Monday, 26 February 2007

இருள் வழிப் பயணம்


இருள் வழிப் பயணம்

2007 ஜனவரி 21 குங்குமம்

எனக்கு அவனையும் அவன் கூட வந்திருந்த பெரியவரையும் ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. அவர்களின் பார்வையிலேயே ஒரு கெட்ட நோக்கம் இருந்தது. ஆனால் என் வீட்டு மக்களுக்கு அவர்களை பிடித்திருந்தது என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று. நான் இனியும் இங்கே இருப்பது பாரம். இரண்டாவது, அவர்கள் வசதியானவர்கள்.

ஒருவழியாக பேசி முடித்தார்கள். நாளைக்கே நல்ல நாளாம். நான் அங்கே நிற்க பிடிக்காமல் உள்ளே வந்துவிட்டேன். போவதற்கு முன் அவன் என்னை மிகவும் அருகில் நெருங்கி கோணலாக சிரித்தான். அந்த பெரியவர்... அவரும் அவர் முழியும்.. சே....

மறுநாள் மாலை நான் போகும் வேளை வந்துவிட்டது. என்னை பிரிவதில் வீட்டு குழந்தைகளுக்குத்தான் வருத்தம். அழுது அமர்க்களம் செய்துவிட்டன. வந்து நின்ற அந்த பிரும்மாண்ட வண்டியில் நான் உடனடியாக ஏறி கொண்டு விட்டேன். அவர்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். எங்கே போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் போகிறேன். ஒரு விபரீதத்தை நோக்கி. என் கண்கள் கலங்கின. மெளனமாக அழுதேன்.

அவர்கள் சரியில்லை என்று நான் நினைத்தது கொஞ்ச நேரத்திலேயே நிரூபனம் ஆனது. சிறிது தூரம்கூட போயிருக்கமாட்டோம். என்னை மாதிரியே சில பாவப்பட்ட ஜன்மங்கள் வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றப்பட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஓடிவிடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதற்கு வழியே இல்லை. அதற்குள் நாங்கள் ஏழு பேர் ஆகிவிட்டோம்.

ஒரு ரோட்டு ஓர ஹோட்டலில் அவனும் அந்த கிழவனும் தண்ணியடித்தார்கள். கஞ்சா புகைத்தார்கள். முடிவில் அவர்களுக்குள்ளே வாய் தகராறு வர, அவன் அந்த கிழவனின் தலையில் கட்டையால் அடித்தான். நாங்கள் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. கிழவனை அப்படியே விட்டுவிட்டு வண்டியேறிவிட்டான் அந்த கிராதகன்.

கொடுமையிலும் கொடுமை. நாங்கள் வந்து சேர்ந்த இடத்தில் எங்களை மாதிரியே நூற்றுக்கணக்கில் இருந்தார்கள். அனைவரின் முகத்திலும் சொல்லமுடியாத சோகம். பலரும் களைத்து போயிருந்தார்கள். என்னை அழைத்து வந்த கொடூரன் மாதிரியே பல பேர் அங்கு இருந்தார்கள். எங்களை விற்று அவர்கள் காசு பண்ணுவதை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். என்ன செய்ய? நாங்கள் ஏமாளிகள். அவர்கள் பலசாலிகள். சும்மா இருப்பதை தவிர வேறு வழியில்லை. எங்களை வாங்கியவர்கள் அங்கே இருந்த இருட்டான அறைகளில் வைத்து பூட்டினார்கள்.

கொஞ்ச நேரத்திலேயே எங்களை ஒரு டாக்டர் சோதனை செய்தார். வியாதிகள் எதுவும் இருக்கக்கூடாதாம். அடுத்து அடுத்து நடந்த நிகழ்சிகள் யாவும் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தன. எங்களை போட்டோ எடுத்தார்கள். எடை பார்த்தார்கள். நடக்கச் சொன்னார்கள். பல பேர் அப்படியும் இப்படியுமாக எங்களை பார்த்தார்கள். உடம்பு சுத்தம் ரொம்ப முக்கியமாம். நாலு குளியல் ஆகிவிட்டது. சம்பந்தமே இல்லாமல் திடீரென குட்டி பூஜை நடந்தது. பொட்டு மட்டும்தான் இட்டார்கள். கவனியுங்கள். பொட்டை தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வளவு செய்தார்களே தவிர, சாப்பாட்டை கண்ணில் காட்டவே இல்லை. வெறும் தண்ணீர்தான். இளைத்தது பத்தாதா? இன்னும் வேறு இளைக்க வேண்டுமா? அவர்கள் நோக்கமே புரியவில்லை. கூட வந்தவர்களிடம் ஏதாவது கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால் அவாகளும் என்னைப் போலவே மண்டுகளாகவே இருந்தார்கள். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு நேர் எதிரே இருந்த சொகுசான கட்டிடத்தில் நிறைய மக்கள் வருவதும் போவதுமாக இருந்தது. என்ன செய்யப்போகிறார்களோ?

