Tuesday 9 March, 2010

சிக்கியது பறவை


அவள் அநியாயத்துக்கு அழகாக இருந்தாள். பார் இணைக்கப்பட்ட அந்த
ரெஸ்டொரண்ட்டின் அரையிருட்டில் கூட பளீரென்று தெரிந்தாள். கன்னம்
குழிவதில் ப்ரீதி ஜிந்தா, நீல கண்களில் ஐஸ்வர்யா ராய், ஸ்லிம் பாடியில்
சிம்ரன், மூக்கில் அந்த காலத்து ஸ்ரீதேவி என்று 'எல்லாம் சேர்ந்த
கலவையாக' இருந்தாள்.

இப்படிக் கூட ஒருத்தி அழகாய் இருக்க முடியுமா? ராஜீவ் வியந்து வியந்து
போனான். 'இவள்தான். இவளேதான். நான் வெகுநாட்களாக தேடிக்கொண்டிருந்தவள்.
என் இன்றைய டார்கெட்', ராஜீவ் மனசில் டிக் செய்து கொண்டான். முதலில் தான்
மட்டும் அவளை 'பார்த்துக் கொண்டிருப்பதாக' நினைத்திருந்தான். அங்கும்
இங்கும் நோட்டம் விட்டதில் இருபது கண்களுக்கு மேல் அவள் மீது மேய்ந்து
கொண்டிருப்பது தெரிந்தது.

அவளோடு வந்திருந்த அந்த தாடித் தடியன் மது மயக்கத்தில் சரிந்திருந்தான்.
முடி குவியலுக்குள் மூக்கும் வாயும் சொருகப்பட்டது மாதிரி இருந்தது.
பிர்... பிர்... என்று ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தான். டேபிளில்
ஏகத்துக்கு தந்தூரி ஐயிட்டங்கள் சிதறி இருந்தன. ஏதோ ஒரு காரணத்துக்காக
எழுந்தவள் விறுவிறுவென ராஜீவை தாண்டிப் போனாள். பின் பக்கத்தில் ஏஞ்சலினா
ஜூலியை ஞாபகப்படுத்தினாள். சராசரிக்கும் அதிகமான உயரம். மெல்லிய சென்ட்
வாசனை அவனை கிறங்க அடித்தது. அவள் திரும்பி வரும் வரை காத்திருந்தான்.

வெயிட்டரிடம் ஏதோ சொல்லிவிட்டு வந்தவளை இடைமறித்தான். "மேடம்.
நீங்கள்தானே ஷெரீன் தாமஸ், சில்வர் மீடியா சொலூஷன்ஸ்"

"நோ. யூ ஆர் ராங்க்." சரசரவென அவனை தாண்டிப் போய்விட்டாள். ராஜீவ் அவளை
விடவில்லை. அவள் டேபிள் அருகே போனான்.

"மேடம். ஐயாம் சாரி. தவறாக சொல்லிவிட்டேன். நீங்கள் வித்யா
ஸ்ரீராம்தானே?"

"மிஸ்டர். உங்களுக்கு என்ன வேண்டும்."

"யு ஆர் ஸ்மார்ட். நீங்கள்தான் வேண்டும். உங்களோடு பேச வேண்டும். நீங்கள்
என்னை என்னவோ பண்ணுகிறீர்கள்." ராஜீவ் கைகளை நீட்டினான். அதற்குள்
தாடித்தடியன் அரைகுறையாக புரிந்து கொண்டு உளர ஆரம்பித்தான். அவனை மெல்லிய
குரலில் அதட்டி அமைதி படுத்தினாள். சிவப்பு நிற திரவம் ஊற்றப்பட்ட
கோப்பையை அவன் கைகளில் திணித்தாள்.

"மிஸ்டர். போங்கள். உங்கள் இடத்திற்கு போய் அளவாக குடியுங்கள். அழகான
பெண்களிடம் தத்துபித்து என்று உளறாதீர்கள். இன்னும் பேச்சைச்
தொடர்ந்தீர்கள் என்றால் கூச்சல் போடுவேன். போலீஸ் வரும்"

"போலீஸ் வராது." ராஜீவ் இரண்டு கைகளையும் அகலமாக விரித்து ஒரு ஒரு அடியாக
பின்னால் போனான். கண்களை சிமிட்டினான். அவள் நிமிர்ந்து அவனை எரிப்பது
போல பார்த்தாள். மை காட்! கோபப்படுவதில் கூட எவ்வளவு அழகாக இருக்கிறாள்!

ராஜீவ் அவளை விட்டுப் பிடிப்பது என்று தீர்மானித்து தன் டேபிளில் வந்து
அமர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு யோசிக்க ஆரம்பித்தான். உடனடியாக
அதிர்ஷ்டக் காற்று அவனை நோக்கி வீசியது, ரம் ரூபத்தில். "ஓ நோ!" என்ற
அவளின் அலறலும் தொடர்ந்து வந்தது.

தாடித்தடியனுக்கும் அவளுக்கும் ஏதோ வாக்குவாதம் வந்திருக்க வேண்டும்.
அவன் மிச்சமிருந்த ரம் கோப்பையை அவள் மீது குறிதவறி வீச அது ராஜீவை இடது
பக்கமாக குளிப்பாட்டியது.

அவள் ஓரேயடியாக மாறிப்போனாள். ஒரு நிமிடத்தில் நூறு சாரி சொன்னாள். அவளே
வலுக்கட்டயமாக ராஜீவின் கோட்டை கழற்றினாள். நடுங்கும் கைகளோடு டிஷ்யூ
பேப்பரால் ரம் கொட்டிய பகுதிகளை துடைத்து விட்டாள். அவளின் குஷன் விரல்
ஸ்பரிசத்தில் ராஜீவுக்கு உச்சி குளிர்ந்தது. நடுநடுவே தாடிக்கார தடியனை
திட்டித் தீர்த்தாள். ராஜீவ் எவ்வளவோ கெஞ்சியும் அவள் கோட்டை
திருப்பித்தரவில்லை. 'உலர் சலவை செய்துதான் திருப்பித் தருவேன்' என்று
அடம்பிடித்தாள். பறவை சிக்கிவிட்டது!

"சார். நீங்கள் உங்கள் பெயரை சொல்லவே இல்லையே." சினேக பார்வையுடன்
மென்மையாக இழுத்தாள்.

"ராஜீவ். சார், மோர் எல்லாம் தேவையில்லை. ராஜீவ் என்று அழைத்தாலே
போதும்."

"நான் ரமா வெங்கடேஷ்"

ராஜீவ் கேள்வியாக அந்த தாடித்தடியனை பார்த்தான். அவள் மப்பில் டேபிளில்
சரிந்திருந்தான்.

"வெங்கடேஷ் என் அப்பா. இவனை விட்டுத்தள்ளுங்கள். இவனால்தான் என்
வாழ்க்கையே நாசமாகிவிட்டது. ராஜீவ், ஒரு சின்ன உதவி செய்யேன். இவனை கீழே
கொண்டு காரில் விட்டுவிட்டு வந்துவிடலாம். டிரைவர் இருக்கிறான். அவன்
பார்த்துக் கொள்வான். நான் இன்னும் சரியாக சாப்பிடவே இல்லை"

ராஜீவும் ரமாவும் அந்த தாடித்தடியனை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போய்
காரில் திணித்தார்கள். அந்த சமயத்தில் ராஜீவுக்கு செல் அழைப்பு வந்தது.

"ஓகே ரமா. நான் போய் எனக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருக்கிறேன்.
இவனை ஒழுங்குபடுத்திவிட்டு மேலே வா"

ராஜீவ் தலை மறையும் வரை ரமா காத்திருந்தாள். லிப்ட் கதவு மூடியதும்
தாடிக்காரனை ஓங்கி ஒரு தட்டு தட்டினாள். அவன் விருட்டென எழுந்து
உட்கார்ந்து கொண்டான். "என்ன பறவை சிக்கிடுச்சா? செம துட்டு பார்ட்டியா?"
ரமா தன் சிவந்த இதழ்களில் விரல் வைத்து 'ஷ்ஷ்' என்றாள்.

"அவன் கோட்டு பாக்கெட்டில் பார்த்தேன். ஏழெட்டு கிரெடிட் கார்டுகள்
வைத்திருக்கிறான். ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக அவன் பர்ஸ் புடைப்பாக
இருந்தது. அரை மணி பொறு. நான் அவனை கொத்திக் கொண்டு வந்துவிடுகிறேன்."

வெகு இயல்பாக லிப்ட் ஏறியவள் ராஜீவை பார்த்ததும் பொய்யான பதட்டத்தை
வரவழைத்துக் கொண்டாள்.

"சொல்லுங்கள் ராஜேஷ். நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்."

"ரமா. நான் ராஜேஷ் இல்லை. ராஜீவ். தி.நகரில் இருக்கும் ஜே,கே.ஆர். கோல்ட்
ஹவுஸ் தெரியுமா?"

ரமாவின் இரண்டு கண்களும் திடீரென ஒளிர்ந்தன.

"யெஸ் ரமா. அதன் நான்கு பார்ட்னர்களில் நானும் ஒருவன். தினம் ஒரு லட்சம்
என்று செலவழித்தால் கூட இன்னும் அறுபது வருஷத்துக்கு கவலையில்லை."

"ராஜீவ். நான் மிகவும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கிறேன். எங்கள்
வீட்டில் சாதாரண மாருதி 800தான் இருந்தது. ஏ.சி. கூட விண்டோ ஏசிதான். என்
அப்பா பாக்கெட் மணியாக கேவலம் ஐநூறு ரூபாய்தான் கொடுப்பார். எனக்கு நிறைய
பணம் தேவைப்பட்டது. மாடலிங்கில் நுழைந்தேன். இந்த தாடிக்காரன் பேச்சை
கேட்டு கொஞ்சம் திசை மாறிப் போய்விட்டேன்"

மெல்லிதாக அழுதாள். ராஜீவ் பதறிப்போய் அவள் கண்களைத் துடைத்தான்.
வேண்டுமென்றே சில பகுதிகளில் கைகளை ஓடவிட்டான். அவள் அதை அனுமதித்தாள்.

"ரமா. நீ என்னிடம் வந்து விட்டாயல்லவா. இனி உன் பிரச்சனை தீர்ந்தது.
இன்னும் ஆறே மாசத்தில் நீதான் நம்பர் ஒன் மாடல். குறித்து வைத்துக் கொள்"

"தாங்க்ஸ் ராஜீவ். உன்னிடம் ஆரம்பத்தில் கோபித்துக் கொண்டு விட்டேன்.
மன்னித்துவிடேன்."

"அதை அப்போதே மறந்துவிட்டேன்."

ரமாவும் ராஜீவும் கீழே வந்த போது அந்த தாடிக்காரன் குடிபோதையில் மயங்கிக்
கிடப்பது மாதிரி கார் பின்சீட்டில் சரிந்திருந்தான்.

"ராஜீவ். நான் உன் காரில் வருகிறேனே." அவன் தோள்களில் சரிந்தாள்.

ராஜீவின் ஷெவர்லே இருந்த இடம் கொஞ்சம் இருளடைந்த பகுதியாக இருந்தது.
முதலில் காரை பார்த்து வியந்தவள், டிரைவர் ஸீட்டில் அமர்ந்த ராஜீவ் மீது
ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, அவனை அணைத்து, இதழ்களை ஈரப்படுத்தினாள். ராஜீவ்
தடுமாறிப்போனான்.

கார் வேகமெடுத்து பிரதான சாலைக்கு வந்தபோது, சென்னை வேக வேகமாக கவியும்
இரவுக்குள் தன்னை ஒடுங்கிக் கொள்ள ஆரம்பித்திருந்தது. ரமா ராஜீவை
தொடர்ந்து தொந்திரவு செய்து கொண்டிருந்தாள். ராஜீவ் மெதுவாக
ஆரம்பித்தான்.

