Wednesday 31 January, 2007

தடுமாறும் சிறுகதை உலகம்

2006 டிசம்பர் அமுதசுரபி

கிராமிய கலைகள் மேடை நாடகங்கள் வரிசையில் சிறுகதைகளும் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. வெகுஜன பத்திரிக்கைகளில் எண்ணிக்கையிலும் தரத்திலும் சிறுகதைகள் பலமிழக்க தொடங்கி விட்டன. மலிவான சினிமா, அரசியல் செய்திகள் அந்த இடங்களை கைப்பற்றியிருக்கின்றன. சரியான ஊடகமின்றி சிறுகதை உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்லப் போகிற தங்களின் சமுதாயப் பங்களிப்பு என்ன என்பதைப் பற்றி முன்னனி இலக்கியவாதிகளும் பத்திரிக்கையாளர்களும் கொஞ்சம் கலந்து பேசி விவாதித்தால் நல்லது.

ஆகஸ்ட் மாதம் வெளிவந்த சிறுகதைகளில், படிக்க கிடைத்த 34 சிறுகதைகளில், மைய கருத்து, சரளமான நடை, எழுத்தின் வீச்சு ஆகியவைகளை அளவீடுகளாய் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 7 சிறுகதைகள் கீழிருந்து மேலாக பட்டியலிடப் பட்டிருக்கின்றன.

7. கனவு பலிக்கும் - வே. குருநாதன் (கல்கி - 27 ஆகஸ்ட் 2006)

தாகமெடுத்து வரும் பள்ளிக் குழந்தைகளுக்கு குடிக்க தண்ணிர் கொடுப்பதில் ஆனந்தம் காண்கிறார் ஒரு ஹோட்டல் முதலாளி. குழந்தைகள் ஹோட்டல் உள்ளே வந்து தண்ணீர் குடித்து விட்டு போகின்றனர். ஆனால் அந்த சிறுவர்கள் ஹோட்டல் பண்டங்களைப் பார்த்து ஆசை படுவதில் உள்ள அவஸ்தைகளை தவிர்க்கும் விதமாக தண்ணீர் பானையை ஹோட்டலுக்கு வெளியே வைக்கிறார். ஒரு நாள் ஒரு சிறுவன் தன் யூனிபார்மையும் புத்தகமூட்டையையும் ஒளித்து வைத்துவிட்டு வந்து வேலை கேட்கிறான். முதலாளி ஓங்கி கண்ணத்தில் அறைந்து விடுகிறார். போலீஸ் வரைக்கும் போய்விடுகிறது. அப்போதுதான் முதலாளி அடித்தற்கு காரணம் சொல்கிறார். இது மாதிரி அடி விழுந்தால்தான் எந்த ஒரு சிறுவனும் ஹோட்டல் வேலைக்கு வரமாட்டார்கள். ஒழுங்காக ஸ்கூல் போவார்கள் என்று.

6. உடைப்பு - காசி ஆனந்தன் (ஆனந்த விகடன் - 27 ஆகஸ்ட் 2006)

இலங்கை இனப் போரில் தனது இளம் வயது கனவனை இழந்தவளுக்கு ஒரே ஆதரவு அவள் 13 வயது மகள்தான். அவளை இலங்கை தமிழ் போராளிகள் அழைத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். முகாமில் இருக்கும் மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு அவள் தாய் உலக மனித உரிமை குழுவிடம் கேட்கிறாள். அவர்களும் மிகுந்த சிரமங்கள் மேற்கொண்டு மகளை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைக்கின்றனர். அந்த சமயம் பார்த்து இலங்கை ராணுவம் தீவிரவாதிகளை தேடி வருகிறது. அவள் மகளை வண்டியில் எற்றி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொண்று விடுகிறது. முதலில் தன் பெண் போர் முகாமை விட்டு வந்து தன்னோடு இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவள், தற்போது போராடி இறந்திருக்க வேண்டும் என்று கதறுகிறாள்.

