Thursday, 19 July 2007

பார்க்காமலே


பார்க்காமலே

குங்குமம் - 26 ஜூலை 2007

சென்னையில் இருக்கும் என் நண்பன் சரவணனின் மகன் திவாகர் இங்கே ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். என்னை ஒரு முறை போய் பார்த்துவிட்டு கடிதம் எழுது என்று சொல்லியிருந்தான். எங்கே நான் வேவு பார்க்க வந்திருக்கிறேனோ என்று அவன் நினைத்துவிடக் கூடாதே என்று எனக்குள் உதறல் இருந்தது.

"சார் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் இப்பதான் வந்தேன். திவாகர் எங்க போயிருக்கான்னு விசாரிச்சுக்கிட்டு வரேன்." அவன் ரூம்மேட் என் கையில் அன்றைய ஹிண்டுவை திணித்து விட்டு போனான்.

நான் என் பார்வையை ஓட்டினேன். ரூம் சுத்தமோ சுத்தம். டேபிளில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் முதுகுகளை ஆராய்ந்தேன். பெரும்பாலும் பாட புத்தகங்கள். விவேகானந்தரின் 'கர்மயோகா'! தி.ஜானகிராமனின் 'உயிர்த்தேன்'! சபாஷ். அதனையொட்டி உள்ளங்கை அளவுக்கு செந்திலாண்டவர். அதன் முன் சிறிய வீபூதி டப்பா. டேபிள் லாம்ப்பின் ஸ்விட்சுக்கு அருகில் வட்ட வடிவ ஸ்டிக்கரில் சச்சின் சிரித்துக் கொண்டிருந்தார். அதனை உறுதிப் படுத்துவது மாதிரி சுவரோரத்தில் ஒரு கிரிக்கெட் மட்டையும் ஒரு ஜோடி பேடும் இருந்தன.

ஆர்வ மிகுதியில் உயிர்த்தேனை உருவினேன். 46ம் பக்கம் திறந்து கொண்டது. முக்கியமான பகுதிகளை அடிக் கோடிட்டு அசிங்கப்படுத்தாமல் பென்சிலால் மார்ஜின் பகுதியில் ஒரு சிறிய டிக் செய்திருந்த பாங்கு ரசிக்க வைத்தது. புக் மார்க்குக்கு அவன் பயன்படுத்தியிருந்தது அவன் தங்கையின் போட்டோ!

வாசலில் அரவம் கேட்க புத்தகத்தை அதன் இடத்தில் சரியாக வைத்தேன்.

"திவாகர் வர லேட்டாகும் சார். இங்க பக்கத்துல ஒரு பிளைன்ட் ஸ்கூல் ஒண்ணு இருக்கு. அங்க ரீடிங்குக்காக போயிருக்கான். அதான்."

"ஓஹோ. சரிப்பா. நான் வரேன். அவன் வந்தா இந்த கார்டை கொடுத்துடு". என் விசிட்டிங் கார்டை நீட்டினேன். அப்போது அந்த உண்டியல் கண்ணில் பட்டது.

"அது என்னப்பா?"

"இதுவா சார். இதுவும் திவாகரின் ஏற்பாடு சார். எங்களோட டெய்லி செலவுல ஒரு ரூபா மிச்சம் பிடிச்சு இதுல போடணும். இது மாதிரி எல்லா ரூம்லேயும் வைச்சுருக்கோம். மாசாமாசம் ஒரு பிளாக்ல சேரும் பணத்தை கலெக்ட் செஞ்சு ஏதாவது சோஷியல் வொர்க் செய்வோம் சார்."

எனக்கு திவாகரைப் பார்த்துத்தான் என் நண்பனுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் போயிற்று.

Tuesday, 10 July 2007

பூக்களின் மொழி

ஜூன் - 14ம் தேதி சென்னை நாரதகான சாபா மினி ஹாலில் சுபா கிரியேஷனின் 'பூக்களின் மொழி' என்ற ஆடியோ சி.டிக்கான வெளியீட்டு விழா நடந்தது. பிரபல தொழிலதிபர் திரு நாக் ரவி வெளியிட முதல் பிரதியை திரு கிரேஸி மோகன் பெற்றுக் கொண்டார்.

பாண்டிச்சேரி அரவிந்த அன்னை நாம் பூஜைக்கு பயன்படுத்தும் மலர்களை பற்றி பல அரிய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். மலர்களின் அழகைப் போலவே அதன் பெருமைகளையும் எளிய வார்த்தைகளில் விளக்கியுள்ளார்.

பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு தூதுவனாக செயல்படுகிறதாம் மலர்கள். இந்த பூக்களின் மொழி, வார்த்தைகள் இல்லாத பிராத்தனைகள் என்கிறார் அன்னை. அவை நமக்கு பலவிதமான பலன்களை நமக்கு பெற்றுத் தருமாம்.

பூக்களுக்கு அழகும் மணமும் உண்டு என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அது இறைவனுக்கு அர்பணிக்கும் போது பலனும் உண்டு என்கிறார் அன்னை. நாகலிங்கப் பூவை வைத்து நாம் இறைவனை வழிபட்டால் செல்வளம் பெருகும். செந்தாமரை மன அமைதியைத் தரும். ரோஜா தெய்வீக அருளைத் தரும். கனகாம்பரம் விழிப்புணர்வு மற்றும் கல்வியை தரும். நித்ய கல்யாணி முன்னேற்றத்தை அளிக்கும். அன்னை ஏராளமான மலர்களைப் பற்றி இவ்விதம் பல அருள் உரைகளைச் சொல்லியிருக்கிறார். மலர்கள் அனைத்திலும் பலன்கள்!

அவைகளிலிருந்து எட்டு மலர்களைப் பற்றிய தகவல்களை எடுத்து ஒவ்வொண்றுக்கும் பாடல் எழுதி அதற்கு கொஞ்சமும் மெருகு குலையாமல் கர்நாடக இசை பின்னனியில் மெட்டமைத்து ஒரு இசை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார் திரு பம்பே கண்ணன். திரு டி,கே.ஜெயராமன் இசையமைத்திருக்கிறார்.

அன்றைய விழாவில் ஐந்து பாடல்கள் பரத கலைஞர்களால் நாட்டியமாக வழங்கப்பட்டதன. அன்னையின் திரு உருவமும் அவரது அருளுரையும் எந்த அளவுக்கு அவர் வழி செல்லும் பக்தர்களை கவர்கிறதோ அந்த அளவுக்கு இந்த இசை தொகுப்பும் மனதுக்கு இனிமை சேர்க்கும்.

Monday, 9 July 2007

நான் நடித்த பாத்திரத்தை சிவாஜி நடித்தார்

அமுதசுரபி - ஜூலை 2007 - நேர்கானல் - மெலட்டூர் இரா.நடராஜன்

கலைமாமணி பி.ஆர்.துரை பார்பதற்கு மிக எளிமையாக இருக்கிறார். ஆனால் அவரது கலைப்பயண அனுபவங்களோ மிகச் சிறப்பானவை.

"தமிழ் நாட்டின் இன்றைய முதல்வரையும் சேர்த்து, நான்கு முதல்வர்களோடு எனது கலைத் தொடர்பு உள்ளது" என்று சொல்லி வெள்ளந்தியாகச் சிரிக்கிறார், மயிலாப்பூரில் 250 அடிக்கும் குறைவான ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் வசித்துக் கொண்டு.

"கலைஞன் ஏழையாக இருக்கலாம். அவனது சிந்தனைகளும் படைப்புகளும் என்றும் ஏழையாக இருந்ததில்லை" என்பவரின் வீட்டுச் சுவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கரங்களால் அவர் பெற்ற கலைமாமனி விருது அலங்கரிக்கிறது.

"சிறுவனாக இருந்தபோதே ஸ்ரீதேவி நாடக சபா என்கிற பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்துவிட்டேன். முதலாளி கே.என்.ரத்தினத்தில் தொடங்கி அடிமட்ட ஊழியன் வரை அனைவரும் ஒரு கூட்டுக் குடும்பமாக ஏற்ற தாழ்வின்றி வாழ்ந்தோம். ஒவ்வொரு ஊரிலும் 3 மாதங்களுக்குக் குறைவில்லாமல் தங்குவோம். நாடகம் நடக்கிற காலங்களில் உண்ண உணவு, உடுக்க உடை என்று அமர்க்களப்படும். பெரியவர்களுக்கு மட்டும் எக்ஸ்ட்ராவாக மாதச் சம்பளம் உண்டு. சிறுவர்களுக்கு அது கிடையாது. தொடர்ந்து ரிஹர்சலைக் கேட்டுக் கொண்டே இருப்பதால் அனைத்து ரோல்களும் அனைவருக்கும் அத்துபடியாக இருக்கும். எப்படா சீனியர் நடிகர்கள் நடிக்க முடியாத நிலை வரும், எங்களுக்கு சான்ஸ் வரும் என்று காத்துக் கொண்டிருப்போம்."

"வேளாவேளைக்குச் சாப்பாடும் வண்ணமிகு துணிகளுமாக இருக்கும் நாங்கள் மழைக்காலங்களில் ஆண்டி ரேஞ்சுக்கு போய் விடுவோம். கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பாடு அளவு குறையும். பிறகு வேறு வழியில்லாமல் கஞ்சி மட்டுமே ஆகாரமாகிவிடும். அந்த சமயங்களில் பிரபலங்களை வரவழைத்து சிரமப்பட்டு கூட்டத்தை வரவழைப்பார் எங்கள் முதலாளி. அந்த மாதிரி ஒரு விழாவில்தான் அறிஞர் அண்ணா வந்தார். 'பாட்டாளி பெற்ற பைங்கிளி'என்ற நாடகத்தில் நான் துடிப்பான குட்டிப் பையனாக வருவேன். என்னை அருகில் அழைத்துப் பாராட்டினார் அண்னா."

"ஒரு முறை எங்கள் பாய்ஸ் கம்பெனிக்கு ராயப்ப கவுண்டர் என்ற புரவலர் வந்தார். போகும் சமயத்தில் என் பையில் ஏதோ திணித்து விட்டுப் போய்விட்டார். அவர் தலை மறைந்ததும் எடுத்துப் பார்த்தால் நூறு ரூபாய் நோட்டு ! பாய்ஸ் கம்பெனியில் யாரும் அனுமதியில்லாமல் வெளியே இஷ்டத்துக்குப் போய் வர முடியாது. என்னால் அந்தப் பணத்தை தலைகாணிக்கு அடியில் ஒளித்து வைத்துக் கொண்டு பசியோடு ஏக்கத்துடன் பார்க்கத்தான் முடிந்தது. பிறகு யாரோ முதலாளியிடம் போட்டுக் கொடுத்துவிட, நூறு ரூபாய் முதலாளி ரத்தினத்திடம் போனது. உடனே அனைவருக்கும் சாம்பார் சாதம் அளிக்கப்பட்டது. அனைவரும் என்னை நன்றியோடு பார்த்துப் பார்த்து சாப்பிட்டதை இன்று நினைத்தாலும் மனசு கனக்கிறது. நான் 3 வருடங்கள்தான் பாய்ஸ் கம்பெனியில் இருந்தேன். பிறகு சென்னை வந்துவிட்டேன்."

"என் இளமைப் பருவம் முழுவதையும் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜில் கழித்திருக்கிறேன். 14 வயதில் தொண்டு கிழ பீஷ்மன் வேடம் போட்டிருக்கிறேன். சஹஸ்ரநாமத்தின் மூச்சிலும் செயலிலும் நாடக ஆர்வம் ஒட்டிக் கொண்டிருக்கும். சக கலைஞர்களை அவர் மதித்த மாதிரி வேறு யாரும் மதித்ததில்லை. 'பாஞ்சாலி சபதம்' என்ற நாடகத்தில் அவர்தான் தருமர். ஒரு உணர்ச்சி பூர்வமான காட்சியில் அவருக்கு நாற்காலி போட மறந்து விட்டார்கள். மிக ஜூனியரான நான் பீஷ்மராக அலங்கார ஆசனத்தில் அமர்ந்திருக்க சீனியர் நிற்க வேண்டியதாகிவிட்டது. எஸ்.வி.எஸ் என்ன சொல்வாரோ என்று மற்றவர்கள் பதறிக் கொண்டிருக்க நான் எந்தவித சலனமும் இல்லாமல் பீஷ்மனாக அதே விறைப்புடன் இருந்தேன். நாடகம் முடிந்ததும் என் இன்வால்வ்மென்டைக் குறிப்பிட்டு அவைவரின் முன்னிலையில் பாராட்டினார். அது எஸ்.வி.எஸ்."

