Wednesday 7 February, 2007

அப்பா


அப்பா

1997 மே 18 வசந்தம் (தினகரன்) ஞாயிறு மலர்

"ஏங்க அப்பாகிட்டே சொல்லச் சொன்னேனே சொன்னீங்களா? நீங்களா சொல்றீங்களா? இல்லை, நானே நேரடியா கேட்டுவிடட்டுமா? இன்னிக்கு தேதி என்ன தெரியுமா? ஜூலை 19. ஞாபகம் வச்சுக்குங்க."

"ஏய் கொஞ்சம் மெதுவா பேசேன்."

"என்ன... என்ன... சொன்னாத்தான் என்ன? நீங்களாகவும் சொல்லமாட்டீங்க. என்னையும் சொல்லவிடமாட்டீங்க"

விஜயா இப்படி திடீரென போட்டு உடைப்பாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பக்கத்து ஹாலில்தான் அப்பா ஈசி சேரில் சாய்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார்.

"என்னடா விஷயம்?" எதிர்பார்த்தபடியே அப்பா கூப்பிட்டார்.

"அப்பா... அது வந்து... நாளைக்கு ஜூலை 20-ம் தேதி. அம்மா இறந்து போன நாள். திடீரென விஜயாவோட காலேஜ் பிரண்ட் அவங்க ஃபேமிலியோட இங்கே வர்றா. இந்த வீடு சின்னது.. அதனால... அன்னிக்கு... இல்லை நாளைக்கு..."

கோர்வையாய் வரவில்லை. உளறிக் கொட்டினேன். ஆனாலும் அப்பாவுக்கு சொல்ல வந்த விஷயம் புரிந்துவிட்டது. கண்களை மூடி 'ஈஸ்வரா' என்று சொல்லிக் கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்து விட்டார்.

"அப்பா"

அப்பாவுக்கு அம்மா மீது அளவில்லாத ப்ரியம். அந்த காலத்திலேயே ஊரையே எதிர்த்துக் கொண்டு காதல் கல்யாணம் செய்து கொண்டவர். அப்பாவுக்கு எல்லாமே அம்மாதான். அப்போதெல்லாம் அம்மா இல்லாத அப்பாவை யோசித்தே பார்க்க முடியாது. ஆனால் ஒரு கான்ஸரில் சோதனையாக அம்மா போய்விட்டாள். நான் அப்போதுதான் எஸ்.எஸ்.எல்.சி. முடித்திருந்தேன். அப்பாவுக்கு பெரிய ஷாக்தான். அப்பா அழவில்லை. ஆர்பாட்டம் பண்ணவில்லை.

ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து ஜூலை 20-ம் தேதி செய்து விடுவார். அதிகாலையிலேயே எழுந்து குளித்து, பட்டு வேஷ்டி பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒரு கருப்பு சால்வையை போர்த்திக் கொள்வார். அம்மா அந்த சால்வையைத்தான் தனது கடைசி காலங்களில் உபயோகப்படுத்தினாள். சுமார் மூன்று மணி நேரம் பூஜை செய்வார். கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டும். அன்று முழுவதும் எதுவும் சாப்பிடமாட்டார். பேசமாட்டார். பார்ப்பவர் மனதைப் பிழியும். கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்ப்பார். பூஜை முடிந்ததும் பாராயணம் செய்வார்.

சாயந்திரமாய் ஸ்நேகாலயா என்கிற அனாதை ஸ்ரமத்துக்குப் போய் குழந்தைகளுக்கு புதுத் துணிகள் கொடுத்துவிட்டு வருவார். இரவு எட்டு மணிக்கெல்லாம் தூங்கிவிடுவார்.

மறுநாள் சர்வ சாதாரணம். மறுபடி அடுத்த ஜூலை 20-ம் தேதிதான். விஜயாவுக்கு இதில் சுத்தமாக உடன்பாடில்லை. வெறும் கூத்து, ஷோ, சுய பச்சாதாபம் தேடுதல் என்று என்னவோ சொல்லுவாள். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்டாளில்லை.

"அவ பிரண்ட் ஏழு, ஏழரைக்கெல்லாம் வந்து விடுவாளாம். வேணுமின்னா நான் பக்கத்து வீட்டு சாவி வாங்கித்தரேன். அது காலியாத்தான் இருக்கு. உங்களுக்கு சகல வசதிகளையும் அங்கே பண்ணிடறேன். இந்த வீடு ரொம்ப சின்னது... அதான்... அதைத் தவிர அவர்களெல்லாம்..."

அப்பாவின் மெளனத்தை என்னால் தாங்கமுடியவில்லை. எல்லாம் இந்த விஜயாவால்தான். என்ன செய்ய? பிடிவாதக்காரி.

அப்பா சட்டென்று எழுந்தார். உள்ளே சென்றவர் பெரிய பை ஒன்றைக் கொண்டு வந்தார். "சிவா நீ நாளைக்கு ஒரு காரியம் செய்யணும். காலைலே ஆபீஸ் போகும் போது இந்த பையை ஸ்நேகாலயாவிலே நான் சொன்னேன்னு கொடுத்துடு. எனக்கு ரொம்ப தள்ளாமை வந்துடுத்து. முன்ன மாதிரி இப்ப முடியலை. என்னவோ ஜூலை 20-ம் தேதி அவ நினைவு வந்து என்னை ஆட்டறது. ஆகட்டும். மத்தவாளுக்கு அது ஷோவாப் படலாம். போனவ போயாச்சு. புலம்பி என்ன பிரயோஜனம்? நான் என்னவோ முட்டாப் பய மாதிரி ஷோ பண்ணிண்டு..."

"உங்களை ஸ்நேகாலயா போக வேண்டாம்ன்னு யார் தடுத்தா? சால்வைய போர்த்திண்டு, கண்ணீர் விட்டுண்டு, எல்லோரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னுதானே சொல்ல வந்தது. நாம் என்ன செய்யறோம்கிறதவிட அடுத்தவா அதை எப்படி பார்க்கிறாங்கிறதுதான் முக்கியம்." விஜயா உள்ளே இருந்து கொண்டே பேசினாள்.

"தோ பாரும்மா. நீ குஷாலா உன் பிரெண்டை கூட்டிண்டு வா. தோ பாருடா... நீ பக்கத்து வீட்டுச் சாவியெல்லாம் வாங்க வேண்டியதில்லை. நான் எல்லாத்தையும் விட்டுடப் போறேன். ஆச்சு... அறுபத்தியெட்டு வயசு ஆயிடுத்து. அவ போயே ஒரு மாமாங்கம் ஆயாச்சு. இன்னும் சொச்ச காலத்தை இப்படியே ஓட்டிடுவேன்." அப்பாவுக்கு மூச்சிரைத்தது.

திடீரென தள்ளாடியவாறே வேகமாக எழுந்து டக்கென்று இரு கைககளையும் கூப்பியவாறே, "நாளைக்கு என் கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது. போதுமா? போய்த் தூங்கு. நாளைக்கும் ஜூலை 19 தான். ஜூலை 20தாவது மண்ணாங்கட்டியாவது?" கடகடவென்று பாயை விரித்தார். போர்த்திக் கொண்டு படுத்துவிட்டார். எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. விஜயாவின் மீது கோபம் கோபமாக வந்தது. பதில் பேசினால், இன்னும் ஓங்காரமாய் நாலு வார்த்தைகள் பேசுவாள்.

கனத்த மனத்தோடு வந்து படுத்துக் கொண்டேன். தூக்கம் சரியாய் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தும் நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. தாகம் எடுக்கவே, தண்ணீர் குடிக்க கிச்சனுக்குப் போனேன். ஹாலில் எட்டிப் பார்த்தேன்.

அப்பா தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவால் எப்படி தீர்மானிக்க முடிந்தது? ஆங்காரமா? எனக்குள் குற்ற உணர்ச்சி மேலிட்டது. அப்பா மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? வந்து படுத்தேன். கண்ணைச் சொருகியது.

விஜயா என்னை எழுப்பினாள். காலை ஆகிவிட்டிருந்தது. "என்னங்க... கொஞ்சம் எழுந்து வாங்களேன். "

"என்ன ஆச்சு விஜயா? அப்பா குளிச்சுட்டு உட்கார்ந்திருக்கறாரா?"

"இல்லீங்க... அப்பா போயிட்டாருங்க"

மை காட்! ஓடிப் போய் பார்த்தேன். நெடுசாண் கட்டையாய் கிடந்தார். உடம்பு சில்லிட்டிருந்தது. ராத்திரியே உயிர் பிரிந்திருக்க வேண்டும்.

என் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் வராது என்று அப்பா சொன்னது காதில் ஒலித்தது. அவர் கண்களில் கண்ணீர் இல்லை. எங்கள் கண்களில்தான் கண்ணீர் நிரம்பியிருந்தது, விஜயா உள்பட.

No comments: