Monday, 19 February, 2007

தேடிச் சோறு நிதந்தின்று....


தேடிச் சோறு நிதந்தின்று....

2006 செப்டம்பர் கலைமகள்

"எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல்லை ஸார். செத்துடலாமான்னு பார்க்கறேன். ஏதாவது நோய் நொடில போயிடலாம்னு பார்த்தா எனக்கு ஒரு ஜலதோஷம் கூட வந்ததில்லை. உடம்பு என்னவோ பெருமாள் கோயில் துவாரபாலகர் மாதிரி வளர்ந்திண்டேயிருக்கு. ஷேவிங் செஞ்சுக்கும் போது என் உடம்ப பார்த்து எனக்கே பயமாயிருக்கு.

போன வருஷம் காலரா வந்து ஊர்ஊரா ஜனங்கள் செத்து மடிஞ்சா. ஊரு முழுக்க இப்படி வியாதி வந்து கொல்லறதே எனக்கு ஒன்னும் வரமாட்டேங்கறதே ஏன்னு தெரியாத்தனமா கோயிலாத்து அம்பிகிட்டே கேட்டது என் தப்பு. அவன் சொல்லறான். அது ஓடியாடி வேலை செஞ்சு நல்ல வேலையில இருக்கறவாளுக்கு. ஒன்ன மாதிரி திண்ணை தூங்கிகளுக்கில்லேங்கறான். கம்மனாட்டி. இதுக்காகவே நாக்கைப் பிடிங்கிண்டு சாகலாம்ன்னு பார்க்கறேன். ஆனா நாக்கைப் பிடிங்கின்டா ரத்தம் கொட்டுமாமே. வலிக்குமாமே. உடனே உயிர் போகாதாமே. அது சரிப்படாது.

சாகணும் சாகணும்ங்கறேனே, ஏன்னு கேக்கறேளா ? வேற ஒன்னுமில்ல. என்னால யாருக்கும் தம்பிடி ப்ரயோஜனமில்லே. தோன்றினா புகழோடு இல்லேன்னா வேஸ்ட்டுன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்கா இல்லையா? நான் ஒரு ஆளு ஒழிஞ்சேன்னா இந்த பஞ்ச பாட்டு பாடற சர்க்காருக்கு ப்ரயோஜனமா போகும். அடுத்த ஜன்மத்துலையாவது காதுல கடுக்கன், அப்பளாக் குடுமின்னு இல்லாம நன்னா கிராப், கிருதாவோட பொறந்து தொலைக்கணும். குளத்துல விழுந்து ப்ராணனை விடலாம்னு பார்த்தா எனக்கு நீச்சல் தெரியுமே? தவிர மூக்கு வழியா லங்ஸ் முழுக்க ஜலம் போய் உயிர் போக ரொம்ப நேரம் ஆகுமாமே? ம்ஹூம்.. அதுவும் சரிபடாது.

சரி... தூக்கு மாட்டின்டு சாகலாம்ன்னா. நெஞ்சு குரல்வளை பொடலங்கா ஒடியர மாதிரி பொடக்குனு ஒடியுமாமே? என்ன கஷ்டம்டா இது, நன்னா வயறு நிறையா சாப்டோமா, சின்ன திண்ணைல வந்து படுத்துண்டு அப்படியே மேல போனோமான்னு இருக்க வேண்டாமோ ? இப்படித்தான் மூணாந்தெரு கொழந்த கிட்டா போனான். பேருதான் கொழந்தை கிட்டா. கோட்டான் வயசு. நேத்திக்கு எல்லாம் ஆச்சு. சட்டுன்னு வ்ராட்டி படுக்கைக்குள்ளே பூந்துண்டு என் மேல கொள்ளிய வைய்யுங்கோங்கற மாதிரி படுத்துண்டுடலாம்ன்னு தோணித்து.

என்னடாப்பா நாப்பது வயசிலேயே இப்படி பொலம்பறானேன்னு பார்கறேளா? உன் பையன் 16-ம் வருஷத்திலே பொறந்து 16 சம்பத்துகளுக்கும் அதிபதியாகி இருப்பான்னு பெருமாள் கோயில் பட்டாசாரியார் சொன்னதாக என் தோப்பனார் அடிக்கடி சொல்லுவார். சம்பத்தாவது? சர்பத்தாவது? ஒன்னுத்துக்கும் வழியில்லே.

ஜென்மம் எடுத்த நாள்லேர்ந்து எதுவும் என் இஷ்டப்படி இல்லே. முதல் பதினாறு வருஷம் என் தோப்பனார் நரசிம்மர் கன்ட்ரோல்ல இருந்தேன். இந்த ஸ்லோகத்தை சொல்லு அந்த ஸ்லோகத்தைச் சொல்லுன்னு என் தொடையை கிள்ளிண்டே இருந்தது இப்பவும் வலிக்கறது. பெரியவாள்ளாம் கோவிச்சுக்கக் கூடாது. இப்ப யாராவது ருத்ரம், சமகம்ன்னா நான் ஜோட்தலைய எடுத்து மொத்திப்பிடுவேன். எல்லாமே வெறுத்துப் போயிடுத்து. அவரை நடுக் கூடத்திலே போட்டு விளக்கேத்தி வைச்சபோது கூட என் தொடையத்தான் தடவிண்டேன். அழுகை துளிக்கூட வர்லே. ஆளாளுக்கு கோவிச்சுண்டா.

சரி.. ஒரு சனி விட்டுது. இனி கொஞ்சம் செளகர்யமா வெங்காய கொட்சும், பூண்டு ரசமுமா இருக்கலாமேன்னு பார்த்தா இன்னோரு சனி என் ஆத்துக்காரி ரூபத்திலே வந்தது. கல்யாண ஜோர்ல, பார்க்கறதுக்கு சின்னக் கொழந்தே மாதிரி இருக்காளேன்னு நெனைச்சிண்டு அடியே, பங்கஜம் நீ ரொம்ப அழகா இருக்கே, ஆனா உன்னோட மூக்கு சித்த கோணல்னேன். உள்ளது உள்ளபடியேச் சொன்னது தப்பாபோயிடுத்து. ரெண்டு பசங்க பொறந்து, வளர்ந்து, பட்ணத்துக்கு படிக்க போனாளோல்லியோ, ஆரம்பிச்சுட்டா. நீங்க அன்னிக்கு அப்படிச் சொன்னேளே இப்படிச் சொன்னேளேன்னு ஒரே ஹிம்சை. விட்டுடுத்து எல்லாம்னா உங்களுக்கு நல்லா புரிஞ்சுக்க முடியும்னு நெனைக்கிறேன்.

கோபக்கார தோப்பனார் ருத்ர தாண்டவம் ஆடினார்னா, இவ பக்தி திலகம். கைல சப்பளாக் கட்டைய எடுத்துண்டு வீடு வீடா பஜனை. ஒரு சாயங்காலம் எதிர்வீட்டு சேது என்ன கேட்டான் தெரியுமா, கோபாலா எங்காத்துல இன்னிக்கு ராத்திரி திவ்ய நாம பஜனை. வர செளகர்யப்படுமா? உங்காத்து மாமிதான் சீஃப் கெஸ்ட்ன்னு சொல்லிப்பிட்டு கண்ணடிக்கறான். படவா ராஸ்கோல். நீங்களே சொல்லுங்கோ. நன்னாவா இருக்கு? ஏண்ணா? ஈரோட்டுக்கு பக்கத்திலே ஏதோ ஒரு மலை ஜாதிக்காரா அப்படியே மூச்சை தம்பிடிச்சிண்டு உசிரை விட்டுடுவாளாமே? நெசமாவா? ம்... அப்படியே இருந்தாலும் எனக்கு சரி வராது. பிராணாயாமத்துக்கே மூச்சை பிடிச்சுக்க கஷ்டமா இருக்கு, இதுல போயி மூச்சை பிடிச்சு உசிரை விடறதாவது?

ஆத்துக்காரி அப்படீன்னா, இந்த குலக் கொழுந்துகள் இருக்கே, பீடைகள். கன்னம் முழுக்க புஸ்புஸ்ன்னு கிருதா. தலைல குருவிக் கூடு மாதிரி முன்னுச்சி மயிர். கருகருன்னு தொங்கு மீசை. எனக்கு மரியாதையே கொடுக்காதுகள். எல்லாம் அம்மா ராஜ்யம். ஏன்னா எங்கிட்ட காசு இல்லையே. அப்படியே ஓடிப் போய் ரயில் தண்டவாளத்துலப் படுத்துன்டுடலாமான்னு தோண்றது. சே... வேண்டாம். சாகறதுதான் சாகறோம். பீஸ் பீஸ் போகாம முழுசா செத்துத் தொலைப்போமே.

இது வரைக்கும் நான் சொல்லறதைக் கேட்டே உங்களுக்கு த்சோ.. த்சோன்னு தோணறதோல்லியோ. இன்னும் கேளுங்கோ. இது போன மாசத்தில ஆரம்பிச்சது.

திவ்யநாமம்ன்னு பக்கத்தாத்துக்கும் எதிர்தாத்துக்கும் போயிண்டு இருந்ததுக்கு வந்தது கேடு. ஒரு சேட்டுக் குடும்பம் ஸ்னேகிதம் ஆச்சு. வீடு நாடகக் கொட்டா ஆயிடுத்து. பக்தி சிரத்தையா இருக்கறவா கோவிச்சுக்கக் கூடாது. ஸ்வாமிக்கு தீபாராதனைன்னா ஒரு ஐஞ்சு செகண்டு காட்டுவோம். அப்பறம். கீழே வைச்சுட்டு. எல்லாரும் எடுத்துக்கோங்கோன்னு சொல்லிடுவோமில்லையா. இங்க என்ன தெரியுமா? அந்த கடோத்கஜன் அவன் ஆம்பிடையா பூதகியோட ஈஷிண்டு தீபாராதனைத் தட்டை எடுத்துண்டு காட்டறா காட்டறா அரை மணி நேரமா. டோலக்கு என்ன? தபலா என்ன? அட்டகாசம். இரு, இரு, இதே மாதிரி நார்மடி கட்டிண்டு செய்வேடி. நான் ஒருத்தன் குத்துக் கல்லாட்டம் இருக்கேன், என்னை விட்டுட்டு பூஜை புனஸ்காரம் என்ன வேண்டிக் கெடக்கு?

ஏங்க? சவரக் கத்தியால நாடி நரம்பை வெட்டிண்டா வலிக்காம உயிரு போயிடுமாமே? அப்படியா? இதைத்தான் நான் மளிகைக் கடை பாலுகிட்டே கேட்டுத் தொலைச்சுட்டேன். தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிட்டு போகவேண்டியதுதானே? அதை விட்டுட்டு, என்கிட்டே நெல்லுக்குத் தெளிக்கற பூச்சி மருந்து இருக்கு. அதுல ஒரு டம்பளர் மோர் சாப்பிடற மாதிரி கடகடன்னு சாப்ட்டுடு. வண்டிமாடு மாதிரி நுரை கக்கிச் சாவேங்கரான். ஏன்டா கேட்டேன்னு ஆயிடுத்து. நான்னா எல்லாக்கும் கேலியும் கிண்டலுமா இருக்கு.

சரி. எல்லாத்தையும் விட்டுடுவோம். சயனைடுன்னு ஏதோ ஒன்னு இருக்காமே? அதைப் பென்சில் நுனியளவுக்கு நாக்கில வச்சிண்டா போதுமாமே? அதை பத்தின விவரம் ஏதாவது தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன். ப்ளீஸ்.... "

மன்னிக்கவும். மேலே உள்ளவை யாவும் திரு கோபாலன் அவர்கள் 1956 ல் சொன்னது. அவர் மனைவி பங்கஜமும், மூத்த மகனும் தற்போது உயிரோடு இல்லை. மிக முக்கியமான, சுவாரஸ்யமான ஒரு விஷயம் உண்டு என்றால் அது கோபாலன் இன்னமும் உயிரோடு இருக்கிறார் என்பதுதான்.

1 comment:

Kumar said...

அடடா, இன்னுமா தற்கொலை வழி கிடைக்காமல் அலைகிறார்? அது சரி, பேரக் குழந்தைகளிடமாவது சரியான வழி கிடைக்காமலா போய் விடும்!


மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். இன்று தான் உங்கள் blog பார்த்தேன்.
நீண்ட நாட்களுக்குப் பின் வாய் விட்டுச் சிரிக்க வைத்ததற்கு உளமார்ந்த நன்றி!

இனி அடிக்கடி வந்து பார்க்கிறேன்.