கணும்."

6. ஓவியர்

"கதையோட நுனியும் முடிவும் என்னவென்றே தெரியாம வாசகர்களை குழப்பி அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப புரிஞ்சுக்க விட்டுடணும்."

7. லாரி டிரைவர்

"கதை ஸ்பீடா போய்கிட்டே இருந்தாலும் பல அதிரடி திருப்பங்கள் வந்துகிட்டே இருக்கணும்."

8. அரசியல்வாதி

"எடுத்தோம் கவிழ்த்தோம்னு இல்லாம படிப்படியா இதயத்தில இடம்பிடிச்சு மனசை கொள்ளை கொள்ளணும்."

Saturday, 3 March 2007

தருமி 2007


தருமி 2007

நிலாச்சாரல்.காம் - 26 பிப்ரவரி 2007

பேங்க் ஃஆப் டுபாகூர் வங்கியின் சென்னைக் கிளை. நோடீஸ் போர்டில் போட்டிருக்கும் சர்குலரை ஒருவர் சத்தமாக படிக்கிறார். “நம் வங்கி அலுவலர்கோர் நற்செய்தி. நம் சேர்மனுக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் நிலவி வருகிறது. அதை நல்ல ஆபீஸ் நோட் வாயிலாக தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும்.”

தருமி அங்கு வருகிறான். “ஏம்பா. பரிசுத் தொகை எவ்வளவு?”

“ஆயிரம் டாலர்.”

தருமி தனிமையில் புலம்புகிறான். “ஐய்யோ ஆயிரம் டாலராச்சே. ஆயிரம் டாலராச்சே. எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங் காலேஜ் ஃபீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில... கிரெடிட் கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ... அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு போடறதுக்கு முன்னாடி நான் போடனுமே... இந்த சமயம் பார்த்து நோட்டு போட ஒரு ஐடியாவும் வரமாட்டேங்கிறதே. என்ன செய்வேன்? யாரை போய் கேப்பேன்?”

சொக்கன் ஞாபகம் வருகிறது. “சொக்கா.. உன்னை விட்டா வேறு யாரு இருக்கா, ப்ளீஸ் ஹெல்ப் மீ.”

சொக்கன் வருகிறார். “வங்கி அதிகாரியே”

“யாருய்யா நீ”

“நான் யார் என்பது இருக்கட்டும். உமக்கு மட்டும் அந்த நோட் கிடைத்துவிட்டால்...”

“ஆஹா அது மட்டும் கிடைச்சிடுச்சுன்னா என்னோட முக்கியமான பிரச்சனை ஒன்னு தீர்ந்துடும். அட நீயும் அறிவிப்பை கேட்டாச்சா. போச்சு. எல்லாம் போயே போச்சு. போயிந்தே. ஹோ கயா. இட்ஸ் கான்.”

“எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்.”

“என்னது. உன் நோட்டை நான்.. நான்.. எடுத்துகறதா. இங்கப்பாரு நான் பார்க்கறதுக்கு சாதாரணமாக இருக்கலாம். அஞ்சு வருஷத்துல ரெண்டு பிரமோஷன் வாங்கிருக்கேன்.”

“எங்கே. என் திறமையின் மீது உமக்கு சந்தேகம் இருந்தால் சோதித்து பாரேன், உமக்கு திறமையிருந்தால். கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை, நான் கேட்கட்டுமா?”

“ம்ஹூம். எனக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கம். தட்ஸ் ஆல்.”

“எங்கே கேள்விகளை தொடங்கு”

பிரிக்க முடியாதது என்னவோ?
நாமும் நம் கோரிக்கைகளும்

பிரிந்தே இருப்பது?
யூனியனும் மேனேஜ்மென்டும்

சேரக்கூடாதது ?
பிரமோஷனும் டிரான்ஸ்வரும்

சேர்ந்தே இருப்பது ?
ஏடிஎம்மும் டெபிட்கார்டும்

சொல்லக்கூடாதது?
டேக் ஹோம் பே

சொல்லக்கூடியது?
டெல்லர் டோக்கன் நம்பர்

பார்க்க முடியாதது ?
சர்வீஸ் ஃபைல்

பார்த்து ரசிப்பது ?
சம்பள பில்

சம்பளம் என்பது ?
மாதம் ஒரு முறை வருவது

டூர் என்பது ?
அடிக்கடி வருவது

அதிரடி சர்வீசுக்கு ?
சானியா மிர்சா

அபார சிக்ஸ¤க்கு ?
மஹேந்திர டோனி

சூப்பர் ஜோடிக்கு ?
சூர்யா - ஜோதிகா

சண்டை பார்ட்டிக்கு ?
சாப்பல் - கங்கூலி

லோக்கல் டூருக்கு ?
நீ

ஃபாரின் டூருக்கு ?
நான்

“அப்பா ஆள விடு. எனக்கு தெரிஞ்சது இவ்வளவுதான். நீர் தான் சகலகலாவல்லவர். நீங்கள் எழுதிய நோட்டை கொடுங்கள். அதை அப்படியே ஃபார்வேர்ட் செய்கிறேன். “

கொஞ்ச தூரம் சென்றுவிட்டு திரும்பி வந்து. “அது சரி.. பரிசு கொடுத்தால் வாங்கிக்கறேன். மெமோ, சஸ்பென்டு மாதிரி வேறு எதாவது கொடுத்தால்... “

“என்னிடம் வா. நான் பார்த்துக் கொள்கிறேன். “

“என்ன? சஸ்பென்ஷன் ஆர்டரை படிச்சு காட்டவா?”

சொக்கன் சிரிக்கிறான். “கவலைப்படாதே சகோதரா. யூ வில் கெட் த ரிவார்ட்டு. வெற்றி நிச்சயம்.“

“என்ன சிரிப்பைய்யா. உன் சிரிப்பு. சூர்யா மாதிரி சிரிப்பு.”

சேர்மன் செயலகத்தில் உள்ள கான்ஃபரன்ஸ் ஹாலில் தருமி. சேர்மன் கையில் தருமி எழுதிய நோட் இருக்கிறது. “மிஸ்டர் தர்மராஜன் அலியாஸ் தருமி அவர்களே. நீங்கள்தானே இந்த நோட்டை ஃபார்வேர்ட் செய்தது.”

“ஆமாம். உங்கள் ஐயப்பாட்டை நீக்கும் அந்த அற்புத நோட்டை நானேதான் எழுதினேன். “

“எங்கே! நீரே படித்துக் காட்டும்.“

தருமி படிக்க படிக்க சேர்மன் முகம் பிரகாசம் அடைகிறது. “ஆஹா. அம்சமான ஆபீஸ் நோட்டு. ஆழமான கருத்துக்கள். என் டவுட்டை க்ளியர் செய்துவிட்ட சூப்பர் நோட்டு.”

தன் செகரெட்ரியை அழைத்து பரிசை கொண்டுவரச் சொல்லுகிறார். அப்போது ஜி.எம். என். கீரன் எழுந்திருக்கிறார். “சேர்மன் அவர்களே. ப்ளீஸ் வெயிட். அந்த நோட்டில் பிழை உள்ளது.”

“யூ மீன் மிஸ்டேக்.” சேர்மன் திடுக்கிடுகிறார். ஆனால் தருமியோ....

“பிழை இருந்தாலென்ன? எவ்வளவு பிழையோ அவ்வளவு பரிசுத் தொகையை குறைத்துக் கொடுங்களேன்.”

ஆனால் அதற்கு என். கீரன் “மிஸ்டர் தர்மராஜன். நீர்தானே இந்த நோட்டை எழுதியது?“

“எஸ். நானேதான் எழுதினேன். பின்னே ஆபீஸ் கான்டீன்ல யாராவது எழுதிக் கொடுத்ததை கொண்டு வந்து கொடுப்பேனா? நானே... நானேதான் எழுதினேன்.”

“அப்படியானால் அந்த நோட்டில் எழுதியுள்ளதை விளக்கி விட்டு பரிசை பெற்றுச் செல்லுங்களேன்.”

“சேர்மனுக்கே விளங்கி விட்டது. நீங்க யாரு குறுக்கே.”