"கலைஞரின் 'வெள்ளிக்கிழமை' என்ற நாடகத்தை சேவா ஸ்டேஜ் அரங்கேற்றம் செய்தபோது எனக்கு கலைஞர் அறிமுகமானார். தெளிவான வசன உச்சரிப்புதான் உங்கள் வெற்றிக்குக் காரணம் என்று அவர் சொன்னது இன்றும் இனிக்கிறது. உங்களுக்கு 'பராசக்தி' என்றால் சிவாஜிதான் நினைவுக்கு வரும். ஆனால் அவருக்கு முன்னால் சேவா ஸ்டேஜில் சாமிக்கண்ணுதான் அந்த ரோலைச் செய்தார். 'உதிரிப் பூக்களில்' நாவிதராக வருவாரே அவரேதான். கல்யாணியாக நடித்தது வேவறு யாருமல்ல. 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' என்று 'முதல் மரியாதையில்' கலக்குவாரே அந்த ஏ.கே,வீராசாமிதான். 1962ல் இந்தியா-சீனா போரை முன்னிலைப் படுத்தி எஸ்.டி.சுந்தரம் அவர்களால் எழுதப்பட்டு நான் நடித்த 'சிங்க நாதம் கேட்குது' என்ற ஓரங்க நாடகம் பிறகு ஜெமினி ஸ்டூடியோவால் டாக்குமெண்டரியாக உருமாற்றம் செய்யப்பட்டது. நான் பிரதானமாக நடித்த அந்தக் கதாபாத்திரத்தை செய்தவர் நடிப்பின் இமயம் சிவாஜி கனேசன். அதை ஒரு பெருமையாகவே நினைக்கிறேன்."

"எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் அவர் முன்னிலையில் ப.நீலகண்டன் எழுதி இயக்கிய 'மணமகள் வந்தாள்' என்ற நாடகத்தில் ஒரு குடிகாரனாக நடித்தேன். சாதாரணமாக எம்.ஜி.ஆருக்கு குடிப்பது, அடிப்பது போன்ற நெகடிவ் கேரக்டர்கள் மீது கவனம் விழாது. ஆனால் என் நல்ல நேரம், என் நடிப்பு எம்.ஜி.ஆருக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட, 'எங்கேய்யா, அந்த குடிகாரர், அவரைக் கூப்பிடுங்கள்!' என்றாரே பார்க்கலாம். என் அந்த பொழுதில் கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவனாகவே உணர்ந்தேன்."

"முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர கிரி எடுத்த ஓர் ஆங்கிலப் படத்தில் ஹீரோயினாக செல்வி ஜெயலலிதா நடித்தார். அதில் நானும் நடித்தேன். அவரே முதல்வராக இருந்த சமயத்தில் கலைமாமணி விருதும் வாங்கி விட்டேன். ஆக நான்கு முதல்வர்கள் என் கலைவாழ்வில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்."

"எனக்கு கலைமாமணி விருது ரொம்பச் சீக்கிரமே அளிக்கப்பட்டு விட்டது. காரணம் என்னைவிட திறமைசாலிகள், கோலோச்சியவர்கள் வெளிச்சமின்றி இருக்கிறார்கள்" என்று முடித்தார் கலைமாமணி பி.ஆர்.துரை. மூர்த்தி சிறிது. ஆனால் துரையின் கீர்த்தி பெரிது, மனசையும் சேர்த்துத்தான்.