பொழுது எப்படா சாயும் என்று காத்துக்கொண்டிருந்த மாதிரி அவர்கள் அனைவரும் மறுபடி வந்தார்கள். தூரத்தில் நாங்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டோம். அவர்களுக்குள் காரசாரமாக பேசிக் கொண்டார்கள். ஒருவன் சத்தமாக அட்டையில் எழுதியிருந்ததை படிக்க, நாங்கள் அணி அணியாக பிரிக்கப்பட்டோம். என் போதாத வேளை நான் முதல் அணியிலேயே இருந்தேன். ஒருவன் என்னை தொட்டு தடவி அழைத்து போக வந்தான். என் எதிர்ப்பை காட்டியதும் பயந்து போய் விட்டான். எனக்கு பின்னால் பத்து பதினைந்து பேர் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் குறுகலான சந்து வழியாக அழைத்து போகப்பட்டோம். ஒரு கேட்டை தாண்டியதும், சில்லென ஏ.சி. காற்று எங்களை வரவேற்றது.

மிகப் பெரிய ஹால். நாலா பக்கமும் விளக்குகள் எரிய பிரகாசமாக இருந்தது. குறைந்த பட்சமாக இருபது பேர் எங்களின் வரவுக்காக காத்திருந்தார்கள். உயரமான இடத்திலிருந்து ஒருவன் என்னை வா! வா! என்று சைகை காட்டினான். அவன் கையில் நீளமாக காமிரா மாதிரி ஒன்று இருந்தது. ஏதோ தப்பு நடக்கப் போகிறது.

நான் உறைந்து போய் மிரட்சியுடன் நின்றுவிட, ஒருவன் ஏதோ ஒன்றை என் மீது வைக்க சுரீரென மின்சாரம் எனக்குள் பாய்ந்தது. ஒரு துள்ளலில் நான் இரண்டு அடி முன்னே போய் விழுந்து, சுதாரித்து நிமிர, அந்த காமிராக்காரன் மிக அருகில் தெரிந்தான். இப்போது எனக்கு பின்னால் வந்தவர்களை பார்க்க முடியவில்லை. திடீரென ஒருவன் என் கால்களை கட்டிவிட்டான். இன்னொருவன் என் இடுப்பில் பெல்ட் போட்டு இறுக்கியதில் என் பிருஷ்டம் சற்று உயர்ந்தது. கால்கள் அகட்டப்பட்டன. தொலைந்தேன். நான் சீரழியப்போகிறேன்.

காமிராக்காரன் என் தலையை பிடித்து ஒரு பக்கமாக வளைத்து பின் மண்டையில் அந்த கருவியை வைத்து ஒரு அழுத்து அழுத்தினான். பொட்டில் சம்மட்டியால் அடித்த மாதிரி வலி. அடுத்த வினாடி... எனக்குள் ஆயிரம் வோல்டில் மின்னலாய் தீப்பொறிகள் என் உடம்பு முழுவதும் கொப்பளித்து பரவ.... யாரோ கத்தியது லேசாக ஏங்கோ கேட்டது.

"என்னாங்கடா. க்விக்கா வேலையை பாருங்க. ம்.. அடுத்த எருமை மாட்ட கொண்டாங்க. எட்டு மணிக்குள்ள எரநூறு மாடுங்களை வெட்டி முடிக்கனும். சீக்கரம்." அந்த நவீன மாட்டிறைச்சி கூடத்தின் ப்·ளோர் மேனேஜர் கத்தினார்.

No comments: