Monday, 16 June 2008

உதித் நாராயணுக்கு ஒரு திறந்த கடிதம்

உயர்திரு உதித் நாராயண் அவர்களுக்கு

உங்களுக்கு தமிழ் தெரியாதுதான். இருந்தாலும் இந்தக் கடிதம் தமிழில் எழுதப்படுவதன் காரணம், உங்களுக்கு தமிழ் திரைப்படத்துறையோடு மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதைவிட, நான் சொல்ல வருவது அரை மயக்கத்திலிருக்கும் என் இனிய தமிழ் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதுதான்.

சமீபத்தில் வெளியான 'யாரடி நீ மோகினி' என்ற திரைப்படத்தில் நீங்கள் பாடிய 'எங்கேயோ பார்த்த மயக்கம்...' என்ற பாடலை கேட்க வேண்டிய துர்பாக்கியத்தை நான் அடைந்தேன். நீங்கள் செய்திருப்பது அப்பட்டமான தமிழ்ப் படுகொலை. ஒவ்வெரு வார்த்தையையும் கடித்து, துப்பியிருக்கிறீர்கள். உங்கள் வரிகள், எங்கள் காதுகளுக்குப் போய், சிறிது கால அவகாசத்துக்கு பிறகு, புத்தி மூலமாக மொழிமாற்றம்(!) ஆன பிறகுதான், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது.

நீங்கள் தமிழில் பாடுவது புதிதல்ல என்றாலும், நீங்கள் முன்பு பாடியது சின்னச் சின்ன கொலைகள் என்றால் (காதல் பிச்சாசே... பருவாயில்லை...), இது ஈவு இரக்கமற்ற படுகொலை. சிறிதளவேனும் மானமும், தமிழ் உணர்வும் கொண்ட எந்தத் தமிழனும், உங்களின் இந்த 'சீரிய தமிழ் பங்களிப்புக்கு' சிறிதளவேனும் வருத்தப்பட்டிருப்பான். இந்த தொடர் தமிழ் படுகொலைகளுக்கு, ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்படத்துறையும் பக்க பலமாக இருப்பதுதான் தமிழின் மானக்கேடு.

துதிபாடிகளை கொஞ்சம் ஓரம் கட்டுங்கள். உங்களுக்கு மிகுந்த நம்பிக்கையுள்ள ஒரு தமிழனை கூப்பிட்டு அந்தப் பாடலைக் கேட்கச் சொல்லுங்கள். உண்மையான மதிப்பீடை நீங்களே கேளுங்கள். ஒரே ஒரு நிமிஷம் கண் மூடி யோசியுங்கள். கலை மதிக்கப்பட வேண்டும். அது விற்பனைக்கு அல்ல. அப்படி விற்கப்படும்போது, கலைஞனின் தன்மானமும் விலை போகிறது என்பதை உணர்வீர்கள்.

நீங்கள் மிகச் சிறந்த பாடகர் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. உங்களுடைய 'பாப்பா கஹதேஹைங் படா நாம் கரேகா....' என்ற முதல் பாடல் வெளியானதும் இந்தித் திரைப்படவுலகம் உங்களை ஆச்சர்யத்தோடு பார்த்தது. உங்களுடைய 'பெஹலா நஷா' (முதல் மயக்கம்) பாடலுக்கு கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் உங்கள் குரலில் மயங்கிப் போனார்கள். இன்றும் உங்களின் ஹிந்திப்பாடலை ரசிக்க முடிகிறது. அதற்குக் காரணம், நீங்கள் அறிந்த மொழியில் பாடுவதால்தான்.

