Friday, 18 May 2007

எது சிக்கனம்?


எது சிக்கனம்?

2007 மே 13 குங்குமம்

சரளாவும் ரம்யாவும் பள்ளிப் பருவத்திலிருந்தே இணை பிரியா தோழிகள். இன்றைக்கு சரளா சென்னையில் மிகப் பிரபலமான குழந்தை நல மருத்துவர். ரம்யா ஒரு பொதுத் துறை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக இருக்கிறாள்.

இருவருக்கும் ஒரே வித்தியாசம், சரளா பரம்பரை பணக்காரி. ரம்யா அடுத்த வேளை சோற்றுக்கே என்ன வழி என்ற மிகவும் ஏழ்மை பட்ட குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு, படிப்படியாக முன்னேறியவள்.

சரளாவுக்கும் ரம்யாவுக்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று இருந்து வருகிறது. அதாவது, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான்கு மணியானால் சரளா ரம்யா வீட்டில் இருப்பாள். தோழிகள் இருவரும் அடுப்பங்கரை அடை, அதிரசத்திலிருந்து அமெரிக்கா அரசியல் வரை அலசி ஆராய்வார்கள்.

ரம்யா அடிக்கடி பேசும் ஒரு டாபிக் இதுதான். இந்த காலத்து குழந்தைகளுக்கு பணத்தின் அருமை தெரியாமல் வளர்கிறார்கள். தாம் தூம் என்று செலவு செய்கிறார்கள் என்பதுதான்.

இந்த புலம்பலுக்கு சரளா பல விளக்கங்கள் கொடுத்தாலும் 'நீ பரம்பரை பணக்காரி. அப்படித்தான் சொல்லுவ. என்னை மாதிரி பத்து காசு கிடைப்பதற்கு ஆலாய் பறந்திருந்தால் தெரிந்திருக்கும்' என்று மடக்கி விடுவாள்.

இன்றைக்கும் எங்கோ ஆரம்பித்த பேச்சு கடைசியில் இதில் வந்து இறங்கியது.

போன வாரம் ரம்யாவின் பெண் ஸ்வேதாவின் இருபதாவது பிறந்த நாளுக்காக அப்பாவும் மகளும் சேர்ந்து ஒன்றல்ல இரண்டல்ல, இருபது டிரெஸ் எடுத்தார்கள். இருபது வித விதமான டெடி பியர்கள். இருபது செருப்புகள். இருபது வாட்சுகள்.

ரம்யா இதெல்லாம் ரொம்பவும் ஓவர் என்றாள்.

"ரம்யா, உன் ஆதங்கத்தை நான் புரிஞ்சுக்கறேன். நீ உன்னோட உலகத்தில இருந்துக் கிட்டு மத்தவங்களை எடை போடற. அதுதான் சரின்னு நம்பற. ...."

"ஏய். நிறுத்து. என்னோட ஸ்டேட்மெண்டை ஒத்துகிற மாதிரி சொல்லிட்டு, மெதுவா அந்த பக்கம் சைடு அடிக்கறயா? உன்னைச் சொல்லி குத்தமில்லம்மா..." என்று பழைய பல்லவியை ஆரம்பிக்கவும் ஸ்வேதா ஓடி வந்து சரளாவை பின்னாலிருந்து கட்டிக் கொள்ளவும் சரியாக இருந்தது.

"எங்கம்மா போயிட்டு வர்ற?"

"எனக்கு காம்பஸ் இன்டர்வியூவில வேலை கிடைச்சிருக்கில்லையா ஆன்ட்டி? அதுக்கு, என் ·ப்ரெண்ட்ஸ் பார்ட்டி கேட்டாங்க. மொதல்ல ·பைவ் ஸ்டார் ஓட்டல்லதான் பார்ட்டின்னு அடம் புடிச்சாங்க. உங்களுக்கு நல்ல ஆம்பியன்ஸ், சுமார் சாப்பாடு வேணுமா? இல்லே டீசென்ட்டான ஆம்பியன்ஸ், ஏ ஒன் சாப்பாடு வேணுமான்னு அவங்களை டைவர்ட் செஞ்சு தி.நகர்ல ஒரு ஏ.சி ரெஸ்டாரெண்டுக்கு கூட்டிக்கிட்டு போய் சமாளிச்சுட்டேன். ஜஸ்ட் டூ தவுசண்ட்ல முடிச்சிட்டேன். பை." என்று சொல்லிவிட்டு உடை மாற்றிக் கொள்ள உள்ளே ஓடிவிட்டாள்.

"ரம்யா. பார்த்தியா? அவங்களும் மிச்சம் புடிக்கிறாங்க. ஆனா, லெவல் வேற. நீ ஜீரோவுல இருந்துக்கிட்டு பத்தை பார்த்தா, அது பெரிசாத்தான் தெரியும். அவங்க பத்துக்கும் மேல இருக்காங்க. அவ்வளவுதான். புரிஞ்சுதா?"

"சரளா, நீ சொன்னதை ஏத்துகிற மாதிரி இருந்தாலும், இதை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தாள் ரம்யா.