“நான் இந்த டூபாகூர் வங்கியின் தணிக்கை பிரிவின் தலைவர். என். கீரன். ஜெனரல் மேனேஜர். எமது சேர்மன் மிக சரியான ஆபீஸ் நோட்டுக்கு பரிசளிக்கிறார் என்றால் அதை பார்த்து சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான். அதே நேரத்தில் பிழையுள்ள நோட்டுக்கு பரிசளிக்கிறார் என்றால் அதற்கு வருத்தப்படுபவனும் நான்தான்”

“ஒஹோ. இங்க எல்லாமே நீங்கதானா. ஒரு சில பேர் ஏகப்பட்ட ஃபைல்களை பார்த்து அதையெல்லாம் ரெஃபர் செஞ்சு நோட்டு போட்டு பேர் வாங்குவாங்க. ஒரு சில பேர் போட்ட நோட்டுல எங்கடா குற்றம் இருக்குன்ணு தேடி கண்டு பிடிச்சு பேர் வாங்கிட்டு போவாங்க. இதுல நீங்க எந்த வகையை சார்ந்தவர் என்று உங்களுக்கே புரியும். ஒண்ணு மட்டும் நிச்சயமைய்யா. உங்கள மாதிரி ரெண்டு பேர்.. இல்லை நீங்க ஒருத்தரே போதும். இந்த பேங்க் உருப்பட்டாப்பலத்தான். சேர்மனிடம் சொல்லிவிடுங்கள். எனக்கு பரிசு வேண்டாம். நான் வருகிறேன்.”

தருமி வேகமாக போக என். கீரன் அழைக்கிறார். அழைப்பை நிராகரித்து தருமி இன்னும் வேகமாக ஓட கான்ஃபரன்ஸ் ஹாலில் சிரிப்பலை.

சேர்மன் மிகுந்த சோகத்துடன் அமர்கிறார். “நல்லவேளை. என்னை காப்பாற்றினீர்கள். ஜி.எம். அவர்களே. இல்லையென்றால் என் மீது விஜிலென்ஸ் என்கொயரி வந்திருக்கும். தாங்க்ஸ்.”

அங்கே தருமி புலம்பிக் கொண்டிருக்கிறான். “எனக்கு வேணும். இன்னமும் வேணும். ஐயையோ யாரோ இன்னமும் தொரத்தர மாதிரியே இருக்கே. இனிமே நான் எந்த நோட் போட்டாலும் ஏம்பா இது உன் நோட்டா இல்லே ஆபீஸ் கான்டீனுக்கு வந்த யாராவது எழுதி கொடுத்ததான்னு கேப்பாங்களே. இதுக்குத்தான்... இதுக்குத்தான் கண்டவனை நம்பி காரியத்துல எறங்கப்படாதுங்கறது. மாட்டிக்கிடல்ல. நல்லா அவஸ்த படு. ஏன்டா... ஏன்டா... ஏன்? ஐயோ இப்படி தனியா பொலம்பற அளவுக்கு கொண்டுவிட்டானே. சொக்கா. அவனை எதுக்கு கூப்பிடனும்?. அவனை நம்பாதே. அவன் வரமாட்டான். அவன் இல்லை.”

சொக்கன் வருகிறார். “தருமி. பரிசு கிடைத்ததா?”

“வாய்யா. எல்லாம் கிடைச்சுது. நல்லவேளை டிஸ்மிஸ் செய்யல. நான் உனக்கு என்னையா துரோகம் செஞ்சேன்.”

“வங்கி அதிகாரியே கான்ஃபரன்ஸ் ஹாலில் என்ன நடந்தது?”

“ம்... இதெல்லாம் நல்லா ஏத்த எறக்காமா பேசு. நோட் போடும் போது கோட்டை விட்டுடு.”

“என்ன நடந்தது?”

“உன் நோட்டில் குற்றம் என்று சொல்லிட்டாங்கையா.”

“என் நோட்டில் குற்றமா. சொன்னவன் எவன்?”

“உன் பாட்டன். அங்க ஒருத்தன் இருக்கான். எல்லா சர்குலரும் அவருக்கு அத்துபுடியாம்.”

கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் தருமியும் சொக்கனும் வேகமாய் வருகிறார்கள். சொக்கன் நெருப்பாய் கக்குகிறார். “இச்சபையில் என் நோட்டை குற்றம் சொன்னவன் எவன்?”

சேர்மன் எழுந்து நின்று, “அவன் இவன் என்ற ஏகவசனம் வேண்டாம். ஹவ் சம் டீசன்ஸ்சி. மரியாதையோடு கேள்வி கேட்டால் தக்க பதில் கிடைக்கும்.”

“யார் இந்த கிழவன்?”

“பேங்க் ஃஆப் டுபாகூரின் தலைமை தணிக்கையாளர். என்.கீரன். ஜி.எம். மிகுந்த அனுபவம் உள்ளவர்.”

“அதிகம் அனுபவம் இருந்துவிட்டால் அனைத்தும் அறிவோம் என்ற அகம்பாவமோ.”

கீரன் எழுந்து, “முதலில் நீங்கள் எழுதிய நோட்டை இன்னொருவர் மூலமாக அனுப்பியதின் காரணம்?”

“அது நடந்து முடிந்த கதை. தொடங்கிய பிரச்சனைக்கு வாரும். எங்கு குற்றம் கண்டீர்? ஸ்பெல்லிங்கிலா? அல்லது ஃப்பார்மெட்டிலா?”

“ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தாலும் அவை மன்னிக்கப்படலாம். காரணம் எங்களிடம் எம்.எஸ். வெர்ட் இருக்கிறது. ஸ்பெல் செக் போட்டுக் கொள்வோம். ஆனால் பொருளில்தான் குற்றம் இருக்கிறது.”

“கூறும். கூறிப் பாரும்.”

“எங்கே நீங்கள் எழுதிய நோட்டை சொல்லும்.”

நோட்டைப் படிக்கிறார். “போதும். போர் அடிக்கிறது. சுருக்கமாக சொல்லும். இதனால் தாங்கள் சொல்லவரும் கருத்து...”

“புரியவில்லை? இந்தியாவில் உள்ள மற்ற வங்கிகளில் என்ன Work Culture இருக்கிறதோ அதேதான் நம் வங்கி கிளைகளிலும் உள்ளது என்பதுதான் என் வாதம்.”

“ஒருக்காலும் கிடையாது. இதோ. எங்கள் வங்கி சர்குலர்களின் தொகுப்பு சி.டி இருக்கிறது. இதில் எங்குமே நீங்கள் சொன்ன கல்சர் குறிப்பிடப்படவில்லை. சர்குலர்களில் சொல்லப்படாத எந்த விஷயத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.”

“நிச்சயமாக?”

“சத்தியமாக.”

“நீர் தினம் தினம் பார்க்கும் இன்ஸ்பெக்ஷன் மான்யுவல் மீது ஆணையாக..”

“அதென்ன. ஜுஜுபி மேட்டர். நம் எல்லோரும் மறை பொருளாக மதிக்கும் பேங்கிங் ரெகுலேஷன் ஆக்ட் மீது ஆணைனயாக சொல்கிறேன். அக்ரிகல்சர். ஹார்ட்டிகல்சர்.. இது மாதிரி சில கல்சர்கள் இருக்கிறதே தவிர நீ சொன்ன கல்சர் ஒருக்காலும் இங்கு இருக்க முடியாது என்பதே என் கருத்து.”

“மிஸ்டர் என்.கீரன். நன்றாக என்னை பாரும். நான் யார் தெரிகிறதா?"

சொக்கன் மெதுவாக எம்.ஜி.ஆர். ஸ்டைலில் மீசையை பிய்கிறார். என்.கீரன் திடுக்கிடுகிறார். “. நீங்களே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆகுக. உங்கள் அதிகாரத்தினால் எனது வேலை போனாலும், பென்ஷன் கொடுக்காமல் போனாலும் குற்றம் குற்றமே. குற்றம் குற்றமே.”

“கீரா. தும் ஹோ கயா.”

கீரன் கைகளை உயரே தூக்கி, கண்கள் மூடி....

“நான் வாங்கும் சம்பளம் நாலு நாளைக்குத்தான் போதும்
நாய் பாடு படுவேனே தவிர உம்மைப் போல்
காண்டினில் நோட் டிராஃட் எழுத மாட்டேன்."

சொக்கன் என். கீரனை எரித்துவிடுகிறான்.

சேர்மன் கூவம் நதிக்கரையோரம் ஓடிவருகிறார். “கவர்னர் அவர்களே! என்ன செய்துவிட்டீர்கள்? நீங்கள் போட்ட நோட் என்பது என் புத்திக்கு எட்டாமல் போனது தவறுதான். அவரை மன்னித்துவிடுங்கள்.”

அப்போது சொக்கன் குரல் கேட்கிறது. “சேர்மன் அவர்களே! கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் ஒரு உயர்மட்ட சர்ப்ரைஸ் டெஸ்ட் செய்யவே யாம் நடத்திய நாடகம் இது. மிஸ்டர் என். கீரரை கூவத்தில் போட்டால், என்னால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு நாறிப் போய்விடுவார் என்பதால் அவரை கரையிலேயே விட்டிருக்கிறேன். இன்றைக்கு சனிக்கிழமை. ஆபீஸ் டைம் முடிந்துவிட்டது. நாளை ஹாலிடே. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. திங்கட்கிழமை வழக்கம் போல் என். கீரன் ஆபீஸ் வருவார். அவருக்கு ஒன்னரை நாள் டூர் பேட்டா கொடுத்துவிடு. நான் வரட்டா.”

