நான் நல்ல நல்ல சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். கிட்டத்தட்ட 80 சிறுகதைகளுக்கு மேல் இருக்கும். எல்லா சிறுகதைகளும் ஒரே பேட்டர்னில் இல்லாமல் வெவ்வேறு தளங்களில் எழுதியிருக்கிறேன். பல வெகுஜன பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே என்ற பல முயற்சிகள் எடுத்தேன். சிறுகதைகளுக்கு எப்படி பத்திரிக்கைகளில் ஆதரவு இல்லையோ அதே மாதிரிதான் தொகுப்பு வெளியிட பதிப்பகத்தார்களிடம் ஆதரவு இல்லை. நானே எனது தொகுப்பை வெளியிட்டு, என் சொந்த காசை பெருமளவு செலவழித்து, அச்சடித்த புத்தகங்களை வீட்டில் புழுதியடையாமல் பாதுகாக்க சிரமப்பட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு, நண்பர்களிடம் விற்க முயற்சித்து அவர்களிடம் மன கசப்பு கொண்டு, கிடைக்காத லைப்ரரி ஆர்டருக்காக அலையாய் அலைந்து அல்லோல படுவதை விட ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தேன். அதாவது, தற்கால லேசர் பிரிண்டர்களில் ஒரு ஏ4 பேப்பரில் நான்கு பக்கங்கள் குறுக்காக அடிக்கும் படியான லெஃப்ட் ரைட் பைண்டிங் வசதி உள்ளது. அதாவது 1ம் மற்றும் 16ம் பக்கம் ஒரு தாளில் குறுக்காக இருக்கும். பின் பக்கத்தில் 2ம் மற்றும் 15ம் பக்கம் வரும். இந்த மாதிரி 16 பக்கங்கள் வரும் மாதிரி தனித் தனி செட் தயார் செய்து, ஒரு மாஸ்டர் செட் தயார் செய்து கொண்டேன். பிறகு அதை ஜெராக்ஸ் கடையில் கொடுத்து 40 காப்பி எடுத்தேன். பெயரளவுக்கு ஒரு சாதாரண அட்டை தயார் செய்து கொண்டேன். பைண்டிங் கடைகளில் பர்ஃபெக்ட் பைண்டிங் என்று தொழில்நுட்பத்தில் பைண்டிங் செய்து தருகிறார்கள். அந்த மாதிரி முதலில் 40 அதன் பிறகு அடுத்து 40 என என் தேவைக்கு ஏற்ப பைண்டிங்க் செய்து கொண்டேன். இனி எனக்கு பதிப்பாளர்கள் தேவையில்லை, வீட்டில் ஸ்டாக் வைக்க வேண்டாம். என் நண்பர்கள் என்னை கண்டு ஓடமாட்டார்கள். லைப்ரரி ஆர்டர் பிடிக்க அலைய வேண்டாம். என் சிறுகதைகளை படிக்க விரும்புகிறவர்களுக்கு, இனைய வசதி இல்லாதவர்களுக்கு அன்பளிப்பாகவே கொடுத்து விடுகிறேன். ஒரு எழுத்தாளன் என்னமாய் ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது? ஆனால் அதே நேரத்தில் ஓபாமா, கடலை மாவு என்று இனையத்திலிருந்து காப்பி யடித்து, கொஞ்சம் ஜல்லியடிச்சு ஒரு புத்தகம் போட்டால் பதிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை, இன்றைய வணிகம் அப்படி!
1 comment:
உங்கள் அறிமுகம் கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் சில நாட்களில் உங்கள் ஒட்டுமொத்த பதிவையும் படித்து முடித்து பின்னோட்டம் இடவேண்டும். உங்களில் உங்கள் கதைகளில் பதிவுகளில் இருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது
Post a Comment