Sunday, 11 February, 2007

விசுவாசத்தின் விலை


விசுவாசத்தின் விலை

1997 டிசம்பர் 05 குங்குமம்

பெருத்த அவமானமாய் போய்விட்டது செல்லதுரைக்கு. முதலாளியின் நம்பிக்கையை இழப்பதென்பது மானம் மரியாதையை இழப்பதற்கும் மேலானது அல்லவா?

பிரச்சனை இதுதான். செல்லதுரை தற்போதைய முதலாளியான அருண்குமாரின் அப்பா முதன் முதலாய் சின்னதாய் இந்த கம்பனியை தொடங்கிய அந்த நாட்களிலிருந்தே வேலையிலிருப்பவர். பெரிய முதலாளி பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு கோர விபத்தில் இரண்டு கால்களையும் இழக்கவும் கம்பெனி செல்லதுரையின் நேரடி நிர்வாகத்துக்கு வந்தது.

அப்போது அருண் சின்னப் பையன். தற்காலிக ஏற்பாடாய் வெற்று செக்கு புத்தகத்தில் கையெழுத்திட்டு செல்லதுரையிடம் கொடுக்கும் வழக்கம் பிறகு நிரந்தரமாகிப் போனது. செல்லதுரையின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் அருணின் அப்பா.

அந்த நம்பிக்கைக்குக் கேடு வந்து விட்டது. அருண்குமார் வீட்டு வேலைக்காரனை அனுப்பி செக் புத்தகத்தை கேட்டிருந்தான்.

பிள்ளை வளர்ந்துவிட்டான். நிர்வாகத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளப் போகிறான். நேரடியாகச் சொல்லாமல் இந்த குறுக்கு வழியில் வந்து அவமானப் படுத்தி வெளியேற்ற நினைக்கிறான். கொஞ்ச நாட்களாகவே அருண் கணக்கு புத்தகங்களை பார்ப்பதும் பாஸாகிய வவுச்சர்களை மேய்வதுமாக இருக்கிறான். அதன் உள் அர்த்தம் தற்போது தெள்ளத் தெளிவாகி விட்டது.

செல்லதுரைக்கு வேலை பார்க்கவேண்டிய கட்டாயமும் இல்லை. அவர் ஒரே பையன் மும்பையில் வசதியாக இருக்கிறான். ஏதோ பெரிய முதலாளியின் விசுவாசத்திற்காக இத்தனை காலம் இருந்தார். இனிமேல் ஒரு நிமிஷம் இருப்பதுகூட மகா கேவலம்.

உடனடியாக டிராவல் ஏஜென்சிக்கு போன் போட்டு ஒரு வாரத்தில் மும்பைக்கு ரயில் டிக்கெட் வாங்கினார். ஒரு வெள்ளைத் தாளை உருவினார்.

"உயர்திரு அருண்குமார் அவர்களுக்கு,

வணக்கம். கம்பனி செக் புக் மட்டும் உங்களுடையது அல்ல. இந்த கம்பனியே உங்களுடையதுதான். இன்றிலிருந்து விடை பெற்றுக் கொள்கிறேன். பொறுப்பேற்றுக் கொள்க."
இப்படிக்கு.
உங்கள் அப்பாவின் பரமவிசுவாசியான
செல்லதுரை.

நாலாய் மடித்து ஒரு கவரில் போட்டு பியூன் மூலமாக கொடுத்தனுப்பி விட்டார்.

சுமார் நாலு மணிக்கெல்லாம் செல்லதுரைக்கு இன்னோரு ஆச்சர்யம் காத்திருந்தது. தான் கொடுத்தனுப்பிய செக் புக், ராஜினாமா கடிதம் ஆகியவற்றோடு ஒரு கடிதமும் உள்ளடங்கிய கவர் ஒன்று வந்தது.

செக் புக்கை பிரித்தார். தன் பெயரில் அறுபதினாயிரம் ரூபாய்க்கு செக் எழுதப்பட்டிருந்தது. செல்லதுரைக்கு ஒன்றும் புரியவில்லை. உடனடியாக அருண்குமாரின் கடிதத்தை பிரித்தார்.

"உயர்திரு செல்லதுரை அவர்களுக்கு.

வணக்கம். உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் வரம்பு மீறி விட்டேன். மன்னிக்கவும். கம்பனியின் லாபக் கணக்குகளையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தங்கள் சம்பளம் கடந்த பதினைந்து வருடங்களாக மாறாமலேயே இருப்பது நேற்றுதான் தெரிய வந்தது. இந்த கம்பனி மீது உள்ள உங்கள் விசுவாசத்திற்கு ஈடேயில்லை. எனக்குத் தோன்றிய ஒரு தொகையை செய்துவிட்ட தவறுக்குப் பரிகாரமாகச் செய்திருக்கிறேன். நீங்களாக தனக்குத்தானே போட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதால் ஒரு சுற்று வழியைக் கையாண்டு உங்களை புண்படுத்திவிட்டதற்கு மீண்டும் மன்னிக்கவும்.
இப்படிக்கு
உங்கள் மகனுக்கு சமமான
அருண்குமார்.

செல்லதுரைக்கு முதன் முறையாக அருண் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. அப்பாவைப் போலவே பிள்ளை! ராஜினாமாக் கடிதத்தை மிகுந்த மனநிறைவுடன் சுக்கல் சுக்கலாக்கினார்.

No comments: