என்னுடைய புனைவுகளையும், கட்டுரைகளையும் இந்த வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
Thursday, 15 February 2007
ஒரு வழிப்பாதை
ஒரு வழிப் பாதை
2006 பிப்ரவரி 26 கல்கி
"ஃபேன் ஆஃப்."
ராட்சஸ மின்விசிறிகள் மெளனித்தன.
"லைட்ஸ் ஆன்."
பளீரென்று வெள்ளையும் நீலமுமாய் அத்தனை விளக்குகளும் உயிர்பெற்றன.
"ஸ்டார்ட்."
இயக்குனர் மிச்சமிருந்த சிகரெட்டை கீழே போட்டு காலால் நசுக்கினார். ப்ளெக்டர்களையும், கம்பி வலைகளையும் பிடித்திருந்தவர்களின் முகங்கள் சீரியஸ் ஆகின.
"ரோலிங்."
காமிராமென் மெல்லிய குரலில் இயக்குனர் காதில் விழும்படித் தெரிவிக்க, ஒருவன் கிளாப் கட்டையை காமிராவின் மூஞ்சிக்குக் காட்டிவிட்டு வேகமாக ஒதுங்கிக் கொண்டான்.
"ஆக்ஷன்".
ஏதோ ஸ்விட்சை தட்டிவிட்ட மாதிரி உடனடியாக அவள் அழ ஆரம்பித்தாள். அழுகை என்றால் சங்கிலித் தொடராய் அழுகை. அவள் எவ்வளவு நேரம் அழ வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காக இயக்குனர் சைகை செய்ய காத்திருந்தார்.
அந்த பெண் ஒரு ரவுண்டு அழுது முடித்து கர்ச்சீப்பை மூக்கின் மீது வைத்து 'டொர்' ரெனச் செய்யவும் இயக்குனரின் விரல் அசைந்தது.
வேலுச்சாமி தளர்வாக உள்ளே வந்து அந்த பெண்ணின் அருகில் நின்றார்.
"ஏம்மா அழுவுறீங்க. என்னைத் தெரியுதா?"
"கட். யோவ். பெரிசு. ப்ரியா டயலாக் முடிச்ச அப்பாலதாய்யா ஒங்க டயலாக். ஏன்யா உசிர வாங்குறீங்க?"
கருப்புத் துணிக்குள் தன் தலையை விட்டுக்கொண்டு மானிடரில் பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் துணியை விலக்கிக்கொண்டு கத்தினார்.
"ஸார். அவங்க டயலாக் சொல்ல விட்டுட்டாங்க. அதுனால நான் தொடங்கிட்டேன்."
"பேசாத. என்னவோச் சொல்ல வருது. நீ என்ன செய்யணுமோ அதைச் செய்தா போதும். புரிஞ்சுதுதா? காலைல பத்து மணிக்கு ஷாட்டு வச்சு இன்னும் ரெண்டு சீன் கூட முடியல்ல. எல்லாம் என் நேரம். பாலு, பெரிசுகிட்ட விவரமாச் சொல்லு. அடுத்த ஷாட்ல ஓகே ஆகல்ல, எனக்கு கெட்ட கோபம் வரும்."
'சாவு கிராக்கிங்க' என்று அவர் மெல்லிய குரலில் முடித்தாலும் வேலுச்சாமிக்கு தெளிவாகக் கேட்டது. ஒளிர்ந்த விளக்குகள் அணைந்து மின்விசிறிகள் தங்கள் பேரிரைச்சலைத் தொடர்ந்தன.
வேலுச்சாமிக்கு ஆத்திரமாக வந்தது. அவமானமாகவும் இருந்தது. அவரை இதுவரை யாரும் பெரிசு என்று தரக்குறைவாக அழைத்தது இல்லை. பார்ப்பதற்கு கொஞ்சம் ஏழ்மையின் பிரதிபலிப்பு இருப்பதால் ஆளாளுக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று ஆகிவிட்டது.