5. மனுஷி - எஸ். பர்வீன்பானு (தினமணி கதிர் - 06 ஆகஸ்ட் 2006)

இரண்டு மகன்களாலும் கைவிடப்பட கிழவி தன் சுய சம்பாத்தியத்தில் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறாள். மிக இளம் வயதிலேயே இறந்து விட்ட அன்பான கணவனின் நினைவு அவளுக்கு அடிக்கடி வந்து போகிறது. ஒரு பிடிப்பில்லாமல் அவள் வாழ்க்கை போய் கொண்டிருக்கும் போது குப்பைத் தொட்டி அருகில் ஒரு பச்சிளம் குழந்தையை பார்க்கிறாள். ஊர் மக்கள் முறையற்ற நடத்தையில் பிறந்த அந்த குழந்தையை ஊருக்கு வெளியே போட்டுவிட சொல்லவும், கிழவி மறுத்து தான் வளர்க்கப் போவதாக சொல்கிறாள். இது எனக்கும் என் கனவனுக்கும் பிறந்த குழந்தை என்றே வைத்துக் கொள்ளுங்கள் என்று முழங்குகிறாள்.

4. அந்நியருடன் உரையாடல் (குமுதம் - 30 ஆகஸ்ட் 2006)

கடைசி வரியில் முழு கதையின் வீச்சை எடுத்துச் சொல்லும் சுஜாதாவின் ஹால்மார்க் கொண்ட கதை. கடற்கறையில் தினமும் வாக்கிங் போகும் ஒரு பணக்காரரை ஒரு அழுக்கான ஆசாமி ஆர்வமாக கவனிக்கிறான். பணம் பிடுங்கும் குடும்ப சூழலை எண்ணி அவர் வருந்திக் கொண்டிருக்கும் வேளையில் அவன் பேச்சு கொடுக்க அவர் தன் எல்லா விஷயங்களையும் சொல்கிறார். கடைசியில் நீ யார் என்று கேட்க அந்த அழுக்கானவன் இன்கம் டாக்ஸ் அதிகாரி என்பது தெரிகிறது. வசதி படைத்தவர்கள், இவ்வளவு சொத்தையும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தேன் என்று சொல்வது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதையும், எவ்வளவுதான் திகட்ட திகட்ட சம்பாத்திருந்தாலும் அதை விட்டு அவர்களால் விலகிச் செல்ல முடியாது என்கிற உண்மையையும் மிக அழகாக சொல்லியிருக்கும் கதை.

3. புதுமனுஷி - பாலு சத்யா (அமுதசுரபி - ஆகஸ்ட் 2006)

வேலையில்லாத கனவன் நல்ல வேலையில் இருக்கும் மனைவியை வேலையை விடச் சொல்கிறான். முடிவெடுக்க தெரியாமல் மன உளைச்சலில் மின்சார வண்டியில் அவள் பயணித்துக் கொண்டிருக்கும் போது, பூ விற்பவள் தீர்வு சொல்கிறாள். ரோஷத்தோடு வீட்டை விட்டு போன கனவன் மீண்டும் திரும்பி வந்த போது ஏற்றுக்கொள்ளாமல் விரட்டி விட்டதைச் சொல்லவும், அவளுக்குள் ஒரு தெளிவான பாதை தெரிகிறது. தன் நண்பியிடம் சொல்லி ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் ஒரு ரூமுக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். கதையின் ஆரம்பத்தில் மின் கம்பியில் அமர்ந்திருக்கும் காகத்தை சொல்லி, கதையின் முடிவில் அந்த காகமே அவள்தான் என்று கோடிட்டு காட்டும் பாங்கு ரசிக்கும் விதமாக இருக்கிறது. மின்சார வண்டி மாதிரியே விறுவிறுப்பாக விரையும் தெளிவான சிறுகதை.

2. அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை - எஸ். ராமகிருஷ்ணன் (தீராநதி - ஆகஸ்ட் 2006)

ஒரு சாதாரண வங்கி ஊழியர் ஒரு வன்முறையை கண்டதும் எந்த அளவுக்கு பாதுகாப்பின்மையை உணர்கிறார் என்பதை எடுத்துக் காட்டும் கதை. தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் முதிர் கண்ணி டாக்டரின் டிரைவர், கார் வாங்க உங்கள் வங்கியில் லோன் தருவார்களா என்று கேட்க்கவும், கோபமாக பேசி விரட்டிவிடுகிறார். அதன் பிறகு அந்த டிரைவர் டாக்டரோடு ஏற்ப்பட்ட ஒரு வாக்குவாதத்தில் அவரை கொண்று விடுகிறான். குத்தப்பட்டு கிடக்கும் டாக்டரின் உடலை கண்டதும் அவருக்கு பயம் வருகிறது. சுய சிந்தனையின்றி அங்கும் இங்கும் அலைகிறார். இரவு முழுவதும் தூங்காமல் அவஸ்தைபடுகிறார். சுற்று சூழலை கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப விவரிப்பதில் ராமகிருஷ்ணனுக்கு ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம். ஆனால் யதார்த்தமாக எழுத்து என்ற நோக்கில் இரண்டு இடங்களில் ஆபாச வாக்கியங்களை உபயோகித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். அவைகள் இல்லாமல் இருந்தாலும் கதையின் போக்கை கெடுத்திருக்காது. ஒரு காமிரா பார்வையில் வழங்கப்பட்டுள்ள எழுத்தோவியம்.

1. நிழல் படிந்த மனம் - பாலு சத்யா (புதிய பார்வை - 1-15 ஆகஸ்ட் 2006)

தனக்கு வாய்த்த மனைவி டி.வி சீரியல்களுக்குள் சுருண்டுவிட, வெறுமையில் தவிக்கும் மணிக்கு கொழுகொம்பாக நண்பனின் மனைவி வேணி அமைகிறாள். அதை ஏற்றுக்கொள்ளாத மனைவியை சமாதனப்படுத்த மணி முயற்சித்தாலும் அது தோல்வியில் முடிகிறது. அவளால் டி.வி. சீரியலை விட்டு வெளியே வரமுடியவில்லை. மணிக்கும் இலக்கிய தாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் கால்கள் வேணியை நோக்கியே போகின்றன. ஒரு சிறிய விபத்தில் அடிப்பட்ட வேணி, நினைவு திரும்பும் போது உளரலாக மணியின் பெயரை உச்சரிக்கவும், கணவன் ராஜு தன் நண்பனான மணியை இனிமேல் என் வீட்டு பக்கம் வராதே என்கிறான். மணிக்கு அது பேரதிர்ச்சியாக இருக்கிறது. தான் விகல்பமில்லாமல் பழகும் போது ஏன் மற்றவர்கள் தவறாக பார்க்கிறார்கள் என்று எண்ணி எண்ணி தனிமையில் குழம்புகிறான். அவன் ஏன் வேணியின் பால் ஈடுபாடு வந்தது என்பதை ஆசிரியர் கடைசி பாராவில் சொல்கிறார். அவன் சிறுவனாக இருந்த போது அகால மரணமடைந்து விட்ட அம்மாவின் முகமும் வேணியின் முகமும் ஒத்து இருக்கிறது.

கதையின் ஆரம்பத்தில் ஒரு வெறித்த பார்வை கொண்ட பொம்மையை சொல்லி அதன் மூலம் அவன் மன ஓட்டத்தை சொல்வதிலும், தான் நல்ல எண்ணம் கொண்டவராக இருந்தாலும் மற்றவர்கள் வேறு கண்ணொட்டத்தில் பார்க்கும் போது அது தவறாகத்தான் படும் என்பதை இருட்டில் போகும் அவனை இன்ஸ்பெக்டர் விசாரிப்பததிலும் ஆசிரியர் உயர்ந்து நிற்கிறார். மன உளைச்சலை மிக அழகாக எழுத்துக்களில் வார்த்திருத்திருக்கும் சிறந்த கதை. ஆகஸ்ட் மாதச் சிறுகதைகளில் என் கண்ணோட்டத்தில் சிறந்த கதை இதுதான்

இலக்கிய சிந்தனை செப்டம்பர் மாதக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

No comments: