Monday, 4 October 2010

ரசிகன்



ஆட்டோவை தள்ளிக் கொண்டு என் முன்னால் வந்த குழந்தை ஏசு என் பார்வையை தவிர்க்க பக்கவாட்டில் திரும்பி நின்றிருந்தான்.
"என்னப்பா? நேத்து ஏன் நடைக்கு வரலை?"
அவனிடமிருந்து பதில் வராது என்று எனக்கு தெரியும். அவன் ஆதர்ச ஹீரோ ஆதித்யாவின் படம் நேற்று ரிலீஸ்! எப்படி ஆட்டோ ஓடும்?
ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டிய காம்பவுண்ட் சுவரில் எட்டு கால போஸ்டரில் ஆதித்யா ரத்தம் தோய்ந்த அறிவாளை குரோதத்துடன் ஓங்கியிருந்தான். பக்கத்தில் தொப்புள் தெரிய ஒரு கேரளத்து பைங்கிளி, 'இன்னும் எதை கழற்றி எறியட்டும்' என்பது மாதிரி இருந்தாள். கீழே பாஸ்போர்ட் சைசில் ஏகமாய் மனிதத் தலைகள்.
"சார் நேத்து ரொம்ப பிசின்னு கேள்விப்பட்டேன். கட்டவுட்டுக்கு பால் ஊத்தி அபிஷேகம் செஞ்சீங்களாமே? தீபாராதனை, சுண்டலெல்லாம் கொடுத்தீகளோ? அப்படியே ஒரு கோயிலையும் கட்டி, கும்பாபிஷேகம் செஞ்சிட்டு அங்கனயே பூசாரியா உட்கார்ந்திடறது."
"சார் கிண்டல் பண்ணாதீங்க. வாங்க. உட்காருங்க. போகலாம்." ஏசு விருட்டென ஆட்டோவை கிளப்பினான்.
நான் தினமும் என் அலுவலகத்துக்கு ஆட்டோவில், அதுவும் என் தெரு முனை ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து, குழந்தை ஏசுவின் ஆட்டோவில்தான் போவேன். கிட்டத்தட்ட இரண்டு வருஷ பழக்கம். குழந்தை ஏசு தீவிர சினிமா ரசிகன் என்று சொல்லுவதை விட இன்றைய முன்னனி ஹீரோ ஆதித்தியா மீது பக்தி வெறி பிடித்து அலைபவன் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். அவன் ஆட்டோவின் முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் ஆதித்யாவின் விதவிதமான வண்ணப்படங்கள் எப்போதும் இருக்கும். புது படங்கள் வர வர, ஸ்டிக்கர்கள் மாறுமே தவிர அதில் எப்போதும் ஆத்தியாதான். ஒரு முறை, "எங்கள் பகுதியின் ஆதித்யா நற்பணி மன்றத்தின் செயலாளர் ஆயிட்டேன்" என்று அவன் பெருமை பொங்கச் சொல்ல, அதற்கு நக்கலாக புன்னகைத்துவிட, என்னிடம் இரண்டு நாள் அவன் பேசவில்லை.
ஏசுவோடு எனக்கு ஏற்பட்ட பழக்கமே வித்தியாசமானது. அந்தப் பகுதிக்கு குடி வந்த புதுசில் அவன் ஆட்டோவில்தான் பிரயாணித்தேன். அவன் பெயரே வித்தியாசமாக இருந்தது.
"ஏம்பா! உனக்கு எந்த ஊரு?"
"நாசரேத், தூத்துக்குடி மாவட்டம்"
"நாசரேத்தா? நல்லது. உங்க ஊரோட முக்கியத்துவம் தெரியுமோ?
"தெரியாதுங்களே."
"என்னப்பா, ஆதித்யாவை பத்தி முழு பயோடேட்டா வைச்சுருக்கே. ஒரு கிருஸ்துவனா இருந்துக்கிட்டு நாசரேத் பத்தி தெரியாம இருக்கேயே. ஏசு பெத்தலஹேமில் பிறந்தாலும், நாசரேத்தில்தான் வாழ்ந்தாரு. அந்த ஞாபகமாத்தான் உங்க ஊருக்கு அந்த பேர் வந்திச்சு."
"அப்டீங்களா?", என்னை திரும்பிப் பார்த்து சிரித்தான். "எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்காது இல்லீங்களா? அது சரி, தூத்துக்குடிக்கு ஏன் அப்படி ஒரு பேரு வந்திச்சுன்னு உங்களுக்கு தெரியுமுங்களா?"
நான் அவன் ஹீரோவை சம்பந்தப்படுத்தி காயப்படுத்திவிடேன் என்ற அர்த்தத்தில் எதிர் கேள்வி போட்டு என்னை மடக்கப் பார்த்தான்.
"தெரியுமே? துவர்ப்புக் குடி என்பது மறுகி தூத்துக்குடியாயிடுச்சுன்னு எங்கோ படிச்சிருக்கிறேன். உப்பு காய்ச்சற மக்கள் இருப்பதால அந்த பேரு வந்ததா சொல்றாங்க"
"அது மட்டும் இல்லீங்க. இன்னொரு வழக்கும் இருக்குது. ராமாயண காலத்துல இலங்கைக்கு தூதுவனாப் போன அனுமன் அங்க வந்து தங்கிப் போனதால தூதுவன் குடின்னு பேரு வந்திச்சாம். அதுதான் மறுகி தூத்துக்குடியாயிடுச்சு"
இந்துவாக இருந்துக்கிட்டு இது கூட உங்களுக்கு தெரியலியே என்று சொல்லாமல் சொன்ன மாதிரிப் பட்டது. என் சிறுபிள்ளைதனத்துக்கு சரியான பதிலடியாக இருந்தது. ஆட்டோ ஒட்டுனர்களில் இவன் வித்தியாசமானவன் என்று அப்போதே புரிந்து விட்டது.
"சபாஷ். ரொம்ப துடிப்பாதான் இருக்கே. என்ன படிச்சிருக்கே?"
"சாயர்புரம் போப் கல்லூரில பி.ஏ படிச்சேன், சார். ஏதோ பேருக்கு படிச்சேன். சரியான வேலை கிடைக்கலே. ஒரு தாட்டி நம்ம ஊரு பக்கத்துல தொடுத்தாப்பல நாலூ நாள் தலைவர் சூட்டிங் நடந்திச்சு. ரொம்ப தயக்கத்தோட போய் கை கொடுத்தேன். கொஞ்சமும் அலட்டிக்காம என் கூட பேசினாரு. என் படிப்பை விசாரிச்சாரு. குடும்பத்துக்கு விஸ்வாசமா இருக்கச் சொன்னாரு. அப்ப தொட்டு அவரு என் தலைவர் ஆயிட்டாரு."
ஏசு சிகரெட் பிடித்து நான் பார்த்ததில்லை. அதே மாதிரி அவனுக்கு டாஸ்மாக் பார்களில் ஒதுங்கும் வழக்கமும் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நாசரேத்தில் இருக்கும் தன் தாய் தந்தையருக்கு, மாசம் தவராமல் பணம் அனுப்புவான். அவன் தம்பி பொறியியல் கல்லூரியில் படிக்கிறான். ஆனால் சினிமா வெறித்தனம்தான் முரணாக இருந்தது.
பொதுவாகவே சினிமா, அரசியல், இதைத் தாண்டி சராசரி தமிழன் சிந்திப்பதாக தெரியவில்லை. நாட்டின் பொருளாதரம் பற்றியோ, சமூக சிக்கல்கள் பற்றியோ பெரும்பாலருக்கு தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லை. எல்லா ஊடகங்களிலும் எதிர்மறை பரபரப்பு செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒன்று போனால் இன்னொன்று. பழசு மறந்து போகிறது. புதுசு பற்றி எரிகிறது.
எனக்கும் ஏசுவுக்கும் அடிக்கடி ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். கடைசியில் அது சினிமாவில், அதுவும் ரசிகர் மன்றத்தில்தான் நிலைத்து நிற்கும். அது ரசிகர் மன்றம் இல்லை, நற்பணி மன்றம் என்று எதிர் பேச்சு பேசுவான். சென்னைக்கு அடிக்கடி வரும் அவன் அப்பா சகாயராஜ் என் வீட்டில்தான் ராத்தங்குவார். நிறைய தடவை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.
லேசான மன நெருடல்களுடன் ஆட்டோவில் அமர்ந்தேன். ஏதோ சென்னை நகரமே ஆதித்யாவின் பட ரிலீசுக்கு விழா எடுத்த விட்ட மாதிரி இருந்தது. தெருக்களில் நூறு அடி இடைவெளியில் பெரிதும் சிறிதுமாக கட்டவுட்டுகள்.
"அதென்னப்பா ஆதித்யா பின்னால ஏதோ கொடி மாதிரி வரைஞ்சிருக்குது"
"என்ன சார், நாட்டுநடப்பு எதுவும் தெரியாம இருக்கீங்க!. தலைவரு அரசியல் கட்சி தொடங்கப் போறாரு. வரப்போற சட்டசபை தேர்தல்ல பாருங்க. கலக்கலா இருக்கும்."
எனக்கு மனசு வலித்தது. எவனோ காசு மேல காசு சேர்த்து மாடி மேல மாடி கட்ட இவர்கள் பலக்கு தூக்குகிறார்கள். பகுத்தறிவு பாசறைகள் புறப்பட்ட அதே நிலத்தில்தான் இது போன்ற சமான்யர்களிடையே மூடத்தன வேர்கள் ஆழமாக ஊடுருவியிருக்கின்றன. போன வாரம் ஏசுவோடு விவாதித்தது ஞாபகத்துக்கு வந்தது.
"ஏசு. மும்பையில எந்த ஹிந்தி சினிமா ஹிரோவுக்கும் ரசிகர் மன்றம் இல்லையாம். தெரியுமா? இங்க மட்டும்தான் இப்படி. தவிர, நாம எல்லாமே கொஞ்சம் ஒவர்தான். கத்தி பேசறோம். தனி நபர் துதி ரொம்ப அதிகமா இருக்கு. சினிமாவுல கெடைச்ச பலத்தை வைச்சுகிட்டு, இன்னும் என்ன செய்யலாம்னு ஒரு கூட்டம் அலையுது. அதுக்கு உன்ன மாதிரி ஒரு கூட்டம் பலி கடா ஆகுது."
"சார். நீங்க சினிமாவை ஒரு பொழுது போக்குன்னு சொல்லி, எட்ட நின்னு வேடிக்கை பார்த்துட்டு போயிடறீங்க. ஆனா நாங்க உடம்பு வலிக்க வேலை செய்யறோம் சார். எங்களுக்கு ஒரு வடிகால் வேணுமில்லையா?. கிட்ட போய், முங்கி குளிச்சு, ஆண்டு அனுபவிக்கறோம் சார்."
"இதுவும் ஒரு போதை மாதிரிதான் ஏசு. மயக்கம் இருக்கற வரைக்கும் மகிழ்ச்சியா இருக்கும். தெளிஞ்சதும் ச்சீன்னு ஆயிடும்."
"சார். நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க. பல பேரு திருபதி சாமிக்கோ அல்லது ஐயப்பனுக்கோ விரதமிருந்து, விழா எடுத்து, காசு செலவழிக்கிறாங்க இல்லையா? அதுல அவங்களுக்கு திருப்தி கெடைக்குது. அப்ப அதுவும் ஒரு போதைதானே?"
"ஏசு. எல்லை மீறின எல்லாமே தப்புதான். உப்போட சிறப்பு அதோட அளவுல இருக்குதுன்னு சொல்லுவாங்க. சினிமா ஒரு பொழுது போக்கு அம்சம்பா. அதுக்கு மேல முக்கியத்துவம் கொடுக்காதீங்கன்னு சொல்ல வர்றேன். இந்த மாதிரி வெறி பிடிச்ச ரசிகர்கள் இருப்பதாலத்தான், சில ஹீரோக்களுக்கு என்னென்னமோ ஆசைகள் வருது. செருப்பு காலை பாதுகாக்குது. அது நமக்கு தேவைதான். ஆனா, அதை வாசல்லேயே விட்டுடறதுதான் நல்லது."
"சார். விடுங்க. நான் இன்னிக்கு பொறுப்பா இருக்கேன்னா, அது என் தலைவராலத்தான். ஏதோ என்னால முடிஞ்ச நல்ல காரியங்களை தலைவர் பேரச் சொல்லி செய்யறேன். இன்னும் கூடுதலா, ஒரு அமைப்பா செய்யனும்ணும்னு என் தலைவர் விருப்பப்பட்டார்னா, அதுக்கும் அவர் வழிகாட்டுவார். நான் ஸ்டியாத்தான் இருக்கேன் சார். நீங்கதான் ஏதேதோ கற்பனை செஞ்சுக்கிட்டு, கவலைப்படுறீங்க."
என் அலுவலகம் வந்து விட்டது. ஏசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் இறங்குவதற்கு எதிர் பக்கம் நின்று கொண்டு மீண்டும் என் பார்வையை தவிர்த்தான்.
"ஏசு. என்ன ஆச்சு? தலைவர் படம் ஹிட்டு ஆகனுமேன்னு கவலையா?"
"இல்லை சார். நான் நல்லாத்தான் இருக்கேன். ஒன்னுமில்லே"
"இல்லை ஏசு. உன்னக்குள்ளே ஏதோ பிர்ச்சனை இருக்கு. எங்கிட்ட சொல்ல மாட்டேங்கிற."
"சாயங்காலம் ஆபீஸ் விட்டு வாங்க சார். விவரமா பேசுவோம்." ஏசு வழக்கம் போல விருட்டென ஆட்டோவை ஸ்டார்ட் செய்து, போய் விட்டான்.
எனக்கு ஆபீஸில் வேலையே ஓடவில்லை. ஏசு என்ன சொல்லப் போகிறான் என்பதிலேயே மனசு, சுழல் காற்றில் மிதக்கும் காகிதம் மாதிரி எழும்பியும், அடங்கியதுமாக இருந்தது.
சரியாக ஐந்தரை மணிக்கெல்லாம் ஏசு வந்து விட்டான். முன்னைவிட இறுக்கமாக இருந்தான். வீடு திரும்பும் வரை ஒன்றும் பேசவில்லை. சூடாக ஒரு காப்பி போட்டு அவன் முன்னால் நீட்டினேன். நிமிர்ந்தவன் கண்களில் கண்ணீர்.
"ஏசு. என்னாச்சு?"
"சார். நீங்க அடிக்கடி பல்லக்கு தூக்கறேன்னு சொல்வீங்களே. அது உண்மையாடுச்சு சார். நாங்கெல்லாம் பல்லக்கு தூக்கவும், கொடி கட்டவும், கோஷம் போடவும், எதிர் ஆசாமிங்களோட மல்லுக்கு நிக்கவும்தான் இருக்கோம். பல்லக்குல உட்கார்ந்து போக இன்னொரு கூட்டம் இருக்குது. அதுக்கு முள்ளங்கி பத்தையா நோட்டு வேணும்."
"புரியலை ஏசு. விவரமாச் சொல்லு."
"சார். தலைவரோட ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போது என்னமா உழைச்சிருக்கேன், தெரியுமா? ஆனா கட்சின்னு வரும்போது, கட்சி மாறி வந்த ஒரு துட்டு பார்ட்டிக்குதான் பதவியாம். எனக்கு இல்லே. இது எப்படீங்க நியாயம்?"
"ஏசு. உனக்கு தெரியும்தான். இருந்தாலும் சொல்லறேன். சினிமா ஒரு தொழில்ங்கிற மாதிரி, அரசியலும் ஒரு தொழிலாயிடுச்சுப்பா. இதுலேயும் முதல் போட வேண்டியிருக்கு. லாபம் பார்த்து அடுத்த தேர்தலுக்கு செலவழிக்க வேண்டியிருக்கு. நாட்டு நல்லது செய்யணும்னு அரசியலுக்கு வர்றவங்களே இல்லேன்னு ஆயிடுச்சு."
ஏசு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான். ஆதரவாக அவனை என் தோள்களில் சாய்த்துக் கொண்டேன்.
"ஏசு. அவங்க எப்படி அவங்க தொழில்ல கண்ணும் கருத்துமா இருக்காங்களோ, அதே மாதிரி நீ உன் ஆட்டோ தொழில்ல இருந்துடேன். யாரு வேணும்னாலும் வரட்டும். அதை மக்கள் பார்த்துப்பாங்க. உங்கள மாதிரி ஆசாமிங்க ஒதுங்கி நின்னீங்கன்னா சினிமாவும் உருப்படும். அரசியலும் உருப்படும்."
ஏசு என்னிடமிருந்து விலகி கொஞ்சம் நேரம் குனிந்த படி உட்கார்ந்திருந்தான். திடீரேன எழுந்து ஒரே மடக்கில் அத்தனை காப்பியையும் குடித்து விட்டு, இடக்கை புறங்கையால் வாயை துடைத்துக் கொண்டே எதுவும் சொல்லாமல் போனான். நான் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அதில் வருத்தமில்லை. மனசுக்குள்ளே எங்கோ ஒரு மூலையில் வெளிச்சம் பரவுவது மாதிரி இருந்தது.
மறுநாள் நான் ஆட்டோ ஸ்டாண்டை அடைந்த போது ஏசுவின் ஆடோவை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஆட்டோதானா என்று சந்தேகமாக இருந்தது. ஒரே ஒரு ஸ்டிக்கர் மட்டும் இருந்தது. மரியண்ணை குழந்தை ஏசுவை அணைத்தபடி இருந்தாள். ஆதித்யா அஸ்தமனமாகியிருந்தான்.
"சார். வாங்க. உட்காருங்க. இன்னும் போக வேண்டியது ரொம்ப தூரமிருக்கு." ஏசு அகலமாக புன்னகைத்தான்.
"ஏசு. எனக்கு தூரத்தை பத்தி கவலையில்லேப்பா. சரியான பாதையா? அதுதான் முக்கியம்"
என் கண் சிமிட்டலுக்கு ஏசுவிடம் மீண்டும் புன்னகை. ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த அனைவரும் குபீரென சிரித்தார்கள்.

(AIR தூத்துக்குடி - படிப்பரங்கம் - 06 ஆகஸ்ட் 2010)