Thursday, 1 March 2007

நீயும் பார்ட்டி கொடு


நீயும் பார்ட்டி கொடு

2007 பிப்ரவரி 11 குங்குமம்

முட்டை முழி சாரங்கனை ஒரு பேக்குடு என்று நினைத்தது தவறு. சரோஜாவோடு சண்டை போட்டு அவளை ஊருக்கு அனுப்பு என்ற இந்த ஒன் லைனை அவன் ஆரம்பித்ததே செல்வராகவன் படத்தின் முதல் ஸீன் மாதிரி இருந்தது. "ஆத்மா, பொண்டாட்டின்னா சண்டை போடணும்டா. சண்டையே வர்லேன்னா, மேட்டரே வேற" என்றான். என்ன அமர்க்களமான ஓப்பனிங்! அவனுக்கு இல்வாழ்க்கையில் கரைகண்ட வித்தகன் என்ற பட்டத்தை தரலாம். சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

சாதாரணமாக ஆபீஸ் விட்டதும் எங்களை மாதிரியான சம்சாரிகள் சாரை பாம்பு மாதிரி ஒவ்வொருவராக வீட்டுக்கு ஓடுவதுதான் வழக்கம். ஆனால் சில மாதங்களாகவே கொஞ்ச மாறியிருக்கிறது. என்னை விட்டுவிட்டு மற்றவர்களெல்லாம் ரகசியமாய் பேசிக்கொள்கிறார்கள். ஐந்து மணிக்கு அப்புறம் ஆர்கேயையும் ஜேபியையும் ஆபீஸில் பார்ப்பது என்பது நூறு எபிசோடுகளிலேயே முடிந்துவிட்ட சீரியல் மாதிரி. போன வாரம் அவர்களோடு டேனியல் ராஜும் கூட்டணி. திருட்டுப் பயல்கள். உலகத்திலெயே மிக கொடுமையான விஷயம், நண்பர்கள் கூட்டத்தில் காரணம் சொல்லாமல் நம்மை ஒதுக்கி வைப்பதுதான்.

நேற்று என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மழைக்கு முன்னால் அங்கும் இங்கும் பறக்கும் கரப்பான் பூச்சிகளாக மூணு மணியிலிருந்தே மூர்த்தியும் ப்ரகாஷ¤ம் பிஸியோ பிஸி. இவ்வளவிலும் சாரங்கனிடம் கலக்ஷனுக்கு வந்து, அவன் ஸ்டைலாக பர்ஸை பிரித்து ஜொள் ஒழுக கொடுத்த நூறு ரூபாயை கொத்திக் கொண்டு ஓடினார்களே தவிர என்னை கண்டு கொள்ளவேயில்லை. அவர்கள் போனதும், சாரங்கனை பிறாண்டியதில்... மூர்த்தி வொய்ப் டெலிவரிக்கு நேற்று ஊருக்கு போயிருக்கிறாளாம். இன்று அவன் வீட்டில் பார்ட்டியாம். எல்லாம் உண்டாம். ஏன் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டதற்க்கு, அளித்த விவரங்களில் சாரங்கன் எனக்கு கிருஷ்ணனாகவே தெரிந்தான். சில துளிகளை இங்கே கொஞ்சம் சிந்தியிருக்கிறேன். நீங்களும் ஞானம் பெறுவீர்களாக.

ஒரே மனம் இரு உயிர் என்பதெல்லாம் சுத்த பேத்தல். வெறும் இனிப்பே வாழ்க்கை அல்ல. நடுநடுவே காரம் வேண்டும். பொண்டாட்டி ஊர்ல இல்லையென்றால் பல சௌகர்யங்கள். கல்யாணத்துக்கு முன்னால் சுதந்திரமாக சுத்தி திரிந்த ஹாஸ்டல் வாழ்க்கையை மீண்டும் ரீப்ளே செய்யமுடியும். காலையில் இஷ்டம் போல் எழுந்திருக்கலாம். ஷேவிங் பிரஷை உடனே அலம்பி வை என்று யாரும் கண்டிக்கமாட்டார்கள். சத்தமாய் பாட்டு கேக்கலாம். அபஸ்வரமாக பாடலாம். ராத்திரிக்கு எப்போது வேணும்னாலும் வீட்டுக்கு போகலாம். நோ வெஜிடபிள் பர்ச்சேஸ். நோ அழுகாச்சி ஸீரியல்ஸ். இது மாதிரி எவ்வளவோ. அதுவும் சண்டை போட்டுட்டு போவது என்பது பூர்வ ஜன்ம பூஜா பலன். போன பிறவியில் பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிட்டும். சமாதானம் ஆன பிறகு கிடைக்கும் இன்பத்தை எழுத்தில் தேடுபவர்கள் படு அசடுகள். அவர்களுக்காக சொல்லி தொலைக்க வேண்டுமென்றால் தகதக தங்க வேட்டை சட்டியில் உள்ள அனைத்து தங்கக் காசுகளும் அவர்களுக்கே கிடைத்த மாதிரி.

கனவன் மனைவி சண்டையில் ஒருவரை ஒருவர் மொத்திக் கொண்டே பலர் வேடிக்கை பார்க்கச் செய்வது வல்லினம். 'காச்' 'மூச்' என்று கத்திக் கொண்டு ப்ளட் பிரஷர் எகிற கோபாவதாரம் எடுத்து தங்களையும் குழந்தைகளையும் ஏக டென்ஷனுக்கு உள்ளாக்குவது இடையினம். இங்கிலீஷ் சினிமா பாணியில் டைட்டோ டைட் க்ளோசப்பில் மூஞ்சிக்கு முன்னால் லிமிட்டாக சுள்ளென இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு, அதன் பாதிப்பிலேயே விறைத்துக் கொண்டு விலகி போய்விடுவது மெல்லினம். முதல் இரண்டும் அணுகுண்டு, சர வெடிகளாக உள்ளும் வெளியிலும் பாதிப்பு இருக்கும். மூன்றாவதில் போலீஸ் அடிப்பது மாதிரி. வெளிக்காயங்களே இருக்காது. மனசுக்குள் பூகம்பமும் சுனாமியும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

"நான் மூன்றாவதை டிக் செஞ்சுக்கறேன்" என்றேன், அவசரமாக. சாரங்கன் சங்கு, சக்கரத்தை இன்னும் விடவில்லை. "ஆத்மா, இதெல்லாம் ஒரு ஜாலிக்குடா. ஆபீஸ்ல, வீட்ல, வெளில எவ்வளவு டென்ஷன் இருக்கு. அதையெல்லாம் கொறைக்க வேண்டாமா. அவங்களோட கும்மாளம் போடும் போது பத்து வயசு சல்லுன்னு கொறையுது. குஜால்தான். வர்ற சனிக்கிழமை உன் வீட்டில் பார்ட்டி. போ, சண்டை போடு. ஆல் த பெஸ்ட்." ப்ளூடோவிடம் மாட்டிக் கொண்ட டாம் மாதிரி மேலும் கீழுமாக தலையாட்டினேன்.

சரோஜா என் மாமா பெண்தான். நான் இவ்வளவுதான் என்று அவளுக்கு முன்னமேயே தெரியும் என்பதால், எங்களுக்குள் இதுவரை சண்டையே வந்ததில்லை. தவிர, அவளை பொறுத்தவரை கணவர் பரமசிவனுக்கு சமானம். அவருக்கு எல்லா சௌகர்யங்களையும் செய்வதுதான் ஒரு பதிவிரதையின் தலையாய கடமை என்பதை ஒரு வேத வாக்கியமாக எடுத்துக் கொண்டவள்.

சரோஜாவிடம் எப்படி சண்டை போடுவது? கருமமே கண்ணாயினாக இரவு முழுவதும் கண்துஞ்சாமல் ரிஹர்சல்கள் செய்து, வீராவேசத்தோடு 'டாய்' என்று போர்வீரன் மாதிரி கத்தியை சுழற்றிக்கொண்டு களத்தில் குதித்தால், அதை கொஞ்சம் கூட அன்கண்டுகபிளாக இருந்து, என்ன சின்னப் புள்ளத்தனமாக இருக்குன்னு ஒரு ப்ளெயின் லுக் விட்டால் என்ன ஆவது? இம்சை அரசன் 23ம் புலிகேசி லெவலுக்கு நான் ஆனதுதான் செம காமெடி.

ஒவ்வொன்றாய் வருகிறேன். பல கல்யாணங்களில் காப்பியில்தான் சண்டை ஆரம்பிக்கும். அதை நம்பி, "தூ... காப்பியா இது ? இல்லே, காப்பி பாத்திரம் அலம்பின தண்ணியா?" என்று கத்தி விட்டு பார்த்தால், ஏதோ இமாலய தவறு செய்துவிட்டவளாக கைகள் நடுங்க, "அப்படியா. கொஞ்சம் பொறுங்க. நல்ல காப்பி கொண்டு வர்றேன்." என்று சொல்லிக் கொண்டே கிச்சனுக்குள் ஓட, டெண்டுல்கர் முதல் பந்தில் அவுட்.

அதனால் என்ன? உடனே அடுத்த அஸ்திரம். "ஆமா, என்னிக்கி காப்பி நல்லா போட்டிருக்கே. உன் மூஞ்சி." இதற்கு நிச்சயம் கோபம் வரப் போகிறது.

பாதி தூரம் போனவள், திரும்பிப் பார்த்து, " ஏங்க? என்ன ஆச்சு? ராத்திரி சரியா தூங்கலையா? யார் மேலயோ இருக்கும் கோவத்த என்கிட்டே ஏங்க காட்டுறீங்க." போய்விட்டாள். இங்கே ரன் அவுட்.

'உன் மேலத்தாண்டீ' என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் அது மெல்லினமாக இருக்காது. கிச்சனுக்குள் துரத்திக் கொண்டு போய் அடுத்தடுத்த சீண்டல்களில்... ம்ஹ¤ம்.. அசரவில்லை. ஒரு கட்டத்தில் என் பிடுங்கல்கள் அதிகமாகிப் போய் அழ ஆரம்பிக்க, எனக்குள்ளும் அழுகை வர, இண்டர்வல் விட்டுவிட்டேன். 'டேய் ஆத்மா. ரூட்டை மாத்து.' ஐடியா வறட்சியில் தடுமாறினேன். எது எதற்கோ புத்தகம் எழுதுகிறார்கள். இதற்கு எழுதியிருந்தால் டா வின்சி கோட் தோற்று போயிருக்கும்.

ஒன்பது மணிக்கெல்லாம் என் அழகான ராட்க்ஷசி சுடச் சுட மொறு மொறு தோசையை அதன் பக்க வாத்தியங்களோடு கொண்டு வந்து நீட்டினாள். ஐடியா! அம்மா வந்தாள். என்னதான் சொந்த அத்தை என்றாலும் மாமியார் அல்லவா?

"என்ன செய்யி. என் அம்மா சுடற தோசை மாதிரி செய்ய உனக்கு வராது" எப்படி கும்ளே கூக்ளி !

"ஆமாங்க. நானே உங்க கிட்டே சொல்லணும்னு இருந்தேன். ஒடனே ·போன் போட்டு அத்தைய வரச் சொல்லுங்க. ரொம்ப நாளாச்சு. எனக்கும் தோசை, அடையெல்லாம் சுட கத்துகிட்ட மாதிரி ஆச்சு".

போச்சு. எனக்குள் கண்ணாடிக் கோட்டை தடதடவென சரிந்தது. கிரேசி மோஹன் பாணியில் 'என்ன எழவுடா இது' என்று சொல்லத் தோன்றியது. அம்மா செண்டிமெண்டே எடுபடாத போது நாத்தனார் செண்டிமெண்ட் எப்படி எடுபடும்? அடுத்த வாரம் வரப்போகிற அவள் பிறந்த நாளுக்காக ரகசியமாக வாங்கி வைத்திருந்த காஸ்ட்லியான ஜோதிகா புடவையை என் தங்கை கல்யாணிக்கு கொடுக்கப் போகிறேன் என்று அரை மனசோடுதான் சொன்னேன். அதுவும் சானியா எதிர் கொண்ட செரீனா மாதிரி ஆகிவிட்டது.

விட்டால் போதும் என்று ஆபீஸ் வந்துவிட்டேன். கிருஷ்ண பரமாத்மா சாரங்கன் விஸ்வரூபம் எடுத்தான். "நீ சுத்த பேக்குடு. (தேவையா?) டேய். சண்டைக்கான நுணி லேசுல கிடைக்காது. தேடணும்டா. நூல் கண்டு நுணியத் தேடாம உன் இஷ்டத்துக்கு கட் பண்ணி இழுக்கக் கூடாது. போ. நல்லா ஹோம் வொர்க் செய். வெய்·புக்கு எந்த விஷயம் ரொம்ப பிடிக்கும்னு பார்த்து, அதுல சீண்டுடா, மடையா (போதும்டா, சாமி!)."

முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலென்ன? இரண்டாவது இன்னிங்ஸில் சென்சுரிதான். மூஞ்சியில் மூட் அவுட்டை தக்க வைத்துக் கொண்டே ஐடியாவுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி அலைந்தேன். பேப்பரை புரட்டி... மேஜை டிராயரில் தேடி... ·ப்ரிட்ஜை திறந்து பார்த்து.. டிவி....

யெஸ். கிடைத்து விட்டது. சப்பை மேட்டர்தான். ஆனால் ஒர்க்கௌட் ஆகும். சரியாக ஆறரை மணியானதும் சரோ டிவியை போட, விடு ஜூட். "இனிமே இந்த வீட்ல சீரியலே கிடையாது" ரிமோட்டை பிடுங்கி, சிவப்பு பட்டனை அழுத்தினேன். அது 'க்யிக்' என்ற சத்தத்தோடு மௌனமானது.

தீபாவளி பட்டாசில் சுறுசுறுவென தீப்பிடித்து கொண்டே வந்து கடைசியில் பாரம் தாங்காத வண்டி மாடுடாக உம்ம கொட்டானாகி எரிச்சலைத் தருவது ஒரு வகை. இரண்டாவது, 'பிசற்ட்' 'பிசற்ட்' என்று அடிபட்ட கரப்பான் பூச்சி மாதிரி ஆறஅமர இழுத்துக் கொண்டே போய், இது தேறாது என்று நினைக்கும் போது காதை பிளக்கும் ஓசையில் வெடித்து தூள் கிளப்பும். சரோ இரண்டாவது வகையில் வந்தாள். ஆனந்தத்தை அரை மனசோடு விட்டுக் கொடுத்து விட்டு சட்டி மாதிரி மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு பால்கனிக்கும் கிச்சனுக்கும் அலைந்தாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து முஹூர்த்தம் டைட்டில் சாங்க் அலைஅலையாய் வர, முணுமுணுக்கத் தொடங்கினாள். கொஞ்சம் கெஞ்சிப் பார்த்தாள். ம்.. ஹ¥ம். இது தேறாது என்று இருந்த போது, வந்ததே பாருங்கள் கோபம்...

ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மாதிரிதான் எங்கள் சண்டை ஆரம்பித்தது. "எனக்கு ரோஜா பார்க்கணும். உங்களுக்கு பிடிக்கலைன்னா பெட் ரூமுக்கு போய் கதவை சாத்திக்குங்க. நான் பார்க்கத்தான் போறேன்."

"கூடாது" டிவிக்கு குறுக்கே எக்ஸ் மாதிரி நின்று கொண்டேன். 'பார்ப்பேன்' 'கூடாது' என்பதை அடுத்தடுத்து ஐந்து முறை கூட்டிக் கொள்ளுங்கள்.

"இது எங்கப்பா வாங்கிக் கொடுத்தது. நான் பார்ப்பேன்" என்னை தள்ளி விட்டு தீர்மானமாக டிவியை போட எத்தனித்தாள்.

"அப்படியா? உங்க அப்பாவோட ஓட்டை டிவிய எடுத்துக்கிட்டு அங்கயே போய் பாரு. இப்ப இங்க டிவிய போட்ட ஒரு கொலை விழும். ஆமா. தெரிஞ்சுக்க."

சிவப்பு துணியை கண்ட ஸ்பெயின் காளையாக ஆனாள் சரோ. புழுதி பறக்க மகா யுத்தம் தொடங்கி விட்டது. பற்றி எரியும் வைக்கோல் போர் அளவுக்கு கோபம் கொப்பளிக்க திகட்ட திகட்ட சண்டையோ சண்டை. ஏ ஒன் சண்டை.

"உங்களுக்கு எல்லாம் செஞ்சு செஞ்சு கொழுப்பு அதிகமாயிடுச்சு. அதான் துள்ளறீங்க. நான் இல்லாம ஒரு மாசம் இருந்து பாருங்க. அப்ப என் அருமை தெரியும்." விறுக் விறுக்கென்று ·போனை எடுத்து பட்டன்களை தட்டினாள். தம்பியை வரச் சொன்னாள். "டேய்! வர்றதுதான் வர்ற. கோலங்கள் ஸ்டார்ட் ஆகறத்துக்கு முன்னால வா. சீக்கிரம். இன்னிக்கு அபிக்கு என்ன ஆச்சோ தெரியலையே?"