உங்களுக்கு ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். பாடும் நிலா பாலு எங்களால் அன்போடு அழைக்கப்படுகிற திரு எஸ்.பி.பி. அவர்கள் தெலுங்கு மொழிக்காரர். ஒரு முறை அவர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் தெலுங்கு பாடல் பதிவில் பாடிக்கொண்டிருந்தாராம். அது ஒரு மிக பிரபலமான தமிழ்ப்பாடலின் தெலுங்கு வடிவம். அதே ஸ்டூடியோவில், இன்னொரு படப்பிடிப்பில் திரு எம்.ஜி.ரின் காதுகளுக்கு அது சென்றிருக்கிறது. உடனே எம்.ஜி.ர். அவரை அழைத்து விசாரித்தாராம். தனது அடுத்த படத்தில் அவரை பயன்படுத்திக் கொள்ளுமாறு இசையமைப்பாளரை கேட்டுக் கொண்டாராம். அதற்கு இசையமைப்பாளர், எஸ்.பி.பியிடம் 'உனக்கு தமிழ் தெரியுமா?' என்றாராம். எஸ்.பி.பி. 'தெரியாது' என்று சொல்ல, 'தமிழ் உச்சரிப்பு சரியாக தெரிந்து கொண்ட பிறகுதான் உனக்கு சான்ஸ்' என்று சொல்லிவிட்டாரம். அதன் பிறகு நல்ல தமிழ் கற்றுக் கொண்டு எஸ்.பி.பி. பாடி எங்களுக்கு கிடைத்ததுதான், 'இயற்கையெனும் இளைய கன்னி', 'ஆயிரம் நிலவே வா', 'பொட்டு வைத்த முகமோ' போன்ற ஆயிரக்கணக்கான பாடல்கள்.

மீண்டும் உங்களிடம் வருகிறேன். உங்கள் மனசைத் தொட்டுச் சொல்லுங்கள். யாராவது ஒருத்தர் வடநாட்டில் போய் ஹிந்திப்பாடலை சரியாக உச்சரிக்காமல் பாடினால், அவர் எவ்வளவு அவமானத்துக்கு உள்ளாவார்? னால் இங்கே, நிலமை தலைகீழாக இருக்கிறதே. உங்கள் சக பாடகியான சாதனா சர்கமும் சளைத்தவர் இல்லை. 'கொஞ்சும் மைனாக்களே, கொஞ்சும் மைனாக்களே வந்து குளக்கேற்றில் (குளக்கரையில்?) வந்து கூடுங்கள்.... தேபாவளி (தீபாவளி?) பண்டிகை' என்று பாடியவர்தானே!

உங்களைச் சொல்லிச் குற்றமில்லை. 'இளையராஜா' என்று அழகிய தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற தமிழ்த் திருமகன் பெற்றெடுத்த தவப்புதல்வர்தான், உங்களை வலிய வரவழைத்து பாட வைக்கிறார். தனது திரைப்படங்களில் அழகிய தமிழ்ப்பெயர்களை வைக்கும் சூப்பர் ஸ்டாரின் மருமகன்தான் படத்தின் ஹீரோவாக இருக்கிறார். செல்வராகவன் என்ற அழகிய தமிழ்ப்பெயரைக் கொண்டவரின் கதைதான் படமாகியிருக்கிறது. யாருக்கும் தமிழுக்கு நடக்கும் படுகொலையைப் பற்றி கவலையில்லை. வியாபாரம் ஆனால் சரி. யாருக்கும் வெட்கமில்லை என்ற 'சோ' வின் திரைப்படப் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது,

'யாரடி நீ மோகினி' என்று அழகிய தமிழ்ப் பெயர் வைத்தால், அந்த திரைப்படத்திற்கு புனிதத்துவம் கிடைத்துவிட்டதாக தமிழக அரசு கருதுகிறது. தமிழ் மக்கள் வியர்வை சிந்தி செலுத்தும் வரியை, அந்த தமிழ்ப் பாதுகாவலர்களுக்கு சீதனமாக கொடுக்கிறது. ஆனால் அந்த பெயருக்கு கீழே நடக்கும் தமிழ் அத்துமீறல்களை கொஞ்சம் கூட கவனிப்பதில்லை. இதுவும் ஒரு காலத்தின் கோலம்.

உங்களை தமிழில் பாடக்கூடாது என்று தடுக்கவில்லை. தயவு செய்து மொழி உச்சரிப்பைப் புரிந்து கொண்டு பாட வாருங்கள். வரவில்லையா? விட்டுவிடுங்கள். தமிழை கடித்துத் துப்புவதை எந்த மானமுள்ள தமிழனும் பொறுத்துக் கொள்ள மாட்டான். நீங்கள் தமிழில் பாடித்தான் பெயரும் புகழும் இனி அடையவேண்டும் என்பதில்லை. எவ்வளவோ நல்ல குரல்வளம் கொண்ட தமிழ் உச்சரிப்பு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளே வரட்டும். முடிந்தால் கைகாட்டுங்கள். அது உங்களுக்கும், தமிழுக்கும் புண்ணியமாகப் போகும்.

நீங்கள் எதையும் பற்றி கவலைப்படாமல், இப்படியே தொடர்ந்தால், வருங்காலம் உங்களை மன்னிக்காது. 'உதித் நாராயணணா? அவர் நல்ல பாடகர்தான். ஆனால் அவர் மொழியறியாமல் கொன்று குவித்த தமிழ்ப்பாடல்கள் ஏராளம்' என்ற அவப்பெயரை சிலுவையாக சுமக்க வேண்டியதை இப்போதிருந்துதே தவிர்க்கப்பாருங்கள்.

சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன். ஊதவேண்டிய சங்கை ஊதியாகிவிட்டது. இனி உங்கள் இஷ்டம்.

இப்படிக்கு

மானமுள்ள ஒரு தமிழன்.

இந்த கடிதத்தை பிரபல பத்திரிக்கைகளுக்கு பிரசுரிக்க அனுப்பினேன். ஒரு பத்திரிக்கை கூட கண்டு கொள்ளவில்லை. அவர்களும் இந்த மாதிரியான தமிழ் கொலைகளை ஏற்றுக் கொண்டு விட்டார்களா அல்லது இதை பற்றி எழுதுவதில் எந்த பிரயோசனுமும் இல்லை என்பதாலா என்று புரியவில்லை. வலை நண்பர்களே உங்கள் கருத்து என்ன?

9 comments:

pudugaithendral said...

நல்லாத்தான் கேட்டிருக்கீங்க.

எனக்கும் உதித் நாரயணன் பாடும் பாடல்களை கேட்கும்போது எனது 1ஆம் வகுப்பு ஆசிரியை திருமதி ஈஸ்வரி டீச்சரை தமிழ் பாடம் சொல்ல்லிக்கொடுக்கச் சொல்ல வேண்டும் என்றே ஒவ்வொரு முறையும் தோணும்.

நமது இசையமைப்பாளர்கள் வடக்கே
போனதால் நமக்கு வந்த வினை என்றே சொல்ல வேண்டும்.

வட நாட்டு நடிகைகள் மொழியின் அர்த்தம் புரியாமல் உணர்ச்சி இல்லாமல் நடித்து(!) விட்டுப் போவது போல் தான் இதுவும்.

என்னத்த சொல்லி என்னத்த செஞ்சு.

வடுவூர் குமார் said...

ஆமாம்,இதை ரெக்கர்ட்செய்யும் ஆட்கள் யாருக்குமே தமிழ் தெரியாதா? அவர்களையும் சேர்த்து புறக்கணிக்கவேண்டும்.
விவேக் இந்த "பருவாயில்லை" வைத்தே காமெடி பண்ணது தான் ஞாபகத்துக்கு வருது.
யேசுதாஸ் "தெரு கோவிலே" பாடிய போது யாரும் அவரை திருத்தவில்லை என்று எங்கோ படித்த ஞாபகம். :-(

ambi said...

சரியா சொன்னீங்க. தமிழ் பெயர் வெச்சா வரி விலக்காம். இப்படி பாடினா நாலு குட்டு குட்டனும்.

நானும் ஏற்கனவே இதை பத்தி புலம்பி இருக்கேன்.


http://ammanchi.blogspot.com/2008/04/utith-narayan.html


ஒரு சின்ன சந்தேகம், ஏன் உங்க பதிவு முழுக்க 'ஆ' என்ற எழுத்து வரலை? இல்ல என் ப்ரவுசர்ல தான் ஏதேனும் கோளாறா?

ச.பிரேம்குமார் said...

எல்லோர் மனதிலும் இருக்கும் ஆதங்கத்தை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள் நடராசன்.வாழ்த்துக்கள்

பாடகரை விட அவரை பாட வைக்கும் இசையமைப்பாளர்களும், அந்த பாடகர்கள் நடத்தும் தமிழ்கொலைகளை எதிர்த்து வாய்திறவாமல் இருக்கும் பாடலாசிரியர்களும் மிகுந்த கண்டனத்துக்குரியவர்கள்

தொலைக்காட்சிகளில் நடக்கும் பாடல் போட்டிகளில் எல்லாம் எத்தனையோ நல்ல தமிழ் பாடகர்கள் பாடகிகள் அறிமுகம் ஆகிறார்களே. அவர்களையெல்லாம் இந்த இசையமைப்பாளர்கள் பயன்படுத்துக்கொள்ளலாமே

ambi said...

//ச்சர்யத்தோடு//

// 'யிரம் நிலவே வா' //

// னால் இங்கே//


கண்ணில் பட்ட சில 'ஆ' மறந்த வரிகள். :))

Anonymous said...

அதெல்லாம் சரீங்க...

குருவி படத்துல தேன் தேன் பாடல் பாடியது யாரு? இவர் தானா எனக்கு சந்தேகம்? என்ன அழகான மெட்டு அடடா? இப்படி தான் நாம் சந்தோசப்பட்டுக்க வேண்டும். இங்கே தான் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் ஆச்சே? சார். கன்னடத்திலும், தெலுங்கிலும் நிறைய பாடல்கள் பாடுகிறார் போலும் அங்கே என்ன கூத்து அடிக்கிறாரோ? தெலுங்கு தெரிந்தவரும் கன்னடத்துக்காரரும் தான் சொல்லனும்? யாராவது சொல்வார்களா? அதாவது பாடகருக்கும் எடுத்து சொல்வார்களா என்கிறேன்?

PRABHU RAJADURAI said...

பலரது உணர்வுகளை பிரதிபலிக்கும் கடிதம். நன்றி!

Anonymous said...

நல்லாச்சொன்னீங்க. சமீபத்துல வந்த படத்தில அவர் பாடின பாட்டின் உச்சரிப்பு, கொடுமை, தமிழா இல்ல வேற மொழியான்னு சந்தேகம் வந்துருச்சு. மத்த மொழிகள்ல எப்படின்னு அவங்க தான் சொல்லணும். அங்கயும் நம்மள மாதிரி புலம்பறவங்க இருப்பாங்கன்னு நினைக்கறேன். பலர் இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல சினிமாலன்னு நினைக்கறது வேற விஷயம். லதா மங்கேஷ்கர் வளையோசை பாடும் போது, வட நாட்டுப்பாடகி பாடற உணர்வே வரலை. அவ்வளவு தெளிவான‌ உச்சரிப்பு, பாடகர் தப்பா, பாட்டு சொல்லிக்குடுக்கறவங்க தப்பா இல்ல கேட்டும் கேக்காம போற நம்மள மாதிரி இருக்கவங்க தப்பா!!!!:):)

Anonymous said...

இந்த விஷயத்துல இந்தி பாடகி அல்கா யாக்னிக் தெளிவாவே இருக்காங்க. ஏ ஆர் ரகுமான், தமிழ்ல பாட கூப்பிட்டப்போ இந்த காரணத்தை சொல்லி மறுத்தவங்க. அப்படியும் ஏதோ ஒரு பாட்டு பாடின ஞாபகம்.