என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Thursday, 10 April 2008
சுஜாதாவும் பூர்ணம் விஸ்வநாதனும்
ஊஞ்சலை தேடினோம்
எழுத்தாளர் சுஜாதவின் விஞ்ஞானக் கதைகளில் கால இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு பின்னோக்கி பயணிப்பது மாதிரி கற்பனைகள் வரும். அந்த மாதிரி நாம் 25 வருடங்கள் பின்னோக்கிப் போக வாய்ப்புக் கிடைத்தால், அதே சுஜாதா பூர்ணம் விஸ்வநாதனோடு கை கோர்த்துக் கொண்டு வழங்கிய மேடை நாடகங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், அடிமைகள், ஊஞ்சல், அன்புள்ள அப்பா என்று பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் மேடையேற்றிய நாடகங்கள் ஒரு எழுச்சியை உண்டாக்கின. அவைகளில் விஞ்சி நிற்பது சுஜாதாவின் எழுத்தாற்றலா, பூர்ணத்தின் நடிப்பாற்றலா என்று பட்டி மன்றமே நிகழ்த்தலாம். தன் நீண்ட கால நாடக அனுபவங்களில் சிலவற்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார் பூர்ணம்.
அதெப்படி சுஜாதா உங்களுக்கு எழுதிய நாடகங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டது மாதிரி இருக்கிறது என்று கேட்டோம்.
"சுஜாதா பூர்ணம் நியூ தியேட்டர்ஸுக்காக நாடகம் எழுத யோசிக்கும் போதே என்னை மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கலாம். அவருக்கும் அவர் அப்பாவுக்கும் உள்ள அன்யோன்யம் என் மூலமாக வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். தவிர, அவரோடு கலந்து பேசி சில மாற்றங்கள் கொண்டு வருவோம். அது இன்னும் மெருகு சேர்க்கும். அந்த மாதிரி பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தில் என் பேத்தி 'நீங்க பாட்டியை பெண் பார்க்க போன போது என்ன பேசினீர்கள்' என்று கேட்பாள். அதற்கு நான் சொல்லும் டயலாக் ஸ்கிரிப்டில் உள்ளதைவிட கொஞ்சம் கூடுதலாகவும் ஸ்வாரஸ்யமாகவும் இருக்கும். அந்த சீன் வரும்போது சுஜாதா சீட்டின் நுனிக்கே வந்து மிக ஆர்வமாக கவனித்து ரசித்திருக்கிறார்" என்றார் பூர்ணம்.
ஒர் ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது பூர்ணத்துக்கு முழுக்கப் பொருந்தும். பூர்ணம் மேடையில் சுடர் விட்டுப் பிரகாசித்தார் என்றால் அதற்கு இன்றும் இயங்கு சக்தியாக இருப்பவர் திருமதி சுசீலா விஸ்வநாதன்.
"பூர்ணம் நியூ தியேட்டர் சென்னையை மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருந்தாலும் ஸ்கிரிப்ட் எழுதித்தரும் சுஜாதா அந்த சமயத்தில் பெங்களூரில்தான் இருந்தார். சாதா போஸ்டில்தான் ஸ்கிரிப்ட் வரும். சுஜாதாவின் எக்ஸ்பிரஸ் ஸ்பீட் கையெழுத்தைப் படிப்பது என்பதே மிகப் பெரிய சவால். பெரும்பாலும் அந்தப் பணி எனக்குத்தான் வரும். கடிதம் வந்ததும் அந்தக் கணமே படிக்க வேண்டும் என்பார் என் கணவர். என்க்கு நானே ஒரு முறை தனியாக ரிஹர்சல் செய்து கொண்டு படித்தால்தான், அவர் மனம் கோனாமல் பிசிறில்லாமல் படிக்க வரும். எனவே கடிதம் வந்ததும் யாருக்கும் தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, நான் முழுவதுமாக தயாரான பிறகுதான் கடிதத்தையே அவர் கண் முன்னால் காட்டுவேன்" என்றார் திருமதி சுசீலா பூர்ணம்.
"சுஜாதாவின் பல நாடகங்களில் உச்சமான நாடகமாக நான் கருதுவது ஊஞ்சல் நாடகம்தான். அதில்தான் சுஜாதா எழுத்தின் வீச்சு மிகவும் உயர்ந்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் நான் நடித்தபோது அந்தப் பாத்திரத்தை ரசித்து ரசித்து செய்திருக்கிறேன். அந்த நாடகத்தில் நான் ஓர் அறிவு ஜீவி. ஆனால் எனது கண்டுபிடிப்புகள் நிகழ்காலத்துக்கு ஒத்துவராது என்பதை அறியாதவன். அப்படிச் சொன்னாலும் அதை ஏற்க மறுப்பவன். நிகழ்காலத்தால் உதாசீனப்படுத்தப்படும் ஒர் இறந்தகால மனிதன். ஒரு கட்டத்தில் என் ப்ராஜெக்ட்டுக்காக என் மகள் தன் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்திருக்கும் மேமிப்பிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாயைக் கடனாக கேட்பேன். என் மகளும் தன் தந்தை படும் மன வேதனையை உணர்ந்து தர ஒப்புக் கொள்வாள். ஆனால் என் மனைவியோ அதை வன்மையாக கண்டிப்பாள். மனதை பிழியும் காட்சி அது. இது கற்பனை என்றாலும் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த என் மகள் பத்மஜா உணர்ச்சிக் கொந்தளிப்பில் நாடகம் முடிந்ததும் ரூபாய் பதினைந்தாயிரத்துக்கு என் பெயருக்கு செக் எழுதி என் டேபிளில் வைத்துவிட்டாள். அப்பறம் அவளுக்கு புரியவைத்து சமாதானபடுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இன்றும் அவளைக் கிண்டலடிக்க 'அந்த பதினைந்தாயிரம் செக்' என்று சொல்லி சொல்லி சிரித்து மகிழ்வோம். என்னால் அந்த பரிமாணத்தை கொடுக்க முடிந்ததற்கு காரணம் சுஜாதாவின் எழுத்துதான்".
" ஊஞ்சல் நாடகத்துக்காக மும்பை போனதை என்னால் மறக்கவே முடியாது. இந்த நாடகத்துக்கு முக்கிய செட் பிராப்பர்டி மேடையில் பிரதானமாக முன்னும் பின்னுமாக ஆடும் ஊஞ்சல்தான். ஆனால் மும்பை வந்து சேர்ந்ததும் எங்களுக்கு ஆரம்ப சோதனையே அந்த ஊஞ்சல்தான். எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஊஞ்சல் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. தெரிந்தவர்களின் விலாசங்களை வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கினோம். நேரம் ஆக ஆக ஒரு நாள் கிரிக்கெட்டின் கடைசி ஓவர்கள் மாதிரி டென்ஷன் தலைக்கேற ஆரம்பித்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக கடைசி ஒரு சில மணி நேரங்களில் கண்டேன் சீதையை என்ற மாதிரி ஒரு ஊஞ்சலை கண்டு கொண்டோம். மும்பை ஊஞ்சல் நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றால் அதில் அந்த ஊஞ்சலுக்கும் பங்குண்டு" என்று சிரித்தார் பூர்ணம்.
"மற்ற நாடகக் குழுவில் இருப்பது போல தனக்கு ஏ.சி. ரூம் மற்றவர்களுக்கு சாதாரண ரூம்கள் என்பது பூர்ணம் நியூ தியேட்டரில் கிடையாது. பூர்ணமும் சுஜாதாவும் அந்த நாட்களில் எங்களோடு இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணித்திருக்கிறார்கள். ஒரு முறை வெளியூருக்குச் சென்றிருந்தபோது அவர்கள் அளித்திருந்த ரூம்கள் சராசரிக்கும் குறைவாக இருந்தது என்பதை எங்கள் முக பாவனைகளிலேயே புரிந்து கொண்ட பூர்ணம், உடனடியாக செயலில் இறங்கி மாற்று ஏற்பாடுகள் செய்து அதன் பிறகுதான் சாப்பிட்டார்" என்கிறார் நாடக மற்றும் டி.வி. சீரியல் நடிகையான உஷா.
அமுதசுரபி - ஏப்ரல் 2008
Subscribe to:
Posts (Atom)