மச்சினன் சேது வந்தான். என்னை அலட்சியமாக பார்த்தான். அக்காவை அழைத்துக் கொண்டு போய்விட்டான். போகும் போது அவன் அப்பா என்கிற என் மாமாவை ஞாபகப் படுத்திவிட்டுப் போனான். ஜெயித்து விட்டோம் என்று துள்ளி குதித்த குத்துச் சண்டைக்காரன் கயிறு தடுக்கி கீழே விழுந்த மாதிரி ஆனேன். எனக்கு மாமா என்றால் இன்றைக்கும் பயம். கலாபவன் மணி மாதிரி முக பாவனைகளிலேயே மிரட்டுவார். மாப்பிள்ளையாயிற்றே மரியாதை துளியும் கிடையாது. கீழே நெருப்பை மூட்டி அதற்கு மேல் நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்க கலாபவன் மணி மாமா கெக்க பிக்கெ சிரிப்புடன் குட்டிக்கரணம் அடித்து சுற்றி சுற்றி வருவது போல இருந்தது. சரோவை அனுப்பியாயிற்று. மாமாவை எப்படி சமாளிப்பது? இருக்கவே இருக்கிறான் சாரங்கன்.

ஆபீஸ் வந்ததும் விஷயத்தை சொன்னால் சாரங்கன் முதற்கொண்டு எல்லோரும் பார்ட்டியில் குறியாய் இருந்தார்களே தவிர மணி மாமா மேட்டருக்கு யாரும் ஐடியா தரவில்லை. மனசளவில் நொந்து நூலாகி ஏழு மணிவாக்கில் வீடு திரும்பிய எனக்கு ஆயிரம் வோல்ட் அதிர்ச்சி. வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது! சரோ வந்துவிட்டாளா? பீர் பாட்டில்களும் ஆம்லெட் தட்டுகளும் என் கண் முன்னே வந்து மோதி விலக பேக்கிரவுண்டில் சரோ பத்திரகாளியாய் தெரிந்தாள். பின்னங்கால் பிடறி பட இரண்டாவது மாடிக்கு இரண்டே செகண்டில் ஓடி மூச்சிறைக்க நின்றால்...

மச்சினன் சேது வரவேற்றான். "எனக்கு இங்க இருக்க இஷ்டமேயில்ல. அக்காதான் சொல்லிச்சு. அத்தான் மனசு சரியாற வரைக்கும் நீ அங்கன இருந்து ஹெல்ப் பண்ணுன்னு. உங்களுக்கு சமைக்க தெரியாதாம். அப்படியே செஞ்சாலும் சரியா சாப்பிட மாட்டீங்களாம். அதனால என்னை செய்ய சொல்லியிருக்காங்க. எவ்வளவு நல்ல அக்கா. நீங்களும் இருக்கீங்களே..."

இன்னும் அரை மணியில் பார்ட்டி கோஷ்டிகள் வந்துவிடும். முதலில் அவர்களை வந்துவிடாமல் தடுப்பதா இல்லை இவனிடமும் சண்டை போட்டு துரத்தியடிப்பதா என்ற மாறுபட்ட சிந்தனைகள் இரண்டு ஜப்பானிய சுமோக்களாக என் தலைக்குள் நெருங்கி வந்து தொந்தியால் அழுத்த, மயங்கி சரியும் வேளையில் கலாபவன் மணி மாமாவின் பிரும்மாண்ட உருவம் கண்ணுக்குள் தெரிந்தது.

Monday, 19 February 2007

தேடிச் சோறு நிதந்தின்று....


தேடிச் சோறு நிதந்தின்று....

2006 செப்டம்பர் கலைமகள்

"எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல்லை ஸார். செத்துடலாமான்னு பார்க்கறேன். ஏதாவது நோய் நொடில போயிடலாம்னு பார்த்தா எனக்கு ஒரு ஜலதோஷம் கூட வந்ததில்லை. உடம்பு என்னவோ பெருமாள் கோயில் துவாரபாலகர் மாதிரி வளர்ந்திண்டேயிருக்கு. ஷேவிங் செஞ்சுக்கும் போது என் உடம்ப பார்த்து எனக்கே பயமாயிருக்கு.

போன வருஷம் காலரா வந்து ஊர்ஊரா ஜனங்கள் செத்து மடிஞ்சா. ஊரு முழுக்க இப்படி வியாதி வந்து கொல்லறதே எனக்கு ஒன்னும் வரமாட்டேங்கறதே ஏன்னு தெரியாத்தனமா கோயிலாத்து அம்பிகிட்டே கேட்டது என் தப்பு. அவன் சொல்லறான். அது ஓடியாடி வேலை செஞ்சு நல்ல வேலையில இருக்கறவாளுக்கு. ஒன்ன மாதிரி திண்ணை தூங்கிகளுக்கில்லேங்கறான். கம்மனாட்டி. இதுக்காகவே நாக்கைப் பிடிங்கிண்டு சாகலாம்ன்னு பார்க்கறேன். ஆனா நாக்கைப் பிடிங்கின்டா ரத்தம் கொட்டுமாமே. வலிக்குமாமே. உடனே உயிர் போகாதாமே. அது சரிப்படாது.

சாகணும் சாகணும்ங்கறேனே, ஏன்னு கேக்கறேளா ? வேற ஒன்னுமில்ல. என்னால யாருக்கும் தம்பிடி ப்ரயோஜனமில்லே. தோன்றினா புகழோடு இல்லேன்னா வேஸ்ட்டுன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்கா இல்லையா? நான் ஒரு ஆளு ஒழிஞ்சேன்னா இந்த பஞ்ச பாட்டு பாடற சர்க்காருக்கு ப்ரயோஜனமா போகும். அடுத்த ஜன்மத்துலையாவது காதுல கடுக்கன், அப்பளாக் குடுமின்னு இல்லாம நன்னா கிராப், கிருதாவோட பொறந்து தொலைக்கணும். குளத்துல விழுந்து ப்ராணனை விடலாம்னு பார்த்தா எனக்கு நீச்சல் தெரியுமே? தவிர மூக்கு வழியா லங்ஸ் முழுக்க ஜலம் போய் உயிர் போக ரொம்ப நேரம் ஆகுமாமே? ம்ஹூம்.. அதுவும் சரிபடாது.

சரி... தூக்கு மாட்டின்டு சாகலாம்ன்னா. நெஞ்சு குரல்வளை பொடலங்கா ஒடியர மாதிரி பொடக்குனு ஒடியுமாமே? என்ன கஷ்டம்டா இது, நன்னா வயறு நிறையா சாப்டோமா, சின்ன திண்ணைல வந்து படுத்துண்டு அப்படியே மேல போனோமான்னு இருக்க வேண்டாமோ ? இப்படித்தான் மூணாந்தெரு கொழந்த கிட்டா போனான். பேருதான் கொழந்தை கிட்டா. கோட்டான் வயசு. நேத்திக்கு எல்லாம் ஆச்சு. சட்டுன்னு வ்ராட்டி படுக்கைக்குள்ளே பூந்துண்டு என் மேல கொள்ளிய வைய்யுங்கோங்கற மாதிரி படுத்துண்டுடலாம்ன்னு தோணித்து.

என்னடாப்பா நாப்பது வயசிலேயே இப்படி பொலம்பறானேன்னு பார்கறேளா? உன் பையன் 16-ம் வருஷத்திலே பொறந்து 16 சம்பத்துகளுக்கும் அதிபதியாகி இருப்பான்னு பெருமாள் கோயில் பட்டாசாரியார் சொன்னதாக என் தோப்பனார் அடிக்கடி சொல்லுவார். சம்பத்தாவது? சர்பத்தாவது? ஒன்னுத்துக்கும் வழியில்லே.

ஜென்மம் எடுத்த நாள்லேர்ந்து எதுவும் என் இஷ்டப்படி இல்லே. முதல் பதினாறு வருஷம் என் தோப்பனார் நரசிம்மர் கன்ட்ரோல்ல இருந்தேன். இந்த ஸ்லோகத்தை சொல்லு அந்த ஸ்லோகத்தைச் சொல்லுன்னு என் தொடையை கிள்ளிண்டே இருந்தது இப்பவும் வலிக்கறது. பெரியவாள்ளாம் கோவிச்சுக்கக் கூடாது. இப்ப யாராவது ருத்ரம், சமகம்ன்னா நான் ஜோட்தலைய எடுத்து மொத்திப்பிடுவேன். எல்லாமே வெறுத்துப் போயிடுத்து. அவரை நடுக் கூடத்திலே போட்டு விளக்கேத்தி வைச்சபோது கூட என் தொடையத்தான் தடவிண்டேன். அழுகை துளிக்கூட வர்லே. ஆளாளுக்கு கோவிச்சுண்டா.

சரி.. ஒரு சனி விட்டுது. இனி கொஞ்சம் செளகர்யமா வெங்காய கொட்சும், பூண்டு ரசமுமா இருக்கலாமேன்னு பார்த்தா இன்னோரு சனி என் ஆத்துக்காரி ரூபத்திலே வந்தது. கல்யாண ஜோர்ல, பார்க்கறதுக்கு சின்னக் கொழந்தே மாதிரி இருக்காளேன்னு நெனைச்சிண்டு அடியே, பங்கஜம் நீ ரொம்ப அழகா இருக்கே, ஆனா உன்னோட மூக்கு சித்த கோணல்னேன். உள்ளது உள்ளபடியேச் சொன்னது தப்பாபோயிடுத்து. ரெண்டு பசங்க பொறந்து, வளர்ந்து, பட்ணத்துக்கு படிக்க போனாளோல்லியோ, ஆரம்பிச்சுட்டா. நீங்க அன்னிக்கு அப்படிச் சொன்னேளே இப்படிச் சொன்னேளேன்னு ஒரே ஹிம்சை. விட்டுடுத்து எல்லாம்னா உங்களுக்கு நல்லா புரிஞ்சுக்க முடியும்னு நெனைக்கிறேன்.

கோபக்கார தோப்பனார் ருத்ர தாண்டவம் ஆடினார்னா, இவ பக்தி திலகம். கைல சப்பளாக் கட்டைய எடுத்துண்டு வீடு வீடா பஜனை. ஒரு சாயங்காலம் எதிர்வீட்டு சேது என்ன கேட்டான் தெரியுமா, கோபாலா எங்காத்துல இன்னிக்கு ராத்திரி திவ்ய நாம பஜனை. வர செளகர்யப்படுமா? உங்காத்து மாமிதான் சீஃப் கெஸ்ட்ன்னு சொல்லிப்பிட்டு கண்ணடிக்கறான். படவா ராஸ்கோல். நீங்களே சொல்லுங்கோ. நன்னாவா இருக்கு? ஏண்ணா? ஈரோட்டுக்கு பக்கத்திலே ஏதோ ஒரு மலை ஜாதிக்காரா அப்படியே மூச்சை தம்பிடிச்சிண்டு உசிரை விட்டுடுவாளாமே? நெசமாவா? ம்... அப்படியே இருந்தாலும் எனக்கு சரி வராது. பிராணாயாமத்துக்கே மூச்சை பிடிச்சுக்க கஷ்டமா இருக்கு, இதுல போயி மூச்சை பிடிச்சு உசிரை விடறதாவது?

ஆத்துக்காரி அப்படீன்னா, இந்த குலக் கொழுந்துகள் இருக்கே, பீடைகள். கன்னம் முழுக்க புஸ்புஸ்ன்னு கிருதா. தலைல குருவிக் கூடு மாதிரி முன்னுச்சி மயிர். கருகருன்னு தொங்கு மீசை. எனக்கு மரியாதையே கொடுக்காதுகள். எல்லாம் அம்மா ராஜ்யம். ஏன்னா எங்கிட்ட காசு இல்லையே. அப்படியே ஓடிப் போய் ரயில் தண்டவாளத்துலப் படுத்துன்டுடலாமான்னு தோண்றது. சே... வேண்டாம். சாகறதுதான் சாகறோம். பீஸ் பீஸ் போகாம முழுசா செத்துத் தொலைப்போமே.

இது வரைக்கும் நான் சொல்லறதைக் கேட்டே உங்களுக்கு த்சோ.. த்சோன்னு தோணறதோல்லியோ. இன்னும் கேளுங்கோ. இது போன மாசத்தில ஆரம்பிச்சது.

திவ்யநாமம்ன்னு பக்கத்தாத்துக்கும் எதிர்தாத்துக்கும் போயிண்டு இருந்ததுக்கு வந்தது கேடு. ஒரு சேட்டுக் குடும்பம் ஸ்னேகிதம் ஆச்சு. வீடு நாடகக் கொட்டா ஆயிடுத்து. பக்தி சிரத்தையா இருக்கறவா கோவிச்சுக்கக் கூடாது. ஸ்வாமிக்கு தீபாராதனைன்னா ஒரு ஐஞ்சு செகண்டு காட்டுவோம். அப்பறம். கீழே வைச்சுட்டு. எல்லாரும் எடுத்துக்கோங்கோன்னு சொல்லிடுவோமில்லையா. இங்க என்ன தெரியுமா? அந்த கடோத்கஜன் அவன் ஆம்பிடையா பூதகியோட ஈஷிண்டு தீபாராதனைத் தட்டை எடுத்துண்டு காட்டறா காட்டறா அரை மணி நேரமா. டோலக்கு என்ன? தபலா என்ன? அட்டகாசம். இரு, இரு, இதே மாதிரி நார்மடி கட்டிண்டு செய்வேடி. நான் ஒருத்தன் குத்துக் கல்லாட்டம் இருக்கேன், என்னை விட்டுட்டு பூஜை புனஸ்காரம் என்ன வேண்டிக் கெடக்கு?

ஏங்க? சவரக் கத்தியால நாடி நரம்பை வெட்டிண்டா வலிக்காம உயிரு போயிடுமாமே? அப்படியா? இதைத்தான் நான் மளிகைக் கடை பாலுகிட்டே கேட்டுத் தொலைச்சுட்டேன். தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிட்டு போகவேண்டியதுதானே? அதை விட்டுட்டு, என்கிட்டே நெல்லுக்குத் தெளிக்கற பூச்சி மருந்து இருக்கு. அதுல ஒரு டம்பளர் மோர் சாப்பிடற மாதிரி கடகடன்னு சாப்ட்டுடு. வண்டிமாடு மாதிரி நுரை கக்கிச் சாவேங்கரான். ஏன்டா கேட்டேன்னு ஆயிடுத்து. நான்னா எல்லாக்கும் கேலியும் கிண்டலுமா இருக்கு.

சரி. எல்லாத்தையும் விட்டுடுவோம். சயனைடுன்னு ஏதோ ஒன்னு இருக்காமே? அதைப் பென்சில் நுனியளவுக்கு நாக்கில வச்சிண்டா போதுமாமே? அதை பத்தின விவரம் ஏதாவது தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன். ப்ளீஸ்.... "

மன்னிக்கவும். மேலே உள்ளவை யாவும் திரு கோபாலன் அவர்கள் 1956 ல் சொன்னது. அவர் மனைவி பங்கஜமும், மூத்த மகனும் தற்போது உயிரோடு இல்லை. மிக முக்கியமான, சுவாரஸ்யமான ஒரு விஷயம் உண்டு என்றால் அது கோபாலன் இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்பதுதான்.

Saturday, 17 February 2007

நாய் பட்ட பாடு


நாய் பட்ட பாடு

2006 மே 14 ஆனந்த விகடன்

இடுக்கண் வருங்கால் நகுக என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஐயன் திருவள்ளுவர். அவருக்கென்ன? சொல்லுவது யாவர்க்கும் எளிய. அனுபவப்பட்ட எனக்குத்தானே தெரியும். வாழைப்பழத்தோலில் வழுக்கி மடேரென பின்னங்கால் தூக்கி பிருஷ்டம் வலிக்க விழுந்தால் அது உங்களுக்கு 'கொல்' சிரிப்பாய் இருக்கும். வலி எனக்கு. சிரிப்பு உங்களுக்கு. அதே மாதிரி இந்த வாய் மற்றும் வாய்வு உள்ள அப்பிராணியை ஒரு வாயில்லா மற்றும் வாலுள்ள நாலு கால் பிராணி ஒரு வார காலத்துக்கு பாடாய் படுத்தி சிரிப்பாய் சிரிக்க வைத்ததை கேட்டால் உங்கள் வயிறு புண்ணாகி போக நான் கியாரண்டி.

மிக பெரிய சிந்தனைகள் ஒரு சிறு நொடித்துளியில் உருவாகிவிடும் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறாராம். அந்த மாதிரி நான் மிகவும் விரும்பும் பருப்பு உசிலியை வெண்டைக்காய் மோர் குழம்போடு ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருக்கும் போது என் ஆசை மனைவி கமலாவின் சிந்தனையில் உதித்த ஐடியாதான்....

"ஏங்க, நம்ம வீட்டுல நாய் ஒண்ணு வளர்த்தா என்ன?"

ரசம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அதில் பாயசத்தை ஊற்றின மாதிரி எனக்கு அதிர்ச்சி. உங்களை வளர்ப்பதோடு அல்லாமல் நாய் வேறு வளர்க்க வேண்டுமா என்று கேட்டு வைத்தால் மேல்கொண்டு மோர் குழம்பு கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. என் மெளனம் கமலாவை சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். பாருங்கள். இந்த சமயங்களில்தான் ஏழரைநாட்டு சனி உச்சம் பெறுகிறது.

"எனக்கொண்ணும் ஆசையில்லை. சின்னதுதான் அடம் பிடிக்கிறது."

அம்மாவின் புடவைக்கு பின்னாலிருந்து பாரதிராஜா ஸ்டைலில் ஒரு கண், அரை மூக்கு, அரை வாய் புன்சிரிப்போடு என் சின்னப் பெண் ஒண்ரையடி ஸ்வேதா எட்டிப் பார்க்க என் போதாத வேளை நானும் சிறிதாய் சிரித்து வைக்க பிடித்தது சனி.

"ஹாய். அப்பா ஓக்கே சொல்லிட்டார்." எனது இரண்டு வாண்டுகளும் கோரஸாக கத்திக் கொண்டே ஓடிவிட நான் நிராயுதபாணியானேன். கமலாவின் முகத்தில் இரண்டு பீட்ஸா சாப்பிட்ட பெருமிதம்.

"அதெப்படீங்க. குழந்தைகள் கேட்டா உடனே சரின்னு சொல்லிடறீங்க. நான் ஏதாவது கேட்டால் நாலு நாளுக்கு பதிலே வராது." கமலா தன் கவலையை இலவச இணைப்பாக வைத்தாள். நான் எங்கே சரின்னு சொன்னேன் என்று இந்த கேடு கெட்ட நேரத்தில் போட்டு உடைத்தால் பெரிய பிரளயமே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் எல்லாம் வல்ல அந்த சனியின் மீது பாரத்தை போட்டு விட்டு வரப்போகிற சிக்கல்களுக்கு என்னை நானே நொந்து கொண்டேன்.

அதன் பிறகு எல்லாம் கிடுகிடுவென நடந்தன. மறுநாள் மாலையில் நான் 150 வவுச்சர்கள், மேனேஜரின் 1000 வாலா வசவுகளோடு சிக்கிக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கும் போது எனது இரண்டு பெண் பிள்ளைகளின் தலைகள் லெட்ஜருக்கு மேலே ஏத்தலும் குறைச்சலுமாக தெரிந்தன.

“அப்பா. ஷாலுவை பாக்க போவேண்டாமா? அம்மா கீழ வெயிடிங்.” இது பெரிய பெண் சஞ்சனா.

“ஷாலுவா?”

“ஐய்ய. இது கூட தெரியலையா, நம்ம வாங்கப்போற டாகியோட பேரு. டாகின்னா டாக். டாக்னா நாய். சீக்கிரம் வாப்பா.” இது என் அரை டிக்கெட் ஸ்வேதா.

மேனேஜரிடம் கைகால்களில் விழுந்து கெஞ்சி கூத்தாடி கையதுகொண்டு மெய்யது பொத்தி தலையை சொறிந்து அசடு வழிந்து எப்படியோ பர்மிஷன் வாங்கி கீழே வருவதற்குள் கமலாவின் கமலா ஆரஞ்சு சைஸ் முகம் பூசணிக்காயாக இருந்தது.

“இப்பவாவது வந்தீங்களே. அஞ்சரைக்கெல்லாம் கென்னல் ஷாப் குளோஸ் ஆயிடும்ன்னு காலைல படிச்சு படிச்சு சொன்னேனே.”

என்சைக்ளோபீடியா மாதிரி ஏதோ ஒரு தடிமனான புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். வழ வழ பேப்பரில் கலர் கலராய் நாய் படங்கள். சம்திங் ராங். சனீஸ்வரா!

“அப்பா. ஷாலுவ எப்படி பாத் செய்யனும். என்ன ஃபுட் குடுக்கனும்னு யாரையும் கேட்கவே வேண்டாம். அம்மா ஒரு புக் வாங்கியிருக்கா. ஜஸ்ட் செவன் ஹன்ட்ரட் ரூபீஸ் ஒன்லி.”

“20% டிஸ்கவுன்ட்ன்னு சொல்லுடி”

“ஆமாப்பா. அப்பறம் அந்த செயின்...”

“சஞ்சு சும்மாயிரு. எல்லாத்தையும் இப்பயே சொல்லனுமா?”

காரின் பின்ஸீட்டில் ஏகமாய் கேரிபேக்கில் சிக்கலாய் என்னென்னவோ இருந்தன. கிரெடிட் கார்டில் ஆட் ஆன் கார்ட் வாங்கி கொடுத்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பத்தான் உறைத்தது.

கென்னல் ஷாப்பில் ஏகமாய் நாய் குட்டிகள். விதவிதமான குரைப்புகள். கண்ணுகுட்டி சைசில் அல்சேஷன்களை பார்த்ததும் அஞ்சு தலை ஆதிசேஷனை பார்த்த பயம். அதன் முதலாளிக்கு கூட பாதி முதுகு வரை முடியிருந்தது. அந்த கறுப்பு கண்ணாடியும் ஒற்றை காது தோடும் என்னை கொஞ்சம் கலவரப்படுத்தியது. அவர் ஹவ் டு யூ டூ என்றதற்கு நான் அசடு வழிந்து அக்கம் பக்கத்தில் நாய் ஏதாவது இருக்கிறதா என்ற தேடலிலேயே இருந்தேன். கமலா என்னவோ தன் ஒன்றுவிட்ட மாமாவிடம் பேசுவது மாதிரி ஆரம்பித்துவிட்டாள். ஊதுகுழலுக்கு கால்கள் முளைத்தமாதிரி ஒரு குட்டி ஒன்று என் கால்களை நக்க நான் சுவற்றில் பூச்சி மாதிரி ஒட்டிக் கொண்டேன். அதன் பக்கத்திலேயே நூல்கண்டுக்கு நடுவகிடு எடுத்து வாரிவிட்ட மாதிரி இன்னோரு குட்டி நாய். பூதாகரமாய் ராமாயணத்தில் திரிசடையை பற்றி படித்திருக்கிறேன். இந்த சின்ன முழு சடை நாயின் முன்பகுதி எது என்று நான் கேட்டுவிட ஏதோ கிண்டல் செய்வதாக செல்லமாக கோபித்து கொண்டுவிட்டார்கள்.

ஒருவழியாக ஷாலு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் உடனடியாக அனைவருக்கும் ஸ்வீட்ஸ் வழங்கப்பட்டது. ஏதோ ஒரு அரையடி ஸ்கேல் சைசுக்கு நாய் வரப்போகிறது என்று பார்த்தால் அரைகிலோ சதையை ஒரே கவ்வில் எடுக்கக் கூடியதைத்தான் எனக்கு ஷாலு என்று அறிமுகப்படுத்தினார்கள். நான் பார்த்த கோணம் தவறா என்று தெரியவில்லை. அது என்னை அந்நியனாய் பாவித்து உர் என்றது.

மேடையில் தலைவருக்கு மரியாதை அளிப்பது போல ஷாலுவுக்கு புத்தம் புதிய சீப்பால் வாரப்பட்டது. அலங்கார கழுத்துப்பட்டையென்ன, வாசனாதி திரவியங்களென்ன, பாண்டு வாத்தியங்கள் மட்டும்தான் குறைச்சல்.

காலனியில் கமலாவை பிடிக்கமுடியவில்லை. ஸ்வீட்சும் கூல்டிரிங்க்சும் தண்ணிபட்ட பாடாயின.

“கங்கிராசுலேஷன்ஸ். நாய் வாங்கியிருக்கீங்களாமே. எவ்வளவு ஆச்சு?”

நான் முழியாய் முழித்தபோதெல்லாம் ஆபத்பாந்தவியாய் கமலாதான் வந்தாள்.

என்ன ஜாதி? என்று ஒருவர் கேட்டுவிட 'பாமரேனியன்' என்று எனக்கு தெரிந்ததை சொல்லி வைத்து என் அறியாமையை வெளிப்படுத்திவிட மறுபடியும் கமலாதான் வரவேண்டியிருந்தது.

“பமரேனியனா? என்ன உளர்றீங்க? (வழக்கம் போல என்று சேர்த்துக் கொள்ளவில்லை). இது அல்சேஷன் டாபர்மேன் கிராஸாக்கும்.”

'மம்மி. கிராஸ்னா என்ன?' என்று ஸ்வேதா கேட்டு வைக்க டாப்பிக்கை மாற்ற பெரும்பாடு பட வேண்டியதாகிவிட்டது.

காலையில் தினமும் கண்விழித்தால் கைதொழும் தேவதையம்மா என்று உருகும் உண்ணியின் பாடல் எனக்கு பிடிக்காமல் போனதுக்கு காரணமே இந்த ஷாலுதான். எனக்கு காலையில் நாலு மணியிலிருந்து ஆறு மணி வரைதான் நல்ல தூக்கம் வரும். அந்த அர்த்த ராத்திரி நித்திரையிலிருந்து என்னை மூஞ்சியில் தண்ணீர் ஊத்தாத குறையாக எழுப்பி என் கையில் ஷாலுவை கொடுத்துவிடுவாள்.

எனக்கோ தூக்க கலக்கம். இதுவோ கீழே படி இறங்குகிற வரைக்கும் கொஞ்சலோ கொஞ்சல். தாடை தொடை என்று அனைத்து பாகங்களையும் நக்கி என்னை கிட்ட தட்ட ஆங்கில எஸ், இசெட் வடிவங்களாக்கி பாடாய் படுத்தும். ரோட்டில் போனதும் அதை கன்ட்ரோல் செய்யவே முடியாது. புதிதாக ஆட்டோ ஓட்டினால் எப்படி ஒரு பக்கமாக இழுத்துச் செல்லுமோ அது மாதிரி போய் கொண்டேயிருக்கும். சங்கிலி என் மணிக்கட்டில் இழுபட்டு இழுபட்டு காய்த்து போய்விட்டது. வலக்கையில் சங்கிலியின் டென்ஷன் என்றால் இடக்கையில் ஒரு குச்சி. வேறென்ன? மற்ற தெரு நாய்களை விரட்ட. எங்கோ ஒரு தெரு நாய் தான் பாட்டுக்கு போய் கொண்டிருக்க ஷாலு அனாவசியமாக அதை வம்பிழுக்கும். அப்புறம் என் பாடு திண்டாட்டம். குச்சுபுடி டான்ஸ் மாதிரி என் குச்சிபிடி டான்ஸ் நடக்கும். மாஜிக் நிபுணன் மாதிரி என் வலதுகை சங்கிலியும் இடதுகை குச்சியும் தெருநாய் ஷாலு பொசிசனுக்கு ஏற்ப மாறி மாறி.... ஏக அவஸ்தை போங்கள்.

இதைவிட கொடுமை இன்னொன்று நடந்தது. ஷாலு தெரியாத்தனமாக ஒரு மெகா வில்லனை சீண்டிவிட ரிவர்ஸ் கியர் விழுந்துவிட்டது. ஷாலுவின் வால் உள் பக்கமாக போய்விட என் குச்சிபிடி நடனம் களறி பயிட்டு லெவலுக்கு போய்விட்டது. எதிரியின் அதிரடி தாக்குதலை தாக்குபிடிக்கமுடியாமல் ஷாலு சங்கிலியை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட நான் அந்த சங்கிலியை பொறுக்க வட இந்தியர்கள் செய்யும் நமஸ்காரம் மாதிரியும் நூலறுந்த பட்டத்தை பொறுக்கும் சிறுவன் மாதிரியும் சந்தி சிரிக்க ஓடியிருக்கிறேன். வெறும் கையோடு வீட்டுக்கு வந்து விஷயத்தை சொன்னதில் மூவரும் நானே போய்விட்ட மாதிரி ஒப்பாரி வைக்க ஆட்படையை திரட்டிக் கொண்டு அரை மணி தேடுதலில் ஷாலு மறுபடி கிடைத்து கமலாவின் வயிற்றில் பாலை வார்த்தது. என் காஸ்ட்லியான பேன்ட் நாசமாய் போனது. கீழே விழுந்து முட்டியை சிராய்த்து கொண்டதற்கு டாக்டர் மற்றும் மருந்து செலவு மட்டும் 150 ரூபாய் ஆனது.

ஷாலு என் நிம்மதி மற்றும் சரீரத்தை மட்டும் பதம் பார்க்கவில்லை. பர்சையும் சேர்த்துதான். வீட்டில் நாய் வளர்ப்பை பற்றி விதவிதமான புஸ்தகங்கள். சஞ்சுவும் ஸ்வேதுவும் சாப்பிட்டார்களோ என்னவோ ஷாலுவுக்கு ராஜ உபசாரம். ராத்திரியில் அதுவும் எங்களோடு ஏசி ரூமில்தான் இருக்கும். நல்லவேளை பெட் மேலே இல்லை. ஒரு முறை நடுராத்திரியில் முழிப்பு வந்து தொலைக்க நான் இருட்டில் ஷாலுவின் கண்களை பார்த்து கிட்டதட்ட பேய் என்றே தீர்மானித்துவிட்டேன். முட்டை என்று எழுதினாலே குமட்டிக் கொண்டு வரும் கமலா வாட்ச்மேனிடம் நூறு ரூபாய் கொடுத்து ஷாலுவுக்கு மட்டன் கொடுக்கச் சொன்னாள். வெட்டினரி டாக்டரோடு ஷாலு சம்பந்தமாக விசாரித்ததற்கே போன் பில் 1000 ரூபாய் ஆகியிருக்கும். பார்ப்பதற்கு சின்ன கன்னுகுட்டி மாதிரி இருந்தாலும் ஷாலு இன்னமும் குழந்தைதான். வீட்டு ஹால் என்ன பெட்ரூம் என்ன என்று விவஸ்தையே இல்லாமல் எல்லா இடங்களிலும் நம்பர் ஒன் மற்றும் இரண்டு போய்விடும். அந்த நேரங்களில் கமலா சந்தேகத்துக்கு இடமில்லாமல் பிசியாக இருப்பாள். சமையல்கட்டில் தோசைக்கு 'சொய்ங்' என்று சத்தம் வந்தாலே ஷாலுவுக்கு மூக்கில் வியர்த்துவிடும். அதற்கு ரெண்டு போடுகிற வரை அதன் விதவிதமான சத்தங்கள் நிற்காது.

இப்படியாக இந்த சனி திசையிலிருந்து எப்படி விடுபடப்போகிறேன் என்று தினமும் புலம்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு மத்தியான வேளையில் எனக்கு போன் வந்தது. சஞ்சுதான் பேசியது.

“அப்பா. ஷாலு அம்மாவை கடிச்சுடுத்து. கீழாத்து மாமி அம்மாவை சரண்யா நர்சிங் ஹோமுக்கு அழைச்சிண்டு போயிருக்கா. நீ நேரா அங்க வந்துடு. வரும் போது அம்மா ஏடிஎம்ல ஃபவ் தெளசண்ட் எடுத்துண்டு வரச் சொன்னா. உடனே வா.”

அலறியடித்துக் கொண்டு போனால் நர்சிங் ஹோம் வாசலில் ஸ்வேது கமலாவின் செல்லும் கையுமாக நின்று கொண்டிருந்தது.

“அப்பா. ஷாலு பேட். அம்மாவை பைட் பண்ணிடுத்து.”

கமலாவை பார்க்க பாவமாக இருந்தது. குதிகாலுக்கு சற்று மேலே நன்கு வெடுக்கென கடித்திருக்கிறது. சாதாரணமாகவே கொஞ்சம் ஸ்தூல சரீரம். வீக்கத்தில் இன்னும்... வேண்டாம். கடியைவிட போடப்போகிற ஊசிகளை பற்றிய பயம் அவளுக்கு. சாதாரண ஊசிக்கே கத்தி அமர்க்களம் செய்யும் குழந்தை குணம். மெதுவாக மூடு பார்த்து ஆரம்பித்தேன்.

“நான் சொல்லலாம்னுதான் இருந்தேன். நாயெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு. நீங்கள்ளாம் கேட்டாதானே.”

“ஆமாங்க. நீங்க சொல்லறதுதான் சரி.” இந்த சமயத்தில்தான் என் ஆசை மனைவி தேனாய் பாயும் ஒரு விஷயத்தை திருவாய் மலர்ந்தருளினாள்.

“நான் கென்னல் ஷாப்ல பேசிட்டேங்க. அவங்க ஷாலுவ திருப்பி எடுத்துக்கறதா சொல்லிட்டாங்க. இப்பவே கொண்டு விட்டுட்டு வாங்க.” கமலாவுக்கு எதை செய்தாலும் இன்னிக்கே இப்பவே இந்த நிமிடமே என்பதுதான்.

வீட்டுக்கு போனால் எதுவுமே நடக்காத மாதிரி ஷாலு ஒரே ஆர்பாட்டம். “ஷாலு நீ திரும்பி போகிற வேளை வந்துடுத்து.” நான் சங்கிலியை கழற்றினேன்.

ஷாலுவுக்கு ஒன்றும் புரிந்ததாக தெரியவில்லை. வழக்கம் போல வாக்கிங் என்று நினைத்துவிட்டது. காரில் போகும் போது ஏகத்துக்கு அட்டகாசம் செய்தது. ஆனால் எல்லாமே கொஞ்சலும் குதூகுலமும்தான்.

கென்னல் ஷாப்பில் விட்டபோது எனக்கே கொஞ்சம் தர்மசங்கடமாகி போய்விட்டது. நான் ஷாலுவை விட்டு விலகி வந்து காரில் ஏறி ஸ்டியரிங்க் பிடித்து திரும்பி பார்த்த போது அதன் கண்களில் வெளிபட்ட சினேகம் என்னை தடுமாற வைத்தது.

மறுபடியும் தப்பு செய்கிறோமோ? ஷாலு. நீ என்னை படுத்தியெடுத்தாலும் ஐ லவ்யூடா.

கமலாவின் வாத்தைகளை என்னால் மீற முடியவில்லை. கண்கள் கசிய, காரை நகர்த்தி, வேகமெடுத்தேன்.