Friday 27 July, 2012

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் கவனத்திற்கு


வணக்கம். இந்த கடிதம் எழுதும் சமயத்தில் மனசு கனத்துப் போயிருக்கிறது. உணர்ச்சி கொந்தளிப்பை கொஞ்சம் அடக்கி அறிவு பூர்வமாக ஒரு சில கருத்துக்களை சொல்ல விழைகிறேன்.

தமிழக அரசு அதிகார வர்கத்தில் லஞ்சம் என்பது இரண்டற கலந்து விட்ட ஒரு விஷம் என்பது ஒரு ஊரரிந்த ரகசியம். அதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நேற்று தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு சின்னஞ்சிறு மழலை பலியாக யார் காரணம்? ஒரு குழந்தை உள்ள விழும் அளவுக்கு ஓட்டை உள்ள ஒரு வண்டிக்கு தகுதி சான்று கொடுக்கும் தைரியம் எப்படி ஒரு போக்குவரத்து ஆய்வாளருக்கு வந்தது? குழந்தை உயிர் பறிபோனது தெரிந்தும் கூட எங்களுக்கு அந்த துயர சம்பவத்தில் நேரடி பொறுப்பில்லை என்று சொல்ல சொல்ல ஒரு தாளாளருக்கு எப்படி ஒரு தைரியம் வருகிறது? மக்கள் இப்படி கொஞ்ச நாட்கள் கத்தி கதறுவார்கள், அதன் பிறகு நாம் மீண்டும் கூட்டுக் கொள்ளையை தொடரலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் மீண்டும் அளிக்கும் அந்த அதிகார சக்தியின் வீர்யம் எங்கிருக்கிறது?

நான் உங்களை ஒரு மக்களின் காப்பாளராக பார்க்கிறேன். புரையோடி போயிருக்கும் இந்த மலினங்களை எப்படி கவனிக்காமல் இருந்து விட முடியும்?

இந்த வார விகடனில் போலீஸ் துறையை பற்றிய விரிவான அலசல் வந்திருக்கிறது. மக்களை காக்க வேண்டிய போலீஸ் துறை எப்படி மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறார்கள் என்பதை தெள்ள தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது. உண்மையான திருடர்கள் போலீஸ் அல்லவா? போலீஸ் அதிகாரிகளுக்குள் லஞ்சம் பிரிப்பதில் தகராறு வந்து கட்டிபுரண்டு சண்டையிட்டார்கள் என்ற செய்தி சில நாட்கள் முன்னால் செய்திதாள்களில் வந்தது. இதுவும் ஒரு சோறு பதம்தான். இதை வேறோடு பிடுங்க ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

உங்கள் உளவுத்துறையில் உள்ள நம்பிக்கையான ஒரு சிலரை வைத்து நான் தரும் இந்த துறைகளில் ஒரு சர்வே எடுங்கள். உங்களுக்கு சீழ் பிடித்து போன அதிகாரத் துறையின் லட்ச்சனம் புரியும்:

1. பத்திர பதிவு துறை

2. பொது பணித்துறை

3. வட்டார போக்குவரத்து துறை

4. வருவாய் துறை

5. அரசு பொது மருத்துவ மனைகள்

இந்த பட்டியல் ஏதோ ஒரு எடுத்துக் காட்டுக்குதான். கான்சர் உடம்பு முழுவது பரவிட்ட மாதிரி அனைத்து துறைகளிலும் லஞ்சம் பரவியிருக்கிறது. இது இந்த ஆட்சி அந்த ஆட்சி என்று இல்லாமல் எல்லா ஆட்சியிலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

இங்கு மக்கள் படும் பாட்டை விட அரசுக்கு வரவேண்டிய வருமானம் பெருமளவு அரசு அதிகார வர்கத்து பாக்கெட்டுகளில் போய்விடுகிறது என்ற உண்மையும் புரியும்.

எனக்கு தெரிந்த எளிய சிறு வழி முறைகளை சொல்ல விரும்புகிறேன்.

1. நீங்கள் சட்ட சபையில் நேரடியாக அரசு அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடவேண்டும். லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை என்று தெள்ள தெளிவாக ஆனித்தரமாக தெரிவிக்க வேண்டும்.

2. அரசு அலுவலங்களில் அரசு அதிகாரிகளை தவிர அங்கும் இங்கும் அலையும் புரோக்கர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்.

3. ஒரு துறையிலும் நுழைவாயிலில் ஒரு வரவேறபறை உருவாக்கி வரும் பொதுமக்களுக்கு லஞ்சமில்லா உதவிகள் செய்ய வேண்டும்.

4. லஞ்சம் வாங்குவோரை கையும் களவமாக பிடிக்க சிறப்பு படைகளை உருவாக்க வேண்டும். மக்கள் வந்து புகார் கொடுத்தால்தான் என்று இல்லாமல் சந்தேகப்படும் நபர்களை பொறிவைத்து பிடிக்கும் தனிப்படைகளை உருவாக்க வேண்டும்.

5. அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு, அதை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்ய வேண்டும்.

6. பொது மக்களுக்கு லஞ்சம் பற்றிய தகவல்களை ரகசியமாக தெரிவிக்க 'தபால் தலை இல்லா - அனுப்புனர் முகவரி இல்லா' கடிதங்களை வரவேற்க வேண்டும். தகுந்த தபால் தலை செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.

7. மக்கள் தைரியமாக லஞ்ச தகவல்களை தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் ஒரு பெட்டி வைக்க வேண்டும்.

8. 100, 108 மாதிரி மிக எளிதாக மனதில் வைக்கும் படியாக ஒரு தொலைபேசி எண்ணை லஞ்ச ஒழிப்புக்காக உருவாக்கி அதை செய்தி தாள்களில் அறிவிக்க வேண்டும்.

இது மாதிரி ஒரு போரை துவங்குங்கள். மக்கள் நிச்சயம் உங்கள் பக்கம் இருப்பார்கள்.


1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சமுத்திரத்தில் பெய்த அடை மழை!