"ரமா. நான் ஒரு உல்லாச ப்ரியன். நான் ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ள
மாட்டாயே?"

"சொல்லு." நிமிண்டும் விரல்களூக்கு சற்று ஓய்வு கொடுத்தாள்.

"என் இரவுக்கு ஒரு பெண் பத்தாது. நீதான் லீட் கிடார் என்றால், எனக்கு
ஐந்து அல்லது ஆறு செகன்டரி கிடார்கள் வேண்டும். உனக்கு தெரிந்தவர்கள்
இருக்கிறார்களா?"

"ராஜீவ்! யூ ஆர் வெரி நாட்டி!" இடுப்பில் குத்தினாள். "பெரிசாக
செலவாகும். பரவாயில்லையா?" என்றாள்.

"பணத்தைப் பற்றி கவலைப் படாதே. எனக்கு வேண்டியது பெண்கள்."

ரமாவின் செல்போன் தொடர்ந்து இயங்கியது. "டன் ராஜீவ். இன்னும் அரை மணியில்
உன்னை மகிழ்விக்க அரை டஜன் அழகுப் பெண்கள் காத்திருப்பார்கள்."

சென்னை புறநகர் பகுதியில் ஒரு சொகுசு பங்களாவின் முன்னால் காரை நிறுத்தச்
சொன்னாள். ராஜீவ் ஆச்சர்யப்பட்டான். 'அட! என்னிடம் கூட இப்படி ஒரு பங்களா
இல்லையே?'.

"இது வாடகை வீடு ராஜீவ். வா! உண்னோடு நிறைய வேலை இருக்கிறது." ராஜீவை
தரதரவென இழுத்துக் கொண்டு போனாள்.

பத்து நிமிட இடைவெளியில் தாடிக்காரனின் கார் சத்தமின்றி நின்றது. அப்போது
பின் சீட்டில் சரிந்திருந்த தடியன் இப்போது முன் சீட்டில் ஒய்யாரமாக
அமர்ந்திருந்தான். பின் சீட்டில் மூன்று தடியர்கள் இருந்தார்கள்.
அவர்களிடம் ஸ்டில் காமிரா, மூவி காமிரா என்று சகல எலக்ட்ரானிக்
வஸ்துகளும் இருந்தன.

"மாம்ஸ். எல்லாரும் கொடுத்த வேலையை சரியா செய்யணும் புரிஞ்சுதா? வேலை
பர்ஃபெக்டா முடிஞ்சா பேமெண்ட் டபுள். ஓகே?"

தலையாட்டினார்கள்.

பங்களாவுக்குள் ரமாவின் அனுமதி வாங்கிக் கொண்டு ஒரு தனிமையான
பாத்ரூமுக்குள் போனான் ராஜீவ். செல்லை இயக்கினான். எதிர் முனையில்

"சார். பறவைகள் கூட்டமா சிக்குது. ஆர் யூ இன் கண்ட்ரோல்?"

"யெஸ். நாங்க எல்லாரும் நீ இருக்கிற பங்களாவிலேர்ந்து இருநூறு மீட்டர்
தூரத்திலே இருக்கோம். கம்பிளீட் கண்ட்ரோல். கவலைப்படாதே."

"ஓகே சார். இன்னும் அரை மணியில என்னோட அடுத்த சிக்னல் வரும். ரவுண்டப்
செஞ்சுடுங்க. பார்டி பெரிய பார்ட்டி. எந்த பறவையையும் விட்டுடாதீங்க."

"கோ அஹேட் மேன்."

மெல்லிய புன்சிரிப்புடன் செல்லை ஆஃப் செய்தான் ராஜீவ் என்ற புனைப் பெயர்
கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன். அஸிஸ்டென்ட் கமிஷ்னர் ரவி யாதவ்
தலைமையில் ஒரு போலீஸ் கூட்டம் வெளியே இருளில் காத்திருந்தது.

(தினமலர் - வாரமலர் - 21 பிப்ரவரி 2010)

No comments: