Wednesday 14 February, 2007

செல்லாக் காசு


செல்லாக் காசு

2001 ஜூன் 24 கல்கி

தெரு முனையில் என்றும் இல்லாத அளவுக்கு ஏகமாய் கூட்டம். சாதாரணமாக சிவராமன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மாலை வாக்கிங்கை முடித்தோமா வீட்டுக்குள் சென்று அடைந்தோமா என்ற டைப்தான். ஆனால் கூட்டத்திலிருந்து வந்த சத்தமும் மக்களின் பரபரப்பும் அவரை சலனமடைய செய்தன. ஏழரை மணிக்குத்தான் டி.வி. சீரியல். அது வரை என்ன செய்ய? கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு வந்தால் என்ன?

கூட்டம் அடர்த்தியாக இருந்தது. இலேசில் உள்ளே நுழைய முடியவில்லை. கொஞ்சம் இங்கே அங்கே சுற்றி இண்டு இடுக்கை ஆராய்ந்து ஒரு வழியாக உள்ளே நுழைந்துவிட்டார்.

எட்டிப் பார்த்ததில்...

ஒரு சோனிக் கிழவன் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்தான். மத்தியில் ஒரு அழுக்குத் துணி விரிந்து கிடக்க, அங்கும் இங்குமாக சில்லறைகள். ஒரு பெண் தண்ணீர்க் குடம் ஒன்றை வட்டத்துக்குள் வைத்தாள்.

இரண்டு முறை சாதாரணமாகச் சுற்றி வந்த கிழவன் திடீரென குனிந்து தண்ணீர் குடத்தை எடுத்து தலை மீது வைத்துக் கொண்டான். கைகளை விட்டுவிட்டான். கூட்டத்தினர் கைதட்டி ஆர்பரிக்க சில்லறைகள் விழுந்த வண்ணம் இருந்தன.

சிவராமன் போய் விடலாமா என்று யோசித்தார். வித்தையில் என்ன வேடிக்கை? மக்கள் என்னவோ ஆர்பரித்து மகிழ்ந்தாலும் அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கிழவனுக்கு அறுபது வயசு இருக்கலாம். வித்தை காட்டுகிற வயசா இது? எழுபத்து மூன்று வயதில் இரண்டு முறை இரண்டாவது மாடி ஏறவே மூச்சு வாங்குகிறது. கிழவன் இந்த வயதில் தன்னை இப்படி வருத்திக் கொண்டு வீதி வீதியாகப் போய் வித்தை காட்டி பிழைக்க வேண்டிய அளவுக்கு என்ன கஷ்டமோ?

மனசு பொறுக்கவில்லை. வெளியே வந்து விட்டார். விடுவிடுவென நடையை போட்டார். ஏன் போய் பார்த்தோம் என்றாகிவிட்டது.

அது சரி, கிழவன் அவன் பிழைப்புக்காக தன்னை வருத்திக் கொள்கிறான். இதில் தான் வருத்தப்பட என்ன இருக்கிறது? கிழவனில் தன்னைப் பொறுத்திப் பார்த்ததில் வந்த விளைவோ?

சிவராமன் ரிடையர் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. ரிடயர் ஆன போது பிராவிடண்ட் ஃபண்டு பணம்தான் கிடைத்தது. பென்ஷன் இல்லை. கிராஜுவிட்டி எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒரு லட்சத்து இருபத்தி எட்டாயிரம் கொடுத்தார்கள். நல்லவேளையாக ரிடையர் ஆவதற்கு முன்பே மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்துவிட்டார். அடித்து பிடித்து என்பதினாயிரத்தில் அறுநூறு சதுர அடியில் இரண்டாவது மாடியில் தண்ணீருக்கு ஆலாய் பறக்கும் மேற்கு மாம்பலத்தில் பிளாட்தான் வாங்க முடிந்தது. அதை ஆத்மா பெயரில் வாங்கியது எவ்வளவு பிசகு என்பதை பிறகுதான் உணரமுடிந்தது.

ஆத்மா ஒரே மகன். இன்னமும் நிலையான வேலையில்லை. நாற்பது வயதிலும் கம்பனிக்கு கம்பனி மாறிக் கொண்டிருக்கிறான்.

பையன் துரதிர்ஷ்டம் என்றால் வாய்த்த மருமகள் அதிர்ஷ்டம். சாந்தியின் சப்போர்ட் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் இந்த கிழவன் மாதிரி வீதிக்கு வந்திருப்பாரோ என்னவோ?

பி. எஃப். பணத்தின் மிச்சத்திலிருந்து சில ஆயிரங்களுக்கு தன் மூன்று பெண்களுக்கும் கிரைண்டர், பீரோ மாதிரி சிலவற்றை வாங்கிக் கொடுத்தார். அது ஆத்மாவுக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உரசல்கள் அதிகமாகி ஒரு வழியாக இருவருக்கும் பேச்சுவார்த்தை நின்றே போனது. அதன் பிறகு எல்லாமே சாந்தி மூலமாகத்தான்.

ரிடையர் ஆனதில் கசண்டு போல மிச்சமிருந்த இருபதினாயிரம் ரூபாய்க்கும் பிறகு கேடு வந்தது. சாந்தியின் இரண்டாவது பிரசவத்தில் ஏகப்பட்ட சிக்கல். என்ன ஏது என்றே புரியாமலே தொடர்ச்சியாய் சில ஆப்பரேஷன்கள். சாந்தியை வீட்டுக்கு அழைத்து வர தன்னிடம் உள்ள பணத்தை கொடுத்தால் ஒழிய வேறு வழியில்லை என்ற நிலைமை. கொடுத்துவிட்டார்.

ஆத்மா வீராப்பாக ஆறே மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவதாகச் சொன்னான். தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும்.

ஆயிற்று. மூன்று வருடங்கள்.

சிவராமன் கையில் சுத்தமாக சல்லி காசில்லை. புகையிலைக்கும் புளிப்பு மிட்டய்க்கும் சாந்தி மூலமாக கேட்டு பெற வேண்டியிருக்கிறது. சாந்தி அவ்வப்போது கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தாலும் ஆத்மா கணக்கு எழுதுகிறேன் பேர்வழி என்று நோகடிப்பான்.

ஒரு முறை பேரன் ராகவ் மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று தாத்தாவை நச்சரிக்க 'அப்பாவிடமிருந்து என் பணம் வரும். அதில் வாங்கித் தருகிறேன்' என்று சாந்தி மூலமாக சொன்னதற்கு, 'ராகவுக்கு எப்போது சைக்கிள் வாங்கித்தர வேண்டும் என்று எனக்கு தெரியும். அப்பாவை வம்பு செய்யாமல் சும்மாயிருக்கச் சொல்' என்று அவன் கத்த என் பணம் உன் பணம் என்று வீடே ரகளையானது.

சிவராமன் செல்லாக்காசாய் போய்விட்டார்.

சரி. இங்கே இருந்தால்தான் மனஸ்தாபம் என்று சில நாட்களுக்கு தன் பெண்களை பார்க்க சென்றால், 'எனக்கு செலவு வைக்க வேண்டுமென்றே அப்பா அடிக்கடி அக்காக்களை பார்க்க போய்விடுகிறாரா?' என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு கத்துவான். இத்தனைக்கும் மூன்று டஜன் வாழைப்பழங்களும் சில பிஸ்கட்டுகளும்தான்.

ஆத்மா ஒன்றை புரிந்துகொள்வில்லை. தான் பணத்தைத் திருப்பி கேட்பது ஏதோ தொடர்ச்சியாகச் செலவு செய்வதற்கு என நினைத்துக் கொண்டிருக்கிறான். தன்னிடம் பணம் இருப்பது ஒரு பாதுகாப்புக்கும் ஒரு மரியாதைக்கும் என்பதை எப்படி புரிய வைப்பது? சாந்தியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாயிற்று. அவளுக்கு தன்னால்தான் அப்பாவுக்கு அவஸ்தை என்ற சுயப்பச்சாதாபம் வேறு.

போன வாரம் ஒரு வழியாக சொல்லி முடித்து விட்டான். அவனுக்கு ஆபீஸில் ஏகப்பட்ட டென்ஷனாம். தன்னைத்தான் சரியாக படிக்க வைக்க வில்லை. நல்ல வேளையில் சேர்த்து விடவில்லை. தன் அக்காக்களை கவனித்துக் கொண்ட மாதிரி தன்னைக் கவனிக்கவில்லை. இனி மேல்கொண்டாவது தனக்கு மன கஷ்டங்களை கொடுக்காமல் சும்மயிருக்கச் சொல் என்று வழக்கம் போல சாந்தி மூலமாகச் சொல்லிவிட்டான்.

பாவம். அந்த பெண். ஸ்விட்ச் போட்ட மாதிரி அழுகிறது. எங்கே இந்த பிரச்சனையால் மீண்டும் ஏதாவது அவள் உடம்புக்கு வந்துவிடக் கூடாதே என்று முற்று புள்ளி வைத்து விட்டார். செல்லாக் காசாய் சொச்ச காலத்தை தள்ள வேண்டும் என்பது தலையெழுத்து என்பதை மனசளவில் ஏற்றுக் கொண்டு விட்டார். எல்லாவற்றுக்கும் மரணம்தான் சரியான தீர்வு. ஆனால் அது வர மாட்டேன் என்கிறதே.

வாசலில் இருந்த வாட்ச்மேன் சாந்தி வெளியே போயிருப்பதாகச் சொன்னான். சாவி வாங்கிக் கொண்டு தானே கதவை திறந்து தனியாக வீட்டில் இருக்க அலுப்பாக இருந்தது. நேரம்தான் இருக்கிறதே. அந்த கிழவனை மீண்டும் ஒரு முறை போய் பார்த்துவிட்டு வந்தாலென்ன? சைக்கிள் கூத்தும் இந்நேரம் முடிந்திருக்கும்.

எதிர்பார்த்த மாதிரியே கிழவன் சில்லறை காசுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான். சைக்கிள் ஓரமாக சாத்தப்பட்டு இருந்தது. அதுவும் அவனை மாதிரியே நோஞ்சானாய் இருந்தது.

அப்போதுதான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. எல்லோரும் சில்லறை போட்டார்களே, தான் ஒன்றுமே அவனுக்கு கொடுக்கவில்லையே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு ஒன்றும் கொடுக்காமல் போவது பிசகல்லவா?

சட்டைப் பையை துழாவினார். ஒரே ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு இருந்தது. தனக்கு பாதுகாப்பும் மரியாதையும்தான் பிரச்சனை என்றால் இவனுக்கு சோறு கிடைப்பதே பெரிய பிரச்சனை.

எதோ ஒரு வேகத்தில் ஐம்பது ரூபாயை அவன் அழுக்கு துணியில் போட்டார். குனிந்து சில்லறைகளை எண்ணிக் கொண்டிருந்தவன் ஐம்பது ரூபாய்த் தாளை பார்த்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவன் பார்வையில் மிரட்சி இருந்தது.

"ஐயா ரொம்ப நன்றிங்க".

"ஏம்பா. இந்த வயசுல சைக்கிள் மிதிச்சு வித்தை காட்டறயே. கஷ்டமாயில்லை? உடம்பு தாங்குமா?"

"என்னங்க செய்யறது. மூனு பசங்க இருக்காங்க. இருந்தும் சரியில்லை. ஒரே ஒரு பொட்டை புள்ளே இருக்குது. அதுவும் சீக்காளியா போக சொல்ல அவ வூட்டுக்காரன் வுட்டுட்டு போயிட்டான். கொஞ்ச நாள் பிச்சை எடுத்துப் பார்த்தேன். ரொம்ப அவமானமா இருந்திச்சு. சரி, எனக்கு தெரிஞ்சது இது ஒண்ணுதான். ஏதோ தெம்பு இருக்கங்காட்டிப் பொழப்பு ஓடுது. அப்பால... அவன் பார்த்துப்பான்."

கிழவன் மேலே காட்டினான்.

"சரிப்பா. ஒடம்பு வலுவுக்கேத்த வேல செஞ்சு பொழச்சுக்கோ. வருமானம் கம்மியா இருந்தாக்கூட பரவாயில்ல. ஏடாகூடமா நாம ஏதாவது செஞ்சுட்டு மத்தவங்களுக்கு பாரமா போயிடக் கூடாதில்லையா? அந்த ஆதங்கத்துல சொல்லறேன்."

"ஒங்க நல்ல சொல்லுக்கு எனக்கு அது மாதிரி எதுவும் வராதுங்க. ரொம்ப நன்றிங்க."

சிவராமனுக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. மனசு ஒப்பிக் கொடுக்கும் போதுதான் எவ்வளவு மகிழ்ச்சி. திரும்பி பாதி தூரம் வந்தவருக்கு சொரேலென்றது. சாயந்திரம்தான் சாந்தி அந்த ஐம்பது ரூபாயை கொடுத்தாள். ராகவுக்கு நாளை ஸ்கூல் திறக்கிறது. பிரட்டும் பட்டரும் வாங்கி விட்டு மிச்ச பணத்தை கைசெலவுக்கு வைத்துக் கொள்ள சொல்லியிருந்தாள்.

ஐயைய்யோ. இப்போது என்ன செய்ய? சாந்தியிடம் போய் விஷயத்தைச் சொல்லி மேலும் இருபது ரூபாய் கேட்பதா? கேட்டால் என்ன நினைப்பாள்?

ஆத்மாவை எப்படிச் சமாளிப்பது? நானே ஒரு செல்லாக் காசு. இதில் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாயிற்று.

செய்வதறியாமல் தவித்தார். கிழவனிடம் மீண்டும் போய் இருபது ரூபாயை மட்டும் கேட்டால் என்ன? ஆனால் அதை உடனே நிராகரித்தார். சே! தானம் கொடுத்தைத் திருப்பிக் கேட்பது கேவலம். வேண்டாம். சாந்தியிடமே.... சாந்தி வேறு வீட்டில் இல்லையே.

இரண்டு தப்படி முன்னே போவதும், திரும்பி வருவதுமாக திண்டாடினார். கடைசியில் கிழவனிடம் வெட்கத்தை விட்டுக் கேட்டுவிடுவது என்று தீர்மானித்துவிட்டார்.

கிழவன் சைக்கிள் அருகில் நின்று கொண்டிருந்தான். தயங்கி, தயங்கி, அவன் அருகில் போய் தலையை சொறிந்தவாறே நின்றார். எப்படி கேட்பது? பேச்சு வரவில்லை.

"என்னங்கய்யா"

"அது வந்துப்பா. எங்கிட்ட சில்லறை இல்லே. உன் கஷ்டத்தைப் பார்த்த போது சில்லறை மாத்தறது பெரிசாப் படலை. அதான் ஐம்பது ரூபாயையும் அப்படியே போட்டுட்டேன். அப்பறந்தான் என் மண்டைக்கு ஒறைச்சது. இருபது ரூபாய்க்கு இப்போ உடனடியா செலவு இருக்கு. அதனால நீ முப்பது ரூபா எடுத்தின்டு"

"என்னாங்க சாமி. என்ணெண்வோ பேசிக்கிட்டு, உங்களோட பெரிய மனசே போதுங்க. இந்தாங்க இருபது ரூபா."

கிழவன் கொடுத்த அந்த இருபது ரூபாயை லட்சரூபாய் மாதிரி பத்திரமாக பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு மிகுந்த தளர்வோடு திரும்பினார்.

சே! என்ன முட்டாள்தனம். செல்லாக் காசுக்கு தான தர்மம் ஒரு கேடா?

கொஞ்ச தூரம்கூட தாண்டியிருக்கமாட்டார். பின்னாலிருந்து அவர் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பியதில், கிழவன் சைக்கிளோடு நின்று கொண்டிருந்தான்.

"ஐயா, மன்னிச்சுக்கணும். என் பேச்சுக்கு கோவிச்சுக்க கூடாது. எனக்குள்ள எவ்வளவு துக்கமிருக்குதுன்னு நீங்க எப்படி உணர்ந்தீங்களோ அந்த மாதிரி உங்களுக்குள்ளேயும் ஏதோ நோவு இருக்குதுன்னு எனக்கு தோணுதுங்கய்யா. என்னோட கஷ்டத்தை விட்டுத் தள்ளுங்க. அது என்னோட விதி. என் கூடவே பொறந்தது. அதை நான்தான் கவனிக்கோணும். உங்களை கஷ்டப்படுதறது ரொம்ப பாவங்க. அதனால தயவு செஞ்சி தப்பா எடுத்துக்காம இந்த முப்பது ரூபாயையும் வாங்கிக்குங்க. உங்களை காட்டியும் எனக்கு கொஞ்சம் வலு இருக்குது. உங்க நல்ல மனசுக்கு நீங்க சுகமா இருந்தா அது போதுங்க. இந்தாங்க."

சட்டைப்பையில் மூன்று பத்து ரூபாய் தாள்களை திணித்து விட்டு சைக்கிளை மிதித்து போய்விட்டான் கிழவன்.

No comments: