Thursday 22 February, 2007

அப்பாவா? யாரது?


அப்பாவா? யாரது?

2006 நவம்பர் 01ஆனந்த விகடன்

"வாம்மா. உட்காரு." வந்தவளுக்கு சேர் ஒன்றை என் டேபிளுக்கு முன்னால் இழுத்து போட்டேன்.

ஒல்லியான சிறிய உருவமாக இருந்தாள். செபாஸ்டினின் சாயல் துளி கூட இல்லை. கருப்பாக இருந்தாலும் நடை உடை பாவனையில் ஸ்மார்ட்னெஸ் தெரிந்தது. ஏதோ பிபிஓ கால் சென்டர் கம்பனியில் ஓரளவுக்கு நல்ல வேலையில் இருப்பதாக ஆபீஸில் யாரோ சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

"ஸார். நீங்க சொன்ன பேப்பர்ஸ் எல்லாம் கொண்டு வந்திட்டேன். டெத் ஸர்டிபிகேட் வாங்கறதுல கொஞ்சம் சிக்கலாயிட்டு. அதான் லேட். செக் நாளைக்கு கிடைச்சா நல்லது."

உடனடியாக கிளார்கை கூப்பிட்டு அவளுக்கு முன்னாலேயே அவள் திருப்தியாகும்படி உத்திரவுகளை கொடுத்தேன்.

"நாளைக்கு ஒரு மணிக்கு வந்தா, செக் கிடைச்சுடும்மா. கவலைப் படாதேம்மா. நாங்கள்லாம் இருக்கோம்."

என் குரலில் கொஞ்சம் கனிவு சேர்ந்தது. அவள் தலையை குனிந்து கொண்டாள். செபாஸ்டின் எங்கள் ஆபீஸ் ப்யூன். நாற்பது வயதுதான். ஆறு மாசமாக படுத்த படுக்கையாக கிடந்து, போன சனிக்கிழமை செத்து போய்விட்டான். படிப்பறிவில்லாத மனைவி. இவளைத் தவிர நண்டும் சிண்டுமாக ஒரு தம்பியும் ஒரு தங்கையும்.

"ஸாரிம்மா. ஆபீஸ் விஷயமா வெளியூர் போய்ட்டு நேத்திக்கு காலைதான் வந்தேன். செபாஸ்டின் நல்ல சின்சியர் ஒர்கர்ம்மா. ரொம்ப பணிவு. நாங்கள்லாம் அவன் பொழைச்சு வந்திடுவான்னுதான் நம்பிக்கிட்டிருந்தோம். கடவுள் இவ்வளவு கொடுமைக்காரராக இருக்கக்கூடாது"

மெல்லியதாக தொடங்கிய என் இரங்கலை அவள் சட்டென கை உயர்த்தி நிறுத்தினாள்.

"போதும் சார். இந்த மேம்போக்கான வார்த்தைகளை கேட்டு கேட்டு எனக்கு போரடிச்சிடுச்சு. மன்னிச்சுக்கணும். அவரை நான் அப்பான்னு சொல்லவே விரும்பல. வாங்கின சம்பளத்துக்கும் மேல குடியும் கூத்துமா இருந்தாரு. ஊரு முழுக்க கடனை வச்சாரு. வெட்கமே இல்லாம மூனு பிள்ளைங்களை பெத்தாரு. என் அம்மாவை அடிச்சே முடமாக்கினாரு. கடைசில எங்கையோ தண்ணிய போட்டுட்டு லாரி முட்டி ஆஸ்பத்திரில கெடந்து இழு இழுன்னு இழுத்து இன்னும் அரை லட்சத்துக்கு கடனை வச்சிட்டு ஒரு வழியா போய் சேர்ந்தாரு."

நான் உறைந்து போய் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, மீண்டும் அவளே தொடர்ந்தாள்.

"லாரில அடிபட்டு செத்திருந்தா கூட ரெண்டு லட்சம் வரைக்கும் நஷ்ட ஈடு கிடைச்சிருக்கும். ஆஸ்பத்திரி செலவு மிச்சமாகியிருக்கும். அவரோட கடன்களை அவராட சாவாலேயே சரி செஞ்சிருக்கலாம். என்ன செய்ய? எங்க விதி. இருக்கும் போதும் சல்லி காசுக்கு உபயோகமில்லே. செத்தும்......"

"இல்லைம்மா. என்ன இருந்தாலும் அப்பாவை அதுவும் செத்து போய்ட்டவங்களை அப்படி எடுத்தெறிஞ்சு பேசக் கூடாது."

"அப்பாவா? யாரது? ஸார். அவரை பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியும். ஏன், எல்லாருக்குமே தெரியும். இருந்தும் எதுக்கு ஸார் பொய்யான வருத்தம்? அவரோட கொடுமைகளை உடம்பாலயும் மனசாலயும் நான் ராத்திரி பகலா வலிக்க வலிக்க அனுபவப்பட்டிருக்கேன் ஸார். என்னை பொறுத்த வரைக்கும் அப்பா, அம்மா, கணவன், மனைவிங்கற சொற்களுக்கெல்லாம் அர்த்தமிருக்கு. அதற்கு தகுதி வேணும். ஹி ஹெப்பண்ட் டு பி மை பயாலாஜிகல் பாதர். அவ்வளவுதான். நீங்க செக்கை சீக்கிரம் கொடுத்தா கந்து வட்டி கொஞ்சம் குறையும். என் ட்யூட்டிக்கு லேட் ஆவுது. வர்ரேன் ஸார்."

சரேலென எழுந்தாள். வலுவற்ற செயற்கையான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு போய்விட்டாள். எனக்குள் அதிர்ச்சி முழுவதுமாக விலக வெகு நேரம் ஆயிற்று.

1 comment:

Jaisakthivel said...

very interesting Sir

Jaisakthivel