Wednesday, 4 March, 2009

தெய்வம் தந்த வீடு


சிவாவுக்குள் பிசாசு மனம் கூச்சலிட்டது. "ஏமாந்தியா, முட்டாளே. ஹைகோர்ட்டே சொல்லியும் உன் சித்தப்பா கேட்கல. அப்பீல் செஞ்சிருக்காரு, பாரு. நான் சொல்லறத கேளு. ஒரே வாரத்தில சித்தப்பா உன் காலடில வீட்டு சாவியை மரியாதையோடு வைப்பாரு."

கொஞ்சம் நின்று யோசித்தான். சித்தப்பாவாயிற்றே என்று இரக்கப்பட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி என் வீட்டை தான் சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?

ஆனால் அடுத்த நொடியே அப்பா சொன்னது ஞாபகம் வந்தது. "சிவா. அவனுக்கு இன்னும் ஆறே மாசம் டைம் கொடுடா. உன் சித்தியின் கேன்சர் டிரீட்மெண்டுக்காக அலைஞ்சுக்கிட்டிருக்கான்டா."

"அப்பா பேச்சை கேட்கப் போறியா? போச்சு. நாலு வருசமா பெண் கல்யாணக் கடன்களைச் சொல்லி ஏமாத்தியாச்சு. இப்போ கேன்சர். அதற்கு பிறகு ஏதாவது இல்லாமலா போய்விடும்?"

மனப்பிசாசு சொல்வதுதான் சரி.

"சாரி அப்பா."

தனக்குள் பேசிக் கொண்டே வந்த சிவா ரோட்டில் கிடந்த அமாவாசை பூசனிக்காயை கவனிக்கவில்லை. மடேரென்று வழுக்கி விழுந்தான். பின் மண்டையிலும் இடுப்புப் பகுதியிலும் சரியான அடி. பின்புறம் அனலாய் தகித்தது. எழ முயன்றான். முடியவில்லை. மணிக்கட்டு பகுதியில் ஆயிரம் ஊசிகளை சொருகிவிட்ட மாதிரி வலித்தது.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ரோடு. ஆட்டோக்களும் பைக்குகளும் விர்விர்ரென்று போய் கொண்டிருந்தாலும் உதவிட யாருமில்லை.

வேகமாக போய் கொண்டிருந்த ஒரு ஆட்டோ திடீரென ஓரம் கட்டி நின்றது. அதிலிருத்து குதித்து இறங்கினான் ஒரு இனைஞன். மகேஷ்! சித்தப்பாவின் இரண்டாவது மகன்.

முதுகு பக்கம் அவன் பிடிக்க, அவன் நண்பன் கால் பக்கம் பிடிக்க சிவா ஆட்டோவில் திணிக்கப்பட்டான்.

உடனே பிசாசு உரக்க கத்தியது. "சிவா மறுபடியும் ஏமாறாதே. உதவி செய்யுற மாதிரி செஞ்சுட்டு வீட்டை அமுக்கிடுவாங்க. ஜாக்கிரதை"

"ரொம்ப நன்றி மகேஷ். நீ மட்டும் இல்லேன்னா நான் ரோட்டில அனாதையாக கிடந்து செத்தே போயிருப்பேன். உங்க குடும்பத்துக்கு பொறுக்கமுடியாத தொல்லைகள் எவ்வளவோ கொடுத்திருக்கேன். இருந்தாலும், எனக்கு உதவியிருக்கியே, யு ஆர் கிரேட்!"

"அண்ணா, உங்களுக்கும் அப்பாவுக்கும் இருக்கும் சண்டையில எனக்கு என்னன்னா சம்பந்தம்?"

அந்த பதிலில் சிவா கூனிக் குறுகிப் போனான். "அது சரி, வேறு வீட்டுக்கு என்ன செய்யப் போகிறீங்க?"

"கஷ்டம்தான்னா. இவ்வளவு காலம் படியளந்த கடவுள் இதுக்கும் வழி காட்டாமலா போவார்"

கொஞ்சம் அவஸ்தையான யோசனைகளுக்கு பிறகு, "வேண்டாம், மகேஷ். அப்பாகிட்டே சொல்லிடு. நீங்க அங்கேயே இருந்துகுங்க.."

வீடு, வீடு என்று பேராசையில் அலைந்து, கடைசியில் தூக்க ஆளில்லாமல் வீதியில் சாக கிடந்தேனே! என்ன முட்டாள் நான்?

மறுபடியும் பிசாசு குரல் எழுப்ப எத்தனிக்க, "ஓடிப்போ பிசாசே. உள்ளத்தினுள் அகல் விளக்கை இப்போதுதான் ஏற்றி வைத்திருக்கிறேன்."

"என்ன அண்ணா?"

"ஒன்றுமில்லை." தம்பியை அணைத்த கைகள் வலித்தன. ஆனால் மனசில் வலி இல்லை.

(கலைமகள் - மார்ச் 2009)

2 comments:

ஜோதிபாரதி said...

அருமை ஐயா!

Venkataramani said...

The point that the devil in our mind is the main trouble maker in our life is nicely brought out in this short story.

Congrats!!