முதல் டேக்கில் கொஞ்சம் காமிராக் கோணத்திலிருந்து விலகி நின்றுவிட்டார். அதற்கு ஒரு கேலி இருந்தது. அப்புறம் தவறுதலாக கொஞ்சம் டயலாக் கூடிவிட, 'ஸ்க்ரிப்டில் உள்ளதை மட்டும் சொன்னால் போதும்' என்று அறிவுரை சூடாய் வந்தது. ஆனால் இரண்டாவது டேக்கில் அந்த பெண் சொதப்பியபோதும் அடுத்தடுத்த ஷாட்டுகளில் டயலாக்குகளை தன் இஷ்டத்துக்கு மாற்றியமைத்த போதும் யாரும் கண்டு கொள்ளாதது ஏன்?
வேலுச்சாமியும் ஒரு காலத்தில் பிரபலம்தான். ஆனால் அறுபதுகளில் உச்சத்தில் இருந்த யதார்த்தம் பொன்னுசாமி பாய்ஸ் கம்பனியை பற்றி இங்கு ஒருவருக்கும் தெரியவில்லை. "அப்படியா. இப்ப என்ன சீரியல் செய்யுறீங்க".
நாடகங்கள் ஓய்ந்து சென்னை சபாக்களில் சுருண்டபோது ஏதோ அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருந்தார். பிறகு அதையும் குறைத்துக் கொண்டு தான் உண்டு நங்கநல்லூர் ஆஞ்சனேயர் உண்டு என்று இருந்துவிட்டார். இப்படியே பல வருடங்கள் போய்விட்டன.
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன வழி என்ற நிலை வந்த போதுதான் எதிர் பிளாட் சிவா ஐடியா கொடுத்தான். "தாத்தா. நீங்க ஏன் சீரியல்ல நடிக்க முயற்சி செய்யக்கூடாது? உங்களுக்குத்தான் டிராமா எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதே". அவன் அப்படியும் இப்படியுமாக சில சீரியல்களில் தலை காட்டுவான். பல டிவி கம்பனிகளில் ஏறி இறங்கினார். அதன் பலன் இன்று.
எட்டு மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்று சொன்னதால் மூன்று பஸ் பிடித்து வேர்க்க விறுவிறுக்க அங்கே போனால் ஷூட்டிங் நடப்பதற்கான அறிகுறியேயில்லை. ஒன்பது மணிக்குத்தான் ஒவ்வொருவராக வந்தார்கள்.
மணி பன்னிரெண்டான போதுதான் அவரை அழைத்து டயலாக் சொன்னார்கள். மேக்கப்புக்காக இருந்த ஒரே சேரில் தடியான ஒரு பெண் அமர்ந்திருந்ததால் அருகிலிருந்த ஸ்டூலில் உட்கார வைத்து இரண்டே நிமிடத்தில் மேக்கப் போடப்பட்டது. இந்த மூஞ்சிக்கு இது போதும் என்ற மாதிரி இருந்தது. இதிலென்ன தப்பு என்று மேலோட்டமாக தோன்றினாலும் எங்கோ இடிப்பதாகவே அடிமனதில் பட்டது.
"வேலுமணி சார். இங்க வாங்க. உங்க டயலாக்கை மறுபடி சொல்லுங்க." கிளிப் பேடு அஸிஸ்டென்ட் அழைத்தான்.
"தம்பி.. என் பேரு வேலுச்சாமி.. வேலுமணி இல்லே."
"ம். அதனால் என்ன. வேலுங்கறது சரிதானே."
"அதெப்படி தம்பி சரியாகும். உங்களை பாலுன்னு கூப்பிடறாங்க. அதை மாத்தி கோபாலுன்னு கூப்பிட முடியுமா?"
"ஏங்க நீங்க நடிக்க வந்தீங்களா, இல்லே வம்பு செய்ய வந்தீங்களா?"
எதேச்சையாக அருகில் சென்ற இன்னொரு அஸிஸ்டென்ட், "என்ன பெரிசு இன்டஸ்ட்ரிக்கு புதுசா, அதான். டைரக்டரான்ட பதிலுக்கு பதில் பேசற. சொல்லறத மட்டும் கேளுய்யா. அவரு எவ்வளோ பெரிய டைரக்டரு தெரியுமா?"
"சார். வேலுச்சாமி ஸார். உங்க விளக்க உரையெல்லாம் வேண்டாம். புரியுதா. எங்களுக்கு கேக்க பொறுமையில்ல. மூன்று மானிடர் ஷாட்ஸ் முடிந்து இது ஐந்தாவது டேக். யாருக்குதான் கோவம் வராது,"
நல்லவேளையாக அடுத்த ஷாட் ஓக்கே ஆனது. அது கூட கொஞ்சம் அரை திருப்தி, முக்கால் திருப்தியோடு சொன்னமாதிரி இருந்தது. அதன் பிறகு பிட்டு பிட்டாக சில சீன்கள் வந்தன.
போகலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
பணம் செட்டில் செய்யக்கூடிய நபரை தேடிக் கண்டுபிடிப்பதில் அரை மணியும் ஒரு கிலோ மீட்டர் நடையும் ஆனது.
"பேமென்டா. உங்க பேமென்டை உங்க ஏஜென்டுகிட்டத்தான் கேட்கனும். என்கிட்டே கேட்டா?"
"மிஸ்டர். நான் டயலாக் ஆர்டிஸ்ட். உங்க குமார் சார் சொல்லி வந்திருக்கேன்."
"அப்படியா. அதுக்கு எதுக்கு சார் சூடாகிறீங்க,"
"நீங்களா ஒரு கற்பனை செஞ்சுக்கிட்டு பேசினா நான் என்ன செய்ய முடியும்?"
"வில்லங்கம் புடிச்ச ஆளா இருப்பே போலிருக்கே. சரி.. சரி... டப்பிங் சமயத்துல வாங்கிக்க."
சிவா தெளிவாக சொல்லியிருந்தான். வேலுச்சாமி விடவில்லை. "இல்லை சார். எனக்கு செட்டில் செஞ்சுடுங்க. எனக்கு பல செலவுகள் இருக்கு."
வேலுச்சாமி அடித்து பிடித்து ஒரு மணி நேரம் காத்திருந்து பணம் வாங்கிவிட்டார். விட்டால் போதும் என்று வீட்டுக்கு வந்து விழுந்த போது மணி ஆறு ஆகிவிட்டது.
இரவு ஒன்பது மணிவாக்கில் சிவா வந்தான். "என்ன தாத்தா. எப்படி இருந்திச்சு முதல் நாள் அனுபவம்?"
"அத ஏன் கேக்கிற போ. பாடா படுத்திட்டாங்க. மரியாதைன்னா என்ன விலைன்னு கேக்கறாங்க."
"அப்படியா. பொதுவாவே என்ன வாழுதாம்? அது சரி... எந்த கம்பனிக்கு போனீங்க."
வேலுச்சாமி சொன்னார்.
"ஓ. அதுவா. பணம் கொடுத்தாங்களா? இழுத்தடிச்சிருப்பாங்களே,"
"கொஞ்சம் முரண்டு புடிச்சாங்க. நான் விடல. வாங்கிட்டேன்."
"நல்லது. அந்த கம்பனியோட சீரியல் எல்லாம் இப்ப டவுன். அதான்... அப்பறம் தாத்தா.... நீங்க நினைக்கற மாதிரி எல்லா கம்பனிகளும் இப்படி இல்லே".
"எனக்கென்னவோ சரியாப்படல சிவா. இனிமே வேண்டாம்னு மனசுக்கு படுது. நாலு காசு சம்பாரிச்சாலும் மரியாதை முக்கியமில்லையா, தலையில குட்டி போடற சாப்பாடு வேண்டாம்." வேலுச்சாமி வேதனையோடு சொன்னார்.
"அட போங்க நீங்க. போகப் போக பழகிடும். இண்டஸ்ட்ரில இதெல்லாம் சகஜம்."
"என் டிராமா அனுபவத்துல இதுமாதிரி அனுபவிச்சதில்லே." வேலுச்சாமியின் கண்களில் நீர் முட்டிவிட்டது.
"தாத்தா. அது அந்தக் காலம். இப்ப எல்லாமே மாறிப்போச்சு. எல்லா எடத்திலும் மரியாதை சரியா சமமா கிடைப்பதில்லே. வாழ்வா சாவான்னு இருக்கும்போது நீதியாவது நியாயமாவது, இப்ப மெகா சீரியல்னு ஞாயிற்று கிழமைகூட விடாம ஷூட்டிங் நடத்தறாங்க. காலைல ஆரம்பிச்சு ராத்திரி வரைக்கும். அது தவிர எடிட்டிங், மிக்சிங், டப்பிங்னு ஏகப்பட்ட வேல. இத்தனைக்கும் மத்தியில அவங்களுக்கு கொடுக்கற சம்பளம் கம்மி. ஸ்டார்களுக்குத்தான் மரியாதை. பணம் வரலன்னா ஸ்பாட்டுக்கு வர மாட்டாங்க. டப்பிங்கை இழுத்தடிப்பாங்க. அதுனால ப்ரொடக்ஷன் ஆசாமிங்க நம்ம மாதிரி ஆசாமிகள் கிட்டத்தான் மிச்சம் புடிக்கறாங்க."
வேலுச்சாமிக்கு ரொம்ப ஆயாசமாக இருந்தது. வெகுநேரம் தூக்கமில்லை. 'ஏய் பெரிசு' என்று இப்பவும் யாரோ கூப்பிடுவது போல இருந்தது.
அடுத்த சில நாட்களில் மறந்தே போய்விட்டார். அதன் பிறகு யாரும் நடிக்க கூப்பிடவும் இல்லை.
ஒரு மாதம் கழித்து திடீரென்று அவர் நடித்த சீன் வந்ததும் சிவா ஓடிவந்து கூப்பிட்டான். எத்தனையோ நாடகங்களில் நடித்திருந்தாலும் மின்னும் திரையில் தன் பிம்பத்தை பார்த்ததில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அவருக்கு பதிலாக யாரோ டப்பிங் கொடுத்திருந்தார்கள்.
வேலுச்சாமி அந்த காலனியின் திடீர் பிரபலம் ஆகிவிட்டார். சீரியல் முடிந்ததுமே ஏகப்பட்ட போன் கால்கள். நேரில் சந்திக்க பல பேர் வந்து விட்டனர்.
விசாரிப்புகள் மறுநாளும் தொடர்ந்தன. பால் வாங்கும் போது பார்த்தவர்கள் விசாரித்தார்கள். ஆட்டோ ஸ்டாண்டில் சூழ்ந்து கொண்டார்கள். ஸ்கூல் போகும் குழந்தைகள் கூட 'ஹேய் டிவி சீரியல் தாத்தா' என்று சொல்லிவிட்டு போனார்கள். ஒரு சிலர் வேலுச்சாமியிடமே சான்ஸ் கேட்டார்கள்.
"ஸார் ரஜினி காந்த் படம் ஒண்ணு புதுசா வரப்போவுதாம். போய் போட்டோ கொடுங்க. அதுல உங்களுக்கு சான்ஸ் மட்டும் கிடைச்சுது, நீங்க எங்கயோ போயிடுவீங்க."
அன்று மதியமே இன்னோரு கம்பனியிலிருந்து அவருக்கு போன் வந்தது, சிவா வீட்டு நம்பரில்.
"ஒரு நாள் ஷூட்டிங். நானூறு ரூபாய். பயணப்படி கிடையாது. வரீங்களா?" வேலுச்சாமி யோசிக்கத் தொடங்கினார்.
"என்ன? சீக்கிரம் சொல்லுங்க."
"சரி. வர்ரேன்."
தான் ஏன் அப்படிச் சொன்னோம் என்பது அவர் புத்திக்கு எட்டவேயில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment