Saturday, 10 February 2007

ராணி வர்றா!!!


ராணி வர்றா!!!

1997 நவம்பர் 14 குங்குமம்

"எலேய் சின்ராசு. ராணி இன்னுமா வர்லே?"

பரமசிவத்தின் வரவிலேயே பெரும் பதட்டம் இருந்தது.

"இன்னும் வர்லப்பா. நானும் நொடிக்கு ஒரு தடவை ரோட்டை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்." சின்னராசுவின் பேச்சிலேயே தவிப்பு.

"என்னடா இது. மணி பதினொண்ணு ஆச்சே. கிழக்கிலே போற பஸ்சு கூட போயிடுச்சு."

பரமசிவத்தின் முகத்தில் வியர்வை வெள்ளம். கை. கால்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன.

"போன புதன்கிழமையில கூட இப்படித்தாம்பா ஆச்சு. வர்ற வழியிலே சாதிச் சண்டையாம். ஊரெல்லாம் சுத்தி ராணி பத்தரைக்குத்தான் வந்திச்சு. இப்பக்கூட வானம் மின்னிக்கிட்டு இருக்கு. ஒரு வேளை வழியிலே மழையாய் இருக்கலாம்."

சின்னராசு சொல்லியும் அதை காதில் வாங்கியதும் வாங்காததுமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டருந்தார். மனசு 'ராணி! ராணி!' என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது.

"சின்ராசு. ஒரு நடை பஸ்ஸ்டாண்டு வரை போயிட்டு வாயேன். ரொம்ப பயமா இருக்குடா. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா?"

பரமசிவத்தின் கண்களில் நீர் தளும்பியது.

"இப்பத்தான் கோவிந்தன் வந்தான். பஸ் ஸ்டாண்டிலே விசாரிச்சானாம். ராணி இன்னும் வர்லையாம். நீங்க கவலைப்படாதீங்க. நம்ப சிவகுருவும் சுப்புணியும்தான் கூடப் போயிருக்காங்க."

சின்னராசு சொல்லி முடிக்கவும் பரமசிவம் இன்னும் கலவரமானார்.

"லேய்... போட்டேன்னா ஒண்ணு. சிவகுரு சரியான தண்ணிப் பேர்வழியாச்சேடா... மாரியாத்தா நீதான் காப்பாத்தணும். என் ராணிய பத்திரமா கொண்டு சேர்க்கணும்."

"சின்ராசு. உள்ளாரப் போயி மாரியாத்தாள நேர்ந்துக்கிட்டு ஒரு மஞ்சத்துணில ஒரு ரூபா காச முடிஞ்சி வைச்சிட்டு ஓடியா. நாம பஸ்ஸ்டாண்டுக்கே போயிடலாம். ஏலேய்... எனக்கு இருப்பு கொள்ளலைடா... போ... போ... ஓடு."

பரமசிவத்தின் தவிப்பு உச்சத்துக்கு போனது.

எதேச்சையாய் ரோட்டை பார்த்தவருக்கு ஆச்சர்யம்!

தூரத்தில் இரண்டு வெளிச்சப் புள்ளிகள்!!

மனசில் ஒரு துள்ளல்!! ராணியாக இருக்குமோ? "சின்ராசு. ஓடியாடா. ராணிவர்றாப்பல!"

சின்னராசு தடுக்கி விழாத குறையாக ஓடி வந்தான்.

"ராணிதாம்பா." சின்னராசு குதியாய் குதித்தான்.

"ராணியாடா... ஆத்தா... என் வயத்துல பால வார்த்தே."

பரமசிவம் பஸ்ஸை நோக்கி ஓடினார்.

பளபளவென ஒய்யாரமான அந்த சொகுசு ரூட் வண்டி அரை வட்டம் அடித்து குலுங்கி நின்றது.

'பரமசிவம் பஸ் சர்வீஸ்' என்று மேலே எழுதி முன் கண்ணாடியில்''ராணி' என்று அலங்காரமாக எழுதியிருந்த அந்த புத்தம் புதிய பஸ்ஸை வாஞ்சையுடன் தடவிக் கொண்டிருந்தார் பரமசிவம்.

No comments: